விக்கினேசுவரனைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழினக்கொலையாளி இந்தியாவுக்கு சாட்டையால் அடிக்கத் தமிழீழ மக்கள் விழிப்படைய வேண்டிய  காலமிது –மறவன்-

சிறிலங்காவின் நீதியரசர் விக்கினேசுவரன் என்பவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பான அவரின் பின்னணி என்ன?

தமிழ் மக்களின் அரசியலை தமது மேட்டுக்குடி நலன்களுக்கான பேரம்பேசலுக்குப் பயன்படுத்தி, தமிழ் மக்களை ஏய்த்து அதிகார வர்க்கங்களிற்கு நல்ல முகவர்களாக வாழ்ந்து வந்தவர்களின் தளமாகிய கொழும்பு 7 இனை பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்டவர் இந்த விக்கினேசுவரன். இவரது தாத்தா சிங்களவர்களால் குதிரையில் ஏற்றிக் கொண்டாடப்பட்ட சேர். பொன். இராமநாதனின் மைத்துனராவார்.

இவரின் ஒரு மகன் வாசுதேவ நாணயக்காரவின் மகளையும் இன்னொரு மகன் சிறிலங்காவின் மூத்த அரசியல்வாதியான கெசரல குணசேகரவின் மருமகளையும் மணமுடித்தனர். இதிலிருந்து இவரது வாழ்க்கை முறைமை மற்றும் பண்பியல்புகளுக்கும் எமது தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருண்மிய வாழ்க்கையின் எந்தவொரு கூறுக்கும் இடையில் துளியளவு தொடர்பும் இல்லை என்பது இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதே.

2004 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றின் நீதியரசராகவிருந்து ஓய்வு பெற்ற பின்பு அவர் ஆற்றிய எல்லா உரைகளும் “குரு பிரம்மா குரு விஸ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சக்சட் பராபிரம்மா தஸ்மை குரவே நமக” என்ற தமிழ்மொழியை அழிக்கத் துடித்த மொழியான சமசுகிருத மொழியிலுள்ள சொற்றொடரைச் சொல்லிய பின்பே தொடங்கும்.

இந்திய உளவுத்துறைப் பின்னணியில் இயங்குபவர்கள் என விடுதலைப் புலிகளின் ஐயுறவுக்குள்ளாக்கி, தமிழீழத்தில் செயற்பட முடியாதென தடை விதிக்கப்பட்டு கொழும்புக்கு விரட்டப்பட்ட கம்பவாரிதி செயராசுவின் கம்பன் கழகத்துடன் மிகவும் ஒட்டாக இணைந்து செயற்பட்ட விக்கினேசுவரன் ஓய்வுபெற்ற பின்பு அதனுடன் அதிக நேரத்தையும் செலவழித்தார். விக்கினேசுவரனினை முதலமைச்சர் வேட்பாளராக்கியதில் முன்னின்று இந்திய அதிகாரிகளுடன் வேலை செய்தவர்களில் கம்பன் கழக செயராசுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. (எனிலும் தமது வலையமைப்புச் செயற்படும் தடம் தெரியாமல் செயற்படும் இந்திய உளவுத்துறை உத்தியின் பாற்பட்டு இப்போது தமக்குள் கருத்தொவ்வாமல் கடி படுவதாக இந்தக் கம்பவாரிதி காட்டிக்கொள்கின்றார். “நான் திட்டினால் மக்கள் உன்னை ஏற்பார்கள் எனில் நான் உன்னை வைகின்றேன்” என்றவாறான உத்திதான் இது)

13 சிறுமிகளை வன்புணர்ந்தும் அந்தக் கொடூரங்களை வெளியே தெரியப்படுத்த முயன்றவரை கொடூரமாகக் கொலை செய்தும் இரட்டை வாழ்நாள் சிறை தீர்ப்பளிக்கப்பட்ட பிரேமானந்தா என்ற கள்ளச் சாமியாரின் தீவிர பக்தனான இவர் புதுக்கோட்டை குற்றவியல் அமர்வுகள் நீதிமன்றில் பிரேமானந்தா குற்றமற்றவர் என ஈனத்தனமாக சாட்சி எண்- 16 ஆக சாட்சியமளித்தார். பின்பு பிரேமானந்தா என்ற கொடூர காமுகனுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனையை மேன்முறையீடு செய்வதற்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது அங்குள்ள நீதியரசர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளைச் செய்து தீர்ப்பில் மாற்றங்கொண்டு வர இழிவழிகள் வரைக்கும் இறங்கிச் செயற்பட்டவர்.

அவர் எப்படித் தமிழ் மக்களின் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்?

தமிழர் தாயகத்தின் வடக்குப் பகுதியில் தனது மேலாதிக்கத்திற்கு நன்கு இசையக் கூடிய ஒருவரை முதலமைச்சராக்கும் எண்ணத்துடன் இந்தியாவானது அதுவரை மகிந்த ராயபக்சவால் காலந்தாழ்த்தியவாறு நடத்தப்படாதிருந்த வடமாகாண அவைத் தேர்தலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து 2013 ஆம் ஆண்டு நடத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியென்று அனைவரும் நன்குணரும் படியான தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு சார்பில் யார் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தூதரகம் நேரில் நின்று பாரிய அழுத்தங்களைக் கூட்டமைப்புத் தலைமைக்குக் கொடுத்துத் தலையிட்டது. மாவை. சேனாதிராசாவினை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பதே சம்பந்தன் அடங்கலான பெரும்பாலான கூட்டமைப்பாரின் விருப்பாக இருந்தது. ஆனால் மாவை சேனாதிரசா மற்றும் சம்பந்தன் ஆகியோர் நேரில் இந்தியத் தூதரகத்தால் அழைக்கப்பட்டு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகி, அந்த முடிவில் இருந்து வெளியேறி விக்கினேசுவரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதாக இந்தியாவுக்கு அடிபணிந்து பழக்கப்பட்டுப் போன அரசியல் மரபில் வந்த சம்பந்தன் இந்தியத் தூதரகத்திற்கு ஒப்புதல் அளித்தார். விக்கினேசுவரன் என்பவர் இந்தியாவின் தெரிவினால் தமிழர் தாயகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட தமிழினத்தை ஏய்த்து, சிங்கள மேட்டுக்குடிகளுடன் ஒட்டாக வாழ்ந்து பழகிய கொழும்பு-7 மேட்டுக்குடியின் வாழ்வியல் மற்றும் அரசியல் வழி வந்தவராவார்.

முதலமைச்சராகப் பதவியேற்று உறுதியளிப்பை ராயபக்சவின் முன்னிலையில் தான் செய்வேன் என்று உறுதியாக நின்று உலகத் தமிழர்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது செய்து விக்கினேசுவரன் முடித்தார். இவரின் பதவியேற்பே இப்படித் தான் நடந்தது.

விக்கினேசுவரன் வட மாகாணத்தின் முதலமைச்சரானதும் மேற்கொண்ட இந்தியப் பயணம் யாரால் ஒழுங்கு செய்யப்பட்டது? அந்தப் பயணத்தில் என்ன நடந்தது?

டெல்கி ஒருவரை அழைத்து திரைமறைப் பேச்சுகளில் ஈடுபடும் போது அதிகாரம் சார்ந்த அழைப்பாக அந்த அழைப்பைச் செய்வதில்லை. மாறாக நினைவுப் பேருரை ஆற்றவென்றும் கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ளவென்றும் அழைப்பை விடுவது வழக்கம். இப்படி அழைப்புகளை குறிப்பிட்ட நபர்களுக்கு விடும்படி டெல்கி குறிப்பிட்ட கல்லூரிகள் மற்றும் அமைப்புகளுக்கு கட்டளை வழங்கும். அப்படியான அமைப்புகள் இந்திய உளவு அமைப்பின் மறை திரை அமைப்புகளாக மாந்த உரிமைகள் என்றும் ஊடகம் என்றும் ஆய்வு நிறுவனங்கள் என்றும் பல்வேறுபட்ட போர்வைகளில் இயங்கும். இவ்வாறாக PUCL (People’s Union of Civil Liberties) என்ற மாந்த உரிமைகளைப் பேசும் போர்வையில் டெல்கியின் தேவைகளுக்காக ஆரிய பார்ப்பனர்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் அமைப்பு கண்ணபிரான் என்ற அந்த அமைப்பின் முன்னோடியின் நினைவுப் பேருரையை நிகழ்த்த, விக்கினேசுவரனை 2014 ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் அழைத்தது. இதில் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், இந்த அமைப்பும் அந்த PUCL அமைப்பைச் சேர்ந்த கண்ணபிரானும் தான் பிரேமானந்தாவுக்கு எதிராக பிரேமானந்தாவால் வன்புணரப்பட்டு அபலைகளாக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் வழக்கை நடத்தியவர்கள். இதில் கண்ணபிரான் வழக்காடும் போது எதிர்முனையில் நின்று பிரேமானந்தாவுக்காக சாட்சியமளித்தவர் விக்கினேசுவரன். ஆனால் அதே கண்ணபிரானின் நினைவுப்பேருரையை ஆற்ற விக்கினேசுவரன் அழைக்கப்பட்டிருக்கிறார். இது தான் டெல்கியின் வேலைத் திட்டமெனின் அதனை ஆற்றிவிட்டுப் போவதுதான் ஆரியபார்ப்பனிய நடமாட்டத்திற்கான இந்த அமைப்புகளின் வேலை.

கண்ணபிரான் நினைவுப்பேருரையை ஆற்ற வந்த விக்கினேசுவரன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் கள்ளச்சாமி பிரேமானந்தாவின் மடத்திற்குப் போய் தனது அலுவல்களை முடித்துவிட்டு இந்திய அரசின் அதிகாரிகளைச் சந்தித்தார். தமிழர்களைப் பல துண்டுகளாகச் சிதறடித்து மேலும் மேலும் வலுக்குன்றச் செய்து, தனது தயவில் முற்று முழுதாக இயங்கும் சிறப்பான அடிவருடிகளை உருவாக்கும் நோக்கினைக் கொண்ட இந்திய உளவு அதிகாரிகள் அந்நேரம் இந்தியாவை நேரடியாகப் பகைக்காமல் ஆனால் மேற்கின் திசைவழி துணைவழி நாடிப் பயணமெடுத்த சுமந்திரனின் செயல் போக்கில் சம்பந்தனின் இசைவு தெரிய, தமது சூழ்ச்சி வலைகளை தம்மால் அழைத்துவரப்பட்ட விக்கினேசுவரனை வைத்துப் பின்னலானார்கள்.

விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற, வளைந்து செல்லாத, நெஞ்சுரமிக்க தலைமையை தமது அரசியல் தலைமையாக ஏற்று நின்று பழகிப்போன தமிழ் மக்களின் அரசியல் உளவியலை நன்கு தெரிந்த இந்திய உளவு அதிகாரிகள், விக்கினேசுவரன் என்ற தமது அடிவருடியை ஒரு வன்வலுவாகக் காட்டுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தமிழ் மக்கள் வெறுத்தொதுக்கும் மென்வலுவாகத் தோன்றச் செய்யலாம் என உணர்ந்து விக்கினேசுவரன் என்ற போலியான வன்வலுவை உருவாக்கி கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் வெறுத்தொதுக்க வைப்பதோடு, கூட்டமைப்பின் கையாலாகத்தனத்தாலும் செயற்றிறன் அற்ற பரிந்து பெறும் முதுகெலும்பில்லா அரசியலாலும் சினமடையும் இளையோர்கள் உண்மையான வன்வலுவைத் தேடி விடாமல் விக்கினேசுவரன் என்ற வன்வலுப் போலி அமையும் எனத் திட்டம் தீட்டினார்கள். விக்கினேசுவரனை வன்வலுவாகக் காட்டவே இந்திய அதிகாரிகளால் இனப்படுகொலைத் தீர்மானம் தாள்களில் தொகுக்கப்பட்டு விக்கினேசுவரனிடம் வடமாகாண அவையில் வாசிக்கும் படி கொடுத்து அனுப்பப்பட்டது.

அந்த இந்தியப் பயணத்தில் அவர் தமிழினப் படுகொலையின் முதன்மைப் பங்காளியான இந்தியாவைக் காப்பாற்றும் இந்தியக் கொடுங்கோன்மையின் அடிவருடி என்பது எப்படி வெளிப்பட்டது?

அவர் சென்னையில் ஆற்றிய கண்ணபிரான் நினைவுப் பேருரையில் “தமிழ்ச் சமூகத்திற்கான அரசியல் தீர்வை சிறிலங்கா வழங்கும் என்று இந்திய அரசிற்கு உறுதியளித்ததாலேயே இந்திய அரசு அரசியல், இராணுவ, புலனாய்வுசார் உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது” எனக் குறிப்பிட்டதன் மூலமாக தமிழர்களின் மீதான இந்திய அரசின் மேலாதிக்கத்தை வலியுறுத்துவதோடு தமிழினக்கொலையின் முதன்மைப் பங்காளியான இந்தியாவினைக் காப்பாற்றுவதோடு, இந்தியா தமிழர்களுக்காகத் தான் புலிகளை அழித்தது என்ற பொருட்பட கருத்துரைத்து தமிழர்களின் அரசியலை மடைமாற்றம் செய்யும் இழி செயலை விக்கினேசுவரன் செய்து அப்பட்டமாக வெளிப்பட்டு நின்றார்.

கண்ணபிரான் நினைவுப் பேருரையை சென்னையில் ஆற்றிவிட்டு டெல்கிக்கு நேரே சென்ற விக்கினேசுவரன் அங்கு என்ன செய்தார்?

அகண்ட பாரதக் கனவுக்காக இந்துத்துவ வெறியாட்டத்தை ஆடும் அரசியல் அகோரிகளாக இந்தியாவுக்குள் சிறைப்பட்டு இருக்கும் தேசிய இனங்களின் விடுதலை கோருபவர்களால் அடையாளப்படுத்தப்பட்டதும் RSS இன் துணை அமைப்புமான Vishwa Hindu Parishad என்ற இந்திய அரசின் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட உலக இந்துக்கள் மாநாட்டில் கலந்துகொள்ள விக்கினேசுவரன் டெல்கி சென்றார். இந்தியாவுடனான கள்ள உறவுகளை ஏற்படுத்தவும் அகண்ட பாரதம் நோக்கி அதற்கான அணியப்படுத்தல்களைச் செய்யவுமே இப்படியான அமைப்புகள் இப்படியான மாநாட்டினை நடத்தும். இதில் கலந்துகொள்ளவே கண்ணபிரான் நினைவுப் பேருரை என்ற போர்வையில் விக்கினேசுவரன் டெல்கிக்கு அழைக்கப்பட்டார்.  அங்கு சென்ற விக்கினேசுவரன் Delhi’s diplomatic enclave என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இந்தியாவின் அடிவருடியாகவும் அரசியல் அகோரியாகவும் திறம்பட இந்தியாவுக்காகப் பணியாற்றுவதற்கான வழிகாட்டுதல்களும் அவருக்கு புலனாய்வு அதிகாரிகளால் வழங்கப்பட்டு வழி அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட முதன்மையான வேலைத் திட்டங்கள் –

அ) தமிழ்நாட்டில் எழும் தமிழ்த் தேசிய உணர்வலைகளுடன் ஒன்றிக்கக் கூடாது என்றும் உலகத் தமிழர் என்ற ஓர்மையுடன் தமிழ்நாட்டு அரசியல் தரப்புகளுடன் தொடர்புகளைப் பேணக் கூடாது என்றும் வழிகாட்டப்பட்டது.

ஆ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தல்…. அதற்காக தேசியத் தலைவர் பிரபாகரனின் பின்னான அவருக்குச் சற்றொப்பதான தலைமை தான் என தமிழ் மக்களை நம்ப வைத்தல்

மோடி- விக்கினேசுவரன் சந்திப்பில் நடந்தது என்ன?

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சரான மோடியினை விக்கினேசுவரன் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், 13 சிறுமிகளை வன்புணர்ந்தும் அதனை வெளிப்படுத்த முயன்றவரை கொன்று புதைத்ததுமான வழக்கில் பிரேமானந்தா என்ற கள்ளச்சாமியுடன் சேர்த்து குற்றவாளியாக இனங்காணப்பட்டு இரட்டை வாழ்நாள் சிறை தீர்ப்பளிக்கப்பட்டுத் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரையும் விடுவிக்கும் படி மோடியை வேண்டி விக்கினேசுவரன் மோடிக்குக் கடிதமளித்தார்.

தமிழர்களின் விடுதலைக்காகத் தம்மையே ஒறுத்துப் போராடி சிறைப்பட்டிருக்கும் எம்மவர்களின் விடுதலையை விரைவுபடுத்த சிறிலங்கா அரசிற்கு அழுத்தத்தை வழங்குமாறும், இராசீவ் காந்தி செத்த வழக்கில் 27 ஆண்டுகளாக கொடுஞ் சிறைப்பட்டு நிற்கும் எம்மவர்களை விடுவிக்குமாறும் மோடியிடம் வட மாகாண முதலமைச்சராகக் கேட்டிருக்க வேண்டிய விக்கினேசுவரன், இந்தக் கொடுங் காமுகக் கொலையாளிகளின் விடுதலை வேண்டிக் கடிதம் கொடுக்க மோடியின் யாழ் வருகையைப் பயன்படுத்தினார். 

மோடியைப் பற்றிக் கருத்துக் கூறுங்கள் என்று டெல்கியைத் தளமாகக் கொண்டு இயங்கும் “த ரெலிகிராவ்” நிருபர் விக்கினேசுவரனைக் கேட்ட போது, “அவர் ராமரைப் போன்றவர். அன்பானவர்” எனப் பதிலளித்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டல் இங்கு தகும்.

தான் வட மாகாண முதலமைச்சராக வந்தமையால் அடைந்த அடைவு இதுவென விக்கினேசுவரன் மெய்சிலிர்த்து நின்றது எப்போது?

13 சிறுமிகளை வன்புணர்ந்த கொலைக் குற்றவாளி பிரேமானந்தா என்ற கள்ளச்சாமிக்கு புளியங்குளத்தில் சிலை வைத்து பூபாள கிருஸ்ணன் ஆலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது, பிரேமானந்தாவின் அருளால் இப்படி ஒரு பதவி வாய்ப்புக் கிடைத்துப் பிரேமானந்தாவுக்கு சிலை வைக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் புளகாங்கிதமடைந்தார். பிரேமனந்தாவுக்கு சிலை வைத்தமையே தான் முதலமைச்சராக வந்து அடைந்த அடைவென விக்கினேசுவரன் அந்த உரையில் மெய்சிலிர்த்து நின்றார்.

விக்கினேசுவரன் இணைத்தலைவராகவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் யாருடைய நலனுக்கானது?

தமிழர்களிடத்தில் நிலவிவரும் அரசியல் வரட்சியாலும் பெரும்பாலான ஊடகங்களின் தரம் தாழ்ந்த அடிப்படையற்ற பத்தி எழுத்துகளாலும் மூடர் கூடமாகிவிட்ட தமிழர்களின் அரசியலில் விக்கினேசுவரன் வன்வலுவாகத் தெரிந்துவிட கூட்டமைப்பினை சிதைத்தழித்துவிடும் கடைசிக்கட்ட நகர்விற்கான நடைமேடையாக அமைவதோடு, கூட்டமைப்பின் மீது உருவாகிவிட்ட அரசியல் வெறுப்பினால் தேர்தல் அரசியலில் இருந்து விட்டோடி இளையோர் புரட்சிகரமான திசைவழி செல்லவிடாது மாயமானுக்கு அலையவிடும் மடைமாற்றமாகவும் அமையுமெனவே தமிழ் மக்கள் பேரவை இயக்க அரசியல் என்ற தோற்றப்பாட்டுடன் உருவாக்கப்பட்டது. இதனை ஒருங்கமைக்கும் பணியில் இந்தியத் தூதரகம் ஏற்கனவே தமது கட்டளைகளுக்கு வேலை செய்து பழகிய தலைமைகள் மூலம் இறங்கியது. 

இது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய நடந்தேறுகின்றது என்பதற்கு அப்பால் இது கூட்டமைப்பை அழிப்பதன் மூலம் காங்கிரசைக் கோலோச்சச் செய்யும் கயேந்திரகுமாரிற்கும் அரசியலில் தவிர்க்க முடியாத ஆற்றல் தாம் எனக் காட்ட சுரேசின் தலைமையிலான ஈ.பிஆர்.எல்.எவ் இற்கும், தமிழர்கள் தேச உணர்வுடன் ஒரு அரசியல் இயக்கமாக மீண்டும் ஒன்றாகிவிட்டார்கள் (சிங்கள அரசிற்கு இது ஒரு போலிப் புளுடா என்று நன்கு தெரியும்) என்ற தோற்றப்பாட்டைக் காட்டி சிங்கள பௌத்த பேரினவாத வெறியர்களை கலவரமடையச் செய்து தனது வழமையான பாணியில் அரசியலமைப்பு மறுசீராக்க முயற்சிகளை கைவிட்டு விட உறுதியெடுக்கும் சிங்கள அரசிற்கு ஒரு நல்வாய்ப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த  ஏனைய பலரினதும் நலனுக்கானதாகவே தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் அமைந்தது.

விக்கினேசுவரன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது விக்கினேசுவரன்கயேந்திரகுமார்சுரேசு ஆகியோர் கூட்டாக ஒப்பேற்றிய அரசியல் எத்தகையது?

அவையில் விக்கினேசுவரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஏலவே அவை நீக்கம் செய்யப்பட்ட ஐங்கரநேசனின் இடத்திற்குத் தனது தம்பியைக் கொண்டு வந்து அமைச்சராக்கும் எண்ணத்துடன் சுரேசு பிரேமச்சந்திரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்துத் தனது குடும்பச் சொத்தான காங்கிரசைக் காப்பாற்ற கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் விளைதிறனாகப் பயன்படுத்த முனையும் கயேந்திரகுமாரும், இந்தியா ஏலவே வலியுறுத்தியது போல தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களின் தொடர்ச்சியே தனது அரசியல் தலைமை என ஒரு தோற்றத்தை உருவாக்கும் நோக்குடன் விக்கினேசுவரனும் வெவ்வேறு நோக்குடன் ஆனால் கூட்டமைப்பை அழிப்பதனூடாக என்ற ஒரே பாதையினூடாக இந்த முக்கூட்டணி முண்டியடித்து வேலை செய்தது. “Stand for Vigneshwaran” என்று விக்கினேசுவரனுக்காக கொடி தூக்கி கேலித்தனம் புரிய கயேந்திரகுமார் ஒரு திரட்டப்பட்ட இளையோர் ஆளணியை வழங்க விக்கினேசுவரனும் இளையோர் முன் தோன்றிக் கையசைத்து நாடகமாடித் தமது அரசியல் போக்கிரித்தனத்தைக் காட்டித் தமக்கான அரசியலை ஒப்பேற்றினர்.

முன்னாள் போராளிகள் மீதான தனது வன்மத்தை விக்கினேசுவரன் எப்படி வெளிப்படுத்தினார்?

“இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் தெற்கிலே பாரிய குற்றங்களைப் புரிவதைப் போல போர்ப்பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. எனவே இராணுவத்தை நாம் வெளியேற்றக் கோரினாலும் இப்படியானவற்றிற்கு எதிராக இராணுவத்தை நாட வேண்டும். அப்படி இராணுவத்தை நாடுவது தவறு என்று கூறுவோர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்க்குத் துணை போபவர்கள் ஆவர்” எனக் கருத்து வெளியிட்டதன் மூலம் தமிழர்கள் விடுதலையை வென்றெடுக்க தமது இளமைகளைச் சருகுகளாக்கிவிட்டு கழுத்தில் நஞ்சைக்கட்டிக் களமாடி மண்ணிற்காகவே வாழ்ந்த எமது போராளிகளை இராணுவத்திலிருந்து தப்பியோடும் சிங்கள இளைஞர்களுடன் பொருத்திப் பேசியதிலிருந்து எமது போராளிகள் மீதான விக்கினேசுவரனின் வன்மம் வெளிப்பட்டு நின்றது.

விக்கினேசுவரனின் யேசுபிரேமானந்தா ஒப்பீடு வெளிப்படுத்தும் முதன்மைச் செய்தி என்ன?

கிறித்துவம் என்ற மதமும் காலனியாளர்களால் அது இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதனைப் பற்றிப் பிடித்த நம்மவர்களின் நம்பிக்கை என்பதைக் கடந்து பகுத்தறிவுடன் வரலாற்றுக் கண்நோக்கில், உரோமப் பேரரசிலிருந்து தனது யூத மக்களை விடுதலைபெறச் செய்யப் போராடிய போராளியே இயேசுநாதர் ஆவார். அடக்குமுறையாளர்கள் ஒரு போராளிக்கு வழங்கிய தண்டனையை 13 அப்பாவிச் சிறுமிகளை வன்புணர்ந்து அதனை வெளிப்படுத்த முயன்றவரைக் கொன்று புதைத்த கீழின விலங்கான கள்ளச்சாமிக்கு வழங்கப்பட்ட இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனையுடன் ஒப்பிட்டுப் பதிலளிக்கின்றார் என்றால் இந்த விக்கினேசுவரனின் பகுத்தறிவு, பண்புநிலை, மாந்த ஒழுக்கம் என்பனவெல்லாம் எத்தகை இழி நிலையுடையது என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. அடிப்படையில் ஒரு கள்ளச்சாமியின் சுவைஞன் எப்படியிருப்பான் என்பதும் அப்படியானவர்களின் அறிவு வளம் எத்தன்மையிலானது என்பதும் இந்த ஒப்பீட்டிலிருந்து வெளிப்பட்டு நிற்கும் முதன்மைச் செய்தியாகும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) விக்கியடிமை அரசியல் விடலைத்தனம் வெளிப்பட்டு நின்ற நிகழ்வு எது?

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) லண்டனில் ஒழுங்கு செய்த நிகழ்விற்கு விக்கினேசுவரன் அழைக்கப்பட்டிருந்தார். வழமையான ஒழுங்குகளின் படி நிகழ்வில் புலிக்கொடியேற்றப்படும். ஆனால் விக்கினேசுவரன் நாடு திரும்ப வேண்டியிருப்பதால் தன்னால் புலிக்கொடியேற்ற முடியாது என முதலே மறுத்து விட்டார். அதனை ஏற்றுக்கொண்ட அவுத்திரேலியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் விக்கினேசுவரனுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குமிடையிலான தொடர்பாளர் புலிக்கொடியேற்றத் தேவையில்லை நிகழ்வில் கலந்து உரையாற்றினால் போதுமென விக்கினேசுவரனிடம் கூற, புலிக்கொடியேற்றும் நிகழ்விற்கு தன்னால் வர முடியாது என விக்கினேசுவரன் உறுதியாக மறுத்து விட்டார். ஈற்றில் புலிக்கொடியேற்றும் நிகழ்ச்சி நிரலை வழமைக்கு மாறாகக் கைவிடக் கோரிய பின்பே விக்கினேசுவரன் அந்த நிகழ்விற்குச் சென்று உரையாற்றினார். விக்கினேசுவரனின் வருகைக்காக ஏற்ற வேண்டிய புலிக்கொடியையே மறைத்து வைக்க ஒப்புதலளிக்கும் அளவிற்கு விக்கினேசுவரன் மீது அவர்களுக்கேற்பட்ட ஈர்ப்பு அரசியல் வரட்சியின் பாற்பட்டதாகவேயன்றி வேறெதுவாக இருக்க முடியும்? இந்த விக்கினேசுவரனுக்காக “Stand for Vigneshwaran” என்று முழக்கம் எழுப்பித் தமது முகநூலின் முகப்புப் படமாக விக்கினேசுவரனின் படத்தையும் வைத்திருந்த இவர்கள் தம்மைப் புலம்பெயர்ந்த பின்னும் புலிகளின் தொடர்ச்சியெனக் காட்டுவதால் தமது அரசியல் விடலைத்தனத்திற்கு தமிழீழ மக்களிடம் வெளிப்படையாக பொறை இரக்குமாறு வேண்ட வேண்டும். இல்லையென்றால், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாகத் தாமிருப்பதாகக் கதையளப்பதை நிறுத்த வேண்டும். மண்ணின் விடுதலைக்காகப் போராடி, காலச் சூழலில் புலம்பெயர்ந்த பின்பும் தமது பங்களிப்பைத் தொடர வேண்டும் என்ற சமூக வாஞ்சையின் பாற்பட்டு அமைப்பாதலின் தேவையுணர்ந்து இப்படியான புலம்பெயர் அமைப்புகளில் செயற்படும் போராளிகள் தமக்கேயுரிய இதயத் தூய்மையுடன் இது குறித்து அக்கறை எடுக்க வேண்டும்.

விக்கினேசுவரன் தன்னை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே. பிரபாகரனிற்கு அடுத்தவராகக் காட்ட ஆடிய நாடகத்தின் உச்சக் காட்சி எது? அதனை முன்னின்று செய்த ஊடகப் பின்னணி எது?

தெற்கிலிருந்து தன்னைக் கொல்வதற்குச் சூழ்ச்சி நடப்பதாகத் தனக்குத் தொடர்ச்சியாகத் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன என்று தெரிவித்ததுடன் ஞானசாரதேரரின் அமைப்பைச் சேர்ந்தோர் யாருடையதோ தேவைக்கேற்ப தூக்கிப்பிடித்த அல்லது சிங்கள பௌத்த கீழினவாதக் குறும்புடன் அவர்கள் எழுதிய (பின்லேடன் – பிரபாகரன் – இப்போது விக்கினேசுவரன் என்ற பொருட்பட வரைந்த பதாகை) பதாகையை ஏதோ அதி முதன்மைவாய்ந்த விடயமாகத் தூக்கிப் பிடித்துப் பத்தி எழுதி அதனை முன்னிலைப்படுத்தி விக்கினேசுவரனை தலைவர் பிரபாகரனின் தொடர்ச்சி போல காட்ட “The Hindu” என்ற தமிழினக்கொலைக்கு ஊடகப் பங்களிப்பு வழங்கிய ஆரிய பார்ப்பனக் கும்பலின் ஆங்கில நாளிதழும் அதனது தொடர்பாளர் மீரா சிறினிவாசனும் எடுத்த முயற்சிகள் அவர்கள் ஆடிய நாடகத்தின் உச்சக் கட்டமாகும்.

விக்கினேசுவரன் ஆன்மீகப் பயணம் என்று சொல்லிக் கேட்போரைக் கேனையராக்கி விட்டு அண்மையில் இந்தியாவுக்குப் பயணித்ததன் பின்னாலுள்ள இந்தியச் சூழ்ச்சி என்ன?

வடமாகாண அவையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்கினேசுவரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக்காது என்பது உறுதியாகிவிட, சுமந்திரன் மேற்குத் திசைவழி நன்கு அருட்டப்பட்டவரும் இந்தியாவைப் பகைக்காமல் ஆனால் வேறு துணைவழியில் இயங்கிவருபவராகவும் இருக்கும் நிலையில்,

 அடுத்தும் தமது முழுநம்பிக்கையையும் பெற்ற அடிவருடியானவரும், அரசியல் வரட்சியில் அலையும் இளையோர்களை ஏமாற்றி தலைவர் பிரபாகரனின் பின்பான அரசியல் தலைமை தான் என நம்பவைத்தவருமான விக்கினேசுவரனை முதலமைச்சராக்க இந்தியா வழி தேடுகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்கும் சூழ்ச்சி வலைகளைப் பின்னவுமே விக்கினேசுவரன் ஆன்மீகப் பயணம் என்ற போர்வையில் இந்தியா அழைக்கப்பட்டிருக்கிறார். இம்முறை ஊடகங்களின் கண்ணில் சிக்காமல் இந்திய உளவு அதிகாரிகளின் நிகழ்ச்சி நிரலை சரியாக உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பயிற்சிகளையும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து பெற்றே விக்கினேசுவரன் தாயகம் திரும்பியுள்ளார். முதிர்ந்த அகவையில் நிகழும் சிந்தனை முறிவு (Epistemological Break) அகவை முதிர்ந்தோருக்கு ஏற்படும். அப்படியானவர்களை அதிகாரத்தில் வைத்திருந்தால் தாம் விரும்பியபடி ஆற்றல் விரயம் இல்லாமல் அவர்களைக் கையாளலாம் என்பதோடு அடுத்த ஆளுமையான தலைமை உருவாவதைத் தள்ளிப்போடலாம்  என்பது இந்திய உளவுத்துறை யாரை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வர வேண்டும் என முடிவெடுக்கும் போது கருத்திலெடுக்கும் விடயமாகும்.

எனவே 80 ஆவது அகவையை நெருங்கப் போகும் விக்கினேசுவரன் என்ற இந்திய அடிவருடியே இந்தியாவிற்கு விருப்பமான தெரிவு. அறிவு மரபில் வந்தவர்கள் எனப் பெருமை பேசும் நாம் இந்தச் சூழ்ச்சியை முறியடித்து இந்தியாவின் புலனாய்வுச் சூழ்ச்சிக்கும் நரித் தந்திரத்துக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும்.

விக்கினேசுவரன் வருகின்ற மே மாதத்தில் கூட்ட இருக்கும் இளைஞர் மாநாடு எந்த நோக்கிலானது? எந்த அடிப்படையிலானது? அதற்கான ஏற்பாடுகள் தான் என்ன?

விக்கினேசுவரனினை கூட்டமைப்பை அழிக்க மட்டுமே பயன்படுத்த விரும்பிய கயேந்திரகுமார் அவர் அதிகம் முன்னிலைப்படுவது தனது குடும்பக் கட்சியான காங்கிரசு வளர்வதில் தடையாக அமையுமென்பதோடு இந்தியாவின் முழு அடிவருடியாகத் தான் போனால் கூடவிருக்கும் ஒரு சில விபரமானவர்களுக்குக் கூடப் பதில் சொல்ல முடியாது என்பனவற்றைக் கணக்கிலெடுத்துள்ள கயேந்திரகுமார் விக்கினேசுவரனுக்காக முழுமையாகக் களத்தில் இறங்கச் சற்றுத் தயக்கம் காட்டுவது தெரிகிறது (எனிலும் அவரது தாயாரின் கொழும்பு- 7 அரசியல் என்ன சொல்லும் என்பதைப் பொறுத்து வேதாளம் முருங்கை மரம் ஏறலாம்). அத்துடன் கூட்டமைப்பை அழிக்கவே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை இந்தியா விரும்புமே தவிர, கயேந்திரகுமார் போன்ற இளம் தலைவர் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை இந்தியா விரும்பாது. எனவே விக்கினேசுவரன் புதுக் கட்சி தொடங்குவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு தெரிவுகள் இப்போதைக்கில்லை.

தனிக் கட்சி தொடங்குவதற்கான அடித்தள நடவடிக்கையாக வருகின்ற மேமாதத்தில் ஒரு இளைஞர் மாநாட்டை விக்கினேசுவரன் கூட்டவுள்ளார். வரப்போகும் இந்தக் கட்சிக்கு வலுச் சேர்க்க தனது அரசியலறிவிலித்தனத்தால் இந்தியாவுடன் நெருக்கமாக உறவைப் பேணி வரும் அனந்தி சசிதரன், ஏற்கனவே இந்தியாவின் உளவு நிறுவனத்துடன் ஒட்டான உறவைப் பேணி நீண்டகாலம் அவர்களுடன் வாழ்ந்து வந்த முன்னைய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் அருந்தவபாலன் என்போர் அந்தப் புதிய கட்சியை வலுச்சேர்க்க அணியப்படுத்தப்பட்டுள்ளனர். இது போக வலம்புரியின் ஆசிரியரும் இந்துத்துவ வெறியரும் யாழ்மைய குறுந்தேசிய சிந்தனைப் பிறழ்வாளியுமான விசயசுந்தரம் என்பவர் தனது ஊடகச் செயற்பாடு வாயிலாக ஊடக விபச்சாரத்தைத் தொடர்வார். இப்படியாக இந்தியா மீண்டும் ஒரு நர சூழ்ச்சியில் இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமே மாநாட்டிற்கான அறிவிப்பு.

எனவே, விக்கினேசுவரனைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழினக்கொலையாளி இந்தியாவுக்கு சாட்டையால் அடிக்கத் தமிழீழ மக்கள் விழிப்படைய வேண்டிய  காலமிது எனத் தெளிந்து தமிழீழ மக்கள் அரசியல் முதிர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.

–மறவன்-

2018-04-27

 19,356 total views,  3 views today

(Visited 65 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply