நினைவுச் சின்னங்கள், நினைவுகள் : நினைவின் அரசியல் -தழலி

 


முள்ளிவாய்க்காலில் சுடுகலன்கள் பேசாநிலைக்குச் சென்று பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் எமது சமூகம் இழப்புகளும் அவலமும் கொண்ட மனப்பதிவுகளினூடாக மட்டுமே மே பதினெட்டினைக் கடந்து செல்ல, சிங்களப் பேரினவாதமோ மண்ணில் புதைந்துபோன எங்கள் மண்டையோடுகளின் மேல் நின்று வெற்றிவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது. விடுதலைக்கான எமது போர் வெறுமனே இழப்புகளை மட்டுமா தந்தது? விடுதலையின் பதிவுகளும் அவை தரும் நினைவுகளும் வெவ்வேறு பரிமாணங்களில் வெவ்வேறு பொருளைத் தரவல்லன. வெற்றிகளும் தமிழனென்ற மிடுக்குடன் மண்மீட்கத் தமை ஈந்த எம்முறவுகளைக் கொண்டாடிய நினைவுகளும் என்றும் உயிர்ப்புள்ளவையே. ஒரு பக்கம் ஆயிரமாயிரம் உயிர்களை நாட்டுக்காகக் கொடுத்தும் கூட சொந்த மண்ணை எதிரியிடம் பறிகொடுத்த இழப்புகளின் வலிகளும், இன்னொரு பக்கம் எமக்கொன்றொரு நாடு இருந்தது; எமக்கென்றோர் காவலர்கள் இருந்தார்கள் என்ற பசுமையான நினைவுகளும் அவற்றை இழந்த தவிப்புகளும் விரக்தியும் என்ற உணர்வுக் கலவை பெரும் துயராகும். பழைய வாழ்வு எமக்கு கிடைக்காதா என்று ஏங்குகிறோம். அது தனி ஒருவனின் வாழ்வல்ல. இனத்தின் வாழ்வு. மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் எமக்கு, காலங்கள் கடந்துகொண்டிருக்கின்றனவே தவிர, எழுகைக்கான சுவடுகள் கொஞ்சமும் தெரியவில்லை. விடுதலைக்கான தேவை அடுத்த சந்ததிக்கு கடத்தப்படலாம். ஆனால் நினைவுகள்? எம் மண்ணில் எமக்கான மண்ணில் வாழ்ந்த அந்த உயிர்ப்புள்ள வாழ்க்கையும் அனுபவங்களும் நினைவுகளால் கட்டியமைக்கப்பட்டவை. நினைவுகள் நேரடியாகக் கடத்தப்படமுடியாதவை. தொட்டுணராப் பெறுதியுடைய நினைவுகளை பேறுகளாக நிலைநிறுத்துவதே “நினைவுகூருதல்”  என்னும் பண்பாட்டுத் தொடர்ச்சி.

மதம் சார்ந்த சடங்குகளாக எம் வாழ்வியலின் கூறாக வரும் நினைவுகூரல் என்பது, வழிபாடாகவோ அல்லது நினைவுநாட்களாகவோ மரபின் தொடர்ச்சிகளாகப் பேணப்படுகின்றன. தமிழினத்தைப் பொறுத்தவரையில் விடுதலைக்கான போராட்டமானது பல வெற்றிகளைத் தந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் இழப்பின் குறியீடாகி நிற்கின்றது. பலரது வீரங்களும் உயிர்க்கொடைகளும் அர்ப்பணிப்புகளும் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன. கொத்துக்கொத்தாக சொந்த மண்ணில் புதையுண்டு போனவர்களைக் கூட நினைவுகூருவதற்கு, யாருக்கு எதிராகப் போராடி மாண்டார்களோ அவர்களிடமே அனுமதியை வேண்டி கெஞ்ச வேண்டிய நிலையில் வந்து நிற்கிறோம். எமக்கான நினைவு நாட்களும் நினைவுகளைத் தட்டும் இடங்களும், சொற்களும், பாடல்களும் எமக்கானவையாக எஞ்சியிருக்கின்றன. அடக்குமுறையின் கொடுமைகளையும் அதிகாரத்தின் வல்வளைப்புக்களையும் நினைவூட்டுகின்றன. ஒவ்வொரு மாவீரனது வீரச்சாவும் அவனின் நினைவு நாளும் அவனது நினைவுச் சின்னமும் அவனை நினைவுபடுத்தும் ஒரு வரியும் அவன் என்ற ஒற்றை மனிதனைத் தாண்டி, இனத்தின் விடுதலையை நினைவுபடுத்துகின்றது. அந்த “நினைவுகள்” ஒவ்வொரு தமிழனிலும் ஒட்டுமொத்த தமிழரிலும் ஏற்படுத்தும் தாக்கமும் அதன் எதிர்விளைவுகளும் விடுதலைக் கனலை அணையவிடா என்பது எமக்குத் தெரிந்திருக்கின்றதோ இல்லையோ, ஒடுக்கும் அதிகாரம் அதில் தெளிவாக இருக்கின்றது. இழப்புகளை நினைவுபடுத்துதல் என்பது துன்பத்தில் மீள மீள மூழ்குவதல்ல. அந்த நினைவுகளின் வியாக்கியானிப்புகள் மீள்தலுக்குரிய ஊக்கிகளாக மேலெழுகின்றன. ஆனால் நினைவுகூருதலுக்கான நாட்களிலெல்லாம் இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் நினைவுகூருதலுக்கு ஒன்றுகூடுவதை தவிர்ப்பதும், தம் பிள்ளைகளுடன் அவை பற்றிப் பகிர்வதும் குறைந்துகொண்டே வருகின்றது. அப்படியாயின் “நினைவுகள்” எப்படி கடத்தப்படும்?

போராளிகளும் பொதுமக்களும் நிலங்களும் வளங்களும் என நாம் இழந்தவைகள் ஏராளம். மக்கள் ஒன்றுகூடுதலுக்கான உரிமை மறுப்பும், மக்களின் செயற்பாடுகளின் மீதான அரச பயங்கரவாதத்தின் கழுகுப் பார்வையும் மக்களின் இயங்குநிலையினைச் சுழியமாக மாற்றும் செயற்பாடேயாகும். குண்டாகி வெடித்துவிட்டு சிதறிப்போயிருந்த சொந்த மகனின் ஈகத்தையும் மறத்தையும் பக்கத்து வீட்டுக்கு கூட சொல்லமுடியாமல் எத்தனையோ தாய்மார்கள் கதறியதும் ஒரு காலம்.  இன்று சொந்த மகனைப் விதைத்த இடத்தில் கூட அஞ்சலி செய்ய முடியாமல் அவரவர் சடங்குகளைச் செய்யமுடியாமல் நினைவுகூர முடியாமல் முட்டுக்கட்டை போடுகின்றது ஒடுக்கும் அதிகாரம். எமக்காக வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களின் கல்லறைகள் யாவற்றையும் அரச இயந்திரம் முற்றுமுழுதாக அழித்தொழித்தது. அதையும் மீறி நினைவுகூர முயன்றபோதெல்லாம் இராணுவத்தின் இருப்பும் அதன் முடிவற்ற ஒடுக்கும் அதிகாரமும் நினைவுகளை அடித்தொதுக்க முயன்றன. எம் இன விடுதலைக்காகப் போராடிய எங்கள் வேர்களின் துயிலுமில்லங்கள் எங்கள் கண்முன்னே வெறும் கற்குவியல்களாய் கிடக்கின்றன. ஆனால், இராணுவ வெற்றிச் சின்னங்கள் ஆனையிறவிலும் மந்துவிலிலும் கிளிநொச்சியிலும் இன்னமும் நாங்கள் தோற்றுப்போனவர்கள் என்ற உண்மையை எமக்குச் சுட்டிக்கொண்டிருக்கின்றன.

வரலாற்றில் தோற்றுப்போன இனத்தின் நிலங்களில் வென்ற ஒடுக்கும் அதிகாரம் தனது ஒடுக்கும் அதிகாரத்தினை பறைசாற்றுவற்கும், தோற்றுப்போனவர்கள் என்ற எதிர்நிலை உளவியலை விதைப்பதற்குமாக வெற்றிச் சின்னங்களை அமைத்து வந்திருக்கின்றன. மந்துவிலில் துவக்கேந்திய சிங்கள இராணுவத்தின் பாரிய உருவமும் சிங்கங்கள் இலங்கையைக் காப்பதான வடிவமைப்புக்களும் எமக்குள் அடிமைத்தனத்தை அல்லவா விதைத்துக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மந்துவிலில் போர் அருங்காட்சியகம் என்ற ஒன்றை வைத்திருந்தது ஒடுக்கும் சிறிலங்கா இராணுவம். மிகச் சிறிய நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து பெரிய போர்க்கப்பல்கள் சுடுகலன்கள் என எமது போராளிகளிடமிருந்து பெற்றவை என்ற பொருளில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அவை தோற்றுப்போனதன் சுவடுகள் என்று எங்களுக்கு சொல்லாமல் சொல்லும் தந்திரம். ஆனால் நாங்கள் அவற்றை உருவாக்குவதில் வல்லவர்களாயிருந்தோம். சுழியத்திலிருந்து வந்து உச்சத்தைத் தொட்டவர்கள் நாம். இனியும் எழுவோம் என்ற மனநிலையையும் தோற்றுவிக்கிறது என்று கருதியோ என்னவோ அரசு அந்த ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி கொடுப்பதில்லை.

முள்ளிவாய்க்கால் எமக்கு தோல்விகளை மட்டும் தரவில்லை. ஆனையிறவு, குடாரப்பு, விமானத்தளம்  என எங்கள் வெற்றிகள் எண்ணிலடங்காதவை. வெற்றிகளை மட்டுமல்ல வெற்றிகளுக்கு காரணமானவர்களைக் கூட நினைவுகூர முடியாதவர்களாக நிற்கிறோம். போராளிகளாகவும் மக்களாகவும் வெளிப்படையாக நினைவுகூருவதற்கான தடைகளை வெளிப்படையாகவே அரசு மேற்கொண்டிருந்தது. அதற்கு யாழ்.பல்கலைக்கழகத்திலிருக்கும் மாவீரர் நடுகல் சிதைக்கப்பட்டதும், கார்த்திகை 27 ஐ ஒட்டிய வலிந்த விடுமுறைகளும் சுற்றிவளைப்புகளும் கைதுகளும் சான்றுகளாகும். ஆயினும் கூட்டாக நினைவுகூருதலும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துதலும் விடுதலைக்கான படிகள் என மக்கள் நம்பினார்கள். அதன் காரணமாக, கல்லறைகள் அழிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் துணிச்சலாக தம் பிள்ளைகளிற்கான வரலாற்றுக் கடமைகளை மக்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்போரில் போராளிகள் மட்டுமல்ல, மக்களும் கொத்துக்கொத்தாக மடிந்திருக்கின்றனர். அரச பயங்கரவாதம், சிங்களக் காடையர்கள், முசுலீம் ஊர்காவற் படைகள், இந்திய  நரபலிப்படைகள் என பல தரப்புகளாலும் மக்கள் நேரடி போரிலும் மறைமுக தாக்குதல்களிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மே 18 ஆனது இழந்துபோன எம்மவர்களின் ஒட்டுமொத்தமான குறியீடாக இருந்தாலும் பருத்தித்துறை முதல் தேவேந்திர முனை வரை காலத்துக்குக் காலம் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்துக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆண்டு முழுமையும் நினைவுநாட்களும் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துகளும் நினைவுச் சின்னங்களாகும்.

முள்ளிவாய்க்கால் என்னும் குறிகாட்டி நினைவுகளில் மட்டும் இன்னும் எத்தனை தலைமுறைக்கு இருக்கப்போகிறது? ஒடுக்கும் அதிகாரம் எழுதும் வரலாறு “பயங்கரவாதத்தை” ஒழித்ததாகத் தான் அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லப்போகின்றது. சிங்களவனும் முஸ்லீமும் தமிழர்களால் செய்யப்பட்ட கொலைகளை நினைவுநாட்களாயும் நிரந்தர வடுக்களாகவும் பேணி, தன் அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றார்கள்.

அறந்தலாவ என்னும் எல்லைக்கிராமமொன்றில் 1987ல் சிங்கள தேரவாத பௌத்த பேரினவாத பிக்குமார்கள் பயணம் செய்த பேருந்து தமிழ் போராளிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் நினைவுச் சின்னம் மகிந்த அரசினால் மாணவர்களும் பொதுமக்களும் வந்துபோகின்ற ஒரு இடமாக கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் அந்த நினைவுச் சின்னத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சிங்களவனுக்கும் தமிழ் மக்களை அழிக்கும் மனப்பாங்கை அழிய விடாது வளர்த்துக்கொண்டேயிருக்கும். மாணவர்களுக்கான முதன்மையான சுற்றுலாத் தலமாகவும் அது ஆக்கப்பட்டிருக்கின்றது. நல்லிணக்கத்தையும் நிலைமாறுகால நீதியையும் பேண விளைவதாகச் சொல்லப்படும் இக்காலத்திலும் அரசு தேரவாத பௌத்த மாணவர்களுக்கான வரலாற்றுத்தலமாக இந்த நினைவுச் சின்னத்தை வைத்திருப்பது எதற்காக?

அதே போல காத்தான்குடி பள்ளிவாசலிலும் விடுதலைப்புலிகளால் தொழுகையின்போது படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாகவும், அந்த துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த சுவர்கள் இன்னமும் புதுப்பிக்கப்படாமல் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. இசுலாமிய மதத்தைப் பொறுத்தவரையில் தொழுகை என்பது புனித கடமைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றமையால் ஒவ்வொரு இசுலாமிய ஆணும் அந்தப் பள்ளிவாசலுக்கு அடிக்கடி செல்ல வேண்டும். ஒவ்வொரு தடவையும் அவனின் கண்முன்னே அவனுடைய கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, சன்னங்களினால் உண்டான துளைகள் அவனுக்கு அவனது அழிவை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். தமிழர்கள் மீதான அழிப்பு மனநிலை யாழ்ப்பாண வெளியேற்றத்தால் மட்டுமல்ல அதன் நினைவுகளாலும் கட்டியமைக்கப்படுகின்றது.

இங்கே சிங்களவனும் முசுலீமும் தங்களது இழப்புகளை நினைவுகூருவதற்கு நினைவுச் சின்னங்களை அமைத்திருக்கிறார்கள். நினைவுகூருதல் ஒவ்வொரு குடிமகனினதும் உரிமை தான். அப்படியாயின் தமிழர்களுக்கு அந்த உரிமை இல்லையா? சத்துருக்கொண்டான், வெலிக்கடை, கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, வல்வெட்டித்துறை, வீரமுனை, நவாலி நாகர்கோவில், முள்ளிவாய்க்கால் என எத்தனையோ ஆயிரம் தமிழர்கள் சிங்களவர்களாலும் முசுலீம்களாலும் வெட்டியும், சுட்டும், ரயர் போட்டுக் கொளுத்தியும், பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியும் படுகொலை செய்தும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேருந்துகள் தமிழர்கள் பயணிக்கிறார்கள் என்றதற்காக தீயிடப்பட்டிருக்கின்றன. எங்கள் இழப்புகளுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்க முற்பட்டோமாயின் எம் நிலத்தில் நினைவுச்சின்னங்கள் மட்டுமே இருக்க முடியும். மண்ணின் ஒவ்வொரு அடியும் இனவாதத்தின் தழும்புகளையும் தமிழர்களின் விடுதலைக்கான தேவையையும் ஒருங்கே சுட்டி நிற்கின்றன.  

ஒரு முசுலீமைக் கூப்பிட்டு, உன் இனத்தின் எதிரி யாரெனக் கேட்டால் தமிழனை நோக்கி கைகாட்டி, யாழ்ப்பாண வெளியேற்றத்தையும் காத்தான்குடியையும் அதுபோன்ற வேறு கதைகளையும் புள்ளிவிபரங்களுடன் சொல்லுமாறு பழக்கிவிடப்பட்டுள்ளார்கள். அந்தளவுக்கு நினைவுச் சின்னங்களும் நினைவு நாட்களும் அடுத்த தலைமுறைக்கு அதே காழ்ப்புணர்வுடன் கடத்தப்படுகின்றன. ஆனால் நாங்கள்? ஆனையிறவுக்கு அந்தப்பக்கம் இருக்கிறதும் தமிழ் மண்தான். கிழக்கில் படுகொலை செய்யப்பட்டவனும் தமிழன் தான். மலையகத்தில் போராடியவனும் தமிழன் தான் என்று வகுப்பெடுக்க வேண்டிய நிலையிலும், இழப்புக்களையும் தழும்புகளையும் இருக்கும் நினைவுச் சின்னங்களையும் பேண வேண்டும் என்று இடித்துரைக்க வேண்டிய இழிநிலையிலும் இருக்கிறோம். ஒரு சன்னம் துளைத்த சுவர்களையும் இரத்தக் கறைகளையும் கூட இன்றும் சின்னங்களாக்கும் அவன் எங்கே? சவப்பெட்டிகளின் மேல் கலியாண மண்டபங்களைக் கட்டிக்கொண்டிருக்கும் நாம் எங்கே?  

நினைவுகூருதல் என்பது திலீபன் அண்ணாவின் நினைவு நாளில் நல்லூரில் நீயா நானா என்று சண்டை போடுதலிலும் முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றுவது யார் என்ற அதிகாரப் போட்டியிலும் வெற்றி கொள்வதல்ல. அவை இனத்தின் நினைவுகள். சொந்த அரசியலுக்காக நினைவுநாட்களை பயன்படுத்தும் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு குடைபிடிக்கும் கால்வேக்காட்டு வாலுகளையும் மக்கள் துரத்த வேண்டும். சிறு சிறு நிகழ்வுகளுக்குக் கூட நினைவுச் சின்னங்களை வைத்திருக்கும் சிங்களவன் எங்கே? ஒரு நினைவுநாளைக் கூட அரசியலாக்கும் வாக்குப்பொறுக்கிகள் எங்கே?

கறுப்பு ஆடி என்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு நினைவுகூரப்படும்? அடுத்த தலைமுறைக்கு எந்த வரலாற்றை விட்டுச் செல்கிறோம்? தமிழ்த்தேசிய நாட்காட்டியின் முதன்மை நாளான கார்த்திகை 27 அழிக்கப்பட்ட கல்லறைகளின் தூசுகளின் மேல் இன்னும் எத்தனை நாட்களுக்கு நிகழும்?

இனப்படுகொலை நடந்த நாடுகளில் அந்த நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற ஒன்றை எப்போது முள்ளிவாய்க்காலில் நிறுவப்போகிறோம்? தமிழ்நாட்டிலிருக்கிறது. வெளிநாடுகளில் நினைவுநாட்கள் நினைவுகூரப்படுகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு? எத்தனை தலைமுறைக்கு? எந்த மண்ணில் விழுந்தோமோ அங்கேயே எழ வேண்டும். இறந்த மக்களுக்கு விளக்கேற்றி, அவர்களின் குருதியின் மேல் நின்று, போலித் தமிழ்த்தேசியம் பேசி வாக்குப்பொறுக்கி அரசியல் செய்வது எங்களுக்கு தேவையில்லை.

ஒன்றுகூடி கூட்டாக நினைவுகூருதல் என்பது சமூகத்தின் தேவை. விடுதலைக்கான தேவை. முள்ளிவாய்க்காலும் ஆனையிறவும் சிங்களவர்களின் உல்லாச சுற்றுலா தளமல்ல. அவை எம் வீரர்களையும் சாவுகளையும் நினைவுகூருவதற்கான இடங்கள். குண்டுவீசித்தாக்கப்பட்ட பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் எரிக்கப்பட்ட நூலகமும் அழிப்பின் தடங்களை முற்றாக இழந்து புதிதாகி நிற்கின்றன. அந்த இடங்களுடன் படுகொலை நடந்த இடங்களும் நிகழ்வுகளின் நினைவுகளைக் கூறுபவையாகவும் அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைக் கூறுவதாகவும் முரண்பாடுகளைப் பற்றிக் கூறுவதாகவும் இருக்கவேண்டும். விடுதலைப்போரையும் அதனால் இழக்கப்பட்ட உயிர்களையும் வரலாற்றிலிருந்து மறைத்துவிட்டு, அடுத்த தமிழ் தலைமுறையை நல்லிணக்கம் என்ற பெயரில் அடிமைகளாக்கலாம் என்று சிங்களம் கனவு காணுகின்றது.

எங்களுக்கான நினைவுகளை மீட்டுவதற்கும் எமக்கு எதிர்மறை எண்ணக்கருக்களை உருவாக்கும் அதிகாரத்தின் நினைவுச் சின்னங்களைப் புறக்கணிப்பதற்கும் எமக்கு உரிமை இருக்கின்றது. கட்டடமாகவுள்ள நினைவுச் சின்னங்கள் மட்டுமல்ல. தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவ இருப்பும் அதன் முகாம்களும் புத்தர் கோவில்களும் கூட ஆக்கிரமிப்பின் சின்னங்களே.

ஒன்று கூடி கூட்டாக நினைவு கூருதல் என்பது எமக்கான உரிமை. குடிசார்ந்த அரசியல் உரிமை என்பதை விடவும் எமது இனத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்கான விடயம் அது. எமது இனத்தினதும் தமிழ்த் தேசியத்தினதும் அடையாளங்களாக பேணப்படவேண்டியவை. அத்தோடு தலைமுறை தலைமுறையாக மரபார்ந்து தொடரும் அடையாளமாகவும் நினைவுகூருதல் இருக்கின்றது. மகனின் படத்தை வைத்து, வீட்டில் படையல் செய்து அழ ஒரு தாயால் முடியும். ஆனால் கூட்டாக அழுவதென்பது இனத்திற்கான ஓலமாக ஒலிக்கும். கூட்டு எழுகையின் முகாரி அது. பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு, சிறிலங்கா அரசியல் சட்டத்தின்படி, பயங்கரவாத நடவடிக்கை மீதான சட்டபூர்வ ஒடுக்கல் என்று அரசு கூறுவதன் மூலமும், போர் வலயங்களில் வெற்றிச் சின்னங்களை அமைப்பதன் மூலமும் கொடிய அரக்கர்களிடமிருந்து நாட்டை மீட்ட வீரர்களாக சிங்கள அரச இயந்திரம் கட்டுக் கதைகளைப் புனைய முனைகின்றது. அந்தப் புனைவுகளிலிருந்து அடுத்த தலைமுறையைக் காக்க வேண்டிய கடப்பாடும் எமக்கு உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழ்மக்களின் அடையாளம் இந்தக் கட்டுக்கதைகளால் அழிந்துவிடாது தான். அழிப்பதற்கு அது வெறும் பௌதீக வடிவமல்ல. ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் இருக்கும் அடையாளங்கள். அந்த அடையாளங்கள் கட்சி அரசியல் நோக்கில் சிதைந்துபோவதையும் நாம் அனுமதிக்கக்கூடாது. நாட்டின் விடுதலைக்காக சுடுகலன் ஏந்தியவர்களை வெளியே தள்ளிவிட்டு, எதிரியுடன் இரவு விருந்தைப் பகிர்ந்தவர்கள் விளக்கேற்றுகிறார்கள். இந்த அதிகாரப் போக்கு களையப்படவேண்டியது. எமக்கான நினைவுகூருதல்களை நாங்கள் செய்வதே வீரர்களின் உயிர்க்கொடைக்கு நாம் செய்யும் மரியாதை.

 

-தழலி-

23-09-18

 

 8,809 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply