கோத்தாபயவின் வருகை வெளிப்படுத்தும் உலக மற்றும் உள்ளூர் அரசியல் -மறவன் –

சிறிலங்காவின் அரசுத் தலைவராக எவர் வரக்கூடாதென தமிழர்கள் உள்ளத்தால் விருப்பும் வாக்கால் உறுதியும் கொண்டனரோ அவர் சிங்கள மக்களது வாக்குகளின் எண்ணிக்கைப் பலத்தினால் சிறிலங்காவின் அரசுத் தலைவராகத் தேர்வாகியிருக்கிறார். உண்மையில், கோத்தாபய ராயபக்ச எவ்வாறு இந்தத் தேர்தலில் வென்றார்? யாரெல்லாம் அவரின் இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பங்களித்தார்கள்? போன்ற வினாக்களுக்கு நேர்மையாக விடையறிவது இலங்கைத்தீவின் தற்கால அரசியற் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது.

காலனியர்களால் அவர்களின் சந்தை நலனுக்காக உருவாக்கப்பட்ட சிறிலங்கா போன்ற நாடுகளில் தேர்தலில் வெற்றியீட்டுபவரைத் தீர்மானிப்பது வாக்குரிமை கொண்ட மக்களென்பது மெய்யானால், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வலிமை சேர்க்க அல்லது அவர்களை வலிமை குன்றச் செய்ய வல்லதும் வாக்களிக்கும் மக்களின் வாக்குத் தெரிவைத் தீர்மானிக்கவல்ல ஊடகங்களைக் கைப்படுத்தி வைத்திருப்பதும் அவர்தம் தூதரகங்கள் மூலமும், தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் இயங்குகின்ற அமைப்புகள் மூலமும், உள்நாட்டு அடிவருடிகள் மூலமும் சூழ்ச்சியிழைகளைப் பின்னி தம் மேலாதிக்க நலன்களை உறுதிசெய்யக் கூடிய உலக மற்றும் வட்டகை வல்லாண்மையாளர்களே தேர்தல் அரசியலின் அனைத்துக் கூறுகளையும் ஆட்கொண்டு அதில் பெருந்தாக்கம் செய்பவர்கள் என்பது தான் இன்னும் கூடுதலாக மெய்ப்படும் கூற்றாகும்.

அந்த வகையில், நடைபெற்று முடிந்த சிறிலங்காவின் அரசுத் தலைவருக்கான இந்தத் தேர்தலில் எவ்வகையான முனைப்பை உலக வல்லாண்மையாளர்களும் வட்டகை வல்லாண்மையாளர்களும் கொண்டிருந்தனர் என்பதில் தெளிவுற வேண்டியது அடிப்படையானது. இலங்கைத்தீவை அச்சாகக்கொண்டு உலக அரசியலை எமது மக்கள் புரிந்துகொள்ளப் பெருந்தடையாக இருப்பது மேற்கு, இந்திய அடிவருடிகளாயுள்ள உதிரி ஆய்வாளர்கள் இட்டுக்கட்டி உரமேற்றிக் கொண்டிருக்கும் “சீனப் பூச்சாண்டி” அரசியலாகும். இந்தப் பூச்சாண்டி அரசியலில் இருந்து விடுபட்டு மெய்நிலையறிய அமெரிக்கா தலைமையிலான மேற்குலக வல்லாண்மை, வட்டகை வல்லாண்மையாகவுள்ள தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா மற்றும் பொருண்மிய வல்லாண்மை கொண்டுள்ள சீனா என்பன இலங்கைத்தீவில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதற்கும் இந்த நாடுகள் தமக்குள் கொண்டுள்ள இசைவான பரப்பும் முரண்கொள்ளும் பரப்பும் எதுவென்பதற்கும் பதிலுறுத்திவிட்டே மீதி உரையாடலைத் தொடர வேண்டியிருக்கிறது.

சீனப் பூச்சாண்டிஅரசியல்

சீனாவிற்கு மேற்குலகுடனும் இந்தியாவுடனுமுள்ள உறவு ஒரு பெரிய வணிக உறவாகும். சீனா தற்போது சோசலிச நாடுமல்ல. அண்டைநாடுகளின் மீது மேலாண்மை செலுத்தி வரும் நாடுமல்ல. சீனாவிற்கு இந்தியா பகை நாடுமல்ல. 133.92 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவானது சீனாவினைப் பொறுத்தவரை உற்பத்திப் பொருண்மியம் சொல்லக் கூடியளவிலற்ற மிகப் பெரும் நுகர்வுச் சந்தையாகும். டெல்கி கையொப்பமிட்டாலே சீனப் பொருட்களைப் பெருமளவில் நுகரும் இந்தியா என்ற சந்தை சீன உற்பத்திகளுக்குக் கிடைக்கும். எனவே இந்தியா எனும் பெரும் சந்தை தேசிய இன விடுதலையின் பேரால் உடைந்து போவது சீனாவின் வணிகத்திற்குக் கேடானதே.

அதே போல சீனா 690 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான பணத்தை அமெரிக்க வங்கிகளிலும் இன்னும் பல பில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களிலும் முதலிட்டுள்ளது. இதேபோல சீனாவின் வினைத்திறனான தொழிலாளர்கொள் சந்தையை நம்பி பில்லியன் டொலர்கள் பணத்தை அமெரிக்கா முதலிட்டுள்ளது. சீனாவின் பொருட்களுக்கான சந்தைகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே முதலாளித்துவ பொருண்மிய உலகில் தமக்குள் ஒருவரையொருவர் அழிப்பதல்ல அவர்களின் இலக்கு. ஒவ்வொருவரும் மற்றையவரின் உற்பத்தியிலோ சந்தையிலோ ஒருவரின் மேலே இன்னொருவர் தங்கியுள்ளனர். என்பது தான் இந்த நாடுகளின் நிலைப்பாடு.

சீனாவின் அதிகரித்து வரும் பெருமளவிலான உற்பத்திக்காக வளைகுடா நாடுகளிலிருந்து கடல்வழியாக பெருமளவு எண்ணெய் வளங்களை சீனாவிற்கு எடுத்துவர வேண்டியுள்ளது. மலாக்கா நீரிணையைக் கடக்காமல் சீனாவிற்கு வளைகுடாவிலிருந்து கடற்பாதை இல்லை. இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்தான கழுகுப்பார்வையையும் இந்தியாவின் மேலாண்மை இசைவையும் தாண்டி சீனாவால் மலாக்காவைக் கடக்க முடியாது. எனவே இந்துமாகடலில் (தமிழர் மாகடல் என்று தான் நாம் அழைக்க வேண்டும்) எங்கெப்படியான துறைமுகங்கள் சீனாவிற்கு இசைவாக இருப்பினும் இந்தியாவின் மேலாண்மை நிறைந்த பாதையூடாகப் பயணித்துத்தான் மலாக்கா நீரிணையூடாக வளைகுடாவிலிருந்து தனது உற்பத்திகளுக்குத் தேவையான எண்ணெய் வளத்தைச் சீனாவிற்குக் கொண்டு செல்ல முடியும். இதனை மலாக்காவைச் சுற்றிப் பலமாகவுள்ள இந்தியாவோ அல்லது வளைகுடாவைச் சுற்றிப் பலமாகவுள்ள அமெரிக்காவோ தடுக்காது. நெருக்கடிகளை சீனாவிற்கு ஏற்படுத்தித் தமது வணிக முதன்மையை நிலைநிறுத்துவதே அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நோக்கம். இந்த நெருக்கடிகளைக் குறைக்க வேலை செய்வதைத் தாண்டி அண்டை நாடுகளின் மேலான மேலாண்மையைச் சீனா செய்வதாகச் சொல்வது இந்தியாவிற்குத் தேவையான புரட்டுகளில் பெரும் புரட்டேயன்றி வேறெதுவுமல்ல.

(குவாடர் துறைமுகத்திலிருந்து தரைவழியாக சீனாவிற்கு பாதைபோடும் திட்டம் வணிகளவில் பெரும் எண்ணெய்க் கொள்கலன்களை கடல்வழியாக மிகக்குறைந்த செலவில் சீனாவிற்கு எடுத்துச் செல்வதுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாததென சீனாவுக்கும் தெரியும், அமெரிக்காவுக்கும் தெரியும். ஆனால் தன்மீதான வணிக நெருக்கடியைக் குறைக்கவே சீனா இப்படியான மாற்றுகளைச் செய்கின்றதே தவிர அதைத் தாண்டி வேறெதுவும் திண்ணமாக இல்லை)

இந்தியாவின் உலக அரசியலும் இலங்கைத்தீவு தொடர்பான அதன் நிலைப்பாடும்அன்று முதல் இன்று வரை

