அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை

2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

==============================================================================

பகுதி 2 நகர் நடுவம் (City Center)/ நகரத் தொழிற்பகுதி அபிவிருத்தி வலயம் (Down Town  Development Zone)

இவ்வலயமானது மருத்துவமனை வீதி, அராலி வீதி, நாவலர் வீதி மற்றும் கச்சேரி நல்லூர் வீதி என்பவற்றிற்கு இடைப்பட்ட நீல நிறத்தினால் நிழற்றப்பட்ட வலயமாகும். இன்று இவ்வலயமானது ஒரு கலப்பு  வலயமாகவே காணப்படுகின்றது இவ்வலயத்தின் ஒரு சில பகுதிகளினை மட்டும் முழுமையான வர்த்தக வலயமாகக் கொண்டு ஏனைய  பகுதிகளினை  கலப்பு வலயமாகக் கொள்வது அல்லது தற்போது உள்ளது போல முழுமையாக  கலப்பு வலயமாக கொள்வதே மிகவும் சிறந்ததாகும். இந்தவகையில் இவ்வலயத்தின்  அமைவிடம், பொருண்மிய முதன்மை, சமூகத்தேவை மற்றும் எதிர்கால நிலையான அபிவிருத்தி என்பவற்றினைக் கருத்தில் கொண்டு பின்வரும் வழியூட்டல் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

உரு – 01

 

அந்தவகையில், இவ் நகர் நடுவம் (City Center)/ நகரத் தொழிற்பகுதி அபிவிருத்தி வலயத்தினை (Down Town Development Zone)  பின்வரும் துணை வலயங்களாக பிரிக்கலாம். அவை பின்வருமாறு:

அ. வர்த்தக வலயம்

ஆ) கலப்பு வலயம் (மொத்த வியாபாரம் , உற்பத்திக் கைத்தொழில்)

இ) கலப்பு வலயம் (வர்த்தகம், நிர்வாகம், சேவைக்கைத்தொழில் மற்றும் பொழுதுபோக்கு (Recreational))

உரு – 02

  

இதனடிப்படையில் முதலாவதாக வர்த்தக வலயம் பற்றி நோக்குவோமாயின், வர்த்தக வலயமானது மருத்துவமனை வீதி நாவலர் வீதி, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் செறிந்து காணப்படுகின்றதுடன் இவை சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இவ்வலயத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனால் ஏற்படும் வசதிக்கேடுகள், எதிர்கால தேவைகள்  என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு பின்வரும் முதன்மை எண்ணக்கருக்களின் அடிப்படையில் வழியூட்டல் கருத்துகள் முன்மொழியப்படுகின்றன.

 • நிலவளத்தினை உச்சளவில் பயன்படுத்துதலும் தற்போது இருக்கும் இடத்தை மீள வடிவமைத்தலும் (Re-design the existing space)
 • புதிய அபிவிருத்தி திட்டங்களில் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் கொள்கைகளினை உள்வாங்குதல் (ஆற்றல் திறன் (Energy Efficiency), நீரில் தன்னிறைவு (Water self-sufficiency), சுழியக் கழிவு (Zero Waste), திறந்த வெளி (Open Space))
 • அடர்த்தியதிகரிப்பு (Densification)
 • கூட்டு ஒப்பந்த அபிவிருத்தி (Joint –Venture Development)- தனியார்-பொது கூட்டிணைவை ஊக்குவித்தல் (Encourage Private-Public Partnership)
 • அணுகல் மற்றும் அசையும் தன்மைகளை மேம்படுத்தல் (Improve the Accessibility and Mobility)
 • பசுமைப்போக்குவரத்துகளை (Green Transportations) அறிமுகப்படுத்தல் (நடைபாதைப் போக்குவரத்து மற்றும் ஈருருளிக்கான பாதை -Pedestrianized and Introduce Cycling way) மற்றும் கனரக ஊர்திப் பயன்பாட்டை குறைத்து சென்று-திரும்பும் ஊர்திச் சேவைகளை வழங்கல் (Discourage Heavy vehicle and provide Shuttle service)
 • குடிமை மாவட்ட மற்றும் வர்த்தக வலயத்திற்கு வலுவான இணைப்பை உருவாக்கல் (Create the strong linkage between the Civic District and Commerce Zone)
 • உள்நாட்டு நீர்நிலைகளை பேணிப்பாதுகாத்தலும் அவற்றிற்கு இடையில் நெருக்கமான தொடர்புகளினை ஏற்படுத்தலும். (எ.கா: ஆரியகுளம், வண்ணான்குளம், புல்லுக்குளம்,…….)

 

அந்தவகையில் பின்வரும் உத்திகள் இப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றது.

 1. வேறுபட்ட நில உரிமைகளினை ஒன்றிணைத்த அபிவிருத்தி

 யாழ் மாநகர சபைக்கு சொந்தமான புதிய சந்தைக் கட்டடத்தொகுதி, யாழ் மாநகர சபையினால் போக்குவரத்து சபைக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தொகுதி என யாவற்னையும் ஒரு நிலத் திணிவாக கருதி அவற்றில் ஒரு முழுமைத் திட்டம் (Master Plan)அமைத்தல்.

யாழ் நகர மத்தியில் காணப்படுகின்ற தற்போதைய பேருந்து நிலையம் போதியளவு இடவசதி மற்றும் வினைத்திறனான போக்குவரத்து முறைமை என்பன இல்லாது நகர நடுவில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகின்றது. அதேபோல, புதிய சந்தைக் கட்டடத்தொகுதியும்; பொருத்தமற்ற அபிவிருத்திகளினை உள்ளடக்கியதாக உச்சபயன்பாடற்ற வகையில் குறிப்பிட்ட  சில மணிநேரங்கள் மட்டும் இயங்கி வருகின்றது

நகரத்தின் மிக முதன்மையான அமைவிடம் ஒன்றில் இத்தகைய வினைத்திறனற்ற அபிவிருத்தியானது இந்நகரத்தின் தற்போதைய இயக்கம் மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பவற்றிற்கு நன்மை பயக்காது என்ற நிலையில், தற்போதைய மத்திய பேருந்து நிலையம், புதிய சந்தைக் கட்டடத்தொகுதி ஆகியவற்றினை ஒரு நிலத்திணிவாகக் கொண்டு சிறந்த ஒரு  அபிவிருத்தி திட்டம் ஒன்றினை மேற்கொள்ளலாம். இந்நிலையில் பேருந்து நிலையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பான வினாவிற்கு, யாழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தற்போதைய தொடர்வண்டி நிலையத்திற்கு அண்மையில் உள்ள நிலத்தொகுதி ஒன்றில்  பல்வேறு உட்கட்டுமானங்களைக் கொண்டு Railway Township அமைப்பதற்கான சிறந்த முன்மொழிவு ஒன்று காணப்படுகின்றது. அந்தவகையில், போதிய இடவசதி மற்றும் பிற உட்கட்டுமான வசதிகளுடன் தொடர்வண்டி நிலையத்திற்கு (Railway Station) அருகாமையில் பேருந்து நிலையம் அமைவது தொடர்பான திட்ட முன்மொழிவும்  வரவேற்கத்தக்கதாகும்.

எனவே  இவ் அபிவிருத்தியானது வர்த்தகம், வியாபாரம், பொழுதுபோக்கு என பல்வேறு விடயங்களினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.  அத்துடன் தற்போதைய புதிய சந்தைக் கட்டடமானது காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தது. இப் பழைய கட்டடத்தொகுதியினை இன்னும் பல ஆண்டுகளிற்கு இவ்வாறே பேணிப்பாதுகாப்பது என்பது சுற்றுச் சூழலியல் கண்ணோட்டம் மற்றும் நகராக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் சிறந்த உத்தியாகக் காணப்படவில்லை எனினும் அரசியல் மற்றும் தொல்பொருளியல் சிந்தனைகளின் அடிப்படையில் நோக்கின், இக்கட்டடமானது தமிழர் கட்டடக் கலையினை மற்றும்  தழிழர்களின் அரசியல் என்பவற்றினை காலாகாலத்துக்கும் எடுத்து இயம்பும் ஒரு சின்னமாக இது விளங்கும் என்ற நிலையில் இதனைப் பேணிப்பாதுகாப்பது தேவையானது என்ற நிலையும்  காணப்படுகின்றது. இந்நிலையில் இக்கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றத்தினை இவ்வாறே  பேணிக்கொண்டு உட்கட்டுமானத்தினை சிறந்த முறையில் மாற்றியமைப்பதன் மூலமும் இத்தகைய பொருத்தமற்ற தற்காலிக அபிவிருத்தி நடவடிக்கைகளை தவிர்த்து (இத்தகைய நடவடிக்கைகள் இவ்வர்த்தக வலயத்தில் அமைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். இச்சந்தையானது மக்கள் வதிவிடங்களிற்கு  (Residential Zone) அண்மையில் அமைவதே மிகவும் பொருத்தமானது)  புதிய கட்டடக்கலை நுட்பங்களை உள்வாங்கியதாகவும்  பகல் மற்றும் இரவு என இரு பொழுதுகளும் இயங்க கூடிய வகையில் பல்வேறு வகையான வேறுபட்ட பயன்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவையினை வினைத்திறனான முறையில் வழங்குவதற்கு ஏற்ற முறையில் Pick up Point போன்ற அம்சங்களினை உள்ளடக்கிய மறுமலர்ச்சி திட்டம் (Regenerative Project) ஒன்றினை அறிமுகப்படுத்தல்.

 1. கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள மாநகர சபையின் புதிய கட்டடடித்தொகுதியும் அதனை அண்மித்துள்ள பகுதி அபிவிருத்தியும்

யாழ் மாநகர சபையினால் மிக அண்மையில்  கட்டடத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டது.  உண்மையில் அரசியல் லாப நோக்கங்களிற்கு அப்பால் இவ் அபிவிருத்தி நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது. ஏனெனில் புதிய திட்டமிடல் கொள்கைகள் இன்று தனியார்- பொது கூட்டிணைவையே (Private Public Partnership) ஊக்குவிக்கின்றன. ஆனால் இவ்வணுகுமுறையினை யாழ் மாநகர சபை சிறந்த முறையில் பயன்படுத்தவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இன்று இக்கட்டடம் பழைய மாநகர கட்டடத்தொகுதி போல ஒரு சில தளங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் காணபப்டுகின்றது. எனவே இக்கட்டடத்தில் உட்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமும்  வேறுபட்ட பயன்பாடுகளினை உள்வாங்குவதன் மூலமும் இக்கட்டடத்தினை இயக்குதல் என்பது கட்டாய தேவையாகும்.

அதுமட்டுமல்லாது நிழற்றப்பட்ட (மேலுள்ள படத்தில் கறுப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள பகுதி;) தனியார் அபிவிருத்தியானது, ஒழுங்கமைக்கபப்டட முறையில் அமைக்கப்படாததுடன் அவற்றில் பல ஒரு மாடிக்கட்டடங்களாகவும் சிறந்த கட்டட அமைப்புகள் அற்றதாகவும் காணப்படுகின்றன. இதனை யாழ் மாநகர சபை கருத்தில் கொண்டு ஊக்கப்படுத்தல் (incentive), வரிவிலக்களிப்பு அல்லது மேலதிகமான தளங்களிற்கு (Number of Floors) அனுமதி வழங்கல் போன்ற உத்திகளினூடாக சிறந்த அபிவிருத்தி ஒன்றினை ஊக்குவித்தல்.

மேலும் யாழ் மாநகர சபையின் புதிய கட்டடத்தொகுதிக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்காலிக தொலைவிட பேருந்து நிறுத்தகமானது இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இத்தனியார் காணியினை முறைப்படி பெற்று யாழ். மாநகர சபை அதில் அபிவிருத்தி நடவடிக்கைகளினை மேற்கொள்ளலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணுமிடத்து தனியார்- பொது கூட்டிணைவு (Private – Public Partnership) மூலம் பல செயற்பாட்டு அபிவிருத்தி (Multi-functional Development) ஒன்றிற்கு வழிவகுத்தல் சிறந்த திட்டமிடலாகும்.

இந்நிலையில் தனியார் பேருந்து நிலையத்தினை எங்கு அமைப்பது என்ற வினாவிற்கு, ஒரு நகரத்திற்கு பன்முகப்பட்ட போக்குவரத்து முறைகள் சிறப்பானதாகும் எனினும் அவை ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் தேவையானதாகும். யாழ் நகரத்தில் வேறுபட்ட வாகன உரிமைகள்  வேறுபட்ட நிறுத்தகங்கள்  என அரச பேருந்து நிலையம் , தனியார் பேருந்து நிறுத்தகம், தொலைவிட பேருந்து நிலையம், தனியார் தொலைவிட பேருந்து நிலையம் என  பல பேருந்து நிலையங்கள் காணப்படுகின்றன. வேறுபட்ட வாகன உரிமைகள் வினைத்திறனான சேவையினையும் தொழில் வாய்ப்புகளினையும் வழங்குவதனால் அதனை வரவேற்று அவற்றிற்கான நிறுத்தகங்களை ஒரு ஓழுங்குமுறையின் கீழ் ஒருமுகப்படுத்தி பல இடை மாற்றங்களை (interchange) உருவாக்கலாம். ஓவ்வொரு interchange இலும் குறிப்பிட்ட சில நிமிடங்கள் வாகனங்கள் தரித்து நிற்கும். எடுத்துக்காட்டாக  தொடர்வண்டி நகரத்தில் (Railway Town) மத்திய பேருந்து நிலையம் அமைய முன்மொழியப்பட்ட மறுமலர்ச்சி திட்டம் (Regenerative Project) (தற்போதைய பேருந்து நிலையம் , மாநகர சபைக் கட்டடத்தொகுதி என்பவை உள்ளிட்ட பகுதியில்;) , தற்போதைய மாவட்ட செயலகம், ஆனைக்கோட்டை , நல்லூர், தட்டாதெரு சந்தி,  திருநெல்வேலி என பல போக்குவரத்து நடுவங்களினை (transport nodal point) உருவாக்குவதன் மூலம் அபிவிருத்தியினை விரிவாக்கலாம். ஆனால் தற்போதைய அபிவிருத்தி முயற்சிகள் வேறுபட்ட வாகன உரிமைகளினை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டு வருகின்றமை விளைதிறனான திட்டமிடலாக அமையாது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மக்கள் குறிப்பிட்ட இடத்திலேயே ஒன்று திரண்டு காணப்படுவர் என்ற விவாவதங்களினைத் தவிர்த்து  மக்களின் இயங்குகை (people movement) இருக்கக் கூடியவகையில்  அபிவிருத்தியானது பன்முகப்படுத்தப்பட்ட முறையில் அமைத்தல் என்பது திட்டமிடலாளர்களின் கடமையும் திறமையும் கூட.

 • யாழ் பெரிய மருத்துவமனையில் திட்டமிட்ட நிலமுகாமைத்துவத்தினை மேற்கொள்ளுவதற்கு யாழ் மாநகர சபையையும் நகர அபிவிருத்தி அதிகார சபையையும் ஊக்குவித்தல்.

இவ் மருத்துவமனையில் நிலவளம் குறைப்பயன்பாட்டில் உள்ளது (underutilized) என்றே கூறலாம். எனவே மருத்துவ சேவையுடன் சமூக அபிவிருத்தி (Community Development), எரிசக்தி திறன் (Energy Efficiency), பொதுமக்கள் ஈடுபாடு (Public Involvement) என பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொள்ளலாம். அத்துடன் யாழ் நகரத்தில் யாழ் சிறைச்சாலைக்கு அடுத்ததாக (core) அதிக உயரத்தில் யாழ் மருத்துவமனையே அதிக உயரமான  சுவர்களைக் கொண்டுள்ளது. யாழ் மாநகர சபையானது அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் என்பவற்றிற்கு மதில்கள் அமைப்பதனை குறைக்கச் செய்தல் வேண்டும்  இல்லாதவிடத்து பசுமை மதில்களையாவது (Green Wall) அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் மருத்துவமனையின் மதிலினை குறைப்பதன் (setback) மூலம் மருத்துவமனை மதிலிற்கும் வெள்ளவாய்காலிற்கும் இடையில் நடைபாதை மற்றும் ஈருருளிப் பாதை என்பவற்றினை அமைத்தல்.

இதேபோல, மாநகர சபையின் புதிய கட்டிடத்தொகுதிக்கு அண்மையில் உள்ள வண்ணான் குளத்தினை மீண்டும் சீரமைத்து அழகுபடுத்தி வைப்பதுடன்  புதிய அபிவிருத்தி திட்டங்களை இக்குளத்தினை  நோக்கிய வண்ணம் அமைப்பதுனூடாக இக்குளத்தினை ஒரு பொதுவெளியாக (public space) இயங்க வைத்தல். அத்துடன் இப்பகுதியில் கால்வாய் (canal) குறுகிய தூரத்தில் செல்கின்றது. இவ் வெள்ளவாய்க்காலின் இரு மருங்குகளிலும் நடை பாதைகள் அமைத்தல் என அணுகல் மற்றும் அசைவுத் தன்மைகளினை (accessibility & mobility) அதிகரிக்கக் கூடிய  இலகுவான போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்துவதுடன், இது நிலமதிப்பினையும் (land value) அதிகரிக்கச் செய்கின்றது. இது மட்டுமல்லாது, யாழ் நகர மத்தியில் மருத்துவமனை வீதி, பாலாலி வீதி, யாழ் நூலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீளமான வெள்ளவாய்கால்கள் காணப்படுகின்றன. இவ்வெள்ளவாய்கால்கள் இரு மருங்குகளிலும் நடைபாதைகள் மற்றும் ஈருருளிக்கான பாதைகள் அமைத்தல். இவ்வாறு நடைபாதைகள் மற்றும் ஈருருளிக்கான பாதைகள் என்பனவற்றின்  விரிவாக்கமானது, வெள்ளவாய்க்கால்கள் தூய்மையாக பேணப்படுவதுடன் இலகுவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து முறைமைமையை  அறிமுகப்படுத்தி வலயங்களிற்கு இடையில் நெருக்கமான பிணைப்பினை ஏற்படுத்துகின்றது.

தொடரும்…….

 சுஜா

09-04-2018

 8,592 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply