தமிழர்களும் திறனாய்வு மரபும்- உரைத்தலும் உரைகளும் : தமிழர் மரபுசார்ந்த நோக்கு – செல்வி

அறிவு, பண்பாடு,  மொழி, இலக்கியம் என்ற கூறுகளுடன் இணைந்த வாழ்வியல் மரபின் தொடர்ச்சியில் மரபுவழித் தேசிய இனமான தமிழினம் தனது வரலாற்றையும் பேறுகளையும் செழுமையானதாக வைத்திருப்பதற்கான காரணிகளில் முதன்மையானதாக தமிழர்களிடமிருந்த திறனாய்வு மரபினைக் குறிப்பிடலாம். தலைமுறைகள் கடந்தும் இனத்தின் பேறுகள் வாசிப்பிற்கும் மீள் வாசிப்புக்கும் உட்படுத்தப்படகின்றதெனின், மரபின் எச்சங்கள் வெறுமனே இலக்கியங்களாக மட்டும் இல்லாமல் அவை இனமொன்றின் அறிவுமரபிற்கும் சான்றுகளாகி நிற்கின்றன. ‘செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்று கேள்வி கேட்பதையும் அதற்கு உரிய பதில்களையும் சொல்லவேண்டும் என்ற தொல்காப்பியம் வழி நடந்த தமிழின மரபிற்கு ‘திறனாய்வு மரபைத் தந்தது மேலைத்தேயம் என்பது காலனிய அடிமை மனநிலையிருக்கும் கல்வி மைய அதிகாரத்தின் தவறான கருத்துருவாக்கம் ஆகும். இந்தப் பத்தியானது தமிழர்களின் திறனாயவு மரபு எவ்வாறிருந்திருக்கிறது என்பது பற்றி தேட விளைகிறது.

திறனாய்வு என்பது மேற்கிலிருந்து நாங்கள் கடன் வாங்கிய ஒரு அறிவியல் அணுகுமுறை என்ற கருத்து பெரும்பாலானவர்களிடத்தே நிலவுகிறது. தமிழின் வரலாறு பற்றிய அறிவின்மையும் தமிழின் எழுத்துகளை புரிந்துகொள்ளமுடியாத அறிவிலித்தனமும் அறிவினது ஒட்டுமொத்த இருப்பும் மேற்கிலேயே கொட்டிக் கிடக்கின்றன என்ற அடிமை மனநிலையுமே அந்த போலிக் கருத்துருவாக்கங்களின் பின்னாலுள்ள காரணங்களாகும். தமிழ் இலக்கிய வடிவங்களது இலக்கணங்களைப் புரிந்துகொள்வதும் அவைபோன்ற இலக்கியங்களை மீள்படைப்பு அல்லது மீள் வாசிப்பு செய்தலென்பதும்  அத்தனை இலகுவானதல்ல. ஆகையால் புரிதலுக்கு  இலகுவான மேற்கின் முறைமைகளை நகலெடுத்து, அவற்றின் பாணியில் இலக்கிய வடிவங்களைப் படைக்க முயன்றதன் விளைவாக, அந்த வடிவங்களைச் சீர்தூக்கும் முறைமைகளையும் கூடவே இலவச இணைப்பாக பெற்றுக்கொண்டோம். ‘செப்பும் வழாவும் ..’ புரியாதவர்கள் ஏன் எதற்கு எப்படி என்ற கோட்பாட்டை கையிலெடுத்ததும் வியப்பல்லவே.

திறனாய்வுக் கோட்பாடுகள் தமிழில் இருந்தனவா என்பது இன்னமும் ஆய்வுக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும் திறனாய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று திறனாய்வு என்பது தனித்துறையாக அதற்குரிய முறையியல்களோடு வளர்ந்துகொண்டிருப்பது போல பழந்தமிழ் சமூகத்தில் இருந்ததா இல்லையா என்று தெரியாவிட்டாலும், தொடக்கநிலைக்கூறுகள் இருந்திருக்கின்றது என்பதற்கு சான்றாக தமிழின் உரைமரபைக் குறிப்பிடலாம். தமிழின் உரைமரபென்பது ஒரு இலக்கியமாகும் அதேநேரத்தில் ஒரு திறனாய்வாகவும் கருதப்படக்கூடியதே.