இருதுருவ உலக ஒழுங்கிருந்த காலத்தில் JVP கலவரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி 1971 இலேயே படையுடன் இலங்கைத்தீவிற்குள் வரவிருந்த இந்தியாவிற்கு JR இன் தீவிர அமெரிக்கச்சார்புப் போக்கினை மிரட்டி மாற்றியமைக்க, 1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பயன்பட்டது. இருதுருவ உலக ஒழுங்கின் போது சோவியத் ரசியாவின் பக்கம் சார்ந்திருந்த இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதைத் தடுக்கும் முகமாகவே இந்தியா விரைந்து செயற்பட்டு இந்தியா- சிறிலங்கா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொண்டது. இருதுருவ உலக ஒழுங்கிருந்த போது இலங்கைத்தீவிற்குப் படையுடன் வந்து இந்தியா மேலாண்மை செலுத்த சீனா காரணங்காட்டப்படவில்லை. ஆனால் 1991 இன் பின்பான ஒருதுருவ உலக ஒழுங்கில் சீனாவைக் காரணங்காட்டுவது என்பது அண்டை நாடுகளின் மீதான இந்திய மேலாண்மை விரிவாக்கத்திற்கு இலகுவாக இருக்கிறது. அமெரிக்காவும் மூன்றாமுலக நாடுகளின் மீதான தனது மேலாதிக்கத்தை சீனாவைக் காரணங்காட்டியே நியாயப்படுத்துகிறது.

பின்னர் சோவியத் உடைந்து ஒருதுருவ உலகப் போக்கு அமெரிக்கா தலைமையில் 1991 இன் பின்னர் ஏற்பட்டதைத் தொடர்ந்து மெதுமெதுவாக அமெரிக்கா பக்கம் சாய்ந்து சென்ற இந்தியாவின் வெளியுறவுப் போக்கு காங்கிரசின் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுவாற்றல் ஒப்பந்தத்தின் (India United States Civil Nuclear Agreement) பின்பாக இந்தியா அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான அடியாளாகவும் அடிவருடியாகவும் உலக அரசியலில் செயற்பட்டது. அமெரிக்காவின் வல்லாண்மையில் அதிர்வுகள் ஏற்படும் படியான மாற்றங்கள் உலகளவில் நடந்துவருவதால் அமெரிக்காவின் கண்ணசைவில் முடிவெடுக்கும் கட்டத்தைப் பலநாடுகள் தாண்டி வருகின்றன. உக்ரேன் விடயத்தில் சறுக்கிய அமெரிக்கா பின்னர் சிரியா விடயத்திலும் சறுக்கிய பின்பு தற்போது ஈரான் விடயத்தில் வாய்ச்சொல் வீரனாகவும் வடகொரிய விடயத்தில் பட்டும் படாமலும் செயற்படுவது அமெரிக்காவின் வல்லாண்மை ஒருதுருவ உலகப்போக்கை மேலும் எவ்வளவு காலத்திற்கு உறுதிசெய்யப் போதுமானது என்ற ஐயுறவு உலக அரசியலில் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலைமையாலும் மற்றும் RSS என்ற பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க ஆட்சிக்கு வந்த பின்பாக புராண மயக்கத்திலும் சாணக்கியன் கால சிந்தனைக்கும் இந்தியா பின்தள்ளிப் போய்விட்டது.

ராயபக்ச-இந்திய உறவின் நெருக்கமும் விரிசலும்

மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் இல் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து மகிந்த நடைமுறை அரசியலில் யதார்த்தவாதியெனக் கருதப்படுவதால் அவரது அமைதி முயற்சிகளுக்கு ஒரு குறுகிய காலத்தினை வழங்கிப் பார்க்க இருப்பதாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர்நாளுரையில் சொல்ல நேர்ந்தது. தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுகளைத் தொடர நோர்வேயினை டிசம்பர் மாத முதற் கிழமையில் மகிந்த ராயபக்ச அழைத்தார். போரினைத் தொடங்கி, புலிகளை அழிக்க முடிவெடுத்த இந்தியாவுக்கு மகிந்தவின் இந்த அழைப்பு எரிச்சலையூட்ட, மகிந்த டிசம்பர் இறுதிக் கிழமையில் உடனடியாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தான் வைத்திருந்த முழு வரைபையும் மகிந்தவுக்குக் காட்டி அமைதிப் பேச்சுகளிலிருந்து விலகி, முற்றுமுழுதான போரை முன்னெடுக்குமாறு இந்தியா மகிந்தவை நெரித்தது. இதனாலேதான் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என மகிந்த பல தடவைகள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

மகிந்தவிற்கு இந்தியா செல்லும் வரை புலிகளை அழிக்க முடியும் என்ற நம்பிக்கை கனவிலும் இருந்திருக்கவில்லை. இந்தப் போரினை முன்னெடுக்க முழு உலகத்தையும் பயன்படுத்தப் போகும் வரைபு வரை இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பிலேயே நடந்தது. தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்ததால் துட்டகாமினி என்ற மகாவம்சப் புரட்டின் தலைமகனின் தரநிலை மகிந்த ராயபக்சவுக்குக் கிடைத்து விட, ஒரு பாசிச வெறி பிடித்த தமிழினக்கொல்லியாக தனது முழுநேரப் பணியைத் தொடர்ந்தார்.

ஆனால், போரின் பின்பான மீள்கட்டுமானப் பணி ஒப்பந்தங்கள் போரிற்காக கடுமையாகப் பங்களித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு அதிகம் கிடைக்கவில்லை. மாறாக, அத்தனை ஒப்பந்தங்களும் இந்தியாவுக்கே சென்றன. வணிகக் கணக்கில் நன்மையில்லை என இந்திய நிறுவனங்கள் கழித்து விட்ட ஒப்பந்தங்களே உண்மையில் சீனாவிற்கு வழங்கப்பட்டன. “துறைமுகம், வானூர்தி நிலையம், நெடுஞ்சாலை என அத்தனை ஒப்பந்தங்களையும் நான் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன். அவற்றுள் இந்தியா ஏற்காதவற்றை மட்டும் தான் சீனாவிற்குக் கொடுத்தோம். ஏனெனில் அப்படியான ஒப்பந்தங்களை சீனாவே ஏற்கக்கூடியது” என்று மகிந்த மிகத் தெளிவாகப் பலமுறை இந்திய ஊடகங்களிற்கான செவ்வியில் கூறியுள்ளார். போரின் பின்பான மீள்கட்டுமான ஒப்பந்தங்களில் இந்திய, சீன நிறுவனங்களே அதிக நன்மையடைந்தன. எனவே மேற்குலகு தனக்குவப்பான ஆட்சியான UNP இன் ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் உலகரங்கில் மகிந்தவின் ஆட்சியை நெருக்கடிக்கு உட்படுத்த தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியது. அதற்கு பொன்சேகாவையும் பயன்படுத்திப் பார்த்தது. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்தது. ஆனால், மேற்கின் இந்த முயற்சிக்கு 2014 இன் நடுப்பகுதி வரை ஒப்புதலளிக்காமல்  மகிந்த ராயபக்சவுடன் ஒட்டியுறவாடியே வந்தது இந்தியா. ஆனால், மேற்குலகின் தூதரகங்கள் மகிந்தவின் ஆட்சியை மாற்றத் தீயாய் வேலை செய்த போது, தனது கையை மீறி மேற்குலகினால் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தனது மூக்குடைந்து விடும் என்று பெரிதும் அஞ்சிய இந்தியாவானது, சீன நீர்மூழ்கிக் கப்பல் ஆபிரிக்காவுக்கான தனது வழமையான ஆண்டுப் பயணத்தின் போது வழமைக்கு மாறாக கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுச் சென்றதுடன் சிறிலங்காவில் மேற்கின் ஆட்சி மாற்றத்திட்டத்திற்கு ஒத்துழைத்தது.

மேற்குலகானது UNP தலைமையிலான ஆட்சியையே தனக்கு உவப்பானதாகக் கருதுகிறது.  “Vision 2025” என்ற பொருண்மியத் திட்டத்தை சிறிலங்காவில் நிறைவேற்றுவதற்காகவே இந்த நல்லிணக்க அரசாங்கம் எனப்படும் அரசாங்கம் மேற்கினால் கொண்டுவரப்பட்டது . தமது “Vision 2025” என்ற திட்டத்திற்காக  உப்புச் சப்பற்ற ஒரு தீர்வினையென்றாலும் கையறு நிலையிலிருக்கும் தமிழர்களுக்கு வழங்கி அதனை தமிழர் பேராளர்கள் மூலமாக தமிழர்களை ஏற்க வைத்துத் தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைக் காயடித்து தமது சந்தைக்கான நிலையான அமைதியை ஏற்படுத்தும் திட்டமே அமெரிக்க தலைமையிலான மேற்குலகிடம் இருக்கிறது. தமிழர்களிற்கு இலங்கைத்தீவில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் தம்மிடம் வந்து முறைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. ஏனெனில் இலங்கைத்தீவு அமைதிச் சந்தையானால் மேற்கின் நிதி மூலதனங்கள் இலங்கைத்தீவில் மீயுயர்ந்து மேற்கின் பிடி இலங்கைத்தீவில் மேலோங்கும். மேற்கின் டொலர்கள் மற்றும் யூரோக்களில் வரும் நிதிமூலதனத்துடன் இந்திய உரூபாய்களால் முதலீட்டில் போட்டியிட முடியாதென்பதால், இலங்கைத்தீவு முதலீட்டிற்கு உவப்பான அமைதிச் சந்தையாக நிலவக் கூடாது என்பதும் அது எப்போதும் ஒரு போர்ப்பதற்றமான பகுதியாகவே தனது கொல்லைப் புறத்தில் இருக்க வேண்டுமென்றே இந்தியா விரும்புகின்றது. ஆகவே, சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தைப் பேண தமிழர்களின் சிக்கல்கள் முதன்மையான ஒரு சாட்டாக இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

இப்படியிருக்க, மேற்குலகிற்கு உவப்பான கடந்த ஆட்சியில் நடந்த அனைத்திற்கும் ரணிலே பொறுப்பு என்பதும் மைத்திரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட உலகின் வியத்தகு கைப்பொம்மையாகவே இருந்து வந்தார் என்பதும் இங்கு சுட்டத்தக்கது. கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்களை உற்று நோக்கினாலே அவை பிரதமர் ரணில் பதவிக்கு வலுச் சேர்ப்பதாகவும் சனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதாகவும் மகிந்த தரப்பில் எவரும் மீள ஆட்சிக்கு வர முடியாது செய்வதாகவும் இருக்கும். அத்துடன் பொருண்மிய அபிவிருத்தி தொடர்பான அனைத்து விடயங்களையும் ரணிலே கடந்த ஆட்சியில் கையாண்டிருந்தார். இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் பலதும் கடந்த ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்டே வந்தன. இதைத் தொடர்ந்து ரணிலை இந்தியாவுக்கு அழைத்த மோடி இந்தியாவின் திட்டங்கள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதனால் தன்னால் சிங்கள மக்களிடத்தில் துட்டகாமினி ஆக்கப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர இந்தியாவின் ஆளும்வர்க்கங்கள் முடிவு செய்தன. இதன் தொடர்ச்சியாக மகிந்தவை இந்தியாவுக்கு அழைத்து மோடி உட்பட்ட மிக முதன்மையானோருடனான சந்திப்புகள் மகிந்தவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அத்துடன் மகிந்தவுடனான இந்தியாவின் ஒட்டான உறவு பல வடிவங்களில் வெளிப்படலாயின. “இந்தியா எமது நெருங்கிய உறவினன். சீனா எமது நீண்ட கால நண்பன்” என்று இந்தியாவில் வைத்துத் தனது கொள்கையை வெளிப்படையாக மகிந்த ராயபக்ச அறிவித்தார். ரணிலைக் காப்பாற்ற நிற்பது மேற்குலகு. மகிந்தவைக் கொண்டுவர நின்றது இந்தியா. சீனாவைப் பொறுத்தவரை தனது முதலீட்டுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே வேலை செய்யும்.

இலங்கைத்தீவில் அளவுகடந்து செல்லும் அமெரிக்க ஆதிக்கமும் இந்தியாவின் பதட்டமும்

அமெரிக்காவால் சிறிலங்காவில் கொண்டுவரப்பட்டு கடந்த ஆட்சியில் ஒப்புதலளிக்கப்படும் தறுவாயில் இருந்த திட்டங்கள் குறித்துச் சுருங்கக் கூற வேண்டியது இக்கட்டுரையைப் புரிந்துகொள்ளத் தேவையானதென்பதால் அது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

படைகளை நிலைநிறுத்துவதற்கான உடன்படிக்கை (SOFA- Status of Forces Agreement)

இது அமெரிக்க இராணுவம் இந்து மாகடல் வட்டகையை தங்கு தடையின்றிப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றது. இதனால்,

  • அமெரிக்க இராணுவம் தம்நாட்டு அடையாள அட்டையுடன் விசா நடைமுறையேதுமின்றி இலங்கைத்தீவுக்கு வந்து செல்லலாம்
  • அமெரிக்க இராணுவத்தினர் தமது கடமை நேரங்களில் சுடுகலன்களுடன் சீருடையணிந்து இலங்கைத்தீவுக்குள் நடமாடலாம்
  • இலங்கைத்தீவில் பணியாற்றப் போகும் அமெரிக்க இராணுவத்தினரை சிறிலங்காவின் குற்றவியல் சட்டங்கள் கட்டுப்படுத்தாது. அமெரிக்க இராணுவச் சட்டங்களே அவ்ர்களைக் கட்டுப்படுத்தும்.
  • அமெரிக்கப் படைகளின் வானூர்திகள், கப்பல்கள் போன்றன சிறிலங்காவின் எல்லைக்குள் எந்தத் தடையுமின்றி வந்து செல்ல முடியும். அவற்றில் சிறிலங்காவின் அரச படைகள் தலையிட முடியாது.
  • சிறிலங்காவில் தங்கியிருக்கப்போகும் அமெரிக்க இராணுவம் தமக்கான சொந்த தொலைத்தொடர்பு முறையை இயக்கும்.
  • சிறிலங்காவில் அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு கொள்முதல் நடவடிக்கைகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வரி விதிக்க முடியாது

கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவை உடன்படிக்கை (ACSA- Acquisition and Cross- Servicing Agreement)

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்கு இந்திய, சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து தமிழ் மக்கள் மீதான போரில் அமெரிக்கா அனைத்துவிதமான பங்களிப்புகளையும் நல்கிய 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்தான இவ் உடன்படிக்கை 2017 இல் காலவரையறையின்றி நீட்டிக்கப்பட்டது. இலங்கைத்தீவிலுள்ள துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களுக்கு அமெரிக்கா தங்கு தடையின்றி வந்து போக வழிவகை செய்யும் உடன்படிக்கை இதுவாகும்.

Millennium Challenge Corporation (MCC)

2016/12/13 அன்று MCC இன் கூட்டத்தில் சிறிலங்காவில் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதென உறுதிசெய்து 2017 செப்டெம்பரில் சிறிலங்கா வந்து இங்கு தனியார்துறை வளர்ச்சிக்குத் தடையான ஏதுக்கள் என ஆய்வு செய்து பின் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உடன்படிக்கையின் வரைவு நகல் முழுமைப்படுத்தப்பட்டுக் கையெழுத்துக்காக இந்த உடன்படிக்கை காத்திருக்கிறது. MCC என்ற அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு அந்நிறுவனம் 480 மில்லியன் டொலர்களை (அண்ணளவாக 86 பில்லியன் ரூபாய்கள்) மானியமாக வழங்குகின்றது. போக்குவரத்து, மற்றும் நிலப்பதிவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட திட்டம் இதுவென உடன்படிக்கை நகல் சுட்டுகிறது. நிலங்களின் உச்சப்பயன்பாடு என்ற போர்வையில் நிலங்களைத் தமக்கான திட்டங்களுக்குக் கையகப்படுத்தும் நோக்கும் தமது விநியோக வழிகளுக்கான கிளைத்திட்டங்களை போக்குவரத்து அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கும் திட்டமாக அமெரிக்கா இந்தத் திட்டத்தினைக் கொண்டுவருகின்றது. கோத்தபாய இந்தத் திட்டத்தை தமிழர் பகுதியில் அரங்கேற்றி தமிழரின் நிலங்களை வன்வளைக்க வழிசெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் FBI உளவு நிறுவனமும் அமெரிக்க இராணுவ வருகையின் முனைப்பும் அமெரிக்கா ஏற்படுத்த முனையும் படைகளை நிலைநிறுத்துவதற்கான உடன்படிக்கை (SOFA- Status of Forces Agreement), கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவை உடன்படிக்கை (ACSA- Acquisition and Cross- Servicing Agreement) மற்றும் Millennium Challenge Corporation (MCC) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் தரப்பட இருக்கும் 480 மில்லியன் டொலர்கள் மானியத்திற்கான உடன்படிக்கை போன்றன இலங்கைத்தீவை தனது இந்து மாகடலின் பொருண்மிய நடுவமாகவும் இராணுவத்தளமாகவும் மாற்றும் அளவு கடந்த அமெரிக்க விரிவாதிக்கத்தையே காட்டுகிறது. இந்த நிலையானது 1987 இல் அமெரிக்க-இந்திய- சிறிலங்கா அரசியல் நிலையை ஓரளவுக்கு ஒத்துள்ளது. 2018-10-26 அன்று பிரதமராகக் கொண்டு வந்த மகிந்தவையும் 50 நாட்களுக்கு மேலாக இந்தியாவால் தக்க வைக்க முடியவில்லை. நிலைமைகள் இவ்வாறிருக்கவே, சிறிலங்காவில் அரச அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. எனவே இதில் இந்தியா ராஜபக்ச தரப்பை அரசுத் தலைவராக்குவதென உறுதியாக முடிவெடுத்து அதற்கான வேலைகளின் இந்தியா முழுவீச்சுடன் செயற்பட்டது.

எனவே தான், கடந்த அரச அதிபருக்கான தேர்தலில் கோத்தபாய ராயபக்சவை வெற்றி பெறச் செய்ய இந்தியா பெருமுயற்சியெடுத்துச் செயற்பட்டது. அதனாலேயே, தனது அடிவருடிகளாகவும் கருத்தியல் அடியாட்களாகவுமுள்ள அரசியல் கைகூலிகளையும் ஊடகர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோத்தபாயவை வெற்றியீட்ட வழிசெய்யக் கூடியவகையில் களமாற்ற இந்தியா பணியிடுகை செய்தது.

கோத்தபாயாவின் வெற்றிக்குப் பங்களிக்கும் அரசியலைச் செய்த தமிழரிடத்தில் அரசியல் செய்ய முனையும் தரப்புகள்

இந்தியாவின் கைப்பொம்மையாகி வடக்கு- கிழக்கு மாகாண முதல்வராகிப் பின் இந்தியாவின் கைக்கூலியான முழுநேர வேலை செய்யும் வரதராயப் பெருமாள் கோத்தபாயாவிற்கு ஆதரவளித்து அவரின் வெற்றிக்காக உழைத்தார்.

மு. திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்ற ஊடகர்களும் சோதிலிங்கம் போன்ற புனைபத்தியெழுத்தாளர்களும் தமிழர்களைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறும் அல்லது வேட்பாளராகத் தெரிவாகும் வாய்ப்பற்ற ஒருவருக்கு வாக்கினை வழங்குமாறும் அல்லது இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்குக் கொண்டு வந்து வித்தை காட்டலாம் என்று நகைப்பிற்கிடமாகப் பேசித் தமிழ் மக்களை ஏமாற்றியோ அல்லது சிவாயிலிங்கம் என்றவரைத் தமிழ்மக்களின் பொதுவேட்பாளராகக் காட்டி அவருக்குத் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கேட்டோ…. இப்படியாக ஏதேனும் ஒரு வழியில் என்றுமே கோத்தபாயாவுக்கு வாக்களிக்க அணியமில்லாத ஏறக் குறைய ஒட்டுமொத்த தமிழர்களையும் கோத்தபாயவைத் தோற்றடிக்க வாய்ப்புள்ள சயித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்காமல் செய்து கோத்தபாயாவின் வெற்றியை உறுதிப்படுத்த இந்திய அடிவருடிகளான ஊடக வேடதாரிகள் கடுமையாக உழைத்தனர்.

சிங்கப்பூரிலுள்ள பேராசிரியரும் மகிந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான மதியுரைஞராகவுமிருந்த ரொகான் குணரட்ணவின் மூலமாக நோர்வேயிலிருந்து நாடு திரும்பிய கயேந்திரனுக்கும் ராயபக்ச தரப்புக்கும் இடையிலான உடன்பாடென்பது கயேந்திரனின் உடன்பிறந்தவரின் விடுதலையும் கயேந்திரனின் அரசியலும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனின் கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பதே. அவ்வாறு கயேந்திரனுக்கும் ராயபக்ச தரப்பிற்கும் பின்கதவுக் கள்ளவுறவு இருப்பதை விடயமறிந்தவர்களுக்குத் தெரியும். அந்த வகையில் கோத்தாவின் மீள்வருகையை உறுதிப்படுத்தக் கால் கடுக்க தேர்தல் புறக்கணிப்புப் பரப்புரையை கயேந்திரன் செய்தார். ஆனால் கூட்டமைப்பை நேரெதிராய் எதிர்ப்பதைத் தாண்டி வேறெந்த அரசியலும் செய்ய முடியாத சூழலில் வாழும் கயேந்திரகுமாரும் இந்த தேர்தல் புறக்கணிப்புப் பரப்புரையில் இணைந்து கோத்தாவுக்கு நன்மையளிக்கக் கூடிய வேலைத் திட்டத்தில் சித்தம் கலங்கியவராக இணைந்து கொண்டார்.

தமது சொற்கேட்டு ஆடிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏதோவொரு அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் ஏதோவொரு வகையில் கொண்டு வரலாம் என்ற நகைப்பிற்கிடமான சிந்தனையில் முற்று முழுதாக மேற்கின் நிகழ்ச்சி நிரலில் பயணிக்கத் தொடங்கிய பின்னர், இந்தியாவிற்கு கூட்டமைப்பின் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டது. எனவே மேற்கின் விருப்பினை நிறைவேற்றும் தரகர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுவதனால் சினமடைந்த இந்தியா, விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்திக் கூட்டமைப்பை ஓரங்கட்டித் தான் எதிர்பார்க்கும் வேலையைச் செய்யத் திடமாக வேலை செய்கிறது.

அப்படியான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அனந்தி சசிதரன் போன்ற அரசியல் தெளிவற்றோரும் வலைப்பட்டனர். அவரும் கோத்தபாயாவுக்கு நன்மை பயக்கும் பொதுவேட்பாளர் தெரிவான சிவாயிக்கு ஆதரவளித்து இந்தியக் கடனாற்றினார். விக்கினேசுவரனுக்கு ஏலவே ராயபக்ச தரப்புடன் ஒட்டான குடும்ப உறவிருக்கையில் இந்தியாவின் விருப்பும் கோத்தபாயவைக் கொண்டுவருவதென்றாக ராயபக்சக்கள் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என ஒரு நற்சான்றிதழை வழங்கித் தனது இந்தியக் கடனை விக்கினேசுவரன் ஆற்றினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலின்மையாலும் மேற்கின் தெரிவுடன் இசைந்து செய்யும் சிங்களதேசத்துடனான இணக்க அரசியாலும் கொதித்துப் போயுள்ள தமிழர்களைப் பொறுத்தளவில் தமிழர்கள் ஓரணியில் சிதையாமல் நிற்க வேண்டுமென்ற ஒரேயொரு காரணத்தைத் தவிர கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதற்கு வெறெந்தக் காரணங்களும் இல்லை. இந்தியாவின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து கூட்டமைப்பு கோத்தபாயாவை வெல்ல வைக்க மறைமுகமாகத் தன்னும் எந்த வேலை செய்தாலும் தமிழ் மக்கள் அதனை ஏற்காமல் கோத்தபாயவைத் தோற்கடிக்கும் வேலையை மட்டுமே செய்வார்கள் என்று கூட்டமைப்பின் தலைமைக்கு நன்கு புரியும். எனவே தமிழ் மக்களின் தெரிவைத் தனது முடிவாக அறிவித்து கடந்த தேர்தலில் கூட்டமைப்பு தனது அரசியலில் பிழைத்துக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் கூட்டமைப்பு தனது தேர்தல் நிலைப்பாடாக சயித்திற்கு வாக்களிக்குமாறு கோராவிட்டாலும், கோத்தபாய ராயபக்சவைத் தோற்கடிக்கத் தமிழர்கள் சயித்திற்கே வாக்களித்திருப்பார்கள். கூட்டமைப்பு வழமையாக இறுதிநேரத்திலே தனது தேர்தல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதுண்டு.ஏனெனில், கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டிற்கு நெரெதிர் முடிவினை எடுக்கவே சிங்கள பௌத்த பேரினவாத வாக்கு வங்கி விரும்பும். உண்மையில் இம்முறை கூட்டமைப்பு தனது தேர்தல் முடிவை அறிவிக்காவிட்டாலும் தமிழர்கள் சயித்திற்கு தான் வாக்களித்திருப்பார்கள். ஆனால், சிங்கள மக்களில் ஒரு சொற்பமான நூற்றுக்கூறு வாக்குகள் தன்னும் கோத்தபாயாக்கு செல்வதைத் தடுக்க கூட்டமைப்புத் தனது தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்காமலே இருந்திருக்கலாம். ஏனெனில் சிங்கள பேரினவாத செய்தித்தாள்களெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சயித்தை ஆதரிப்பதாகக் கூறி தமிழினக் குரோத உணார்வைத்தூண்டி காலகாலமாக ஐ.தே.கட்சிக்கு வாக்களித்துப் பழகிய சிங்கள மக்களையும் இறுதிநேரத்தில் கோத்தபாயாவுக்கு வாக்களிக்கத் தூண்டியது.

இவ்வாறாக தமிழ்மக்கள் கடந்த சிறிலங்காவின் அரசுத் தலைவருக்கான தேர்தலில் தம்மிடம் அரசியல் செய்ய வரும் கூட்டமைப்பு அடங்கலான அனைத்துத் தரப்புகளுக்கும் நல்ல அரசியல் வகுப்பொன்றைத் தமது வாக்குகளால் புகட்டியுள்ளார்கள்.

சிங்கள மக்களும் தமது மகாவம்ச மனநிலையை கடந்த தேர்தலில் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்கள். உறுகுணை ராயபக்சாக்களும் தமது பதவியேற்பை துட்டகெமுனுவின் நினைவாகப் பதவியேற்று மகாவம்ச மண்டையோட்டு அரசியலுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்கள். இந்தியாவுக்கு தனது முதலாவது செவ்வியை வழங்குவதன் மூலமும் இந்தியாவிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டதன் மூலமும் இந்தியாவின் மனங்கவர்ந்தவன் நான் என்பதையும் கோத்தபாய வெளிப்படையாகவே கூறிவிட்டார். இனியும் தமிழ் மக்களை இந்திய அடிவருடிகளால் ஏமாற்ற முடியாது என வருகின்ற நாட்கள் மெய்ப்பிக்கத்தான் போகின்றன.

-மறவன் –

2019-12-21

Loading

(Visited 10 times, 1 visits today)