தமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி

படைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்கங்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள்  வரலாற்றில் பதியப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகும். ஒருவகையில் காலத்தின் அளவுகோல்களாக பார்க்கப்படவேண்டிய படைப்புக்கள் அவற்றின் மொழிசார் மதிப்பீடுகளுக்கு அப்பால் அதிகாரத்தின் பிரதிபலிப்புக்களை அளவிடக்கூடிய ஆய்வுக்கண்ணோட்டத்திற்கு இந்த பத்தி வழிவகுக்கும்.

உலகின் தொன்மையான இனக்குழுமங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற தமிழர்களின் வாழ்வியல் மறம் என்கின்ற வீரத்தினை முதன்மையாகக் கொண்டிருந்திருக்கிறது. வீரயுகத்தில் குறிப்பிட்ட இனக்குழு அடையாளத்தின் பொதுமைப்படுத்தலின் அடிப்படையில் மக்கள் பரம்பல் இனக்குழுமங்களாகியது. தமிழர் என்ற இனக்குழுமத்தின் இன அடையாளமாக, அவர்களது தனித்துவமான குறிகாட்டியாக வீரமும் அதனுடன் இணைந்த அறமும் இருந்திருக்கிறது என்பதற்கு, வீரயுகத்தின் தொடர்ச்சியான சங்ககாலத்தில் வீரமும், வீரனும், போருடன் இயைந்த வாழ்வியலும் முதன்மைப்பட்டிருப்பதனைச் சான்றாகக் கூறலாம். ஒரு யுகத்தினது மேலாதிக்க விடயங்கள் தொடர்ந்தேர்ச்சியான வரலாற்று இயைபாக்கலுக்கு உட்படுகின்றமை வரலாறுகள் கூறும் உண்மை. தொன்மைச்சமூகம் மாற்றங்களுக்கு உள்ளாகி, நிலவுடைமை சார் சமூகம் கட்டியெழுப்பப்பட்டு, இனத்தின் அடையாளமாக நிலம் என்பதும் நிலத்தின் ஆளுகை என்பதும் கட்டியமைக்கப்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் மிக முக்கியமானது காலக் கணிப்பாகும். ஆனால் சங்ககாலம் தொடர்பான காலக்கணிப்பு புறச்சான்றுகளில் அறுதியாகக் குறிப்பிடப்படாததினால் சங்ககாலத்தின் கால வரையறை தொடர்பான இணக்கம் இன்னமும் வந்துவிடவில்லையாயினும், அகச்சான்றுகளான இலக்கியங்களின் வாயிலாகவே வரையறுக்கப்படுகிறது.

ஐவகை நிலப்பிரிப்புக்களுடன் இயற்கையும் அதுசார்ந்த ஒழுக்கவியலும் தமிழர்களுடைய பண்பாடாகக் கட்டியமைக்கப்பட, நிலத்தின் அதிகாரத்தையும் அதன் பரம்பலையும் தக்கவைப்பதற்காக மறம் என்னும் ஒழுக்கவியல் தமிழனுடைய ஒழுக்கமாகிய காலம் அது. படைப்புகள் பலவகைப்படினும், வரலாற்றில் எச்சமாக இருப்பவை இலக்கியங்களே.  இந்த இலக்கியங்களினூடாக ஆற்றுகை சார் படைப்பாக்கங்களும் நிகழ்;ந்திருக்கின்றன என்ற சான்றுகளையும் நோக்கலாம். அன்றைய தமிழர்களுடைய வாழ்வியலையும் அதுசார்ந்த படைப்புக்களையும் அறியக்கூடிய படைப்பு வெளியாக, இலக்கியங்களே இருக்கின்றன. சங்ககாலத்தை நோக்கின்  தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்  எனப் பெரும் பகுதியாகப் பகுக்கப்படும் பெரு இலக்கியப் பரப்பின் பாடுபொருள்களாக, தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள் ஆடல் பாடல்கள் பொருண்மியம்,  ஓவியம், சிற்பம், கட்டடம் போன்ற கலைகள் ஆகியன பேசப்படுகின்றன.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் சங்கப்பாடலின் பொதுமையாக்கலின் கீழ் அன்றே உலகமயமாதலைக் கனவு கண்ட தமிழர்களின் வாழ்வியல் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர்களையும் கடையேழு வள்ளல்களையும் அவர்களது அற,மறவாழ்வுகளைக்  கொண்டும் புனையப்பட்டிருக்கிறது. மானம், வீரம், ரௌத்திரம்,வெஞ்சினம் என்ற உணர்ச்சிநிலைகளை பொதுவாக “மறம்” என்ற கருத்தாக்கத்தினுள் உட்படுத்தலாம். மனைவி, பிள்ளைகள் மற்றும் ஒருவனது தனிமனித வாழ்வு சார்ந்த சுற்றத்தாரோடும்  ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், பொதுமக்கள் போன்ற பொதுவாழ்வு சார் மாந்தர்களோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. புறத்திணையாகிய புறநானூறு மறத்தினைப் பற்றி பேசுகிறது. காதல் சார்ந்த விடயங்களை பேசும் அகத்திணையில் கூட வீரம் சார்ந்த காதலே கொண்டாடப்பட்டிருக்கிறது எனலாம்.

மறம் என்பது ஒழுக்கவியலின் உயரிய பண்பாகவே சங்ககால பாடல்களில் படைக்கப்பட்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் புறத்திணையானது, மன்னனின் மறம் சார்ந்த ஒழுக்கக்கோவை நூலாகவும் காணப்படுகிறது.  தொல்காப்பியரின் புறத்திணையானது முழுக்க முழுக்க போர்,  போர்க்காரணம்,  போர்முறை,  அரசரைப் போற்றுதல்,  போர்வெற்றி எனப் போர் சார்ந்தே அமைகிறது எனலாம். இறுதியில் மட்டுமே நிலையாமைக் கருத்தை உணர்த்தும் காஞ்சி திணையையும்,  ஆண்மகன் வீரம் உணர்த்தும் பாடாண் திணையையும் உள்ளடக்கியது எனலாம்.

தன்னுடைய அதிகாரத்தை  ஏற்காதவரை வெற்றி பெறவேண்டும் என்று நினைத்ததை முடிக்கும் அரசனின்  சிறப்பு,  புராதன கோட்டையைக் கவரும் விருப்பம்,  படைப்பெருக்கம், அரணுள் இருக்கும் பொருள் வளம் என்பதுள்ளிட்ட பல்வேறு காரணங்கள் எண்ணங்கள் அரசனுக்குத் தோன்றும் போது அங்கு போர் ஏற்படலாம் என்பதனைத் தொல்காப்பியர்,

கொள்ளால் தேஎம் குறித்த கொற்றமும்

உள்ளியத முடிக்கும் வேந்தனது சிறப்பும்

தொல் எயிற்று இவரீதலும், தோலது பெருக்கமும்,

அகத்தோன் செல்வமும்  (தொல் : 10140)

என்ற பாடலடியினூடாக வெளிப்படுத்துகிறார்.

வாழ்வியலின் பொது இலக்கணத்தை தொல்காப்பியம் கூறி நிற்க, புறநானூறானது மறத்தின் இலக்கணத்தைப் பாடியது. ஆனால் அது வெறுனே போர் என்ற எல்லைக்குள் நிற்கவில்லை. அதனையும் தாண்டி, போர், மன்னன் புகழ், நில வளங்கள், அரசியல், பொருண்மியம், ஆட்சியியல், குடிமக்கள், கலைகள் என்ற பேரரசொன்றின் முழுமையான கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் சங்கப்பாடல்களை “வீரயுகக் கவிதை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மன்னர் புகழ் பாடும் பாடல்கள், போர் தொடர்பானவை,  சடங்குகள் தொடர்பான குறிப்புக்கள், ஆற்றுகைகள் தொடர்பானவை, ஆற்றுப்படுத்தல் பாடல்கள் போன்ற  வகைப்பாடுகளில்  பாடல்களில் மறம்  கூறப்பட்டுள்ளதை நோக்கலாம்.

தமிழருடைய இனத்தில் பிறந்தாலே அது வீரக்குழந்தையாகவே கருதப்பட்டு வளர்க்கப்படுகிறது. அந்த வீரனைப் பெற்ற தாயும் வீரத்தாயாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறாள்.

“சிற்றில் நற்றூண் பற்றிஇ நின் மகன்

யாண்டு உளனோ என வினவுதி என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்  ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே” ( புறநானூறு 86)

“உன் மகன் எங்கு உள்ளான்?” என்று கேட்கிறாய்.? என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது . அத்தகைய வீரம் பொருந்திய அவனைப் போர்க்களத்தில் தான் காண முடியும். என்று தாய் தனது காவற்பெண்ணுக்கு சொல்வதாக அமைகின்றது. வலிமைமிக்க புலிக்கு தன்மகனை ஒப்பிட்டுää களத்தில் தான் என் மகன் இருப்பான் என்று கூறுகிறது பழந்தமிழர் வீரம்.

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ

யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;

இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்

பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279)

இவளது சிந்தை கெடுக (வாழ்க எனப் பொருள்);  இவள் பெண்களில் சிறந்தவள், இவளது துணிவு மிகவும் கடுமையானது. வீரப் பரம்பரையில் வந்த  பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். நேற்று முன்தினம்  இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப் போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள் என்று தாய்த்தொன்மங்களின் வீர இலக்கணங்களைப் பாடிச் செல்கிறது புறம்.

சங்ககால மறத்தின் விழுதுகளாய், தாய் நிலம் காக்கப் போராடிய விடுதலைப் புலிகள் போர்க்களத்தில் களமாட, வீரத்தாயின் உறுதியை, பெண்புலி அ.காந்தாவின் வரிகளிலும் இதனை நோக்கலாம்.

“அவனை விதைத்த அடுத்த கணம்

அடுத்தடுத்துள்ள கல்லறைகளை நோக்கி

ஓடின கால்கள்

பூக்களைத் தூவின கைகள்

எந்த மகனுக்காய் எந்தன் கால்களை நகர்த்த

நேற்று விதையுண்டு போன மூத்தவனுக்கா?

இல்லை இப்போதுதான் விதைக்கப்பட்ட

என் இளைய குஞ்சுக்கா?….

நஞ்சுமாலை கழுத்திலே கட்டி, மக்கள்மாரை போருக்கனுப்பும் பண்பாடு தமிழரின் குருதியில் ஓடிக்கொண்டிருக்கின்றது போலும். மாறாக, போர்க்களத்திலே மகன் தோற்றுவிட்டானாயின்,

வாதுவல் வயிறே வாதுவல் வயிறே

நோலா வதனகத் துன்னீன் றனனே” ( புறத்திரட்டு தொல்: பொருள் 71)

போரில் புறமுதுகிட்டு ஓடிய மகனைப் பெற்ற வயிறை கிழி;த்து தன்னையே மாய்த்துக்கொள்ளும் வீரத்தாயினுடைய உள்ளக்குமுறல்  என்ற பாடலடிகளினூடாக குறிக்கப்படுகிறது.

இன்னொரு தளத்தில் தன் மகனை உறங்குவதற்கு கூட விடாத, ஈழத்தாயின் விடுதலை நோக்கிய ஓர்மம்,

“தாலாட்டுப் பாடமாட்டேன்..

தமிழீழப் பிள்ளை என் பிள்ளை.. அவன்

தலைசாய்த்துத் தூங்க இது நேரமில்லை. …..

………விடுதலைப் புலிகள் போராடும் வேளை மகனே தூங்காதே..

வீரமில்லாப் பிள்ளை இவனென்ற கெட்ட பெயரை வாங்காதே..

நானென்ன செய்தேன் தாய் மண்ணுக்கென்று நாளை ஏங்காதே”

பாடல் வரிகளினுள் பொதிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

போர் என்பதை தமிழர்தம் வாழ்வியலின் முதன்மைக் கடமையாக கருதியிருந்தனர் என்பதனை படையெடுப்புக்கள், வெற்றிகளின் பதிவுகள் போன்றவற்றினூடாக நிறுவக்கூடியதாக இருக்கின்றது.

“போரெனிற் புகலும் புனைகழன் மறவர்

காடிடைக் கிடந்த நாடுநனி சேய”

எவ்வளவு தொலைதூரம் சென்றும் வீரர்கள் போர்புரிந்து வெற்றிவாகை சூடுவார்கள் என்பதாகச் சொல்லிச்செல்கிறது இந்தப் பாடல். ஈழத்து படைப்பு வெளியில் இதே பேசுபொருள் ,

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன் ஏறி கடல் வென்றதுண்டு

அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்

வேங்கை கடல் வீரர் இன்று

காலை விடிந்தது என்று பாடு சங்ககாலம் திரும்பியது ஆடு “

என்று பதிவாகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

போரினை மட்டுமல்ல போர் ஒழுக்கத்தையும் புகட்டும் போரிலக்கணமாகவும் புறநானூறு இருந்திருக்கிறது. போர் தொடர்பான அறிவிப்பு முதல் போரின் வெற்றியும் தோல்வியும் எவ்வாறு பார்க்கப்படவேண்டுமென தமிழர்களை ஒரு போர் ஒழுக்கவியலுக்குள் நிற்கவும் செய்திருக்கிறது. போர்க்களத்தில் மார்பிலும் முகத்திலும் ஏற்படாத விழுப்புண்களை தமது வீரத்திற்கு இழுக்காக அஞ்சி,வடக்கிருந்து உயிர்நீத்த வீரர்களின் வழியாக வந்தது தமிழினம்.  போரில் வென்றதும் போர்க்களத்திலே “களவேள்வி” என்னும் போர் வெற்றி விழாவினை பெரிய சடங்காகச் செய்து குரவையாடியிருக்கிறார்கள் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

“முன்தேர்க் குரவை வென்றேந்திய விறற்படையோன்

முன்றேர்க்கண் அணங்காடின்று”.

தன் பகையினை வென்று எடுத்த, வெற்றியான் மிக்க படைக்கலங்களை உடைய மன்னனது தேரின் முன்னிடத்தே பேய்கள் கூத்தாடியது,  முன்தேர்க்குரவை ஆகும்.

ஒரு குழுமத்தினுடைய அழிவு இன்னொரு குழுமத்தின் வெற்றியாகிவிட சடலங்களின் மேல் நின்று வெற்றி விழாக் கொண்டாடும் அச்சடங்கிற்கு மாற்றாக, கொற்றவள்ளை என்ற பாடலும் பாடப்படுகிறது. வென்ற மன்னனின் புகழைக் கூறும் அதே வேளை, பகைவரிற்கு இரங்கியும் பாடப்படுவது கொற்றவள்ளை எனப்படும்.

“ வாள்இவலந்தரஇ மறுப் பட்டன

செவ் வானத்து வனப்புப் போன்றன!

தாள்இ களங்கொளக்இ கழல் பறைந்தன

கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;”

மறத்தின் வெற்றிச் செய்தியை மட்டுமல்லாது தோல்வியையும் அதன் வலிகளையும் கூட புறநானூற்றில் காணலாம். எப்போதும் அதிகாரத்தின் பிடிக்குள்ளும் அதன் ஆக்கிரமிப்புக்களுக்குள்ளும் பாதிக்கப்படுவது குடிமக்களே. போர் ஒழுக்க விதிகளை குறிப்பிட்டிருந்தாலும் பல மன்னர்கள் தம் போரொழுக்கத்தை பேணத் தவறியிருந்தனர் என்பதை புலவர்கள் தம் பாடல்களினூடாக பதிவு செய்திருந்தனர். எந்தக் காலத்திலும் அதிகாரத்திற்கு எதிரான குரலென்பது ஒடுக்கப்பட்தொன்றாகவே காணப்பட்டது. ஆயினும் வஞ்சப் புகழ்ச்சி என்ற கவிநுட்பத்தினூடாக எதிர்ப்புக்குரல்களும் படைப்பிலக்கியங்களுக்குள் ஒளிந்துநின்றன.

“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்

பாழ்செய்தனை அவர் நனந்தலை நல்லெயில்,

புள்ளினமிமிழும் புகழ்சால் விளைவயல்,

வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்

தேர் வழங்கினை நின்தெவ்வர் தேஎத்துத்

துளங்கியலாற் பணையெருத்திற்

பாவடியாற் செறல் நோக்கின்

ஒளிறு மருப்பின் களிறு அவர

காப்புடைய கயம் படியினை ………….” ( புறநானூறு: 15)

பெருமானே! பகைவருடைய நல்ல கோட்டைகள் சூழ்ந்த அகன்ற தெருக்களை கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தாய். நெற்பயிர்கள் விளைந்துள்ள வயல்களில் தேர்களைச் செலுத்தி அழித்தாய். அவர்களின் காவல் மிகுந்த நீர்த்துறைகளில் உனது யானைகளை நீராட்டி அழித்தாய் என்று அம்மன்னன் சிற்றூர்களில் போர் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் குறித்து வருந்திக் கூறினார்.

எந்தவொரு சமுதாயத்திற்கும் அவர்களது பண்பாட்டுத் தளத்திலே முகிழ்க்கின்ற சடங்குகளும் தொன்மங்களும் அவர்களது அடையாளங்களை பேசுபவையாக இருக்கும். தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் போரிலே வீரமரணம் எய்தியவர்களே அவர்களின் கடவுள்களாயினர். கல்லறைகளுக்குள்ளும் ஈமத்தாழிகளுக்கும் அடக்கப்பட்ட உடலங்கள் தமிழர்களின் காவற்தெய்வங்களாகினர். பெரும்பேர், சாணூர், அமிருத மங்கலம் போன்ற இடங்களில் புழைகுழிகள் காணப்படும். தென்னகத்திலே இதுவரை கிடைத்த பொருள்களில் மிக முக்கியமான விடயங்களைத் தெரிவிக்கும் ஆதித்தநல்லூரிலும் ஒரு பெரிய பழைய காலத்திய மயான வெளியிலிருந்து முது மக்கள் தாழிகளும் அவற்றுடன் தங்கம், வெண்கலம், இரும்பு முதலியவற்றாலான அழகிய பானை சட்டிகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

“ஓன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்ததெனக்

கல்லே பரவி னல்லது

நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.”

என்று பாடுகின்றார் மாங்குடிகிழார். பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து யானைகளைக் கொன்று வீழ்ந்துபட்ட வீரரது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது நெல்லைச் சொரிந்து வழிபடும் தெய்வம் வேறொன்றுமில்லை என்பது பாடலின் பொருள்.

புறநானூறு புறப்பொருள் எனப்படும் மறத்தை நேரடியாகப் பாடினாலும் ஏனைய இலக்கியங்களிலும் மறம் ஊடுருவி நின்றிருக்கின்றது. உலகப்பொதுமறையான திருக்குறளில் கூட படைமாட்சி, ஒற்றாடல், படைச்செருக்கு, பகைத்திறந் தெரிதல் ஆகிய அதிகாரங்களினூடாக மறத்தினை தொட்டுச்செல்கிறார் வள்ளுவர்.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

செவ்வியல் இலக்கியங்களுக்கு நிகராக தமிழர் பண்பாட்டின் அடித்தளமாக நாட்டாரியலும் இருக்கின்றது. ஏட்டில் வந்த இலக்கியங்களின் பாடுபொருள்கள் மன்னரையும் அதுசார்ந்த விடயங்களையும் தொட்டுநிற்க, ஏட்டில் எழுதப்படாத இலக்கியங்கள் மக்களையும் மக்கள் சார்ந்த மண்ணையும் தொட்டுச்சென்றன. தாலாட்டுப் பாடல்கள் வீரத்தை புகட்டிநின்றன. இன்றும் கூட தாலாட்டில் வீரத்தின் பாடல்களை பாடுகின்ற மரபு காணப்படுகிறது எனலாம்.

“குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,

ஆள் அன்று என்று வாளின் தப்பார்,

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து  இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை,

ஈன்மரோ இவ் உலகத்தானே.” – புறநானூறு 74

குழந்தை பிறந்து இறந்தாலும், இறந்த உறுப்பில்லாத சதைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதையும் ஒரு ஆளாகக் கருதி, வாளால் வெட்டிக் காயம் செய்து புதைப்பார்கள். அந்தக் குடியில் பிறந்த நான் பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல் துன்பத்தில் ஆழ்த்திய பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, ஒதுக்கும் மன வலிமையின்றி,வயிற்றுப் பசியைத் தணிக்க, கையேந்தி இரந்து  உண்ணும்  நிலையில் இருக்கின்றேன்.    இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர் பெற்றனர்?  என்று போரில் தோற்ற மன்னன் புலம்புகிறான். எம்மினத்தின் இன்றைய நிலையை இதை விட தெளிவாக யாரால் சொல்லிவிட முடியும்? எதிரியிடம் தண்ணீர் வாங்குவதைக் கூட இழிவாகப் பார்த்த இனத்திலே பிறந்த நாங்கள், எமது விடுதலைக்காகப் போராடி, தோற்றுப்போய்விட்ட இனமாக, தாய்நிலத்தையும் இழந்து எதிரியிடம் தீர்வு தருவாயா என்று கையேந்தும் இழிந்த பிறவிகளாகிவிட்டோம்.

சங்ககாலத்தின் வீரமரபு மருவிப்போக, தமிழெனும் பேரரசு சிதறத்தொடங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட எமது இனத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் சென்றது படைப்புக்களே ஆகும். இனவரைவியலிலும் சங்கப் பாடல்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. பண்பாட்டினை எழுத்துவடிவில் தொகுத்தளிப்பதே இனவரைவியல். அவ்வாறு நோக்கின், தமிழினத்தின் இன வரைவியல் மறத்தினை தளமாகக் கொண்டே வரையப்படும். தொடர்ந்த தமிழர் வாழ்வியலில் மறத்தின் தேவை குறைந்துபோக, இன்னொரு சமூக வாழ்வியலுக்குள் அமிழ்ந்து, இன்னொரு தளத்திற்குச் சென்றது.

தமிழகம், ஈழம் என்ற இருபெரும் தளங்களினூடாக தமிழ் மக்களின் தொடர்ச்சியான இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்பட்டது. அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளுக்கும் வட இந்தியர்களின் அதிகார அத்துமீறல்களுக்கும் முகங்கொடுத்து தன் இருத்தலை உறுதிப்படுத்தவேண்டிய தேவை தமிழகத்தில் இருந்தது. சுதந்திரப்போராட்ட காலத்தில் தமிழ்ப்படைப்புலகம் தன் அதியுச்ச பங்களிப்பை செய்திருந்தது. இந்தியாவின் கயமைத்தனத்தால் தமிழ்மொழியின் இருப்பு கேள்விக்குறியாக ஆகிவிடக்கூடிய நிலையில், இந்தித் திணிப்பிற்கு எதிரான படைப்பாக்கங்களில் தமிழர்களின் வீரவரலாறு மீண்டும் ஒருமுறை உலகிற்கு காட்டப்பட்டது. பாரதிதாசன், பாவலரேறு பெருங்சித்திரனார்,  கலிகைப் பெருமாள் போன்றவர்களின் எழுத்துக்கள் தன் சுயமிழந்து அடிமை மனநிலைக்குப் போய்க்கொண்டிருந்த மக்களைத் தட்டியெழுப்பிய பாரதிதாசனின் பாடல்கள் தமிழகப் படைப்புலகத்தில் ஆதிக்கம் செய்தன.

“முந்நூ றாண்டின் பின்னே — யாம்

முதலிற் காணும் போரே

தின்பாய் நல்ல கொலைகள் — அந்தச்

சீனாக் காரர் தலைகள்.”

என்ற பாரதிதாசனின் புரட்சி வரிகளில் கொலைக்கும் அஞ்சாத வீரம் நினைவூட்டப்பட்டது.

தமிழகத்து தமிழர்களைப் போலல்லாது, ஈழத்து தமிழர்களின் வாழ்வியல் தொடர்ச்சியான அடையாள இருப்பியலைத் தக்கவைப்பதற்கான போராட்டமாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் இறுதி முப்பது ஆண்டுகளும் சுயநிர்ணய உரிமையை நோக்கிய நில மீட்புப் போராக, ஆயுதப்போராட்டமாக சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழினமும் அணிதிரண்ட காலம். துப்பாக்கி குண்டுகளினால் படைப்பு வெளிகள் நிரம்பியிருந்த காலம் அது. மற வீரர்கள் போர்க்களத்தில் தமிழர் வீரத்தை பறையறிவித்த காலம். நிலத்தில் மட்டுமல்ல, கடலிலும் புலிக்கொடி பறந்த காலம். மீண்டும் வரலாறு மீட்டெடுக்கப்பட்டு, உலக காவலர்களை பதுங்குகுழிக்குள் பதுங்கச்செய்தது.

விடுதலைக்கான வெறியுடன் போராட்டம் தொடர்ந்த வேளையில், சிங்களப் பேரினவாதம் தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்த தமிழர்களின் படைப்பு வெளிக்கு விலங்குபோட்டது. ஆனால் வன்னி மண்ணிலிருந்து போர்ப்பதிவுகள் படைப்புவெளியில் பேரினவாதத்திற்கு சவாலிட்டன. சங்கத் தமிழர்களின் மறத்தை மீட்டுருவாக்கஞ் செய்தன படைப்பு வெளிகள். போராளிகளின் துப்பாக்கிகள் சங்கத்து புறநானூற்றை காண்பியமாக களங்களில் படைத்து, புறநானூற்றின் வரிவடிவங்களை கண்முன்னே காட்டிநின்றன. அந்த வீரம் மீண்டும் பதியப்படுகின்றது. எழுத்துக்களாக, நிகழ்கலைகளாக, படிமக்கலைகளாக, அசையும் படிமங்களாக ஈழத்தின் மூலை முடுக்கெங்கும் மறம் முகிழ்த்தது. போரியல் பரணிகளை தமிழ்த்தாய்க்கு சமர்ப்பித்தனர் கரும்புலிகள்.

“ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று

தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்

ஏறி நடக்கின்றான் இன்று

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு”

என்று ஆர்ப்பரித்து போர்ப்பறை கொட்டியது தமிழினம்.

விடுதலையும் போராட்டமும் தொடர்பான கருத்துருவாக்கங்களுக்காக மக்களை தேடிச்சென்றன தெருவெளி அரங்குகள். களமாட வேண்டிய காலத்தின் தேவையை இளைஞர்களின் காதுகளுக்குள் பறைகொட்டின. போராட்டம் பற்றிய அக்கறையின்றி உறங்கிக் கிடந்த இளைஞர்களை அவர்களது படுக்கையில் சென்று தட்டியெழுப்பின பாடல்கள். களத்தின் சமர்கள் காணொளிப் படைப்புக்களாக்கப்பட்டு, மக்களிடம் வந்துசேர்ந்தன. ஊர்கள் தோறும் போராளிகளின் பிரச்சாரப் பேச்சுக்களும் அவர்களின் சொற்களின் உறுதியும் மக்களின் மன ஆழங்களைத் தொட்டுச்சென்றன. பத்திரிகைகள், சிற்றேடுகள் கூட மறத்தின் வெளிகளாகவே வெளிவந்தன. கேளிக்கை சார்ந்த படைப்பு வெளிகள் முற்றிலும் முடக்கப்பட்டது. ஒழுக்கமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் உறுதியாக நின்றார்.

எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு படைப்புக்களில் முதன்மையானது என்றே கூறவேண்டும். சங்ககாலத்தின் ஒரு தொடர்ச்சியை அன்றாட வாழ்வியல் மொழியில் மீள்படைப்பாக்கம் செய்யப்பட்ட வரிகளே எழுச்சிப்பாடல்கள் எனக் கூறலாம். புரட்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரையும், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனும் தம் வரிகளால் இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள்.

”அட மானுடனே!

தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்

பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்

நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.

அன்னை மடியில் இருந்து கீழிறங்கி

அடுத்த அடியை நீ வைத்தது

தாயகத்தின் நெஞ்சில்தானே.

இறுதியில் புதைந்தோ

அல்லது எரிந்தோ எருவாவதும்

தாய்நிலத்தின் மடியில்தானே.

நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்

பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்

ஆதலால் மானுடனே!

தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”

பதின்ம வயதில் இயற்கையாகவே எதிர்ப்பாலிடம் தோன்றக்கூடிய காதலை அப்படியே மண்ணின் மேலான காதலாக திசைதிருப்பிவிடுகிறார் புதுவை. மண்ணும் மண்சார்ந்த உரிமையும் வலிய எழுத்துக்களால் வரிகளாகப் பொறிக்கப்பட்டன.

“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்

எல்லைகள் மீறி யார் வந்தவன்”..

தாய் நிலத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்திய கவிஞர், அவன் சார்ந்த மக்களையும் காக்க வேண்டும் என இடித்துரைக்கிறார். மறத்தை மறந்த மக்களை எள்ளி நகையாடி, அதன்வழி சிந்திக்க வைக்கிறார்.

“உடல்கீறி விதை போட்டால்

உரமின்றி மரமாகும்

கடல் மீது

வலை போட்டால்

கரையெங்கும் மீனாகும்.

இவளின் சேலையைப் பற்றி

இந்தா ஒருவன்

தெருவில் இழுக்கின்றான்

பார்த்துவிட்டுப்

படுத்துறங்குபவனே!

நீட்டிப்படு.

உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த

அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.

‘ரோஷ’ நரம்பை

யாருக்கு விற்று விட்டுப்

பேசாமற் கிடக்கின்றாய்?”

இவ்வாறு கேட்ட பின்னும் இயல்பாகவே மற இரத்தம் ஓடுகின்ற தமிழ் மகன் வீட்டினுள் இருக்க முடியுமா? இளைஞர்களின் உளவியலை தொடக்கூடிய வரிகள், அவர்களது அடுப்படிக்குள் புகுந்து போராட்டத்திற்கு இழுத்துவந்தன.

காலங்கள் கடந்து நிலைக்கக்கூடியவாறு தன் உணர்ச்சிப் பாடல்களால், தன் பெயரை ஈழத்து படைப்புவெளியில் பதித்தவர் காசி ஆனந்தன்.

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?

என்று தன் இறப்பு வரினும் எதிரியிடம் மறம் பேசுகிறார் கவிஞர்.

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

பாழ்பட நேர்ந்தாலும் – என்றன்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து

கவலை மிகுந்தாலும் – வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து

கீழ்நிலை யுற்றாலும் – மன்னர்

தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்

துடைக்க மறப்பேனா?

புலிகளின் மறவாழ்வினைக் கூற இதைவிட வேறொரு வரி வேண்டுமா?

மக்களின் படைப்புக்கள் போரின் புறவிடயங்களைக் கூறி போர்க்கால படைப்புக்களாக கருதப்படää போரினுள் இருந்து படைக்கப்பட்ட போராளிகளின் படைப்புக்கள் போரியலைக் கூறும் போரியல் இலக்கியங்களாகக் வெளிப்பட்டன. “எதிரிமட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் ” என்ற தேசியத் தலைவரின் கொள்கைவழியில், தமிழ் மக்களின் போரியல் பதிவுகளுக்கு முன்னோடியாக, புலிப்போராளி மலரவனின் “போர் உலா”  ஒரு போர்ப்பரணியாக 1993 இல் வெளிவந்தது. இதன் பின் 2001 ஆம் ஆண்டில்  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் “நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்” விடுதலைப்புலிகளின் களத்தின் செய்திகளை எழுத்தில் தாங்கிவந்த படைப்பாகியது.

“விழுதாகி வேருமாகி” என்ற போர்க்கள இலக்கியம் மாலதி படையணியின் போராளிகளினால் போரியல் பதிவாக வெளியிடப்பட்டது. தாய்த்தொன்ம முறையை பண்பாட்டினடியாகக் கொண்ட தமிழினத்தில்ää மீண்டும் பெண்களின் எழுச்சி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதெனலாம். வெளிச்சம், எரிமலை, களத்தில், சுதந்திரப் பறவைகள் போன்ற சிற்றிதழ்களின் பக்கங்களில் புலிகளின் மறத்தின் எழுத்துக்கள் மட்டுமல்லாது, அந்த மறத்தின் பின்னாலிருக்கும் புலிவீரர்களின் நுண்மையான உணர்ச்சிப் படிமங்களும் நிரம்பிக்கிடந்தன.

விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிதர்சனம் வெளியீட்டுப்பிரிவின் பங்களிப்பை விட்டுவிட்டு ஈழத்து படைப்புவெளியை நோக்குவதென்பது சாத்தியமற்றதாகும் என்ற அளவிற்கு, நிதர்சனத்தின் படைப்புக்கள் தமிழர்தம் மறத்தைப் பற்றி மட்டுமே பேசின. தேசத்தின் குரல்கள்ää ஒளிவீச்சு, உயிராயுதம் என பல காணொளித் தொடர்கள் ஈழத்தின் ஆலய முன்றல்களையும் விளையாட்டிடங்களையும் நூல்நிலைய முன்றல்களையும் தம் பிரச்சார வெளிகளாக்கிக் கொண்டன. புலிகளின் குரல் வானொலி தமிழ் ஈழத்தின் காற்றில் கலந்து வானிலும் மறத்தைப் பேசியது. சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஒவ்வொரு தனியனின் மனவெளியில் ஈழம் தொடர்பான வித்துக்களை விதைத்தது.

புலிகள் சார்ந்த படைப்பாக்கங்களுக்கு வெளியே பொதுமக்கள் சார் படைப்புலகமும் அதுசார்ந்த சூழலும்  ஆற்றுகை வெளிகளில் மறத்தைப் பதிவுசெய்தனர். 2002 ம் ஆண்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வெளி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனத்தை உலகறிய பறையறிவித்த படைப்பு வெளியாக நிலைமாற்றம் பெறää பொங்குதமிழாக போராட்ட வடிவத்தின் இன்னொரு முகத்தினை உலகிற்கு காட்டினர் மாணவர்கள்.

2009 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட, தமிழ் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியது. முள்ளிவாய்க்காலில் வைத்து, சிங்களப்பேரினவாதம் தமிழர்களின் வரலாற்றை தமிழர்களின் இரத்தத்தாலேயே எழுதிய பேரவலம் நிகழ்ந்தேறியது. அவர்களது இருப்பு கேள்விக்குள்ளாக, வலிகள் மட்டுமே படைப்புக்களாகின. அவர்களுக்கென ஒரு அடி மண் கூட எஞ்சியிருக்கவில்லை. தோளிலே துப்பாக்கி சுமந்தவர்கள், புனர்வாழ்வெனும் பெயரால் சிறையிலிடப்பட்டார்கள். வடக்கு கிழக்கு முழுவதும் திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கப்பட்டது. ஈழத்தின் ஒவ்வொரு மண்ணிலும் கந்தகத்தால் கறை படிய வைத்தான் எதிரி. கந்தகச் சப்பாத்துக்களை எதிர்ப்பவர்கள் சப்பாத்துக் கால்களுக்குள்ளேயே காணாமல் போனார்கள். படைப்பு வெளிகள் முற்றிலும் முடக்கப்பட்டன.

படைப்பாக்க வெளியில் குறியீட்டியலின் பயன்பாடு உணரப்பட்டது இந்தக்காலப்பகுதியிலே தான். வலிகளைப் பேசும்போதும் குறியீடாக பேசினர். படைப்போனும் நுகர்வோனுக்குமான படைப்பியல் இயங்குதளத்தில் அவை தமக்குரிய அர்த்தங்களை விளக்கி நின்றன. தொடர்ந்து விரிந்த இந்த எட்டு ஆண்டுகளும் வலிகள் தந்த வடுக்களை மட்டுமே பேசி நின்றன. போரின் முடிவிற்குப் பின்னரான இந்த நிலைமாறுகால பகுதியில், பெரும்பாலான படைப்புக்கள் போரையும் அதுசார்ந்த விடயங்களையும் மட்டுமே பேசி நின்றன. போரின் நுண்மையான தாக்கத்திற்கு உட்பட்ட ஒரு சமூகத்தின் படைப்புக்களின் கரு போராக இருப்பது ஆச்சரியமானதல்ல. ஆயினும், எதிர்காலத்தை நோக்கியதான நகர்வுகளின் படைப்புக்களாக அவை வெளிவரவில்லை. தமிழர்களுக்கான படைப்பு வெளி இன்று தளை நீக்கம் செய்யப்பட்டிருப்பினும், சிங்களத்தால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்போம் என்ற ஆழ்மனத்தின் பயம் இன்னமும் போய்விடவில்லை. அடுத்ததாக என்ன நிகழப்போகிறது என்ற தெளிவும் மக்களிடத்தில் இல்லை.

அழித்ததையும் அழிப்பையும் படைப்புக்களினூடாகக் கற்றுக்கொடுத்த எமது வாழ்வியல் இன்று அழ மட்டுமே சொல்கிறது. படைப்புக்களும் படைப்பு வெளிகளும் ஓலங்களாலும் வலிகளாலும் மட்டுமே நிறைந்திருக்கின்றன. ஓலத்தின் ஆழத்தில் எமது கனவுதேசம் புதையுண்டு கிடக்கின்றது. எமது மறத்தைப் பறைசாற்றி, உறங்கிக்கிடக்கின்ற வீரத்தை தட்டியெழுப்பப்போகும் படைப்பு வெளிகளை எப்போது படைக்கப்போகின்றோம்?

செல்வி

07-01-2017

 7,464 total views,  2 views today

(Visited 140 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply