தமிமீழப் பெண்களிடம் அறிமுகமிழக்கும் அரசியல் வெளி – செல்வி

இன விடுதலைக்கான போராட்டத்தில் ஈழத்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுடுகலன்கள் ஏந்தி எதிரிகளை களமுனைகளில் கொன்று குவித்த தடங்களின் மேல் நின்று கொண்டு கூட, பெண்ணின் சமூக வாஞ்சையைக் குறித்து பேசித் தெரிய வேண்டிய இக்கட்டான காலத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தைப் பொறுத்தவரையில் பெண்களி;ன் காலங்களை காலனித்துவத்துக்கு பிற்பட்ட காலம் (புரட்சிகர விடுதலை இயக்கங்களுக்கு முன்னரான காலம்) , புரட்சிகர விடுதலை இயக்கங்களின் காலம், விடுதலைப்புலிகளின் எழுச்சிமிகு புரட்சிக் காலம், முள்ளிவாய்க்காலின் பின்னர் சுடுகலன்கள் பேசாநிலையிலுள்ள இன்றைய காலம் என்ற வகைகளுக்குள் உட்படுத்தி நோக்கலாம். முன்பு, கல்வி மறுக்கப்பட்டு, தந்தை, மகன், கணவன் என ஆண்களால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஈழப்பெண், காலனித்துவத்தின் விளைவான மிசனரிகளின் கல்வி வாய்ப்புக்களால் அறிவைப் பெற்றுக்கொள்ளத் தொடங்குகிறாள். 1931 ல் டொனமூர் சீர்திருத்தத்தின் வழி கிடைத்த பெண் வாக்குரிமை, வாக்குரிமை கூட பெண்களுக்கு கிடைத்துவிடக் கூடாதென்ற மனப்பாங்கில் படித்த வர்க்கத்தினரான இராமநாதன் போன்றோரின் யாழ்ப்பாணிய மேலாதிக்க எதிர்ப்புக்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அளவுக்கு பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. படித்த வர்க்கத்திடம் இந்த மனநிலை இருக்குமெனின் சாமானிய மக்களிடம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் என்ன மனநிலை இருந்திருக்கக்கூடும்? காலனித்துவத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசியல் தளத்தில் பெண்கள் ஈடுபட்டாலும் பணிவிடை அரசியலாக இது இருந்தது. அந்த பணிவிடை அரசியலின் தொடர்ச்சி புரட்சிகர இயக்கங்களின் தோற்றுவாயின் பின்னர். அரசியல் தளத்தில் பெண்கள் குறைந்தளவேனும் உள்வாங்கப்பட்ட போதிலும் தொடர்ந்தது. புறக்கணிக்கத்த வகையில் சில புரட்சிகர இயக்கங்களின் தலைமைச் செயற்குழுவிலும் பங்காற்றியிருக்கிறார்கள். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தின் வரலாறானது விடுதலைப் போராட்டத்தால் அதன் குறிப்பிடத்தக்களவு பக்கங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அந்த விடுதலைப் போரின் பக்கங்கள் அடிமை மனத்தின் தளைகளை தகர்த்து விடுதலைக்காய் வேங்கைகளான பெண்களாலும் நிரப்பப்பட்ட எமது சமூகத்தில் இன்றைய பெண்கள் அரசியல் பழகாதவர்களாய் ஆண்களின் காம இச்சைக்கான நுகர்பொருளாக மாறிக்கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயுறவின் வெளிப்பாடே இப்பத்தியாகும்.

