தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-

தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற பெருங்குறைகள் எனலாம். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், கசப்பானதாயினும் உண்மைநிலையை உணர்ந்துகொள்ளவும் முனைப்பேதும் காட்டாத நிலையே முள்ளிவாய்க்காலவலத்தின் பத்தாண்டுகளின் பின்பும் தொடர்கின்றது. பண்டைத் தமிழர்களின் அறிவுமரபிற்கு போதுமான சான்றுகள் வழிவழி நூல்களாக உள்ளங்கை நெல்லிக்கனியாகவுள்ள போதும், இற்றைத் தமிழர்களின் அறிவுமரபு மக்கிப்போய்க் கிடப்பதற்கு இன்றைய ஊடகங்களின் தரம் இழிநிலைக்கும் கீழ்நிலைக்குப் போய்விட்டதைப் பெருங்காரணமெனக் கூறலாம்.

தமக்குவப்பானதும் தாம் கேட்கவும் வாசிக்கவும் விரும்புவனவற்றை மட்டுமே பேசக்கூடிய ஊடகங்களையே பெருமளவானோர் தேடுகின்றமையால், ஊடகங்களின்  வேலையும் இலகுவாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் கட்டற்ற பயன்பாட்டால், அவற்றில் வாசிக்கக் கிடைப்பனவற்றில் உண்மைத்தன்மையும் ஊடகவொழுக்கமும் அறவேயற்றுப்போன பதிவுகளே கூடுதலான நூற்றுக்கூறில் உள்ளது. இதனால் உதிரி எழுத்தாளர்களும் உதிரி வாசிப்புகளும் நிறைந்த ஊடகவெளிக்குள் தமிழர்கள் வாழத்தலைப்பட்டுள்ள இடரே நிலவுகின்றது.

உதிரிகளின் தான்தோன்றித்தனமான எழுத்துகளும் பேச்சுகளும் நடைமுறை அரசியலுரையாடல்கள் என்றளவில் வைத்து நோக்குமளவிற்கு சிக்கல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால், எண்ணவோடங்களில் சிதலமடைந்த தன்மை கூடிக்கொண்டே வருகிறது. விளைவாக, தம்மைச் சுற்றி நிகழ்வனவற்றை புரிந்துகொள்ளுமாற்றலற்ற ஒரு சமூகமமே உருவாகி வருகிறது. தாம் வாழும் சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும் அதனது போக்குகளையும் சமூக உறவுகளையும் புரிந்துகொள்ளுவதென்பது புரட்சிகர மாற்றங்களை நோக்கிப் பயணம் செய்வதற்கு இன்றியமையாதது.

நிகழ்வுகளைத் தமக்குப் பிடித்தவாறு தொகுத்து, அந்த நிகழ்வுகளின் தொகுப்பை அரசியல் ஆய்வெனக்கொள்வோரைத் தவிர தமிழர்களின் இன்றைய சமூக, பொருண்மிய, அரசியல் சூழலைப் புரிந்து அவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லும் எவரையும் காண்பதென்பது நடவாதவொன்றாகவே இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற சொல்லானது இன்று பொருட்திரிபோடு மிகவும் மலினமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக் கருத்தியல் என்றும் அது தமிழர் தேசமானது தேச அரசமைத்து தனது இறைமையை மீட்டெடுத்தலை நோக்கி உழைக்கும் தமிழ்மக்களை வழிநடத்தும் ஒளிவிளக்கு என்றும் புரிந்துசெயற்படுவதற்கு மாறாக, வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டைச் செய்யும் அறிகருவியே தமிழ்த்தேசியம் என்றாற் போல சொட்டைத்தனமாக தமிழ்த்தேசியம் என்ற சொல் நடைமுறையில் மலினப்படுத்தப்படுகிறது.

எமது இனம் எமது மண்ணில் சிங்கள பௌத்த பேரினவெறியாட்டத்தாலும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சூழ்ச்சியாளர்களாலும் இனக்கொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது என்பதை எண்ணியுணர்ந்து வஞ்சினம் கொண்டு இளையோர்கள் தாம் தொடர வேண்டிய தடம் தொடர்வதாய் எந்தவொரு முனைப்பையும் இதுவரை காட்டாமல், வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளினைத் தரவரிசைப்படுத்தும் அளவுகோலாகவும், தாம் வாக்குப்பொறுக்கும் நோக்குடன் செய்யும் குழுவாதச் சீர்கேடுகளை கொள்கைத் தெளிவாகக் காட்டத்தேவைப்படும் சொல்லாகவும் தமிழ்த்தேசியம் என்ற தமிழர்கள் அரசியலின் உயிர்மைச் சொல்லைப் பாழாய்ப் பயன்படுத்திப் பழகுகின்றனர்.

சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரம் அது கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தானியங்கியாக இடைவிடாமல் நிகழ்த்திவரும் கட்டமைக்கப்பட்ட இனக்கொலையானது, 2009 இல் தமிழர்களை வகைதொகையின்றி நரபலிவெறிகொண்டு கொன்று குவித்து தமிழர்தேசத்தை முற்றிலும் வன்வளைத்து முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாதம் தமிழர்கள் மீது நிகழ்த்திய இனக்கொலையின் பின்பாக தமிழர்களுக்கு தமது தேச அரசமைப்பதை விட வேறெந்த அறத்தீர்வும் இல்லை. முள்ளிவாய்க்காலின் முன்னவலம் வரை வேறெதையானாலும் பேசித்தொலைக்க ஒரு தருக்கவெளியேனும் இருந்திருக்கலாம். ஆனால், இனக்கொலைக்குள்ளாகிய பின்பு இற்றைவரை இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்தேசத்திற்கு தனது இறைமையை மீட்டெடுப்பதைத் தவிர இந்த உலகில் உரிமையுடன் வாழ்வதற்கு வேறெந்த வழியும் இல்லை.

சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை அரசின் வன்வளைப்பை அடித்துத் தகர்த்தவாறு தமிழர்தேசம் தனது தாயகநிலங்களை மீட்டு தமிழீழ நிழலரசு அமைத்து தன்னாட்சி பெற்ற தேச அரசாக மிளிரத்தொடங்கும் போதே தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா என்ற தமிழரினத்தின் வரலாற்றுப் பகையின் நேரடி வழிநடத்தலிலும் மேற்குலக வல்லாண்மையரின் கூட்டுச் சூழ்ச்சியுடனும் சீனா, பாகித்தான் போன்ற நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் வெறியினதும் துணைகொண்டு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் தமிழர்கள் இனக்கொலைக்குள்ளாகி தமிழர்தேசத்தின் இருப்பைக் குலைக்கும் வேலையை சிங்களதேசம் இன்றுவரை தொடர்கின்றமை இன்றைய அரசியல் நிலைவரமாகவுள்ள போது, தமிழ்மக்களால் சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தம்மையும் தமது தேசத்தையும் தற்காத்துக்கொள்ளும் வழியேதுமில்லாதவாறு தமக்கென புரட்சிகர விடுதலை அமைப்பெதுவுமில்லாமல் தனித்துவிடப்பட்டுள்ளார்கள். எனவே, இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள சமூகமாக தமிழர்களிடத்தில் புரட்சிகர அரசியலை முன்னெடுக்கத் தேவையான புரட்சிகர அரசியல் முனைப்பு இற்றைத் தேவையாக உள்ளது. ஆனால், இன்றைய இளந்தலைமுறையானது இப்படியெந்த முனைப்புமில்லாமல் ஓட்டுப்பொறுக்கிகளுக்கு முட்டுக்கொடுப்பதை தமிழ்த்தேசிய அரசியல் என பொருட்திரிபு செய்கிறது. தமிழர்கள் புரட்சிகரமாக அணிதிரண்டு அமைப்பாகியே ஆக வேண்டிய காலந்தாழ்த்த முடியாத இன்றைய அரசியல் தேவையானது பாராளுமன்ற அரசியலுக்கு வெகுதொலைவிலேயே உள்ளது. புரட்சிகரமாக அணிதிரளுவென்பது கூடிப்பேசி விட்டு பெயர்வைத்துத் தொடங்கும் ஒரு சடங்குடனான செயற்பாடல்ல.  எமது சமூகத்தின் இற்றைச் சூழலைப் புரிந்துகொள்ளும் தன்மையிடத்தே புரட்சிகர மாறுதல்களே வேண்டி நகரக்கூடிய அரசியலறிவு கைகூடும்.

கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி எனப் பல கூத்தணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதைத் தாண்டி தமிழர்தேசம், தன்னாட்சியுரிமை, தமிழர் இறையாண்மை போன்ற புரிதல்களுடன் தமிழ்த்தேசிய அரசியல் விழிப்பூட்டல் என்பது மருந்துக்கேனும் நடைபெறாச் சூழலே தமிழர் தாயகத்தில் இன்று நிலவுகிறது. தமிழீழ நிழலரசும் புரட்சிகர வாழ்வும் என்றிருந்த போர்ச்சூழல் அரசசார்பற்ற நிறுவனங்களின் நேரடி ஊடாட்டத்தினுடனான சூழலாக மாறியிருக்கிறது. அரசசார்பற்ற நிறுவனங்கள் போரின் கொடிய வடுவைச் சுமந்து நின்ற மக்களின் மீட்பர்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்ருக்கிறது. தாராளமயப்போக்கு தமிழர்களின் அத்தனை வாழ்வியல் கூறுகளிலும் வியாபித்திருக்கிறது. அறிவின்பாற்பட்டு நுகர்வுத்தெரிவுகளை மேற்கொள்ளாமல் கண்டதையும் நுகரும் கட்டற்ற தாராளமய நுகர்வுப் பண்பாட்டிற்குள் தமிழ்ச் சமூகம் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளது. அனைத்தையும் தீர்மானிக்கும் அரசியலைத் தீர்மானிக்கவல்ல பொருண்மியம் குறித்தும் அதன் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள சமூக அடித்தளம் குறித்த பார்வையேதுமின்றியும் அது குறித்த விழிப்பு ஏதுமின்றியும் சமூக மாற்றம் குறித்து பேசுவதும் திட்டித்தீர்ப்பதும் பயனற்ற செயலே..

உற்பத்தி, விநியோகம், சந்தை, நுகர்வு என்ற பொருளியலின் கூறுகளை ஆழமான உடற்கூற்றாய்வுக்குட்படுத்தினால் மட்டுமே தமிழர்களின் இற்றைச் சமூக இருப்பினை அதன் உண்மைநிலையில் புரிந்துகொள்ளலாம். தமிழர்களின் உற்பத்திப் பொருளியல் என்பது வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. வேளாண் மற்றும் கடற்றொழில் போன்றவற்றைத் தவிர வேறெந்த உற்பத்தித்துறையும் தமிழர்களிடத்தில் சொல்லுமளவுக்கு இல்லையென்பதோடு இவற்றின் சந்தையையும் மாற்றார்களே தீர்மானிக்குமளவுக்கு தமிழர்கள் தமது வேளாண் மற்றும் கடல்சார் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையினையும் இழந்துள்ளனர். இப்போதெல்லாம் மாற்றாரின் குறிப்பாக தென்னிலங்கையின் உற்பத்திப் பொருட்களை கூவி விற்கும் முகவர்களாகவே தமிழிளையோர் தொழில்வாய்ப்பைப் பெறுகின்றனர். மாற்றாரின் பொருட்களை எமது மண்ணில் கூவி விற்றுத் தரகு பெறும் ஒரு இழிநிலைப் பொருண்மியப் பண்பாட்டிற்குள் எமது இளையோர் உள்வாங்கப்படுகின்றனர். உணவு, உடை, உறையுள், கல்வி, மருத்துவம், விளையாட்டு என எந்த நுகர்வுத்தெரிவும் அறிவின்பாற்பட்டில்லாமல் தாராளமயத்தின் விளம்பர உத்திகளுக்குள் இலகுவில் எடுபட்டுப் போகும் நுகர்வுப்பண்பாடே இன்று எமது மண்ணில் நிலவிவருகிறது.

இப்படியாக பண்டங்களை நுகரும் பிண்டங்களாக தமிழர்கள் மாறி அத்தனை அடிப்படைத் தேவைகளுக்கும் மாற்றானின் உற்பத்தியிலும் சந்தையிலும் தங்கியிருக்கும் இழிநிலையில் இருந்தால் எமது சமூகக் கட்டமைப்பும் அதிலுள்ள அரசியலும் அவ்வாறான இழிநிலையிலேயே இருக்கும். இப்படிப் பண்டங்களை நுகரும் பிண்டங்களாக எதையும் கேள்விகளுக்கப்பால் நுகரும் தாராளமய எண்ணப்பிரள்வுகளுக்குள்  மூழ்கியிருக்கும் சமூகத்திற்கு என்ன வகையான அரசியல் தேவைப்படும்? இப்படிக் கட்டற்று வாழ்வதற்கு ஏன் தனிநாடு? ஏன் அரசியல் அதிகாரம்? ஏன் தனித்த தேசம்? எனவே இப்படியாக தறிகெட்ட நுகர்வுப் பண்பாட்டில் தன்னிறைவு சார்ந்த பொருண்மியப் பார்வை எதுவுமின்றி வாழ்வதற்கு அவர்களுக்கு எல்லோருக்கும் திறந்துவிட்டு மாற்றாரின் பொருட்களைக் கூவிக் கூவி விற்று வாழ்வதற்கு தனித்த தேசம் தேவைப்பபடுமா? தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகின்றது? இதுநாள் வரை தமிழர்கள் செய்த ஈகங்களும் கொடுத்த விலைகளும் எதற்காக? மாண்ட வீரர்களின் கனவுகள் மண்டியிட்டு வாழ்வோரின் இழிநிலையில் வெந்து தணியட்டும் என்று விட்டு விட்டு நக்கிப்பிழைத்து நாட்களை நகர்த்திப் பழகுவதா தமிழரின் இனிவருங்கால அரசியல்?

இந்தியச் சூழ்ச்சியாளரின் சூழ்ச்சிதிட்டத்திற்காக தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்வதற்காக தேன் தடவிய நஞ்சாக இறக்கிவிடப்பட்ட விக்கினேசுவரன், மேற்கின் அடிவருடியாக அரசியல் செய்யும் மெதடிச கிறித்துவ அவையின் பேராளரான சுமந்திரன், கா.கா.பொன்னம்பலத்தின் மேட்டுக்குடிப் பரம்பரை அரசியல் கட்சியை நிலைநிறுத்த கொள்கைக்குன்றாகக் காட்டி அரசியல் விளையாட்டுச் செய்யும் கயேந்திரகுமார் என்ற இந்த மூவருமே தமிழ்மக்கள் அதிலும் குறிப்பாக இளையோர் குழுக்களாகச் சிதறிக் கிடக்கப் பெருங்காரணமானவர்கள் எனலாம். “தலைவரின் பேச்சு விக்கியின் மூச்சு”, “Stand for Wikki” என்று இந்திய அடிவருடிக்குக் கொடிபிடிக்கத் தமிழிளையோரைத் தூண்டி விட்ட கயேந்திரகுமாரின் மதிகெட்ட அரசியல் இன்று அவரின் பரம்பரைக்கட்சியின் இருப்பிற்கே ஆப்பாகிவிட்டிருப்பது குறித்து அவர் தற்திறனாய்வு செய்து தன்னைத் திருத்திக்கொள்பவராகவும் இல்லை. விக்கினேசுவரன், சுமந்திரன் மற்றும் கயேந்திரகுமார் என்ற இந்த மும்மூர்த்திகளும் சட்டவாளர்கள் என்ற பின்னணி கொண்ட கொழும்புமைய மேட்டுக்குடி அரசியலாளர்களே. இவ்வாறாக, இன்னமும் தமிழ் மக்களைக் குழுப்பிரிப்பதில் இந்தக் கொழும்பு மைய கொழுப்பேறியவர்களே வேறு வேறு வேடமணிந்து தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பித்தலாட்டக்காரர்களாக உள்ளனர்.

குழுப்பிரிந்து நிற்கும் அனைவரும் இம்மும்மூர்த்திகளைப் பற்றி “காக்கை” புலனாய்வு செய்து அரசியலடிப்படையில் அம்பலப்படுத்திய மூன்று கட்டுரைகளையும் நேரமெடுத்துப் படிக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

http://www.kaakam.com/?p=1116

http://www.kaakam.com/?p=1286

http://www.kaakam.com/?p=1003

http://www.kaakam.com/?p=1116

http://www.kaakam.com/?p=1286

http://www.kaakam.com/?p=1003

இக்கட்டுரைகளை ஆழமாகப் படித்த பின்பாக நீங்கள் மெய்நிலையுணர்ந்து மாற்றங்களை பாராளுமன்ற வாக்குப்பொறுக்கும் அரசியலுக்கு வெளியில் நின்று வேண்டுவீர்கள் என நம்புகின்றோம்.

இரண்டகர்களை இனங்காண்பதை தொடர்செயன்முறையாகக் கொண்டால், பட்டியல் நீண்டு செல்லுமே தவிர வேறெந்தப் பயனுமிராது. வாக்குப்பொறுக்கும் பாராளுமன்ற அரசியலில் பதவியில் அமரும் வரை அவர்கள் சொல்லும் பொய்புரட்டுகளை மக்கள் இலகுவில் அடையாளங் காண்பதில்லை என்ற மக்களின் அரசியற் போதாமைகளை நம்பியே பலர் பதவிக்கு வரத்துடிக்கின்றனர். 6 வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை சுமந்திரன்+சம்பந்தன் மட்டும் அல்ல பாராளுமன்ற அரசியலில் நுழையும் மற்றும் இயக்கவழிமுறையைக் கையிலெடுக்காமல் இருக்கும் அனைவரும் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுதலித்து இக்கட்டான காலச் சூழல்களில் தமிழர்தேசத்திற்கு இரண்டகம் செய்வர் என்பதை இங்கு தடித்தகோடிட்டுக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

“தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா சரியான திட்டமிடலும் வேலைத்திட்டமுமில்லாமல் இயலாமையின் வெளிப்பாடாக கூறியது போல இல்லாது, தமிழ்த்தேசியம் குறித்த விரிந்த பார்வையும் அதன்வழி வந்த தற்சார்பு வாழ்வியலும் அது வேண்டிநிற்கும் தமிழர்தேசம், தமிழர் இறையாண்மை, தமிழர் தன்னாட்சியுரிமை என்பவற்றைக் கோரும் புரட்சிகர இயக்க அரசியல்வழி மட்டுமே தமிழர்களை இனி காப்பாற்றும் என்று வரலாற்றின் பதிவை இற்றைப்படுத்திக்கொள்வோமாக!

தொடரும்…….

காக்கை

2020.02.19

 5,868 total views,  3 views today

(Visited 8 times, 1 visits today)