தொல்காப்பியத்தில் ‘நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்’ என்று ஒரு விடயத்தின் நல்லவை, கெட்டவைகளை சீர்தூக்கிப் பார்க்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது. இன்று திறனாய்வு என்ற போர்வையில் குழுவாத புகழ்வெளிச்ச அரிப்புகளின் மேல் நின்றுகொண்டு, திறனாய்வு (விமர்சனம்) என்ற போர்வையில் தம் குழுவில் உள்ளோரை ‘உரைத்தலும்’ தம் குழுவில் அல்லாதோரை ‘கடிதலும்’ என்றாகிவிட்டது திறனாய்வு மரபு. நீ என்னைப் பற்றி எழுதினால் நான் உன்னைப் பற்றி எழுதுவேன் என மாற்றி மாற்றி புகழ்ந்து அந்தப் புகழ்வெளிச்சத்தின் நிழலில் பொருண்மியத்தையும் பெருக்கிக்கொள்வதென்பது இன்றைய படைப்பாளிகளின் போக்கு ஆகிவிட்டது. தங்களது அறிவுமட்டத்தின் அளவுகளை மறந்து, எடுத்த எடுப்பில் விமர்சித்துவிட்டுப்போவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

படைப்புகளில் அவற்றின் வடிவமும் உள்ளடக்கமும் பற்றிய கோட்பாட்டு அடிப்படையிலான திறனாய்வு முறைமையினை நோக்காது, உணர்வுநிலையில் நின்றுகொண்டு, உள்ளடக்கரீதியில் தங்களது உள நிலைப்பாடுகளுக்குள் பொருந்திப்போனால் அவையும் நற்படைப்புகளாகிவிடுகின்றன. தங்கள் உள நிலைப்பாடுகளுக்குள் பொருந்தாத படைப்புகள் வடிவம்சார்ந்து மேன்நிலையில் இருந்தால் கூட, ‘கடிதலுக்கு’ உட்படுத்தப்படுகின்றன. இங்கே படைப்பின் வடிவம் எது என்பதும் ஒரு முரணுக்குரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. படைப்புகள் வடிவமாற்றங்களுக்கு உட்படுதல் தவிர்க்கமுடியாததொன்றாகிலும் முடிந்த முடிவாக மேற்கு கூறும் வடிவ இலக்கணங்கள் தான் சரி, அதனுள் நின்றுதான் படைக்கவேண்டும் என்பது முட்டாள்தனமான கதையாகும்.

திறனாய்வுகள்  படைப்பை வளப்படுத்த எழுந்த காலம் போய், சொந்த நன்மைகளுக்காக தாங்களே தங்களைப் பற்றிய எதிர் விமர்சனங்களை உருவாக்கிவிட்டு, அந்த எதிர்விமர்சனத்தால் புகழடையும் உத்தியும் இங்கே கையாளப்படுகின்றது. ஆடான ஆடுகளெல்லாம் ஒரு பக்கமாய் ஓட, அந்த ஆடுகளுக்கு ஈடுகொடுத்து தன்னை நிலைநாட்ட இயலாத, கந்தையற்றை பேத்தை ஆடு, எதிர்ப்பக்கமாய் ஓடி, எதிர்மறை வெளிச்சத்தைப் பெறுகின்றது. தேசிய ஓட்டத்திலே மாற்றுக்கருத்து என்ற பெயரிலே ஓடிய பேத்தைகளில் பலர் இந்த வகையறாக்களே. ஆனால், படைப்புகள் காலங்களின் வரலாறுகள் என்பது புரியாமல், வரலாற்றைத் திரிவுபடுத்தும் ஈனத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். படைப்புலக மேதைகள் என தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழின் இலக்கண நூலை எந்தளவுக்கு ஆய்வு செய்திருக்கிறார்கள்? இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் இலக்கணங்களை வைத்திருக்கிறது தொல்காப்பியம். காலத்துக்கு காலம் மொழி தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டிருப்பினும் அதன் இலக்கணத்தின் அடியை அறியவேண்டியது இன்றியமையாதது.

தமிழில் திறனாய்வு என்பது செய்யுள்களுக்கு உரைநடை எழுதுவதிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. அந்த உரைநடை எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூட இலக்கணம் வகுத்திருக்கிறது தொல்காப்பியம்.

‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்

பாவின் றெழுந்த கிளவியானும்

பொருள்மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளாடு புணர்ந்த நகைமொழி யானும்

உரைவகை நடையே நான்கென மொழிப’

படைப்பிலக்கியத்திற்கு எழுதும் உரைநடை எவ்வாறிருக்கவேண்டும் என்று திறனாய்வுக்கும் இலக்கணம் வகுத்த தமிழ்மொழியில் படைப்புகளுக்கு இலக்கணம் இல்லாமாலா இருந்திருக்கும்?

                செந்தமிழில் செய்யுள் எழுதும் போது, புலமைசாராத மக்களிற்கு அதன் உட்கிடைகள் விளங்கியிராது. அதனால் அவற்றுக்கு உரைசொல்லும் மரபு இருந்திருக்கலாம். காலம் செல்லச் செல்ல மொழியின் பயன்பாட்டு இலகுத்தன்மை எனும் பெயரில் நிகழ்ந்த மீளுருவாக்கங்களினால் அவை கடுந்தமிழாகின. இன்று அவற்றிற்கு பொருள்கோடல் என்னும் பெயரில் பொருள் எழுதப்பட்டாலும் அவை திறனாய்வென்ற வகையினுள்ளோ, உரைநடை என்ற வகையினுள்ளோ அடக்கப்படுவதில்லை.

‘ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி

தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத்

துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்” என்கிறது தமிழ் இலக்கணம். ஒரு செய்யுளின் உட்பொருளைப் பேசுவதாகவே அன்றைய திறனாய்வு இருந்திருக்கலாம். அதாவது படைப்பொன்றின் உட்பொருளையும் அதனைச் சார்ந்த பிற விடயங்களையும் உரைப்பதென்பதே திறனாய்வுக்கான அடிப்படையான வரையறையாக இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தின் பின் வந்த நன்னூலானது காண்டிகையுரை, விருத்தியுரை என அதனை இன்னமும் ஆழமாக்கி சொல்லியிருக்கிறது. தமிழில் அதிகளவான உரைகள் எழுந்தது தொல்காப்பியத்துக்கே ஆகும்.

ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுந்த படைப்புகள் புலமைசாராத மக்களுக்கு இலகுவில் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஏடுகளை வைத்து, பொதுவாக ஒருவர் படிக்க, வேறொருவர் விளக்கம் சொல்வதாக அமையும் உரைத்தலின் எச்சம் தான் இன்றும் கண்ணகி வழக்குரை காதை என்றும் பிள்ளையார் கதை வாசிப்பு என்றும் புராண படன வாசிப்பு என்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இந்த உரைகூறும் முறைமையிலே கேள்விகேட்டு பதிலிறுத்து கேட்போரின் ஐயங்களை நீக்குவது என மேற்கத்தைய திறனாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படைப் பண்புகள் எம் மரபிலே செறிவாகக் கிடக்கின்றன. குறிப்பிட்ட படைப்பிற்கு பல திறனாய்வுகள் எழும். திறனாய்வாளனின் துறைசார்ந்த அறிவு, அந்த படைப்பு சார்ந்த பட்டறிவு, அவனது மொழிக்கையாட்சி என்பன திறனாய்வின் உள்ளடக்கத்தையும் தரத்தையும் தீர்மானிக்கும். ஆயின் இன்று இது எதுவுமற்ற பாலகர்கள் திறனாய்வு என்ற பெயரில் வன்மங்களையும் துறைபோந்தவர்கள் மற்றைய படைப்பாளிகள் மீதுள்ள காழ்ப்பில் பழிவாங்கல்களையும் திறனாய்வு என்ற பெயரில் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பிலக்கியங்களுக்கான திறனாய்வு பற்றிய இலக்கணங்களும் வரையறைகளும் ஓரளவுக்கேனும் இயல்புழக்கத்தில் இருப்பதாலும் அவை மீதான திறனாய்வுகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாலும் வடிவம் சார்ந்து பாரிய மாற்றங்கள் அடிக்கடி நிகழாமையினாலும் இலக்கியம் சார்ந்த திறனாய்வுகளில் ஒருசிலவேனும் இலக்கியங்களாகின்றன. ஆனால், இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்குமான திறனாய்வு என்பது தமிழ் படைப்புத்தளத்திலே பெரிய இடைவெளி ஒன்றுடனேயே காணப்படுகின்றது.

