சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! – கேள்வி 3

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை அய்யா

கேள்வி 2: 

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.

பதில்: மாவை அய்யா

 


கேள்வி 3:

சாதிய, பிரதேச சிக்கல்களை கூர்மைப்படுத்துவதன் மூலம் அடிப்படை முரண்பாடுகளைக் கூர்மையாக்கி முதன்மை முரண்பாடான தேசிய இனச் சிக்கல் நோக்கிய வேலைத் திட்டங்களின் வலுவைக் குறைக்க சிலர் இப்போது முனைப்பாக வேலை செய்வதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் சாதிய ஒடுக்குமுறையைக் களையதீண்டாமை எதிர்ப்பு மாநாடுபோன்ற வேலைத் திட்டங்களில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. அதிலும் நிறையப் போதாமைகளும் முழு ஈடுபாடின்மையும் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால்திருகோணமலையிலிருந்தே இந்த வேலைத் திட்டம் தொடங்கியதாகவும் சொல்வதுண்டு. அதில் நீங்கள் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொடுத்து சாதிய ஒடுக்கல் சிந்தனைகளைத் தகர்க்க வேலை செய்ததாகக் கேள்விப்பட்டோம். மற்றும் நீங்கள் மலையகப் பகுதிகளுக்குச் சென்று எமது மக்களிடத்தில் வேலை செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்து உங்கள் நினைவுகளை மீட்க முடியுமா? சாதியம் மறுபடியும் தலைவிரித்தாட அதைக் கூர்மைப்படுத்தி எம்மைச் சிதைக்க வேலைகள் நடக்கும் இக்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் கூட பாராமுகமாக எந்த செயற்றிட்டமும் இல்லாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பதில்:மாவை அய்யா

முக்கியமான கேள்வி. சமூகவியல் அடிப்படையில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டதைப் போல தந்தை சிவகுமாரன் உடன் வேலை செய்த காலத்தில் அதாவது பௌத்த பாடசாலைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிப் பௌத்த பாடசாலைகள் மூலம் அனுமதி கொடுத்து எமது சைவசமயத்திலிருந்து பௌத்தத்திற்கு மாற்றப்படுவது நடைபெறுகின்றது என்ற சொல்லப்பட்ட புத்தூர், ஆவரங்கால், கோப்பாய் போன்ற பகுதிகளிற்கு நாங்கள் நேரடியாகச் சென்று அந்த மக்களைப் பார்த்த போது அந்த மக்கள் ஒருவரும் பௌத்தத்திற்கு மாறியிருக்கவில்லை. ஆனால், அவர்களைப் பௌத்தத்திற்கு மாற்ற முயற்சித்தவர்கள் சாதியை ஒரு காரணமாகப் பயன்படுத்தினர். அப்படிப் பௌத்தத்திற்கு மாற்றுவதன் மூலம் அந்த மக்களிற்குச் சமத்துவம் வழங்குவதாகப் பரப்புரைகள் அந்தக் காலத்தில் நடந்தன. நாங்கள் அந்தப் பாடசாலைகளிற்குச் சென்றிருக்கிறோம். வீடுகளிற்குச் சென்றிருக்கிறோம். அங்கே சென்று பார்த்தால் அவர்கள் வீபூதி எல்லாம் பூசிக்கொண்டு அவர்கள் வாழுகின்ற குடிசைகளில் முருகன், பிள்ளையார் சிலைகள் எல்லாம் வைத்துக்கொண்டு இருந்ததை நாங்கள் பார்த்து இருக்கிறோம். அப்போது ஈழத்தமிழர் இளைஞர் இயக்கமாக நாங்கள் அந்த மக்களிடம் போய் “நீங்கள் மதம்மாற வேண்டாம். சாதி, சமய வேறுபாடுகளிற்கு முடிவு கட்ட எல்லோரும் போராடுவோம். நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்” என்று கூறிய போது, அதற்கு “நாங்கள் அப்படி மாறவில்லை” என அவர்கள் சொன்னார்கள். அந்த மக்களைப் பௌத்தத்திற்கு மாற்றினால் அவர்களிற்குச் சமத்துவம் கிடைக்கும் என்ற போலியான பரப்புரை லியகொல்ல அமைச்சராக இருந்த போது நடந்தது. அந்த பௌத்த சங்கத்தில் பொறுப்பாக இருந்த வைரமுத்து போன்றவர்கள் அந்த மக்களை மதம்மாற்ற எடுத்த முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் செயற்பட்டிருக்கிறோம். அவர்களுடைய சமத்துவத்திற்கு எதிராக அல்ல. அவர்களுடைய சமத்துவத்திற்காக அவர்களிடம் போய் வேலை செய்தோம். சாதி அடிப்படையில் அவர்களை மதம்மாற்றி பௌத்த பாடசாலைகளைத் தோற்றுவிக்கும் அந்த நடவடிக்கைகளை நாங்கள் எதிர்த்தோம். அதற்காக இயக்கங்கள் நடத்தியிருக்கிறோம். அதற்காக அப்போது பரம்சோதியின் தந்தை யார் அவர்கள் கோப்பாயிலே, ஆவரங்காலிலே இருப்பவர்கள் திரு.கதிரவேற்பிள்ளை போன்றவர்கள் அவற்றிற்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்தார்கள். நாங்கள் இளைஞர்கள் இந்த பௌத்த பாடசாலைகளுக்கு எதிராகப் பல பரப்புரைகள் செய்து முன்னின்று பல நடவடிக்கைகள் எடுத்ததை நான் நினைவுபடுத்துகின்றேன். இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வி எங்கிருந்து பெற்றீர்கள் என சிந்தித்துப் பார்க்கின்றேன். நாங்கள் இளைஞர் அமைப்பினராக இருந்த காலத்தில் பின் தங்கிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படும் வீடுகளிற்குச் சென்று கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்து இருக்கிறோம். மலசல கூட வாளிகளை எடுக்கின்ற தொழில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று நாங்களே அவற்றைப் போய் எடுத்துப் போராட்டங்கள் எங்கள் தமிழரசுக் கட்சி திரு.நவரத்தினம் அவர்களின் தலைமையில் சாவகச்சேரிப் பகுதியில் நடத்தியிருக்கின்றோம். எங்களது வீடுகளிற்கு வந்த போது எங்களைத் திட்டினார்கள் (சிரிக்கின்றார்). இவற்றை நீங்கள் சுட்டிக்காட்டியபடியால் நான் இவற்றை நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கின்றேன். தந்தை செல்வா, திரு.அமிர்தலிங்கம் போன்றோரின் காலங்களில் இது குறித்து திரு.வன்னியசிங்கம் அவர்களை முதன்மையாகக் குறிப்பிடலாம். எங்களுடைய ஊரிலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குள் பின் தங்கியவர்கள் சாதி குறைந்தவர்கள் என அடையாளங் காட்டி போகக் கூடாது என நடந்த வேலைகளிற்கெதிராக நாங்கள் போராடினோம். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிற்கு முன்பாக திரு.தர்மலிங்கம் அவர்களுடன் நாங்கள் சென்ற மோட்டார் வண்டி கல்லெறிந்து தாக்கி உடைக்கப்பட்டது. முடிதிருத்தும் இடங்களில் சாதிப்பாகுபாடு இருக்கின்றது எனச் சொல்லி திரு.செனட்ராஜா அவர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற வழக்குகள் அவற்றுள் சில லண்டனிலுள்ள நீதிமன்றங்கள் வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு எங்களுடைய கட்சி பங்களிப்புச் செய்தது.

அனைத்து இடங்களிலும் சமத்துவத்திற்காக நாங்கள் வேலை செய்தோம். சிகையலங்கரிப்பு நிலையங்களிலும் வேலை செய்தோம். அப்பொழுது நாங்கள் இளைஞர்களாக ஊர்வலங்கள் நடத்தி அந்த மக்களை அழைத்துக்கொண்டு கோயிலிற்கு உள்ளே போகின்ற முயற்சிகள் எல்லாம் செய்தோம்.

அப்போது நாங்கள் இளைஞராக இருந்த காலத்தில் தந்தை செல்வா காலத்தில் எடுத்த முயற்சிகள் காரணமாக தீண்டாமை ஒழிப்பிற்காக, சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக கிழக்கின் உகந்தையிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் ஒரு கிராமயாத்திரை அந்தக் காலத்தில் செய்தோம். அதில் பின் தங்கிய சமூக மக்களை அழைத்துக்கொண்டு அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களோடு சேர்ந்து உணவருந்திச் செயற்பட்டிருக்கிறோம். அதில் இளைஞர்கள் கூடுதலானோர் பங்களித்து இருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் நான் பார்க்கின்ற போது, ஆயுதப்போர் நிகழ்ந்த காலத்தில் சாதியப் பாகுபாடுகள் அதிகமாக வெளிவரவில்லை. அனைத்துச் சமூகத்தினரும் வேறுபாடு இல்லாமல் ஆயுதபாணிகளாக விடுதலைக்காகப் போராடியிருக்கிறார்கள். அதை நாம் மறுக்க முடியாது. ஆனால், எங்களால் ஒரு சீர்திருத்தம் தான் எடுக்க முடிந்திருக்கின்றதே தவிர, சாதிய உணர்வுகள் முற்றாக அழிந்துவிட்டதென நான் சொல்லவரவில்லை. அது இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றது. அதை முழுமையாக மாற்றியமைக்கப் பலவித முயற்சிகள் எடுத்தேயாக வேண்டும்.  அவர்களிடத்திலும் நாங்கள் சமூகத்தில் பிந்தங்கியிருக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும். அவர்களது கிராமங்கள் இன்னமும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவர்கள் காணியற்றவர்களாக, வீடற்றவர்களாக, தொழிலைத் தேடுவதில் தகுதியற்றவர்களாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு நாம் மாற்றுவழிகளைக் காண வேண்டும். நாங்கள் ஒரு விடுதலைக்காகப் போராடுபவர்கள் நிச்சயம் இந்தக்கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். விடுதலை என்ற பெயரில் சாதிகளை அடையாளங்காட்டிப் பிளவுபடுத்துவதற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது. அவர்களுடைய எதிர்கால வாழ்வை, வாழ்வாதரத்தை, எல்லா இடங்களிலும் அவர்களுக்குள்ள சமத்துவத்தை நிலைநாட்டி அவர்களுடைய காணி இல்லாத, வீடில்லாத சிக்கல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சனநாயக நீரோட்டத்தில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் சமத்துவமாக்கப்பட  வேண்டும். சரியான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்படியாக நாங்கள் நினைப்பதும் செய்வதும் போதாமல் இருக்கின்றது என்பதை நான் நிச்சயமாக ஒத்துக்கொள்கின்றேன்.

எடுத்துக்காட்டாக, உடுப்பிட்டித் தொகுதியிலே, 1977 ஆம் ஆண்டு திரு.ராஜலிங்கம் அவர்களின் வெற்றிக்காக மிகத் தீவிரமாகச் செயற்பட்டிருக்கின்றோம். அப்போது காங்கிரசைச் சேர்ந்த திரு.சிவசிதம்பரம் அவர்கள் ஒரு வெற்றிவாய்ப்பைக் கொண்டிருந்தாலும் அவரை அந்த இடத்திலிருந்து நல்லூரிற்கு மாற்றிப் போட வைத்து, தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக அந்தக் காலத்திலிருந்த திரு.ஜெயக்கொடி அவர்களை அதில் போட்டியிடாமல் தவிர்க்கச் செய்து அந்தத் தொகுதியிலேயே திரு.ராஜலிங்கம் அவர்கள் வெற்றிபெறுவதற்காக நாங்கள் உழைத்திருக்கின்றோம். தந்தை செல்வா மறைந்த பின்னர் காங்கேசன் துறைத் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் தீர்மானித்து இருந்தார்கள். எங்களுடைய இளைஞர்கள் தீர்மானித்து இருந்தார்கள். காங்கிரசிற்கு 6 இடங்கள் தரப்பட வேண்டும் என்ற காங்கிரசிற்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையிலான போட்டா போட்டி இருந்தது. நாங்கள் அப்போது தீவிரமாகச் செயற்பட்ட காலமென்பதனால் நான் காங்கேசன் துறைத் தொகுதியில் நின்று இலகுவாக வெற்றி பெற்றிருக்கலாம். எனக்கு அப்போது 24, 25 வயதே. அப்போது வட்டுக்கோட்டையில் திரு.அமிர்தலிங்கம் தேர்தலில் நின்று தோல்வியடைந்து இருந்ததால், திரு.அமிர்தலிங்கம் அவர்களைக் காங்கேசன் துறைக்கு வருமாறு அழைத்தேன். தேர்தலில் வெற்றிபெறும் சந்தர்ப்பத்தை நான் அப்போதும் நாடவில்லை. நாங்கள் போராட்டப் பாதைக்குத் தான் அப்போதும் திரும்பியிருந்தோம். நான் இளைஞனாகக் காங்கேசன் துறைத் தொகுதியில் அந்த நேரம் வெற்றி பெற்றிருக்க முடியும். அப்படியிருந்தும் இந்த சாதி என்ற கொடுமைகளிற்கெதிராக நாங்கள் ஒரு தலைவரை உருவாக்குவதில் பல முயற்சிகள் எடுத்தோம். திரு.ராஜலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியிலே மேற்சபைக்கு நியமிக்கப்பட்ட பொழுது, அவர் ஒரேயொரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் பொன்னம்பலம் அவர்கள் ஆதரவளிக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால், அதை நாங்கள் மாற்றியமைத்து உடுப்பிட்டித் தொகுதியில் அவரை 10,000 இற்கும் அதிகமான வாக்குகளினாலே வெற்றிபெற வைத்தோம். அதில் இளைஞர்களாக நாங்கள் மிகத் தீவிரமாக வேலை செய்திருக்கின்றோம். அப்பொழுது சிவாஜிலிங்கம், திரு.துரைரட்ணம் அவர்களின் மைத்துனர் என இப்படிப் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் எங்களது தொகுதிகளில் கூட வேலை செய்யாமல் அவரின் வெற்றிக்காக வேலை செய்தோம். சில இடதுசாரிகள் கூட அந்த நேரத்தில் பொலிகண்டி போன்ற ஊர்களில் தங்களது வீடுகளுக்குள் திரு. ராஜலிங்கம் அவர்கள் வரக் கூடாது என்ற சொன்ன போது, அவரை அழைத்துக்கொண்டு சென்று வாக்குக் கேட்டு அவரை வெற்றியடையச் செய்ததில் இளைஞர்கள் நாம் மிகத் தீவிரமாக வேலை செய்தோம். இதனால் சாதி தீர்ந்துவிட்டது. பிரச்சனை இப்போது இல்லை என நான் ஏமாற்ற விரும்பவில்லை. இன்னும் அதிகமாக நாங்கள் வேலை செய்ய வேண்டும். அவர்களை அனைத்து இடங்களிலும் தொழிற்துறைகளில், வாழ்வாதாரத்தில், நிலம், வீடு போன்றவற்றில் முன்னிற்குக் கொண்டுவந்து நல்ல கல்வியறிவுள்ளவர்களாக மாற்றி ஏற்கனவே செய்த பழைய தொழில்களை விட்டுவிட்டுப் புதிய நவீன தொழில்களிற்குள் அவர்களை உட்படுத்தி அவர்களை அனைத்திலும் சமத்துவமானவர்களாக்க வேண்டிய தேவை எதிர்கால அரசியலில் எங்களுக்கு நிறைய இருக்கின்றது. அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் மிகவும் பங்களித்தார்கள். தமிழரசுக் கட்சி, கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று சனநாயக ரீதியாகவும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனபடியால், நாங்கள் விடுதலை என்கின்ற போது எங்கள் மத்தியில் இந்தச் சாதிப் பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள், பிரதேசச் சிக்கல்கள் என்பனவற்றிற்கு எந்தவகையிலும் நாங்கள் இடமளிக்காது நாங்கள் அவர்களை சமமானவர்களாக, விடுதலை பெறும் போது மட்டுமல்ல அடையும் விடுதலையை முழுமையாக அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது தான் எமது கொள்கை.

தொடரும்..

காகம்

Be the first to comment

Leave a Reply