பண்பாட்டு மீட்சியே புரட்சிகர சக்திகளாக தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி

மட்டக்களப்பு கண்ணகை சடங்கு படம் : நிலா

பண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் போன்ற சொல்லாடல்களும் அவை தொடர்பான உரையாடல்களும் பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களின் வழி வந்து சேர்ந்திருப்பினும் மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அடையாள அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது தமிழர்களின் வாழ்வியல் போக்கில் பெரும் செல்வாக்கினைச் செலுத்தி வரும் அரசியல் வடிவமாக இருக்கின்றது. மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பில் அவற்றின் மரபு சார்ந்த அடையாளங்களை சாதி, சமயம், மொழி, இனம் போன்ற கூறுகளின் குழுமம் சார்ந்து இந்த அரசியல் எளிதில் உட்புகுந்து, பண்பாட்டு மடைமாற்றங்களைச் செய்யும் நுண்ணரசியலின் ஊக்கிகளாக அமைந்துவிடுகின்றன. காலம் காலமாக அரச அதிகாரத்தின் துணையோடு மக்கள் தேசிய நீக்கம் செய்யப்படுவது நிகழ்ந்து வருகின்றது. மரபுவழித் தேசிய இனமான ஈழத்துத் தமிழர்களையும் இந்த அரசியல் விட்டுவைக்கவில்லை. விடுதலைவேண்டி போராடி, தன் மக்களையும் போராளிகளையும் முள்ளிவாய்க்காலில் தொலைத்துவிட்டு, ஏதிலிகளாக, ஆயுதங்களின் கனத்த மௌனத்தில் விடுதலையைத் தேடும் வழிவகைகளைச் சிந்திக்க வேண்டிய இக்கட்டான சூழலிற்குள் தள்ளப்பட்டிருக்கும்    இந்த நேரத்தில் இன அழிப்பு அரசினதும் அதற்கு துணைபோகும் ஏனைய அரச பயங்கரவாதங்களின் கூட்டினாலும்  பிரகடனப்படுத்தப்படாத ஒரு நுண்ணிய அரசியல் வடிவமாக மதமானது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. எங்களுக்குள்ளிருக்கும் வழக்காறுகளின் பிளவுகளினுள்ளும் உணர்வுகள் சார்ந்த மயக்கங்களுக்குள்ளும் இலகுவாக ஊடுருவி, எங்களின் அடையாளங்களின் மீது நாங்களே கேள்விகேட்பவர்களாக மாற்றிவிடும் சுழிக்குள் எம்மை விழுத்தி விடுகின்றது. ஆதிக்க அரசியலின் இந்த நுண்ணிய மரபு நீக்கம் விடுதலை அரசியலையும் மரபு மீட்பையும் இனம் சார்ந்த இருப்பையும் முழுமையாக அழித்துவிடக்கூடியது. ஆனால் எம்மைக் கருவிகளாகப் பயன்படுத்தி, எங்களையே நாங்கள் அழிக்கின்ற இந்த சூழ்ச்சியினுள் இருந்து நாம் எம் இனத்தையும் இனத்தின் ஒவ்வொரு தனியனையும் விழிப்புள்ளதாக வைத்திருக்கவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு சமூகத்திலும் பல்வேறு காலகட்டங்களில் ஏதோவொரு வகையில் மத நம்பிக்கைகளும் அது சார்ந்த வழக்காறுகளும் தோன்றி இருக்கின்றன. ஆனால் இன்று மனித குலம் விஞ்ஞானத்திலும் அபிவிருத்தியிலும் உச்சம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் கூட  சமூகத்தினுடைய கூறுகளே மனித அபிவிருத்திக்கு முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டாலும் கூட, மனித சமுதாயத்தை மதக்கருத்துக்களை நோக்கித் தள்ளுகின்ற ஏதோவொன்று மனிதனின் உயிரியல் பண்பிலேயே இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்படவேண்டிய தருணம் இது. மதம் செய்யும் அதே சமூக வேலைத்திட்டங்களை வேறு சித்தாந்தங்களும் செய்ய முடியுமல்லவா. ஆயினும் மத சித்தாந்தங்களை உலகளாவியதாக ஆக்குகின்ற, மதங்களை நோக்கி கவர்ந்திழக்கின்ற ஏதோ ஒருபுள்ளியை கேள்வி கேட்க வேண்டும்.  அந்த வகையில் மதமும் அதுசார்ந்த கருத்துருவாக்கங்களும் இனத்தின் இருப்பிலும் அதன் அடையாளத்திலும் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை இக்கட்டுரை நோக்குகின்றது.

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே அதனுடைய வாழ்வியல் சூழல் அதன் சேர்ந்து வாழல் தேவையை உருவாக்கியிருந்தது. இயற்கையும் அதுசார்ந்த காரணிகளும் மனித இனத்தைக் குழுமங்களாக கூடி வாழும் கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்த குழுமத்தின் ஆதிக்க சமூகத்தின் வழக்காறுகள் நியமங்களாக நிலைபெற்றன. சமுதாய அமைப்புக்களை சமத்துவச் சமுதாயங்கள், தரநிலைச் சமுதாயங்கள், வர்க்க சமுதாயங்கள் என மானிடவியலாளர்கள் வகைப்படுத்துவார்கள். இந்த பிரிப்புக்களே இனங்களின் இடையில் நிலவிய பண்பாட்டு வேறுபாடுகளை உணர்த்துகின்றது. தமிழ்ச் சமூகமானது ஒரு சமத்துவ சமுதாயமாக குழுமம் சார்ந்த வாழ்வியலை வாழ்ந்தவர்கள் என்பது இலக்கிய வழியிலும் மானிடவியலாளர்களின் ஆய்வுகளின் வழியிலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. குழுமம் சார் வாழ்க்கையில் அவர்களுடைய வாழ்க்கைக் கூறுகளினை அவர்கள் வாழ்ந்த வெளி தீர்மானித்தது. இயற்கையோடிணைந்த அந்த வாழ்வில் இயற்கையின் சீற்றங்களும் அதன்பால் விளைந்த அழிவுகளும் ஏதோ ஒரு வலுவின் மீது பயத்தை ஏற்படுத்தின. இயற்கையானது இடி, மழை, புயலின் வாயிலாக தன் சீற்றத்தைக் காட்டியது. தான் செய்த குற்றமே அந்த இயற்கை அழிவுகளுக்கு காரணம் எனவும் மனித குலம் நம்பியது.  அந்த மனநிலையின் விளைவுகளாக வழிபாடுகள், அதுசார்ந்த வழக்காறுகள் என்பன போன்ற புனைவாக்கங்கள் நிகழ்ந்தன. மனிதன் இயற்கையை வணங்கத் தொடங்கினான். இவ்வாறு வழிபாட்டின் தொடக்கமாக இருந்த இயற்கை வழிபாடு, மனிதனது பண்பாட்டு வளர்ச்சியில் தனக்கு நன்மை செய்கின்ற பொருட்களையும் வணங்கத் தொடங்கும் போது, அது போலி உரு வழிபாடாக தொடர்ந்தது. தனது முன்னோர்கள் தம்மைக் காக்கின்றார்கள் என்ற நம்பிக்கையும் முன்னோர் வழிபாடு எனும் மரபுவழி வழக்காறு ஒன்றிற்கு இட்டுச்சென்றது. அன்றைய நடுகல் வழிபாடு முதல் இன்றைய மாவீரர் துயிலுமில்லங்கள் வரை இந்த மரபுத் தொடர்ச்சி தமிழர்களின் வரலாற்றினை கூறும் அடையாளமாக இருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வாறாகத் தோன்றிய வழக்காறுகள் காலப்போக்கில் நிறுவனமயப்படுத்தப்பட்ட மதம் என்னும் நிறுவனங்களாக உருவாக்கம் பெற்றன. சமூக நிறுவனமாக தொடங்கப்பட்ட வழக்காறுகள் இன்று அரச நிறுவனங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த நிறுவனமயமாக்கலிற்குள் எடுபடாது மரபுக்குடிகளின் வழிபாட்டு மரபுகள் தலைமுறைகளின் வழியாகக் கடத்தப்படும் மரபுத்தொகுதியான வழக்காறுகள் கிராமிய வழிபாடுகள் அல்லது நாட்டுப்புறச் சமயம் என்ற பிரிவுக்குள் உள்ளடங்க, அதற்கு மாறாக புராணத் தெய்வங்கள் பெருஞ்சமய மரபுக்குள் உட்பட்டிருக்கின்றன. அரச விரிவாக்கலுக்கும் அதன் கருத்துருவாக்கங்களுக்குமான ஒரு நிறுவனமாக பெருஞ்சமய மரபு உருவாக்கப்பட்டது. மரபுக்குடிகளின் வழக்காறுகள் அதன் மரபுசார் நியமங்களில் நெகிழ்வுத்தன்மை அற்றவை. வெளியிலிருந்து நோக்கும்போது கட்டுப்பாடுகள் ஏதுமற்ற மரபு என்று தோன்றினாலும் அதன் உள்ளில் கட்டிறுக்கமான  பண்பாட்டுத் தொடர்ச்சிகளால் பிணைக்கப்பட்டிருப்பது தான் அந்த மரபின் இருப்பின் அடிநாதமாகும். மரபுச்சமூகங்கள் பண்பாட்டுக் கலப்பினையும் நவீனத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றின் வழக்காறுகளும் அது சார்ந்த பரப்பும் மிகவும் குறுகியது. ஒரு பொதுமைப்படுத்தலை அவைகளுக்குள் திணிக்க முடியாது. அந்த வழக்காறுகள் மதம் சார்ந்தவையாக மட்டுமன்றி, அந்த இனக்குழுமத்தின், இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிப்பனவாகவும் இருக்கும். அத்தகைய  மரபுவழி இனங்களின் இருப்பு பெரும் அரசு உருவாக்கல் கொள்கைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதிய அரசுகள், பெருஞ்சமய மரபுகளை உருவாக்கின. அந்தப் பெருஞ்சமய மரபுகளுக்குள், மரபுவழி வழக்காறுகளின் சில கூறுகள் உள்ளன போன்ற மாயத்தோற்றங்கள் உருவாக்கப்படும் போது, மரபுவழி வழக்காறுகளினுள் பெருஞ்சமய மரபு இலகுவாக ஊடுருவி, காலப்போக்கில் அந்தப் பெருஞ்சமயத்தின் வழக்காறுகள் மரபுவழி வழக்காறுகளை இல்லாமல் ஆக்கிவிடும். அப்போது, முன்னர் வழிபாடுகள் சார்ந்த வழக்காறுகள் வெறுமனே மதம் சார்ந்தவையாக மட்டுமல்லாது, இனம் சார்ந்த அடையாளங்களாகவும் இருந்திருக்கும். சிறிது சிறிதாக> அந்த வழக்காறுகள் இன்னொரு வழக்காறுகளுக்குள் உட்பட்டுப்போனாலும் அதைப் பிரித்தறிய முடியாது. அந்தப் பெரும்சமய ஊடுருவலின் வழக்குகள், இனத்தின் அடையாளமாக கருதப்படும் நிலைக்கு வந்துவிடும். இந்தக் கருத்துருவாக்க தந்திரோபாயமே பெருஞ்சமய உருவாக்கத்தின் அரசியல்.

       ஈழத்து தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் அது ஐரோப்பிய பெருஞ்சமய மதத்தின் பார்வையையும் இந்தியத்தின் இந்துத்துவாவின் பார்வையின் குவியத்தை பெற்றதாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது. உலக வரலாற்றின் அபிவிருத்திப் படிநிலைகளில் ஆதிக்க சமூக அமைப்புக்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளும் மேல் தட்டு வர்க்கத்தினரால் மதம் நிலைநிறுத்தப்பட்டது. உதாரணமாக, கிறிஸ்தவ மதம்  தன்னுடைய விரிவாக்கலைச் செய்துகொண்டிருந்த காலத்தில் நிலப்பிரபுத்துவத்தின் முதன்மை நிலையங்களாக தேவாலயங்கள் விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் செல்வாக்குப் பெற்ற ஒரு மதத்திற்கு, அந்த நாட்டின் உற்பத்தி சக்திகள் அனைத்தையும் உள்வாங்குவது பெரும் விடயமல்ல. அந்த ஆதிக்க வர்க்கத்துடனும், தேவாலயங்களின் கூட்டுடனும் மத நம்பிக்கைகள் என்ற மாயைகளை மக்களிடத்தில் பெருகச்செய்து, மதம் தன் அதிகாரத்தை அரசியல் அதிகாரமுடையதாக மாற்றியது. இன்னொரு புறத்தில் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக தம்மை உருவகிக்கவும் ஆதிக்க வர்க்கம் போலியாக இயங்கியது. “மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் ஏக்கப் பெருமூச்சு, ஓர் இதயமற்ற உலகின் இதயம், அது ஆன்மாவற்ற நிலைமைகளில் ஆன்மாவாக இருக்கிறது” என்று மார்க்ஸ் குறிப்பிடுவது போல, மதத்தின் விரிவாக்கலுக்கும் அதன் ஆதிக்கத்திற்கும் ஏழை மக்கள் பலியாகிப்போனார்கள். பொருளாதார ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அவர்களை தனக்குள் ஈர்த்துக்கொண்டது மதம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் உலகின் இயக்கத்தை மக்கள் புரிந்துகொண்ட இக்காலத்தில் கூட கடவுள் பற்றிய கருத்துருவாக்கம் மிகவும் அருவமானதாகவும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவும் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. மனிதனுடைய அனுபவ, அறிவு ஆளுமைகளை மதம் ஆக்கிரமித்துவிடுகிறது. டௌகின்ஸ் என்ற அறிஞர் கூறுகையில், “ அடிமட்ட வர்க்கத்தை அடிமைப்படுத்த ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட கருவியே மதம்” என்கிறார்.

அனுமானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கருத்துமுதல் வாதத்தின் அடிப்படையாகக் கட்டியமைக்கப்பட்டிருக்கின்ற மதம் என்னும் நிறுவனமானது, மனிதனுடைய தர்க்கரீதியான கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும் மறுப்புரைக்கினறது. ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய கருத்தாக்கங்களின் மேல் புனிதத்தன்மையை ஏற்றி, அவற்றை மறைபொருட்கள் என்று பிரகடனப்படுத்துகின்றது. மனித வாழ்க்கையின் சுழற்சிப் படிகளான பிறப்பு, இறப்பு, நோய், மரணம் போன்றவற்றின் காரண காரியங்களை விஞ்ஞான முறைக்கு உட்படுத்தாது, அவையெல்லாம் மறைபொருளான கடவுளின் சக்தியால் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகின்றது. வெற்றியின் படிகளான கூட்டுழைப்பு, கூட்டு முயற்சி, வேலைப்பகிர்வு போன்றவற்றினால் செய்யப்பட வேண்டியவைகளை ஏதோ ஒரு சக்தியினால் நிகழ்த்துவிக்கப்படுகின்றன என்ற மாயக் கருத்தியலைப் பரப்பி, மனிதர்களின் முயற்சியாண்மைகளை இல்லாமல் ஆக்கி, அவர்களை இயலாதவர்கள் ஆக்கி விடுகின்றது. எதையும் திட்டமிட்டு செய்யமுடிந்தால் வெற்றி கிடைக்கும் என்ற மனித உளப்பாங்கையும் கூட்டு முயற்சியால் எதையும் மாற்ற முடியும் என்ற சிந்தனையையும் மறுதலிக்கும் கருத்தியல் அடியாளாக மதம் இருக்கின்றது. மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளை நீக்கும் வழிவகைகளை யோசிக்காது, அவற்றை அப்படியே நிலைநிறுத்தி, அந்த முட்டாள்தனமான போக்கினை ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமாக்கும் வேலைத்திட்டத்தின் கூழைப்படையாகவும் மதம் நிலைநிறுத்தப்படுகின்றது. பழைய வழக்கங்கள் இக்காலத்திற்கும் பொருந்துமா என்ற வினா எழுவதைத் தடுக்க, அவற்றிற்கு புனிதத் தன்மைகளைக் கொடுத்து, புனிதத்தைக் காப்பாற்றுதல் என்னும் போர்வையில் பழைய கருத்தியல்களை அப்படியே வைத்திருப்பதில் மதம் பாரிய பங்காற்றுகின்றது.

பொருளாதாரமும் அதுசார்ந்த கட்டுமானங்களும் மனிதனது வாழ்வியல் கோலங்களைத் தீர்மானிப்பதனால், அந்தப் பொருளாதாரத்தினைத் தீர்மானிக்கின்ற வலுவாக மதமும் அதன் கட்டமைப்புக்களும் ஆளும்வர்க்கத்தினால் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், சமூகத்தின் தேவைகள் பொருளாதாரம் தவிர்ந்த ஏனைய விடயங்களாக மாறுமிடத்து, அந்தத் தேவைகளின் விடை குறிப்பிட்ட மதத்தில் இல்லையெனின், அந்தத் தேவைகளை மதம் மறு உற்பத்தி செய்யும். தனது உட்கிளைகளையும் அதற்கான முகவர்களையும் உருவாக்கி, மக்களை தொடர்ந்தும் தனது கட்டுக்குள்ளேயே வைத்திருக்கும்.

