திரை சொல்லும் கதை – ‘சரபினா’ ஆபிரிக்காவின் விடுதலை வேட்கை -செல்வி-

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஒடுக்குமுறையரசின் வெறியாட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மண்ணின் மக்களிடத்தில் வீறிட்ட விடுதலையுணர்வையும் அது வெளிப்படுத்தி நிற்கும் பல அரசியல்களையும் அறிவிக்கும் அறிகருவியாக “சரவினா”என்ற திரைப்படம் வெளியாகியது. அதன் ஒவ்வொரு காட்சிப்படிமங்களும் ஒடுக்கப்பட்ட எமது வலிகளுடன் உயிரூட்டமாக உணர்வில் கலந்துள்ளதால், இத்திரைக்காவியம் சரிவரப் புரிந்துகொள்ளப்பட நிறவெறி ஒடுக்குமுறையின் வரலாற்றை சுருங்கப் பார்த்துவிட்டுத் திரைக்கதைக்குள் செல்வோம்.

தென்னாபிரிக்காவின் வரலாறு………………….

தற்கால மாந்தர்கள் ஒரு இலட்சம் ஆண்டுகளிற்கு முன்னரிருந்து வாழ்ந்து வருவதாக சான்றுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்ட மாந்தகுல வரலாற்றின் தொட்டில்களில் ஒன்றாகவிருப்பது இன்றைய தென்னாபிரிக்கா. வரலாற்றுக்காலந்தொட்டு கொய்சான், சோசா, பான்டு, சூலு போன்ற கறுப்பர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு நிற்கும் பல ஆபிரிக்கப் பழங்குடிகள் அவர்தம் மொழிகள் பேசியும், அல்லது காலப்போக்கில் கலந்துபோய் இன்னொன்றுக்குள் கரைந்து போன மொழிகளைப் பேசியும் அல்லது ஐரோப்பியர்களின் வன்வளைப்புகளின் பின்பாகத் தோன்றிய கூட்டுக்கலப்பு மொழியான  ஆப்ரிகான்ஸ் என்ற மொழியைப் பேசியும் தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மண்ணிற்குரிய பழங்குடி மக்கள் பேசும் மொழிகளையும், அவர்கள் இன்றுவரை கடைப்பிடித்து வரும் சடங்குகளையும், அவர்கள் விளையாடும் மரபான விளையாட்டுகளையும் உற்றுநோக்கி ஆய்வுசெய்தால், தமிழினப்பகையுணர்வு கொண்டோராலும் அவர்தம் சொற்கேட்டு ஆய்வுலகத்தில் உலவிவரும் மேலைநாட்டு ஆய்வாளர்களினாலும் ஏற்கமறுக்கப்படுவதும் இருட்டடிப்புச் செய்யப்படுவதுமான குமரிக்கண்ட கோட்பாடு மீளநினைவுக்கு வருவது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும்.

அதில் பான்டு என்ற மொழியைப் பேசுபவர்களாக அடையாளப்படுத்தப்படும் பழங்குடியானது மற்றைய பழங்குடிகளிலும் அறிவுமரபில் சிறந்ததாக, அதாவது இரும்பு பொருட்களை உருவாக்கல், வேளாண்மை செய்தல், கால்நடைகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தல் போன்றவற்றை பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ள பழங்குடியாக இருந்தனர். ஏனைய பழங்குடிகள் வேட்டையாடுதலும், கால்நடை வளர்ப்புமென தமது உணவுத்தேவையை நிறைவுசெய்து வாழ்ந்து வந்தனர். உருவத்தில் குறிப்பிடும்படியாக வேறுபாடுகளின்றி இருக்கும் இந்தப் பழங்குடிகளுக்குள் அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதும் ஒன்று இன்னொன்றுடன் கலப்பதுமாக இந்த மண்ணிற்குரிய பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அதில் பான்டு என்ற மொழிபேசும் பழங்குடியினர் ஏனைய பழங்குடிகளை கி.பி 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டுகளில் வென்று இன்றைய தென்னாபிரிக்காவின் தெற்குப்பகுதிவரை பரவி வாழலானார்கள்.

15 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரையில் பொதுவாக கிழக்குலகத்திற்கு, இன்னும் குறிப்பாக தமிழர் நாகரீகம் செழித்து வளர்ந்த பகுதிகளுக்குப் பயணம் செய்தல் என்பது இன்றைய பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் கனவுகளில் முதன்மையானதாக இருந்தது. கிறித்துக்கு முற்பட்ட மற்றும் கிறித்துக்குப் பிற்பட்ட சில நூற்றாண்டுகள் வரையிலும் மேற்குலகில் வணிகத்திலும் அறிவியலிலும் செழித்து வளர்ந்திருந்த யவனர்கள் (கிரேக்கர், உரோமர்) என்போரே தமிழர்களின் முசிறி, கொற்கை போன்ற துறைமுகங்களிற்கு அக்காலங்களிலேயே வந்து தமிழர்களுடன் வணிகமாற்றி தமிழர்களிடமிருந்து மிளகு, முத்து, மாணிக்கம், யானைத்தந்தம், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிச் சென்றனர். தமிழர்களின் சங்க இலக்கியத்தில் தமிழர்கள் யவனர்களுடன் ஆற்றிய வணிகக் குறிப்புகளும் யவனர்கள் தமிழர்நிலத்திற்கு வந்து சென்ற வரலாற்றுக் குறிப்புகளும் பொதிந்து கிடக்கின்றன. இப்படியாக, தமக்கான நாகரீக முன்னோடிகளான யவனர்கள் கிழக்குநோக்கிச் சென்று வணிகமாற்றியதைப் போல, தாமும் வளரவேண்டுமென்ற பேரவாவுடன் மேற்குலக நாடுகள் இருந்தன. அப்படியாக உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கிய பின்பு தமக்கான மூலப்பொருளுக்கான சந்தையும் தமது பண்டங்களை விற்பதற்கான சந்தையும் தேவையென உணர்ந்த மேற்குலகத்தினர், குறிப்பாக ஐரோப்பியர், கிழக்கு நோக்கி நாடுகாண் பயணங்களை மேற்கொண்டனர்.

அப்படியாகப் பயணப்பட்டு 1498 இல் தமிழர்களின் சேரநாட்டின் கள்ளிக்கோட்டை துறைமுகத்தில் வந்திறங்கிய வாஸ்கொடகாம என்ற போர்த்துக்கேயர் தாம் பயணப்பட்டு வரும் வழியில் தென்னாபிரிக்கா என்று இன்றழைக்கப்படும் நிலப்பரப்பைக் கண்ணுற்றே வந்தார். போர்த்துக்கேயர்களைத் தொடர்ந்து வணிகமாற்றும் வேட்கையுடன் நாடுகாண் கடற்பயணங்களைச் செய்த டச்சுக்காரர்களும் (ஒல்லாந்தர்கள்) தாம் ஐரோப்பாவிலிருந்து கிழக்குலகு நோக்கி நீண்ட கடற்பயணங்களை மேற்கொள்ளும் போது ஓய்வெடுத்துத் தங்கிச்செல்ல ஏற்ற இடமாக நம்பிக்கைமுனை என அழைக்கப்படும் இன்றைய தென்னாபிரிக்காவின் தென்முனையை அடையாளங்கண்டு கொண்டனர்.

இப்படியாக, ஐரோப்பியர்கள் தமிழர் நாகரீகம் மேலோங்கிச் செல்வச் செழிப்பாக விளங்கிய பகுதிகளை நோக்கிக் கடலில் புறப்பட்ட போது எதேச்சையாக அவர்கள் கண்ணில் இன்றைய தென்னாபிரிக்கா தென்பட்டமையால், அந்த மண்ணின் மக்களின் வாழ்வு இன்னல் நிறைந்த குருதிதோய்ந்த ஒன்றாகிவிட்டது. எனினும், 1652 ஆம் ஆண்டே முதன்முதலாக ஒரு இடைத்தங்கல் முகாமை தென்னாபிரிக்காவின் நம்பிக்கைமுனை என்ற இடத்தில் டச்சு கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி நிறுவியது. முதலில் இதனை ஒரு தற்காலிகமாகத் தங்கிச் செல்லும் ஏற்பாடாகவே டச்சு வர்த்தகக் கம்பனி மேற்கொண்டிருந்தாலும், இதைத் தொடர்ந்து தனது கம்பனியில் பணியாற்றிய டச்சுக்காரர், ஜேர்மனியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என ஐரோப்பிய தேசத்தவர்களை சிறிது சிறிதாக தென்னாபிரிக்காவின் தெற்குப் பகுதியில் குடியேற்றியது. பின்பு அங்கு வேளாண்மை நடவடிக்கைகளிலும் ஆலைப்பணிகளிலும் ஈடுபடவென டச்சுக்காரர்களின் காலனிகளில் வாழ்ந்த மக்கள் கூலிகளாக தென்னாபிரிக்காவில் குடியமர்த்தப்பட்டனர். இப்படியாக டச்சுக்காரர்கள், ஜேர்மனியர், பிரஞ்சியர் போன்ற ஐரோப்பாவைச் சேர்ந்த வெள்ளையர்கள் கலந்து உருவான கலப்பு வெள்ளையினத்தை போயர்கள் என அழைத்தனர். நாளடைவில் இந்தக் கலப்பின போயர்கள் பேசிய ஆப்ரிகான்ஸ் என்று சொல்லப்படுகின்ற மொழியும் டச்சு, ஜேர்மனிய மொழி, பிரஞ்சு மற்றும் வேறு மொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் போன்றவற்றாலான கலப்புமொழியாகவே உள்ளது.

இந்த போயர்கள் தொடர்ச்சியாக மண்ணிற்குரிய பழங்குடி மக்களின் வாழிடங்களை வன்வளைப்பதும் அவர்களை விரட்டுவதும் அவர்களுடன் மோதுவதுமென தென்னாபிரிக்காவின் வடக்கு, மேற்கு என பரவலானார்கள். பிரான்சில் ஏற்பட்ட மத மோதல்கள், ஏழ்மை போன்றவற்றால் பிரஞ்சுக்காரர்களும், ஜேர்மனியர்களும் டச்சுக்காரரின் உதவியுடன் தென்னாபிரிக்காவில் குடியேறத் தொடங்கியவுடன் போயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலானது. மேலும், போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வரவழைத்துத் தென்னாபிரிக்காவில் குடியேற்றுவதை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஊக்குவித்ததைத் தொடர்ந்து வெள்ளையின போயர்களின் எண்ணிக்கை தென்னாபிரிக்க மண்ணில் அதிகரித்தது. டச்சு வர்த்தகக் கம்பனி வீழ்ச்சியை உலகெங்கிலும் காணத்தொடங்கியதுடன் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கோலாச்சத் தொடங்கியது. இதன் விளைவாக, 1795 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியினர் தென்னாபிரிக்காவில் கால் பதித்தனர்.

இதனால், டச்சு வர்த்தகக் கம்பனியின் ஆளுகையில் இருந்த தென்னாபிரிக்காவின் பகுதிகள் பிரித்தானியரின் கட்டுப்பாட்டினுள் வந்தது. 1820 ஆம் ஆண்டளாவில் போயர்கள் தென்னாபிரிக்காவின் வடக்கு, கிழக்கு பகுதிகளைக் கைப்பற்ற அந்த மண்ணின் பழங்குடிகளான சோசோ, சூலு போன்றோரிடம் மோதியது. பின்னர், டச்சு ஆதிக்கத்திலிருந்த போயர்கள் வெள்ளையர்களாயிருப்பினும் பிரித்தானிய ஆட்சிக்குள் வாழுவதில் விருப்பின்மையை வெளிப்படுத்தி 1830 ஆம் ஆண்டு 12,000 போயர்கள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்காத பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தனர். 1867 இல் வைரங்களும் 1884 இல் தங்கமும் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியர்கள் பலர் தென்னாபிரிக்காவில் குடியேறத் தொடங்கினர். இந்த விலையுயர்ந்த வளங்களைப் பங்குபோட்டுக்கொள்ள போயர்கள், அந்த மண்ணின் மக்கள், பிரித்தானியர்கள் ஆகியோரிற்கிடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு நடைபெற்ற போர்களின் தொடர்ச்சியாக, இன்று தென்னாபிரிக்கா நாடாக இருக்கும் ஒருங்கிணைந்த நாடு 1910 இல் பிரித்தானியர்களால் எல்லையிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டது.

வெள்ளையர்களான போயர்களுக்கு வெள்ளையர்களான பிரித்தானிய ஆட்சியின் கீழ் வெறுப்பிரிந்தாலும் நிறவினவடிப்படையில் தாம் ஒருவர் என்ற மனப்போக்கு ஓரளவுக்கு இருந்துவந்ததுடன் அந்த ஒற்றுமை ஓரளவு வளர்ச்சியடையலானது. இப்படியாக நூற்றுக்கு நூறு கறுப்புநிறத்தவர்களான ஆபிரிக்கப் பழங்குடியினரின்  தாயகமான தென்னாபிரிக்காவில் ஐரோப்பியரின் வன்கவர்வுகளால் ஏற்பட்ட விளைவுகளைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் வாழும் மக்களினை நிறவடிப்படையில் முதன்மையாக மூன்றாக வகைப்படுத்தினர். அதாவது, வெள்ளையினம் (பிரித்தானியர்கள் + போயர்கள்), கறுப்பினம் (ஆபிரிக்கப் பழங்குடிகளான மண்ணின் மக்கள்) மற்றும் நிறத்தவர்கள் (டச்சுக் காலனிகளிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள், போயர்கள், பழங்குடி மக்கள் போன்றோரிடத்தில் ஏற்பட்ட கலப்பினால் உருவான கலப்பினத்தார்) என நிறவடிப்படையில் மக்களைப் பிரித்தே பிரித்தானியர்கள் ஆட்சி செய்தனர். தமிழர்கள் போன்ற தெற்காசியாவிலிருந்து சர்க்கரை ஆலைகளில் பணியாற்ற வந்து இனக்கலப்பிற்கு உள்ளாகதவர்கள் “ஏனையோர்” என்ற வகைப்பாட்டினுள் இனவடிப்படையில் அடையாளப்பட்டு நின்றாலும் அவர்களை நிறத்தவர்களாகக் கருதும் போக்கே தென்னாபிரிக்காவில் இருக்கிறது.

நிறவடிப்படையில் பிரிக்கப்பட்டபடியாக தென்னாபிரிக்காவில் வாழும் மக்கள்தொகையில் கறுப்பர்கள் அண்ணளவாக 80%, வெள்ளையர்கள் 9% மற்றும் நிறத்தவர்கள் 9% ஆக உள்ளனர். 1913 ஆம் ஆண்டு பூர்வகுடி நிலத்தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு கறுப்பினத்தவர்களான மண்ணின் மக்கள் தமது உடைமையாக நிலத்தை வைத்திருப்பது தடுக்கப்பட்டது. மக்கள்தொகையில் 80% ஆகவுள்ள மண்ணின் மக்களான கறுப்பினத்தவர்களிடம் 7% ஆன நிலம் மட்டுமே இருந்தது.  மண்ணின் மக்களான ஆபிரிக்கக் கறுப்பின மக்களை வஞ்சித்து அவர்களின் தாயக மண்ணை வன்கவர்ந்து தமது வளவேட்டைக்கான காடாக்கிய வெள்ளைநிறவெறி அரசிடமிருந்து மண்ணின் மக்களை விடுதலைசெய்து அந்த மக்கள் தமது வரலாற்றுத் தாயகத்தில் உரிமையுடன் வாழ வழிசெய்யும் புரட்சிகர முனைப்போடு 1912 ஆம் ஆண்டு அறப்போராட்ட அமைப்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி (ANC) உருவாக்கம் பெற்றது. வெள்ளையர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமைகொண்டவர்களாகி எதிர்கொண்ட தேர்தலில் 1948 ஆம் ஆண்டு வெள்ளைநிறைவெறிக் கட்சியான தேசியக் கட்சி (National Party) ஆட்சிக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நிறவெறிக்கொள்கை தீவிரம் பெற்றது. பின்பாக, 1961 இல் வெள்ளையினத்தவர்கள் மற்றும் பங்குகொண்ட பொதுவாக்கெடுப்பிலும் வெற்றியீட்டி தென்னாபிரிக்கா குடியரசானது.

பிரிட்டோரியா உடன்படிக்கைக்கு வெகு முன்பிலிருந்தே போயர்களாலும் ஆட்சியாளார்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிறவெறிக்கொள்கையானது பின்பு தென்னாபிரிக்காவானது 1961 ஆம் ஆண்டு குடியரசுத் தகுதியைப் பெற்றதுடன் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் இருந்தபோதும் நிறவெறியைத் தொடர்வதற்கான சட்ட வரையறையை தென்னாபிரிக்க அரசு இணைத்துக் கொண்டது. இந்த நிறவெறிக்கொள்கை அடிப்படையிலேயே மக்களிற்கு உரிமைகளும் வரம்பு வரையறைகளும் நிறுவப்பட்டன. மண்ணின் மக்களான ஆபிரிக்கப் பழங்குடிகள் தமது மொழியில் பேசுவதும் கற்பதும் குற்றமாக்கப்பட்டது. அந்த மக்கள் வெள்ளையர்களுக்கான கூலியடிமையாக உருவாவதற்கு ஏற்ற வகையிலேயே கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டு அந்த மக்களிடம் திணிக்கப்பட்டது. அந்த மண்ணின் மக்கள் தமது வரலாறுகளைப் பேசுவதும் தேடுவதும் மிக மோசமான குற்றமாக்கப்பட்டு, அப்படி வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். கோரத்தாண்டவமாடிய வெள்ளைநிறவெறிக்கெதிராக ஆபிரிக்க தேசிய காங்கிரசுக் கட்சியின் தலைமையில் மேற்கொண்ட அறப்போராட்டங்களை 1960 ஆம் ஆண்டு சுடுகலன்கள் மூலம் வன்முறைவெறி கொண்டு 69 பேரைக்கொன்று வெள்ளைநிறவெறி அரசு அடக்கியதைத் தொடர்ந்து (சார்ப்பேவிலே படுகொலை) போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தேடித் தேடி வேட்டையாடியது. அறப்போராட்டங்களை வெள்ளைநிறவெறி அரசு வன்முறைவெறிகொண்டு அடக்கியதைத் தொடந்து இனி அறப்போராட்டங்களால் எந்தப் பயனுமில்லையென உணர்ந்த ஆபிரிக்க காங்கிரசார் மறவழிப்போராட்டத்தை முன்னெடுக்கவென ஒரு மறைமுகக் குழுவை உருவாக்கினர். அத்துடன் கம்மியூனிச கொள்கையை உள்வாங்கிய மறப்போராட்ட இயக்கங்களும் ஆங்காங்கே ஆபிரிக்க மக்களிடத்தில் உருவாகின. இப்படியாக மறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நெல்சன் மண்டேலா 1962 ஆம் ஆண்டு நிறவெறி அரசால் கைதுசெய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார்.

இந்த நிறவெறி அரசின் மாந்தகுல எதிர்நடவடிக்கைகளை உலகெங்கிலும் அறியச்செய்ததன் மூலம் நிறவெறித் தென்னாபிரிக்க அரசினையும் அதனது பொருட்களையும் உலகெங்கிலும் தடைசெய்து, பன்னாட்டளவில் இடம்பெறும் எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முடியாமற் செய்து, தென்னாபிரிக்காவில் எவரையும் முதலிடாமல்செய்து, உலகிலிருந்து தென்னாபிரிக்க நிறவெறி அரசை ஒதுக்கி முடக்கியதில் வெற்றி கண்டமையால், தென்னாபிரிக்க ஆட்சியாளர்கள் கிலிகொண்டு வேறுவழியின்றி இறங்கி வந்து அமைதிவேடம் பூண்டு தமது வணிக நலன்கள் கேடாகாத வண்ணம் நிறவெறிக்கொள்கையை அகற்றுவதை நோக்கி நகர்ந்தார்கள். அப்போதைய நிறவெறித் தென்னாபிரிக்க அரசின் அதிபராகவிருந்த கிளார்க் என்ற நிறவெறியரசின் அரச தலைவரானவர், நெல்சன் மண்டேலாவை 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்து பின்பு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் மீது போடப்பட்ட தடையை நீக்கினார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா 1990 களில் கிளார்க்கின் தலைமையிலான தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான பேச்சுகளின் விளைவாக, நிறவெறிக்கொள்கை நீக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. விளைவாக, 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றியீட்ட அதன் தலைவரான நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத்தைச் சேர்ந்த அதிபரானார்.

திரைக்குள் செல்வோம்…………………………

விடுதலைக்கான போராட்டங்கள் பல தளங்களிலும் நிகழ்ந்த ஆபிரிக்க மண்ணில் கலைகளும் விடுதலைக்கான பதிவுகளாகவும் எதிர்ப்பின் குரல்களாகவுமே எழுந்திருக்கின்றன. ஆபிரிக்க மண்ணில் காலனியம் நிகழ்த்திய வன்வளைப்பானது அதன் அடையாளங்களை, வாழ்வியல் மரபுகளை, சமூக வடிவங்களை மடைமாற்றம் செய்துவிடுகின்றது. காலனியப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாந்தனும் காலனியத்தின் நிகழ்சாட்சியமாகி, அதன் வலிகளை பல தளங்களிலும் பேசுகின்றான். போங்கெனி ன்நெக்மா அவர்களால் எழுதப்பட்ட “சரபினா” என்னும் பனுவலானது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஆபிரிக்க மண்ணின் அரங்குகளில் ஆற்றுகையாக ஒலித்தது. மொழி என்பது வெறுமனே தொடர்பாடலுக்கல்ல: அது மரபுகளை கடத்தும் ஊடகம் என்று அறிந்திருந்த வல்லாண்மையாளர்களால் மொழி மீதான வன்வளைப்பே முதலில் நிகழும். தேசிய இனமொன்றின் மொழியினை அழித்தலென்பது வெறுமனே அதன்வரிவடிவங்களை அழிப்பதல்ல. அந்த இனத்தின் வரலாற்றினை அழிப்பதாகும். அரசகரும மொழியாக தனது தேசிய மொழியை ஏற்குமாறு 1976களில் சொவேரோவிலுள்ள பள்ளிக்கூடமொன்றிலிருந்து கிளர்ந்தெழுந்த அதிகாரத்திற்கு எதிரான குரலானது, மாணவர்களிடம் சென்றுசேர்ந்ததன் எதிரொலியாக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைக்குரலாகப் பரவலடைகின்றது. வன்வளைப்புகள் நிகழும் இடங்களில் சுடுகலன்களே அதிகமாகப் பேசும் என்பதற்கேற்ப, மாணவர்களின் குரல்கள் கந்தகக்கருவிகளால் ஒடுக்கப்படுகின்றன.

ஈழத்தின் விடுதலைப்போரின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாக தனிச்சிங்களச் சட்டத்தினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி மறுப்பும் இருக்கின்றமை இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது. சரபினா என்னும் மாணவி ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க மக்களின் குறியீடாக படைக்கப்பட்டிருக்கிறாள். குறிப்பிட்ட எழுத்துருவானது, காலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான மாணவர்களின் குரலைப்பதிவுசெய்த பள்ளிக்கூடத்தின் காலை ஒன்றுகூடலுடன் ஆரம்பமாகின்றது. தொடரும் பள்ளிச்செயற்பாடுகளினூடாக காலனிய வன்வளைப்பின் மாதிரிகள் சுட்டப்படுகின்றன. “Westminster Bridge” என்ற ஆங்கிலக் கவிதையினூடே வன்வளைப்பாளர்களின் நாடு பற்றிய அழகு கற்பிக்கப்படும் போது, சரபினா என்ற அந்த மாணவி எழுந்து எங்களுக்கு சிறிதும் தொடர்பேயில்லாத இங்கிலாந்தைப் பற்றி நாங்கள் ஏன் கற்கவேண்டும்? என கேள்வியெழுப்புகிறாள். அதிகாரத்துக்கு எதிரான கேள்விகள் மாணவர்களிடத்தில் எழத்தொடங்குகின்றன. வரலாறுகள் ஆளும்வர்க்கத்தால் புனையப்பட்டு பாட நூல்களில் கொண்டுவரப்படுபவையே. ஆயின், அந்தப் புனைகதைகளை விடுத்து, ஆபிரிக்கர்களின் விடுதலைக்காகப் போராடிய நெல்சண் மண்டேலாவின் கதைகள் வகுப்பறைகளில் ஒலிக்கத்தொடங்குகின்றன. அதனூடே நீளும் கலவரங்களுக்கிடையில் சரபினா கைதுசெய்யப்படுகின்றாள்.

இரு மாதங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுதலைபெறும்போது முன்னைவிடவும் வலுமிக்கவளாய் அதிகாரத்தின் மீது விடுதலைக்கான போரினை ஆற்றலுடன் முன்னெடுக்கும் மாணவியாக வெளிவருகிறாள். தொடரும் வகுப்பறைக் காட்சிகளில் எண்ணெய்வள நாடுகள் எவை என ஆசிரியர் கேட்கும்போது, அங்கோலா, நைஜீரியா, வெனிசுலா, அல்சீரியா என்று பெயர்களை மாணவர்கள் குறிப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு மாணவன் லிபியா என்று கூறுவான். அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒடுக்குமுறை நிறவெறியரசின் உளவுத்துறையைச் சேர்ந்த இராணுவக் காலவாளியின் காதில் அது கேட்டதனால், குறிப்பிட்ட மாணவனை துப்பாக்கி முனை குறிபார்க்கிறது. என்ன சொன்னீர்கள் என்ற அதிகாரத்தின் குரலினை, லிபியா, கடாபியின் நாடு என்ற மாணவர்களின் குரல் இடைவெட்டுகிறது. பொதுவுடைமையையா கற்பிக்கிறாய் என்று கேட்டு, ஆசிரியரைத் தாக்கி பள்ளிக்கூடத் திடலுக்கு இழுத்துச்செல்கின்றனர். சோவேரோவில் எவ்வாறு கடாபியைப் பற்றி கற்பிக்கலாம்.? அது சட்டத்திற்கு முரணானது என்று ஒடுக்குமுறையாளன் கேள்விகேட்டு ஆசிரியரைத் தாக்கும்போது, சரபினா ஆசிரியர் எங்களுக்கு எண்ணெய்வள நாடுகளைப் பற்றித்தான் படிப்பித்தார் என வாதிடுவாள். நிறவெறிக் காவற்றுறையின் சுடுகலன் தன் கந்தகப்புகையை கக்குவதற்கு முயல மாணவர்கள் அங்குமிங்கும் சிதறி ஒடுவார்கள். ஆனாலும், அந்த கந்தகக்குண்டுக்கு சில மாணவர்கள் இரையாகிவிடுவார்கள்.

அதிகாரத்திற்கு பலியாகிப்போன ஒடுக்கப்பட்டவர்களின் இறுசிச்சடங்கில் அவர்களது பெரியோர்களின் வலிகளாக, ‘இறைவன் படைத்ததை (நிறவெறி) காவற்றுறை எடுத்துக்கொண்டது. ஆயினும் இது நமக்கு புதிதல்ல’, என்ற வலிநிறைந்த ஒற்றைக்குரலில் எழுந்த சொற்கோர்வை பதிவாகின்றது. மாணவர்களின் உடலங்கள் மீதுநின்று, மாற்றமொன்றிற்காக போராடவேண்டுமென்று உறுதிகொள்கிறார்கள்.

1976 இல் காலனிய அரசால் கொண்டுவரப்பட்ட அவசரகால பிரகடனத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்மொன்றை நிகழ்த்தவுள்ளார்கள் எனவும் அம்மாணவர்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அணியமாகிவிட்டார்கள் என்ற அறிவித்தலோடு காட்சி இரண்டு ஆரம்பமாகின்றது. அந்த புரட்சிகர அணியமானது, போராட்டங்கள் கைதுகள் சிறையடைப்புகள் கொலைகள் என்று பலதளங்களிலும் மக்களை ஒடுக்கியபோதிலும், “நாளை எங்கள் விடுதலை வரும்” என்று பாடுவதோடு நிறைவுபெறும்.

பொங்கோணி ந்நெக்மாவினால் எழுதப்பட்ட நாடகபாடத்தினுடைய கதைச்சுருக்கமே இது. இந்த நாடகமானது சரபினா என்ற பெயருடன் திரையில் கதையாகியது. 1988 முதல் 1989 வரையில் 597 ஆற்றுகைகளை கண்ட இந்நாடகத்தின் திரைவடிவம் எதைப் பற்றியது என்பதை இங்கு நோக்கலாம்.

1976இல் தென்னாபிரிக்க அரசாங்கம் அவசரகால சட்டமொன்றினை பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வந்த 13 நாட்களும் பள்ளி மாணவர்கள் அதற்கெதிரான பரப்புரையை முன்னெடுத்தனர் என்றும் அதில் ஏறத்தாழ 750 பேர் கொல்லப்பட்டதுடன் பத்தாயிரத்திற்கும் கூடுதலானோர் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டும் பல மக்கள் வன்வதைகளுக்கும் வன்புணர்வுக்கும் உட்படுத்தப்பட்டனர் என்றும் கூறி அவர்கள் நினைவுதாங்கி அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டதாக விரியும் திரையில், ஆபிரிக்கர்களின் கதையல்ல: ஒடுக்கப்பட்ட பல தேசிய இனங்களின் கதைகளும் விரிந்தன.

மரபுவழித்தேசிய இனங்களின் தன்னாட்சிக்கு எதிரான ஓருலகமாதல் கருத்துருவாக்கம் பள்ளிக்கூடங்களினூடாக பரப்பப்படுவதன் குறியீடாக உலகப்பந்து பள்ளிக்கூடத்தின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருப்பதும், அந்த உலகப்பந்தின் மீதும் சில ஆவணங்கள் மீதும் பெற்றோல் குண்டின்மூலம் தீவைக்கும் காட்சியுடன் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. பள்ளிக்கூடத்திலிருக்கும் உலகப்பந்து ஏன் தீவைக்கப்பட்டது என்பதற்கான வியாக்கியானங்களுக்கு விடையளிப்பதாக படம் தொடர்கிறது. தீ வைத்த அடுத்தநாட்காலையில் சுடுகலன்கள் தரித்த இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மாணவர்களுக்கான காலை ஒன்றுகூடல் நிகழ்கின்றது. இது ஒரு அடிப்படைவாதத்தின் அறியாமை எனச் சுட்டும் பள்ளி முதல்வரின் பேச்சானது, மாணவர்களுக்கானது என்பதை விட, சுடுகலன்கள் தரித்த இராணுவத்தின் குரலாகவே ஒலித்தது. மாணவர்களிடமிருந்து பிறந்த, காலனியாதிக்கத்திற்கெதிரான உணர்வெழுச்சியை வன்முறையாக நோக்கவேண்டும் என்பது கற்பிக்கப்படுகின்றது. காலனியப்படுத்தப்பட்ட மக்களுக்கு வன்முறையின் மூலமே தீர்வு கிடைக்கும் என்பது கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்றாக இருக்கின்றது. ஆனால், தேசமொன்றை மீட்பதற்கு செய்யும் போராட்டங்களும் அதன் கூறுகளும் வன்முறையாகுமா என்பது பேசப்படவேண்டியது. அடக்குமுறைக்குள்ளாகும் அத்தனை இடங்களிலும் புரட்சி என்பது மாணவர்களிலிருந்தே முகிழ்த்திருக்கின்றது என்பதை அறிந்த ஆளும் வர்க்கம் எப்போதும் அதனை முளையிலேயே கிள்ளியெறிய நினைக்கும் என்பதை காட்டும் படிமமாகவே அந்தக்காட்சி விரிகின்றது. இந்த முட்டாள்தனத்தைச் செய்பவர் பள்ளிக்கு வரவேண்டாம் எனவும் கல்வியின்றேல் உனக்கு எதிர்காலம் இல்லை என்றும் கூறும் முதல்வரினூடாக ஆளும்வர்க்கம் பள்ளிக்கூடங்களை புரட்சிக்கு நலமடிக்கும் இடங்களாகவே கையாண்டனர் என்பது புலனாகும். AK-47 என்று எழுதப்பட்டிருக்கும் சுவர்களின் முன்னே சுடுகலன்களுடன் இராணுவத்தினர் நின்ற காட்சியானது எனக்கு என்னுடைய பள்ளிக்காலத்தை நினைவூட்டியது. அதியுயர் பாதுகாப்பு வலயமெனும் பெயரில் சிறிலங்கா அரசினால் களவாடப்பட்டிருந்த நிலங்களில் ஒன்றில் எனது பள்ளிக்கூடமும் அமைந்திருந்தது. இராணுவத்தின் கைகளால் கூச்சம் போக உடல்தடவிய பின்னர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உளநிலை எப்படி இருக்கும் என்று கூட நினைக்காத அரசும் அதன் கைக்கூலிகளுமற்ற பள்ளி நிகழ்வு எதனையும் என்னுடைய பள்ளி நாட்களில் நான் கண்டதேயில்லை.

பல உடன்பிறந்தவர்களுடன் வாழும் சரபினாவின் காலை நெல்சன் மண்டேலாவுக்கு வணக்கம் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கின்றது. எங்கள் விடுதலைக்கான கேள்விகளுக்கு ஏன் பேசாமல் நிற்கிறாய் என்று நெல்சனின் புகைப்படத்தைப் பார்த்துக் கேள்வி கேட்கும் பள்ளி மாணவியான சரபினாவின் வாழ்க்கையினூடாக நெறியாளர் ஆபிரிக்கர்களின் வாழ்க்கையைக் காட்ட முயல்கிறார் எனலாம். புரட்சிகர நோக்கங்களோடு எழும் தலைவர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் மறவழிப்போராட்ட எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமென நினைக்கும் அரசுகள், அதற்கு மாறாக சரபினா போன்ற மாணவர்கள் ஒவ்வொருத்தரிடத்திலும் புரட்சியின் பொறியைப் பற்றவைத்துவிடுகிறார்கள்.

திரைப்படத்தின் பெயர் சரபினாவாக இருப்பினும் வசம்புகா என்னும் ஆசிரியைதான் திரைப்படத்தின் முதன்மைப்புள்ளி. ஒடுக்கப்பட்ட இனமொன்றில் ஆசிரியைப் பணியாற்றுபவர் எவ்வாறு நடந்துகொள்வது அறவழிப்பட்டது என்பதன் படிமமாக வசம்புகா என்னும் பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய இனமொன்றின் வரலாறுகள் ஆசிரியர்களாலும் எழுதப்படலாம் என்பதை திரைப்படம் முழுவதுமே அந்தப்பாத்திரம் மூலம் வெளிக்காட்டுகிறார்கள். ஒடுக்குமுறையிலிருந்து ஒரு தேசம் விடுதலைபெறவேண்டுமெனில் அதற்கு இரண்டு காரணங்கள் முதன்மையானவை என பெனான் கூறுகின்றதன்படி, மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் காலனியப்படுத்தப்பட்ட மக்களின் செயற்பாடுகள் காலனிய ஆட்சிக்கு தடையாக இருப்பவை என்ற இரண்டிற்குமான தோற்றுவாயாக வசம்புகா என்னும் ஆசிரியையே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கூடக் கற்பித்தலுக்கான மொழி ஊடகம் ஆங்கிலமாக இருந்தபோதிலும் மாணவர்களின் காலை வழிபாடு அவர்களின் தாய்மொழியிலேயே இடம்பெற்றது. பள்ளிக்கூடங்களும் அதன் முதல்வர்களும் அரச இயந்திரத்தால் ஆட்டுவிக்கப்படுபவர்களாக இருப்பினும், தங்களால் இயன்ற அளவில் மண்ணையும் மண்ணின் மொழியையும் மாணவர்களிடத்தில் தக்கவைப்பதில் பெரும்பங்காற்றுகிறார்கள் என்பது தவிர்க்கமுடியாத உண்மையும் ஆகும். ஒடுக்குமுறைகள் எப்போதும் தேசிய உணர்வினை தடுத்துநிறுத்த முயன்றாலும், அங்கே தேசிய உணர்வின் முன்னோக்கிய பாய்ச்சலே அவர்களுக்கு பதிலாகக் கிடைக்கின்றது.

தேசிய விடுதலைப் போராட்டம் வெடித்தால் தனது ஆட்சியை, பிற நாடுகளின் மீதான வன்வளைப்பை இழக்கவேண்டிவரும் என்பதை நன்கு அறிந்திருந்த அடக்குமுறை அரசுகள், புரட்சிகள் எழுவதைத் தடுப்பதற்கான கல்வித்திட்டங்களை மாணவர்களிடத்தில் திணிக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் வகுப்புகளில் ஆசிரியை வசும்புவினூடாக காலனியாதிக்கத்தின் இந்த சூழ்ச்சி மெதுமெதுவாக அவிழ்க்கப்படுகின்றதைக் காணலாம். ஒடுக்கப்படும் மக்களின் கதைகளும் வரலாறுகளும் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது என்பது இன்றுவரை உலகநாடுகளில் நிகழ்த்தப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறலாகும். இலங்கையின் கல்வித்திட்டத்தில் நாம் எதைப் பயின்றோம் என்பதை நினைவுகூர்ந்தாலே இதற்கான கேள்வியும் பதிலும் எமக்கு கிடைத்துவிடும். நாட்டின் எல்லாப்பகுதிகளையும் ஒன்றிணைத்து காலனியப்படுத்தபட்ட மக்களை ஒரே நேரத்தில் ஒரே நேர்கோட்டில் காலனியாதிக்கத்திற்கு உள்ளாக்குவதற்கான கல்வித்திட்டத்திற்கு எதிரான வரலாற்று உண்மைகள் வசும்புகாவின் மூலம் கற்பிக்கப்படுகின்றன.

சரபினாவின் வகுப்பறைக்கு வரும் வசம்புகா இந்த உலகின் முதல் மாந்தன் யாரெனக்கேட்கும்போது ஆதாம் எனப் பதில்சொல்லும் மாணவர்கள், ஆதாமின் நிறமென்ன என்று கேட்கும்போது வெள்ளை என்று சொல்லிவிடுகின்றனர். அந்தப் பதிலை தேசிய இனமொன்றின் பலவீனப்பட்ட பதிலாகவே நாம் நோக்கவேண்டும். காலனியத்தின் வேர்கள் பண்பாட்டு மறுப்பு அல்லது ஒதுக்கலை எவ்வாறு நுண்மையாக ஊட்டுகிறது என்பதையும் இதனூடே நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆழ்மனத்தில் மக்களை உய்விக்க வந்த கடவுளர்களாகத் தம்மைச் சித்தரிப்பதில் வெற்றிகண்டிருக்கிறார்கள். அந்த சித்தரிப்புகளை உடைப்பதற்கு முயலும் வசம்புகா, திருவிவிலியத்தில் எங்காவது அப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறதா? நான் அப்படி எதையுமே வாசிக்கவில்லை என்று கூறுகிறார். எப்போதுமே திணிக்கப்பட்ட அறிதல்கள் சான்றுகளுடன் கூறும்போது அற்றுப்போகும். காலனியக் கல்வியால் மூளைச்சலவை செய்யப்பட்ட மாணவர்களை, அவர்களை மயங்கவைத்த போலிக் கருத்துருவாக்கங்களிலிருந்து மீட்டெடுக்க ஆசிரியை வசம்புகா முயல்கிறார்.

ஆபிரிக்காவின் முதல் மாந்தன் யாரென்ற கேள்விக்கு பதில்தெரியாத மாணவர்கள் ஆபிரிக்காவிற்கு வந்த முதல்வெள்ளையனின் பெயரை அவன் வந்த தேதியுடன் கூறுவதைக்கேட்டு, வரலாறு என்பது இவ்வாறுதான் திருடப்படுகின்றது என்று கூறுகிறார். வரலாறு என்பது எப்போதும் ஆளும்வர்க்கத்தின் கதைகளின் புனைவாகவே இருக்கிறது என்பதும், தமது வரலாற்றைக் கற்கவேண்டிய மாணவர்கள் மாற்றார்களின் வரலாறுகளைக் கற்பதுமாக போலியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கல்வித்திட்டங்களை நோக்கி நகைக்கிறார். இலங்கையின் ஆதிக்குடிகள் யார் என்ற வரலாற்றை கற்பிப்பதை விடுத்து, அமெரிக்காவைக் கண்டுபிடித்தபன் யார்? போர்த்துக்கேயர் இலங்கையிலிருந்து எவற்றை ஏற்றுமதி செய்தார்கள் என்று கற்பிக்கும் வரலாற்றுப்புனைவுகளின் பின்னே, மகாவம்ச வரலாறுகளை சிங்களவர்களுக்கு தனியாக ஊட்டும் அரசின் திட்டங்களின் பின்னாலிருக்கும் வரலாற்று அழிப்பினை எம்மால் புரிந்துகொள்ளமுடியாது.

கிழக்கிந்திய நாடுகளுக்கு பயணித்த காலனியர்கள் ஆபிரிக்காவை இடைத்தங்கல் இடமாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்ற வரலாற்றை கூறும் வசம்புகா, ஏன் அந்த வெள்ளையர்களில் சிலர் திரும்பிப்போகவில்லை என்ற வினாவைத் தொடுத்து, மாணவர்களிடையே சிந்தனையைத் தூண்டுகிறார். இராணுவமயமாக்கம் திடீரென்று ஓரிரண்டு நாட்களில் நிகழ்த்தப்படுவதில்லை. எங்களுக்கு தெரியாமலே எங்களிடையே நிகழ்த்தப்படும் நுண் ஊடுருவல் அது. இராணுவம் போரிற்காக வந்தது. ஆயின் ஏன் தன் இடங்களுக்கு திரும்பிப்போகவில்லை என்ற கேள்வியை எப்போதாவது நாம் கேட்டிருக்கிறோமா?

பள்ளிக்கூடத்தின் காலனியாதிக்க ஆவணங்களை எரித்தது யார் என்ற உசாவல்களின் தொடர்ச்சியில், பள்ளிமுதல்வர் மாணவர்கள் அதனைச் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறி, பள்ளிக்கூடம் என்பது எங்களுக்கு தேவாலயம் போன்றது, இங்கே எவரும் சுடுகலன்களுடன் நடமாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று கூறுகிறார். மாணவர்கள் புரட்சியாளர்களால் தூண்டப்பட்டு, இதனைச் செய்திருக்கலாம் என்று கூறும் அதிகாரம், அடுத்ததாக ஆசிரியர்களை நோக்கி தன் பார்வையைத் திருப்புகிறது. வகுப்புகள் கண்காணிக்கப்படுகின்றன. கல்வித்திட்டத்தில் புனையப்பட்டிருக்கும் பொய்கள் மட்டுமா மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன என்பதனை உறுதிசெய்யும் நோக்கில் சுடுகலன்களுடன் நிறவெறியரச படைகளுடன் அவர்களின் உளவுப்பிரிவினர் நோட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறை சாளரத்தில் சுடுகலனின் முனைகள் நீட்டியபடியே இருந்தன.

தொடர்ச்சியாக வகுப்பறைக்காட்சி தொடர்கின்றது. பசுமையான மக்களடர்த்தி குறைவான இந்த நாட்டுக்கு வந்த வெள்ளையர்கள் எங்களுக்கு எதைக்கொண்டுவந்தார்கள்? கடவுச்சீட்டையும் தேசிய மறுப்பை உணருவதையும் என்று கூறிய வசும்புகா, சாளரத்தினூடே தெரிந்த சுடுகலன்களைக் கண்டுவிட்டு, இராணுவத்தின் கண்காணிப்பிற்குள் உள்ளாவதை உணர்ந்து, சட்டென வெள்ளையர்கள் எமக்கு சனநாயத்தையும் நீதியையும் மிக மிக நல்ல பள்ளிக்கூடங்களையும் தந்திருக்கிறார்கள் என்று முன்னுக்குப் பின் முரணாகக் கற்பிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார். ‘நாங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். வரலாறு மிகவும் அழகானது. இல்லையா?’ என்று மாணவர்களிடம் முரண்நகையில் கூறுகிறார். சுடுகலனும் அந்தச் சொற்களை நம்பி திரும்பிவிடுகின்றது. இவ்வாறே மக்களை வரலாற்றிலிருந்து வெளியேற்றும் காலனிய  இயந்திரம் அவர்கள் வரலாற்றில் வேரூன்றுவதையும் மறுக்கிறது. பண்பாட்டுரீதியான இந்த மறுப்புக்கள் எவையும் தற்செயலாக தோன்றிவிடுவதில்லை. மண்ணின் மக்களை இருளிலிருந்து மீட்டெடுத்து நாகரீகத்தையும் அறத்தையும் கற்றுக்கொடுக்க வந்த மீட்பர்களாகவே அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற காலனிய மேலாதிக்கத்தின் முதன்மை நோக்கமானது சுடுகலன்களின் முனைகளிலேயே திணிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அக்காட்சி சுட்டிச்செல்கின்றது.

பள்ளியின் இடைவேளைக்காட்சியொன்று காட்டப்படுகின்றது. மாணவர்கள் சிலர் காற்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இராணுவம் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. அங்கேயும் சில மாணவர்கள் தம் தேசத்தைப் பற்றிய கனவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதை நோக்கிய சரபினா என்னும் பாத்திரத்தினூடாக, ‘அவனை விரும்பினால் என்ன பயன்? புரட்சிக்காரன் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருப்பான்’ என்ற தன்கூற்றினூடாக, காலனியாதிக்கம் மக்களிலிருந்து புரட்சி மேற்கிளம்புவதை சட்டத்தைக்கொண்டு அடக்குவதை காணமுடிகின்றது. அரச அதிகாரம், தொடர்ந்து ஆசிரியர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களைக்கொண்டே மக்களை ஒடுக்கும் காலனியம், அந்த முறைமையை அங்கும் பின்பற்றுகிறது. ஆயினும், அந்த மண்ணின் ஆசிரியர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. வன்முறையாளர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனிடம், இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவன் வன்முறையாளனா என்ற எதிர்க்கேள்வி இருக்குமே தவிர, யார் வன்முறையாளன் என்ற பதில் ஒருபோதும் இருக்காது. இங்கே நெல்சன் மண்டேலாவின் புரட்சியைத் தொடரும் போராளிகள் யாராவது இருக்கலாம் என்ற காலனியத்தின் கேள்விக்கு, ஆசிரியை வசம்புகா, அனைவரும் மண்டேலாவின் குழந்தைகள் என்று கூறுகிறார். அதனை நகைப்புக்குட்படுத்திய நிறவெறியரசின் காவற்றுறையினன், ஆசிரியர்கள் போராடவும் எரிக்கவும் கொல்லவுமா கற்பிக்கிறார்கள் என்று கேட்கிறான். அதற்கு பள்ளிமுதல்வர் எனது ஆசிரியர்கள் எவருமே வன்முறையை கற்பிப்பதில்லை என்று மறுக்கிறார். இளம் மனங்களில் வன்முறையை மறுக்கும் மனநிலையை உண்டுபண்ணவேண்டியது ஆசிரியர்களின் கடமை என்கிறது காலனியம். அதிகாரத் திணிப்பும் துப்பாக்கிமுனைகளும் நேரடியான அடக்குமுறையும் புரட்சியைத் தூண்டும் ஊக்கி என்பது புரட்சிவெடித்த இடங்களின் பொதுவிதி. அச்சத்தின் விளைவாக எழும் இத்தகைய உசாவல்கள், உசாவல்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. புரட்சியின் மீதான அச்சமானது கைதுகள், காணாமலாக்கப்படுதல், சிறைப்படுத்தல் என்பதாகவே நீண்டு செல்லும் என்பதை இங்கும் ஈண்டு நோக்கலாம். ஆசிரியை வசும்புகாவின் மீது, அதிகாரத்தின் கண்கள் பட்டுவிட்டன.

தொடரும் பள்ளி நாட்களில் இசைநிகழ்வொன்றை நிகழ்த்துவதற்கு மாணவர்கள் பணிக்கப்படுகின்றார்கள். ஆங்கிலமொழிவழிக் கற்பித்தல் இருந்தபோதிலும் கொண்டாடும் மனநிலைக்கு அவர்கள் வரும்போது, தங்கள் சொந்தமொழியில் பாடுவது குறிப்பிடத்தக்கது. ஆங்கே பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டபோதிலும், இறுதியாக நெல்சன் மண்டேலாவின் விடுதலை நாளை கொண்டாடுவதான ஒரு நிகழ்வினைச் செய்துகாட்டலாம் என்று முடிவெடுக்கிறார்கள். இன அடிப்படையில் மட்டுமல்லாது பால் அடிப்படையிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதை, ஒரு நாள் நிகழ்வில் கூட நெல்சன் மண்டேலாவாக ஒரு பெண் இருக்கமுடியாதா என்ற சரபினாவின் தன்கூற்றிலிருந்து, ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவளாகவும், ஆபிரிக்க இனத்தைச்சேர்ந்த பெண்ணாகவும் இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாவதைக் காணலாம். நெல்சன் மண்டேலாவினுடைய விடுதலையை குறிக்கும் நிகழ்வை நாம் செய்ய முடியாது என கூறும் வசும்புகாவிற்கு, நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல.. அவர்களே கொல்வது எப்படி என்று பயிற்சிகொடுக்கப்பட்டு, துப்பாக்கிகளுடன் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தானே கலகக்காரர்கள் என்று கேட்கிறாள் சரபினா.

கவசவாகனத்தின் பின்னணியில் பள்ளிக்கூடத்தின் வகுப்பறையைக் காட்டும் காட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின் மனநிலையைக் குறித்தும் பேசும் மாணவர்களிடத்தில், இந்த அடக்குமுறைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் துளிர்க்கிறது. காலனியத்தை எதிர்ப்பதற்கான தேவையையும் அடிமையாக இருக்கும் தங்கள் மக்கள் ஒரு கன்னத்தில் அடிவிழுந்தால் மறுகன்னத்தையும் காட்டும் நிலையிலிருக்கிறார்கள் என்பதனையும் சுட்டுகிறார்கள். கல்வி என்பது என்ன? இதுவா கல்வி? அவர்கள் எங்களைப் பள்ளிக்கூடங்களினுள் வைத்திருப்பது, எங்களுக்காக அல்ல. எங்களை வீதிகளிலிருந்து அப்புறப்படுத்தவே என்ற காலனிய அதிகாரத்தின் நயவஞ்சகத்தை புரிந்துகொள்ளும் நிலைக்கு மாணவர்கள் வருகிறார்கள். ஆயினும் மக்களில் சிலர் போராட்டங்களுக்கோ அல்லது மக்களுடைய புரட்சிகர சிந்தனைகளுக்கோ ஒத்துழைப்பதில்லை என்பதும் காட்டப்படுகின்றது.

சரபினா தனது தாயார் பணியாளாக வேலைசெய்யும் வெள்ளைக்காரரின் குடியிருப்புக்கு செல்கிறாள். செல்லுமிடத்தை விபரிப்பதற்கு தன் சொந்தமண்ணையே வேற்றுமைப்பட்டதாக உணரும் நிலையில், அவளுக்கு வணக்கம் சொல்லும் வெள்ளைக்காரப்பெண்ணுக்கு பதில் வணக்கத்தைக்கூறி புன்னகையுடன் கடந்துசெல்கிறாள். ஆயினும், தன் தாயிடம் பள்ளி நூல்களெல்லாம் பொய்களால் நிரம்பியிருப்பதைக் கூறும் அவள், வெள்ளைக்காரர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டியவர்கள் என்று கூறுகிறாள். ஆயினும், நீ இப்படியே போய்க்கொண்டிருந்தால் உன் அப்பாவுக்கு ஏற்பட்ட முடிவுதான் உனக்கு வருமென்பதை சரபினாவின் தாய் அழுத்துகிறாள். உன்னைப்போல அடிமையாக இருப்பதற்குப் பதிலாக அப்பாவைப்போல போராட்டத்தில் இறந்துவிடலாம் என்கிறாள் சரபினா.

காலனித்தியப்படுத்தப்பட்ட சலுகை பெற்ற அடிமைகளாக இருப்போரை வைத்தே மண்ணின் மக்களின் மீதான வன்முறைகளை அரச அதிகாரம் நிகழ்த்திவிடுகின்றது. காவற்றுறையில் இருக்கும் ஆபிரிக்கனொருவன் தன் மக்கள் மீது தனக்குக் கிடைத்த அதிகாரத்தினை பயன்படுத்துகிறான். குறிப்பிட்டதொரு காட்சியில் குறித்த ஆபிரிக்கன் புரட்சியைத் தூண்டினான் என்று கைதுசெய்யப்பட்ட மாணவனொருவனை தாக்குகிறான். அதனைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கும் வெள்ளையன் நாயையும் அவிழ்த்துவிடுகின்றான். இங்கே நாயும், குறிப்பிட்ட ஆபிரிக்கனும் காலனியத்தின் ஏவலுக்கு வேலைசெய்யும் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் நுண்மையை நோக்கவேண்டும். ஆனால், அவ்வாறான சொந்த மக்களை காட்டிக்கொடுக்கும் இரண்டகர்கள் மக்களின் புரட்சி வெடிக்கும்போது அஞ்சியே மடிந்துவிடுவார்கள் என்று கூறும் சரபினாவின் வரிகள் எவ்வளவு உண்மையானவை. சொந்த மக்களை காட்டிக்கொடுக்கும் இரண்டகர்களால் பல விடுதலைப்போர்கள் நசுக்கப்பட்டிருப்பினும், மக்கள் மீண்டெழும்போது அந்த இரண்டகர்களே முதலில் பலியாகியிருக்கிறார்கள்.

போர் உங்கள் வாசலுக்கு வருகின்றது என்ற பாடலுடன் தீப்பொறி ஏந்திய மாணவர்கள் வீதியெங்கும் செல்கிறார்கள். அந்தப் பாடலின் தொடர்ச்சியில் சரபினா வசும்புகாவின் வீட்டுக்கு செல்கின்றதையும், அங்கே போராளியொருவருடன் வசும்புகா பேசிக்கொண்டிருக்கும்போது, வுசும்புகாவின் வீட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைக் கண்ணுறுகிறாள். ஆண் மாணவர்கள் போராடப்போகிறார்கள். பெண்ணாக நான் என்ன செய்யமுடியும் என்று கேட்பதற்காக வந்த சரபினாவுக்கு, பெண்களும் புரட்சியின் ஒரு பாகம்தான் என்பதைப் புரியவைக்கிறாள். கொல்லுவதும் வன்முறையும் பிழையான வேலைகளெனினும் மற்றவர்கள் எனக்காகப்போராடும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது என்று போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்குமானது என்பதைப் புரியவைக்கிறாள்.

மாணவர்கள் புரட்சிக்கு அணியமாவதை அறிந்துகொண்ட அதிகாரம், தன் கூலிகளை வைத்து அவர்களைக் கைதுசெய்கின்றது. மாணவர்களின் புரட்சிகரச் சிந்தனைகளுக்கு வசம்புகா ஆசிரியர் தான் காரணம் எனக் கருதும் காலனியம், அவரை விசாரணைக்கு உட்படுத்துகிறது. நீ பொதுவுடைமையைக் கற்பிக்கின்றாயா? புரட்சியைப் பற்றிப் பேசுகின்றாயா? நீ உன்னுடைய சொந்த கல்வித்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடாது. தம்மால் கொடுக்கப்பட்ட பாடநூலில் உள்ளவற்றை மட்டுமே கற்பிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறாள். ஆயினும், மாணவர்கள் தாங்கள் யார் என்பதையும் அவர்களது பெருமையையும் அறியவேண்டுமென்பதற்காக நான் கொடுக்கப்பட்ட பாடநூலுடன் சற்று மேற்சென்று மேலதிக தகவல்களையும் மாணவர்களுக்கு சொல்கிறேன் என்கிறாள். கறுப்பர்களின் பெருமையையா? என்று கேட்கும் வெள்ளையனின் குரல்வழிய வரும் ஏளனம், காலகாலமாக அவர்களது குருதியில் ஊறிப்போயிருக்கும் கறுப்பினவெறுப்பினை கக்குகிறது. தீயுடன் விளையாடுகிறாய் என்று கூறும் வெள்ளையனுக்கு, தேசிய இனத்தைப் பற்றி பெருமைப்படாது வெட்கப்படவேண்டுமா என்று கேட்கும் கேள்வியில் ஆசிரியை வசும்புகாவிற்கான சிறைவாழ்வு பார்வையாளர்களால் உணரக்கூடியதாக ஆகிவிடுகின்றது.

தொடரும் வகுப்பறையில், குறிப்பிட்ட வகுப்பிலிருந்து அந்த ஆசிரியை பொதுவுடைமையை கற்பிப்பதாக தகவல்சொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, நான் கொடுக்கப்பட்ட கல்வித்திட்டத்தினுள்ளேயே நிற்கிறேன் என்பதை அழுத்துகிறாள். புனையப்பட்ட வரலாறுகளை விடுத்து வேறெந்த உண்மையையும் வரலாற்றையும் எங்களுடைய வகுப்பறைகள் கற்பித்ததாக நான் அறியவில்லை. வசும்புகாக்கள் எங்கள் ஆசிரியர்களாகவோ ஆசிரியர்கள் வசும்புகாக்களாகவோ இருந்ததேயில்லை. தங்களுடைய வரலாறு மகிழ்ச்சியும் பெருமையும் வீரமும் மிக்கது என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்வார்களாயின், கடந்தகாலத்தின் அந்த தேசியப்பண்பாட்டைக் கொண்ட தேசத்தை மீளப்பெறுவதற்கு முனைவதற்கான மனநிலை இளம் தலைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக காலனித்துவம் இருக்கும். அதனடிப்படையிலேயே பாடநூல்களையும் புனைகிறது. அதனாலேயே காலனியப்படுத்திய நாட்டின் மீதான நிகழ்காலத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதும் மட்டும் தாக்கம் செலுத்தாது, அதன் கடந்தகாலத்தையும் தன்கைக்குள் வைத்திருக்கின்றது. மாணவர்களின் மூளையில் கடந்தகாலத்துப் பெருமைகளை படியவிடாமல் செய்வது அதற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே வரலாறுகளை எழுதும்போது, ஒடுக்கப்பட்ட மக்களின் கடந்தகாலத்தையும் அதன் பெருமையையும் சிதைத்து, காலனியாக்கத்துக்கு முற்பட்ட அவர்களது வரலாறுகளைச் சிதைத்துவிடுகின்றது. இதனை நன்குணர்ந்த வசும்புகா, தனது வரலாற்றுப் பாடத்தில் இருக்கும் பொய்களை கற்பிக்கதுணியவில்லை. கண்டத்தின் மிகச்சிறந்த இராணுவப்படையான நெப்போலியனின் படைகள் எவ்வாறு வீழ்ந்தன? என மாணவர்களிடம் வினவிவிட்டு மக்களின் புரட்சியால் வீழ்த்தப்பட்டது என்று பதில் கூறும்போது, இராணுவம் வந்துவிடுகின்றது. முதலொருதடவை இராணுவம் வந்தபோது, சுடுகலனின் மறைமுகமான நெருடலில், வரலாற்றை மாற்றிக்கூறும் வசும்புகா, இம்முறை அவ்வாறு மாற்றவில்லை. இராணுவத்தின் முன்நின்றே, ஒருநாள் இதெல்லாம் மாறும் என்று குறிப்பிட்டு, தன்னிடமிருந்த துப்பாக்கி தனக்கு இனித்தேவைப்படாது, என்று சரபினாவிடம் கூறிவிட்டுச்செல்கிறாள். அன்றுவரையும் ஆசிரியையாக அவள் கற்பித்தவற்றையும் புரட்சிப்பாதையையும் சரபினா முன்னெடுக்கவேண்டுமென்று வசும்புகா விரும்பியிருக்கக்கூடும். ஆசிரியையின் கைதின் பின்னர், வந்த புதிய ஆசிரியர் கல்வித்திட்டத்தின் பொய்களைக் கூறமுயலும்போது, மாணவர்கள் அதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றார்கள். தங்களுக்கென ஒரு பண்பாடு இருப்பதாக கூறுகிறார்கள். வசும்புகா விதைத்த அந்த விதையிலிருந்து எழுந்த இனவுணர்வும் புரட்சியும் மாணவர்களை புரட்சியாளர்கள் என்று பெயர் மாற்றியது. கைதுசெய்யப்பட்டோர் காணாமலாக்கப்படுவதைக் கேள்விகேட்கும் அதிகாரமற்றவர்களாக மக்கள் மாற்றப்பட்டனர். மாணவர்களிடத்தே இனவுணர்வை வீறுகொள்ளச் செய்தது காலனிய ஒடுக்குமுறையாளார்களே. நேப்போலியனின் தோல்விக்குக் காரணம் மக்கள் புரட்சியல்ல, இலையுதிர்காலமே என்ற பொய்யான வரலாற்றினைக் கற்பிக்கும் ஆசிரியரை மாணவர்கள் எதிர்க்கையில், அதற்காகவே காத்திருந்தவர்கள் போல இருந்த ஒடுக்குமுறையரசின் சுடுகலன்களின் குண்டுகளால் மாணவர்கள் பலியெடுக்கப்படுகின்றனர். இறந்துபோன அந்த மாணவர்களின் குருதியிலிருந்து உறங்குநிலையிலிருந்த ஆபிரிக்காவின் புரட்சிவரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.

மாணவர்களின் இறப்புச்சடங்கும் சுடுகலன்களின் முன்னால் நடைபெற்றாலும் கூட, சடங்குகளை நடாத்துபவர், இளம் தலைமுறையினருக்கு அவர்களது பலத்தை எடுத்துக்கூறுகிறார். நீங்கள் வலிமைமிக்க எதிர்காலம். நீங்கள் தான் இந்த கொலைகளிலிருந்து எங்கள் மண்ணைக் காக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றார். இறப்பு வழிபாட்டுப் பாடல் புரட்சிப்பாடலாக மாறுகின்றது. புதைகுழிகளின் மேல்நின்று விடுதலைக்கான பாடல் எழுகிறது. “விடுதலை நாளை வருகின்றது” என்று எழும் புரட்சியின் குரலில் மாணவர்களின் போர் தொடங்குகிறது. சுடுகலன்முனைகளால் குறிவைக்கப்பட்ட மாணவர்களின் படையானது இராணுவத்தால் பீச்சப்பட்ட கண்ணீர்ப்புகைக்குண்டினால் கலைக்கப்படுகின்றது. ஆனாலும் சுடுகலன்கள் ஏதுமேந்தியிருக்காத மாணவர்கள் கற்களை கருவிகளாகக் கொண்டு கவசவாகனத்தையும் காலனிய அடையாளங்களாக இருக்கும் கடைகளையும் அடித்து நொருக்கி, எரிக்கின்றனர்.

மாணவர்களின் அந்த எழுச்சியில் காட்டிக்கொடுப்பாளர்களையும் இரண்டகர்களையும் மக்கள் மன்னிப்பதில்லை என்பதற்கேற்ப இரண்டகனான சபேலா மாணவர்களால் கொல்லப்படுகின்றான். அந்தக் கொலைக்கு சாட்சியமாக சரபினா இருந்தபோதும், அந்தப் புரட்சியாளர்களில் ஒருவராக இருந்தபோதிலும் என் மக்களுக்காக அந்தக் கொலையைத் தடுக்கவில்லை என்று சரபினாவின் தன்கூற்று ஒலிக்கிறது. புரட்சியாளர்கள் என்று மாணவர்கள் விலங்குகளைப் போல அடித்து இழுத்துச்செல்லப்படுகிறார்கள். சிறை வாகனத்தில் செல்லும்போது ஒலிக்கும் ஆபிரிக்கமொழிப்பாடலானது,

ஆபிரிக்க தேசமே அழுகின்றது.

முதியவர்களும் சிறையில்..

இளைஞர்கள் சிறைப்பிடிக்கப்படுகின்றார்கள்..

பெண்களும் குழந்தைகளும் மட்டுமே சொவேற்றாவில் எஞ்சியிருக்கின்றனர்..

ஆபிரிக்காவின் வலிக்காக விம்முகின்றோம்.. பாடலின் முடிவில் சிறையில் மாணவர்கள் அடைக்கப்படுவார்கள்.

விசாரணைக்கு அழைக்கப்படும் சரபினா, இராணுவப்படைகள் எங்களை கொல்வதனூடாக எங்கள் கல்வியை முடக்கினார்கள் என்று கூறும்போது, நீ சாகவில்லையே என்று கேட்கும் விசாரணை அதிகாரியிடம் என் நண்பர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறாள். புரட்சியாளர்களும் சபேலாவைக் கொன்றவர்களும் தான் உன் நண்பர்களா என்று அவளை நோக்கி கேள்வியெழுப்பப்படுகின்றது. சபேலாவின் கொலையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கையில், எதுவுமேயில்லை என்று கூறும் சரபினா, விசாரணை அதிகாரியின் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமானது, வரலாற்றை அவள் புரிந்திருக்கிறாள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. நாங்கள் ஒருபோதும் சிக்கல்களை நோக்கிச்செல்வதில்லை என்று கூறும் சரபினா, எங்களுடைய வாழ்க்கை சிக்கலில் இருக்கின்றது என்று கூறுவது, விடுதலைவேண்டிப்போராடும் ஒவ்வொரு தேசிய இனத்தின் குரலாகவும் கேட்கிறது. ஆசிரியை வசும்புகா தற்கொலை செய்ததாகக் கூறும் அதிகாரி, அவளைப்போல நீயும் சாகப்போறியா என்று கேட்கிறான். ஆசிரியை வசம்புகா தற்கொலை செய்ததாகச் சொல்வதை நம்ப மறுக்கும் சரபினா, ஒடுக்குமுறைநிறவெறிப் படைகள் அவரை கொன்றொழித்துவிட்டிருப்பார்கள் என்பதைத் தனது மனக்கண்ணில் பதிக்கின்றாள்.

தொடர்ந்து விரியும் சிறைச்சாலைப் பதிவுகள் அடக்குமுறை அரசாங்கத்தால் நிகழும் கொடுமைகளை காட்சிகளாகவும் குரல்களினூடும் காட்சிகளாகின்றன. விடுதலைக்காகப் போரிட்ட நெல்சனின் காதுகளில் சிறையில் ஒலிக்கும் பெண்களின் ஓலங்கள் கேட்காது என்று சரபினாவினூடே ஒலிக்கும் தன்கூற்று, புரட்சி மீதான அவளது நம்பிக்கை சிறிது அசைந்திருந்ததைக் காட்டியது. உனது குழந்தைகள் இறந்துகொண்டிருக்கிறோம்.. இன்னும் எத்தனை நாட்கள் இந்த அவலங்கள்? தலைவனுக்காக காத்திருக்கிறோம்.. என்று தொடரும் பாடலினூடே, சிறையில் நிகழ்ந்த அவலங்கள் பதியப்படுகின்றன. பிணங்களின் நடுவில் வாழ்ந்த பதிவுகள் காலனியத்தால் நிகழ்த்தபட்ட மாந்தகுலத்திற்கெதிரான கொடுமைகளுக்கு சான்றுகளாக நின்றாலும் கூட, மாந்த உரிமைகளைப் பற்றி வகுப்பெடுப்பவர்களே அவர்களாக இருக்கும்போது யாரிடம் முறையிடுவது? குருதியால் கீறப்பட்ட சுவர்களில் கூட்டு வன்புணர்வுக்கான தடயங்களும் பதியப்பட்டிருந்தன.

மீண்டுமொரு புரட்சிக்கு இடங்கொடாது நாட்டில் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆயின், காலனியர்கள் இழைத்த கொடுமைகளை நாங்கள் மறக்கமாட்டோம் என்று சிறைக்கம்பிகளில் நின்று கூறும் மாணவனின் குரல், மறப்போம் மன்னிப்போம் என்று கைகொடுக்கும் அடக்குமுறையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கான பதிலாகவே அமைகின்றது. இனத்தை அழித்தவனை, அழிக்கத்துடித்தவனை எவ்வாறு மறப்பது? உங்களால் இழைக்கப்படும் கொடுமைகளால் நாங்கள் நலிந்துவிடமாட்டோம். மாறாக, இன்னமும் பலமானவர்களாக மாறுவோம். ஆனால் மறக்கமாட்டோம் என்னும் குரல் ஆபிரிக்கனின் பதிலாக அமைகிறது.

மின்சார அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சரபினா, ‘அவர்கள் எங்களுக்கு பாடம் கற்பித்ததாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நடத்திய பாடம் என்ன? அவர்களைப்போல இருக்கவேண்டும் என்பதா? சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைசெய்வதா? அவர்கள் எங்களை வெறுப்பதைவிட, இன்னமும் அதிகமாக அவர்களை வெறுப்பதற்கா?’ என்று தன்கூற்றாக நெல்சனுக்கு கூறுவதாக அமையும் கூற்று முடிவடைகிறது.

முன்னொரு காட்சியில் வணக்கம் கூறிய வெள்ளைக்காரப்பெண் ஒருவருக்கு புன்னகையுடன் பதில்வணக்கம் கூறிய சரபினா, சிறைமீண்டபின், அதே வெள்ளைக்காரப்பெண்ணின் கையசைத்தலுக்கு பதிலிறுக்காமல் செல்கிறாள். தொடர்ந்து தாயாருடன் பேசும்போது, புரட்சி என்பது தேவையற்றதோ என்ற ரீதியில் பேசுகிறாள். சுடுகலனைத் தூக்கியெறியும்போது, ‘நான் கொல்லுதலையும் வன்முறையையும் வெறுக்கிறேன்.. ஆயினும் எனக்காக மற்றவர்கள் இறப்பதை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நானும் போராடுவேன். ஆனால் கொல்லமாட்டேன். கொல்லும்படி என்னைக் கேட்க வேண்டாம். நீ என்ன செய்யப்போகிறாய் சரபினா?’ என்ற வசும்புகாவின் குரல் ஒலிக்கிறது.

திரையின் இறுதியில் சிதைக்கப்பட்ட பாடசாலைக்கு வரும் சரபினா, விடுதலை நாளை வரும் என்ற பாடலைப் பாடுவோம் என தன் நண்பனைக் கேட்கிறாள். எமக்கான பாடலை நாங்கள் பாடவேண்டும். மண்டேலாவுக்காக காத்திருக்கும் பாடலைப்பாடவேண்டும் என்று கூறி, மண்டேலாவாக நடிக்கிறாள். விடுதலை நாளை வரும் என்ற பாடலுடனும் நிறைவுக்கு வருகின்றது திரைக்கதை.

போராட்டம் தொடரும்.. விடுதலை நாளை வரும் என்ற திரை எழுத்துக்களுடன் ஆபிரிக்காவின் கதைகளின் ஒன்று முற்றுப்பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளிவந்த காலப்பகுதியானது நெல்சன் மண்டேலா சிறைமீண்டு கறுப்பின மக்கள் ஏதோவொரு நம்பிக்கை பெற்றவர்களாக மகிழ்ச்சிக் கடலில் குளித்தகாலமாக இருந்ததால் திரைப்படத்தின் முடிவு சில திறனாய்வுகளுக்கு எம்மை இட்டுச் செல்கின்றது. எனவே கீழ்வரும் பத்திகளில் அது குறித்துப் பேசுவது இந்தத் திரை எம்மில் ஏற்படுத்திய தாக்கத்தை பொருளுள்ள புரிதலுக்கானதாக மாற்றத் தேவைப்படுகின்றது.

காயடிக்கப்பட்ட விடுதலை வேட்கை…………..

“தென்னாபிரிக்க அரசு உலகளவில் தனிமைப்பட்டு அழுத்தங்குள்ளாகி நிற்கின்ற வேளையில் நிறவெறி அரசிற்கெதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்று தென்னாபிரிக்க விடுதலையை நோக்கிக் காலம் கனிந்து வரும் நாட்களில், நெல்சன் மண்டேலா தன்னைச் சிறையில் பார்க்கவருவோரிடம் தலை முடிக்கு வைக்கும் விலையுயர்ந்த எண்ணெய்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தார்” என நிறவெறி அரசிற்கெதிராகப் போராடிய போராளியும், நெல்சன் மண்டேலாவுடன் பத்தாண்டுகளாக சிறையிலிருந்தவருமான கர்த்ராடா பதிவுசெய்துள்ளார்.

அல்ஜீரியா விடுதலையடைந்ததைத் தொடர்ந்து அதனை வன்கவர்ந்து நின்ற பிரான்சுக்காரர்கள் பிரான்சுக்கு விரட்டியடிக்கப்பட்டது போல, மொசாம்பிக் விடுதலையடைந்த போது அதனை வன்வளைத்து நின்ற போர்த்துக்கேய வன்வளைப்பாளர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது போல இல்லாமல், தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா மாந்த குலத்திற்கெதிரான நிறவெறிக்கொலை வெறியாட்டங்களை ஆடிய வெள்ளைநிறவெறியர்களிற்குப் பொதுமன்னிப்புக் கொடுப்பதற்காகவே அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து வெள்ளைநிற வெறியர்கள் தப்பிக்க வாய்ப்பளித்ததோடு, நிறவெறிக்கொள்கையை முன்னின்று வடிவமைத்த கென்றிவேர்வோர்ட் என்ற மாத்தகுல விரோதியின் மனைவியுடன் 1995 இல் நெல்சன் மண்டேலா தேநீர் விருந்தில் கலந்துகொண்டதுடன் வெள்ளைநிறவெறிக்கொள்கை காலத்தில் தனி வெள்ளையர்களை மட்டும் கொண்டு அணியமாகிய வெள்ளைநிற “ரக்பி” அணியினர் 1995 இல் உலகக்கிண்ணத்தில் வென்றமைக்கு நேரில் சென்று கொஞ்சிக் குலாவி ஆதரவு கொடுத்தமை என நெல்சன் மண்டேலா மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு.

நிலச்சீர்திருத்தச் சட்டம், சொத்துரிமைச் சட்டம் என்பன வரையப்படும் போது நெல்சன் மண்டேலா வெள்ளைநிறவெறியர்களின் நலனுக்கேற்றாற் போலவே நடந்துகொண்டார் என வெள்ளையர்களுக்கென்றும் அடிபணியாத சிம்பாவேயின் அதிபரான றொபேட் முகாபே குற்றஞ்சாட்டியிருந்தார்.

உண்மையில், பன்னாட்டளவில் தென்னாபிரிக்க நிறவெறி அரசு தனிமைப்படுத்தப்பட்டு அழுத்தங்களுக்குட்பட்டமையாலும், தொடர்ந்து தென்னாபிரிக்க மண்ணின் மக்களின் விடுதலைப் போராட்டம் புரட்சிகரமாக வீறுகொண்டதாலும் இனிமேலும் இந்த நிறவெறிக்கொள்கையை வைத்து சுரண்ட முடியாத நிலையேற்பட்டதாலேயே வேறுவழியில்லாமல் அப்போதைய நிறவெறி அரசின் தலைவராக இருந்த கிளார்க் நெல்சன் மண்டேலாவுடன் சில உடன்பாட்டுக்கு வந்தே அவரை விடுதலை செய்தார். நிறவெறிக்கொள்கை நீக்கப்பட்டு, கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை கிடைத்ததால் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்தலில் வெற்றியீட்டி கறுப்பினத்தவர் தென்னாபிரிக்காவின் அதிபராக முடிகின்றது என்பதைத் தாண்டி, வந்தேறிய வெள்ளையர்களே அந்த மண்ணின் மக்களுக்கு உரித்தான தங்கம் அடங்கலான அத்தனை கனிம வளங்களையும் வளவேட்டை செய்து பெருநயன்மையடைந்து வருகின்றனர். இதிலிருந்து, வெள்ளையர்களின் பொருண்மிய நலன்களுக்கும் சமூக உயர்தட்டு நலன்களுக்கும் கேடாக வண்ணம் கண்துடைப்பாகவே நிறவெறிக்கொள்கை நீக்கப்பட்டு நெல்சன் மண்டேலாவை வைத்து வெள்ளைநிறவெறியர்கள் சூழ்ச்சியாக விடுதலை நாடகம் ஆடியுள்ளனர்.

தனது இளமைக் காலத்தில் ஓர்மமான விடுதலைப்போராளியாக அறத்துடனும் மறத்துடனும் களமாடிச் சிறைப்பட்ட நெல்சன் மண்டேலாவையே அந்த மண்ணின் மக்களுக்குத் தெரியும். நீண்ட காலம் சிறைப்பட்டிருந்ததாலும் அகவை முதிர்ச்சியாலும் அவருக்கேற்பட்ட உளச்சோர்வும் புரட்சிகர விடுதலை மீதான நம்பிக்கையின்மையும் சலிப்பும் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அதை மிகவும் நன்கு அறிந்திருந்த வெள்ளைநிறவெறி அரசு சூழ்ச்சியாக நெல்சன் மண்டேலாவைக் கையாண்டு தென்னாபிரிக்க மக்கள் விடுதலையைப் பெற்றுவிட்டதாக ஒரு தோற்றப்பாட்டைக் காட்டி, உண்மையில் அதன் உள்ளார்ந்த பொருளில் மாந்தகுலத்திற்கெதிரான குற்றங்களை இழைத்த வெள்ளைநிறவெறியர்களை காப்பாற்றியதோடு வெள்ளைநிறவெறி வளக்கொள்ளையர்களின் பொருண்மிய நலன்கள் பாதிப்புறா வண்ணம் சூழ்ச்சியாக திட்டம் தீட்டியமையே தென்னாபிரிக்காவில் நடைபெற்றது.

மண்ணின் மக்களின் விடுதலைக்காக போராடிய புரட்சிகர விடுதலை அமைப்பாக இருந்த ஆபிரிக்க தேசிய காங்கிசானது, 1994 இல் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டதன் விளைவாக மக்கள்தொகையில் 80% ஆக இருக்கும் கறுப்புநிற மண்ணின் மக்களின் வாக்குகளால் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கிறது. அவர்களும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் போதும் என்ற நிலையில் அதைத் தக்கவைப்பதையே தமது அரசியலாக்கிவிட்டனர். ஒரு கறுப்பர் நாட்டின் அரச தலைவராகலாம் என்பதைத் தாண்டி, தென்னாபிரிக்க மண்ணானது வெள்ளையர்களின் வளவேட்டைக்காடாகவே இருக்கிறது. நெல்சன் மண்டேலா விடுதலையடைந்தவுடன் தமக்கு விடுதலை கிடைத்துவிட்டதாகவும் தமது மண்ணில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் நம்பிய மண்ணின் மக்களும் அவர்களுக்காகப் போராடிய சுடுகலன்களைத் தூக்கிப்போட்ட போராளிகளும் எமாந்துதான் போனார்கள். விடுதலையென்பது பேசிப்பெற முடியாததும் போராடித்தான் பெறவேண்டியதென்பதையும் தென்னாபிரிக்க வரலாறு உணர்த்துவதோடு அட்டைகளிடம் குருதிக்கொடையை எதிர்பார்த்ததன் மடைமைத்தனத்தையும் தென்னாபிரிக்க வரலாறு தனது படிப்பினையாக போராடும் மக்களுக்குச் சொல்லிக்கொடுத்துள்ளது எனலாம். தென்னாபிரிக்கப் படிப்பினையாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும் என்று வகுப்பெடுத்து இனவழிப்பிற்குள்ளாகி நிற்கும் தமிழர்களை எமாற்றுவதைத் தமிழர்கள் காறி உமிழ்ந்து கடந்து செல்வார்கள் என நம்புவோமாக.

இத்திரைக் காவியத்தைக் காண்பதற்கு: https://www.youtube.com/watch?v=w9YqTEVJpOM&t=477s&app=desktop

-செல்வி-

2020-05-05