முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும்- மறவன்

எப்போதும் எதையும் தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆண்டுகள் நிறைவிலும் இத்தகைய வரலாற்று அவலத்திலே தான் தமிழர்களின் விடுதலை அரசியலும் இருக்கின்றதென்பதை முள்ளிவாய்க்காலின் பின்னவல காலப்பகுதியின் முதற் பதினோராண்டுகள் வெறுப்புடன் சொல்லிச் செல்கின்றது. தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு முழுநிறை கோட்பாட்டினை எண்ணியுணர்ந்து தெளிவடைந்து முன்செல்லக் கூடிய அத்தனை வரலாற்றுப் படிப்பினைகளையும் முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்திருக்கிறது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது, போராட்ட வடிவத்தின் அடிப்படையில் அறப் போராட்டம் மற்றும் மறப்போராட்டம் என இரண்டாகவும் உலக அரசியல் நோக்கின் அடிப்படையில் 1991 இற்கு முற்பட்ட இருதுருவ உலக ஒழுங்குக் காலம், 1991 இற்குப் பிற்பட்ட ஒருதுருவ உலக ஒழுங்குக் காலம் மற்றும் 2001-செப்டெம்பர்-11 இன் பின்பான காலம் என மூன்றாகவும் வகைப்படுத்தி நோக்கப்படுகையில் இப்போது முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும் என்றளவில் தமிழீழ அரசியல் நோக்கப்படுமளவிற்கு ஒரு பார்வை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கோட்பாட்டளவில் இந்தப் பார்வை மாற்றமென்பது தனது இறைமையை காலனியரிடமிழந்த தமிழீழ தேசம் தனது இறைமையை மீட்டெடுக்க காலனியர்களால் அரசதிகாரம் ஒப்படைத்துச் செல்லப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்கும் அரசிற்கெதிராகப் போராடி வன்வளைக்கப்பட்ட தாயக மண்ணை மீட்டெடுத்துத் தேச விடுதலையடைந்து இறைமையை மீட்டெடுக்கும் தறுவாய் வரை முன்னோக்கிச் சென்ற காலம் வரைக்குமான காலப்பகுதியை முள்ளிவாய்க்காலின் முன்பான காலம் என்றும் ஒடுக்கும் பேரினவாதமும் உலக வல்லாண்மையாளர்களும் கூட்டிணைந்து தமிழினக்கொலை செய்து தமிழீழ தேச விடுதலையைத் தடுத்ததன் பின்பான காலப்பகுதியை முள்ளிவாய்க்காலின் பின்பான காலம் என்றும் கூறலாம். இந்த வகையில் இப்பத்தியும் முள்ளிவாய்க்காலின் முன்பும், பின்பும் என்ற தமிழீழ அரசியலின் கோட்பாட்டுப் பிரிகோட்டினை அச்சாகக்கொண்டு தமிழீழ அரசியலை ஆராய்கிறது.

முள்ளிவாய்க்காலின் முன்……………

சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஒரு துரும்பைக் கூட அதனையும் பெயரளவிற்கேனும் தீர்வாகத் தராது என்பதுடன், பதிலாக அது தமிழர்களுக்கெதிரான தனது வக்கிர வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சி எய்தியே வரும் என்பதோடு சிறிலங்காவின் அரச இயந்திரம் அது கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பைத் தானியங்கியாகச் செயற்படுத்த வல்லது என்ற உண்மையைத் தமிழரின் அறப்போராட்டத் தலைமை சிங்கள தேசத்தின் தொடர்ச்சியான காட்டேறித்தனத்தால் நன்குணர்ந்தமையாலும் சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரச இயந்திரத்தை ஆழக் கீறி, அடித்துத் தகர்த்துச் சிதைத்தெறியாமல், தமிழர்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்துவதென்பது கல்லிலே நாருரிப்பதற்கு ஒப்பானது என்பதைப் புரிந்துகொண்டமையாலும் தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் அரசியற் தலைவர்கள் முன்வைத்தார்கள். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது செயலாக்க உறுதிமொழியாக வரிந்தவாறு தமிழீழ விடுதலைப் போராட்டம் மறவழியில் தொடங்கியது. இந்திய உளவமைப்பின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு ஈற்றில் தாம் வரித்த கொள்கைகளுக்கு நேரெதிராகச் செயற்பட்ட போராட்ட அமைப்புகள் களத்தை விட்டகற்றப்பட விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழீழ விடுதலை நோக்கி எத்தகைய விட்டுக்கொடுப்புமின்றி உறுதியாகப் போராடியது.

தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் தேச விடுதலையடைவதை ஒருபோதும் ஏற்காத தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவானது, சிறிலங்காவின் மீதான தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்குத் தமிழர்களின் தேசிய இனச்சிக்கலைப் பயன்படுத்துவதற்கு 1987 யூலை மாதம் 29 ஆம் நாள் இந்திய- சிறிலங்கா ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் ஏற்படுத்திக் கொண்டது. ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்படாமல். இந்திய மேலாதிக்க விரிவாக்கக் கனவுடன் ராஜீவ்காந்தியும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகள் பெருந்தடையாக இருக்கிறார்கள் என்பதனால் விடுதலைப் புலிகளை அழித்தொழித்துத் தமிழீழ தேசத்தைப் பலவீனப்படுத்தும் நோக்குடன் இந்திய வன்வளைப்புப் படை தமிழீழ மண்ணில் வகை தொகையின்றி மக்களைக் கொன்றொழித்தும் அகவை வேறுபாடின்றிப் பெண்களை வன்புணர்ந்தும் நரபலி வேட்டையாடியது. கரந்தடிப் போர்முறையை (Guerilla Warfare) ஒரு மக்கள் போராட்ட வடிவமாக்கி இந்திய வன்வளைப்புப்படைகளை எதிர்த்துக் களமாடி தமிழீழ தேசிய ஆன்மாவினைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்திய வன்வளைப்பு நரபலிப்படைகளைத் தமிழீழ மண்ணிலிருந்து விரட்டியடித்த பின்பு தொடர்ச்சியாக சிறீலங்காவின் அரச பயங்கரவாதப் படைக்கு எதிராக மக்கள்மயப்பட்ட மறவழிப்போரை முன்னெடுத்தது. கரந்தடி அமைப்பாக தோன்றிய தமிழரின் மறப்போராட்ட மக்கள் இயக்கம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரனால் படைத்துறை இரீதியில் ஒரு மரபுவழிப் படையாகவும் நிருவாக இரீதியில் தமிழீழ நிழலரசாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது.

1990 களின் முற்பகுதியில் மேல்நிலை வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்து அமெரிக்கத் தலைமையில் ஒருதுருவ உலக ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதுடன் புவிசார் போர்த்தந்திர மோதல்கள் முடிவுக்கு வந்து, அமெரிக்க மேலாண்மை நிலைநாட்டப்படுவது நடந்தேறத் தொடங்கியமையுடன் உலகமயமாக்கல் கொள்கைகள் நீக்கமற எங்கும் நுழைந்ததன் விளைவாக முதலீட்டு விரிவாக்கம் மற்றும் சந்தை விரிவாக்கம் என்ற கோணத்தில் உலக ஒழுங்கு நிலைநாட்டப்படலாயிற்று. இதனால் முதலீட்டுக்குத் தேவையான பாதுகாப்பு, தொழிலுக்குத் தேவைப்படுகின்ற அமைதி, அவற்றை உறுதி செய்யும் அரசமைப்பு மற்றும் சட்ட திட்டங்கள் என்றவாறு வெளியுறவுகள் மாறி வந்த சூழலில், தெற்காசியப் பிராந்தியத்தில் மேலாண்மை செலுத்தி வந்த இந்திய மற்றும் உலக வல்லாண்மையாளார்களின் சிறிலங்கா குறித்தான அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் கட்டாயமாகின.  தலையீடுகள், மோதல்கள், தூண்டிவிடுதல் என்பதற்குப் பதிலாக மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டல், பொருண்மிய ஒத்துழைப்பு, உதவி என்று அணுகுமுறையை மாற்றித் தமது சந்தை விரிவாக்கம் மற்றும் சிறிலங்காவில் அவர்களின் முதலீட்டிற்கான பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்துவதாக உலகப்போக்கு இருந்தது.

ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ நிழலரசை நடாத்தியவாறே சிங்கள பேரினவாதத்தின் வன்வளைப்பிற்குள் மீட்கப்படாமல் மீதமிருக்கும் தமிழர் தாயக நிலங்களை மக்கள் மயப்பட்ட மறவழிப்போராட்டங்கள் மூலம் மீட்டெடுத்தவாறு சிங்கள அரச இயந்திரத்தினை மேலும் பலவீனப்படுத்துவதற்காக சிங்கள தேசத்தின் பொருண்மிய இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகளைச் சிங்கள பேரினவாதத்திற்குப் பேரழிவு ஏற்படும் வண்ணம் தாக்கியழித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக வரலாற்றைப் புரட்டிப் போட்ட நிகழ்வாக 2001 ஆம் ஆண்டு யூலை 24 ஆம்நாள் கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தைத் தகர்த்த விடுதலைப் புலிகள் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேற்பட்ட பொருண்மிய அழிவை சிங்களத்திற்கு ஏற்படுத்தி சிங்களக் கொட்டத்தை முடக்கிப் போட்டனர். இக்காலப் பகுதியில், இந்திய- சிறிலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வணிகம் பெருகி வந்தமையாலும், இந்திய தரகு முதலாளிகளின் முதலீடுகள் சிறிலங்காவில் இக்காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டு இலாபத்திற்காக காத்திருந்தமையாலும், இந்த பாரிய பொருண்மிய முடக்கத்திலிருந்து சிறிலங்காவைப் பாதுகாத்து, தனது தரகு முதலாளிகளின் வர்க்க நலன்களை பாதிப்பிற்குட்படாத வண்ணம் பேண வேண்டிய தேவை கருதி, இந்தியா தன்னாலான அத்தனை உதவிகளையும் சிறிலங்காவிற்குச் செய்தது. தொடர்ச்சியாக, தனது தொழிலுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்யும் உடனடி நோக்கத்துடன், விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் அமைதிப் பேச்சில் ஈடுபடுத்த இந்தியாவின் துணையுடன் மேற்குலகு முன்வந்தது.

சந்தை வாய்ப்பை அதிகப்படுத்த போர் தவிர்க்க முடியாததாயின் தொழினுட்ப உதவி என்னும் பெயரில் போர்க்கருவிகளை வழங்கல், இராசதந்திர நகர்வு எனும் பெயரில் அமைதிவழிப் பேச்சுக்கள் என்ற போர்வையில் கழுத்தறுப்புகள் என்ற மேற்குலகின் எல்லா வித சூழ்ச்சிக்குமான களமாக தமிழீழதேசத்தை மேற்குலகு மாற்றியவாறு அமைதிப் பேச்சு என்ற போர்வையில் எமது விடுதலைப்போராட்டத்தை நசுக்கிவிட மேற்குலகும் இந்தியாவும் கூட்டுச் சூழ்ச்சியில் ஈடுபட்டன. அப்படியே, 2002 நவம்பரில் பாங்கொக்கில் பேச்சுவார்த்தை தொடங்க, அதைத் தொடர்ந்து ஒஸ்லோவில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் 7 கோடி அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் இறக்கி, தமிழரின் விடுதலைக் கனவை மழுங்கடிக்க உலகம் முனைந்தது.

அமைதிப்பேச்சுவார்த்தையில் கொடுத்த எந்த அழுத்தத்திற்கும் அடங்கிப் போகாத வல்ல தலைமையின் கீழ் அணிவகுத்து நின்ற தமிழீழ மக்கள் மீது இனக்கொலையை நிகழ்த்தியேனும் தமிழீழ தேசவிடுதலையை அழித்தொழிக்க முடிவு செய்த உலக மேலாண்மையாளர்களும் இந்தியாவும் சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, உளவு பார்த்துக் கொடுத்து, போர்க்கருவிகள் கொடுத்து, தமிழர்கள் தரப்பில் பிளவுகளை தமது உளவு அமைப்புகளின் மூலம் ஏற்படுத்தி,  தொழினுட்ப உதவிகள் செய்து போரை நடத்துவதற்கு திட்டம் போட்டுக் கொடுத்து, தமிழீழத்திற்கான பொருள் வரத்தைத் தடுத்தும், விடுதலைப் புலிகளின் கடல் நடமாட்டங்களையும் விநியோகங்களையும் முடக்கியும் இன்னும் எல்லாவிதமான உதவிகளையும் சிங்கள அரசிற்கு செய்து அதற்கு உறுதுணையாக நின்று ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை முன்னின்று நடத்தின.