சம்பிரதாயங்கள், கடவுள், அதுசார் சிந்தனைகள் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் திணிக்கப்பட்டவையே. வழக்காறுகள் வாழ்வியல் தொடர்ச்சியில் வருபவை. அவற்றினை மதம் என்ற போர்வைக்குள் நின்று நோக்காது, அந்த வாழ்வியலின் மண் சார்ந்தும் தொன்மம் சார்ந்தும் நோக்கப்பட வேண்டும். அவ்வாறில்லையெனின், தொடர்ந்தும் மதமானது எமது வழக்காறுகளை வைத்தே அந்தப் புனிதங்களின் பெயரால் எமது இயங்குநிலைகளைக் குறுகிய வட்டமொன்றினுள் கட்டுப்போட்டு வைத்திருக்கும். போலிச் சிந்தனைகளையும் கருத்தியல்களையும் வைத்து கட்டமைத்து புனிதம் என்று நிறுவி, அந்தப் போலிகளை புனிதத்தின் பின்னால் மறைத்தும் வைத்திருப்பதில் மதம் குறியாக இருக்கின்றது. மண்ணின் இயங்காற்றலினையும் அதன் விடுதலையையும் நோக்கிச் சிந்திக்கும் இனத்தினை, அது விடுதலையை நோக்கி பயணித்துவிடக்கூடாது என்ற தேவை ஆளும் வர்க்கத்திற்கு இருக்கின்றது. விடுதலையின் பொறி கிளர்ந்தெழக்கூடிய உழைக்கும் வர்க்கத்திற்குள் மதத்தினைத் திணிப்பதில் ஆளும் வர்க்கம் மூச்சாக இயங்கும். வழிபாடுகளும் வழக்காறுகளும் இனத்தின் உழைக்கும் வர்க்கத்திலிருந்தே எழுந்தவை. அவை பெரும் மதங்களின் வழக்காறுகளை மதம் என்னும் புனிதத்தின் பெயரால் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று உணர வேண்டும். தமது மண்சார்ந்த வழக்காறுகள் தம்மிடமிருந்தே மேலெழுந்தவை என்ற உண்மை உணரும் வரைக்கும், ஆதிக்க சக்திகளின் வழக்குகளை நம்பும் இழிசெயலை மக்கள் செய்துகொண்டேயிருப்பார்கள்.

இனம் சார்ந்த அடையாளத்தை மாற்றுவதில் ஆளும் வர்க்கத்தின் மதம் சார்ந்த அடையாளங்கள் பாரிய பங்காற்றுகின்றன. நிலம் சார்ந்த விடயங்களை அணுகும்போது மரபு, தொன்மம், வரலாறு என்பவற்றினூடான வளர்ச்சிப் போக்கினை நோக்குவதற்குப் பதிலாக பொதுக்கருத்தியல்களினூடாக நோக்கும் போக்கினை, பொதுக்கருத்தியல்களை கட்டமைத்த மதத்தின் அடிப்படையில் நோக்கும் நிலை உண்டாகும். இந்த நோக்குநிலையானது, மரபுவழித் தேசிய இனமான தமிழர்களின் மரபுகளை மறைத்து, இந்துத்துவா என்ற பெரும் கதையாடலின் வழி திணிக்கப்பட்ட  அடையாளங்களினூடாக இன அடையாளங்களை நோக்கும் வேலைகளை இன அழிப்பு அரசுகள் கூட்டாகச் செய்துவருகின்றன. இன்று நேற்று அல்ல. காலங்காலமாக தமிழினத்தின் அடையாளங்களை அழிப்பதற்குரிய உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன என்பது வரலாறு கூறும் பாடமாகும்.

தமிழ் மக்களை, அவர்களின் திணை வாழ்வினை, திணை வாழ்வின் தொடர்ச்சியை, அவர்களின் வழக்காறுகளை அவர்களிடமிருந்து பிரித்ததில் இந்துத்துவாவின் வர்ணாசிரம முறைமை ஆளும் சக்தியின் இன அழிப்பு மூலகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. திறனடிப்படையிலும் நில அமைப்பு சார்ந்தும் உற்பத்திகளை நிகழ்த்தி வந்த மக்களை, பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டிற்குட்படுத்தி, அவர்களின் திணை வா ழ்வியலையும் திணை வாழ்வியலோடு இணைந்திருந்த வாழ்வியல் முறைமைகளையும் சிறிது சிறிதாகக் குலைக்கும் முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றது. காலங்காலமாக நிக ழ்ந்து வந்த இந்த நுண்ணிய அழிப்பு முறையினால் மண்ணுக்குரியவர்களான நாங்கள் எங்கள் வரலாற்றையும் வழக்காறுகளையும் அறிந்துகொள்வதற்கு பதிலாக மதத்தின் அடையாளங்களை எம் அடையாளங்களாகச் சொல்ல வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றோம். தேடவேண்டிய அடையாளத்தையும் மதத் திணிப்பானது திசைமாற்றி விடுகின்றது. மத அடையாளம் மேலாதிக்கம் பெற இனத்தின் தொன்ம அடையாளத் தேடல்கள் உருமறைப்புச் செய்யப்பட்டு விடுகின்றன.

சங்க கால வாழ்வியலை ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது தமிழர்களின் வாழ்வியலில் தாய்த்தொன்மத்தினை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வழிபாட்டினை தன் வழக்காறாகக் கொண்டிருந்தது என்று அறியக்கூடியதாகவுள்ளது. அவர்களின் மண்சார்ந்த திணை வழிபாடுகளே முதன்மை பெற்றிருந்தன. தாய்த்தொன்ம வழியில் வந்த “கொற்றவை மரபு” சங்ககாலத்தின் நற்றிணை இலக்கியம் முதல் சிலப்பதிகார காலம் வரை நீட்சியடைந்திருப்பதை இலக்கியங்களினூடாக நோக்கலாம். இனத்தின் மரபினை அறிந்துகொள்வதற்குரிய முதன்மை மூலங்களில் ஒன்றாக இலக்கியங்கள் நோக்கப்படுகின்றன. அந்த இலக்கியங்களைத் தீர்மானிக்கும் காரணிகளாக இந்த இலக்கியப் படைப்பாளியின் அரசியல் நிலையும் அந்த சூழலின் அரசியல் ஆதிக்கமும் இருக்கும். சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் தாய்த்தொன்மத்தின் கதை சொல்லலினூடாக, தமிழ்த் தேசியத்திற்கான காப்பியமாக சிலப்பதிகாரத்தினைப் படைத்திருக்கிறார். அரசியல் ஆதிக்கத்தின் செல்வாக்கினைப் பெற்றிருந்த சமண மதத்தின் காப்பியமெனக் கூறப்படுகின்ற காப்பியம் தான் தமிழின் தேசியக் காப்பியமாகக் காணப்படுகின்றது. மதத்தின் ஒரேயடியாக மறுதலித்து ஒரு இலக்கியம் படைக்க முடியாது. தேசிய நாட்டிற்குரிய மொழி, அரசு, மதம், மரபு, பொருண்மியம், வரலாறு என்பவற்றைக் கட்டமைக்கும் காப்பியமாக சிலம்பு பாடப்பட்டது. தொடர்ந்து வந்த படையெடுப்புக்களின் விளைவாக ஆரிய வழிவந்த தெய்வ வழிபாடுகள் தமிழர்களின் வழக்காறுகளில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டன. சிலப்பதிகாரம் பேசுகின்ற தேசிய ஒருங்கிணைப்பிணையும் தேசிய அடையாளத்தையும் கண்டு பயந்த ஆரியர்களால், அந்த அடையாளத்தை அழிக்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த நுண்ணிய அழிப்பு வேலைத்திட்டத்தில் கண்ணகி என்னும் தொன்ம வழிபாட்டு மரபும் அழிக்கப்பட்டு, அம்மன் வழிபாடாக இந்துத்துவாவினால் உருமாற்றப்பட்டுள்ளது. சங்கத் தொன்மையின் எச்சமான கண்ணகி வ ழிபாடு, ஆங்காங்கே எஞ்சியிருப்பினும் ஈழத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் அதன் தொடர்ச்சி இன்றும் பெருமளவில் நின்று நிலைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆரியர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கண்ணகியின் அடையாள அழிப்பின் பின்னாலிருந்த ஆரியத்தின் தமிழன் மீதான வன்மத்திற்கும் சற்றும் குறையாத வன்மத்தினை யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரால் நிகழ்த்தப்பட்ட கண்ணகி சிலை அழிப்பு காட்டி நிற்கின்றது. ஆனால் எங்கள் அடையாளங்களை அழித்த ஆறுமுக நாவலர் இன்று எமது பாடப்புத்தகங்களிலும் எம்மாலும் போற்றப்படுகின்றார். இதுதான் மதம் செய்யும் நுண்ணரசியல். அது இனம்சார் நலனைப் புறந்தள்ளி, மதஞ்சார் விடயங்களில் மக்களை குவியச் செய்யும். இன்னொரு வகையில் மதங்களைப் பாடிய இலக்கியங்களினூடாக தமிழ்மொழி தக்கவைக்கப்பட்டதென்பதும் உண்மையாகும்

       சங்கம் மருவிய காலத்தில் மதத்தின் அடையாளங்கள் ஆதிக்க அரசியலின் அடையாளங்களாக நிலைமாற்றப்படுகின்றதான சூழலே நிலவியது. சமண பௌத்த மதங்களுக்கிடையிலான போட்டியில் மொழி சார்ந்ததும் அந்தப் பண்பாடு சார்ந்ததுமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதம் என்ற ஆதிக்கத்தின் விளைவாக பல சமண பௌத்த இலக்கியங்கள் அழிக்கப்பட்டன. அவை மதம் சார் படைப்புக்களாக நோக்கப்பட்டதேயன்றி, மொழி சார்ந்த, இனம் சார்ந்த படைப்புக்களாக நோக்கப்படவில்லை. அனல்வாதம், புனல் வாதம் என்ற மதப்போர்களில் மதத்தின் வன்ம உளவியலில் அழிப்பிற்கு உள்ளாகியது மதம்சார்ந்த படைப்புக்கள் அல்ல. தமிழ் மொழி சார்ந்த படைப்புக்கள். ஆரியனின் இன உளவியலானது, நேரடியாக இன வன்மத்தைக் காட்டாது, நுண்மையாகத் திட்டமிட்டு, மதங்களால் தமிழர்களைப் பிரித்து, அவர்களது கைகளாலேயே அவர்களது படைப்புக்களை அழித்தொழித்தது. சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார் போன்ற மக்களின் வாழ்வியலைக் கூறும் படைப்புக்கள் புறந்தள்ளப்பட்டு, பக்திப் பனுவல்கள் உச்சம் பெற்றன. ஆலயங்கள் பண்பாட்டின் அடையாளங்களாகக் கட்டமைக்கப்பட்டன. பல்லவர் காலத்தில் பெருஞ்சமய உருவாக்கத்தினுள் அனைத்துச் சமயங்களையும் வீழ்த்தி, சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக மாறின. கொற்றவை மரபும் முருக வழிபாடும் சைவத்தினுள் உள்வாங்கப்பட்டன.   இனத்துவ அடையாளங்கள் மெதுமெதுவாக மறுக்கப்பட்டும், மத அடையாளங்களில் உரு மாற்றம் பெற்றும் சிதைக்கப்பட்ட ஆரியத்தின் வன்மம் இன்றுவரைக்கும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.

       காலனியத்தின் ஆட்சியும் அதனால் விளைந்த ஆங்கிலக்கல்வியும் கிறிஸ்தவ மதமும் அன்றிருந்த தமிழ்ச்சூழலில் ஒரு பண்பாட்டு ரீதியான மடைமாற்றத்தினை நிகழ்த்தின எனலாம். சமூக அமைப்பு, சாதி, மதம், மனிதம் போன்றவற்றின் மீது கேள்விகளை எழுப்பின. மரபுவழிச் சமூகங்கள் எந்தவொரு புது விடயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்தவமும் ஏற்கனவே இருந்த வாழ்வியலினை தளமாகக் கொண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஈழத்தைப் பொறுத்தவரையில் இனத்தின் அடையாளச் சிக்கலின் மிகப்பெரிய ஆரம்பம் ஆறுமுக நாவலராலேயே இடப்பட்டது. சைவ சமயம், வேளாளர் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு அது தொடர்புபட்டாலும் அது இந்துத்துவா என்ற மத உளவியலின் வழியே நிகழ்ந்தது. காலனித்துவத்தில் கிறிஸ்தவ மதமாற்றங்கள் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அதன் வீச்சத்தினைக் குறைப்பதற்காக சைவ சமய மீட்டுருவாக்கத்தினை நிகழ்த்தினார். மிகப்பெரும் நிறுவனமான கிறிஸ்தவ மதத்திற்கு ஒப்பான நிறுவனமயமாக்கலை சைவ சமயமும் நிகழ்த்துவதே அதன் மீட்டுருவாக்கத்திற்கான வழியென நினைத்து, அந்த நிறுவனமயமாதலுக்கு குறுக்கே நிற்கக்கூடிய மரபுவழி வழிபாடுகளை அகற்றினார். வெறுமனே கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிராக மட்டுமே அவர் ஆகம ரீதியான சைவ மதத்தை மீட்டுருவாக்கம் செய்யவில்லை  அவர் சார்ந்த சமூகம்  பிறப்பினடிப்படையில் சூத்திரர்களாகக் கருதப்படும் இந்து மதத்தினை அவர் நேரடியாக உட்புகுத்தவில்லை.    சைவம் என்னும் மதத்தைக் கொண்டு வந்து  பிராமணியச் சிந்தனைகளுக்கு தலைமையேற்கும் சற்சூத்திரர்களாக தான் சார்ந்த சாதியை நிலை நாட்டுவதற்கு வைதீக மயப்பட்ட ஆகம வழி சைவ சமயத்தினைக் கட்டமைக்கவேண்டிய தேவையும் இருந்தது. நாவலர் ஆகமச் சைவம், வேளாளர், சைவ மடங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கும்போது நாவலர் போல் ஆகமச் சைவம் என தனது அடையாளப் பரப்பைக் குறைத்துக் கொள்ளாமல், தமிழ் நாட்டில் வள்ளலார்
ஆகமச் சைவம் என்ற கருத்தியல் எல்லையையும் சைவ மடங்கள் என்ற நிறுவன எல்லையையும் மிக இலாவகமாகக் கடந்து செல்கிறார். நாவலர் தமிழ் அடையாளத்தை முந்தியகாலச் சாதி அளவுகோல்களைக் கொண்டு மிகவும் குறுகலாக்குகிறார். வள்ளலாரோ தமிழ் மரபில் அதுவரையில் இல்லாத ஒரு நவீனப் பண்பின் அடிப்படையில் அதனை விரிவடையச் செய்கிறார். இதன் காரணமாக வளளலாரை நாவலர் எள்ளி நகையாடி விமர்சித்திருக்கின்றார்.

 கண்ணகி சிலைகள் கடலுக்குள் எறியப்பட்டன. மதம் சாராத அடையாளமாக இருக்கவேண்டிய தமிழ்மொழியானது சைவத்தமிழ் என்ற குறுகிய வட்டத்தினுள் உள்ளடங்கிப்போவதற்குரிய சாத்தியங்கள் தோன்றின. ஆயினும் தமிழ் பெருமளவில் மதத்திற்குள் மாட்டிக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் சைவ மதம் என்ற போர்வையில் இந்து மதத்தின் புனிதங்கள் ஈழத்து தமிழர்களின் மத்தியில் ஏற்றப்பட்டன. சாதியம் என்ற வர்ணாசிரமக் கோட்பாடு ஆலயத்தினை அடிப்படையாகக் கொண்டு, தமிழின் உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையானோர் ஆலயங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். தமிழர்களின் மரபு வழிவந்த இசைக்கருவிகள், ஆலயத்தின் வெளி வீதிகளில் வைத்து மறிக்கப்பட்டன. யாழ்ப்பாணச் சமூகத்தின் முன்னுரிமையுள்ள மக்களாக வேளாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, ஆதிக்க சாதிகளுக்கான கல்விக்கூடங்களாக, சைவ வித்யாசாலைகள் நிறுவப்பட்டன. அங்கு படிக்கும் அனுமதி மறுக்கப்பட்ட தமிழர்களில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறி படித்த போது, இன்னொரு பக்கத்தில் சாதியரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன. சைவ சமய மீட்டுருவாக்கம் என்ற போர்வையில் யாழ்ப்பாண நிலவுடமைச் சாதிகளின் நலன்களும், காலனியத்துடன் தகவமைத்துக் கொள்ளும் புதிய நடுத்தர வர்க்கத்தின் நலன்களும் முக்கியமாகின. தமிழ்ச்சமயம் என்பதே சைவ சமயம் தான் என அவர்கள் நிறுவ முயன்றிருந்தனர். தமிழில் இருந்த இலக்கிய மரபுடன் சமஸ்கிருதம் எனும் இந்து மதத்தின் மொழியானது கலக்கத்தொடங்கியது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்கம் சார்ந்த விழிப்புணர்வுகள் நிகழ்ந்திராவிடின், தெலுங்கு, மலையாளம் கன்னடம் போன்ற தமிழைச் சிதைத்துப் பிறந்த மொழிகள் போன்ற இன்னொரு மொழியையே யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் காண முடிந்திருக்கும். இன்றும் கூட யாழ்ப்பாணத் தமிழ் தனித்துவமானது என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பொய்யில் யாழ் மைய வாதத்தின் மேலாண்மை தான் உள் நிற்கின்றதே தவிர, அதன் மொழிச் செழுமை அல்ல. சமஸ்கிருதச்சொற்கள் மிக இயல்பானது போல கலந்திருக்கின்றன. சமஸ்கிருதத்தின் அடிப்படையான மதச் சார்பும், தமிழ்மொழியின் அடிப்படையான மதச்சார்பின்மையும் நேர் எதிர்ப் பண்பாட்டு அரசியல்வாதங்கள் என்று புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மக்கள் மதங்களின் மயமாகி இருந்தனர். மரபுத் தமிழர்களின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக்கிய மரபுகளைப் பௌத்த சமண மரபுகள்நிலைப்படுத்தியிருக்கின்றன என்ற கருத்துக்களை மறந்துபோன தமிழ் இனம் முகிழ்த்தது. மொழிக்கலப்பு என்பது இனக்கலப்பிற்கு ஒப்பான அடையாள அழிப்பு. பல மொழிகளைக் கற்பது என்பது அறிவாற்றல்களை வளர்ப்பது என்ற கருத்தும் நிலவுகின்றது. ஆனால் சமஸ்கிருத மொழித் திணிப்பும் கலப்பும் அதனை நோக்கமாகக் கொண்டதல்ல. இன அழிப்பு ஆரிய அரசின் நுண்ணரசியலின் போர் வடிவமே அது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வேளாளரல்லாத,  சைவமல்லாதவர்களுக்கான படைப்பு வெளி உருவாகத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் தமிழ்ச்சூ ழல் அதன் இன விடுதலைக்கான போரினைத் தொடங்கிய போது, மத அரசியலிலிருந்த கவனம் இன அரசியலுக்கு இட்டுச்சென்றது. அந்தக்காலகட்டத்தில் இனம்சார்ந்த நிலமீட்பு முதன்மையான காரணமாக வர, மதமும் அதன் கட்டுமானங்களும் ஒரு ஓரத்தில் படுத்தி வைக்கப்பட்டன. ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர்,  மக்கள் மீண்டும் இனரீதியாக  ஒன்றுபட்டுவிடக்கூடாது என்ற கருத்தியலின் அடிப்படையில் மதங்களின் திறந்த வெளியாக தமிழ்ச்சமூகம் மாறிக்கொண்டிருக்கின்றது. அரசியலில் மத வன்முறை கோலோச்சத் தொடங்கியுள்ளது. பௌத்த சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலும் இந்துத்துவ இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலும் தமிழின அழிப்பு என்னும் புள்ளியில் ஒன்றுபட்டிருக்கின்றது.

தமிழர்களின் வழிபாட்டு வழக்காறுகளில் ஆலய வேள்விகளும் மடைகளும் தொன்றுதொட்டு வருபவை. விலங்குகளைப் பலியிடலும் அதுசார்ந்த வழக்காறுகளும் சமூக ஒன்றுகூடல்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைச் சட்ட ரீதியில் தடைசெய்துள்ளனர். மனிதர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது கவலை கொள்ளாத சட்டம், இன்று மிருகபலிக்கு வருந்துகின்றது என்பது எவ்வளவு பெரிய அபத்தம். மிருக பலி கூடாது என்று உண்மையான நோக்கமிருப்பின், நாடு முழுவதும் மாமிசம் உண்பது தடைசெய்யப்படவல்லவா வேண்டும். தமிழர்களின் உயிர்களுக்காக நீதி வழங்காத சிறீலங்கா அரசாங்கத்தின் சட்டம் கிராமியத் தெய்வங்களுக்குப் பலியிடும் மிருகங்களில் மட்டும் தன் கடைக்கண் பார்வை அருளினை  வழங்குகின்றதெனில், அதன் பின்னாலிருக்கும் மரபு அழிப்பு அரசியல் சாதாரணமானதல்ல. இந்தப் பலியிடல்கள் மரபின் எச்சங்களாக இருப்பவை. அவை உயிர்ப்பல்வகைமையின் கூறுகளாகவும் நோக்கக்கூடியன. மிருக பலியிடலின் தடையின் பின்னாலுள்ள அரசியல் புரியாமல், பலியிடல்களை நிகழ்த்துபவர்கள் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து மீளவில்லை என்று கூறி, தங்களை நாகரிகமடைந்தோராகக் காட்டும் மேட்டுக்குடிகளின் உளவியலின் திருப்தியானது, அந்தத் தடைகளை ஆதரிக்க, உழைக்கும் வர்க்கம் தன் வழக்காறுகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. எங்களுடைய நாகரிகம் வேறு. உழைக்கும் வர்க்கத்திற்குப் புறம்பாக நிற்கும் .இந்த வர்க்க வேறுபாடுகளின் உளவியலைக் கையகப்படுத்தி, மக்களின் வாழ்வியல் தொடர்ச்சியொன்று மறுக்கப்பட்டு, சமூக இயங்குநிலையைக் குறுக்கும் சிந்தனை வடிவமாக இந்துத்துவா இருக்கின்றது. மிருகங்கள் மேல் அன்பற்ற காட்டுமிராண்டிச் சமூகமாக மரபு வாழ்வியல் வழக்காறுகளைக் குறிப்பிடுவதும் அபத்தமானதே. ஒவ்வொரு விவசாயியும் தனக்கு உதவுகின்ற விலங்குகளை தன் வீட்டு உறுப்பினர்களில் ஒருவராக நோக்குவதும்,  அதற்கு விழா எடுப்பதும் காட்டுமிராண்டிகளின் செயல்களா? இன அழிப்புக்குப் பின்னரான இந்த நிலைமாறு காலத்தில் மக்கள் தங்களுடைய தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்று, தமது அடையாளங்களைத் தேடுவதைத் தடுப்பதே, கிராமிய வழிபாடுகளின் வழக்காறுகளைத் தடைசெய்வதன் பின்னாலுள்ள அரசியலாகும். மிருக வதையைத் தடுத்தல் என்ற சொல்லின் பின்னால் இருக்கும் ஒற்றை அர்த்தம் மிருகங்களைக் காத்தல் என்பதே. ஆனால் அது பன்முக அர்த்தங்களைக் கொண்டது. தமிழ்த் தொன்மத்தின் உருமறைத்தலின் நுண்ணிய அழிப்புச் சொல்.

சைவ உணவு அசைவ உணவு என்ற வேறுபாடுகளற்று, மனிதன் தான் உண்பதையே தான் நம்புகின்ற சக்திக்கும் படைத்து வழிபட்டிருக்கிறான். “அசைவ உணவு” என்ற சொல்லாடல் கூட பண்பாட்டு அரசியலின் ஒரு வடிவமே ஆகும். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மாட்டிறைச்சி என்பதன் பின்னாலிருக்கும் இனங்களின் அடையாள அழிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல வேள்விகளுக்கான தடைகள். மத சாதி அரசியலின் இன்னொரு முகம் தான் மக்கள் எதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்வதும். உணவு என்பது அவனது வாழிடத்தைச் சார்ந்தது. கடலின் அருகே இருப்பவன் மீன் சாப்பிடுவது இயல்பான விடயம். அவன் மாமிசம் சாப்பிடும்போது புனிதத்தை இழக்கிறான் என்று கட்டமைக்கப்படுவதன் உள்ளிருக்கும் மதத் திணிப்பு இலகுவில்பிடுங்கி எறியக்கூடியதல்ல. மரபு மீது தொடுக்கப்படும் இந்தச் சமூக வன்முறையின் பின்னணியிலேயே, இறைச்சியும் முட்டையும் மீனும் கள்ளும் உண்ட எம் கிராமியத் தெய்வங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக ஆகம முறைக்குட்பட்ட கோவில்களாக மாற்றப்பட்டு, சமஸ்கிருத மந்திரங்கள் நிறைந்த பெரும் சமயத்திற்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்றும் கூட அந்த மத அரசியலுக்குள் ஆட்படாது, தமது வழக்காறுகளை தொடர்ந்து செய்கின்ற வேள்விகளும் மடைகளும் ஆங்காங்கே எஞ்சியிருக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் அவையும் புனிதத்தின் பெயரால் தம் இழப்பை சந்திக்கும். சாதிய வன்முறையின் பின்னணியிலும் இவை கட்டமைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தினை அடித்தளமாகக் கொண்டு கூறப்பட்ட உற்பத்தி பொருளாதாரம் உலக மாற்றத்தினால் சிதைக்கப்பட்டபோதும், உலக இயங்கியல் சூழலில் உற்பத்தி உறவுகளில் சாதியம் இல்லாமலாக்கப்பட்ட பின்னும்  சாதியத்தின் சிந்தனை இன்னமும் தொடரவே செய்கின்றது. பொருண்மியத்தையும் தாண்டிய வன்ம உளவியலை மதம் உருவாக்கி வைத்திருக்கின்றது.

சிங்கள பேரினவாதத்தின் நோக்கம் தமிழனை அழித்தலாகும். அதற்காக, எந்த பண்பாட்டு வரவேற்பையும் நிகழ்த்துவதற்கு தயாராக இருக்கின்றது. பண்பாட்டு மாற்றத்தினூடாகவே தமிழர்கள் தமிழர் என்னும் ஒற்றை அடையாளத்தில் ஒன்றுபடுவதைத் தடுக்க இயலும் என்ற உளவியலை பேரினவாதம் சரியாகப் பயன்படுத்துகின்றது. புத்தர் சிலைகளின் ஊடுருவலுக்குச் சமமாக அனுமான் சிலைகளும் தனிமனித சாமிகளின் ஆலயங்களும் பஜனைகளும் வடக்கு கிழக்கிற்குப் படையெடுக்கின்றன. ஆனால் பௌத்தமயமாக்கல் என்று புத்தர் சிலைகளின் ஊடுருவலுக்கு எதிராகக் குரல் கொடுக்குமளவிற்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட எமக்கு, அனுமான் சிலைகளுக்கும் சாமிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தெரியவில்லையே. புத்தர் சிலையினால் எம்முடைய வாழ்வியல் கோலம் சிதைவிற்கு உள்ளாகும் என்று தமிழனாகச் சிந்திக்கத் தெரிந்த எம்மைää அனுமான் சிலையைப் பற்றி கேள்விகேட்கும் பிரக்ஞையை இந்து என்னும் மதம் மறைக்கின்றது. மிகப்பெரிய மரபுமாற்றத்தின் போர் வடிவங்கள் அவை என்ற புரிதலுக்கு வருவதற்கு மதம் விடாது. படித்த சமூகம் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் புத்திசீவிகள் கூட இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க அதன் அரசியல் புரியாமல் சில இளைஞர்களும் அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

சரியோ பிழையோ போர்த்துக்கேயர்கள் வரும்வரை மண்ணோடியைந்த வழிபாடுகளை மேற்கொண்டு வந்த தமிழர்கள் இன்று சர்வ சாதாரணமாக இந்து என்ற பெயருடன் உலாவுகிறார்கள். சிலர் வெளியே சைவம் எனக் கூறிக்கொண்டாலும், இந்துவாக மாறியிருப்பதைக் காணலாம். இந்தியாவின் ஆதிக்க வலயத்திற்குள் எப்போதுமே கட்டுண்டு கிடந்தாலும், 1990 களின் பின்னர் இது மிகவும் தீவிரமாக மாறிக்கொண்டிருக்கின்றது. சாயி பாபா, சீரடி பாபா, அம்மா பகவான், ஐயப்பன், அனுமன், மனித சாமிகள் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டிருக்கின்றது. இலங்கையை அழித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் அனுமானுக்கு கோவில் கட்டி அதனை வணங்கும் எமது சமூகம், காலப்போக்கில் இன அழிப்பு அரசுக்கும் கோவில் கட்டி வழிபட்டாலும் ஆச்சரியமில்லை. இந்துத்துவாவின் தாக்கத்தினால் எம்மிடையே வந்துசேர்ந்த தீபாவளி முதலிய பண்டிகைகள் இன்று எங்கள் அடையாளங்களாக மாறிவிட்டது போல, எதிர்காலத்தில் ஹோலிப் பண்டிகையும் எம் அடையாளமாகும் காலம் வெகு தொலைவிலில்லை. இந்தப் பண்பாட்டு மடைமாற்றத்தின் உள் அரசியல் அறியாமல் எங்களில் பலரும் அவற்றிற்கு துணைபோவது தான் இங்கு வேதனைக்குரிய விடயம். வேட்டி கட்டி, திருமணம் செய்த எங்கள் ஆண்கள் இன்று வட இந்திய பாணியிலான கேலித்தனமான உடையில்  (எமது வழக்கத்தில் பெண்கள் அணியும் பாணியிலான) நின்று தாலி கட்டுகிறான். பெண்ணுக்கு பெண் தாலி கட்டுவதுபோல இருக்கும் இந்த வழக்கம் காலப்போக்கில் எமது அடையாளமாக மாறிவிடப்போகிறது.

கிராமியத் தெய்வங்களுக்கும் அதன் வழக்காறுகளுக்கும் பழகிப்போயிருந்த மக்கள் இன்று பாபாக்களின் கால்களில் விழந்துகிடக்கிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கம் இதன் வலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றது. இலங்கையிலிருக்கும் கதிர்காமத்தை விட்டுவிட்டு இந்தியாவிலிருக்கும் ஐயப்பன் சாமியிடம் சரணாகதியாகிக்கொண்டிருக்கிறோம். பக்தி முத்திப்போனால் இங்கே கிழக்கிலிருக்கும் எமது மரபுவழித் தெய்வங்களிடம் செல்வது தானே. இங்கிருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான சலுகைகளை ஏன் இலங்கை அரசும் இந்திய அரசும் வழங்ககின்றது என யோசித்தாலே அந்த அரசுகளின் சூழ்ச்சிகள் புரியும். ஆனால் யோசிக்குமளவுக்கு மதம் எங்களை விடாது.  இன்று புதிது புதிதாக விரதங்களும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. மிக அண்மைக்காலங்களாக மிக வேகமாகப் பரவிக்கொண்டிருப்பது வரலக்சுமி விரதம், கௌரி விரதம், ஐயப்பன் விரதம் போன்றவை. புதிதுபுதிதான கோட்பாடுகளையும் இவை கூறுகின்றன. மக்களை மதம் சார்ந்த நினைவுகளில் மட்டுமே வைத்திருக்கும் நிகழ்வுகளே இவை. வரலக்சுமி விரதமும் கௌரி விரதமும்  இளம் பெண்களை தம் வசப்படுத்தி தங்கள் சொந்த வாழ்வியல் தவிர வேறு எதையும் நினைக்க முடியாதவர்களாக வெறுமனே குடும்ப வாழ்க்கைக்கு தயாராகும் தயாரிப்புப் படிமுறைகளாக கட்டியமைக்கப்பட்டுள்ளன. அதே போல ஐயப்பன் விரதம் இளைஞர்களைக் காவுகொண்டுள்ளது.நஞ்சு மாலை சூடி போராடிய இனத்தில் பிறந்த இளைஞ்ர்கள் மதமெனும் மாயைக்குள் சிக்கி ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு திரிகிறார்கள்

எமது அன்றாட வாழ்வியலில் கூட இந்து மதம் தன் கைகளை வைத்துள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரையிலும் நடைபெறும் வாழ்க்கைச் சடங்குகளில் பிராமணனும் சமஸ்கிருதமும் தவிர்;க்கமுடியாதவைகளாகிவிட்டன. குழந்தை பிறப்பு என்பது துடக்குக்குரியதாகக் கருதப்பட்டு, அந்த துடக்கை போக்கி வைக்கும் மந்திரமாக சமஸ்கிருதம் ஊடுருவியிருக்கின்றது. சாதாரணமான வாழ்வியல் நடத்தையின் போக்கினையும் சமஸ்கிருதம் தீர்மானிக்க விட்டிருக்கிறோம். அதுபோலத் தான் எங்கள் திருமணங்களும். புரியாத மொழியில் பிராமணன் என்னென்னவோ சொல்ல, அறிவிலிகளாகத் தலையாட்டிக்கொண்டிருக்கிறோம். அந்த மந்திரங்களில் அந்தப் பெண்ணைப் பற்றி, அந்தப் பெண்ணைப் போகப் பொருளாக்கி, நுகரும் நேரசூசியை உருவாக்கும் (கேவலங்கெட்ட  வழக்கம்  கேரளாவில் 50 வருடங்களுக்கு முன்னர் கூட நம்பூதிரிகள் என்ற ஆரியப் பிராமணனிடம் தமது பெண்டிரை கலவியின்பம் அடைவதற்காக கொடுத்து, நான்காவது நாள் வீட்டுக்கு அழைத்து வரும் வழக்கே நாலாம் சடங்காக இன்றும் தொடரும் எச்சமாகும்)   என்ற பொருள் இருக்கின்றது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தன் வீட்டுப் பெண்களைப் பற்றி ஒருவன் தப்பாக பேசினால் தலையை வெட்டும் மரபில் வந்த எங்கள் மக்கள், அத்தனை பேருக்கு முன்னால் அந்தப் பெண்ணைப் பற்றி, அத்தனை கேவலப்படுத்தியும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். காரணம் என்ன? மதத்தின்பிடியில் எம் அறிவைத் தொலைத்துவிட்ட சமூகம் வேறு எப்படி இருக்கும்? எமது மனக்குறைகளை எமது மொழி தெரியாத சாமியிடம் முறையிடுவதும், அதற்கு பிராமணனை முகவராக்குவதும் எத்தனை கேவலமானவிடயம். என் குல தெய்வத்திடம், என் முன்னோரிடம், எனக்குத் தெரிந்த மொழியில் கதைத்துக்கொண்டிருந்த எம்மை, இன்று வாய்கட்டி நிற்க வைத்திருக்கிறது இந்துத்துவா.

இந்து என்ற சொல்லின் பின்னாலிருக்கும் தமிழின அடையாள அழிப்பினையும் இந்தியாவின் ஆதிக்கத்தையும் புரிந்துகொள்ள முடியாதவர்களாக “இந்துக்களாக” மாறிக்கொண்டிருக்கிறோம். சமஸ்கிருதம் என்னும் ஆரியத்தின் அரசியல்மொழி இந்துமதத்தினூடாக எங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. ஒரு காலத்தில் புராண இதிகாசங்களின் வழி புனித நிலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியாவை ஈழத்தவர்களின் புனித நிலமாக்குவது என்பதன் அரசியல் புரிந்துகொள்ளாதவர்களாய், கிடைக்கும் விடுமுறைகளில் குருவாயூரப்பனிடமும் திருப்பதியிலும் இலங்கை ரூபாக்களும் டொலர்களும் யூரோக்களும் எம்மவர்களால் கொட்டிக்கொடுக்கப்படுகின்றன. மக்களின் சமூகத்தேவைகளை தன்னுள்ளே ஈர்க்கும் தேவைப்பாட்டை உணர்ந்த இந்துத்துவா காலத்துக்குக் காலம் பல்வேறு கிளைகளை உற்பத்தி செய்யும். இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் புதிய கிளை “யோகா”. ” இந்தியத் துணைத் தூதரகத்தின் உதவியுடன் கோலாகலமாக வரவேற்கப்பட்டிருக்கிறது.  தமிழர்களின் ஓகக்கலையானது இன்று யோகா என்னும் பெயருடன் எம்மிடமே திரும்பி வருகின்றது.  தாராளவாத பொருண்மிய உலகத்தில் மக்கள் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.   உடலிற்கும் உளத்துக்கும் ஆற்றுப்படுத்தலைக் கொடுக்கக்கூடிய தமிழர்களின்  மிகச் சிறந்த கலையான ஓகக்கலையை இந்துத்துவாவின் பின்னணியில் கொண்டுவருவதன் பின்னாலுள்ள மத அரசியல் அந்தக் கலையை அவனுடையதாக்கும் நுண்மை என்பவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெள்ளைக்காரனும்  இந்துத்துவாவின் இந்தச் சூழ்ச்சிக்கு பலியாகிப்போகின்றான். மதம் என்பது எமது அடிமைத்தனத்தை நாங்களே அறிய முடியாதவாறு எங்களை நடத்தும். மதத்தின் முகவர்களும் அவர்களது சொற்களும் எங்களுக்கு வேதமாகும். மதச் சுற்றுலாவின் மூலம் இந்துவாகிய எமக்கு இந்தியா புனித நாடாகும். புனித பூமியாகிவிட்டால் இந்தியாவை நாம் விமர்சிக்கவோ கேள்விக்குட்படுத்தவோ முடியாது. பிராமணியத்தின் ஆதிக்கமும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கமும் தமிழனை நசுக்குகிறது என்பதனால் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்து பிராமணனை அடித்து நொருக்குவோமா?

இந்து மதம் கூட இன்றைய இந்துத்துவா கூறும் மதமல்ல. ஆனால் பல மதங்களை உள்ளடக்கி, ஒரு பெரும் நிறுவனமாக அரசியல் வடிவமாக உருவாக்கப்பட்டிருப்பதே இந்துத்துவா. தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா, ஈழத் தமிழர்களையும் தன் சிறைக்குள் உள்ளீர்ப்பதற்கான வழியாக இந்துத்துவத்தைப் பயன்படுத்துகின்றது. பல தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவற்றின் இறையாண்மைகள் நசுக்கப்பட்டு, இந்தியா என்னும் பெரும் சந்தையின் உருவாக்கத்திற்கும் இந்தியா என்னும் பெயரிற்கான அடையாளம் வேண்டும். தேசிய இனங்கள் தனித்தனியாக இருப்பின் அவை இந்தியா என்னும் பொதுமைப்படுத்தலுக்குள் உட்படுத்தப்பட முடியாது. தேசிய இனங்களை உருமறைப்பதற்காக, மொழி என்னும் பொதுமைப்படுத்தல் பயன்படுத்தப்பட முடியாது. எனவே இந்து என்னும் மதத்தினால் இந்தியா என்றதற்கான பொது அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சந்தைவிரிவாக்கத்தின் முதல் இலக்காக இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டது என்பதே உண்மையாகும். இது தமிழர்களின் தேசிய இறையாண்மையிலும் தாக்கம் செலுத்தி, அதனை அழிக்கக்கூடியது என்பதனாலேயே இலங்கை அரசும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. சமஸ்கிருதத்தினை மையமாக வைத்து இந்து மதம் கட்டியமைக்கப்படுவதனால் தமிழ் மொழியின் சிதைப்பிற்கும் அது ஏதுவாகும் என்பதும் இலங்கை அரசுக்கு தெரிந்த விடயமே. சமஸ்கிருதம் என்பது பிறப்பால் உயர்ந்தவர்கள் பேசும் மொழி, தேவர்களின் மொழி என பரப்பப்பட்டிருப்பதால் தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்தது என எண்ணும் பாங்கும் இருக்கின்றது. மாற்றானுடையதைப் பெரிதென்று எண்ணுகின்ற சிறுமை உளவியலைக் கட்டமைக்கும் ஒரு கருத்தியலாக இந்துத்துவா உள் நுழைந்து, என்னுடையதை நானே புறந்தள்ளுமாறு செய்திருக்கின்றது.

என்னைப் பிறர் எவ்வாறு விளிக்கிறார்கள் என்பதிலேயே நான் எப்படி விபரிக்கப்படவேண்டும் என்ற விடயமும் உள்ளடங்குகின்றது. இது மதம் சார் விடயங்களுக்கு முற்றாகப்பொருந்தக் கூடியது. நிறுவனமயப்பட்டு மக்களை ஒடுக்கும் மதம் என்ற வடிவத்திற்குள் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே வழிபாடுகள் குறித்து உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது மண்ணிலே தோன்றிய எம் மரபுசார்ந்த ஆடல்கள், பாடல்கள், மொழிச் செழுமை என்பன நிறைந்த வழிபாடுகள் எம்மால் சேமிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாழ்க்கை முறைமையே இந்த மண்ணிற்குரியது. அந்த வழக்காறுகளை மீள்கண்டுபிடிப்பு செய்தோ அல்லது இருப்பவற்றை தொலைத்துவிடாதோ காப்பது எம் கடமையாகின்றது.

ஏராளமான வழிபாட்டுப்பாடல்கள், காவியங்கள், கதைப்பாடல்கள், வழிபாடுகள் என்று தமிழ்மொழியின் தளத்தில் இன்றும் கண்ணகி வழிபாடு அதன் தளத்தில் தென் தமிழீழத்தில் நடைபெறுகின்றது. கொம்பு முறித்தல், குளிர்த்திப் பாடல்கள், வசந்தன் ஆடல், கண்ணகி கூத்து, குடுக்கை கூறல், தீ மிதித்தல், நீர் வெட்டும் சடங்கு என பல மரபுகள் இணைந்ததாக ஈழத்து கண்ணகி வழக்காறு மரபுத் தொடர்ச்சியைப் பேணி நிற்கின்றன. தமிழருக்கான அடையாளமாகத் திகழவேண்டிய கண்ணகி வழிபாட்டை ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழித்ததன் பின்னணியிலுள்ள அரசியல் மிகவும் நுட்பமானது. மட்டக்களப்பில் ஒரு ஆறுமுக நாவலர் பிறந்திருப்பாரெனின் இப்போது எஞ்சியிருக்கும் கண்ணகி வழிபாடும் தொல்பொருட்களில் தேடப்பட்டுக்கொண்டிருக்கும். தமிழர்களிடத்து நிலவும் ஒரு பண்பாட்டுக்கூறு தமிழர்களுக்குரியது அல்ல என்று கூறும் ஒரு வகை மேட்டுக்குடி மனநிலையிலிருந்து கண்ணகி வழிபாட்டை ஆறுமுக நாவலர் மறுதலித்திருந்தார். பத்தினித் தெtpயோ என சிங்கள பௌத்தர்களிடையே வழக்கிலிருக்கும் கண்ணகி வழிபாடு கண்டி அரசனுடைய தெய்வமாக இருந்து வந்தது என வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. கண்டிப் பெரஹராவில் பத்தினிக்கு முதன்மை கொடுப்பதை 16ம் நூற்றாண்டில் கண்ணுற்ற தாய்லாந்து பிக்கு பௌத்த தேசத்தில் தமி ழ்த் தெய்வமான கண்ணகிக்கு முதன்மை கொடுக்கக்கூடாது என்று சொன்னதன் பின்னரே சிங்களவர்களுக்குரிய கண்ணகி வழிபாடு தமிழர்களிடமிருந்து பிரிந்தது. இதன் பின்னணியிலும் மதம் காட்டுகின்ற இனவாத அரசியலைப் புரிந்துகொள்ளல் வேண்டும். இந்த இனவாத அரசியலின் பின்னணியில் பேராசிரியர் ஒபயசேகர சிங்களவர்களின் பத்தினி வழிபாடு தமிழரின் பத்தினி வழிபாட்டிலிருந்து வேறுபட்டதெனவும் பௌத்த மரபில் தோன்றியதே பத்தினி வழிபாடெனவும் ஆய்வினை நிகழ்த்தினார். சிங்களவர்கள் மதத்தின் மூலம் தம் இனத்தைக் கட்டியமைப்பதில் முன்னிற்க, நாங்கள் மதத்தின் பெயரால் மடையர்களாக இருக்கின்றோம். தமிழ் மண்ணிலிருந்து தாய்த்தொன்ம வழிபாட்டின் அடையாளமாக தோற்றம் பெற்ற கண்ணகி வழிபாடு, அகண்ட தமிழகத்தினதும் ஈழத்தினதும் பண்பாட்டு அடையாளமாக விளங்கியிருக்கிறது. காலப்போக்கில் அது இலங்கையில் பௌத்த மதத்தோடு கலந்தது. தமிழ்நாட்டில் வழக்கொழிந்தது. ஈழத்தில் தப்பிப்பிழைத்திருந்தாலும் எம்மவர்களாலேயே யாழ்ப்பாணத்தில் அழிக்கப்பட்டது. இவற்றிற்கு பின்னே தொழிற்பட்டுள்ள மொழி அரசியலும், இன அரசியலும், மத அரசியலும் மிக நுண்மையானது.

கண்ணகி வழிபாடு மட்டுமல்லாது பல வழிபாட்டு முறைகளும் ஆறுமுக நாவலரால் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவரது சைவ சமயம் என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன், பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள். சைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று; ஒரு மொழியின் பெயர்.

இவரது கூற்றின்படி, தமிழர்களிடத்தே பல கிராமிய வழக்காறுகள் இருந்திருக்கின்றன எனக்கொள்ளலாம். ஆனால் இன்று இவை வழக்கிலில்லை. ஆனால் வெளித்தெரியாத அளவில் மட்டும் சில இடங்களில் இவற்றின் வழிபாடுகள் இன்னும் தொடர்கின்றன.  இந்த வழக்காறுகளின் அடிப்படையில் நோக்கும் போது, தமி ழர்களின் வீர மரபில் வந்த குழுமங்களும் அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சியும் இங்கே இருந்திருக்கின்றன என்றும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அந்த மரபினை அழித்தவர் ஆறுமுக நாவலரே. கண்ணகி கோவில்கள் மட்டுமல்லாது பல கிராமியத் தெய்வங்களும் உருமாற்றப்பட்டு பெருஞ்சமய மரபிற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டன. மரத்தினையும் முன்னோரையும் வணங்கி இயற்கையோடும் தமது மரபோடும் இயைந்து வாந்தவர்கள்  இன்று, மனிதர்களை வணங்கும் இழி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

காலத்துக்குக் காலம் ஆட்சிகள் மாறும்போது ஆதிக்கத்திலிருந்த மதங்களினை மக்கள் கொண்டிருப்பது வழக்கமாகும். பௌத்த சிங்கள நாடு என பேரினவாதிகளால் பிரகடனப்படுத்தப்படுகின்ற இலங்கையில் தமிழ் பௌத்தம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் தொல்பொருளாய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமி ழர்கள் இந்துக்களாக இன்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால், அந்த எடுகோளின் அடிப்படையில் அந்த தொல்பொருளாய்வுகள் அனைத்தும் சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களாகக் கூறி, இலங்கை என்பது பௌத்த சிங்கள நாடு என்ற கருத்தாக்கத்தை வலிமைபெறச் செய்கிறது இனவாத அரசு. ஆனால் இன்று இருக்கும் கிருஸ்ணன் கோவில்களில் பெரும்பான்மையானவை அன்றைய புத்தர்கோவில்களென்பதற்கான தொல்பொருளாய்வுகள் கிடைத்திருக்கின்றன. கிருஸ்ணன் எனும் இந்துத்துவ தெய்வத்தின் மாயைக்குள்ளும் மத நம்பிக்கைக்குள்ளும் இருக்கும் தமிழர்களால் தாங்கள் முன்னர் சமணர்களாகவும் பௌத்தர்களாகவும் இருந்திருக்கிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அதற்கான வலிதான வாதங்களை நடத்த முடியவில்லை. பௌத்தர்களாக இருந்தமையை ஏற்றுக்கொண்டால் சிங்களவர்கள் என்று கூறிவிடுவார்களோ என்ற ஆழ்மன அச்சமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். தமிழர்களெனின் இந்துக்கள் என்ற அந்த கருத்தாக்கம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அந்த மாயையை விட்டு வெளியே வந்து, எம் வரலாற்றை மீள்வாசிப்புச் செய்வோமாக இருந்தால், சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் “பௌத்த சிங்கள நாடு” என்ற கருத்தாக்கத்தை இல்லாது ஆக்கலாம். பௌத்த மதத்தினடியாக தோன்றிய சிங்களவர்களின் இனம், பௌத்தர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் என்ற மகாவம்ச மனநிலையை உடைக்கலாம். ஆனால், கிருஸ்ணன் என்னும் தெய்வமும் அதன் அடியாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் வழக்கங்களும் அவ்வளவு இலகுவில் எம்மை விட்டு சென்றுவிடாது. உதாரணமாகக் கூறின்,  வடமராட்சியிலுள்ள வல்லிபுர ஆலயத்தையும் அதன் சூழ இருக்கும் வழக்கங்களையும் மத மனநிலையையும் தாண்டி, இனத்துக்காக எத்தனை பேர் சிந்திப்பார்கள்?

ஈழப்போராட்ட காலத்திலும் சமஸ்கிருதத்தில் வழிபாடுகள் இடம்பெற்றன. இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடிய புலிகள் இந்தப் பிரச்சினையை அறிந்து தமிழில் வழிபாடு செய்வதை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் பெரியளவில் அவற்றைக் கட்டாயமாக்கவில்லை.  மக்களுடைய மத நம்பிக்கைகளிலும், மதம் சார்ந்த மக்களின் உளவியலிலும் மக்கள் மதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு இனத்துக்காகப் போராட வரக்கூடியவர்கள் அல்ல. மத அரசியல் என்பது அவ்வளவு இலகுவாகக் கழற்றிவிடக்கூடிய விடயமல்ல.

உலகின் மரபுவழித் தேசிய இனங்கள் எல்லாவற்றிலும் அவற்றின் அடையாளங்கள் புனிதமானவையாகப்போற்றப்படும். வரலாற்றுக்கு முற்பட்ட அடையாளங்கள் என்றால் அவற்றை மீட்டெடுப்பதில் அந்த இனமே முனைப்போடு நிற்கும். ஆனால் தமி ழர்களைப் பொறுத்தவரையில் மரபுவ ழித்தேசிய இனமாக இருந்தபோதிலும், அடையாளங்களைக் கொண்டாடத் தெரியாதவர்களாகவும் அவற்றை இழந்தபோதிலும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டுமென்ற மனநிலைக்கு வராமலும் நிற்பது அவலம். இனத்தின் அடையாளங்களை தாழ்ந்தவையாகக் கருதும் அவலமும் வேறெந்த இனத்திலும் நடக்காது. அதனாலேயே மதம் சார்ந்த அடையாளங்களை இனம் சார்ந்த அடையாளமாகவும் சில இனம் சார்ந்த அடையாளங்களை வெறுமனே மதம் சார்ந்த அடையாளங்களாக கருதி, மதத்தால் இனத்தின் அடையாளங்களை இழந்துகொண்டிருக்கின்றோம். தமிழர்களின் அடையாளங்கள் எதுவெனக் கேட்டால் எமக்குத் தெரியாது. சைவ அடையாளங்களையோ இந்து அடையாளங்களையோ தமிழ் அடையாளங்களாக நினைக்கிறோம்.

ரெய்லர் என்பவர் தனது தொன்மைப்பண்பாடு என்ற நூலினூடாக பண்பாடு பற்றிய ஆய்வுகளிற்கான ஒரு ஆரம்பப் புள்ளியை இட்டிருக்கின்றார். மதத்தின் தோற்றம் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியதென்ற கோட்பாட்டையும் பண்பாட்டின் மலர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியில் நிகழும் எஞ்சி நிலைத்தவைக் கோட்பாட்டையும் முன்வைத்திருக்கின்றார்.  இந்தக் கோட்பாட்டின்படி ஒரு குழுமத்தின் சில வழக்காறுகள், கூறுகள் காலப்போக்கில் அவற்றின் செயல்களை இழக்க நேரிடும் எனவும் அச்செயலிழந்த கூறுகள் அந்த குழுமத்தின் இருப்பியலுக்கு தேவைப்படுமெனின் அவை சமூகத்தின் இயங்கியலின் ஏதோ ஒருபுள்ளியில் வெளிப்பட்டு, மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு தொடர்ந்தும் எடுத்துச்செல்லப்படும் எனவும் குறிப்பிடுகின்றார். ஒரு பண்பாட்டின் இப்போதைய நிலையை அதன் மரபுகளை ஆராய்வதன் மூலம் அந்த மரபு மீட்டுருவாக்கம் நிகழ்த்த முடியும். இன்றைய சூழலில் எம் இனத்திற்கான அடையாளங்களை அடையாளப்படுத்த வேண்டிய தேவை எங்கள் இனத்திற்கு இருக்கின்றது. மதத்தின் அரசியலிலிருந்து வெளியே வந்து இனத்தின் அரசியலுக்காகவும் அடையாளத்துக்காகவும் குரல் கொடுப்பவர்களாக நாம் மாறவேண்டும். மக்களை அவர்கள் தமதென நம்பிக்கொண்டிருக்கும் மதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வா என்று கூற முடியாது. ஆனால் பண்பாட்டு மீட்சியின் அவசியத்தை உணர்த்தி எமது மண்ணோடு இயைந்த வழிபாட்டுப் பொதுமைப்படுத்தல்களை  ஓரளவேனும் மாற்றியமைக்கவேண்டிய தேவை இன்று எமக்கு உள்ளது. மாற்றானின் நிகழ்ச்சி நிரலினுள் சிக்கி அடையாளமிழந்து அடிமையாகிப் போவதை விட்டெறிந்து பண்பாட்டுப் புரட்சி மூலம் பண்பாட்டு மீட்சியடைந்து புரட்சிகர சக்திகளாக தமிழின மக்கள் அணியமாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

-செல்வி-

2017-07-02

படங்கள் : நன்றி இணையம்

 

 8,266 total views,  4 views today

1 Comment

  1. தமி ழர்களைப் பொறுத்தவரையில் மரபுவ ழித்தேசிய இனமாக இருந்தபோதிலும், அடையாளங்களைக் கொண்டாடத் தெரியாதவர்களாகவும் அவற்றை இழந்தபோதிலும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டுமென்ற மனநிலைக்கு வராமலும் நிற்பது அவலம்.

    “தேவையான நேரத்தில் அவசியமானது பதிவு”
    வாழ்த்துக்கள்

Leave a Reply