சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! – கேள்வி 1

குறிப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராசா அவர்களுடனான சிறப்பு நேர்காணலின் எழுத்துவடிவம் முழுமையாக வெளிடப்பட்டதன் பின்னர் ஒலிநாடா வெளியிடப்படும்.


கேள்வி:

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப் பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள் எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்? யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம் அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம் பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்? அறவழிப்போராட்ட காலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்? பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதை மீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறு புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்:

நான் சிறுவனாக இருந்த காலத்தில் தந்தை செல்வா அவர்கள் காங்கேசந்துறைத் தொகுதியில் தேர்தலில் நின்ற போது தேர்தல் காலத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். நான் மாணவனாக இருந்த போது குறிப்பாக 2 விடயங்கள் எங்கள் மனதைப் பாதித்திருந்தன.

  • 1956 ஆம் ஆண்டு ஆணி 5 ஆம் தேதி பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். அந்த நேரத்தில் நாங்கள் சிறுபிள்ளையாக வீமன்காமம் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது நான் செய்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அது பற்றி விபரங்கள் தெரியாது. ஆனால் தந்தை செல்வாவும் 200 தொண்டர்களும் தமிழரசுக் கட்சி சார்பிலே தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பித்தமை தொடர்பில் அந்நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் எங்களிற்கு மூத்த வகுப்பில் இருப்பவர்கள் பேசியதை ஓரளவுக்குக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு அடுத்த நாள் (1956 ஆம் ஆண்டு ஆணி 5 ஆம் தேதிக்கு அடுத்த நாள், நாங்கள் கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியராகவிருந்த திரு.அரசரட்ணம் அவர்கள் அந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி விட்டு புகைவண்டி மூலமாக மாவிட்டபுரம் புகைவண்டி நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்தே எமது பாடசாலைக்கு வந்தார். அப்பொழுது ஏற்கனவே, இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிங்களவர்கள் இரத்தம் சிந்தத் தாக்கினார்கள் என்ற செய்தி எங்கள் பாடசாலையில் ஓரளவுக்குப் பரவிவிட்டது. அதனால் வகுப்புகளே நடைபெறாத நிலைமை அன்று இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எல்லாம் அது பேசப்பட்டிருந்தது. ஆனபடியால் எங்களுக்கு அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. எமது பாடசாலை பேராசிரியர் வித்தியானாந்தன் அவர்களுடைய பாடசாலை. அரசரட்ணம் ஆசிரியர் வந்த பொழுது அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெரிய கூட்டமாகவே நாங்கள் எல்லோரும் கூடி விட்டோம். நாம் அதில் அரசரட்ணம் ஆசிரியர் பக்கத்திலேயே போய் நின்று கொண்டோம். அவர் அந்தப் போராட்டத்தைப் பற்றி பேசினார். அப்பொழுது தான் அந்தப் போராட்டம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது தமிழிற்குச் சமவுரிமை கோரியும் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தும் தந்தை செல்வநாயகம் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பண்டாரநாயக்காவினால் ஏவிவிடப்பட்ட சிங்களக் காடையர்களினால் மூங்கில் தடிகளால் அடித்தும் கற்கள் வீசியும் தாக்கப்பட்டார்கள். குறிப்பாகத் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தலை பிளந்து இரத்தம் சிந்தியதைப் பற்றியும் அவர் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் போராட்டம் தான் சிறுபராயத்தில் எங்கள் மனதில் பதிந்த முதன்மையான செய்தி.

அதன் பிறகு எங்கள் வீடுகளில், வெளியில் கேள்விப்பட்ட செய்திகள் இருக்கின்றன. அதாவது, திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தலை உடைக்கப்பட்டு இரத்தம் சிந்திய நிலையில் கட்டுப்போட்டுக்கொண்டு அவர் பாராளுமன்றம் போய்ப் பேச முயற்சித்த போது, பண்டாரநாயக்கா “I see the honorable wounds of war” என்று கேலியாகப் பதிலளித்தார் எனக் கேள்விப்பட்டோம். இது எங்களின் உரிமைப் போர் என அதற்கு திரு.அமிர்தலிங்கம் அவர்கள் பதிலுரைத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் இவற்றையெல்லாம் பாராளுமன்றப் பதிவேடுகளில் படித்தோம். திரு.அரசரட்ணம் ஆசிரியர் அவர்கள் சொன்ன விடயங்கள் எல்லாம் பின்னர் பாராளுமன்றப் பதிவேடுகளில் படித்திருந்தேன் (நான் பாராளுமன்றத்திற்குச் செல்லும் முன்பே).

எனது சிறு வயதைப் பற்றிச் சொல்லுவதானால், நான் மூன்றாம், நாலாம் வகுப்புப் படிக்கும் போது தான் இந்தத் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் சமவுரிமைக்கான போராட்டம் ஆரம்பித்தது. சேற்றுக் கால்கள் பதிந்த நசனல் அணிந்திருந்த ஆசிரியர் வந்திருந்த தோற்றமும் அவர் எங்களிற்கு உரையாற்றியதும் தான் முதன்முறையாக எங்கள் சிறுவயதில் மனதில் பதிந்து எம்மை இவற்றில் நாட்டம் கொள்ள வைத்தது.

  • இரண்டாவதாக, 1958 இல் நடந்த கலவரத்தைக் குறிப்பிட வேண்டும். அப்போடு நாங்கள் கொஞ்சம் வளர்ந்திருந்தோம். ஓரிரு வயதுகள் கூடி இருந்தது. அப்போது எனக்கு 14 வயது என்று நினைக்கின்றேன். அப்போது இது மிகவும் பரபரப்பான செய்தி. நான் படித்த வீமன்காமம் பாடசாலையில் வகுப்புகள் கூட நடைபெறவில்லை. இந்தக் கலவரத்திலே ஆயிரக்கணக்கான எமது மக்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களால் கப்பலில் அனுப்பிவைக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைத்தது. அப்பொழுது திரு.சச்சிதானந்தம் ஆசிரியர் (தந்தை செல்வாவுடன் மிக நெருக்கமாக வேலை செய்தவர்) மற்றும் திரு.அரசரட்ணம் ஆசிரியர் ஆகியோர் காங்கேசன் துறையில் கப்பலில் வந்திறங்கிய பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீராகாரம் கொடுக்குமாறு கூறியிருந்தார்கள். அப்பொழுது மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைச் சுற்றியிருந்த செவ்விளநீர் மரங்களில் நாமே ஏறி இளநீர்க் குலைகளை வெட்டிக்கொண்டு அப்போது மிகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த “பினோ” என்று சொல்லப்படுகின்ற ஒருவகைப் பாணத்தைக் கடாரத்தில் எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தோம். அப்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் வந்த நிலைமை இன்றும் எனக்கு மனதில் இருக்கின்றது. பெண்கள் சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடனும் தலையில் கட்டுகளுடனும் ஆண்கள் கட்டிய வேட்டியுடன் வந்திருந்தது என அந்த நிலைமையைப் பார்த்தமை தான் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் எனது இதயத்தை மிக மோசமாகப் பாதித்தது. அப்பொழுது தான், தந்தை செல்வா மற்றும் திரு.அமிர்தலிங்கம் ஆகியோரின் உரைகளைத் தேடி சைக்கிளில் சென்று நாம் கேட்கின்ற காலம். அப்படியாகத் தான் 1958 இற்குப் பின்னர் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நான் பங்குபற்றினேன். அப்போது Johns, St.Patricks கல்லூரிகளில் உயர் வகுப்புகளில் படித்த மாணவர்கள் எங்கள் பாடசாலைக்கு வந்து நாங்கள் ஏன் இந்தப்போராட்டத்திற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் காங்கேசன் துறையிலிருந்து ஒரு பேரணியாகச் சென்று சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருக்கிறோம். பின்னர் சில நாட்கள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருக்கிறோம்.

இவையே அரசியலில் என்னைத் தூண்டிய நிகழ்வுகளும் போராட்டத்தில் பங்குபற்றிய ஆரம்ப நிகழ்வுகளுமாக நான் குறிப்பிடலாம். அதன் பின்னர் 1968 என்று நினைக்கின்றேன். அப்போது சிறிமாவின் காலத்தில் லியகொல்ல என்பவர் கல்வி அமைச்சராக இருந்தார். அவருடைய காலத்தில் எங்களுடைய புத்தூர் மற்றும் ஆவரங்கால் பகுதிகளில் வைரமுத்து என்று ஒருவர் பௌத்த சங்கத்தில் ஏதோவொரு பொறுப்பில் இருந்தார். இந்தப் பகுதிகளில் இவர் மூலமாக அப்போது பௌத்த பாடசாலைகள் தொடங்கப்பட்டது. எங்களுடைய சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களை அந்தப்பாடசாலையில் இணைத்து பௌத்த மதத்தவர்களாக மாற்றியதாக எங்களிற்குத் தகவல் வந்தது. அப்பொழுது இரண்டு விடயங்கள் எமக்குத் தெரிந்தன.

1) பௌத்த மதத்திற்கு எங்கள் சைவசமயத்தைச் சேர்ந்தவர்களை மாற்றுகிறார்கள் என்ற செய்தியும்

2) அப்பொழுது பாடசாலைகளில் “சுயவன்சன”, “சுயசுயவன” போன்ற அதிர்ட இலாபச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்கள் அதனை விற்க வேண்டும் என்று சொல்லப்பட்டதற்கு எதிராக மூத்த மாணவர்களின் ஆதரவோடு நாங்கள் கிளர்ந்திருந்தோம். அப்பொழுது தான் நாங்கள் “ஈழத்தமிழ் இளைஞர் மாணவர் அமைப்பு” என்று ஒரு அமைப்பை கொக்குவில் ஞானோதயா வித்தியாசாலையிலே இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுத் தொடங்கியிருந்தோம். அப்பொழுது “கேசை” என்ற வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும், நான் செயலாளராகவும், பரமசாமி பொருளாளராகவும் மற்றும் மைக்கல் தம்பிநாயகம் ஆகியோர் பொறுப்பில் இருந்தோம். அப்படி இளைஞர்கள் மற்றும் மாணவர்களைத் திரட்டி ஒரு அமைப்பை உருவாக்கி லியகொல்லவின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்பொழுது திரு.சுந்தரலிங்கம் அவர்கள் பொலிஸ் SP ஆக இருந்தார்.

அவரது அனுமதி பெற்று ஊர்வலங்களை நடத்துவதனால் அவரை நன்றாகத் தெரியும். அந்த இயக்கம் தான் ஆரம்பத்தில் எந்தவொரு கட்சித் தொடர்பும் இல்லாமல் ஆரம்பித்த முதலாவது இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் நிர்வாகிகளாக இருந்து போராட்டங்களை முன்னெடுத்துப் பலதடவை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியினரும் இளைஞர்களும் எம்முடன் தொடர்பில் இருந்தார்கள். பல்கலைக்கழக அனுமதி உயர் புள்ளி அடிப்படையில் Merit முறையில் வழங்கப்படும் போது அதிகபுள்ளிகளைப் பெற்று எமது தமிழ் மாணவர்கள் கூடுதலாகத் தெரிவு செய்யப்படுவதற்கு எதிராக தரப்படுத்தல் (Standardization) என்ற முறையைக் கொண்டு வந்து தமிழ்மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் அதிகமாக சிங்கள மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பது நிகழ்ந்தது. இந்தத் தரப்படுத்தலிற்கெதிரான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களாக அப்போதிருந்த சத்தியசீலன், அரியரத்தினம் போன்றோர்கள் முன்னின்றமை நினைவிலிருக்கிறது. அவர்கள் எங்களை ஆதரிக்க அந்தப்போராட்டங்களில் எல்லாம் நாங்கள் கலந்துகொண்டிருந்தோம். நடேஸ்வராக் கல்லூரியில் கல்வியை முடித்த பின்னர் தொழினுட்பக் கல்லூரிக்கு நான் சென்றிருந்த காலம் அது. அப்பொழுது தான் போராட்டங்கள் ஊடாக வடக்கு, கிழக்கிலுள்ள இளம் சமூகத்தோடு அதிகளவான நெருக்கங்கள் இருந்தது.

அந்தக் காலத்திலே யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருக்கின்ற Greence House இற்குத் தான் பொலிஸ் எங்களைக் கைது செய்து கொண்டு சென்று விசாரிப்பார்கள். அந்தக் காலத்தில் அன்றைக்கே விட்டு விடுவார்கள். அந்தக் காரணங்களால் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் நாங்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கறை கொண்டு ஒரு செய்தி அனுப்பியதால், இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்த தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குச் சென்று நாம் அவர்களைச் சந்தித்தோம். அப்போது எங்களை ஏன் கைது செய்தார்கள்? விசாரணையில் என்ன நடந்தது? என்ன விசாரித்தார்கள்? என்றெல்லாம் அக்கறையோடு எம்மைக் கேட்டார்கள். இதுவே முதலாவதாக நாம் அவர்களைச் சந்தித்துப் பேசியது. இதற்கு முன்னர், 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாம் பங்குபற்றிய போது அவர்களைக் கண்டிருக்கிறோம். 1968- 1971 ஆம் ஆண்டு காலப்பகுதி தான் நாம் அறவழிப் போராட்டப் பாதையில் தொடர்புபட்டிருந்தோம். இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் வாழுமிடங்களில் எல்லாம் இளைஞர்களோடு அறிமுகமாகி அவர்களுடன் இணைந்து போராட்டப் பாதையில் நாம் இருந்தோம்.

1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டமே நாங்கள் பங்குபற்றிய முதலாவது போராட்டம். பின்பு 1972 இனைக் குறிப்பிடலாம். நாங்கள் மாணவர் அமைப்பில் இருந்த காலத்தில் இளைஞர்கள், மாணவர்களோடு தொடர்புகொண்டு அவர்கள் மத்தியில் விடயங்களைப் பேசும் ஒருவனாக அவர்கள் மத்தியில் நான் இருந்ததால்….

1972 மே மாதம் 22 ஆம் தேதி சிறிமாவால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிராக தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போது அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டதால் போராட்டங்களை நடத்த வேண்டும் என என்னைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்களுடன் இணைந்து போராடத் தொடங்கினோம். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு எதிராக நாங்கள் இளைஞர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்திக் கைதுசெய்யப்பட்டோம். 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் 1972 அரசியலமைப்பிற்கு எதிராகப் போராடினோம் (இதற்கு 10 ஆண்டுகளின் முன்பு சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில் நான் வடக்கு-கிழக்கு முழுவதற்கும் சென்றிருக்கின்றேன்). 1972 ஆம் ஆண்டு காலப் பகுதியில் போராட்டங்கள் காரணமாக அரசியல் ரீதியில் தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டிய காலமாக இருந்தது. 1972 அரசியலமைப்பிற்கு எதிராக 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போராடிய போது என்னை இராணுவமும் பொலிசும் வந்து கைது செய்தது.

48 இளைஞர்கள் என்னுடன் கைது செய்யப்பட்டனர். நான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகளில் என்னைப் பலமுறை கைது செய்தார்கள். வெளியில் வந்தால் நாங்கள் சில நாட்கள் தான் வெளியில் இருப்போம். 10 ஆண்டுகளில் 11 தடவை கைதுசெய்யப்பட்டு கூட்டிப் பார்த்தால்..2 ஆண்டு.. பின்னர் 6 மாதம்… 1 ஆண்டு… அப்படியாக 7 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். நாலாம் மாடியில் விசாரணையின் போது மயங்கி விழும் வரை சித்திரவதை செய்தார்கள். சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்த சிங்களக் கைதிகள் எங்களைத் தாக்கிய சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படி நாங்கள் சிறை மீண்டு பேருந்து, புகைவண்டியில் வருகின்ற போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எங்களை இடைமறித்து வரவேற்புக்கொடுத்து அழைத்து வருவார்கள். வீடுகளிலும் அதேபோல நிகழ்வுகள் நடந்தன. Dr. N.M.பெரேரா யாழ்ப்பாணம் வரும் போது அதை எதிர்த்துப் போராடி கைதானோம். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு எதிரான போராட்டங்களில் பல இடங்களில் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றது. அதை நாங்கள் நேரடியாகக் கையாளாமல் (சிரிக்கிறார்) விட்டாலும் அந்த நிகழ்வுகள் பற்றி எல்லாம் எம்மிடம் விசாரிக்கின்ற பொழுது என்னுடைய உரைகள் அந்த இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியது என்றுதான் சொல்லப்பட்டது. இவை தான் எனது ஆரம்ப காலங்களில் அரசியலில் ஈடுபடத் தூண்டியவையும் அகிம்சை வழியில் போராடிய சந்தர்ப்பங்களாகவும் அமைந்தன. அப்பொழுது நிகழ்ந்த குண்டு வெடிப்புகளின் போது அது குறித்து நான் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை போன்றதைத் தொடர்ந்தும் நாங்கள் தீவிரமாக மக்களிடத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் வேலை செய்துகொண்டிருந்தோம்.

 

தொடரும்..

காகம்

 

Be the first to comment

Leave a Reply