இறுதிக்கட்டத்தில் தமிழர்களின் மீதான இனவழிப்புப் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது, விரைவாகப் புலிகளை ஒழிப்பது, போருக்குப் பிந்தைய கட்டுமானப் பணிகளில் இந்திய தரகு முதலாளிகளுக்குக் கிடைக்கும் பங்கு போன்றவை தொடர்பாகப் பேசுவதற்கு முகர்ஜி, சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றோர் சிறிலங்கா விரைந்தபோதெல்லாம், தமது போராட்டங்களுக்கும் அழுத்தங்களுக்கும் அஞ்சி இந்திய அரசு சிறிலங்காவுடன் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவதற்குச் செல்கின்றது என்று கூறி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாள்களாக்கினர் தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருந்தோரும் அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாத வெளியிலிருந்த அக்கால ஈழ ஆதரவுத் தலைவர்களும்.

இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, ஈழத் தமிழ்த் தேசியத்தின் தன்னாட்சி உரிமை என்கின்ற கோணத்தில் ஈழச் சிக்கலைத் தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்லாமல், “அப்பாவிகள் கொல்லப்படுகின்றார்கள், தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்படுகின்றார்கள், மனிதாபிமானம், கருணை” போன்ற அரசியல் நீக்கம் செய்த சொல்லாடல்கள் மூலம் தமது அரசியல் பரப்புரைகளைச் செய்து ஒரு கழிவிரக்க அரசியல் என்ற இந்திய அரசால் விதிக்கப்பட்ட கோட்டைத் தாண்டாமல் நின்று கொண்டார்கள் தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான அக்கால ஈழ ஆதரவுத் தலைவர்கள்.

விடுதலையை வென்றெடுக்கும் இறுதிக் கணம் வரை சென்று விட்டதாக மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திருந்த எமது மக்கள், தமது விடுதலையை வென்றெடுக்கும் கடைசிப் போரை எதிர்கொண்டு தமிழீழம் அமைக்கப் போகும் ஒரு வித வீரப் பெருமிதத்துடன் தம்மை அணியணியாக்கி நில மீட்புப்போரிற்காக கடும் பயிற்சி பெற்றுக் காத்திருந்து எதிர்கொண்ட நான்காம் கட்ட ஈழப்போரானது தம்மை அழித்தொழிக்கும் இனப்படுகொலையின் உச்சமாகப் போய் ஈற்றில் எல்லாமுமாகி ஆத்மார்த்தமாகத் தமிழர் நெஞ்சில் நிறைந்திருந்த தலைமையும் இல்லாமல், நாதியற்று நட்டாற்றில் விடப்பட்டு அவல வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் இன்னொரு வடிவிலான ஒடுக்கலிற்கு உள்ளாக்கப்படுவதான அவலச் சூழலிற்குள் தள்ளிவிடப்படப்போகின்றோமென்று சிறிதும் நினைத்திராத எம்மக்கள், தேற்றுவாரின்றித் தவித்துவிடப்பட்டு, முள்ளிவாய்க்காலின் பின்பான வலி நிறைந்த அடுத்த படலத்தில் வாழத்தலைப்பட்டார்கள்.

ஒப்பற்ற தியாகங்களால் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரானது, தனது இயங்கு ஆற்றலால் வீச்சுப்பெற்று தமிழீழம் கோரிப் பிரகடனம் செய்யும் இறுதித்தறுவாயில் பயணித்த போதும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சூழ்ச்சியால் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்கள் நட்டாற்றில் ஏதிலிகளாக விடப்பட்டுள்ளார்கள். சிங்கள பௌத்த பேரினவெறி அரசின் கொட்டத்தை அடக்கி அதனை தமிழரின் மறத்தின் முன்பு மண்டியிடச் செய்து தன்னாட்சியடிப்படையில் தனித்தமிழீழம் அமைக்க ஈழத்தமிழரால் முடியும் என்று பலமுறை களமுனையில் நிரூபித்துக் காட்டியும், ஈழத்தமிழரின் விடுதலைப் போர் இத்தகைய அவலநிலைக்கு வந்தமைக்கு, பன்னாட்டு வல்லாண்மையாளர்களும் அவர்களை தனது பிராந்தியத்தில் வைத்து தனது மேலாண்மைக்கு பங்கம் வராதவாறு கையாளும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவும் தான் காரணம் என்பது இனியும் விளக்கித்தான் விளங்கவைக்க வேண்டும் என்பதில்லை.

தமிழீழத் தனியரசு என்ற கொள்கையில் சற்றேனும் பின்வாங்காமல், எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல், வரிகளில் வரித்து விட முடியாத ஈகங்களைச் செய்து வீரத்துடன் போராடி உலகையே வியக்க வைத்த தமிழர்களின் திகில் நிறைந்த மறவழிப்போர் 2009-மே-18 ஆம் நாளுடன் பேசாநிலைக்கு வந்த துன்பம் தமிழ்த் தேசிய ஆன்மாவைக் குரூரமாகக் காயப்படுத்தி விட, தமிழினம் நட்டாற்றில் அரசியல் ஏதிலிகளாக தவிக்கும் நிலை ஈழத்தமிழரின் வாழ்வியலாகிப் போய்விட்டது. ஈற்றில் வரிகளில் வடிக்கமுடியாத ஈகங்களாலும் வீரமிகு போராற்றலாலும் உலகத் தமிழர்களின் நெஞ்சுகளையும் ஏனையோரின் புருவங்களையும் நிமிரச் செய்த ஈழத்தமிழரின் மறவழிப்போர், ஐம்பதாயிரம் போராளிகளையும் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் இழந்து போராட்டம் அரசியல் இரீதியில் தொடங்கிய இடத்திற்கே திரும்பிப் பின்னடைவானது.

வரலாற்றொப்பு நோக்கில் தமிழீழ மக்கள் தமது ஆற்றல் வளங்களிலும் மிக மிகக் கூடுதலாக உயிர்களையும் உடைமைகளையும் இழந்து ஈகங்கள் செய்து விட்டார்கள். அந்த மண்ணிலிருந்து தக்க தலைமை விடுதலைக்கு வழிகாட்ட, தமிழர் தேசம் உடலைக் கசக்கிய வியர்வையாலும் குருதி சிந்திய ஈகங்களாலும் வன்கவரப்பட்ட தனது நிலங்களை மீட்டவாறு நிகரமைத் தமிழரசு அமைத்து காலனிக்கொள்ளையர்களிடம் இழந்த தனது இறைமையை மீட்டெடுக்கத் துடியாய்த் துடித்த போது, மகாவம்சப் புனைவுப் புரட்டுகளைத் தனது கருத்தியலாகக் கொண்ட கொடுஞ் சிங்களப் பேரினவாதம் தேசிய இனங்களின் சிறைக்கூடமான தமிழரின வரலாற்றுப் பகை இந்தியாவின் நேரடிப் பங்களிப்போடும் நாயுண்ட புலால் போல உலகை மாற்றிக் கொண்டிருக்கும் உலகின் பெரும்பாலான அடக்குமுறை அரசுகளின் ஒத்துழைப்போடும் தமிழினப் படுகொலையை காட்டேறித்தனமாக நிகழ்த்தி முடித்தது.

முள்ளிவாய்க்காலின் பின்……………………………

உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட முறையானது, உலகிலுள்ள தேசிய இன விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு பாரிய சோர்வைத் தந்திருக்கிறது. பல தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மறவழிப் போராட்டத்தின் மூலம் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதில் நம்பிக்கையிழந்து இடைக்காலத் தீர்வு, உள்ளகப் பொறிமுறையில் அதிகாரப் பரவலாக்கம், பகிரப்பட்ட இறைமை போன்ற காயடிப்புச் சூழ்ச்சிகளுக்குள் மாட்டிக்கொண்டது. இனி மறவழிப் போராட்டத்தால் எந்தப் பயனும் கிட்டாது; மாறாக மீளா அழிவுதான் கிட்டும் என்ற பரப்புரையை இந்தியாவின் உளவு அமைப்பு பல தளங்களில் ஊடகங்கள் அடங்கலான தனது கருத்தியல் அடியாட்கள் மூலம் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களின் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவிச் சென்று பரப்பியது. தமிழீழ விடுதலையின் புரட்சிகர அமைப்பின் தோல்வி என்பது எக்காலத்திலும் மறவழிப் போராட்டத்தின் தோல்வியாகாது என்பதை விடுதலைக்காகப் போரிடும் ஒடுக்குண்ட தேசிய இனங்களுக்குச் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தவிப்பு நிலையிலும் தமிழீழ மக்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில், தேசிய இனங்கள் விடுதலை பெற்ற தேசங்களை தெற்காசியாவில் நிறுவத் தொடங்குவதுடன் உடைந்து சிதறப் போகும் வரலாற்று ஓட்டத்தில் இருந்து தப்பிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே தமிழீழ விடுதலை அமைப்பினை போரில் வென்று தமிழர்களை அழித்தமையை இந்தியா கருதியது.

நாகலாந்தின் விடுதலை அமைப்புத் தான் மறவழிப்போரைக் கைவிட்டு பகிரப்பட்ட இறைமை போன்ற கதையளப்புச் சூழ்ச்சிக்குள் போவதற்கான காரணங்களை அடுக்குகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற முப்படைகளையும் கொண்ட மிக வலுவான விடுதலை இயக்கம் போரில் அழிக்கப்பட்டமையைத் தாம் கருத்தில் கொண்டும் தான் அந்த முடிவுக்குத் தாம் வருவதாகச் சொல்லி இருக்கிறது. எனவே, தமிழீழ மக்களின் விடுதலை அமைப்பு அழிக்கப்பட்டமைக்கான காரணத்தையும் அதில் முதன்மைப் பங்காற்றிய இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைகூடம் பற்றிய தகுந்த தெளிவில் உலகளாவிய போராடும் மக்களுக்கும் குறிப்பாகத் தெற்காசியாவில் ஒடுக்குண்டிருக்கும் விடுதலை மறுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் இன்னும் குறிப்பாக இந்தியாவிற்குள் சிறைப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கும் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தமிழீழ விடுதலைக்காக மிகப்பெரிய ஈகங்களைச் செய்த தமிழீழ மக்களுக்கும் அதை முன்னெடுத்த புரட்சிகர அமைப்பின் எஞ்சியுள்ள ஆளுமைகளுக்கும் உண்டு.

செயலுறுத்தும் வலுவற்ற ஒரு கண்துடைப்புக் கட்டமைப்பாகிய ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகம் பரிந்துரைத்த பன்னாட்டு விசாரணை 2009 மே மாதம் 30 ஆம் நாள் ஐ.நா தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டதுடன், உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசியல் வெளியை சிறிலங்கா அரசிற்கு வழங்க வேண்டும் என்று கூறி, இனப்படுகொலையாளியான சிறிலங்கா அரசை அதன் தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்து முடிப்பதற்குக் கால இடைவெளியை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

நிலைமை அப்படியாயிருக்க, ஐ.நாவின் நடைமுறைகளின் படி அதனுடைய செயல்வீச்சு மட்டத்தில் பன்னாட்டு விசாரணை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், குற்றவாளி தன்னைத்தானே விசாரித்துத் தண்டனை அளிக்கும் ஒரு கேலிக்கூத்தான பொறிமுறையைக் கூறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையை அடிப்படையாகவும் சார்பாகவும் கொண்டு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நாவின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை இனப்படுகொலைப் பங்காளியில் ஒன்றான அமெரிக்கா முன்வைத்தது.

எமது தாயக மண்ணில் வாழும் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டவாறு இருக்க, ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தின் ஆண்டு நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் விடியலிற்கான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம் என்றாற் போல போலி நிழலுரு எமது மக்களின் மனங்களில் கட்டமைக்கப்பட, அவர்களும் விடியலை நோக்கி வெளியாருக்குக் காத்திருக்கப் பழக்கப்பட்டார்கள். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு மார்ச்சில் மேலும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தில் முன்வைத்து, கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை (குற்றவாளி தானே தன்னை விசாரித்து வழங்கிய பரிந்துரைகள்) சிறிலங்கா நிறைவேற்றவில்லை என்று கூறி அறிக்கையளவில் கடிந்து விட்டு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு உப்புச்சப்பற்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதுவரையில் இனப்படுகொலை என்ற சொல்லை முற்றாக மறுதலித்து இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றளவில் பொருட்செறிவைக் குன்றித்துத் தீர்மானங்களை முன்வைத்து வந்த அமெரிக்கா, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானத்தில், சிறிலங்காவில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிருத்தவர்கள் எனும் மதச் சிறுபான்மையினர் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாகப் பொத்தம் பொதுவாகச் சொல்லி சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றம் செய்து நீர்த்துப்போகச் செய்தது.

தமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கலை, தேசிய இனமொன்றின் மீதான இன ஒடுக்கல்களாகவும், அதற்கெதிரான போராட்டங்களை தன்னாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக மாந்த இனச் சிக்கல்களாகவும், ஏதிலிகளின் சிக்கல்களாகவும் எல்லோரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் குறுக்குகின்ற அரசியல் வரட்சியில் ஈழத்தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் தத்தளித்தவாறு அடிப்படையற்ற காத்திருப்புக்களுடன் காலம் போக்கியது.

போர்க்காலங்களில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் வேதியல் ஆயுதங்கள் மூலமான சிறிலங்காவின் முப்படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலமும், கைதுகள், கடத்தல்கள், காணமலாக்கப்படுதல், பாலியல் வன்கொடுமைகள், பொருண்மியத்தடைகள், கல்விக் கூடங்கள் மற்றும் வழிபாட்டிடங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் போன்ற நேரடி வன்செயல்கள் மூலம் தமிழினவழிப்பை ஓரளவிற்கு வெளிப்படையாகத் தங்குதடையின்றி முன்னெடுத்த சிங்கள பௌத்த அரச பயங்கரவாதமானது, தமிழர்களின் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்யும் இக்காலகட்டத்தில், நுணுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கட்டங்கட்டமான இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தெரியாத வண்ணம் ஆனால் அகலப்படுத்திச் அனைத்துத் தளங்களிலும் வியாபித்து முனைப்புறுத்தி வருகின்றது.

ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்திலுள்ள அக முரண்பாடுகளை கூர்மையடையச் செய்வதுடன் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் தம்மாலான அத்தனை சூழ்ச்சிகளையும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவும் உலக வல்லாண்மையாளர்களின் உளவு அமைப்புகளும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவு அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

எப்படியாவது தமிழர்தேசத்தைச் சிதைத்தழித்துவிட வேண்டுமென்று கங்கணங்கட்டிச் செயற்படுவதன் மூலம் உலகமயமாக்கலின் சந்தைக் கோட்பாட்டினுள் தமிழ்த் தேசிய இனத்தைக் கரைத்துவிட்டு அதன் தமிழர் தேசிய இன அரசியலை இல்லாதொழிக்க எல்லாத் தளங்களிலும் எல்லாவழிகளிலும் மேற்குலக இந்திய கூட்டுச் சூழ்ச்சிகள் முனைப்புடன்  செயலாற்றுகின்றன.

தமிழர்களின் நிலங்கள் பல்தேசிய நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுவதன் மூலமும் தமிழர்களின் தாயகம் வெளியாரின் மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டிருப்பதன் மூலமும் சிறிலங்கா அரச ஒத்துழைப்புடனான பொருண்மியத் திட்டங்கள் மூலமாகவும் தமிழர்களின் பொருண்மியப் பண்பாடு சிதைத்தழிக்கப்பட்டு தமிழர் தாயகத்தின் பொருண்மியம் தமிழர் கைகளிலிருந்து முற்றாக அகற்றப்பட்டவாறு ஈழத் தமிழர்களின் தேசிய இன வேர்கள் பிடுங்கியெறியப்பட்ட வண்ணம் உள்ளது. பல்தேசிய நிறுவனங்களினது பொருட்களைக் கூவி விற்கும் தரகு வணிகமாக பெரும்பாலும் தமிழரின் வணிகம் மாறிவிட்டது. அத்துடன் தமிழர்களின் நுகர்வானது கேள்வியற்று மாற்றாரின் நுகர்வுப்பண்பாட்டை உள்வாங்குவதாக உள்ளது.

இன்று தமிழீழ மண்ணில் 90,000 பேர் கைம்பெண்களாயும், 16,326 பேர் உடல் அவயங்களை இழந்தோராயும், 11,500 இற்கும் மேற்பட்ட போராளிகள் சிறிலங்காவின் தடுப்பு முகாமிலிருந்து வெளியாகி இன்று தொடர் விசாரணைகளுக்குள்ளாகிய வண்ணம் எந்தவொரு வாழ்நிலை ஏதுக்களற்றுச் சொல்லொணாத் துன்பத்தினுள்ளும், 80 பேர் வரையிலானோர் அரசியல் கைதிகளாகவும் 2000 வரையிலான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களிலும் என தமிழின மீட்புப்போரில் பங்காளிகளாகி நின்ற எமது மக்களும் போராளிகளும் சகலதையும் இழந்து மீண்டெழ முடியாத அவலநிலைக்குள் சிக்கித் தவிக்கும் இந்த நிகழ்காலச் சூழலில், உரிய பொருண்மிய மற்றும் சமூகக் கட்டமைப்புகளை கட்டுறுதியுடன் கட்டியெழுப்பி அடுத்த கட்டத்திற்கு எமது இனம் எமது மண்ணில் இயங்காற்றலைப் பெற முன்னெடுத்திருக்க வேண்டிய வேலைகள் இன்னும் உரியவாறு முன்னெடுக்கப்படாமலே நீளும் இந்த நிகழ்காலம் இன்னும் இப்படியே நீடிக்காமல் இருக்க மக்கள் திரள் தனது தோள்களின் மீது ஏற்றுச் சுமந்து முன்செல்ல வேண்டிய பணிகளை ஒருங்கமைத்து வழிகாட்ட வல்லதொரு போராட்டத் தலைமை வராதா என்ற ஏக்கமே நிகழ்காலத்தின் இந்தக் கணங்களில் தமிழ்த் தேசிய ஆன்மாவைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.

இன்று பாராளுமன்றக் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயற்திறன் பற்றிய மதிப்பீடுகளே தமிழ்த் தேசிய அரசியல் குறித்தான பேசு பொருளாக இழிநிலை அடைந்து இருப்பதுடன் இனப்படுகொலைப் பங்காளிகளான ஒடுக்குமுறை அரசுகளிடம் காத்திருந்து கையேந்தி அவர்களின் கழிவிரக்கத்தைப் பெறத் துடிக்கும் கேவலமான வேலைகளை தமிழர்களின் தேசியம் குறித்த பன்னாட்டு அரசியல் நகர்வுகள் எனப் பொருட்படுத்தும் திருகுதாளங்களே தமிழர்களின் அரசியலில் நடைபெற்று வருவதால், தமிழ்மக்கள் மீளாத்துன்பத்தில் மூழ்கிவிடப் போகும் இடுக்கண்ணே தமிழர்களின் இக்கால அரசியற் சூழமைவாயுள்ளது.

இருப்பினும், தமிழ்மக்கள் தமது நெஞ்சார்ந்த அரசியல் வாஞ்சைகளை வெளியே எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள். இதற்கு வாய்ப்புள்ள வழிவகைகளைத் தேடுகின்றார்கள். தங்கள் மத்தியில் செயற்திறனுடைய தியாக உணர்வுடன் கூடிய அரசியற் சக்தி இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகின்றது. அது உடனடியாக உருவாகும் என்றும் அவர்கள் நம்புமளவில் அவர்கள் கட்புலனாகும் படி எதுவும் நடந்தேறுவதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.

எனவே ஈழத்தமிழர்கள் தமது இயங்காற்றலை அனைத்துத் தளங்களிலும் மீட்டுருவாக்கம் செய்து மேலும் வலுப்படுத்தியேயாக வேண்டியதே சிறிதேனும் காலந்தாழ்த்திவிட முடியாத உடனடித் தேவையாக இருக்கின்றது. அதனைச் செய்தால் தான், புதிய தென்பும் ஆர்வமும் செயலிற் குதிக்கும் உணர்வும் நிறைந்த போராட்ட வடிவங்கள் தளிர்விடத் தொடங்கும். ஏனெனில், எதுவானாலும் நமது அடிமை விலங்கை நாமே தான் போராடி உடைத்தெறிய வேண்டும்.

தனது மண்ணிற்காக தன் உயிரை எந்த நேரத்திலும் அர்ப்பணிக்க அணியமாக இருப்பதனை தமிழ்த் தேசியத்தின் ஆன்மா மீதான உண்மையான பற்றுறுதி என வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்த தமிழின வரலாற்றின் மீதிப் பக்கங்களை தமிழர் தமக்கானதாக்க வேண்டும் என்று வரலாறே காத்துக்கிடக்கின்றது.

– மறவன்-