‘மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், தம்மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார்..’ என்று உரை மரபின் தொடர்ச்சியைக் கூறுவார்கள். ஆயின் நாடகத்தமிழுக்கான திறனாய்வென்பதன் வரலாறானது அறியப்படவேண்டியது. தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும், சிலப்பதிகார அரங்கேற்றுகாதையும் சொல்லிவிடாத இலக்கணங்களையா நாம் சொல்லிவிடப்போகிறோம். ஆனால் அவை கூறும் செந்நெறி அரங்குக்கான இலக்கணங்களிலிருந்து மேற்குசார்ந்த அரங்க வடிவங்களுக்குள் சென்றதனால், மேற்கினுடைய திறனாய்வு முறைமைகளையே சார்ந்திருக்கிறோம். ஆயினும் கூட, தமிழ் அரங்கவெளியைப் பொறுத்தவரையிலும் காத்திரமான, உவத்தல் காய்தலின்றிய ‘நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்’ கூறுதல் என்பது மிகப்பெரும் இடைவெளியாகவே இருக்கின்றது.

                திறனாய்வு என்பது உள்ளடக்கங்களையும் படைப்புகளின் கதையையும் மட்டுமே கூறுதல் என்ற வகைப்பாட்டுக்குள் சுருங்கிவிட்டது. ஆற்றுகை செய்யப்பட்ட முறைமையும் ஆங்காங்கே ஆற்றுகைசார்ந்து தொட்டுச்சென்றாலும் கோட்பாடுகள் பற்றியோ வடிவங்களின் தன்மை பற்றியோ பேசுவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசுமளவிற்கு அந்தக் கோட்பாடுகள் பற்றிய ஆழமான அறிவற்ற நிலையே காரணமாகும். அதைவிடவும் முதன்மைக் காரணமாக, இலக்கியகாரர் என்று தங்களைத் தாங்களே தம்பட்டமடித்துக்கொள்பவர்கள்தான் இன்று படைப்புவெளியின் திறனாய்வாளர்கள் தாங்களே என்று கையை உயர்த்திக்கொண்டு நிற்கிறார்கள். நான்கு வரிகளை கிறுக்கி விட்டு, அதில் ஒரு வரியில் சமசுக்கிருத கலப்பையும் போட்டு, நான்கு அடியாட்களையும் படைப்பாளி வாழ்க என்ற இரீதியில் உரக்கக்கத்துவதற்கு வைத்துக்கொண்டால், அரசியல் முதல் படைப்புகள் சார்ந்த திறனாய்வுகள் வரை, எல்லாமே தங்களை மையமாகக் கொண்டு சுழலுகின்றன என்றே கனவுகாண்கிறார்கள். திறனாய்வுசார்ந்த தமிழ் படைப்புலகம் ஏற்படுத்தியிருக்கும் இடைவெளிக்குள் கொக்கரித்துக்கொண்டிருப்போரிற்கு பதிலிறுக்கவேண்டிய தேவை இருக்கின்றது. வெறுமனே பட்டம் வந்தால் போதும் என்று படிப்பவர்கள், குறிப்பாக கலைத்துறை சார்ந்த மாணவர்கள் தங்களது வாசிப்பு பரப்பைக் கூட்டி, தம் துறைசார்ந்து ஆழமான அறிவுடையோராகவும், தம் துறையிலிருக்கும் இடைவெளிகளை நிரம்பல் செய்பவர்களாகவும் இருந்தால், மீநிரம்பல் செய்வதற்கு வரும் அரைகுறைகள் ஓடிவிடுவார்கள்.

ஆற்றுகையொன்றினை திறனாய்வு செய்தலுக்கும் இலக்கியம் ஒன்றினைத் திறனாய்வு செய்வதற்குமிடையில் அதன் வடிவம் சார்ந்து மிகப்பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. வெறுமனே ஆற்றுகைப் பிரதியை மட்டும் விளங்கிக்கொண்டு (அவர்களது அறிவுக்கு எட்டிய வரையில்) அதன்மீதான திறனாய்வுகளை முன்வைப்பது என்பது அபத்தமாகும்.

 

 

புடைப்புகள் மீதான மாக்சியம் சார்ந்த திறனாய்வு அணுகுமுறையாக,

  1. மேற்கட்டுமானத்தின் கூறுகளை பேசுதல்
  2. வர்க்கப்பார்வையின் கோணம்
  3. இலக்கியவகைமையும் உற்பத்தி முறைமையும் இணைந்த அணுகுமுறை
  4. சமூக நுகர்பொருளாக படைப்பினை நோக்குதல் (பண்பாட்டுப் பொருள்முதல் வாதம்
  5. அரசியல் பிரதியாக மட்டும் படைப்புகளை நோக்கும் முறைமை

என்பனவற்றினை பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் முன்வைக்கிறார்.

படைப்பு மீதான மாக்சியக் கண்ணோட்டத்தினை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஆற்றுகைகள் சார்ந்த திறனாய்வு சார்ந்த புதிய வழியொன்றைத் திறந்துவிடுகிறார். வர்க்கம் சார்ந்த திறனாய்வுகள் என்றவகையில் மாக்சியக் கண்ணோட்டமானது படைப்பின் பேசுபொருள் கூறும் பேசாப்பொருட்களையும் பேசும். பேராசிரியர்.அ.ராமசாமியின் கருத்துப்படி, கலை இலக்கிய பனுவல்களை திறனாய்வு செய்யும் அணுகுமுறை வேறுபாடுகளிற்கேற்ப அந்தப் பிரதியும் பொருள்கோடல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன என நோக்கலாம்.

தமிழ் படைப்புத்தளத்தில் மார்க்சியத் திறனாய்வு முறைமை என்பது கல்வியியலாளர்களின் மத்தியில் மேன்மையுடையோரின் அணுகுமுறையாகக் கருதப்பட்டிருந்தது. சமூக இயங்கியல்களை பற்றி நோக்கும் முறைமையொன்றினைத் தழுவி, அல்லது அதனைக் கற்றுக்கொண்டு அந்தக் கண்ணாடியின்வழியே படைப்புகளைப் பார்ப்பதென்பது தவறானதல்ல. பண்பாடுகளின் அடியாகவும் உற்பத்தி சார்ந்தும் நுகர்வுசார்ந்தும் படைப்புகளை நோக்குதலென்பது சமூக இயங்கியலின் அடிப்படையில் படைப்புகளின் இயங்கியலைப் பார்க்கவேண்டுமென்ற சமூகப்பார்வையின் படி நோக்கின் சரியானதே. தமிழில் திறனாய்வு பற்றிய இலக்கணங்கள் இத்தனை விரிவானதாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. காலமாற்றங்களுக்கும் மாறிவரும் சமூக இயங்கியலுக்குமேற்ப புதிய கோட்பாடுகள் முகிழ்ப்பதென்பது தவிர்க்கமுடியாததொன்றே. ஆயினும், குறிப்பிட்ட கொள்கைகள் குறிப்பிட்ட சமூகத்தின் தளத்தில் முகிழ்த்திருப்பின் அதனை வேறுபட்ட ஒரு இனத்தின் சமூகத்தளங்களில் அவற்றைப் பிரதியிட முடியுமா என்பதும் ஆய்வுக்குரிய விடயமே.

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்கிறது வள்ளுவம். எதனை யார் சொல்லக் கேட்டாலும் அதன் உட்பொருளை தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென பொருள் கூறினாலும், தெளிவாகத் தெரிந்துகொள்ளல் என்பது எதையெல்லாம் குறிக்குமென அவர் குறிப்பிடவில்லை. அல்லது குறிப்பிட்டது எமக்கு கிடைக்கவில்லை. மார்க்சிய அணுகுமுறை கூறும் திறனாய்வு அணுகுமுறைகள் அனைத்துமே படைப்பின் மெய்ப்பொருளைக் கண்டறிவதற்கான கால்களாகவே உள்ளன. பழந்தமிழிலக்கியமான நன்னூலிலே செய்யுள்களிற்கான உரையெழுதும் வகையை காண்டிகையுரை, விருத்தியுரை என்னும் இரண்டு பகுப்புக்களாகக் கூறுகின்றது.

‘சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற

இன்றியமையாது இயைபவை யெல்லாம்

ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே’ என்கிறார் தொல்காப்பியர்.  காண்டிகையுரை என்பது கருத்து, பொருள், எடுத்துக்காட்டு என்பனவற்றையும் கூறுதல் ஆகும். விருத்தியுரை என்பது சூத்திரத்தின் பொருளை மட்டுமல்லாது, குறிப்பிட்ட விடயம் தொடர்பான கருத்துடன் உடன்பட்டோ மறுத்தோ, தங்களது உரையை முன்வைத்தலாகும். ஆயின் விமர்சனங்களுக்கு உட்பட்டவராயினும் ஆறுமுகநாவலர் மற்றும் சங்கர நமச்சிவாயர் ஆகியோர் இவ்வகையான உரைகளை எழுதியுள்ளனர்.

இன்றும் கூட உரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியம் முதன்மையில் இருக்கின்றது. பல சொற்களும் பயன்பாட்டு வகையிலும் தமிழின் எழுத்துகளும் சொற்பயன்பாடும் இன்று இலகுபடுத்தப்பட்டு எல்லோரும் விளங்கிக்கொள்ளும் படைப்புகளைப் படைக்கும் மொழியாக மாற்றமடைந்திருக்கிறது. மொழியால், இனத்தால் தமிழ் மரபின்வழி வந்திருந்தாலும்கூட இன்று பிரதேசத்திற்குப் பிரதேசம், நாட்டுக்கு நாடு பயன்படுத்தும் வகையில் வேறுபாடுகள் உண்டு. ஒரே காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும் கூட, யாழ்ப்பாணத்து தமிழை மட்டக்களப்பு மக்களும், மட்டக்களப்பு மக்கள் பேசும் தமிழை யாழ்ப்பாணமும் மொழிப்பயன்பாட்டு முறையிலும் ஒலிப்புச் சார்ந்தும் சடுதியாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை. அவ்வாறிருக்க, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த தமிழை எல்லோரும்; விளங்கிக்கொள்வதும் சாத்தியமானதல்ல. ஒரு காலத்தில் குறிப்பிட்ட படைப்பு எழுந்த சூழல், அந்த சூழலில் பயன்பாட்டிலிருந்த மொழிக்கையாள்கை, சமகாலத்தில் எழுந்த வேறு நூல்கள் என குறிப்பிட்ட படைப்பின் மீது தாக்கம் செலுத்தியிருக்கக்கூடிய காரணிகள் பற்றியும் பண்பாட்டு இடைவெளிகளால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் தெரியாது அவற்றை அவ்வாறே விளங்கிக்கொள்ள முடியாது. ஆகையால், அவற்றிற்கான உரைகள் எழுதப்படுதல் என்பது மொழிப்பண்பாடு சார்ந்த தலைமுறை இடைவெளிகளை நிரப்புவதாக இருக்கும்.