புரட்சிகர இயக்கங்களின் காலத்தில் இனவிடுதலை பெண்விடுதலை சமூக விடுதலை என்ற மூன்று முக்கிய தளங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளின் எழுச்சிமிகு காலம் ஈழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மையானது. புரட்சிகர இயக்கங்களால்
1. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிரான முதன்மைச் சிக்கல்
2. மக்களை ஓரணியில் அணியமாக்குவதற்காக களையப்பட வேண்டிய சாதியம், பெண்ணடக்கு முறை போன்ற அடிப்படைச் சிக்கல்கள்
என்பவற்றை நோக்கியதாகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் முதன்மைச் சிக்கல் குறித்த விழிப்பு குறைந்த தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அடிப்படைச் சிக்கல்களை கையிலெடுத்தன. அந்தப் போராட்டங்களும் அடிப்படைச் சிக்கல்களை மட்டுமே கையாளுபவர்களாக மாறி, சாதியம் பெண்ணியம் என்ற அடையாள அரசியலுக்குள் தம்மை குறுக்கிக்கொண்ட துன்பியலும் நடந்தேகியது. பெண் சார்ந்த மேற்கு நாட்டின் கொள்கைகளுக்குள் சென்று எமது சூழலுக்கு ஒவ்வாததும் உதவாததுமான உடல் அரசியலை பேசுபொருளாக்கும் அரசியலாக குறுக்கமடைந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளின் சமூக அரசியல் தெளிவினால் முதன்மைச் சிக்கலும் அடிப்படைச் சிக்கல்களும் அவ்வவற்றின் பெறுதிகளுக்கு அமைவாகவே கையாளப்பட்டன. முதன்மைச் சிக்கலுக்கு தடையாக இருந்த அடிப்படைச் சிக்கல்களான சாதியமும் பெண் சார்ந்த ஒடுக்குமுறைகளும் சமூகத்தின் தளத்தில் வைத்தே பேசப்பட்டு முதன்மைச்சிக்கலை நோக்கி மக்களை அணியமாக்கினார்கள்.
விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் பெண்கள்,
போராளிகளுக்கு உணவளிப்பு
மருத்துவ உதவி
பரப்புரை
வேவு நடவடிக்கைகள்
இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு போராளிகளை கொண்டு செல்லல்
இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு வெடிபொருட்களை கடத்துதல்
என விடுதலைப் போராட்டத்தின் பல தளங்களிலும் தம் தடங்களை பதித்தனர்.

திலீபன் அண்ணாவின் முயற்சியினால் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்புமுகமாக பெண்கள் சார்ந்து தமிழீழ மகளிர் அமைப்பு, சுதந்திரப் பறவைகள் அமைப்பு என்பவற்றை நிறுவி, தமிழீழப் போராட்ட வரலாற்றில் பெண்களின் பங்களிப்புக்களை காத்திரமாக்கினார்.
கரந்தடிப் போரியலில் ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டமானது மரபுவழிப் போராட்டமாக உருக்கொண்டு மண்மீட்பில் தமிழ் ஆண் இளையோர்கள் சுடுகலன் ஏந்த பெண்களும் அவர்களுடன் இணைந்து விடுதலைக்கான இராணுவமாக தம்மையும் விடுதலை வேள்வியில் இணைத்துக்கொண்டனர். பெண்கள் நிமிர்ந்து பார்த்தாலே குற்றம் என்று முகத்திலறையப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பிலிருந்து உடல் உளம் சார்ந்து வலிமை குன்றியவர்களாக நோக்கப்பட்ட பெண்கள் தமது சமூகத்தின் எல்லைக் கோடுகளைத் தாண்டி, நாட்டின் எல்லைக்கோட்டில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு சவால் விட்ட மாபெரும் பாய்ச்சல் தமிழீழ பெண்களின் வரலாற்றில் நிகழ்ந்தேவிட்டது. 1985ம் ஆண்டு ஆவணி மாதத்தில்; முதலாவது பயிற்சிமுகாமில் தமிழீழ விடுதலைப்புலி போராளிகளாக உருவாக்கப்பட்டனர். மன்னார் அடம்பன் பகுதியில் விக்டர் அண்ணாவின் தலைமையில் ஆண்போராளிகளுடன் பெண் போராளிகளும் இணைந்து முதலாவது போர்க்களத்தை தமதாக்கிக் கொண்டனர். அதன் பின்னர் பெண்கள் தமக்கென மாலதி படையணி, சோதியா படையணி என தனி படையணிகளை உருவாக்கி, கள முனைகளில் வீர வேங்கைகளாக சமர் புரிந்தனர். பாரவூர்தி ஓட்டுனர்களாக, கள மருத்துவப் போராளிகளாக, கடற்புலிகளாக, கரும்புலிகளாக, கனரக சுடுகலன் இயக்குபவர்களாக, புலனாய்வாளர்களாக, சிறப்பு அதிரடிப் படைகளாக, படகோட்டிகளாக, வடிவமைப்பாளர்களாக, வேவுப் போராளிகளாக தமிழீழப் பெண்களின் பன்முகங்கள் தமிழீழத்தை தாண்டி உலகெங்கும் அறியப்படுவதாகியது. உலகிலேயே மிக அதிகமான போராட்டப் பங்களிப்பு வீதத்தினை தமதாக்கியவர்கள் எம் தமிழீழப் பெண்கள். உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் மிகுந்த வலுமிக்க படையாகக் கூறப்படும் விடுதலைப்புலி ஆண் போராளிகளுக்கு சற்றும் குறையாத இராணுவ பங்களிப்பை வழங்கிய எமது பெண்களின் உடல் உள இயலுமை குறித்து உலகமே அறிந்துகொண்டது.

ஆயினும் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த பாய்ச்சலானது ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் நடந்த பெண் விடுதலை அல்ல. விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பெண்கள் அடைந்த விடுதலை. சில பெண்கள் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் போது தங்களின் மீதான தடைகளை அறுத்து, மண்ணிற்காக இனத்திற்காகப் போராடியபோது, இன்னொரு பக்கத்தில் அதே இனத்தைச் சேர்ந்த பெண்கள் சீதனக் கொடுமைக்குள்ளும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூக அமைப்புக்குள்ளும் சிக்கியிருந்ததும் கசப்பான உண்மைகளாகும். மிடுக்கான சீரூடையிலும் இடுப்புப்பட்டியிலும் பெண்களுக்கு கிடைத்த விடுதலையானது அவற்றைக் களைந்து அவர்கள் சாதாரண பெண்களாகிய போது அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பெண்போராளிகளை மரியாதைக்குரிய ஆளுமைகளாக பார்த்த சமூகத்தின் பார்வை தம் வீட்டுப் பெண்களின் மீது ஒடுக்குமுறை திரையினூடாகவே விழுந்தது. ஆனாலும் அரை நிலமானிய எச்சங்களைக் கொண்ட ஈழத்து சமூகத்தில் விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்மீது கொடூரமாகக் கட்டவிழ்த்து விடும் சீதனக் கொடுமைக்கு எதிராக மிகக் கடுமையான இராணுவத்தன்மையான முடிவுகளை எடுத்தும்கூட முற்றாக ஒழிக்க முடியவில்லை. பொருளாதார தளத்தில் வைத்தே பெண்ணுடைய வாழ்வு முடிவுசெய்யப்பட்டது.

நாட்டின் அரசியல் கடுமையும் அவசரகாலச் சட்டங்களும் ஆண்களுடைய வீதி இயக்கத்தை குறுக்க, பெண்கள் வீதிக்கு வந்தனர். பாதுகாப்புக் காரணங்களை காட்டி, பெண் தனது இயலுமையையும் ஆளமையையும் சமூகம் சார்ந்து செலுத்தத் தொடங்குகிறாள். இன்று உந்துருளிகளை முறுக்கும் பெண்களுக்கு தெரியுமா அன்று ஈருருளியை ஓட்டும் பெண் கூட அடங்காப்பிடாரியாக சித்திரிக்கப்பட்டவள் என்பது. போராட்டமும் இடப்பெயர்வும் சுற்றிவளைப்புக்களும் பெண்களின் அசைவினை இன்றியமையாததாக்கின.

