கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்

ஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாக வகை தொகையின்றிப் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர்களின் இறைமையை உலகிற்குப் பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்பினால் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் நாள் இல்லாதொழிக்கப்பட்டது.

இந்த சிங்களத்தின் தமிழர்கள் மீதான இனவழிப்பைச் (Genocide) செய்து முடித்த பின்னரான இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing) நடவடிக்கைகளை முற்றிலுமாகச் செய்து முடிப்பதற்கு, இனப்படுகொலைக் கூட்டுப் பங்காளிகளான அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும், இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் போதிய கால இடைவெளியை, தமது அதிகார வெறியை உலக அரங்கில் உறுதிப்படுத்த உதவும் ஐ.நா போன்ற அமைப்புகளின் மூலம் வழங்க, அதனையும் செய்து முடிக்கும் தறுவாயில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு உள்ளது. போர்க்காலங்களில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் மூலமான சிறிலங்காவின் முப்படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலமும், கைதுகள், கடத்தல்கள், காணமலாக்கப்படுதல், பாலியல் வன்கொடுமைகள், பொருண்மியத்தடைகள், கல்விக் கூடங்கள் மற்றும் வழிபாட்டிடங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் போன்ற நேரடி வன்செயல்கள் மூலம் தமிழினவழிப்பை ஓரளவிற்கு வெளிப்படையாகத் தங்குதடையின்றி முன்னெடுத்த சிங்கள பௌத்த அரச பயங்கரவாதமானது, தமிழர்களின் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்யும் இக்காலகட்டத்தில், நுணுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கட்டங்கட்டமான இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தெரியாத வண்ணம் ஆனால் அகலப்படுத்திச் சகல தளங்களிலும் வியாபித்து முனைப்புறுத்தி வருகின்றது. எனவே, இனவழிப்பு என்றால் என்ன என்ற சரியான புரிதலின் வாயிலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்றால் என்ன என்பதன் மெய்ப்பொருளினை அதன் உள்ளார்ந்த கருத்தின் அடிப்படையில் விளங்கிக்கொண்டு அது குறித்த எச்சரிக்கை உணர்வை உடையவர்களாக வேண்டிய தேவை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உண்டு.

முழு விளக்கத்துடன் ஆய்ந்தறிந்து சிந்தையில் நிறுத்த வேண்டிய இந்தக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்ற விடயம் குறித்த போதிய ஆய்வுகளும் தேடல்களும் இல்லாமல், தமக்கேயுரிய கற்பனைப் பாணியில், மெய்நிலை திரித்துத் தவறான கருத்துருவாக்கத்தினை சமூக வலைத்தளங்களிலும் தரமற்ற ஊடகங்களிலும் சிலர் செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான அரைவேக்காட்டுத்தனங்களால், ஏலவே தோல்வி மனப்பாங்கில் துவண்டு கொண்டிருக்கும் தமிழினம், எதற்கெடுத்தாலும் ஒரு நிலைத்த உளவியல் அஞ்சுகைக்கு உட்படுமே தவிர, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக் குறித்த அதனது உள்ளார்ந்த மெய்நிலைப் புரிதல் குறித்த தெளிவும் அதன் விளைவாக வேண்டிய எச்சரிக்கை உணர்வும் தமிழர்கள் மத்தியில் ஏற்பட வாய்ப்பில்லாமல் போகும்.

எனவே, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்றால் என்ன என்பதனையும் அதனது அழிப்பு முறையானது எங்ஙனம் தமிழர்களின் வாழ்வியல் நெடுகிலும் குடைந்துள்ளது என்பதனையும் அதனது மூல வேர் எங்கிருந்து இழையோடுகின்றது  என்பதனையும் ஆய்ந்தறிந்து அடுத்த கட்டம் குறித்துத் தமிழர்கள் விழிப்பு நிலை பெறுதலே தமிழர்கள் இந்தக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் முதற்படி எனக் கணித்து, இப்பத்தி வரையப்படுகின்றது.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் இருக்கின்றது. இதனடிப்படையில் தேசிய இனங்களிற்கே உரித்தான தன்னாட்சி அடிப்படையில் தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்குண்டு. எனவே, தம்மைத் தாமே தமது மண்ணில் ஆள நினைக்கும் தன்னாட்சியுரிமைக்கு உரித்துடையதான மரபுவழித் தமிழ்த் தேசிய இனமான ஈழத்தமிழர்களை, இனவழிப்பினை முனைப்புறுத்தி இல்லாதொழித்தலே, தமிழர்கள் தாயகத்தை வல்வளைப்புச் செய்து, இலங்கைத்தீவை சிங்களவர்கள் மட்டுமே வாழும் சிங்கள பௌத்த நாடாக்குவதற்கான ஒரே வழியெனத் திடமாக நம்பும் சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரச பயங்கரவாதமானது, கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பை தேசத்தின் கூறுகளையும் அதனது அடிப்படைகளையும் சிதைக்கும் நோக்குடன் அதனது ஒவ்வொரு படிநிலையிலும் நன்கு திட்டமிட்டு இனவழிப்பு உத்திகளைச் செலுத்தி அதனை நிலைத்த கட்டமைப்பாக்கி, இனப்படுகொலையின் தொடர்ச்சித் தன்மையினை உறுதிப்படுத்தியவாறு மேற்கொண்டு வருகின்றது.

எனவே தொடர்ச்சியானதான தாயகநிலப்பரப்புக்கள், தொன்மமான தமிழ்மொழி, தமிழர்களின் பொருண்மியம் மற்றும் நீண்ட நெடிய மேம்பட்ட பண்பாடு என்பனவற்றை சிதைத்தழிக்கவல்லவாறு, சிறிலங்கா அரச பயங்கரவாதமானது தனது ஒவ்வொரு அரச கட்டமைப்பையும், கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பைத் தொடர்ச்சியாகச் செய்யக் கூடிய வகையில் கட்டமைத்துள்ளது. இதனால், தமிழர்களின் தனித்த தேசியம் என்ற மரபுவழித் தமிழீழத் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை இல்லாதொழித்து, இலங்கைத்தீவை சிங்கள பௌத்த நாடாக்கலாம் என்று கங்கணம் கட்டிச் செயலாற்றி வருகின்றது.

இனப்படுகொலை (Genocide) என்ற சொல்லுருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியும் அதனது வரைவிலக்கணமும்

யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன் தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரபேல், இனப்படுகொலையானது பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றமாக இனங்காணப்பட வேண்டும் என்று பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார். இதனை அடுத்து 1948 ஆண்டு மார்கழி மாதம் ஐநா தீர்மானத்தில் இது உள்வாங்கப்பட்டு, பின்னர் 1951 ஆம் ஆண்டு தை மாதத்தில் நடைமுறைக்கு வந்தது.  1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை குறித்த ஐ.நா வின் தீர்மானத்தின் (UN Convention) சரத்து (Article) 2 இன் படி இனப்படுகொலையானது கீழ்வருமாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தேசிய, இன, மத குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்தொழிக்கும் எண்ணத்துடன் கீழ்க்காணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது:

 • குழுவின் உறுப்பினர்களை கொலைசெய்வது
 • குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ தீங்கிழைப்பது
 • அவர்களின் வாழ்வாதாரங்களை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்
 • குழுவில் குழந்தைப்பிறப்புகளை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
 • ஒரு குழுவிலிருந்து வேறொரு குழுவிற்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக மாற்றுதல்

இந்த வடிவிலான இனப்படுகொலையானது ஒரு இனத்தினைப் பேரழிவுக்குட்படுத்தும் என்பது துலாம்பரமானதே. ஆனால், ஒப்பீட்டளவில் கண்ணிற்குத் தெரியாத, ஒரு எல்லை வரைக்கும் அதனது அபாயகரமான தாக்கம் வெளித் தெரியாதமையால் இனவழிவுக்குள்ளாகும் இனத்தால் ஏற்றுக்கொண்டதாக நடைமுறையில் இருக்கின்ற, இனப்படுகொலை என்ற ஐ.நாவின் வரையறைக்குள்ளாகும் விடயங்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமாக நடந்தேறிவருகின்ற, ஆனால் பேசு பொருட்களாக அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்படாததுமான இனவழிப்பு வடிவங்கள் இருக்கவே செய்கின்றன. இவை வெற்றுக்கண்ணிற்கு இலகுவிற் புலப்பட்டுவிடாத அபாயகரமான புற்றுநோய்க்கொப்பான இனவழிப்பு வடிவங்களாகும். இவ்வாறான இனவழிப்பு வடிவங்களைக் குறித்து நிற்கும் இனவழிப்புக் குறித்த கருத்துருவாக்கங்களே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என வகைப்பட்டு நிற்கின்றது.

நேரடியாக இராணுவரீதியாக ஏற்படுத்தும் பௌதிகச் சிதைப்பிற்குப் புறம்பாக நின்று, அரச இயந்திரத்தின் அனைத்துக் கட்டமைப்புக்கள் மூலமாக விளையும் சமூகக் கட்டமைப்பில் நிகழும் தாக்கங்களை, ஒரு சமமற்ற ஏற்றத் தாழ்வான இனவடிப்படையில் அமையும் சமூகக் கட்டமைப்புக்களாக்கி அதன் வழியில் ஒரு இனத்தின் தொடர்ச்சியான சிதைவு அதன் தனித்த தேசிய அங்கீகாரக் கூறுகளை இழந்துவருவதால் நிகழ்ந்து வருகின்றது என்பதை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு சார்ந்த வடிவமைப்பால் நிகழும் இனவழிப்பு வடிவங்களையே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எனலாம். பன்னாட்டுப் பொருண்மிய ஒழுங்கின் வழி விளைந்த உலக ஒழுங்கு என்று சொல்லப்பட்டும், உலக வல்லாண்மையாளருக்கான உலக ஒழுங்கானது, நாடற்ற தேசிய இனங்களின் இருத்தலைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாது, அந்த இனக்குழுக்களில் அங்கம் வகிப்பது என்ற ஒரே காரணத்தினால், பட்டினிச்சாவையும் அடையாள இழப்பையும், வாழ்நாள் ஏதிலி என்ற அடையாளத்தையும் அந்த மக்களிற்கு இந்த உலக ஒழுங்கு எனப்படும் பாகுபாடான உலகக் கட்டமைப்பு வாரி வழங்குகின்றது. தமது பொருண்மிய நலன்கள் என்ற உற்பத்தியின் பக்க விளைவுகளே இந்த நாடற்ற தேசிய இனங்களின் ஒழிப்பு என்பதெல்லாம் எந்த உலக வல்லாண்மையாளர்களுக்கும் நன்கு தெரியாமல் நிகழ்வதில்லையே. (Chalk and Jonassoh, 2001)

ஒரு இனக் குழுவின் அடிப்படைகளை அழித்தொழிக்க வல்லவாறு ஒருங்கிணைந்த கட்டமைப்புத் திட்டமாக இனவழிப்பு மேற்கொள்ளப்படுவதாக 1940 களில் லெம்கின் கூறிவந்தமையானது, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக் குறித்தான கருத்துருவாக்கத்திற்கும் இனப்படுகொலை குறித்த மறுகருத்துருவாக்கத்திற்கும் வழிகோலி உதவியுள்ளது எனலாம்.

இனப்படுகொலைச் செயற்பாட்டிற்கான வன்முறை வடிவங்கள் வெளிப்படையாக வெளித் தெரியாமல், அதே நேரம் அவற்றின் மூலம் அல்லது செய்வி எங்கிருந்து கருக்கிளம்பியது என்பதன் அடிச் சுவட்டினையும் இலகுவில் அடையாளம் காணமுடியாததெனின், அது மிகவும் நுணுக்கமாக இழைக்கப்பட்ட அரச இயந்திரத்தின் கட்டமைப்புக்கள் வழி வந்ததாக இருக்கும். இந்த வடிவிலான இனப்படுகொலைக் கூறுகளையே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வழி விளைந்ததெனலாம். (Galtung, 1975)

அரச இயந்திரத்தின் கட்டமைப்புக்கள் கட்டமைக்கப்பட்ட விதமே, பாகுபாடுகளை இயல்பாகவே ஒரு குழுவின் மீது ஏற்படுத்துவதாக அமைவதுண்டு. அப்படி அமையுமிடத்து, குறிப்பிட்ட சாரார் அகமகிழ்வாயும், தற்திருப்தியுடனும் நல்ல வாழ்க்கைத் தரத்துடனும் வாழ இயலுமாவதோடு, ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தோர் அணுவணுவாகத் துன்பப் பூட்டுக்குள் சிக்கித் தவிப்பதாகவே அவர்களது வாழ்நிலையின் ஒவ்வொரு படிநிலையும் அமைந்துவிடுகின்றது. அதாவது பசி, பட்டினி, போசாக்குக் குறைவு, வேலையின்மை, உறுதியற்ற வாழ்நிலைச் சூழல், காத்திருப்புகள், உறுதியற்ற வாழ்வியல் கூறுகள் அதனால் விளையும் கூட்டு உளவியற் சிதைவு போன்றவற்றினால் கடும் பாதிப்புக்களை அனுபவிக்கும் பரிதவிப்பு நிலையில் ஒரு குழுவைச் சார்ந்தோர் அல்லலுறுவதற்கு, அரச இயந்திரமும் அதன் கட்டமைப்புக்களும் கட்டமைக்கப்பட்ட விதமே காரணமாக அமைந்துவிடுகின்றது என Galtung மேலும் விளக்குகின்றார். இப்படி அரச இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டமைப்பும் கட்டமைக்கப்பட்ட விதத்தால் ஓரங்கட்டப்பட்ட ஒரு குழுவில் இறப்புக்கள் அதிகரித்து, அந்தக் குழுவின் தொடர்ச்சியான இருப்புக் கேள்விக்குள்ளாகிவிடும். (Waters, 1994)

இலங்கைத்தீவிலே தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் தொடர்ந்து ஆட்பட்டு வருகின்றமை மற்றும் வருகின்ற விதத்தினை மேற்கூறிய அறிஞர்களின் கூற்றுக்கள் அப்படியே மெய்ப்படுத்துவதாக அமைகின்றது. இவ்வாறு அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்ட விதத்தால் உருவாகும் பாகுபாடு, திட்டமிடாமல் உத்தேசிக்காமல் ஆனால் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமுமே இருக்கும் என்று விளக்கம் கொடுப்பதன் வாயிலாக, அதன் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வீரியத்தை எடுத்துக் கூற முயல்கின்றார் Galtung.

தமிழர்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பு, தொன்மமான மொழி, பொருண்மிய வாழ்வு, தனித்தன்மையான பண்பாடு போன்ற தனித் தேசியமாக தமது தமிழர் தாயகத்தில் வாழத் தேவையான மூலகங்களை (Elements) சிதைத்தழிப்பதன் மூலம், தமிழ்த் தேசியத்தின் இருத்தலைத் தமிழர் தாயகப் பகுதிகளிலே இல்லாதொழித்து, ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்குவதற்கு சிறிலங்காவின் அரச இயந்திரமும் அதனது கட்டமைப்புகளும் எவ்வாறு நுணுக்கமாக இழைக்கப்பட்டு, தொடர்ச்சியான தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் சாத்தியமாக்கப்படுகின்றது என்பதனைத் தமிழீழ தமிழ்த் தேசியத்தின் ஒவ்வொரு தேசிய மூலகங்களும் எவ்வாறு நுட்பமாகச் சிதைத்தழிக்கப்படுகின்றன என்பதனைத் தொகுத்து நோக்கில் துலங்கச் செய்யலாம்.

தமிழர்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பு என்ற தமிழீழத் தமிழ்த் தேசிய மூலகம் எப்படி சிதைத்தழிக்கப்படுகின்றது (Demographic Genocide)?

 • தமிழர்களின் வளமான விளைநிலங்கள் சிறிலங்கா அரச படைகளால் அபகரிக்கப்பட்டு, அவை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, நாளடைவில் இராணுவம் அதில் வேளாண்மை செய்து, அந்த மண்ணிற்குரியவர்களின் வாழ்நிலையை அந்த மண்ணிலேயே கேள்விக்குள்ளாக்குதல் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றது.
 • தமிழ் எல்லைக் கிராமங்களில் ஊர்காவல் படையினரின் குடும்பங்களிற்கு நிலம் வழங்குதல் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்தல்
 • தமிழர் தாயகத்திலுள்ள தனியார் நிலங்களைக் கைப்பற்றுவதற்காக நகரம் மற்றும் நாட்டுத் திட்டமிடல் கட்டளையின் படி சட்ட அமுலாக்கம் செய்தல்.
 • வடகிழக்கில் சிறிலங்காவின் தொல்லியல் துறை தனது நடவடிக்கைகளைக் குவியப்படுத்தி தமிழர் நிலங்களை அபகரித்தல்
 • தமிழ்க் கிராமங்களை சிங்களக் கிராமங்களுடன் இணைத்து, தமிழர்களின் இருப்பையே எல்லைக் கிராமங்களில் கேள்விக்குள்ளாக்குதல்
 • மகாவலி அபிவிருத்தி அமைச்சானது துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் துரிதமாக சிங்களக் குடியேற்றங்களைத் தமிழர்கள் தாயக நிலப்பரப்பில் ஏற்படுத்தல்.
 • தமிழர்களின் சுடுகாட்டு நிலங்களைக் கூட அபகரித்து மாற்றாருக்குக் கொடுத்தல்
 • பாரிய படைத் தளங்களை அமைப்பதற்காக தமிழர் தாயக நிலங்களை அபகரித்தல்
 • தமிழர் வாழ்விடங்களில் சிங்கள நிருவாக அலகுகளை ஏற்படுத்தல்
 • தமிழர்களின் மீள்குடியேற்றத்துடன் சேர்த்து சிங்களவர்களையும் குடியேற்றி, வளமான நீர்நிலைகளை அண்டிய பகுதிகளை சிங்களவர்களுக்குக் கொடுத்தல்.
 • ஏக்கர் கணக்கான தமிழர் தாயக நிலங்களை கோடிக்கணக்கான பணத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு, அவர்கள் நட்சத்திர விடுதிகள் அமைப்பதற்காக விற்பனை செய்ய சுற்றுலாத்துறை ஒழுங்குகளை மேற்கொள்ள, அதற்கிசைவாக நில அளவைத் திணைக்களமும் அதற்குரிய பாதுகாப்புகளை வழங்க சிறிலங்கா அரசின் படைகளும் கூட்டாக இணைந்து தமிழர் விரோத செயலாற்றுதல்.
 • கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு போன்ற சிறிலங்கா அரச இயந்திரத்தின் கட்டமைப்புகள் கூட்டாக இணைந்து தமிழர்களின் தாயக நிலங்களை வெளிநாடுகளிற்கு குத்தகைக்குக் கொடுத்தல். இவற்றிற்கான அரச வர்த்தமானி அறிவிப்புத் தேவைப்படின் காணி அமைச்சும் இணையும்.
 • பெருந்தெருக்கள் அமைச்சானது, தமிழர் தாயகநிலப்பரப்புகளில் உள்ள காடுகளை ஊடறுத்துத் தெருக்களை அமைத்துச் சிங்களப் பிரதேச மக்களை தமிழர் தாயக நிலங்களை நோக்கி அசையச் செய்து தமிழர் நிலங்களைச் சிங்களமயப்படுத்தல்.

1957 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் மூலம் டி.எஸ். சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயகங்களில் சிங்களக் குடியேற்றமானது இடைவிடாது தொடர்ச்சியாக நடந்தேறியே வருகின்றது. வடக்கு- கிழக்குத் தமிழர் இணைந்த தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக எல்லைப் பகுதிகளை சிங்கள மயமாக்கி சிங்கள இடமாக்க, சிறிலங்காவின் தொல்லியல் துறை, மீள்குடியேற்ற அமைச்சு, மகாவலி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிறிலங்காவின் வனத்துறை, பெருந்தெருக்கள் அமைச்சு, ஊர்காவற்படை மற்றும் முப்படைகள் இணைந்து செயலாற்றுகின்றது. இவ்வாறு ஒட்டுமொத்த சிறிலங்காவின் அரச இயந்திரத்தின் அமைப்பு முறையே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக எப்போதுமே மேற்கொள்ளத்தக்கவாறே அமைந்துள்ளது.

தொன்மமான தமிழ்மொழி என்ற தமிழீழத் தமிழ்த் தேசிய மூலகம் எப்படி சிதைத்தழிக்கப்படுகின்றது (Lingual Genocide)?

 • தமிழ்க் கிராமங்களை சிங்கள நிருவாகப் பிரிவுக்குள் உள்ளடக்குவதன் மூலம், அலுவல்கள் மொழியாக சிங்களத்தை திணிப்பதோடு, சிங்களத்தை உள்வாங்காதோர் அரச நிருவாகங்களுடனான தொடர்பறுந்தவராவார்.
 • அரச நிருவாகங்களின் உயர் பதவிகளை சிங்களம் மட்டுமே தெரிந்த சிங்களவருக்கு வழங்குவதன் மூலம் தமிழை அலுவல்கள் மொழி என்ற நிலையிலிருந்து இல்லாதொழித்தல்.
 • நிருவாகக் கூட்டங்களை சிங்களத்தில் நடத்துதல்.
 • அமைச்சுக்களின் சுற்றறிக்கைகளைச் சிங்களத்தில் அனுப்பி வைத்தல்.
 • தமிழ் மொழியையும் பெயர்ப்பலகையில் சேர்க்க வேண்டிய சூழலில், எழுத்து மற்றும் கருத்து வழுவுடன் தமிழினைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழினைப் பயன்படுத்தல்.
 • தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் தமிழின் தொன்மையையும் அதனது உலகாண்ட சிறப்புக்களையும் அறிவியல் நுணுக்கங்களையும் திட்டமிட்டு மறைக்கும் வகையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்தல்
 • தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக எந்த ஒரு ஏற்பாடுகளையும் செய்யாமல் திட்டமிட்டுத் தவிர்த்தல்.

கல்வி அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, ஊடக அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சு போன்ற அமைச்சுகள் அடங்கிய எல்லா மட்டங்களிலும் இந்த தமிழ் மொழி விரோதச் செயற்பாடுகள் விரவிக் காணப்படுகின்றன. எனவே கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த சிங்கள பௌத்த அரச இயந்திரம் தான் கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தமிழினவழிப்பை தன்னிச்சையாகத் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமே இருக்கும்.

தமிழர்களின் பொருண்மிய வாழ்வு என்ற தமிழீழத் தமிழ்த் தேசிய மூலகம் எப்படி சிதைத்தழிக்கப்படுகின்றது (Economic Genocide)?

 • வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுதல்.
 • தமிழர்களை மீள்குடியேற்றும் போது வளமான விளைநிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றைச் சிங்களமயப்படுத்தி, தமிழர்கள் பொருண்மிய வாழ்நிலையை இழத்தலை உறுதிப்படுத்தல்.
 • வேளாண்மை, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என வாழும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்தல்.
 • அரச நியமனங்களில் பாகுபாடு.
 • நிதி ஒதுக்கீட்டில் தமிழர்களின் பகுதிகள் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுதல்.
 • காடுகளை வெட்டித் தமிழர்களின் வளங்களைச் சுரண்டுதல்.
 • போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வரும் ஒதுக்கீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை (வீட்டுத் திட்டம், விவசாயம், மீன்பிடி, கல்வி) என்பனவற்றைத் திசை திருப்பி சிங்களவர்களுக்குக் கிடைக்கச் செய்தல்.
 • கொழும்புமைய அமைச்சுக்களினூடாக உள்ளே வரும் வெளிநாட்டு உதவித் திட்டங்களில் கணிசமானவற்றைச் சிங்களவர்களுக்கு வழங்குதல்.
 • சிங்கள கடற்படை மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பில், தமிழர் கடல்களில் சிங்களவர்கள் மீன்பிடித்தல்.
 • எல்லைக் கிராமங்களில் மேய்ச்சலிற்குச் செல்லும் கால்நடைகளை வனத்துறையும் ஊர்காவல் படைகளும் சுட்டுக் கொல்லுதல் மற்றும் மேய்ச்சல் நிலங்களை அபகரிப்பதன் மூலம், தமிழர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்தல்.

பொருண்மிய அபிவிருத்தி அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, விவசாய அமைச்சு, ஊரக பொருளியல் அலுவல்கள் அமைச்சு அடங்கிய எல்லா மட்டங்களிலும் தமிழர்களின் பொருண்மியத்தைத் தமிழர்களிடம் இருந்து பறித்தல் என்பதை உறுதிப்படுத்தத் தக்கவாறான தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்றே வருகின்றன.

தமிழர் பண்பாடு என்ற தமிழீழத் தமிழ்த் தேசிய மூலகம் எப்படி சிதைத்தழிக்கப்படுகின்றது (Cultural Genocide)?

 • எல்லைக் கிராமங்களிலும் உயர் பாதுகாப்பு வலயங்களிலும் அமைந்துள்ள தமிழர் வாழ்விடங்களை அழித்து புத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் அமைத்தல்.
 • கிராமங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டிடங்களை நாசம் செய்தல்.
 • தமிழர்களின் பாரம்பரிய சித்த வைத்திய கற்கைநெறியை கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றியதன் மூலம், தமிழர்களின் மருத்துவ அறிவியலின் தொன்மம் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படாமையை உறுதிப்படுத்தல்.
 • வடகிழக்கில் சிங்கள தொல்லியல் துறையின் நடவடிக்கைகளைக் குவியப்படுத்துவதன் மூலம் வரலாற்றுத் திரிபுகளை இயன்றவரை மேற்கொள்ளல்.
 • ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை தமிழர் தாயகப் பகுதியில் நிறுவுதல் (2013 ஆம் ஆண்டு மட்டும் 500 இக்கு மேற்பட்ட புத்தர் சிலைகள்)

கலாசார அலுவல்கள் அமைச்சு, சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிங்கள தொல்லியல் துறை  அடங்கிய எல்லா மட்டங்களிலும் தமிழர்களின் உயரிய பண்பாட்டைச் சிதைத்தழிக்கும் நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன.

தமிழர்கள் பலவகைகளில் கட்டாய ஒருமைப்படுத்தலுக்குள் (Forced Assimilation) உள்ளாக்கப்படுகின்றனர். தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் சிதைக்கப்படும் வகையில் ஒரு வகைப் பல்லினக் கலாச்சாரம் தமிழர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுத் தமிழரின் பண்பாட்டுத் தனித்தன்மைகள் இழக்கப்படும் வகையில் இந்தக் கட்டாய ஒருமைப்படுத்தலுக்குள் தமிழர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

உலகின் அத்தனை அடக்குறை, ஆதிக்கசக்திகளின் மாதிரிகளையும் தேர்ந்தெடுத்து அத்தனை வழிகளிலும் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ச்சியாகச் சாத்தியமாகும் வண்ணமே சிறிலங்கா அரச இயந்திரம் உலக வல்லாண்மையாளர்களால் வலுவாக்கப்பட்டுள்ளது..

மகாவம்சம் போன்ற வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள பௌத்த பேரின வெறியிலிருந்து வெளிக்கிளம்பும் பிணவாடையை மறைத்துவிட முடியாது. எமக்குவப்பில்லாத வரலாற்றுச் சூழமைவில் பேரம் பேச வல்ல எல்லா வலுவையும் இழந்து பேதலித்த நிலையில் பதுங்கிப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களிற்கு ஒளிமயமான வாழ்க்கையை உருவாக்க அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டப் போவதாகச் சொல்லுவது போன்ற சிறுமைகளை நாம் கண்டிக்கத் தவறக் கூடாது. எனிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தைக் கடத்துகின்றதே தவிர, எவ்வளவோ அருஞ் சாதனைகளை அந்த இடத்திலிருந்தால் செய்திருப்போம் என்று சொல்லும் மக்களால் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கவர்ச்சிகரமான அரசியற் சொற்பொழிவுகளைப் புலுடா என்று தான் வகைப்படுத்த வேண்டும். ஏனெனில் உலகின் மாபெரும் அதிசயமாக மைத்திரி, ரணில் போன்ற சிங்களத் தலைவர்களின் மனநிலை அசோகச் சக்கரவத்திக்கேற்பட்ட மனமாற்றம் போல மாறினாலும் கூட, சிறிலங்கா அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்ட விதத்தின் விளைவாக, அவர்களால் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்தவியலாது.

எனவே, சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரச இயந்திரத்தை ஆழக் கீறி, அடித்துத் தகர்த்துச் சிதைத்தெறியாமல், தமிழர்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்துவதென்பது கல்லிலே நாருரிப்பதற்கு ஒப்பானது.

எனவே, சிறிலங்கா அரச இயந்திரத்தைச் சிதைக்காமல், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து தப்பித்து தமது தாயகத்தில் தமது இருப்பைத் தமிழர்களால் உறுதிப்படுத்த முடியாது என்பதே வெள்ளிடைமலை.

– தம்பியன் தமிழீழம்-

2017-03-13

 6,163 total views,  4 views today

(Visited 9 times, 1 visits today)

3 Comments

 1. மிகவும் அருமையான ஆயவியல் ரீதியான கட்டுரை. ஆனால் அளவைக்குறைத்து இயுந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வந்த வார்த்தைகளே திரும்ப திரும்ப வருவதால் குழப்பமாக உள்ளது. ஆய்வுகள் அருமை. அடுத்த கட்ட நகர்வையும் தீர்வையும் நேரடியாக விளக்கினால் நலம்.
  சிங்கலவர்களுக்குழ் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களை பலவாராக பிரிக்கும் யுக்தியை நாம் கடைபிடிக்க வேண்டும். சூதை பயன்படுத்த வேண்டும். சூது என்பது முதுகில் குத்துவதல்ல உளவியல் ரீதியாக அவர்களை வீழ்த்துவதே.
  சிங்களவன் தமிழர்களை முதுகிலும் குத்தினான், உளவியல் ரீதியிலும், நேரடியாகவும் என பலவழிகளில் அழித்தான் அழிக்கிறான். எனவே நாமும் இன்றைய நிலையில் அதே செயல் யுக்தியை பயன்படுத்த வேண்டும்.
  சூது தமிழர்களுக்கு கைவராத கலை அது ஆரியத்திற்கு கைவந்த கலை ஆரியத்தின் துணை மொழியே சிங்களம் என்பதால் அது அவர்களுக்கு கைகூடுகிறது. இருந்பினும் இன்றைய தேவையில் நாமும் அதை கற்றை செயல்படுத்தியாக வேண்டும்

 2. வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி உறவே.

  கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றால் என்ன என்பதை முழு விளக்கத்துடன் ஆய்வு செய்து எழுதும் பொழுது கட்டுரை நீண்டு செல்வது தவிர்க்கமுடியாது.

  இனிவரும் காலங்களில் உங்களின் கருத்தையும் கவனத்தில் கொள்கிறோம்.

  நன்றி.

  காகம்

 3. Great blog here! Also your web site loads up fast!
  What host are you using? Can I get your affiliate link to
  your host? I wish my website loaded up as
  quickly as yours lol – Jacqueline

Leave a Reply