                தமிழில் திறனாய்வின் அடிப்படையான உரை சொல்லும் முறைமை என்பது அந்தப் படைப்புகள் எழுந்த காலத்திலே எழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும். தமிழின் ஆட்சி தடைப்பட்டு மீண்டும் எழவேண்டும் என்று நினைக்கையில், தலைமுறை இடைவெளி காரணமாக அன்றிருந்த மக்களுக்கு தமக்கு முந்தைய படைப்புகளை படிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும் தமிழ் மீண்டெழவேண்டும் என்ற தளத்தில் அவை உரை கூறப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர்களின் கருத்து. குறிப்பாக சங்கப்பாடல்களைத் தொகுக்கும்போது, உரை கூறுவதற்கான தேவைகளும் இருந்திருக்கலாம். இறையனார் அகப்பொருள் உரையே காலத்தினால் முந்தையது. சமணப் பள்ளிகளிலேயே இலக்கண, இலக்கிய நூல்களை விவாதிக்கும் முறைமை இருந்திருப்பதனால் அங்கே பொருள்கோடல்களும் இலக்கணங்களும் திறனாய்வின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதலாம். மறைமலையடிகளால் எழுதப்பட்ட முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை என்பன இன்றைய தமிழில் வழக்கிலிருக்கும் திறனாய்வுக்கு மிக அருகில் நிற்கின்றன.

நாம் இன்று எதையும் எழுதும் போதும் படிக்கும் போது சான்றுகளாகக் கூறுவது மூலப் பனுவலினை வாசித்தறிந்து அல்ல. அவற்றிற்கு கூறப்பட்ட உரைகளே எம்மை அவற்றை விளங்க வைக்கின்றன. சில திறனாய்வு உரைகள் மூலப்பிரதியை விடவும் முதன்மைபெற்றும் விளங்குகின்றன. தமிழ்மொழியின் இலக்கணங்களை நாம் கற்பதற்கு எமக்கு தொல்காப்பியம் உதவியதா? தொல்காப்பியத்திற்கு எழுதிய உரை உதவியதா? ஆனால் இன்று தமிழின் பயன்பாட்டு முறையில் இன்னமும் இடைவெளிகள் இருப்பதனால், உரைகளுக்கும் பொருள் சொல்ல வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

தமிழைப் பொறுத்தவரையில் திறனாய்வின் அடிப்படையாக இருந்தவை உரைகள் எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் திறனாய்வானது பல்பரிமாணமுடையதாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய திறனாய்வைப் பொறுத்தவரையில் கல்வியை மையப்படுத்திய, அல்லது கல்விசார் அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கான திறனாய்வுகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றன. மரபை மீள்வாசிப்புச்செய்தல், பண்பாட்டின் கூறுகளை பேசுவதற்காக பழந்தமிழ் இலக்கியம் மீதான திறனாய்வுகள் முன்வைக்கப்பட்டன. ஆய்வுநோக்கில் கல்வியாளர்களினால் மேற்கொள்ளப்படும் படைப்புகள் மீதான மீள்வாசிப்புக்களும் திறனாய்வுமுறைமையிலேயே நோக்கப்பட்டன எனலாம்.

தமிழில் திறனாய்வு என்பது இருந்திருந்தாலும் ஆங்கில மரபினால் ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டுக்கலப்பினூடே மாற்றங்களைப் பெற்று வந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. உலகமயமாதலும் புலப்பெயர்வுகளும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் தாக்கம் செலுத்துவது தவிர்க்கமுடியாதது .ஆனால் எந்தளவு விழுக்காட்டில் தாக்கம் செலுத்தியிருக்கினறது என்பது ஆய்வுக்குட்படுத்தவேண்டியது. தகவல் தொழினுட்பத்தின் வளர்ச்சியும் ஊடகத்தின் வளர்ச்சியும் திறனாய்வுத்துறையை மேலும் வளர்த்துவிட்டதெனலாம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல, இன்று முகநூல் வைத்திருப்பவனெல்லாம் திறனாய்வாளர் ஆகிவிட்டான்.

திறனாய்வு செய்கின்றபோது அவை எவ்வாறு திறனாய்வு செய்யப்படவேண்டும், அதன் கொள்கைகள், வரையறைகள் என்பன பற்றி தெரிந்துவைத்திருத்தல் வேண்டும். திறனாய்வு என்பதும் ஒரு ஒழுங்குமுறைப்பட்ட ஒருவகை ஆய்வேயாகும். தொல்காப்பியமானது குறிப்பிட்ட படைப்பு எவ்வாறு திறனாய்வு செய்யப்படவேண்டும் என்பதைச் சொல்லவில்லை. ஆனால் ஒரு இலக்கியம் எவ்வாறு இருக்கின்றது, அதன் பேசுபொருள் என்ன என்பது பற்றிய இலக்கியக் கொள்கைகள் பற்றிப் பேசுகின்றது. ஆனால் இன்றைய திறனாய்வாளர்களுக்கு அவர்தம் நிலைப்பாடுகள், கொள்கைகள் போன்றவற்றின் பார்வையினூடே படைப்புக்களை நோக்கும் தன்மை இருக்கின்றது.

ஈழத்து திறனாய்வைப் பொறுத்தவரையில் பேராசிரியர்.கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மார்க்சியத்தின்வழி நின்றே படைப்புகளை நோக்கினார்கள். அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல்வாதம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என திறனாய்வின் ஒவ்வொரு நோக்குநிலையும் திறனாய்வாளரின் கொள்கைகளின்வழியே காணக்கூடியதாக இருந்தது. இலக்கியப் பிரதிகளையும் படைப்புத்தளத்தையும் புதிய நோக்குநிலையில் தள்ளுவதில் திறனாய்வு முதன்மைபெறுகின்றது. சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலிருந்து படைப்புகள் நோக்கப்படும்போது, அவற்றின் பரிமாணங்களும் வேறுபட்டே காணப்படும். இந்தப்போக்குகள் படைப்புகள் மக்களுடைய வாழ்வியலுடன் இணைந்து இயங்குவதற்கு ஏதுவானதாகும். ஆனால் இன்று திறனாய்வு என்னும் போர்வையினூடே சொந்த புகழ்வெளிச்சங்களுக்காக மிக நன்று, குப்பை என்ற இரண்டு எல்லைகளிலும் மட்டுமே படைப்புகள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளப்படுகின்றது. சுழியத்திற்கும் ஒன்றிற்குமிடையில் பலகோடி எண்கள் இருப்பதுபோல, மிகநன்றுக்கும் குப்பைக்குமிடையில் பல திறனாய்வுகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பெருகிவிட்டதால், கைப்பேசியும், கணணியும் வைத்திருப்பவர்கள் எல்லாம் திறனாய்வாளர்கள் ஆகிவிடுகின்றனர். சுடுகலனேந்தி எதிரியிடம் போராடிய இனம் இன்று தங்களுக்குள் தாங்களே முகநூல் போராளிகளாகி சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். குழுச்சண்டைகளும் குழுத் திறனாய்வாளர்களும் பெருகி, யார் யாரை திறனாய்வு செய்வது என்ற அடிப்படை பண்புநிலை கூட இல்லாமல், படைப்புகளைத் திறனாய்வு செய்யும் இந்நிலை நீடிப்பின், எமது படைப்புத்தளம் அதன் உச்சத்தை அடையாது. நல்ல திறனாய்வொன்றே நல்ல படைப்புகளைத் தர இயலும். தரமற்ற படைப்புகளை பொதுவெளியில் பகிருவதற்கான அச்சத்தினை அது ஏற்படுத்தும். நான்குவரிகளைக் கிறுக்கிவிட்டு, ஒரு புனைபெயரையும் வைத்துவிட்டால் தன்னைப் படைப்பாளி என்று நினைக்கும் படைப்புலகின் கிருமிகளை அழிக்கவேண்டுமெனின், எமது படைப்புத்தளத்தில் நிலவும் திறனாய்வுக்கான வெற்றிடங்கள் நிரப்புப்பட்டே ஆகவேண்டும்.

– செல்வி –

15-06-2019

 5,436 total views,  2 views today