முள்ளிவாய்க்காலில் சுடுகலன்கள் மௌனித்துப்போக, ஏதிலிகளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வோட்டத்துடன் சுடுகலன்களைத் தாங்கிய கரங்களும் மீளிணைவுக்காக காத்துநிற்க, ஏதிலிகளுக்குள்ளும் ஏதிலியாகிறார்கள் எம் அக்காக்கள். காட்டுக்குள் நின்று எதிரிகளை வேட்டையாடிய எம் தாய்ச்சமூகம்’ இன்று சமூகப் புறநடைகளாக நோக்கப்படுகிறார்கள். இன்றைய சமூக நடைமுறைகளிற்கமைவாக தம்மால் தரங்கெட்டுப்போய் தகவமைத்துககொள்ள முடியாது துன்பத்தில் உழலுகின்றனர்.

அவர்களின் அவலங்கள் ஒருபுறமிருக்க, இன்றைய பெண்களின் சிந்தனைத் தளங்களை நோக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. கசப்பான, ஆனால் சொல்லியே ஆகவேண்டிய சிந்தனை மாற்றம் எமது ஈழத்துப் பெண்களில் நிகழ்ந்துள்ளது. இயங்கியல் விதியின் படி, வளர்ச்சிப் படிநிலையில் முற்போக்குத் தளத்திலும் இல்லாமல் பின்தங்கியும் இல்லாமல் தறிகெட்டுப்போன முரண் மாற்றத்தில் எமது பெண்சமூகம் இருக்கிறது. ஆண்களின் காம இச்சைக்கான இறைச்சித்துண்டுகளாக தம்மைத் தயாரிப்பதில் அதிக நேரங்களைச் செலவிடும் சிந்தனைப் போக்கின் தோற்றுவாய் எது என்று தான் பரியவில்லை. பதின்ம வயதுகளில் ஆரம்பிக்கும் இந்த “வருத்தம்” சிலருக்கு மூப்பைத் தாண்டியும் தொடர்கிறது. உல்லாசமான வாழ்க்கை முறைக்குள் தங்களை ஈடுபடுத்தி, அதுவே வாழ்வென நம்பி போலியானதொரு மாயைக்குள் சிக்குண்டிருக்கிறார்கள்.

பெண்களின் சமூக வாஞ்சை எப்படி இருக்கிறது. தம் சார்ந்ததும் தம் இனம் சார்ந்ததுமான அடிமைத்தளைகள் குறித்து என்ன பார்வை இருக்கிறது? தம்மைச் சுற்றி சுடுகலன்களோடும் சப்பாத்துக் கால்களோடும் நிற்கும் இராணுவ அடக்குமுறையாளனையும் தன் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் போல ஒருசேர நோக்கும் மனநிலையிலிருக்கும் இந்தப் பெண்களின் மத்தியில் தன் இனம் சார்ந்தும் அதன் எதிரிகள் குறித்தும் பேசும் பெண்கள் எத்தனை பேர்? இன்றைய காலத்தில் எம் இனம் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பேசும் பெண்கள் எத்தனை பேர்? பல்கலைக்கழக மட்டங்களில் இனம் குறித்த, சமூகம் குறித்த பார்வையுடன் இயங்கும் பெண்கள் எத்தனை பேர்? இலவசக் கல்வி, நிதியுதவிகள் என பெரும் பொருண்மியச் சிக்கல்களை எதிர்நோக்கத் தேவையிராத பல்கலைச் சூழலில் சமூக வாஞ்சையுடன் சமூகம் பற்றி, இனம் பற்றி, இனத்தின் அரசியல் பற்றி ஒரு நிமிடமாவது பேசும் பெண்கள் எத்தனை பேர்? பல்கலைக்கழக நூலகத்தின் பயன்பாட்டை விட பல்;கலைக்கழகத்தினைச் சுற்றி இருக்கும் நகலகங்களில் அரைத்த மாவை மீண்டும் அரைத்து சோதினையில் துப்பிவிட்டு, சுருட்டி சட்டைப்பையினுள் வைத்துவிடும் அளவில் இருக்கும் உங்களிடம் சமூகம் பற்றி கருத்து கேட்பது எங்கள் தவறுதான். ஆயினும் சமூகக் கடமை என்ற ஒன்றும், உம் சார்ந்த வரலாற்றுத் தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறதல்லவா? இந்த சிந்தனைகளேதுமற்று, வந்தமாம். படிச்சமாம். அரச வேலைக்கு கொடி பிடிச்சமாம் என்று இருப்பதில் தானா உன் வாழ்வு ? சமூகம் பற்றி பேசும் ஒரு சில பெண்கள் கூட பெண்ணியம் என்ற போர்வையால் காவுகொள்ளப்பட்டு அடையாள அரசியலுக்குள் தம்மை புதைத்துவிடுகின்றனர். இனம் குறித்த பார்வையுள்ள பெண்களை கல்விச் சமூகம் ஏன் தரவில்லை? பாவாடையை மேலே மேலே கொண்டுசென்றதைத் தவிர கல்விக்கூடங்கள் சாதித்தவை என்ன? விரும்பிய ஆடையணிந்து உந்துருளியை முறுக்கும் சத்தத்தில் பெண்விடுதலை வந்துவிடுகிறதா என்ன?

சமூகம் குறித்த எந்த பார்வையுமற்று, பெண்ணியம் கிண்ணியம் என்று ஏதுமறியாது இருக்கும் பெண்கள் கூட தறிகெட்டு திரியாவிடினும் தங்களின் சொந்த பொருண்மிய மீட்சி பற்றி சிந்திக்கினறனரே தவிர சமூகம் பற்றி சிந்திப்பதில்லை. சமூக வலைத்தளங்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் வாய்ச்சொல்லாகவேணும் பிழையாக என்றாலும் சமூகம் பற்றியும் சமூக இயங்கியல் பற்றியும் பேசுகின்ற ஆண்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. போராட்ட காலங்களில் அம்மாவின் சேலைக்குள்ளும் பதுங்குகுழிக்குள்ளும் இன உணர்வினைக் காட்டி, புலம்பெயர்ந்து சென்ற பேராண்மை மிக்கோர் கூட சமூகம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பெண்கள்? விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பெண்கள் பொதுவெளியில் பேசினாலும் ஒரு சிலர் வாழ்க்கைத் துணைவரைத் தேடிய பின் காணாமல் போகிறார்கள். அதன் பிறகும் பேசும் பொதுவெளிப் பெண்கள் ஏதேனும் கட்சி சார்ந்த வாக்குத் திரட்டுபவர்களாக இருக்கின்றனர்.

தமிழ்ப் பெண்களாகவும் பெண்களாகவும் ஒடுக்குமுறைக்குள்ளிருந்து வந்த ஈழத்து பெண் சமூகம் ஆளுமை மிக்கதாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆளுமை அற்ற ஒரு சமூகமாய் சமூக இயங்கியலுக்கு முரணாணதாக எவ்வாறு மாறிப்போனது பெண் சமூகம்? பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெண் தலைமைகள் என்று இருந்தாலும் ஒட்டுமொத்த தளத்தில் அந்த ஆளுமை வரவேயில்லையே. இந்த முரணுக்கு பெண் சமூகம் மட்டும் காரணமல்ல. பெண் மீது கட்டுக்களை சுமத்தும் ஆண்களுக்கு பெண்கள் குறித்த பார்வை மாறவேயில்லை. பெரும் புரட்சி பேசும் ஆண்களின் புரட்சிகர பேச்சுக்களும் முற்போக்கு வேடங்களும் வீட்டுக்கு வெளியே தான். அவர்களின் சொந்த வாழ்க்கையையும் வாழ்க்கை துணைத் தெரிவையும் நோக்குவோமானால் அவர்களின் வீட்டில் கூட புரட்சி நடக்கவில்லை என்பது புரியும்.
சாதாரண பகுத்தறிவு பேச தெரியாத பெண்கள் வளர்க்கும் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது? குழந்தைகளின் கல்வியைக் கூட அவர்களது சமூக வாழ்வியலுக்காக அறிவுக்காக செயற்படுத்தாது தங்களின் சொந்த புகழ்ச்சிகளுக்கான இன்னொரு தளமாக பயன்படுத்துகிறார்கள். உலகத்திற்கே போராட்டத்தின் அரிவரியை சொல்லிக்கொடுத்த பெண்கள் இருந்த இந்த சமூகத்தில் தான் சமூகம் பற்றிய அரிவரி கூட தெரியாத பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகளும் அவர்களின் எதிர்கால சமூக வாழ்வும் எப்படி இருக்கப்போகிறது? இந்நிலை தொடரின் இனி எல்லாமே முள்ளிவாய்க்கால் தான். பெண்கள் தங்களுக்கு நடக்கும் அடக்குமுறைகளையும் கேவலங்களையும் உணர மறுப்பது தான் கொடுமை. தங்களது விருப்பத்தின் பேரில் ஆண்களின் இச்சைக்கான இறைச்சிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடக்குமுறை இன்று இல்லை. ஒருவேளை பெண்கள் தமது அறியாமைகளைக் களைந்து இயங்க ஆரம்பிக்கும் போது சமூகம் தன் அடக்குமுறைகளை வெளிக்காட்டக்கூடும். ஆனால் பெண்களின் இன்றைய செயற்பாடுகளோ தங்களை பாலியல் பதுமைகளாக்குவதை முதன்மையாகக் கொண்டிருக்கின்றது. தமது உரிமை சார்ந்த விடுதலையைக் குறித்த சமூகப் பொறுப்பு ; பூச்சியமாக இருக்கும் இக்காலத்தில் அடக்குமுறைகளும் இயங்காநிலையிலிருப்பது வியப்பல்லவே.

புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ஒன்று இல்லாத இந்நேரத்தில் அரசியல் பேசும் பெண்கள் பொதுவெளியில் அபலைகளாக ஆக்கப்படப்போகும் கொடூரம் நிகழக்கூடும். ஆனால் அதைத் தெரிந்துதான் எம் பெண்கள் பொதுவெளிக்கு வரவில்லை என நினைப்பது முட்டாள்தனம். ஆனால் ஒரு சில பெண்கள் அதைத் தெரிந்துகொண்டு ஒதுங்கியிருந்து சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இறங்கி வேலை செய்யாமைக்கு எம் சமூகமே காரணமாகும்.

முகநூலில் புரட்சி பேசும் சமூக வலைத்தள போராளிகளின் சமூகப் பார்வையில் எந்த சமூக மாற்றமுமில்லை. அவர்களது துணைவியார்களின் தளங்களை நோக்குவோமெனின் குடும்ப மாற்றமே நிகழ்ந்திருக்கவில்லை என்பது புரியும். அவர்களது அரசியல் சம்மந்தரிற்கும் கசேந்திரகுமாருக்கும் சுமந்திரனிற்கும் வேண்டுமானால் அடியாற்களை சேர்ப்பதில் பலனளிக்கலாம்.

வேல்கம்பும் அரிவாளும் சுடுகலனும் ஏந்திய பெண்கள் இன்று கால் நகங்களைக் கூட ஆடவரின் நுகர்ச்சிப் பிண்டத்தின் கூறாக அழகாக்குகின்றனர். கிடாய் ஆட்டிடம் சூப்ப விட்ட பனங்கொட்டை போல மயிரை சிலுப்பாக்கி, விரித்துவிட்டு வெளிற்றுந் தூள்களை முகத்திற்கு பூசி, மஞ்சள் காமாலை வந்ததுகள் பொல வெளிறிப்போய், கைகால்கள் கன்னங்கரேலென்று தமிழரின் நிறத்தைப் பறைசாற்ற…. எப்போது எம் சமூகத்தையும் இனத்தையும் அழகாக்கப்போகிறோம்? உண்ண உணவின்றி முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளையும் இழந்து சகோதரனை காணாமல் போனோர் பட்டியலில் தேடிக்கொண்டிருக்கும் பெண் கூட, தன் ஏழ்மையைக் கடந்தவுடன் அரசியலை மறந்துவிடுவது தான் துன்பியல். எமது சமூகத்தை இத்தகைய நுகர்ச்சி சுழற்சிக்குள் வைத்திருக்கும் நுண்ணரசியலை விளங்குவதற்கு முன்னர் பெண்களிடம் சமூகப் பார்வை ஏற்படவேண்டுமல்லவா? மேற்கத்தைய அன்ரிகள் கதைக்கும் பெண்ணியமல்ல எமக்கான விடுதலை.
எமக்கான விடுதலையில் எம் இனத்திற்கான விடுதலைக்கான படிநிலையாகும். எமது இருப்பை எமது இனத்தின் தளத்தில் நின்று பேசவேண்டிய நாங்கள் இன்று எம் ஆளுமையையும் விற்று, எம் நாட்டின் விடுதலையையும் விற்றுக்கொண்டிருக்கிறோம். எமக்காக மண்ணில் விதையாகிப் போன எங்கள் அக்காக்களுக்காகவேனும் ஒரு பெண்ணாய் இல்லாது இனத்தின் ஒரு கூறாக சமூகத்திற்காகவும் எம் மண்ணிற்காகவும் சிந்திக்கின்ற ஈழப்பெண்ணாய் மாறுவோமா? எம் நாட்டின் விடுதலை எமக்கான கடமை. கடமைகளுக்காய் கரம் கோர்ப்போமா? அழகும் வாழ்க்கையும் இனத்தின் விடுதலையே. இனத்தின் விடுதலையில் எமக்கான அழகினைத் தேடுவோமா?

பிற்குறிப்பு : இப்பத்தியை படிக்க வேண்டிய பெண்கள் படிக்க மாட்டார்கள். இதைப் படிப்பவர்கள், படித்துவிட்டு பகிர்பவர்கள்… முப்பதே நாட்களில் அழகு என்று குறிப்பிட்டு பகிர்ந்துவிடுங்கள். அவ்வாறு பகிர்ந்தால் தான் அவர்களிடம் போய்ச்சேரும்.

செல்வி

31-12-2017

 4,771 total views,  2 views today

2 Comments

  1. எவ்வளவு காலத்திற்கு தான் ஆண்களை மட்டுமே குறை சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள் என்று நினைக்கும் போது தான் இப்போது பெண்கள் தங்களின் நிலையை உணர தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. சுதந்திரம் என்பது யாரும் தரப்போவது இல்லை உடைத்து கொண்டு வெளியில் வரவேண்டும்.
    சமூக அக்கறையோடு காத்திரமான கோவம்.

  2. இது ஈழப்பெண்களுக்கு மட்டுமானதாக தோன்றவில்லை. ஒடுக்கப்பட்ட பெண்கள் எல்லோருக்குமானது.
    நெருடலை ஏற்படுத்தாத பெண்ணியம் பேசும் பெண்கள் கொள்ளை அழகு. அவர்களுக்கு bleaching powders தேவையில்லை.
    சுட்டு விரலை உங்களையும் நோக்கி திருப்பிவிட்டீர்கள்.
    இனி நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் முகிழும். வாழ்த்துக்கள்.

Leave a Reply