சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை!_இறுதிப் பகுதி

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை அய்யா

கேள்வி 2: 

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 3:

சாதிய, பிரதேச சிக்கல்களை கூர்மைப்படுத்துவதன் மூலம் அடிப்படை முரண்பாடுகளைக் கூர்மையாக்கி முதன்மை முரண்பாடான தேசிய இனச் சிக்கல் நோக்கிய வேலைத் திட்டங்களின் வலுவைக் குறைக்க சிலர் இப்போது முனைப்பாக வேலை செய்வதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் சாதிய ஒடுக்குமுறையைக் களையதீண்டாமை எதிர்ப்பு மாநாடுபோன்ற வேலைத் திட்டங்களில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. அதிலும் நிறையப் போதாமைகளும் முழு ஈடுபாடின்மையும் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால்திருகோணமலையிலிருந்தே இந்த வேலைத் திட்டம் தொடங்கியதாகவும் சொல்வதுண்டு. அதில் நீங்கள் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொடுத்து சாதிய ஒடுக்கல் சிந்தனைகளைத் தகர்க்க வேலை செய்ததாகக் கேள்விப்பட்டோம். மற்றும் நீங்கள் மலையகப் பகுதிகளுக்குச் சென்று எமது மக்களிடத்தில் வேலை செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்து உங்கள் நினைவுகளை மீட்க முடியுமா? சாதியம் மறுபடியும் தலைவிரித்தாட அதைக் கூர்மைப்படுத்தி எம்மைச் சிதைக்க வேலைகள் நடக்கும் இக்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் கூட பாராமுகமாக எந்த செயற்றிட்டமும் இல்லாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பதில்: மாவை அய்யா

கேள்வி 4:

தனித்தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதற்கு மக்கள் ஆதரவு கோரி 1977 பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவினால் பெருவெற்றியீட்டி பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்று, மாவட்ட அதிகார அவை என்ற அளவிற்கு கீழிறங்கிப் போனதை எப்படிப் பார்க்கின்றீர்கள்? 6 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர, இனிமேல் பாராளுமன்ற அரசியல் வழியில் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக நாட்டை விட்டு இந்தியா சென்றீர்களா? ஆம் எனின் அந்தச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் போது என்ன மனத்துணிவில் இங்கு வந்து பாராளுமன்ற அரசியலில் இறங்கினீர்கள்?

பதில்: மாவை அய்யா

கேள்வி 5:

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நிலை 1977 பொதுத்தேர்தலில் எவ்வாறு இருந்தது?

பதில்: மாவை அய்யா

கேள்வி 6:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது பாராளுமன்ற அரசியலையும் வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்ந்தது. அதன் உருவாக்கத்தின் போது எழுந்த முரண்பாடுகள், அதன் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள், முரண்பாடுகள் களையப்பட்ட விதம், விடுதலைப்புலிகளுடனான உறவு என்பன பற்றிக் கூறுங்கள். தமிழீழ நிழல் அரசை நீங்கள் பார்த்த விதம் பற்றி கூற முடியுமா? கூட்டமைப்பு சின்ன உருவாக்கத்தில் வீடு, சூரியன் பேசப்பட்டது போல சைக்கிளும் பேசப்பட்டதாமே. அந்த முரண்பாடுகள் களையப்பட்ட விதம் பற்றி தெளிவுபடுத்துங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 7:

விடுதலைப்போராட்டத்தில் சுடுகலன்கள் பேசாநிலைக்கு வந்த காலத்தில் இறுதிநேர வெள்ளைக்கொடி விவகாரம், மூன்றாம் தரப்பு மேற்பார்வையில் சரணடைவு, போர் நிறுத்தம் போன்ற பேச்சுகளில் நீங்கள் என்ன பங்கு ஆற்றியிருக்கிறீர்கள்? அது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் உங்கள் மீதும்; குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அது குறித்து இதயத் தூய்மையுடன் பதிலளிப்பீர்களா?

பதில்: மாவை அய்யா

கேள்வி 8:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பாக இருந்த பழம்பெரும் அரசியல் கட்சியானதமிழ் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறியமைஅதைதொடர்நது கூட்டமைப்பைஒரு கட்சியாகப் பதிவு செய்யுமாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் பாரிய அழுத்தங்களைகூட்டமைப்பு தலைமைகளுக்கு கொடுத்தமைதமிழரசுக்கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பில் எதேச்சதிகாரத்துடன் செயற்படுகின்றது என்பது குறித்துதொடர்சியாகக் கூறப்படுவன பற்றி தெளிவுபடுத்துங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 9:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் மேலாண்மை என்றதோடுதமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரனின் மேலாண்மை உள்ளதாக செய்திகள்தொடர்ச்சியாக வருகின்றனஅரசியலமைப்பு உருவாக்க வழிகாட்டல் குழுவில்இருக்கும் இரண்டே இரண்டு தமிழ் அரசியல்வாதிகளாக சம்மந்தன் மற்றும்சுமந்திரன் இருக்கையில்மேற்கு நலன்களுக்கு அருட்டப்பட்டவராகமேற்கின்நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன் இயங்குகிறார் என்றும் ஊடகங்களில் பல சர்ச்சையானபேச்சுக்களை அவர் பேசும்பொழுதுஅவரது மேலாதிக்கத்தைத் தாண்டிதமிழ்த்தேசிய அரசியலில் நெடுகாலம் பாடுபட்டு சிறையும் கண்ட நீங்கள் தமிழ்மக்களின்மனங்களை வென்றெடுக்கும் வகையில் எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருப்பதுதமிழ்த் தேசியத்தை நெஞ்சில் சுமப்பவர்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளதுஇதைச்சரிசெய்ய நீங்கள் முனையவில்லையா?

பதில்: மாவை அய்யா


கேள்வி 10:

வடமாகாண அவையின் முதல்வருக்கான கடந்த தேர்தலில் உங்களையே வேட்பாளராக்க எல்லோரும் விரும்பியதாகவும் உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் முதல்வராவதை இந்தியா விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. விக்கினேஸ்வரன் எப்படி தெரிவாகினார்? அந்தத் தெரிவு மடமைத்தனம் என்று நீங்கள் இன்று நினைக்கிறீர்களா?

மடமைத்தனம் என்றில்லை. அது நான் எடுத்த தீர்மானம். சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கெதிராகவும் தமிழீழம் கோரியும் நான் காசியானந்தன் போன்றோர் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட போது அந்த இடத்தில் கைதுசெய்யப்பட்டு எங்கள் மீது தமிழீழம் கோரியதாக வழக்குத் தொடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் இருந்தோம். அப்போது நீதிபதி இடமாற்றலுக்குள்ளாகி மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக விக்கினேஸ்வரன் அவர்கள் பதவியேற்ற அன்றே எமக்குப் பிணை வழங்கினார். அந்த வழக்கை விசாரித்து மாவை சேனாதிராசா மற்றும் காசியானந்தன் போன்றோருக்கு பிணை வழங்கியதன் பின்னர் தான் எமது அரசியலைப் படிக்கத் தான் ஆரம்பித்ததாக விக்கினேஸ்வரன் அவர்களே வெளிப்படையாக அறிக்கை விட்டிருந்தார். அதனால் எமது பிரச்சனைகளை உணார்ந்த ஒருவராக அவர் இருப்பார் என்று நினைத்துத் தான் அவரை வேட்பாளராக்கச் சந்தர்ப்பம் கிடைத்த போது நாங்களும் ஏற்றுக்கொண்டிருந்தோம். ஏற்றுக்கொண்டது பிழையென நான் நினைக்கவில்லை.

அப்பொழுது, நீங்கள் குறிப்பிட்டவாறு…. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் திரு.ஆனந்தசங்கரி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி மாவை சேனாதிராசா ஆகிய என்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். நாம் விக்கினேஸ்வரனைத் தெரிவு செய்த பின்னரும் நாம் செய்தது பிழை எனப் பலர் என்னைக் கடிந்து கொண்டார்கள். எங்களது தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவானது அன்று சிறப்பாக அழைக்கப்பட்டோர் அடங்கலான 126 பேர் கூடியிருந்த அவையில் நான் ஒருவனே விக்கினேஸ்வரனைத் தெரிவு செய்யுமாறு வாதாடினேன். அன்று கூடியவர்களில் ஒருவர் கூட விக்கினேஸ்வரனை ஆதரிக்கவில்லை. எங்களுடைய தமிழரசுக் கட்சி மத்திய குழுவினரிடத்திலும் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் வர வேண்டுமெனத் தீர்மானித்தவர்களிடத்தில் நான் இவ்வாறு வாதாடியமைக்கான அடிப்படைக் காரணம் என்னவெனின், நான் ஒரு போராட்டப் பாதையில் வாழ்ந்தவன். இந்தப் பதவிகளுக்காகச் செயற்பட்டவன் இல்லை. அது எனக்கு முக்கியமானதாக இருக்கவில்லை. ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் எமது மக்கள் அடக்கியொடுக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு எமது மக்களை வரச்சொல்லி அங்கி வைத்து தடைசெய்யப்பட்ட Cluster Bombs, Themoperic Bombs, Phosporus gas போன்றவற்றைப் பயன்படுத்தி எமது மக்களைக் கொன்றொழித்த பின் இராணுவ அடக்குமுறையில் இனப் பிரச்சனை தீர்க்கப்படாமல் எங்களை அடக்கியொடுக்குவதற்கு எதிராக ஜனநாயக முறையில் நாம் போராட வேண்டும் என்று சொல்லி 2014 ஆம் ஆண்டு நடந்த தமிழரசுக் கட்சி மாநாட்டில் நான் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஆற்றிய தலைமை உரையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருந்தேன். எனவே போராட்டப் பாதையில் நான் வந்தவன் என்பதால், அனைவரையும் அழைத்து ராஜபக்ச அரசிற்கெதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்  என்பதுதான் சிறந்த முடிவாக இருந்தபடியால், விக்கினேஸ்வரன் போன்ற நீதியரசராக இருந்த ஒருவர் அவர் சிங்கள மக்களோடும் உறவாக இருந்தவரென்றதால் அவர் முதல்வராக வந்தார் எங்களது மக்களுக்கு உதவியாக இருப்பார். எங்களுக்கும் அரசியல் ரீதியாக உதவியாக இருப்பார் மற்றும் எங்களுடைய மக்களின் கண்ணீரைத் துடைப்பார் என்றெல்லாம் நாங்கள் கூட்ட மேடைகளில் பேசினோம். அந்த எண்ணத்தில் தான் நான் அவரைத் தெரிவு செய்யச் சொன்னேன். நான் விருப்பப்பட்டிருந்தால் போராட்டப் பாதைக்குப் பதிலாக இலகுவாக முதல்வராகும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். நான் அந்த நிலைக்கு வராததற்கும் நல்லெண்ணம் இருந்தது. நான் போராட்டப் பாதையின் பின்னணியில் வந்தவன் என்ற முறையில் அரசிற்கு எதிராகப் போராட, அந்தப் பொறுப்பை ஏற்காமல் விக்கினேஸ்வரனைத் தேர்ந்தெடுக்க உதவியாகவிருந்தேன்.

மட்டக்களப்பில் நீதிபதியாக அறிமுகமான அவரோடு பலமுறை சந்தித்தும் இருக்கிறேன். அந்த நல்லெண்ணத்தோடு தான் அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருந்தேன். எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் விக்கினேஸ்வரனைத் தேர்ந்தெடுத்த பின்பும் மாவை அண்ணன் தான் எங்களுடைய வேட்பாளர் என வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்கள். இதையெல்லாம் கடந்து நாங்கள் தேர்தல்களில் வேலை செய்வதை விட மிகத் தீவிரமாக வேலை செய்து அவர் வெற்றி பெறுவதற்காக உழைத்திருக்கிறோம். அவர் அப்படி வெற்றி பெற்றதன் பின்னர், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்றோ அல்லது இந்தத் தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டுமென்றோ ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் “வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள்” என்று சொன்ன அந்த வார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எமக்கு எதிராகச் செயற்பட்ட நிலைப்பாட்டைக் காட்டுகிறது. எமக்கு எதிராகத் தான் அவர் அந்தத் தேர்தலில் வேலை செய்திருக்கிறார் என நாம் உணர்ந்து கொண்டோம். அதற்கான காரணத்தை நாம் உடனடியாக அறிந்திருக்கவில்லை. இரண்டாவது முறையும் நாம் தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனாலும் அவர் எங்களுடன் இணைந்து ஒன்றாக வேலை செய்பவராக இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பக்கமாகவும் மாகாண சபை இன்னொரு பக்கமாகவும் தன்னிச்சையாகவும் அந்த மாகாண சபையை விக்கினேஸ்வரன் இயங்க வைத்திருக்கிறார்.

அதனால் எங்களுடைய மக்களிற்குச் செய்ய வேண்டிய பலவற்றை எம்மால் செய்ய முடியாமல் போய்விட்டது. அவருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்த போது அவருக்கு எதிராகவே மாகாண சபையில் ஒரு நிலைப்பாடு வந்தது. அதில் அப்படிச் செய்ய வேண்டாமென மதகுருமார்களை நாடித் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். அவ்வாறிருந்த போதிலும், என்னிடம் அவர் இதைப் பற்றி பேசியபொழுது, நான் சொன்னேன்………. “நீங்கள் வேறாகச் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்கிறீர்கள். நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நீங்கள், எங்களுடைய தலைமை என ஒன்றுபட்டு எடுக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் நீங்கள் செல்ல வேண்டும். மாகாண சபைத் தேர்தலிலே, பாராளுமன்றத் தேர்தலிலே முன்வைத்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதனை முன்னெடுப்பதற்கான உபாயங்களைச் செய்ய நீங்களும் ஒன்றுபட்டு உழையுங்கள்” என்று கூறிய போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்து முடிவுகண்ட நேரத்திலும் அதற்கிடையிலும் என்னோடு அதற்கு ஒத்துக்கொண்டார். நீங்களே அதனைப் பத்திரிகைகளுக்குச் சொல்லுங்கள் எனவும் அவரே என்னிடம் சொன்னார். ஆனாலும் அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து உள்ளூராட்சித் தேர்தல்களிலும் எங்களிற்கு ஆதரவாக இருக்கவில்லை.

எதிராகச் செயற்பட்டார். எதிரான அறிக்கைகளை  விட்டுக்கொண்டிருந்தார். எங்கள் மக்கள் மத்தியில் இத்தனை குழப்பங்கள், பிளவுகள் என்பனவற்றைச் செய்து மக்கள் பேரவை என்ற ஒன்றையும் தோற்றுவித்து தமிழரசுக் கட்சிக்குச் சம்பந்தப்படாமல் தன்னிச்சையாக அவர் செயற்படுவது தான் இன்றைய குழப்ப நிலைமைக்குக் காரணமாக இருக்கின்றது. ஒன்றுபட்ட நிலைமையைக் குழப்பிய சூழ்நிலையாக நாம் இதனைக் கருதுகின்றோம். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பொறுப்பை ஏற்காமல் விட்ட பிழையால் தான் இத்தனை குழப்பங்கள் நடக்கின்றன என மற்றையவர்கள் மனம் வருந்தி என்னைக் குற்றஞ் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நானும் அந்தப் பிழைக்குக் காரணமாக இருக்கிறேன் என்று எண்ணுகின்ற நிலையில் இருக்கிறேன்.

நான் விட்ட பிழையால்தான் மாகாண சபை இப்படிப் போகின்றது என்று சொல்கிறார்கள். மாகாணா சபை செயலற்ற முறையில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றாமல் மக்களுக்குச் செய வேண்டியதைச் செய்யாமல் சிறந்த உயர்ந்த மனிதர்களைக் கொண்டு இந்த மாகண சபை சரியாகச் செயற்படவில்லை மற்றும் வாக்குகள் சிதறுண்டமைக்கு மாகாண சபை தான் காரணம். அவர் ஒத்துழைத்து வேலை செய்திருந்தால் நாம் பெரு வெற்றியீட்டியிருக்கலாம். அவர் நீதியரசர் என்ற பொறுப்பில் இருந்த காரணத்தினாலும் எங்களுடைய வேட்பாளராகத் தமிழரசுக் கட்சிச் சின்னத்திலே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற காரணத்தினாலும் தமிழரசுக் கட்சிக்காரரும் எதிரணியிலிருப்பவர்களும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் செயற்பட அவர் முக்கியமானவராக இருக்கிறார். அதனால் தான் என்னைக் குற்றஞ் சுமத்துகிறார்கள். “நீங்கள் தானே உங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவருக்கு விட்டுக் கொடுத்தீர்கள்” என்று சொல்கிறார்கள். என்னுடைய போராட்டப் பாதையில் ராஜபக்ச அரசிற்கு எதிராகப் போராட்டம் நான் நடத்த வேண்டுமென்ற முடிவாலே நான் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வரவேற்றதற்கு முக்கிய காரணம். அவர் உயர்ந்த கல்விமானாகவும் நீதியரசராகவும் இருந்தபடியால் அவர் மக்களுக்காக எங்களோடு ஒத்துழைத்து அணி சேர்ந்து நடப்பார் என்று தான் நான் முன்னர் நினைத்தேன். ஆனால் அவர் தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்கிறார். இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனபடியால், அதற்கான பொறுப்பை நான் ஏற்க வேண்டியவனாக இருக்கிறேன். தனியாக சம்பந்தனைக் குற்றஞ் சுமத்தி நான் அதிலிருந்து விடுபட ஆயத்தமாக இல்லை. எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவின் படி தான் நாம் நடந்துகொண்டிருக்கிறோம். அதனுடைய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனபடியால், இவ்வளவு தவறுகளையும் இழைத்து மக்கள் மத்தியில் பிளவுகளும் விமர்சனங்களும் வருகின்ற நிலைக்கு  முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மறுபடியும் நாங்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கக் கூடிய ஏதுக்கள் இல்லையென்றும் சுமந்திரன் வெளிப்படையாக இரு கருத்தை முன்வைத்து விட்டார். “நான் இரண்டு ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருக்கிறேன். பின்னர் தம்பி மாவை அந்தப் பொறுப்பை ஏற்கட்டும்” என்று ஒரு கருத்தின் முன்மொழிவாக அவரே முன்பு சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பலர் என்னிடம் கேள்வியெழுப்பத் தொடங்கினர். ஆனால் 2 ஆண்டுகளின் பின்னர் பொறுப்பேற்க நான் விரும்பியது கிடையாது. அந்த மாகாண சபையை ஆதரித்துத் தான் நாம் நின்றோம். சுமந்திரன் சொன்னது உண்மை தான். அதனால் பத்திரிகையாளர்கள் என்னை விட்ட பாடில்லை. அப்படியென்றார்கள் இந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்பீர்களா? இம்முறை போட்டியிடுவீர்களா? என்று என்னிடம் கேட்ட போது நான் அதற்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அது என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்பு என்னைத் தீர்மானித்த போது நான் ஏற்காமல் விட்டிருந்தேன். இம்முறை அவர்கள் என்னை முன்னிலைப்படுத்தினால் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டியிருக்கின்றது என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதுதான் நிகழ்ந்திருக்கிறதே தவிர, முதலமைச்சர் பொறுப்பு வேண்டுமென்றோ அல்லது ஒற்றுமைக்குப் பங்கமாக இருந்து செயற்படப் போகின்றேன் என்றோ பொருள் அல்ல. அப்படியோரு நிலை வந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்கும். அவர்கள் நான் தான் நிற்க வேண்டுமென்றால், நான் அதற்குச் சரிசொல்லி மக்களை வழிநடத்த ஆயத்தமாக இருக்கிறேன். மாகாண சபையை வழிநடத்திச் சரியான முறையில் செயற்பட ஒத்துழைப்பை வழங்குவேன் என்று உறுதியாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

கேள்வி 11:

தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு ஊறுவிளைவிக்கிறார்கள் என்று வெளிப்படையாக எந்நாளும் குற்றம் சாட்டப்படாத தமிழரசுக்கட்சிக்காரராக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களின் அரசியல் கூட இன்று இளையோர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அதுபற்றி மீளாய்வு செய்தீர்களா?

பதில்:

என்மீது அவர்கள் வெறுப்புக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் என்னைத் தனிமைப்படுத்திப் பேச ஆயத்தமாக இல்லை. சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரும் நம்பிக்கையோடு மிகப் பெருமளவில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எங்களுடைய தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் வாக்களித்தபடியால் தான் ஜனாதிபதி இந்த வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. இல்லையென்றால் வெற்றியைப் பெற்றிருக்க மாட்டார். அதற்கு நாங்களும் காரணமாக இருக்கிறோம். எங்களுக்கிருக்கிற அதே சலிப்பு, அதே விமர்சனம் மக்கள் மத்தியில் அதை கோபம் என்று கூட சொல்லுவேன்……இருக்கிறது………

அந்த 2 1/2 ஆண்டுகளில் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படவில்லை. இன்னும் பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அதே போல ஏனைய பிரச்சனைகளுக்கும் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது எங்களது போரினால் அழிந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதிலோ அல்லது வேலைவாய்ப்புகள் வழங்குவதிலேயோ இந்த அரசாங்கம் எங்களுக்கு எந்த வெற்றியையும் பெற்றுத்தரவில்லை. அதில் நாம் வெற்றி பெறவில்லை. இந்தக் காரணங்களால் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு விமர்சனங்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த விமர்சனங்கள் என்மீதும் ஏற்படுத்தப்படுமானால் நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். அவை தான் ஜனநாயகரீதியாக நாங்கள் செயற்படுவதற்கான அடிப்படைகளாக இருக்கின்றன. ஆனபடியால், எங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றங்கள் அல்லது விமர்சனங்களை ஏற்று அதை மாற்றியமைத்து கட்சியில் மீண்டும் இளைஞர்களை அதிகமாக இணைத்து ஒரு இளம் இரத்தத்தைப் பாய்ச்சி எங்களுடைய பொறுப்புகளிலிருந்தும் அடுத்த சந்ததிக்குக் கட்சியை வழிநடத்துவதற்கு இடங்கொடுத்து நடப்பதுதான் எதிர்காலத்தில் நாங்கள் எங்கள் இனத்தை ஒன்றுபடுத்திச் செயற்படுவதற்கான, இளைய சமுதாயத்தை இணைத்துச் செல்வதற்கான ஒரு மார்க்கமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.

இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தான், இளைஞர்கள் தேர்தல்களிலே எங்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டால் தான் நாங்கள் எங்களுடைய இனத்தின் வெற்றியை நோக்கிப் போகலாம். அதனை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். விமர்சனங்களை நாங்கள் வரவேற்கின்றோம். உண்மைகளை நாங்கள் வரவேற்க வேண்டும். பொய்களைக் கட்டியெழுப்பியும் புனைந்துரைகளைக் கட்டியெழுப்பியும் எங்களைத் தோற்கடிக்க வேண்டுமென்று தென்னிலங்கையில் இருக்கின்ற எமக்கு எதிரான சக்திகள் அல்லது நாங்கள் அதாவது எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடக் கூடாது என்று வேலை செய்பவர்களோடு நாங்கள் அணிசேர முடியாது. அதற்கு நாங்கள் ஈடுகொடுத்து நாம் மீண்டும் சீர்குலைந்து இருக்கின்ற, பிளவுபட்டிருக்கின்ற எங்கள் மக்களை மீண்டும் ஒன்றாகக் கட்டியெழுப்புவதில் நாங்கள் பங்களிப்பைச் செய்வதுதான் இன்று எமக்கிருக்கின்ற பின்னடைவைத் தவிர்த்து கட்சியை மீளக் கட்டியமைத்து மக்களை ஒன்றுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து முன்னெடுத்துச் செல்வதுதான் எங்களுக்கு  இருக்கின்ற ஒரு கோட்பாடாக அல்லது வழியாக இருக்குமென்று நம்பி அதனடிப்படையில் நாம் இப்போது செல்ல ஆரம்பித்து இருக்கிறோம். அதை நாங்கள் மக்களுடைய நம்பிக்கையைப் பெறக்கூடியதாக, இளைஞர்களுடைய நம்பிக்கையைப் பெறக்கூடியதாக நாங்கள் எங்களை மாற்றியமைத்து அவர்களுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் மக்களையும் இந்தக் கட்சியையும் வழிநடத்துவோம் என்று திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி 12:

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறிப்போக்கு இனிவரும் காலங்களில் எவ்வாறு அமையும்? தமிழ்நாட்டில் முகிழ்த்துவரும் தமிழ்த்தேசிய உணர்வு உலகளாவிய ரீதியிலும் ஈழ விடுதலையிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

நாங்கள் அந்த விடயத்தைப் பற்றி தீவிரமாக ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற ஒரு சந்தர்ப்பம் உருவாகி வருகின்றது என்று நான் நினைக்கின்றேன். இந்த அரசாங்கம் இந்த மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய விடயங்களில் தோல்வி கண்டு விட்டது. அவர்கள் இப்போது ஜனாதிபதி ஒரு பக்கமாகவும் பிரதமர் ஒரு பக்கமுமாக எங்களுடைய மக்களின் நம்பிக்கைகளுக்கு உண்மையாக இல்லாமல் தங்களுடைய கட்சிகளையும் தங்களையும் பலப்படுத்துகின்ற போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். ஆனபடியால், தமிழ் மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் சிங்களவர்கள் எதிர்காலத்திலும் எங்கள் இனப்பிரச்சனையைத் தீர்க்க உதவுவார்களா அல்லது நம்பிக்கையை ஏற்படுத்துவார்களா? அல்லது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா? என்பன தொடர்பாக எங்களிடமே பல கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த நிலைமையில் இன்று எதுவும் நடைபெறவில்லை என வாதாடுவதற்கு நாம் வரவில்லை. உதாரணமாக, பல இடங்களில், குறிப்பாக வலி வடக்கில் கணிசமான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. அதேபோல், திருகோணமலையில் சம்பூரில் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விடுவித்ததை விட இன்னும் அதிகமான நிலங்கள் இராணுவத்தினரின் கைகளில் இருப்பதனால் தான் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலைமை இருக்கிறது. அரசாங்கத்திடம் நாம் அதைப் பற்றி திட்டவட்டமாகப் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

முதலாவதாக, இனப் பிரச்சனைத் தீர்வில் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்ற விடயங்களில் நாங்கள் முழுமையாகத் திருப்திகொண்டவர்களாக இல்லை. எங்களுடைய மக்கள் திருப்திப்படுகின்ற அளவுக்கு நாங்கள் அதனைச் சிபாரிசு செய்யவும் இல்லை. ஆனால் சில முன்னேற்றங்கள் இருக்கின்றன. அதிகாரத்தை முழுமையாகப் பகிர வேண்டும். ஒரு சமஸ்டிக் கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு ஈடாக ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்ற அரசின் தன்மை பற்றி குறிப்பிடப்பட்ட விடயங்களில் நாங்கள் கவனத்தைச் செலுத்தாலாம். அது முழுமையாக ஏற்பட்டு விட்டது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் தென்னிலங்கையில் ராஜபக்ச அரசு இம்முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது குறிப்பிட்டது என்னவென்றால், இந்த இடைக்கால அறிக்கையிலே குறிப்பிட்ட “ஒருமித்தநாடு” என்று அரசின் தன்மையைக் குறிப்பிடுகின்ற பதம் ஒரு சமஸ்டியைத் தான் குறிக்கிறது. அது நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றது என அவர்கள் பரப்புரை செய்கிறார்கள். எங்கள் தரப்பிலே எங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து வருபவர்களும் 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எரித்தவர்களும், அதே அணியினரின் வெளிநாட்டில் சில சக்திகளும் இந்த இடைக்கால அறிக்கையின் சாரம்சத்தை நாங்கள் நிராகரிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். தென்னிலங்கையில் இதனால் நாடு பிளவுபடப் போகின்றது என ஒரு பக்கத்திலும் இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று சொல்கின்ற நம்மவர்கள் இன்னொரு பக்கமுமாக இருக்கின்ற சூழலில் தான் இடைக்கால அறிக்கை முன்கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்பதும் பகிரப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறக்கூடாது அல்லது மீளப்பெற முடியாது என்ற அடித்தளக் கருத்தும் அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சமஸ்டிக் கட்டமைப்பில் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்பட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அந்த அடிநோக்கம் அதில் செறிவாக இருக்கிறது. இந்த நிலைமையில் தான் நாங்கள் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற வேண்டும். அந்த இடத்தில் அரசு இன்றைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பிளவுபட்டிருப்பதால் எங்களுக்கு ஒரு ஐயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தினால் பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்ற பொழுது இந்த அரசாங்கத்தை நாங்கள் அரசியல் தீர்வு ஒன்றில் 2/3 பெரும்பான்மையை நிரூபிக்க இணங்கச் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்மானங்களை நாம் எடுக்கின்றோம். அரசிற்கு ஆதரவாக நாம் வாக்களித்திருக்கிறோம். அப்பொழுது ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இருந்த காலத்தில் நாங்கள் அவ்வாறு ஈடுபட்டிருக்கிறோம். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அங்கும் ஒர் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை. அப்படி அரசாங்கம் விரும்பியிருந்தாலும் நாங்கள் அதை ஏற்கவில்லை. அது அல்ல எங்களுடைய இலக்கு. நாங்கள் எதிர்த் தரப்பிலே இருந்து நியாயமான விடயங்களில் ஆதரவைக் கொடுத்து 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்திலே ஒரு அரசியல் தீர்வு வருகின்ற பொழுது கிடைக்கக் கூடிய அந்தப் பலத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அடிப்படையில்தான் நாங்கள் வாக்களித்து வந்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் ஒரு அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. இப்போது அனைத்து இடங்களிலும் ஏமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு கேள்விக்குறி ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், 2/3 பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் பெறக் கூடிய வகையில் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு அரசியல் தீர்வு சமஸ்டிக் கட்டமைப்பில் முழுமையாகப் பகிரப்பட்ட அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏதோவொரு வகையில் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. வடக்கு-கிழக்கை எப்படி இணைப்பது என்பது அல்லது அந்த இலக்கினை அடையக் கூடிய வகையில் இந்த அரசியல் அமைப்பூடாக அதற்கான தீர்வுத் திட்டத்தினை நிறைவேற்றினால் தான் நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்த இலக்கை அடைய வேண்டுமானல் எமது தமிழ் மக்களின் திருப்தியோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருப்தியோடும் எங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மூன்று அடிப்படைகளில் … தெளிவாகச் சொல்லப்போனால் சமஸ்டிக் கட்டமைப்பில் முழுமையாக அதிகாரங்கள் மாகாணங்களுக்குக் கையளிக்கின்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கை இணைக்கக் கூடிய பிரேரணை உள்ள அடிப்படையில் நாங்கள் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு அது இடைக்கால அறிக்கையாக வருகின்றபொழுது 2/3 பெரும்பான்மையால் ஒரு அரசியல் தீர்வு உருவாகியிருக்கிற பொழுது பாராளுமன்றத்திலே அது வாக்களிக்கப்பட வேண்டும். நிறைவேற்றப்பட வேண்டும்…. அதை நோக்கித் தான் நாம் செல்ல முயற்சிக்கின்றோம். அதற்கான நம்பிக்கைகளின் மத்தியிலும் ஏமாற்றங்களின் மத்தியிலும் எதிர்த்தரப்பிலே கூட அரசாங்கத்துடனும் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஏனெனில், அரசியலமைப்பை உருவாகி அது எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2/3 பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு நாங்களும் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதியிடத்திலும் பிரதமரிடத்திலும் ஏனைய கட்சிகளிடத்திலும் ஜே.வி.பி யிடத்திலும் கூட நாங்கள் சில இணக்கங்களைக் காணுகின்றோம். அதன் மூலமாக சிறந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்திலே வருகின்ற பொழுது 2/3 பெரும்பான்மையால் அது நிறைவேற்றப்படுமானால் அதே பலத்தோடு மக்கள் மத்தியிலும் ஒரு கருத்துக் கணிப்பு வருகின்ற பொழுது நாங்கள் வெற்றி பெற முடியும். அதற்குச் சருவதேசமும் முழுமையான ஆதரவைத் தரும் என்ற நம்பிக்கையில் தான் நாம் எப்பொழுதும் எங்களுடைய தீர்மானங்களை எடுத்து வந்திருக்கிறோம். இதற்கு எதிராக இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் ஐ.தே.க கட்சியும் இந்த எண்ணத்திற்கு மாறாகப் போகுமானால் அல்லது நடைமுறையில் அவர்கள் எங்களுக்கு உதவியாக இல்லாவிட்டால், நிலங்கள் விடுவிப்பது போன்ற எமது அன்றாடப் பிரச்சனைகளில் எங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் எங்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றுமாக இருந்தால்………. நான் நினைக்கிறேன் இந்த ஆண்டிற்குள் தமிழரசுக் கட்சி மாநாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு என்பன அடுத்த 2௩ மாதங்களில் வர இருக்கின்றன. அதற்கு முன்னர் நாங்கள் ஒரு கால எல்லையை நிர்ணயித்து இந்த அரசாங்கத்தை எங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எங்களுடைய முழு முயற்சிகளையும் சருவதேசத்தையும் இந்த முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டு எடுக்கும் முயற்சிகள் என்பன……அதில் நாம் வெற்றி பெற்றால் அல்லது வெற்றிபெற முடியாவிடில் நாங்கள் எங்களது பாதையை மற்றும் வழிகளை அல்லது இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதா இல்லையா என்ற விடயத்தை நாங்கள் சருவதேசத்தோடு இணைந்து எடுக்கக் கூடிய அணுகல்முறையில் தான் எங்களுடைய மூலோபாயங்களைத் தீர்மானித்து வருகின்றோம்.

இதுதான் நாம் இப்போது செய்யக் கூடியதாக இருக்கின்றது. அதே நேரத்தில் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை நாம் வீணாக ஆதரிப்போம் என்று யாரும் நம்பத் தேவையில்லை. .. நினைக்கத் தேவையில்லை. நாம் திட்டவட்டமான ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். அதற்காக தமிழரசுக் கட்சி மாநாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாடும் ஒழுங்கு செய்வதற்கு ஆயத்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் 2௩ மாதங்களில் நாம் வலுவான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கும். அது சர்வதேச சமூகத்துடன் இணைந்த தீர்மானமாக இருக்கும். அதனைத் தொடர்ந்து நாம் போராட வேண்டுமா? அரசாங்கத்திலிருந்து தவிர்த்து ஆதரவைக் கொடுக்காமல் போராட்டத்தை நடத்த வேண்டுமா? என என்ன அணுகல்முறையை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை மிக விரைவில் நாங்கள் தீர்மானிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதையில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உங்களது நேரத்தை ஒதுக்கி மிக நீண்ட நேர்காணலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. இறுதியாக, நாம் கேட்ட கேள்விகளுக்குள் உள்ளடங்காமல் நீங்கள் கூற விரும்பும் விடயங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்கள்?

பதில்:

நான் மிகத் தெளிவாக எங்களுடைய விடயங்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஆனால், இராஜதந்திரம் என்பது…. மூலோபாயம் என்பது… சருவதேச சந்தர்ப்பம் என்பது.. எங்களுக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால் நாங்கள் இந்த நாட்டில் ஒரு அரசு அமைக்கின்ற கட்சி அல்ல. எங்களுடைய மக்களுடைய இன விடுதலைக்காக வடக்கு-கிழக்கு இணைந்த எங்களுடைய தாயகத்தில் எங்களை நாங்களே ஆளுகின்ற கொள்கையைக் கொண்டு தான் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். அது சமஸ்டிக் கட்டமைப்பில், உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்மானம் அமைய வேண்டும். அதற்கு விசுவாசமாகத் தான் நாம் எம்மை அர்ப்பணிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இந்த நாட்டிலே இனப்பிரச்சனை தீர்ந்துவிடக் கூடாது என்றும் எங்களுக்கு எந்த வெற்றியும் கிடைத்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள் குழப்பங்களை முன்னெடுத்து வருவது எங்களுக்கு மிகவும் வேதனையாக அல்லது வெறுப்பாக இருக்கிறது. இருந்தாலும், நாங்கள் தமிழ் மக்களுடைய தலைமைப் பொறுப்பிலிருக்கின்ற படியால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கின்ற படியால் மிகப் பொறுமையோடும், மிக நிதானத்தோடும், மிகக் கவனத்தோடும் உலக சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தித் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதையும் எங்களுடைய இனம் வெற்றி பெற வேண்டும். தனிப்பட்ட மனிதர்கள் அல்ல….. எங்களுடைய மண் வெற்றி பெற வேண்டும். எங்கள் மக்கள் மீண்டும் விடுதலையைப் பெற்று சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் எங்களுடைய சிந்தனைகள் முழுவதும் இருக்கின்றது என்பதையும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருப்போம் என்பதைக் கூறிக்கொண்டு நான் விடைபெற்றுக் கொள்கின்றேன்.

முற்றும்

நேர்காணலை முழுமையாக ஒலிவடிவில் கேட்க: இங்கே அழுத்தவும் 

Be the first to comment

Leave a Reply