எச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35

மனித இனம் முன்னேற்றமடைய கல்வி கற்றல் என்பது முக்கியமானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் பறை சாற்றுகின்றன என்பது முக்கியமான விடயம். ஆனால் அந்தக் கல்வி முறை என்ன? எதைக் கற்க வேண்டும்? ஏன் கற்க வேண்டும்? எதற்குக் கற்க வேண்டும்?  எப்படிக் கற்க வேண்டும்? என பல பல எண்ணங்கள் இப்போதெல்லாம் மேவி நிற்கின்றன. காரணம்  நடை முறை நிகழ்வுகள் தொடர்ந்தும் கசப்பாகவே இருப்பதனால் தான்.

கல்வி என்பது அறிவிற்கும் ஆற்றல்களுக்கும் செயற்பாட்டுத் திறன்களுக்கும்  தெடர்பில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. மேலும் கல்வி என்பது, பதவி, பட்டம்,  கௌரவம் என்பதற்கானதாக மாறி விட்டதுடன் கயமை,  இரண்டகம், வெட்டியோடல் என இன்னும் பலவாக விரிவு பெற்று வருகின்றனவா என எண்ணத் தோன்றுகின்றது. இதில்  தமிழர்களாகிய நாம் முன் நிற்கின்றோமா?  பல ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்வி பற்றி, நம் முன்னோர்கள் சிலாகித்துக் கூறியிருக்கின்றனரே அப்படிக் கற்றதனால் தானே மூத்த குடிகளில் ஒன்றான தமிழினம் சீரும் சிறப்புமான தொன்மத்தைக் கொண்டுள்ளது என மாற்றானும் ஆய்வு செய்து சொல்லுகிறான், என எண்ணவும் தோன்றுகிறது.

இத்தனை பீடிகைகளும் ஏன் எனில், இன்றைய எமது பிரச்சினைகளில்  கற்றவர்களின் வகிபாகம் பற்றி சிந்திக்கும் போது எழும்; எண்ணங்களே தவிர வேறு ஒன்றுமில்லை. மொழி இல்லையே இனமில்லை. இனமில்லையே நாம் இல்லை. எனவே தமிழினத்துக்கு எதிரான அனைத்து  வினைகளுக்கும் எதிர் வினையாற்ற வேண்டிய  கட்டாயக் கடமை எம் அனைவருக்கும் உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை கற்றவன் முதல் கல்லாதவன் வரை என  வரையறைகளைத் தாண்டிச்  செயற்படும் தன்மைகள் இருத்தல் வேண்டும். அத்தன்மைகள் எமது  அரசியல் பொருண்மிய பண்பாட்டுத் தளத்தில்  எப்படி இருந்தன இருக்கின்றன என்பது பற்றி நாம் ஊன்றி அவதானித்தல் வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மருத்துவத்துறை, பொறியியற்றுறை அடுத்தது சட்டத்துறை இதுவே கற்றுலுக்கான கௌரவம், மாப்பிள்ளை வணிகத்தின் மூலதனம். அதற்குப் பின்னால் தான் மற்றயவை. இவற்றில் முதல் இரண்டு வகையறாக்களும் தானுண்டு தன் பணி , தன் குடும்பம் என வாழ்வாங்கு வாழ்ந்திருக்க இந்த அப்புகாத்துமார்கள் (சட்டவாளர்கள்) எமது அரசியற் தொடரில் பங்கு கொண்டு நடத்திய நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்கள் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள். அவ்விருட்டில் நுழைந்து  வெளிச்சம் தேடுவதுடன் தனக்கும் தாம் சார்ந்தவர்களின் எதிர்கால நலன்களுக்கும்  ஒளிமயமான ஏற்றத்திற்கான வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அவை நடந்தனவா நடக்கின்றனவா என்ற கேள்விகள் எம் முன் எழுந்த வண்ணமுள்ளன.

தொடக்க காலங்களில்  சிங்களத்துடனான ஒட்டுறவுகளைப் பேணி, தமக்கு மட்டும் கிடைத்த கௌரவத்தைப் பேணி ஆங்கிலம் பேசிக் கொண்டு தமிழ் மக்களின் அரசியலைக் கையாண்ட வரலாறு தொடங்கி, இடையில் இயக்கங்களின் வளர்ச்சியும் அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித்துவக் கட்டமைப்புகளைக் கொண்ட தனித்தமிழீழத்திற்கான முன்மாதிரி ஆட்சியில் அடங்கிப் போயிருந்த இந்த அறிவாளிகளின் செயற்பாட்டுத் தன்மைகள் மீண்டும் மேலெழும்பித்  தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி வருவது கண்கூடு. தமிழ் மக்களின் விடுதலையை வாங்கித் தருவதற்கு தம்மை விட்டால் ஆளில்லை என்ற அகம்பாவமானது, பொதுத் தளங்களிலும் அவ்வாறாகவே இருந்து வந்தது.

தம்மை ஒரு கௌரவக் குடியாக வைத்துக் கொண்டு நோகாமல் நொங்கு தின்னும் கதையாகத்தான்  இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. தமிழ் மக்களும் கறுத்தச்சட்டையில் நம்பிக்கை வைத்து வாக்கினை அள்ளிக் கொடுக்கும் பாங்கானது எந்த அடிப்டைகளில் எனத் தெரியாமல் உள்ளது. சிறிலங்கா அரசானது  தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டங்களுக்கெதிரான எதையும் எம்மால்  செய்ய முடியாமை என்பது வேறு. ஆனால் அச்சட்ட திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான  வேலைத் திட்டங்களையோ அணி திரண்ட நடவடிக்கைகளையோ இவர்களிடம் காண முடிந்ததா? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்காலி கிடைக்க  வேண்டும் என ஆடியோடித் திரிந்து  கிடைத்தவுடன்  தமது மேதாவித் தனங்களைக் காட்டுவதும் வாடிக்கையாகத் தெடர்ந்த வண்ணமுள்ளன.

இன்று நல்லாட்சி அரசு எனப் புகழ் பாடிக் கொண்டு எதிர்க்கட்சிப் பதவியில் அமர்ந்திருக்கும் தமிழ் தரப்பினரால்; அரசியற் கைதிகளின் விடுதலையில் ஏன் ஒன்றும் செய்ய ஏன் முடியவில்லை? கடந்த காலங்களைப் போலல்லது இப்பேது வழக்குகளில் பல நெருக்குவாரங்களைக் காட்டும் போது, அரசியல்வாதிகளாக இல்லாமல் அப்புகாத்தர்களாகவேனும் ஏன் நியாயம் கேட்பதில்லை? அரசியலில் இருப்பவர்களும் சரி அரசியற் கைதிகளை வைத்து உழைப்பவர்களும் சரி ஏன் ஒன்று கூடி இப்பிரச்சினை பற்றிக் கலந்தாலோசனை கூடச் செய்வதில்லை? இன்று  அரசியற் கைதிகள் பலர் தொடர்ந்தும் சிறை  இருப்பதற்கு இந்த அப்புகாத்தர்களும் காரணம். எடுகோளாக மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்த நல்லரட்னம் சிங்கராசாவிற்கு ஜம்பது ஆண்டு காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

கரவெட்டி  என்ற பெயர் யாழ்பாணத்திலும் உள்ளது. மட்டக்களப்பிலும் உள்ளது. மூத்த சட்டவாளர் ஒருவர் (இவர் ஓர் அரசியல்வாதி) இவ்வழக்கினைக் கையாண்டார். அவருக்கு  கரவெட்டி விடயம் புலனுக்கு எட்டவில்லையோ கவனிக்கவில்லையோ தெரியவில்லை.  வட புலத்தில் நடந்த தாக்குதல்கள் அனைத்தும் சிங்கரசா மீது சுமத்தப்பட்டு ஜம்பது ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்பட்டது. அந்த வழக்கு மேன்முறையீடு வேறு ஒரு சட்டவாளரால்  மேற்கொள்ளப்பட்டபோது தவறு நடந்திருப்பது தெரிந்தது. எனினும் தொழில் முறை உறவால் விடயம் வெளியிடப்படவில்லை. பின்னர் மேன்முறையீட்டில் தண்டனை முப்பத்தைந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதும், பின்னர் அவ்வழக்கு ஜ.நா விற்குப் போய் அவருக்குச் சாதகமான தீர்ப்பு வந்தாலும் சிறிலங்கா அரசானது, அதை ஏற்றுக் கொள்ளாமையினால் இன்னும் அவர் சிறையில் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றார். அப்படி அசட்டையாலும், குறிப்பிட்ட நாட்களுக்கு வழக்குகளுக்கு போகாமையாலும் எத்தனையோ பேரின் வாழ்க்கை சிறைக்குள் கழிகின்றன. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அவர்கள் என்ன சொல்லப் போகின்றனர்?

கறுப்புச்சட்டைகளைக் காட்டி பொது வாழ்விற்கு வரும் இவர்கள், பொதுத்தளத்தில் நிகழும் மனிதாபிமானங்களுக்கெதிரான வழக்குகளில் எப்படி முன்னிலை ஆகுகிறார்கள் என்பன வியப்பான விடயங்களே. யாழ் பல்கலைக்கழகத்தில்  சமூகவியற் துறையில் முக்கியமான ஒருவர்; வீட்டில் மலையகத்தை அடியாகக் கொண்டு கிளிநொச்சியில் வாழ்ந்து வந்த ஒரு சிறுமியை, வீட்டுப் பணிக்காக அமர்த்தியிருந்தார். குறிப்பிட்ட நபர், மனைவி வீட்டில் இல்லாத போது அச்சிறுமியை பலமுறை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய விடயம் வெளியில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்த நபருக்காக வழக்காடப் புறப்பட்டவர்கள் அன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களாக வலம் வந்த முக்கிய அப்புகாத்தர்கள். இன்றும் யாழ்மாவாட்டத்தில் இடம்பெறும் பாலியல் வல்லுறவு அதுவும் சிறுவர் பாலியியல் வல்லுறவு வழக்குகள், சமூக விரோதமான வழக்குகளில் முன்னின்று வாதாடுவதில் வல்லுனராக இருப்பவார்கள்  அரசியலுக்கு வந்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி வாக்குப் பிச்சை எடுப்பவர்களே.

இவை பற்றி யாரும் பெரும்பாலும் கேள்விகள் எழுப்புவதில்லை. அப்படிக் கேள்வி எழுப்பிய போது கிடைத்த பதில், “சட்டவாளர்கள் என்பவர்கள் தம்மை நாடி  வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக முன்னிலையாக வேண்டும். அதுவே சட்ட அறம் என்பதாகும்.” அன்றாடம் வயிற்றுக்கு வழியில்லாமல் அரசியற் கைதிகளின் உறவுகள் அல்லாடும் போது தமது வங்கிக் கணக்கில் முதல் நாள் பணம் விழுந்தால் மட்டுமே,  அடுத்த நாள் குறிப்பிட்ட வழக்குகளில்  முன்னிலையாவேன் என்ற அடம் பிடிப்புக்களுக்கு முன்னால், அறம் ஒளிந்து கொண்டதா என தெரியவுமில்லை புரியவுமில்லை. அறமும் உயர்வும் பற்றிக் கதைப்பவர்களுக்குத் தமது கறுப்புச்சட்டையின் பிற் பகுதியில் சிறு பை உள்ள வடிவம் எதைக் குறிக்கின்றது என்பது விளாங்குகின்றதா எனத் தெரியவுமில்லை. தொடக்க காலங்களில் மக்களின் நியாயங்களுக்காக வழக்காடிய வழக்குரைஞர்கள், அவர்களிடம் கை நீட்டிப் பணம் பெறுவதில்லை. மாறாக மக்கள் தமக்குக் கிடைத்த தொகையினை அவர்களின் கறுப்புச் சட்டையின் பின்னாலுள்ள பையில் போட்டு விட்டு செல்வது வழக்கமாகி இருந்ததாம். ஜயாமாரே  அம்மாமாரே அறம் என்பது உங்களுக்கு ஏற்றவாறு நாக்கைச் சுழற்றுவதல்ல. இந்தப் பொருண்மியக் கட்டமைப்பில் யாரும் உங்கள் சட்டைப் பைகளில் சில்லறைகளைப் போடப் போவதுமில்லை. அப்படிப் போட்டாலும் நீங்கள்  உழைத்தது போதும் என, ஏற்கப் போவதுமில்லை. ஆனால் அறத்தை “மரம்” ஆக்கி விட்டு நீங்கள் தமிழ் மக்களுக்கு நிழல் தரும் மரமாக நாடகம் ஆடாதீர்கள் என்பதே எமது தயவான வேண்டுகோள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி காலத்துக்கு பின்னர், இடம் பெற்ற இனப்போரில் கைதானவர்களில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இன்னும் பல துறை சார்ந்தவர்கள் கைதாகிச் சிறை சென்றார்கள். இவ்வகையான போராட்டங்கள் நிகழ்ந்த பல நாடுகளில் சட்டவாளர்கள் சிறை சென்றதும் பாதிக்கப்பட்டதும் நடந்தேறின . ஆனால் எம் போராட்ட வரலாற்றினில் எந்த ஒரு சட்டவாளரும் இவ்வாறான பாதிப்புக்களுக்குள்ளானதாகத் தெரியவில்லை. அப்படிப் பாதிக்கப்பட்டவர் என இனங்காணப்பட்டவர் எங்கு சென்றார் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சம்.

உள் நாட்டில் இப்படி என்றால் வெளிநாடுகளில் இன்னும் மோசமான நிலைமைகளினையே காணக்கூடியதாகவுள்ளது. இருப்பதை விற்றுச் சுட்டு புலம்பெயர்ந்து வருபவர்களிடம் தமிழீழ விடுதலைக்காக நிறுவனம் நடத்துபவர்களும் சரி, தமிழீழத்துக்குக் குரல் கொடுக்க என சட்டம் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் சரி தவிச்ச முயல் அடிக்கும் அவலம் தொடர்கிறது. இத்தனைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றங்களில் வாதாடுவதில்லை. வெள்ளைத் தோலுக்கு எடுபிடிகளாக இருந்து கொண்டு, காசு பறிப்பதில் குறியாக இருந்து காசைப் பறிப்பதோடு இல்லாமல் அரசுகளால் அளிக்கப்படும் இலவச சட்ட உதவிகளுக்கான பணத்தினையும்;  வழக்காளர்களைக் கொண்டு கையொப்பம் வாங்கி அபகரித்துக் கொள்ளும் நிகழ்வுகளுமே நடந்தேறுகின்றன.

தாம் எடுக்கும் வழக்குகளை குறுக்கு வழியிலேனும் வெல்ல வேண்டும் என்பதற்காக  இங்கு குறிப்பிட்டெழுத முடியாத விடயங்களைக் கூறி, பெண்களிடம் அவர்களின் சுய மரியதைகளை இழக்கக் கூடிய வாக்குமூலங்களைப் பெறுவதுடன், தன்மானத்தை இழக்கக் கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை  இங்கே தொட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும். எரிகிற வீட்டில் கொள்ளியைப் பிடுங்கி;  அவ்வீட்டாரினது  தலையிலேயே வைக்கின்ற பணியினைத் தான் எமது மெத்தப் படித்த மேதாவிகள் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். எல்லாப் பணிகளையும் போல் சட்டத்துறையும் ஒன்று. ஆனால் தாம் கொம்பு முளைத்த சிங்கங்கங்களாக எண்ணிக்கொண்டு, காகிதப் புலிகளாக வேடங்கட்டிச் செயற்படும் விதத்தினை மக்களும் பாராமுகமாகக் கேள்விக்குட்படுத்தாமல் இருப்பதானது, இவர்களின் ஈனச்செயற்பாடுகள் தெடர்ந்து இடம்பெறுவதற்கே வழி வகுக்கும்.

இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை என்பது  பற்றியெரியும் முக்கிய விடயமாகும். காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றார்களும் உற்றார்களும் முகாம்களின் வாயிலில் கிடந்து நடுவீதியில் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து போராடித் தோற்றுப் போய், இறுதியில் கடந்த வாரம் தமது உயிரைப் பொறியாக வைத்து வவுனியாவில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். நல்லாட்சி ஜ.நாவிற்குப் பொய் வாக்குறுதிகளை அளித்து செயலகம் அமைத்துள்ளது ஆனால் நடந்தேறியது  ஒன்றுமில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இத்தனை நடந்தும் தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்து வருகின்றது. நாட்டின் அதிபர் தமது தேர்தல் பரப்புரையின் போது, தன்னோடு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மற்றும் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட நால்வரும், தங்களின் பிள்ளைகள் என்று உறவுகள் அடித்துச்  சொல்லுகிறார்கள். அதே போல் மகிந்த காலத்தில் அலரி மாளிகை நிகழ்வொன்றில் காட்டப்பட்ட தொலைக்காட்சி நிகழச்சியில் காணப்பட்ட பலர், காணாமல் ஆக்கப்படவர்களின் பெற்றார்கள்  தேடி அலையும் பிள்ளைகளே. ஆனால் உறவுகளின் கேள்விக்கு எவ்வித பதிலையும் அளிக்காமல் நாட்டின் அதிபர் வாய் மூடி மௌனம் சாதிக்க, பிரதமர் காணாமல் போனவர்கள் யாருமில்லை. அவர்களில் பலர், வெளி நாடுகளுக்குப் போயிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என இறுமாப்பாகப் பதிலளித்துள்ளார்.  தமிழ் மக்களின் வாக்குப் பிச்சையில் எதிர்க்கட்சி நாற்காலியில் சுகம் காணும் கனவான்கள், எதையம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அதே போல், குட்டிமணி தங்கத்துரை வழக்கில் தீர்ப்பெழுத கோப்புத் தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள் எல்லோரும் இன்று தமிழர்களின் விடுதலைத் தீயைத்  தமக்குச் சாதகமாக்கிப் பெரும் பதவி வகிக்கும் அப்புக்காத்து ஈனங்கள் தான். உலக நாடுகளுக்குச் சென்று இந்துத்துவ நியாயம் பேச நேரம் இருக்கிறது. ஆனால்  பட்டினிச் சாவில் கிடக்கும் மனிதங்களைப் பார்ப்பதற்குக் கூட நேரமில்லாதோர் தமிழர்களுக்காக உழைப்பதாகக் கூறிக்கொள்வதைத் தான் தாங்க முடியாமல் உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையினைக் கண்டறியும் செயற்பாடுகளில் அரசு காட்டும் பாசாங்கு தெரிகிறது. ஆண்டான்களின் அரசியல் வலையில் சிக்கித் தமிழ் மக்களின் உரிமைகளைச் சீரழிக்கும் இவர்கள், இனங்காணப்பட்டு தமது  பிள்ளைகள் தான் என உறுதியாக கூறும் பெற்றார்களுடன் இணைந்து ஏதாவது சட்ட நடவடிக்கைகளினை எடுத்துள்ளார்களா? இல்லையே!!!! ஏன் ஆண்டான்களுக்கு வலிக்கும் என்று தானே? ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்து, பகிரங்கப்படுத்தலாம் அல்லவா? தவிர, வெளிநாடுகளுக்குச் சென்றதாகப் பிரதமர் கூறினால், அவரைத் தகவல்களை முன்வைக்கச் சொல்லலாமே? தூன் கேட்பதற்கு தன் முதுகெழும்பில்லை என்றால், வாக்களித்த மக்கள் கேட்கிறார்கள் என்றாவது கேட்கலாம் அல்லவா? இவர்களின் கல்வியறிவும், கறுப்புச்சட்டைப் பதவி, பட்டங்களும், அதை வைத்து  நடத்தும் அரசியல் நாடகங்களும் யாருக்கு  வேண்டும்? எதற்கு வேண்டும்?

நியாயங்கள் கேட்கக் கூடாது, வீதிக்கு இறங்க முடியாது, காசுப் பைகள் குறையக் கூடாது, வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என தாம் வைத்ததும் சொன்னதும் மேன்மை தகு சட்டம், தீர்வு எனின், தமிழ் மக்கள் போலித்தனமான கற்றவன் என்ற மாயையில் வீழ்ந்தும் தொடர்ந்தும் மாய வேண்டியதைத் தவிர  வேறு என்ன இருக்கிறது? என வாளா இருப்பதால் இவர்கள் வாழ்வாங்க வாழ்கிறார்கள். மாற்றங்கள் அவர்களிடமிருந்து வரப்போவதில்லை. எம்மில் வர வேண்டும். விழித்துக் கொண்டவன் தான் பிழைத்துக் கொள்வான்!

“பிச்சை புகினும் கற்கை நன்றே! எச்சைகள் ஏய்க்காத எமை நாம் இழக்காத கற்கை நன்றே”

கொற்றவை

29-01-2017

 3,229 total views,  2 views today

(Visited 10 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply