
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், போராட்ட அறத்தையும் அதன் நேர்மைத்திறனையும் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்திருந்த மக்களின் நிலையையும் வெளி உலகத்திற்கும் சக தமிழினத்திற்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முதன்மையான பணியை ஊடகவியலாளர்கள்தான் மேற்கொண்டிருந்தார்கள் என்றால் மிகையாகாது. ஆனால், அன்று பகையின் களத்திற்குள் நின்றுகொண்டு கூட, தமிழினத்தின் விடுதலைக்காய் தங்களின் எழுதுகோல் மூலம் பங்களிப்புச் செய்த ஊடகவியலாளர்களின் “மக்களுக்கான ஊடகவியல்” என்ற ஊடக அறம் இன்று தமிழ் ஊடகவியலாளர்களிடத்தில் தொலைந்து போயிருக்கிறது. இன்று அரசியல்வாதிகளின் பினாமிகளாகவும் புகழ்வெளிச்ச நோக்கத்திற்காகவும் தறிகெட்டுப் போய்கிடக்கிறது ஈழத் தமிழர்களின் ஊடகப் பண்பாடு.
ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகளின் உத்தியோக பூர்வ செய்தி இணையங்களைத் தாண்டி, அரசியல்வாதிகள் தமது பினாமி ஊடகவியலாளர்கள் மூலம் தமது அரசியல் பகை என்று கருதுபவர்கள் மீது சேறடிப்பு செய்யும் நோக்கில் ஆதாரமற்ற செய்திகளை மக்களிடத்தில் பரப்புதல் அல்லது மிகைப்படுத்திய செய்திகளை வெளியிடுதல் என மிலேச்சத்தனமான ஊடக அறத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக வடமாகாணத்தில் பெரும் பண முதலைகளாக காணப்படும் அரசியல்வாதிகள் பினாமி ஊடகவியலாளர்களை தமக்கருகில் வைத்திருக்கும் மிக மோசமான அரசியல் பண்பாடு உருவாகியிருக்கிறது. தமது தற்தேவைகளுக்காக இந்த ஊடக அடியாட்களை குறிப்பிட்ட அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், தனது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் இனத்தின் அரசியலைத் திசை திருப்பி, சிறிலங்காவின் பாராளுமன்ற அரசியலுக்காகத்தான் இந்த இனம் போராடிக் கொண்டிருக்கிறது போன்றதான மாயையை உருவாக்க முழு மூச்சாக வேலை செய்து கொண்டிருப்பது இன விடுதலைக்கு இடுக்கண்ணே.
கிளிநொச்சியைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் என இருவரும் தத்தமக்கான ஊடக அடியாட்களை வைத்திருக்கிறார்கள். கிளிநொச்சியின் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் சந்திரகுமாருக்கு நெருங்கிய நபர்களே பதவிகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறாக அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நபர்களால் கிளிநொச்சியின் ஊடக கட்டுமானம் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.
அது போக யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் உதயன் செய்தி ஊடகத்தின் உரிமையாளராக காணப்படுகிறார். (உதயன் செய்தித்தாளின் உரிமையாளர் என்ற காரணத்தினால்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தலுக்கு சரவணபவான் உள்வாங்கப்பட்டார் என்பது அரசியல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலே)

தினமுரசு ஈபிடிபியினதும், வலம்புரி காலைக்கதிர் போன்றவை கசேந்திரகுமார் பொன்னம்பலம், விக்கினேசுவரன் போன்றவர்களினதும் பினாமிகளால் நிறைந்து காணப்படுகிறது. அது போக வீரகேசரி, தினக்குரல் போன்றவற்றிலும் பல உண்மைகளை மறைத்து பினாமி ஊடகவியலை பல தடவைகள் செய்திருக்கின்றன.
2009 ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பல நச்சுக் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் பரப்புவதில் முன்னின்று உழைத்த செய்தித்தாள்களில் ஒன்றான வலம்புரி, திடீரென்று தமிழ்த் தேசிய ஆதாரவாளர்களாக தங்களை காட்டிக் கொள்ள வேலை செய்து கொண்டிருப்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை அவர்கள் செய்வதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஊடகங்களை புலனாய்வுத் துறையினர் எப்படிக் கையாள்வார்கள், விடுதலைப் புலிகள் ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களை எவ்வாறு தகவற் பிரிப்பு செய்தார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.
போராட்ட காலப்பகுதியில் தமிழ் அச்சு ஊடகங்களுக்கு அப்பால் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்திருந்தன.
சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுகள், படை நகர்த்தல்கள், இராணுவ ஒப்பந்தங்கள், இராணுவ பயிற்சி நிறைவு நாட்கள், இராணுவ தளபதிகளின் இடமாற்றங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், அரசியல்வாதிகளின் நடமாட்டங்கள், கூட்டங்களில் அரசியல்வாதிகள் பேசிய விடயங்கள், இராணுவத்தால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட இடங்கள், சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள், அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்கள், அரசியல் கைதிகளை சந்தித்த வெளிநாட்டு இராசதந்திரிகள், சிறிலங்காவிற்குள் வெளிநாட்டு தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் பணிகள், இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், விடுதலைப் புலிகளின் தாக்குதலால் கொல்லப்பட்ட இராணுவ விபரங்கள், இராணுவத்தின் தாக்குதலால் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் விபரங்கள், சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் பொருண்மிய ஒப்பந்தங்கள் என பல்வேறுபட்ட தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களின் சரியான தகவல் எவை, சிறிலங்கா அரசினால் வேண்டுமென்றே அவிழ்த்துவிட்ட வதந்திகள் எவை என்று தரம்பிரிக்க கூடிய நிலையில் விடுதலைப்புலிகளும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்திருந்த மக்களும் அறிவார்ந்திருந்தனர்.
எடுத்துக்காட்டாக கொழும்பில் ஒரு சுற்றிவளைப்பு நடந்திருந்தால் எங்கு நடந்தது, எத்தனைபேர் கைது தொடர்பான தகவல்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் அடுத்த நாள் செய்தித்தாள்களிலும் வெளிவரும் அந்த தகவல் குறித்து எல்லாச் செய்தித்தாள்களிலும் வெளியான தகவல்களை ஒழுங்குபடுத்திப் பார்த்தால் அதன் உண்மை நிலை வெளிப்படும். கைது செய்யப்பட்டவர்கள் விபரங்களை அரசு மறைக்கிறதா, சுற்றிவளைப்பிற்கான காரணம் என்ன என்பதை ஊகிக்க கூடியதாக இருக்கும். தென்னிலங்கையில் பணியில் ஈடுப்பட்டிருந்த போராளிகள் ஊடங்களில் வெளிவரும் செய்திகளை ஆய்வு செய்து பாதுகாப்பாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். அது போக பல முதன்மையான இராணுவ மற்றும் அரசியல் முடிவுகளை எடுப்பதற்கான ஆய்வுகளுக்கு ஊடகங்களில் வெளியாகியிருந்த தகவல்களே அடித்தளமிட்டிருந்தன. சிறிலங்கா அரசால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் வதந்திகளை முறியடித்து சரியான தகவல்களை ஊடகவாயிலாக வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு நிறைந்த ஊடகவியலை பல தமிழ் ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதியப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எத்தனையோ அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை திரட்டி அதை அம்பலப்படுத்தியவர்களும் எமது தமிழ் ஊடகவிலாளர்கள்தான். தொடர்பாடல் வசதிகள் குறைந்த காலத்திலும் சிங்களத்தின் குகைக்குள் நின்றும் தமிழ்த் தேசத்திற்கான பணியாக ஊடகவியலைப் பார்த்த பெரும் தலைமுறையை தமிழ்த் தேசம் கொண்டிருந்தது என்பதை நினைத்து நாங்கள் பெருமைகொள்ள வேண்டும்.
ஊடகங்களும் புலனாய்வுத் துறையும்
ஊடகங்களை புலனாய்வுத்துறையினர் அரசியல் மற்றும் இராணுவ நலன்களுக்கு கையாள்வது உலகம் முழுவதும் நடைபெறும் ஒன்றுதான் ஆனால் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழினம் ஊடகங்கள் மற்றும் அவர்களின் திட்டங்கள் தொடர்பில் விழிப்பாக இருந்தேயாக வேண்டும்.
தமிழீழ விடுதலை அரசியலில் இந்திய நயவஞ்சக தேசத்தின் கைகள் பலதரப்பட்ட தளங்களில் விரிந்து கிடக்கின்றன. இந்திய உளவுத்துறை தமிழீழ மண்ணில் தனது இருப்பை நிலை நாட்டுவதற்கு தமிழ் ஊடகங்களிலேயே பாரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது என்பதுதான் உண்மை. இன்று பல இலத்திரனியல் ஊடகங்கள் இயங்கு நிலையில் இருந்தாலும், அச்சு ஊடகங்களில் தங்கள் பினாமிகளால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு வலுச்சேர்த்து அதை மக்களிடத்தில் மிக வலுவாக கொண்டு சேர்ப்பதற்கு பல இலத்திரனியல் ஊடகங்களை இந்திய உளவுத்துறை பயன்படுத்துகிறது.
காகத்தின் கடந்த பதிவில் ( http://www.kaakam.com/?p=1116 ) இந்தியா எப்படி விக்கினேசுவரனை எப்படி கையாளுகிறது என்பது குறித்து விளக்கமாக எழுதப்பட்டிருந்தது. இந்தியாவின் உளவுத்துறை, தான் கையாள விரும்பும் விக்கினேசுவரனை மக்களிடத்தில் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கும் அவரின் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் ஊடங்களைத்தான் பயன்படுத்துகிறது. பல ஊடகவியலாளர்கள் தாங்கள் யாருக்கு வேலை செய்கிறோம் என்று தெரியாமலே இன்று இந்திய உளவுத்துறையின் பிடிக்குள் சிக்குண்டுகிடக்கின்றனர்.
விக்கினேசுவரன், கசேந்திரகுமார், சுமந்திரன், மற்றும் இதர தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் நிலைப்பாட்டை தமிழினத்தின் அரசியல் நிலைப்பாடு என்கின்ற பொதுமைப்படுத்தப்பட்ட மாயையை உருவாக்குவதற்காக தலைகீழாக நின்று தண்ணிகுடிக்கும் ஊடகவியலாளர்கள் யாருமே, தமிழீழ மக்களுக்கு பிரிந்து போய் தனி நாடு அமைக்கும் உரிமை இருக்கு என்றோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையை அறத்தின் அடிப்படையில் நின்று எழுதவோ அணியமாக இல்லை
கசேந்திரகுமாரின் அரசியலை முன்னெடுப்பவர்கள் அவரின் அரசியல் பகைவர்கள் எனக் கருதப்படுவோர் தொடர்பான கருத்துக்களை சோடித்து செய்தி வெளியிடுகின்றனர். குறிப்பிட்ட செய்தி மற்றைய ஊடகங்களில் செய்தியாக வெளிவருவது கூட கிடையாது. அதே போல சரவணபவானின் ஊடக நிறுவனத்தில் முதன்மைச் செய்தியாக வெளிவரும் செய்தி மற்றைய ஊடகத்தில் செய்தி பகுதியில் கூட காணக்கிடைக்காது. விக்கினேசுவரனை, கசேந்திரகுமாரை பெரும் தலைவர்களாக காட்டி அடிக்கடி ஒன்று இரண்டு செய்தித்தாள்கள் செய்தி வெளியிடும் போது அது குறித்து மற்றைய ஊடகங்களில் ஒரு தகவலுமே வெளியிடப்பட்டிருக்காது. இப்படி மிக மோசமாக பினாமிகளால் சிக்குண்டு கிடக்கிறது தமிழ் ஊடக வெளி.
இந்த பினாமி ஊடகவியலாளர்கள்தான் உளவுத்துறைகளால் மிக இலகுவாக கையாளப்படக் கூடியவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். ஏன்! இந்த பினாமி ஊடகவியலாளர்கள்தான் புலனாய்வு துறைகளால் கையாளப்படும் ஊடகவியலாளர்கள் என்ற முடிவிற்கே வரலாம்.
தமிழ்த்தேசியம் பேசும் விக்கினேசுவரனிடமோ கசேந்திரகுமாரிடமோ சிறிலங்காவின் 6ம் திருத்தச்சட்டம் தொடர்பில் அவர்களின் நிலைப்பாடென்ன என்று நேரடியாக கேள்வி கேட்க ஊடகவியலாளர்கள் தயங்குகிறார்கள் அல்லது கேள்வி கேட்க நினைக்கும் ஊடகவியலாளர்களை பினாமிகள் தடுக்கிறார்கள்.
தமிழ் மக்களே!! தமிழ் இளையோர்களே!!
இன்று அரசியல் தெளிவற்று, அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைபட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களை தமது தேவைகளுக்காக ஊடகங்கள் மூலம் அணியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழீழத்தின் பகை ஆற்றல்கள்.
அரசியல் ரீதியாக ஒரு கட்டுரை அல்லது செய்தி ஒரு ஊடகத்தில் வந்தால் அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியாதீர்கள். அந்தச் செய்தி தொடர்பில் மற்றைய ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்களை சேகரித்து ஆராயுங்கள். உங்களோடு கூட இருப்பவர்களை தெளிவுபடுத்துங்கள். பகைவரை அச்சுறுத்தும் அளவிற்கு தங்கள் எழுதுகோல்களைப் பயன்படுத்திய, தங்கள் நிழற்படக் கருவிகளைப் பயன்படுத்திய பெரும் அர்ப்பணிப்புள்ள தமிழ் ஊடகவியலாளர்களை கொண்டிருந்த சமூகமான நாம் சில்லறைத்தனமான செய்திகளிற்கு எடுபட்டுப் போகக்கூடாது.
கதிர்
21-05-2018
9,329 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.