அன்றைய தமிழர்களின் அறிவுமரபும் இன்றையவர்களின் இழிநிலையும் –செல்வி-

தமிழர்மரபு பற்றி கூறுகையில் மொழி, இலக்கியம் சார்ந்த துறைகளினூடாக வெறுமனே பண்பாட்டையும் வாழ்வியலையும் அவற்றின் பண்புசார்ந்து மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்தேச்சியாக வரும் மரபுவழித் தமிழினத்துக்கு அதன் மரபு சார்ந்து தொன்மையாகவும் தனித்தன்மையுடையதாகவும் இருப்பதற்கு அவர்களின் அறிவுடைமையே முதன்மைக்க்கூறாக இருந்திருக்க வேண்டும். ஒரு சமூகம் அறிவுடைமைச் சமூகமாக இருப்பின் அது எல்லா வளங்களையும் பெற்று, தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.  மக்களின் வாழ்க்கையினை அடியொற்றி எழுந்த இலக்கியங்களில் தமிழர்கள் அறிவியலிலும் அறிவுடைமையிலும் எவ்வாறு சிறந்து விளங்கினார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் விரவிக் கிடக்கின்றன. ஆனால் இன்று அந்த அறிவுமரபின் எச்சங்களைக் கூட ஆங்காங்கே தான் காணமுடிகிறது. கணணியோ கைபேசியோ இணையத் தொடர்புடன் இருக்கும் அனைவரும் செய்தியாளர்கள், கருத்துருவாக்கிகள் என்றாகிவிட்ட இந்தக் காலத்தில் புலமை என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஆனால் அறிவுமரபு எவ்வாறு கட்டியமைக்கப்பட்டிருந்தது என்பதை நாம் அறிந்துகொண்டால் ஊடகம் என்ற போர்வையில் வரும் தவறான கருத்துருவாக்கங்களின் ஊடுருவல்களை எதிர்கொண்டு, எம்மை மீண்டும் அறிவுடைமைச் கு(ச)முகமாகக் கட்டியமைக்க முடியும். எடுத்ததுக்கெல்லாம் மேலை நாட்டு எடுகோள்களையும் வரலாறுகளையும் உசாத்துணைகளாகக் கூறும் இழிநிலை மாறவேண்டும். மேலை நாட்டவர்களின் அறிவின் சுவடு கூடப்படாத சங்கத் தமிழர் கு(ச)முகத்தில் இருந்த அறிவுமரபு மீளவும் நோக்கப்பட வேண்டியதே. “பச்சைத் தமிழன்” என்ற சொல் நகைச்சுவையாக மாற்றப்பட்ட நிலைக்கு, அறிவுரீதியிலான சிந்தனை மரபு குறுகிப்போனதே காரணமாகும். இந்நிலை நீடிக்குமாயின் எமது மொழியும் இனமும் கேள்விக்குறிக்கு ஆளாக்கப்படுவது தவிர்க்க முடியாதது. எதிர்காலத்தை எதிர்கொள்ள, தமிழன் சுமந்துள்ள மரபணுக்களின் தன்மையை அவனுக்கு சிறிதேனும் உணர்த்துவதற்காக இப்பத்தி எழுதப்படுகிறது. அதன் மூலம் இனம் சார்ந்த ஆற்றுப்படுத்தலை சிறிதளவேனும் வெய்ய முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு மாந்தனுக்கு அறிவு என்பது வெறுமனே நூல்களைக் கற்பதனாலும் கற்றதைத் துப்பி பட்டம் எடுப்பதனாலும் வந்துவிடாது. தன் அன்றாட வாழ்வில் தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை காரண காரியத் தொடர்புகளுடன் கற்பதன் மூலமே அந்த அறிவினைப் பெறமுடியும். அதுவே கல்வியாகும். இதனையே, தமிழின் இலக்கணம் கூறும் தொல்காப்பியம் மரபியலில் சுமேரிய தொல் தமிழ் சுரப்பாக்கு நெறியில்,

‘நிகழ்நம் கல் கல்லின் மிகவே மெய் கல்கல்”

என்று பாடப்பெற்றிருக்கிறது. ஆனால் இன்று எம்மைச்சுற்றி இருப்பவைகளினூடு நாம் எதைக் கற்க முடியும்? ஊடகங்களும் ஊடகர்களும் தமக்கு தமக்கு ஏற்ற வகையில் விசைப்பலகை சொல்வதைக் கேட்டு நிகழ்வுகளைத் தொகுக்கிறார்கள். ஒரே நிகழ்ச்சி பல கோணங்களில் நோக்கப்பட வேண்டும் என்று பண்டைத் தமிழர் கூற, இன்றோ செய்திகளே ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. தகவல் மூலங்கள் பொய்த்துக்கிடக்கின்றன. ஆனால், எம்மளவில் நாம் நிகழ்ச்சிகளை அறிவார்ந்து நோக்காதவர்களாக இருந்துகொண்டு, சிரியா மக்களைக் காப்பாற்றிய ஈழத்தமிழனை இன்னமும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற தமிழ்மறையை வெறும் சொற்களாக எண்ணிக் கடந்து கொண்டிருக்கிறோம். உணர்ச்சிகளினால் மட்டும் நிகழ்சூழலை நோக்குபவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழன்.  ஈழம், தொன்மை, வரலாறு என்ற சொற்கள் அறிவார்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய ஆழம் மிக்கவை. ஆனால் இன்றோ அவை இன உணர்வினை மறை வழி கருத்துருவாக்கங்களுக்கும் போலிச் செய்திகளைப் பரப்புவதற்குமான உத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. போலிச் செய்திகள் அதன் மெய்ப்பொருளை அறியாமலேயே, பல்லாயிரக்கணக்கானவர்களை மிக இலகுவாகச் சென்றடைந்து விடுகின்றன. ஊடகங்களும் தமது ஊடகர்களையும் ஊடகத்திற்கான செய்திகளையும் சமூக வலைத்தளங்களிலிருந்தே பொறுக்குகிறார்கள். அதிக விருப்புகளைப் பெறுதல் என்பதே ஊடகராவதற்கான தகுதியாகக் கருதப்படுகிறது. ஊடகத்தின் பத்திகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதுபவர்களாகவும் அவ்வாறான நபர்கள் இருக்கும் போது, ஊடகத்தின் நிலையும் நம்பகத்தன்மையும் எங்கே போகும்? மக்கள் சூழ நிகழ்பவற்றைக் கற்பது எவ்வாறு?

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்கிறது வள்ளுவம். ஆனால், இன்றோ நாலு வரிகளை முகநூலில் எழுதிவிட்டு, தமக்கென 40 மூடர்களைக் குழுமமாக்கி, அந்த மூடர் கூடத்தின் செய்திகளை எடுத்துச்செல்ல 400 முட்டாள்களைக் கூலிகளாக்கி, தமது முட்ளாள்தனமான பதிவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழரின் தொன்மையும் மரபுகளும் ஆழமாகத் தெரிந்துகொள்ளப்படவேண்டியவை. ஆனால் அவற்றை “டமிழர்” என்றும் “டமிள்” என்றும் பகிடிக்கான சொற்களாக மாற்றியதன் பின்னாலுள்ள கேவலத்துக்குக் காரணமானவர்களும் இந்த முட்டாள்களே. இந்த முட்டாள்களை அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் புலமையாளர்களாகவும் கருதி, அவர்களின் புலம்பல்களை தமது செய்தித்தாள்களில் சுடச்சுட வெளியிட்டும், அவர்களை தொலைக்காட்சியில் அழைத்து கருத்தாடல்கள் செய்யும் ஊடகங்களும் மிகப்பெரும் சமூகத் தவறைச் செய்துகொண்டிருக்கின்றனர்.  இந்த தவறைச் செய்யும் முட்டாள்களின் மரபு இங்கே கேள்விக்குறியாகின்றது. அறிவுமரபான தமிழ்மரபின் விதைகளாக இவர்கள் இல்லாத போது, இவர்களின் விதையின் மூலம் வேறேங்கோ இருக்கிறதா என்பது நோக்கப்பட வேண்டியது.

இவ்வாறான போலிச் செய்திகளின் பரம்பலுக்கு உண்மையறியாத மக்கள் மட்டும் காரணமல்லர். மறவழிப்போர் ஓய்வுக்கு வந்த நிலையில், போருக்குப் பிந்திய ஒரு சமுதாயத்தின் உளவியலும் காரணமாக இருக்கிறது. போரில் தோற்கடிக்கப்பட்டு, தோல்வி உளநிலையில் இருக்கும் மக்கள், எங்காவது தமக்கென ஒரு வெற்றி, ஒரு அடையாளம் கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருப்பர். வெற்றியீட்டிய தமிழன்.. தமிழனின் மரபு.. என்ற சொற்கள் அவனது உளவியலில் ஐயம் என்ற சொல்லை நினைக்காது, சட்டென நம்பிவிடுகிறது. மக்களின் இந்த தோல்வி உளவியலை தமது புகழ்வெளிச்சத்துக்கு பயன்படுத்தும் மறைகழன்றோரும் எம்மிடையே உள்ளனர் என்பதும் கவலைக்குரியதே.

எங்கள் இனம் அறிவுசார்ந்து சிந்திக்கவேண்டும் என்று ஒரு சிலர் கத்திக்கொண்டிருப்பதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. எடுத்துக்காட்டாக, முகநூல் விவாதமொன்றில் அறிவார்ந்து அணுகி எவரையும் அவர்களது அரசியல் சார்பினை மாற்றிவிட முடியாது. அந்த அளவுக்கு அவர்களது அறிவுமரபு மழுங்கடிக்கப்பட்டு, போலிச் சாமியார்களுக்கு பின்னால் ஒடும் மக்களைப் போலவே இன்றைய இளைஞர் கூட்டமும் மாற்றம் என்ற மாயையை நம்பி, ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாயையைச் செய்தது, ஊடகங்களும் ஊடகர்களுமே. மக்களை ஒன்றுதிரட்ட மிகப் பலமான கருவி உணர்வு என்ற உண்மையை, இனம் சார்ந்து ஒன்றுபடுவதற்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக, இனத்தைத் துண்டாடுவதற்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான கருவிகளாக, தர்க்கத்தை புரிந்துகொள்ள முடியாத அரைகுறை வால்களும் அவர்களது சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரைகுறைகளுக்கு சொந்தமான அறிவு மரபும் இல்லை. அறிவார்ந்து எடுத்துச் சொன்னாலும் புரிந்துகொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை. நல்ல கருத்தாடல்களைச் செய்யக்கூடிய பண்பாடும் அவர்களுக்கு இல்லை என்பதும் கவலைக்குரியதே. எனவே இனம் சார்ந்து வேலை செய்வோர் அந்த உணர்ச்சிகளை அறிவார்ந்து அணுகி, அறிவுமரபினையும் உணர்வு மரபினையும் சரியான விழுக்காட்டில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இனம் என்னும் புள்ளியில் எல்லோரையும் இணைக்க முடியும்.

மாந்தனின் சமூக அடையாளம் அவன் பிறப்பினடியாக வருவதில்லை. அவன் சார்ந்த சூழலின் பண்பாட்டினடியாகவே மாந்தனின் சமூக நடத்தைகள் கற்றுக்கொள்ளப்படுகின்றன. தமிழர்களில் பலரது அடையாளம் சாதியினாலும் மதத்தினாலுமே கட்டமைக்கப்பட்டு வருகிறது. மொழி அடையாளங்களை மதம் தனக்குள் உள்வாங்கி, தனது அடையாளமாக மீளவும் மாந்த நடத்தைகளில் கொடுக்கிறது. அங்கே தமிழர் என்ற அறிவை விட மதம் என்ற உணர்ச்சி நிலை முதன்மையான நடத்தையாக இருக்கிறது. தமிழர் என்ற அடையாளத்தை நடத்தையிலும் கொண்டுவரவேண்டிய அறிவுமரபானது, வெறுமனே உணர்ச்சிகளுக்குள் நிற்பதற்கு அந்த சமூகங்களும் சமூக கருத்துருவாக்கிகளுமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். ஆனால் இரண்டு நாட்களுக்குள் 20 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்பதை நம்பி 2000 பகிர்வைச் செய்யும் சமூகம் எவ்வாறு ஒரு மாந்தனை அறிவுடையவனாக்கும்?

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.

குறிப்பிட்ட ஒரு தகவலின் மூலமானது, மூன்று வெவ்வேறு வழிகளில் அறியப்பட்டு, அவற்றை ஒப்பிடுவதன் மூலமே அந்தத் தகவலின் உண்மைத் தன்மை அறியப்படுகிறது என்கிறது ஒற்றாடலுக்கும் (Art of Spying) இலக்கணம் கூறும் தமிழர்மறை. ஆயின் இன்றைய நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒற்றர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மும்முனைத் தகவல்களைப் பெறுவதில்லை. குறிப்பிட்ட ஏதோ ஒரு விடயம் தொடர்பாக தமக்குக் கூட சரிவரத் தெரியாத ஒன்றைப் பற்றி, புலனாய்வு அறிக்கைகள் பதிவிடுகின்றனர். உண்மை போல எழுதப்படும் அந்தக் கற்பனைப் புனைவுகளினால், வரலாறுகளும் மறைக்கப்பட்டு வெறும் புனைவுகளை வரலாறாக்கும் கேடுகெட்ட செயல்களைச் செய்கின்றனர். இதில் அபத்தம் என்னவெனில் தாம் செய்யும் புனைவுகளால் ஒரு வரலாற்று மறுப்போ, அல்லது வரலாற்றுப் போலியோ உருவாக்கப்படுகின்றது என்று உணருமளவுக்கு அவர்களுக்கு அறிவு இல்லாததே. குறிப்பாகக் கூறின், போராட்டம் தொடர்பான தகவல்களைப் பதியும் பதிவர்களே இந்த புலனாய்வுப்போலிகள்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

அதாவது குறிப்பிட்ட ஒரு விளைவிற்கு எதிர்விளைவு எப்படி இருக்குமென அறிவுடையோர் தான் சிந்திப்பார்கள். அறிவற்றோருக்கு வள்ளுவமும் நியூட்டனின் விதியும் முரணாணவையாகவே தெரியும்.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

என்ற வள்ளுவரின் கூற்றுப்படி, கிடைத்த செய்தியை வேறொரு தரவுடன் ஒப்பிட்டுப் பார்த்தாவது உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், புலனாய்வுப்போலிகளால் உருவாக்கப்பட்ட புனைவுகள் பொய் என்பதற்கு ஆயிரம் தகவல்கள் இருந்தாலும், அந்த புனைவுகளை மெய்யென நினைத்து, அந்தப் பொய்மைத்தளத்தில் நின்று மற்றவரை விமர்சிக்கும் எழுத்தாளர்கள் (?) எந்த வகை உயிரினம் என்று தெரியவில்லை.

அறிவினால் மாட்சியொன்று இல்லா எனத் தொடங்கும் பழமொழி நானூற்றின் வரிகளால் ஏனைய செல்வங்களை விடவும் மாந்தனுக்கு அறிவுடைமையே முதன்மையானது என்பது சுட்டப்படுகின்றது. ஆயின், இன்றோ சமூக வலைத்தளங்கள் ஒரு பொதுத்தள உரையாடலுக்கு வழியமைத்துள்ள போதிலும் அங்கே அறிவுடையோனை விட, பணமும் கூலியும், மேலைத்தேய நாட்டில் இருப்பதும் உயர் தகைமைகளென சிலரால் கருதப்பட்டு, முட்டாள் கூட்டத்தின் பக்கப்பாட்டுகளால் அவை சாத்தியமும் ஆகிவிடுகின்றன. எனவே அங்கே பொதுத்தள உரையாடல் என்பது, அறிவுத்தளத்தில் இல்லாது, ஒரு வித முட்டாள்தனமான அதிகாரத்துவ ரீதியில் நிகழ்கிறது. அவ்வாறான உரையாடல்கள் எவ்வாறு, இனத்தினை வழிப்படுத்தும் உரையாடலாக அமைய முடியும்? உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் சிக்கலின் உண்மைத்தன்மை கூட ஆராயப்படுவதில்லை. ஒரு பொய்யின் தளத்திலே தொடங்கும் உரையாடலின் முடிவு எவ்வாறு உண்மையைத் தர முடியும்?

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் “ என்று கேள்வியெழுப்புவதையும் கேள்விக்கு விடை சொல்லுவதையும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்கிறார் தொல்காப்பியர். அதற்கு எடுத்துக்காட்டாக உன் நாடு யாது என்று கேட்டால் தமிழ்நாடு என்றே கூறவேண்டும் என்று உரைக்கு பொருள் நூற்றதன் மூலம் ஆட்சி வேறுபாடுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்பால் தமிழ்நாடு என்ற தமிழர்களின் தேச வரையேறுப்பே தெளிவானது, எஞ்ஞான்றும் தெளிவானது என்பதை எத்துணை வடிவுற எடுத்தியம்பியுள்ளார் இளம்பூரணார். ஆனால் இன்று சில எழுத்தாளர்கள் பொருட்குழப்பத்தை உண்டு பண்ணுமளவில் சொல்லவேண்டியதையும் சொல்லியேயாக வேண்டியதையும் சொல்லாமல் ஏதேதோ சொல்லி தம்மை எழுத்தாளரென நம்பவைத்து விடுகின்றனர். தொல்காப்பியமானது தமிழுக்கு இலக்கணம் வகுத்தாலும் கூட நூலறிவற்ற மாந்தனும் அவனது பேச்சுமொழியில் இலக்கணத்தை அவனையறியாமலே கையாளுகிறான். மக்களிடமிருந்த வழக்கினை விதிமுறைகளாக்குவதே இலக்கணம். அது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அவற்றை அப்படியே இலக்கணமாக்கினார்கள். ஆனால் இங்கே பலர் பேசுவதும் புரிவதில்லை. விடை பகிர்வதும் புரிவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு மக்களின் சிக்கல்கள் தெரியாதது போல மக்களின் மொழியும் தெரிவதில்லை.

புல்லும், மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

என்ற தொல்காப்பியம் கூறுவதற்கிணங்க, இனத்தின் தொன்மை தெரியாது, வேறு மரபுகளின் தன்மைகளை வெளிப்படுத்துவோர் ஓரறிவுடையவற்றின் கிளைப் பிறப்பாக கருதப்படலாம்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அவற்றோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

என்ற தொல்காப்பியப் பாடல் அறிவின் அடிப்படையை உணர்த்துவதாக அமைகின்றது. பயிரினம் கூட உயிரினமே என்று உணர்த்தும் இப்பாடலிற்கு அடிப்படையானது அறிவுமரபின் உச்சமெனில் அது மிகையில்லை. ஏனெனில் தொல்காப்பியர் “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர்”என்று கூறுகிறார். அதாவது இந்த உண்மைகளை உணர்ந்த மூத்தோர் தான் இக்கருத்துக்களை நெறிப்படுத்தினர் என்று கூறுகிறார். இந்த பாடல் உடனடியாக எழுந்ததல்ல. அறிவு மரபின் தொடர்ச்சியின் விளைவாகவே இதனை நாம் நோக்கலாம்.

சுமேரிய தொல் தமிழ் சூல்கியின் செய்யுளில்,

“உண்மையொடு ஊஊழியசே”  

என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஊழிக்காலம் வரை உண்மையோடு பயணம் செய்ய வேண்டுமென பண்டைத் தமிழர்கள் சிந்தித்திருப்பதனை வைத்து, அவர்களது அறிவு மரபு எத்தகையது என அறியலாம். நாம் எந்தவொரு விடயத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும். அறிவையும் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். எந்த நபரின் ஆதிக்கத்திற்கோ அல்லது வெறும் உணர்ச்சி உளவியலுக்கோ அடிமையாக தேவையில்லை. நல்ல சிந்தனையுடையவராக மாறினால் மட்டுமே உண்மையை அறிய முடியும். சாதி, மதம் கடந்தது தமிழரது அறிவுமரபு. ஆயின் அந்த மரபு மதம் என்னும் மாயையினால் போலி நம்பிக்கைகளுக்கு மக்களை அடிபணிய வைத்து அறிவு சார்ந்த எம் மக்களை இன்றைய மூடத்தனமான நம்பிக்கைகளுக்கு வழிகோலிவிட்டது மதங்களின் பிடிகளே தான். அந்த மதங்களின் பிடிகளுக்குள் நில்லாது, இனமாக சிந்திப்போமாக இருந்தால், அடிப்படையற்று ஏதோ ஒன்றை நம்புவது என்ற அடித்தளத்தை உடைக்க முடியும். தமிழரின் அறிவுமரபினை உடைத்து, சிந்தனைச் சிதைவினையும் மனச் சிதைவினையும் உண்டாக்கியது மதங்களெனின், அது வரலாறு கூறும் உண்மையே ஆகும். இனத்தின் வரலாற்றில் தாழ்வு ஏற்படுவது இயங்கியல் விதி. ஆனால் அந்த தாழ்வு நிலையையே நம் மரபு என நினைத்துக்கொண்டிருப்பதும் இழிநிலையாகும். தமிழராய் பிறந்தும் தமிழராய் வாழமறுக்கும் பலர் எம்மிடையே இருக்கிறார்கள்.  இந்தச் சிதைவுகளை உடைத்தெறிந்து இன்றைய தலைமுறையினர் தமது அறிவுமரபினை தமது மரபினடியாகத் தொடர்ந்து கட்டியெழுப்பும் போது, நாம் இனமாக ஒன்றுபடும் காலம் உருவாகும். மூளையில் ஆழமாகப் பதிந்துள்ள கருத்துருவாக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், அந்த கருத்துரு மாற்றங்களே இனத்தின் விடிவிற்கு அடிப்படையாக அமையும். அந்த மாற்றத்திற்கு சிந்தனையாளர்களிடமும் சமூகத்திடமும் அறிவுப்போராட்டம் நிகழவேண்டும். நிகழ்த்துவோமா?

“உண்மையொடு ஊஊழியசே”

–செல்வி-

2018-04-14

 7,492 total views,  4 views today

Be the first to comment

Leave a Reply