பகுதி 4: யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள் – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை

2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

3. பகுதி – 2அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா

4. பகுதி – 3 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா


யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள்

1. அறிமுகம்

2. யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு
2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு
2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்

3. நிலைநேர்வாய்வு (Case Study)

 • யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது)
 • காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீயான வளர்ச்சி
 • பரிந்துரைகள்

1. அறிமுகம்

ஒரு நகரத்தின் மரபுரிமையானது அந்த நகரத்தின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், தனித்தன்மை  (Uniqueness)   என்பவற்றினை சமூகத்திற்குக் காலங்காலமாக என்றும் எடுத்தியம்புவனவாகக்  காணப்படுகின்றன. அந்தவகையில் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்ததாகவே காணப்படுகின்றது. எனினும் இலங்கைத்தீவில் தமிழர்தாயகங்களில் இவ்மரபுரிமையானது எந்தளவிற்குப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்ற வினாவிற்கு அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்ற பதிலையே குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்தவகையில் ஆய்வுப்பகுதியான யாழ் நகரத்தின் மரபுரிமையை தொல்பொருளியலியல் கண்ணோட்டத்தில் நோக்கும் போது தமிழர் பண்பாடு மற்றும் காலனித்துவ எச்சங்களினை தன்னகத்தே கொண்ட நகரமாக காணப்படினும் அவற்றில் சில புறக்கணிக்கப்பட்டும் பல பேணிப்பாதுகாத்தல், மீள் பயன்பாட்டிற்குட்படுத்தல் என்பனவன்றி திணைக்களங்களின் வெறும் சொத்துகளாகவே காணப்படுகின்றன (எ.கா: மந்திரி மனை). புதிய நகராக்கவியல் கொள்கைகள் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்தாக மட்டுமல்லாது அது அந்தநகரத்தின் சமூக பொருண்மிய துறைகளினை விருத்தி செய்கின்ற ஒரு கருவியாகவும் காணப்படுகின்றது என்று வலியுறுத்தி வருகின்றன என்ற நிலையில் இவற்றினை உரிய நகராக்க பொறிமுறையினுடாக பேணிப்பாதுகாத்தல் என்பது தேவையாகின்றது.

2. யாழ் நகருக்கான மரபுரிமைத் திட்டமிடல்

   2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு

அந்தவையில் யாழ் நகரத்தில் யாழ் நகரத்தில் யாழ்ப்பாணக்கோட்டை, காலனித்துவ நகரம், ரழைய கச்சேரி மற்றும் நல்லூர் என்பன  இடங்களினை மரபுரிமைசார்நத இடங்கள் எனக் கூறலாம்.

எனினும் மேற்குறிப்பிடப்பட்ட இடங்கள் தொடர்பாக பின்வரும் சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன.

 • யாழ்ப்பாணக்கோட்டையும் அதனைச்சூழவுள்ள பகுதிகளும் பல மில்லியன் செலவில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருப்பினும் நகரத்தின் தேவைகளினையோ அல்லது வருமானத்தினையோ ஈட்டித்தருவதாக இல்லை.( பகுதி 1 இல் விரிவாக ஆராயப்பட்டது)
 • யாழ்ப்பாணக்கோட்டைக்கு மிகவும் அண்மையில் போர்த்துக்கேய ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய காலனித்துவத்தினைப் பட்டெறிகின்ற பசனை அமைப்புக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நடுவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல பாதிப்படைந்த மற்றும் நோக்குவாரற்ற நிலையிலும் மேலும் பல வீடுகள் முழுமையான கட்டட அமைப்பும் மாற்றம் பெற்ற நிலையில் புதிய கட்டடங்களாளகக் காணப்படுகின்றன. இவை தொடர்பாக தொடர்புபட்ட திணைக்களங்களால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாரமுகமாகக் காணப்படுகின்றன.
 • பழைய செயலகத்தையும் (கச்சேரி) அதனுடன் இணைந்த பூங்காவையும் அண்டிய பகுதி – பழைய செயலகக் (கச்சேரி) கட்டடம் முழுவதும் சேதமுற்றுக் காணப்பபடினும் அது பற்றிய சரியான திட்டம் இன்னும் இல்லை. மேலும் பல ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக் கொண்ட பழைய பூங்காவானது நிலவளம் மற்றும் நீர்வளம் என்பனவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் மரங்கள் சேதமாக்கப்பட்டதுமான நிலையில் இன்று நிறுவனங்களின் நில உடைமைகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு குறைந்த சதுர மீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டு காணப்படுகின்றன.
 • யாழ்ப்பாணம் என்றவுடனே உள்நாட்டவர்களிற்கும் சரி வெளிநாட்டவர்களிற்கும் சரி உடனடியாக நினைவிற்கு வருவது நல்லூர் கோயிலாகும். இக்கோயிலானது தனியார் சொத்தாக காணப்பட்டாலும், அது இந்நகரத்தின் வரலாறு மற்றும் மரபு என்பவற்றினைப் பட்டெறிகின்றது என்ற வகையில் இக்கோயிலையையும் அதனை அண்டிய பகுதிகளையும் சரியான விதிமுறைகளினை ஒழுகி பேணவேண்டியது தேவையானது. மேலும் இக்கோயிலும் இதனை அண்டிய பகுதியும் சங்கிலிய மன்னனின் ஆட்சியினை இன்றும் பட்டெறிகின்ற மந்தரி மனை, யமுனா ஏரி, சட்டநாதர் சிவன் கோவில் எனப் புகழ்பெற்ற கோயில்களையும் தொல்பொருள் சின்னங்களினையும் கொண்டிருக்கும் நிலையில் இவற்றினை மீள் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் உடைந்த கட்டடங்களாக நோக்குவாரற்ற நிலையில் தொடர்புபட்ட நிறுவனங்களால் விடப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.

2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்

எனவே மேற்குறிப்பிட்ட தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளினைக் கருத்திற்கொண்டு யாழ் நகரத்திற்கான மரபுரிமைத் திட்டத்தினைப் பின்வரும் எண்ணக்கருவின் (concept) அடிப்படையில் அமைக்கலாம்.

படம் 1 : மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்

மரபுசார்ந்த பெறுமதியாக- பாதுகாத்தல் மற்றும் பேணிக்காத்தல் (Heritage as value – Conservation and Preservation)

மரபுசார்ந்த இடத்திற்கு வலுவான இணைப்பை உருவாக்கல் (Develop strong linkage between the heritage place)

சமூக, பொருண்மிய முதன்மைவாய்ந்த பகுதிகளாக மாற்றுதல் (Cultural Tourism)

3. Case Study

3.1 யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது)

3.2 காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீதியான வளர்ச்சி

கி.பி 17 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தினை ஒல்லாந்தர்கள் ஆட்சிசெய்த காலத்தில் அனைத்துக் குடியிருப்புகள் மற்றும் வியாபார வர்த்தக நடவடிக்கைகள் யாவும் யாழ்ப்பாணக்கோட்டைக்கு வெளியே  ஆனால் மிக அண்மித்த தொலைவில் அதாவது தற்போதைய முதன்மைத் தெருவினை (Main Street) அண்டி சதுரக்கோட்டு அமைப்புகளினைக் கொண்ட வீதிகளினையும் வியாபார நிலையங்களுடன் கூடிய குடியிருப்புகள்  மற்றும் கிறித்துவக் கோயில்கள் கொண்ட சிறு நகரமாக இயங்கி வந்த பகுதியே தற்போதைய 1ஆம் குறுக்குத்தெரு – 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதியாகும்.

படம் 3.1.1 அமைவிடம்

காலப் போக்கில் குடித்தொகை அதிகரிப்பினாலேற்பட்ட தேவைக்கு ஏற்ப நகரத்தேவைகள் வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தினால் நகராக்கமானது மேற்குத்திசை நோக்கி விருத்தி பெறத் தொடங்கி 1995 ஆண்டுகளில் ஏற்பட்ட போரின் பின்னர் தற்போதைய நகர நடுவத்தில் உறுதிபெற்று வந்துள்ளது.

    

கட்டிடப் பயன்பாட்டு வரைபடம்

  

(மேலே காணப்படுவன யாழ்நகரத்தில் காணப்படும் மரபுசார்ந்த கட்டடங்கள் தொடர்பிலான மொறட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வில் இடம்பெற்ற படங்கள்)

3.2 காலனித்துவ நகரத்திற்கான தந்திரோபாய மீள்திட்டமிடல்

இந்நிலையில் பழைய இவ் நகரத்தினை மீள இயங்க வைத்தல் என்பது பின்வரும் காரணங்களின் அடிப்படையில் தேவையாகின்றது.

 • மரபுரிமைகளினை பாதுகாத்தலும் கலப்பு அபிவிருத்தியினை (Mixed Development) ஊக்குவித்தலும்
 • தற்போதைய நகர நடுவத்தில் உள்ள நெருக்கடிகளிளை குறைத்ததலும் சிறு நகர நடுவங்களினை உருவாக்குதலும்
 • சதுரக்கோட்டு வடிவ அமைப்புக் கொண்ட நகர அமைப்பானது இலகுவான நடைப்பயிற்சி (walking, navigation) என்பனவற்றுக்கு ஏதுவாக அமைவதுடன் வரலாற்று முதன்மைவாய்ந்த பகுதிகள் மற்றும் இயற்கை இயல்புகள் என்பன நெருக்கமான இணைப்பினைக் கொண்டுள்ளமையால் இதனை மீள் இயக்குவதன் ஊடாக பொது இடங்களினை உருவாக்குதலும் அவற்றின் பயன்பாட்டினை ஊக்குவித்தலும்
 • சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் மரபுரிமையுடன் இணைந்த பிற பொருண்மிய மற்றும் பண்பாட்டு விருத்தியினுடாக யாழ் நகரத்திற்கு என பன்னாட்டு வர்த்தக முத்திரை (Brand/Trade Mark) ஒன்றினை உருவாக்குதல்

(எ.கா: நெதர்லாந்தில் அம்ஸ்டடாம் நகரத்தில் I am sterdam என்ற வாசகம் காணப்படுகின்றது)

3.2.1 பரிந்துரைகள்

இக்காலனித்துவ பகுதியானது கீழ்வரும் நகராக்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கையாள்வதன் மூலம் மீள் இயக்கம் செய்யலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது.

 

அ. ஏற்கனவே உள்ள பொது இடங்களினை பௌதீக உட்கட்டமைப்புகள் மூலம் இணைத்தல்

இவ் ஆய்வுப்பகுதியானது யாழ்ப்பாணத்தின் மிகப்பழைமை வாய்ந்த கிறித்துவக் கோயில்களையும் மிகவும் புகழ்பெற்ற சந்தையினையும் மற்றும் இதன் எல்லைப்புறத்தில் யாழ் கோட்டை மற்றும் சுப்பிரமணியம் பூங்கா என்பவற்றினையும் கொண்டுள்ளது. இவற்றினை  மிகவும் சிறந்த முறையில்  நடைபாதைகள், ஈருருளிப் பாதைகள் அல்லது தொடர்ச்சியான முறையில் மரங்கள் என ஏதோ ஒரு பௌதீக உட்கட்டமைப்புகள் மூலமாக இறுக்கமான முறையில் இணைத்தல்.

ஆ. புதிய பொது இடங்களினை உருவாக்குதல்

(1) இப்பகுதி ஒரு குடியிருப்புப் பகுதி என்பதனால் அகவை முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கான சிறு சிறு பொது இடங்களினை உருவாக்குதல் (Urban pocket). இப்பகுதியில் போரின் காரணமாக பல வீடுகள் சேதமுற்றுக் காணப்படுகின்றன. இக்காணி உரிமையாளர்களின் அனுமதியுடன் மதில் சுவரினை குறிப்பிட்ட அளவு அடிகள் உள்ளெடுத்தல் (Setback) மூலமாக புதிய இடங்களினை உருவாக்குதல்.

(2) யாழ் நகரத்தில் கோயில்களிற்குக் குறைவில்லை. எனினும் இவை எந்தளவிற்கு சமூக நிறுவனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய விடயம். யாழ் நகரில் தொடர்ந்து வரும் திட்டமிடப்படாத நகராக்கம் பல சிக்கல்களினை ஏற்படுத்தி வரும் நிலையில் இக்கோயில்கள் கூட பல்வேறு சிக்கல்களிற்குத் தீர்வாக அமைகின்றன என்ற அடிப்படையில் கோயில் நிருவாகத்தினரின் அனுமதியுடன் நிபந்தனைகளுடன் பூசை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களாக மாற்றுதல் அல்லது கட்டண அறவீட்டுடன் குறிப்பிட்ட நேரங்களிற்கு வாகனநிறுத்தகங்களாகப் பயன்படுத்தப்படல்.

ஆகக்குறைந்தது கீழுள்ள கோயிலிலுள்ள நடைமுறைகளையாவது பின்பற்றுதல் சிறந்தது.

(3) யாழ் நகரில் மக்கள் வங்கிக்கான பல கிளைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இப்பகுதியில் 1948 களிற்கு பின்னர் கட்டப்பட்ட மக்கள் வங்கி அலுவலகக் கட்டடமானது தற்போது எந்தவிதமான பயன்பாடுமின்றிக் காணப்படுகின்றது. இதனை உரிய முறையில் மறுசீரமைத்து வங்கிப் பயன்பாட்டிற்கோ அல்லது பிற பயன்பாட்டிற்கோ உட்படுத்தல். கீழ் காட்டப்பட்ட குறுக்கு வெட்டுமுக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பயன்பாட்டினை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படின் தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

(4) சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பொருண்மிய நடுவ விருத்தியும்

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பகுதியும் போதியளவு உட்கட்டுமான வசதிகளற்ற நிலையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றன.  இப்பகுதியின் திட்டமிட்ட அபிவிருத்தியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்ற நடுவமாக மாற்றுதலும் உருவம் 4 இல் குறிப்பிட்டதன் படி , யாழ் நகருக்கான சிறந்த முத்திரையினை (Brand) ஏற்படுத்தும் என்ற நிலையில் இதன் மீள் அபிவிருத்தி (redevelopment) என்பது தேவையாகின்றது. அதாவது யாழ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணக் கோட்டை மற்றும்  காலனித்துவ கால அபிவிருத்தியும் அதனுடன் இணைந்த நடவடிக்கைகள் (கலை நிகழ்வுகள், பாரம்பரிய நடவடிக்கைகள்) என்பவற்றினை கண்டு களித்து யாழ் நகருக்கே உரித்தான உணவினை உண்டு களிப்பதற்கு ஏற்ற இடமாக சின்னக்டைப்பகுதியும்   மாலைப்பொழுதினை களிப்பதற்கான கடற்கரையோரமும் காணப்படுகின்றது. எனினும் இதனுடைய பொருண்மிய மற்றும் சமூக  முதன்மை உணரப்படாத நிலையில் இன்று தனியே வளர்ச்சியடையாத ஆனால் புகழ்பெற்ற சந்தையாக இயங்கிவருகின்றது. எனவே சின்னக்கடையும் அதனுடன் இணைந்த பகுதியினையும் சரியான முறையில் திட்டமிடல் வேண்டும் என்ற நிலையில் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

தற்போது சின்னக்கடை பகுதியானது 2 தளங்களினைக் கொண்டு அதிலும் 1 தளம் மட்டுமே இயங்கிவருகின்றது. எனவே இக்கட்டடமானது குறுக்கு வெட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் தேவை மற்றும் இயற்கை அழகு என்பவற்றை வழங்க கூடிய வகையில் மரபார்ந்த கட்டடக்கலை சின்னங்களினை உள்ளடக்கிய நவீன கட்டடமாக   மீள் அபிவிருத்தி செய்யலாம் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் இக்கடைத்தொகுதியும் சென். ஜேம்ஸ் ஆலயமும் முழுமையாக பாதசாரிகள் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

இ. காலனித்துவகால கட்டடக்கலை வடிவங்களினைக் கொண்ட பகுதியினை சிறப்பு அபிவிருத்திப் பகுதிகளாக பிரகடனப்படுத்துவதுடன் சிறப்பு ஏற்பாடுகளினை (regulation) அமுல்படுத்தல்

17ஆம் நூற்றாண்டுகளில் பிரதான வீதியின் இருமருங்கிலும் நகரமும் அதனை அண்டிய பகுதியும் காணப்பட்டது. இதற்கு சான்றாக இப்பகுதியில் காணப்படுகின்ற குடியிருப்புகளும் அவற்றின்  கட்டடக்கலை அமைப்புகளும் சான்றுபகர்கின்றன.

எனினும் பிரதான வீதியின் வலது புறமாக அதாவது 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம்  குறுக்கு, 2ஆம் குறுக்கு  தெருக்களில் இவை நிலை கொண்டுள்ளது என்பதற்கு இன்றும் இப்பகுதியில் காணப்படுகின்ற கட்டடக்கலை வடிவங்கள் சான்றாக உள்ளது. எனினும் நிறுவன ரீதியாக முறையான கொள்கைகள் சரியான நகரத்திட்டமிடல்கள்  இல்லாத காரணத்தினால் இன்று இப்பகுதிகளின் தனித்தன்மையானது சிதைவடைந்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் இவற்றினை பாதுகாக்க வேண்டியது தேவை என்ற நிலையில்  இன்றும் அதேபோன்ற அமைப்புடைய வீடுகள் கொண்ட ஆகக்குறைந்த ஒரு குறிப்பிட்ட வீதி அல்லது ஒரு கட்டடம் கொண்ட பகுதியினை சிறப்பு ஏற்பாடாக (regulation) அறிமுகப்படுத்தல் என்பது தேவையாகின்றது. அந்தவகையில் படத்தில் காட்டப்பட்ட பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. (மேலதிக ஆய்வுகள் தேவையானது)

சிறப்பு ஏற்பாடுகள் (Special Regulations)

மிகவும் பழைமையான கட்டடங்கள் என்பதனால் கட்டடத்தின் உறுதி குறைந்து காணப்படுதல் மற்றும் இவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட  பொருட்கள் சுற்றுச்சூழலிற்கு கேடுவிளைவிக்காதவாறு நகர வளார்சிதை மாற்றம் (Urban Metabolism) என்ற அடிப்படையில் இவற்றினை மீளுறுதி (retrofitting) செய்வதற்கு ஊக்கம் அளிக்கும் அதேவேளை அவற்றின் உட்கட்டுமானங்களினை மாற்றுவதற்கு சிறப்புக் கழிவுகள் வழங்குவதுடன் கட்டட முகப்புகள் (facade) மாற்றப்படாது இருத்தல் வேண்டும் என்ற விதியினை முழுமையாக கடைப்பிடித்தல்

– இவை சிறப்புக் குடியிருப்புகள் என்ற அடிப்படையில் இவற்றிற்கான வரி விலக்களிப்புகள் மற்றும் வங்கி கடன்கள் மற்றும் ஏனைய விதிமுறைகளில் நெகிழ்வாக இருத்தல்.

– ஒரேவகையான நிற வர்ணங்களினை வழங்குதல்

-இக்குடியிருப்புக்களின் சிறப்புத்தன்மையினை மேலும் வெளிப்படுத்தும் இதனைச்சுற்றி உள்ள குறுக்கு வீதிகளில் தார் வீதிகளினை அமைப்பதனை தவிர்த்து நடைபாதைகளினை (permeable pavement) இட்டு முழுமையான முறையில் வாகனத்தடைகளினை போடுதலினைத் தவிர்த்து ஒரு வழிப்பாதையினை அறிமுகப்படுத்தல்.

-இப்பகுதியானது ஒடுக்கமான வீதிகளினை கொண்டிருப்பதனால் வீதியோரங்களில் மரங்கள் நாட்டுவது சாத்தியம் இல்லாத காரணத்தினால் கீழ்க்காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு வெள்ள வாய்க்கால்களினை இவ்வாறு மூடுவதனை தவிர்த்து பூச்செடிகள் நாட்டி அழுகுபடுத்தல்.

-குறிப்பிட்ட சில வீதிகளிலாவது காலனித்துவ காலத்தினை நினைவூட்டும் வகையில் இருக்கைகள் அல்லது வீதி விளக்குகள் போன்றவற்றை இடுதல்.

-நவீன நகராக்க கொள்கைகளின் படி வீதி பொது இடம் (street as public space) என்பதற்கிணங்க இப்பகுதியானது அதிகமாக கிறித்துவர்களின் குடித்தொகையினைக் கொண்டு இருப்பதனாலும் ஏற்கனவே குறிப்பிட்டபடி இப்பகுதியானது புகழ்பெற்ற பள்ளிக்கூடங்கள், கிறித்துவ கோயில்கள் மற்றும் கடற்கரையோரத்தினை அண்டி காணப்படுவதனாலும்  நத்தார் பண்டிகை காலங்களில் பாண்ட் வாத்தியம், பாலன் பிறப்பு மற்றும் இன்னோரன்ன வீதி நிகழ்ச்சி மற்றும் கடற்கரையில் சிறந்த முறையில் வேறுபட்ட நிகழ்வுகளினை மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் சிறந்த முறையில் நடாத்துதல்.

எடுத்துக்காட்டாக சிங்கப்பூர், பரிஸ் போன்ற நகரங்களில் குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைகள் வாகனங்கள் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Car free Sunday).

– சுற்றுலாத்துறை அனுசரணையுடன் பாரம்பரிய பாதையினை (Heritage Trail) இனை ஏற்படுத்தல்.

-நிழற்றப்பட்ட பகுதி தவிர ஏனைய பகுதியிலுள்ள குடியிருப்பாளர் தமது விருப்பத்தின் பேரில் தமது குடியிருப்பினை gazette செய்வதற்கு முன்வரின் அவற்றிற்கு வரி மற்றும் இன்னோரன்ன விடயங்களில் சிறப்பு விலக்களிப்புகளை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றலாத்துறை என்பன வழங்குதல். எடுத்துக்காட்டாக  கட்டட முகப்புகள் மாற்றம் பெறாத வகையில் வேறு பயன்பாடுகளிற்கு மாற்றுவதற்கு வரி விலக்களித்தல் (change of use).

ஈ. கலப்பு வலயமாக மாற்றுதல் – புதிய செயற்பாடுகளினை ஊக்குவித்தல்

குடியிருப்புகளை அதிகம் கொண்ட இப்பகுதியானது கடந்த கால போரினால் இப்பகுதி      மக்கள் பலர் புலம்பெயர்ந்துள்ளதுடன் பல குடியிருப்புகள் முழுமையாகவும் சில பகுதியாகவும் சேதமடைந்தவையாகவும் காணப்படுகின்றமையால் இப்பகுதி பொதுவாக மிகவும் அமைதியானதாக இயங்குநிலையின்றியே (dynamic) காணப்படுகின்றது. எனவே இப்பகுதியில் பின்வரும் சில செயற்பாடுகளினை உட்புகுத்துவதன் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் பகுதியாக மாற்றுதல்.

 • தனியார் வகுப்புகள் / கல்வி நடவடிக்கைகள் (Tution classes / Educational activities)
 • அலுவலகம் (Office)
 • திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் (Skill development activities)
 • இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான தகவல் தொழினுட்ப நடுவம் (IT centre for teenages and adults)
 • தேநீரகங்கள் (Coffeee shops)
 • உணவகங்கள் (Restaurents)
 • சில்லறைச் சிறப்புச் சந்தை (Reatail supermarket)
 • அரச அல்லது தனியார் துறை அலுவலகர்களுக்கான வதிவிடம் (Living quaterters for Govt. Or Private Sector officers)
 • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் (Recreational facilities for kids and teenagers)

எனவே இவ்வாறு நடவக்கைகளினை ஊக்குவிப்பதற்கு யாழ் மாநகர சபையானது பின்வரும்  உத்திகளை மேற்கொள்ளலாம்.

– வரி விலக்களிப்புக்கள்

– குறைந்த விலையில் நீர் விநியோகம் செய்தல்

– மின்சார சபை கட்டணக் கழிவுகளுடன் இணைப்புகளினை பெற்றுக் கொடுத்தல் அல்லது   புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தினைப் (Renewable energy source) பெற்றுக் கொள்ளுவதற்கான ஆரம்பக் கட்டணத்தினை (initial payment) விலக்களித்தல்

– இக்குடியிருப்புகளை முறையான விதிமுறைகளிற்கேற்ப திருத்தம் செய்வதற்கு இலகு முறையில் அல்லது குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் வழங்குதல் போன்றவற்றினை மேற்கொள்ளல்.

– குடியிருப்பாளர்களின் அனுமதியுடன் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

உ. பிரதான வீதியின் மருங்குகளில் கடை வீடு (Shop house) காணப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படினும் இவற்றில் பெரும்பாலானவை இன்று நவீன கட்டடங்களாக மாற்றம் பெற்று வருகின்றன. இவை தொடர்பாகத் தொடர்புபட்ட நிறுவனங்களான நகர அபிவிருத்தி அதிகார சபை, மாநகர மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களங்கள் என்பன பாராமுகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே அவற்றினை கீழ்வருமாறு மீள்விருத்தி (retrofitting) செய்வதற்கு ஊக்குவித்தல்.

 • கட்டடத்தின் நிறத்தின் தன்மை மற்றும் ஒரே வகையான நிறம் (Special paint scheme)• முதன்மையான கட்டிடக்கலை வடிவங்களை குறிப்பான நிறவர்ணங்கள் மூலம் காட்டுதல்
 • காலனித்துவ கால கட்டடங்கள் என்பதனைப் பட்டெறியும் வகையில் இருக்கைகள் மற்றும் வீதி விளக்குகள் போன்றவற்றினை பொருத்துல்
 • கண்ணாடி சாளரங்கள், கதவுகள் பொருத்துவதன் மூலம் நவீன மற்றும் பாரம்பரிய கட்டடக்கலை வடிவங்களினை பின்பற்றுதல்

• பொருத்தமான காலனித்துவ அல்லது வரலாற்று வரைபடங்களை வரைதல்

 

தொடரும்..

சுஜா

30-09-2018

 8,121 total views,  4 views today

Be the first to comment

Leave a Reply