அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை

2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

3. பகுதி – 2அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா

====================================================================================

நகர் நடுவம் (City Center)/ நகரத் தொழிற்பகுதி அபிவிருத்தி வலயம் (Down Town  Development Zone) தொடர்ச்சி 

ஆ) கலப்பு வலயம் (வதிவிடம், மொத்த வியாபாரம் மற்றும் உற்பத்திக் கைத்தொழில்)

இவ்வலயமானது காங்கேசன்துறை வீதியிலிருந்து  மருத்துவமனை வீதி, பொன்னாலை வீதி,  உள்ளடக்கிய பகுதியாகும். இவ்வலயமானது தற்போது பெரும்பான்மை நிலப்பயன்பாடாக குடியிருப்புக்கள் மற்றும் வியாபார வர்த்தக நடவடிக்கைகளுடன் சிறுகைத்தொழில் நடவடிக்கைகளையும்  கொண்டுள்ளது.

உரு- 01 – அமைவிடம்

அந்தவகையில் இவ்வலயமானது பின்வரும் வலுவினைக் (strength) கொண்டுள்ளது.

 1. நடுவண் பொருண்மிய வலயத்திற்கு அண்மையிலும் அதனுடன் நெருக்கமான தொடர்பினையும் கொண்டுள்ளமை
 2. நகர எல்லைப்புற விரிவாக்கத்திற்கு ஏதுவாக உள்ளமை
 3. நகரத்தின் இயற்கை அழகுடன் நேரடியான தொடர்புபடுதல்(கடல் , வேளாண்மை)
 4. சிறந்த வீதிவலைப்பின்னல், பௌதீகக் கட்டுமானங்களினை கொண்டுள்ளமை
 5. மக்கள்செறிவு அதிகமாகக் கொண்டுள்ளமை
 6. சமூக கட்டுமானங்கள் சிறந்த முறையில் விருத்தி பெற்றுக் காணப்படுகின்றமை.
 7. பொருண்மியவளம் மற்றும் ஏற்கனவே சிறு கைத்தொழில் நடவடிக்கைகள் காணப்படுகின்றமையும் அவற்றிற்கு ஏதுவாக களஞ்சியம் மற்றும் போக்குவரத்து வசதிகள் காணப்படுகின்றமை.

மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், மேலே குறிப்பிடப்பட்ட ஆ.கலப்பு வலய எல்லையானது நகர எல்லை வரை விரிவாக்கம் செய்யப்படுகின்றது.

அதேநேரம் கீழ்வரும் சிக்கல்களும் இனங்காணப்பட்டுள்ளது.

 1. 50 வீதத்திற்கு மேற்பட்ட குடியிருப்புக்கள் தற்காலிகமானவையும் போரினால் பாதிப்படைந்தவையுமாகும்
 2. நன்கு விருத்தி பெற்ற கால்வாய்கள் மற்றும் குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தினாலும் மக்களால் சுரண்டி குடியிருப்பபுக்கள் அமைக்கப்பட்ட காரணத்தினாலும் பௌதீகக் கட்டமைப்புக்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுகின்றமை
 3. வெள்ள அபாயம் நிறைந்த இடங்களில் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளமை
 4. பெரும்பான்மை நிலப்பயன்பாடு குடியிருப்புக்களாக இருந்தாலும் அவற்றிற்கான சமூக்கட்டுமானங்கள் போதியளவு இன்மையும் விருத்தி பெறாத நிலையும்
 5. கைத்தொழில் நடவடிக்கைகான சிறந்த ஆற்றல்வளம் (potential) இருந்த போதிலும் அவை இன்னும் தொடக்க நிலையிலேயே (initial stage) இருத்தல்.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட வலிமை (strength) மற்றும் வலிமைக்குறைவு (weakness) என்பவற்றினை அப்படையாக் கொண்டு இவ்வலய அபிவிருத்தியானது பின்வரும் முதன்மைக் கருத்தின் (concept) அடிப்படையில் அபிவிருத்தி செய்யலாம் என பரிந்துரைக்கப்பபடுகின்றது.

 1. வீடமைப்பு அபிவிருத்தி (Housing Development)
 2. உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இயங்குதன்மையை அதிகரித்தல் (Infrastructure Improvement and Enhance acceptability and mobility)
 3. பொதுவெளியை அதிகரித்தலும் மேம்படுத்தலும் (Increase and Improve the Public Space)
 4. தொழில்துறை மற்றும் வர்த்தக வளர்ச்சி (Industrial and commercial development)

1. பொருளாதார மையங்களினை விருத்தி செய்தல்
இப்பிரதேசத்தில் நாவாந்துறைச் சந்தி, காக்கைதீவு, தட்டார்தெருச்சந்தி, ஓட்டுமடம் சந்தி என்பன ஏற்கனவே சந்திகளினை ஒட்டி விருத்தி பெற்று இருப்பினும் இவை முறையான திட்டமிடல் இன்றி உட்கட்டுமானங்கள் அற்றனவாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் இப்பிரதேசமானது கடலினை அண்டிக் காணப்படுவதுடன் இப்பிரதேச மக்களது பிரதான வாழ்வியானது கடல்சார்ந்த வளங்களினை அண்டிக்காணப்படுவதனால் கடல்சார் வள விருத்தி என்பது அத்தியாவசியமாகின்றது என்ற நிலையில் நாவாந்துறை மற்றும் காக்கைதீ:வு என்பவற்றினை சிறந்த உட்கட்டுமானங்கள் உள்ள பொருளாதார மையங்களாக அமைத்தல். மேலும் காக்கைதீவுச்சந்தியானது நகரத்தின் எல்லையில் காணப்படுவதுடன் இப்பகுதியின் வளர்ச்சியானது புறநகராக்கம் அல்லது அதனை ஒட்டிய விருத்திக்கு மற்றும் கடல்சார் வள கைத்தொழிலாக்கம் என்பனவற்றிற்கு வழிவகுக்கும்.

2. திட்டமிட்ட குடியிருப்பு

படத்தில் காட்டப்பட்ட இப்பகுதியானது முற்றுமுழுதாகவே குடியிருப்புச் சார்ந்த பகுதியாகும். (Refer existing land use map and disaster map) இருப்பினும்  நிலத்தோற்றம்,  குளங்கள் மற்றும் கால்வாய்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டமையால் வெள்ள அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட பகுதியாகவும் காணப்படுகின்றது. தற்போது இவ்வபாயங்கள் கட்டுப்டுத்தப்பட்ட நிலை காணப்படினும் எதிர்காலத்தில் இதன் நிலை எவ்வாறு அமையும் என்பது சிந்திக்கத்தக்க விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் முறையான நிலப்பண்ணடுத்தல் பொறிமுறை (Land preparation and consolidation) விஞ்ஞானத்தின் கீழ் அனைத்துவசதிகளும் கொண்ட திட்டமிட்ட குடியிருப்பு ஒன்றினை அமைத்தல். இது முழுமையான குடியிருப்பு வலயமாக அன்றி கலப்பு வலயமாக அமைதல் அவசியமாகும். இத்திட்டமிட்டலானது ஏற்கனவே விடயம் 1 இல் குறிப்பிட்டது போல இதனை அண்டிய பகுதிகளின் விருத்திக்கு வழிவகுக்கும்.

3. சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் விருத்தி

இப்பகுதியில் ஏற்கனவே மீன் உணவு பதனிடுதல், கழிவு இரும்புகள் சேகரித்தல் மற்றும்   இயந்திர பழுதுபார்க்கும் ஆலைகள் (mechanical repairing) மற்றும் யாழ் மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவம் சார்நத உர உற்பத்தி என்பன மிகவும் ஆரம்ப நிலையில் காணபப்டுகின்றன. இக்கைத்தொழில்களினை நடுத்தர கைத்தொழிலாக விருத்தி செய்வதற்கு ஏதுவான அமைவிடம்,  மூலப்பொருள், இடவசதி, மாந்தவலு என்பன இப்பகுதியில் காணப்படுவதனால் நடுவண் சுற்றுச் சூழல் அதிகார அபையின்

விதிமுறைகளிற்கு அமைவாக இப்பகுதியில் இவற்றினை விருத்தி செய்தல் என்பது தேவையாகின்றது.

இந்நிலையில் யாழ் நகரத்தில் கைத்தொழில்துறை விருத்தி செய்தல் பௌதீக கட்டமைப்புக்களிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் காணப்படுகின்றது. இந்நிலையில் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் இந்நகரில் கைத்தொழில் துறைசார்ந்த அபிவிருத்தியானது தேவையாகின்றது.

அ.    தற்போது யாழ் நகரத்திலே வட மாகாணத்திலோ சரி பொருண்மியமானது முதலாம் நிலைக் கைத்தொழிலை அடிப்படையாகக்கொண்டு காணப்படுகின்றதுடன் கடந்தகால போரின் காரணமாகவும் வலுவான பொருண்மியக் கொள்ளைகள் இல்லாத காரணத்தினாலும் முறையான தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும்  அதிகரித்துவரும் மூளைசாலிகள் மற்றும் பொருண்மிய விருத்திக்காக குடியகல்வு என்பது பெரும் சிக்கலாகவே காணப்படுகின்றது. இக்குடியகல்வானது முறையான திட்டமிட்டமிடலினை மேற்கொள்வதற்கு பெரும் சவாலாக உள்ளமையால் இத்தகைய குடியகல்வினைக் கட்டுப்படுத்துவதற்கும் மேலும் குடிவரவினை அதிகரிப்பதற்கும் கைத்தொழில்துறை விருத்தி தேவையாகின்றது.

ஆ.    அத்துடன் வட மாகாணத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட கைத்தொழில் பேட்டைகளும் எந்தளவுக்கு வருமானம் மற்றும் வேலைவாய்ப்பினை ஈட்டித்தருபனவாக காணப்படுகின்றன என்பது ஐயப்பாட்டினையே ஏற்படுத்தி வருகின்றது. எனவே யாழ்நகரில்  இத்தகைய கைத்தொழில் ரீதியான வலய விருத்தியானது சிறந்த சந்தைவாய்ப்பினை வழங்கும் நடுவமாக விளங்கும்.

இ. இதைவிட இப்பகுதியில் ஏற்கனவே  யாழ் நகரத்தில் சிறு மற்றும் நடுத்தரளவிலான மீன்பிடிக்கைத்தொழில், இரும்பு மீள் பயன்பாடு, பழச்சாறு மற்றும் உர உற்பத்தி காணப்படுக்கின்றது. இவற்றினை பன்னாட்டுச் சந்தைக்கு எடுத்துச்செல்லக்கூடிய வகையில் முதலீட்டாளர்கள் அணியமாக உள்ளனர். எனவே இத்துறைசார்நத தொழினுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் பொறிமுறைகளினை விருத்தி செய்தல்

ஈ. இன்று திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது ஒரு நகரத்தின் பௌதீக காரணிகள் மற்றும் அழகு, உயிர்த்திறன் (livability) என்பனவற்றை மேம்படுத்துவதாகக் காணப்படுகின்றதுடன் நகரப் பொருண்மியத்தில் மறைமுகமாகப் பங்கு செலுத்துகின்றது. இந்நிலையில் யாழ் மாநகர அவையினால் ஆண்டுதோறும் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகள் எந்தளவுக்கு வருவாயினை ஈட்டித்தருவகின்றன என்பது பற்றி  தெரியவில்லை. இது தொடர்பாக கடந்த காலங்களில் காக்கைதீவுப்பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்  அவை இன்னும் நடைமுறையில் இருப்பது ஐயப்பாடாகும். இதுதவிர யாழ் மாநகர அவை தன்னுடைய வருவாயினை அதிகரிப்பதற்கு இத்தகைய கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுதல் தேவையாகின்றது.

உ.   யாழ் பல்கலைக்கழக பேராசிரியரினால் கழிவு இரும்புகளினைக் கொண்டு சிறு மகிழுந்துகளை உருவாக்கும்  உற்பத்தி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்ற நிலையில் தமிழ் மக்கள் தன்னார்வமும் விடாமுயற்சியும் உள்ளவர்கள் என்ற வெளிப்படை உண்மைக்கு ஏற்ப அவர்களிற்கான பொருண்மிய, தொழினுட்ப முயற்சிக்கான களங்கள் அமைத்துக்கொடுத்தல் என்பது முதன்மையானது.

மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடமாகாணத்திலோ அல்லது தழிழர்   வாழிடங்களின் சுற்றுச்சூழலிற்கு பங்கம் ஏற்படாதவகையில் கைத்தொழில்துறையை உறுதிநிலைக்கு கொண்டுவருதல் தேவையானது என்ற வகையில் அவற்றிற்கான சிறந்த சந்தை வாய்ப்பினை  ஏற்படுத்திக் கொள்ளுவதற்கு யாழ் நகரத்தினையும் அதனை அண்டிய பகுதியில் கைத்தொழில்  வலய விருத்தி என்பது தேவையானது என்பதே ஆய்வாளரின் கருத்தாகும்.

4. அணுகல் மற்றும் அசைவியக்கத்தை மேம்படுத்தல் (Improve the accessibility and mobility)

யாழ் நகரத்தில் பொதுவாக வீதி வலைப்பின்னல் சிறப்பாக அமைந்து காணப்படினும் அணுகல் (accessibility) மற்றும் அசைவியக்கத்தினை (mobility) அதிகரிக்கக்கூடிய வகையில் அவ்வீதிவலைப்பின்னல் அமையவில்லை என்பது பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. அதாவது பெரும்பாலான இடங்களில் உள்ளக வீதிகள் முட்டுச்சந்து (dead end) ஆகவே உள்ளன. அத்துடன் இப்பகுதியிலும் சரி யாழ் நகரம் முழுவதிலும் சரி நடைபாதைகளோ ஈருருளிப்பாதைகளோ இல்லை.(நவீன நகரத்திட்டமிடலானது இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஈருருளிப் பயன்பாட்டினை தூண்டுகின்ற வேளையில் இலங்கையில் யாழ் நகரத்தில் மகிழுந்துப் பயன்பாட்டினை தூண்டுகின்ற கொள்கைள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை மிகவும் வருத்தத்திற்கு உரிய விடயமாகும்.)

அந்தவகையில் பின்வருமாறு; உள்ளக வீதிகளிளை பேச்சுகளின் (negotiation) மூலம் ஒருங்கிணைக்கலாம்.

அந்தவகையில் வரைபடம் 1 இல் காட்டப்பட்டுள்ள படி இரண்டு இயற்கையான இயல்புகளைப்  பொதுப்பாதைகள் மூலம் இணைத்தல். மேலும் அதேபடத்தில் நீல நிறத்ததால் குறிப்பிடப்பட்ட பகுதியில் அதிகம் வர்த்தக நடவடிக்கைள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவன்பண்ணை வீதியினையும் காங்கேசன்துறை விதியினையும் இணைத்தல் போன்ற திட்டமிடல்கள் நகரத்தின்  இயங்குதன்மையை (mobility) அதிகரிக்கும்.

இதுபோல குடியிருப்புப் பகுதியிலும் திட்டமிட்ட முறையில் வீதிவலைப்பின்னலினை மேற்கொள்ளலாம் (பார்க்க வரைபடம் 2) இவ்வாறு வீதிவலைப்பின்னலினை மேலும் அதிகரித்தல் மற்றும் அதன் தேவை என்பன பற்றி மேலும் பல ஆய்வுகள் தேவையாகின்றது.

மேலும் நகரத்திலுள்ள முதன்மையான இடங்களினை இணைத்து நடைபாதைகள் அல்லது ஈருருளிப்பாதைகளை அமைத்தல் (பார்க்க வரைபடம் 3 – increase mobility and social space)

[ Street as place making ]

மேலுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ள பகுதியானது:

1) இந்நீண்ட அகலமான இவ் வெள்ளவாய்க்காலினை முறையான தொழினுட்பமுறைமூலம் சீமெந்து தரையிட்டு (slab) இட்டு இதனை ஒரு பொதுப் பாயன்பாட்டு பகுதியாக (Public Space) ஆக பயன்படுத்தலாம். இதனை சிறுவர் விளையாடுவதற்கு அல்லது ஒன்று கூடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றுதல்

2) குளம், விளையாட்டு மைதானம் மற்றும் சனசமூக நிலையம் என் மூன்று பொது அழ்சங்களினைக் கொண்டுள்ள இவ் பொதுப் பாயன்பாட்டு பகுதியை (Public Space) வினைத்திறனற்ற முறையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட முதன்மையான கொள்கைகளினை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதியினை சிறந்த கலப்பு வலயமாக உருவாக்கலாம்.

தொடரும்..

சுஜா

10-06-2018

 

மேலே காட்டப்பட்டுள்ள படங்களின் தெளிவான பிரதிகளை கீழே காணலாம்:

அ)

ஆ)

இ)

ஈ)

உ)

எ)

ஏ)

 

 

 17,871 total views,  4 views today

Be the first to comment

Leave a Reply