தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப் புலத்தை வலுவாக்கித் தமிழீழ தாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே -மறவன்-

முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்து பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் விருப்புகளிக்கேற்பவும் ஓரளவு முறையாகவும் பெரியளவு குறைப்புரிதலிலும் கருத்துகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. இவற்றுள், இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அடிப்படை அறவுணர்வுக்கு புறம்பி நின்று முசுலிம்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத வெறியாட்டத்தினை அகமகிழ்ந்து கொண்டாடிய குறைக் கூட்டம் ஒரு புறமும் முசுலிம்களிற்கும் தமிழர்களுக்குமிடையிலான பகைமையுணர்வு தோன்றியமைக்கு அக்கால தமிழர் தலைமைகள் தான் காரணம் என்று சொல்லுவதனூடாக அந்தப் பகைப்புலம் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னாலுள்ள இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சி நுட்பமாக மறைக்கப்படுகின்றது. இந்தப் பகைப்புல உருவாக்கத்திற்கு சியோனிச நரபலியாளர்களைக் காரணங்காட்டியோரும் இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட புலனாய்வுச் சூழ்ச்சியின் மிகப் பெரும் பங்கைப் பேசாமலே கடந்து செல்கின்றார்கள். எனவே இது குறித்து வரலாற்றுச் செய்திகளோடு நினைவுறுத்த வேண்டிய விடயங்களைப் பதியும் ஒரு ஆய்வுமுறை வழிக் கட்டுரையாக இப்பத்தி வரையப்படுகின்றது.

இலங்கைத்தீவில் உள்ள இசுலாமியர்களில் 2/3 பங்கு சிறிலங்காவிலும் 1/3 பங்கு தமிழீழத்திலும் வாழ்ந்து வருகின்றனர். ஆட்சியாளர்களால் முசுலிம்களாக அடையாளங் கூறப்பட்ட தமிழீழ தாயகத்தைச் சேர்ந்த முசுலிம்கள் தம்மைத் தமிழ் பேசும் முசுலிம்கள் என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் புரட்சிகரமான இளையோரால் தமிழீழ இசுலாமியர்கள் என்றவாறே தம்மை உணர்ந்தும் அடையாளப்படுத்தியும் வந்தனர். சிறிலங்காவின் முசுலிம்களில் பெரும்பகுதி, வணிகமாற்றும் தரகு வர்க்கமாக அதாவது இரத்தினக்கல் வணிகம் போன்ற பெரும்பணமீட்டும் வணிகத்துறைகளில் தரகு அணியாக உள்ளவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் கீழ் திருப்தி அடைந்தவர்களாக இருக்கையில் வேளாண்மையையும் மீன்பிடித் தொழிலையும் பெரிதும் நம்பியிருக்கும் உழைக்கும் மக்களாகிய தமிழீழ முசுலிம்கள் குறிப்பாக தென் தமிழீழத்தைச் சேர்ந்தோர் தமிழினவழிப்பின் இனவாத ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக தமிழீழ இசுலாமிய மறவர்கள் தமிழீழ விடுதலைக்காக விடுதலை இயக்கங்களில் இணைந்து களப்பலியுமானார்கள்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது சிறிலங்கா முசுலிம்களே அதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழர்கள் என்ற பெயரில் இந்துக்களாக வாழ்ந்த இந்தியாவைப் புனிதநாடு என்று படியளக்கும் கூட்டம் முசுலிம்கள் தனிச் சிங்களச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதான ஒரு தோற்றப்பாட்டைக் காட்டி தமிழீழ முசுலிம்கள் மீதான ஒரு நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனாலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர் தாயக கோட்பாட்டுக்கும் முசுலிம்கள் நல்கிய பெரும் பங்களிப்புகளால் அந்த இந்துத்துவக் கூட்டங்களின் சில்லறைக் கருத்துகள் கூர்மைப்பட்டு அரசியல் வடிவம் பெறவில்லை.

ஒரே நிலம் என்ற தாயகப் பற்றுணர்வும் தமிழ்மொழி மீதான தீராத பற்றுமென வாழ்ந்த இசுலாமியத் தமிழர்கள் தமிழரசுக்கட்சியில் தீவிரமாகச் செயற்பட்டதோடு தம்மைத் தமிழரசுக்கட்சியினூடாகவே பெருமளவில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டார்கள். சிறிலங்கா முசுலிம்களோ தம்மை இரண்டு பெரிய சிங்கள தேசியக் கட்சிகள் மூலமே பிரதிநிதித்துவப்படுத்தித் தமது வர்க்க நலன்களைப் பேணியவாறு வணிகத்தினை வளப்படுத்திக் கொண்டார்கள். எனிலும் இவர்களும் தமிழர்களாக சிங்களத்தால் நோக்கப்பட்ட சமயங்களில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தமக்குச் சேர்பிய, பினீசிய, அரபு மூலத்தை தமது வரலாற்று வழியெனச் சொல்லி வந்ததோடு ஒரு சாரார் எல்லாவற்றையும் விஞ்சியவர்களாக பதவிகளுக்காக தம்மை சிங்களவர்களின் வழித்தோன்றல்கள் என்று அடையாளப்படுத்தியும் வந்தனர். சிறிலங்கா முசுலிம்களின் பிரதிநிதிகள் சிங்கள பேரினவாதத்திற்கு அடிவருடிகளாகச் செயற்பட்டு வரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தோராயிருந்தனர்.

இந்த சிறிலங்கா முசுலிம்கள் தமது வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களைத் தம்பக்கம் இழுக்க பலவாறு விளக்கம் கொடுத்ததோடு மௌலவிமாரை வைத்து முசுலிம்கள் மதத்தைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர மொழியையல்ல என்று குர்ஆன் விளக்கமும் கொடுத்தார்கள். தமிழீழ இசுலாமியர்களை ஏறெடுத்தும் பார்க்காத சிறிலங்கா முசுலிம்கள் தமது வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களுக்கு பதவிகளையும் சலுகைகளையும் அள்ளி வழங்கலானார்கள். தமிழர் என்ற போர்வையில் இந்துவாய் இருந்தோரின் தற்குறி அரசியல், முசுலிம் அடிப்படைவாதத்தின் வெறித்தனங்கள், சிறிலங்கா முசுலிம்களின் வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் என எல்லாமாக முசுலிம்களை தமிழ்த் தேசிய இனத்தின் இணைபிரியாத உறுப்பு என்ற நிலையிலிருந்து பிரிக்கத் துடித்தன. எனினும் அசுரப் போன்ற அக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞரணியில் தீவிராமகச் செயற்பட்ட இசுலாமிய இளையோர்கள் மாயவலைகளில் சிக்காமல் தமிழீழ முசுலிம்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சிறிலங்காவில் முசுலிம்களின் வணிக ஆதிக்கத்தைக் கண்டு எரிச்சலடைந்த சிங்கள பௌத்த பேரினவாதம் 1915 இல் முசுலிம்களுக்கு எதிராக இன வன்முறை செய்ததன் தொடர்ச்சியாக பல செயற்பாடுகளைத் திரைமறைவில் அரங்கேற்றி வந்தது. புத்தளம் மாவட்டத்தில் முசுலிம்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அந்த மாவட்டத்தின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இல்லாது செய்வதற்காக புத்தளத்தை சிலாபத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக்கியதோடு புத்தளம் பேருந்து நிலையத்தில் இருந்த முசுலிம்களின் வணிக மேலாண்மையை அழிக்க எந்த அடிப்படையிலும் பொருத்தமில்லாத இடத்தில் புதிதாய் ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து அதில் சிங்களவர்களுக்கு கடைகளும் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த இனவொடுக்கல் நடவடிக்கைகளிற்கெதிராகப் போராடிய முசுலிம்களை அச்சுறுத்துவதற்காக 1976-02-02 அன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் புகுந்து சிங்களக் காவல்துறை துப்பாக்கிகளால் சுட்டு வெறியாட்டம் ஆடியது. இதனை எதிர்த்து ஒரு வரி கூடப் பேசாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த முசுலிம்களும் கமீட் போன்ற ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த முசுலிம்களும் வாய்மூடி சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு நோகாமல் நடந்துகொண்டனர். இதற்கெதிராக தந்தை செல்வா மட்டுமே பாராளுமன்றத்தில் பேசி இதற்குக் காரணமானவர்களைத் தயக்கம் இன்றித் தட்டிக் கேட்டார். இதனால் அசுரப் போன்ற தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட இளையோர் தமிழரசுக் கட்சியில் தாம் வைத்திருந்த நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தினர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவழித்து அதற்குப் பரப்புரையும் செய்து வந்த அசுரப்அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட நேர்ந்தால் தம்பி அசுரப் அதனை முன்னெடுத்துச் செல்வேன்என்று கூறியும் வந்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்களாதரவைக் காட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலைப் பயன்படுத்திய போது முசுலிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட அசுரப் அடங்கலானோர் கல்முனை, புத்தளம், சம்பாந்துறை ஆகிய இடங்களில் போட்டியிட்டுக் கூடத் தோல்வியைத் தழுவினர். ஏலவே கூறியது போல, தமிழர் என்ற போர்வையில் இந்துவாய் இருந்தோரின் தற்குறி அரசியல், முசுலிம் அடிப்படைவாதத்தின் வெறித்தனங்கள், சிறிலங்கா முசுலிம்களின் வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்ற கூட்டுக் காரணங்களாலே தமிழீழம் கோரிய அசுரப் தமிழ்பேசும் முசுலிம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனார். இந்நிலையில் “இசுரேலிய நலன்காக்கும் பிரிவு” என்ற போர்வையில் தமிழ்ப் போராளிகளை ஒழித்துக்கட்டவென மொசாட் கூலிப்படை சிறிலங்கா அரசால் வரவழைக்கப்பட்டது. இதனை தமிழீழ விடுதலை இயக்கங்கள் எதிர்த்திருந்தாலும் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளிடமும் தமிழ் மக்களிடமும் எதிர்க்க வேண்டிய தேவையை உணர்ந்த தன்மை இருந்தது போல் செயற்பாட்டில் தெரியவே இல்லை. ஆனால் இதனை எதிர்த்துக் கடுமையாகப் போராடிய தமிழீழ தாயகத்தைச் சேர்ந்த இசுலாமிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலத்தில் இரு துருவ உலக ஒழுங்கில் இந்து மா கடல் பகுதியில் அமெரிக்க எதிர் நிலையிலிருந்த இந்தியா, அமெரிக்காவின் தூதரகத்தில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தில் இயங்கிய இசுரேலுக்கு எதிராகச் செயற்படுவதற்கு இசுலாமிய இளைஞர்கள் பயன்படுவார்கள் என்று கருதி அசுரப் உள்ளிட்ட சில இசுலாமிய இளைஞர்களுடன் ஒட்டான உறவை வளர்க்கத் தொடங்கியது.

1983 ஆம் ஆண்டு இனக்கொலைத் தாக்குதலில் அசுரப்பின் கல்முனையிலிருந்த வீடு தீக்கிரையாக்கப்பட்ட அளவிற்கு அவர் ஒரு தமிழ்த் தலைவராகவே சிங்களத்தால் அந்தக் காலத்தில் பார்க்கப்பட்டார். சிறிலங்கா முசுலிம்கள் தமிழீழ முசுலிம்களின் வாக்குகளைக் குறிவைத்து விரித்த சலுகையில் அதிகம் அரசியல் அறிவற்ற தமிழீழ முசுலிம்கள் வீழாதிருக்க அசுரப் இந்தியத் தொடர்புகள் அதிகம் ஏற்படாத காலம் வரை தொடர்ச்சியாக செயலாற்றி வந்தார். இந்நிலையில் தமிழர் தாயகக் கோட்பாட்டினை சிதைத்து தமிழீழ விடுதலையை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியை முன்னெடுக்க இந்தியா முனைந்தது. ஈழப் போராளி அமைப்புகளிடம் போர்க்கருவிகளைக் களைந்து வெண்களூரில் சார்க் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ராசீவின் இந்திய நடுவண் அரசு செய்திகொண்டிருந்தது. அந்த மாநாட்டில் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை சிதைத்தழிக்கும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலம் தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஒரு தேசிய இன விடுதலையைச் சாத்தியமற்றதாக்குவதோடு சார்க் பிராந்திய நாடுகளின் மீதான தனது மேலாதிக்கத்தைக் காட்டிக்கொள்ள தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா முடிவெடுத்தது. இதற்காக அவர்கள் முன்வைத்த தீர்வுத் திட்டம் என்பதில் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள், முசுலிம்கள், சிங்களவர்கள் என்ற அடிப்படையில் தனித்தனியான நிருவாக அலகுகள் என்ற மூடுதிரைக்குள் தென் தமிழீழத்தை மூன்றாக உடைத்துத் தமிழீழ தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பது என்பது அடங்கியிருந்தது.

வெண்களூரில் வைத்து இந்தத் தீர்வுத் திட்டம் என்று சொல்லப்பட்ட இந்தியாவின் சூழ்ச்சித் திட்டத்தை விடுதலைப் புலிகளிடம் திணித்த போது அதனை விடுதலைப் புலிகளின் தலைமை எதிர்கொண்ட தன்மையும் உறுதியும் என்பது தமிழின விடுதலை குறித்து பேசும் ஒவ்வொருவரும் தம்மிடம் வளர்த்தெடுக்க வேண்டியவையாகும். இந்தச் சந்திப்பில் சிறிலங்காவிற்கான இந்தியத் தூதர் தீட்சித் மற்றும் இந்திய உளவுத்துறையின் மேல் மட்ட அதிகாரிகள் பங்கு பற்றி விடுதலைப் புலிகளின் தலைமைக்குப் பலவாறு அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர். அதில் வரைபட விளக்கத்துடன் பேசத் தொடங்கிய தீட்சித், கிழக்கு மாகாணம் தமிழர்கள், முசுலிம்கள், சிங்களவர் என்று மூவின மக்களும் வாழ்ந்து வரும் பகுதி என்று கூற, விடுதலைப் புலிகள் தரப்பு குறுக்கிட்டு தமிழர்களுக்கும் தமிழ் பேசும் இசுலாமியர்களுக்கும் அது தாயக நிலம். சிங்களவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் தமிழர்களின் தாயகத்தை கபளீகரம் செய்வதற்காகக் குடியேற்றப்பட்டவர்கள் என்று கூறினர். இதிலிருந்து முசுலிம்களை எப்படி தமிழீழ தேசத்தின் இணைபிரியாத உறுப்பு என்பதிலிருந்து பெயர்க்க இந்தியா அடிப்படையிட்டது என்பது விளங்கக் கடினமானதல்ல. கிழக்கு மாகாணத்தை மூன்று நிருவாக அலகுகளாகப் பிரித்து அதிகாரப் பரவலாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இறுகிய முகத்துடன் உறுதியாகப் பேசிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்தமிழர் தாயகத்தைப் பிரிக்கவும் முடியாது. பிரிக்கவும் விட மாட்டோம்எனக் கூறி தமிழர்களின் தேசிய ஆன்மாவைக் காப்பாற்றினார்.

தமிழீழக் கோட்பாட்டுக்கு ஆதரவு கேட்டு தேர்தலில் தோல்வியடைந்த அசுரப்பிற்கு, முசுலிம் தனித்தன்மை பேச வைத்த அவரின் தேர்தல் அரசியலுடன் இந்தியத் தூதரக அதிகாரிகளின் கருத்தூட்டமும் சேர அவர் முசுலிம்கள் என்று பிரித்துப் பேசும் அரசியலைக் கூர்மைப்படுத்தலானார். பின்னர் இந்தியசிறிலங்கா ஒப்பந்தத்தில் முசுலிம்கள் ஒரு தரப்பாகத் தன்னும் கருதப்படவில்லை என்று அசுரப் பேச ஆரம்பித்ததோடு இந்தியத் தூதரகம் அசுரப்பின் செயலாற்றும் வேகத்தைப் பார்த்துத் தனது சூழ்ச்சி வலையில் மடக்கிப் போட்டது. இதனால் 1986 இல் தமிழ்த் தலைமைகளுடன் முற்றாக முரண்படத் தொடங்கிய அசுரப், அனைத்துப் போராளி இயக்கங்களும் ஒதுங்கி நின்றதும் விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டதுமான 1987 உள்ளூராட்சித் தேர்தலில் முசுலிம் காங்கிரசு என்ற அசுரப்பினால் உருவாக்கப்பட்ட கட்சி பங்கு பெற முடிவெடுத்தது. இந்தத் தேர்தலில் பங்கு பற்றினால் கொலை செய்யப்படுவார்கள் என விடுதலைப் புலிகள் எச்சரித்தும் அதில் பங்கு பெற அசுரப் கங்கணம் கட்டி நின்றார். எனினும் இந்தியசிறிலங்கா ஒப்பந்த வருகையுடன் அந்தத் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது.

பின்னர் அசுரப்பானவர் இந்தியாவின் முழுமையான முகவர் என்ற அளவில் மாறுதலாகிப் போன துன்பியல் நிகழ்வு நடந்தேறியது. 1989 ஆம் ஆண்டு நடந்த மாகாண அவைத் தேர்தலில் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த இனக்கொலைப் படை நிலைகொண்டிருந்த இடங்களில் போட்டியிட்டு தமது பிரதிநிதித்துவத்தை இந்திய ஒத்துழைப்புடன் அசுரப் ஏற்படுத்திக்கொண்டார். இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் வந்த இந்திய நரவேட்டைப் படைகள் வெளியேறும் போது இந்தியாவை வெளியேற வேண்டாம் என்றும் இந்தியா வடக்குகிழக்கிலிருந்து வெளியேறினால் முசுலிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் அசுரப் வலியுறுத்தி வந்து தமிழர் தாயகத்தில் இந்தியாவின் மேலதிக்கத்தையும் வன்கவர்வையும் உறுதிப்படுத்த விரும்பித் தன்னை முழுமையாக இந்தியாவின் கைக்கூலி என்று உறுதிப்படுத்தினார். உண்மையில் இந்தியாவின் இன்னொரு கூலிப்படையாகச் செயலாற்றி வந்த .பி.ஆர்.எல்.எவ் என்ற இயக்கத்தை வைத்து முசுலிம்களின் மீது வன்முறையை ஏவிய இந்தியாதான் அசுரப்பிற்கு முசுலிம்களின் காவலனாகத் தெரிந்தது என்ற அளவில் இந்தியா எப்படி சூழ்ச்சி வலை விரித்து மண்ணிற்காக ஈகம் செய்ய வந்தோரையே மண்ணிற்கு இரண்டகராக்கியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.

பின்னர் இந்தியாவின் நம்பிக்கையை வென்ற சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் இந்தியாவின் முகவர் என்றாகி விட்ட அசுரப் எத்தகையதொரு முதன்மையை வகித்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அசுரப் முன்வைத்த கரையோர மாவட்டம், முசுலிம் மாகாணம் போன்ற விடயங்கள் வெண்களூரில் சார்க் மாநாட்டை ஒட்டிய சந்திப்பில் தமிழர் கைகளில் திணிக்க முயன்ற, தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்க இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சித் திட்டத்தை அடியொற்றியதே. சந்திரிக்காவின் தீர்வுப் பொதியை பாராளுமன்றில் வெளியிட்டவரும் இந்த அசுரப் தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழர்களை இந்துக்களாக்கத் துடிக்கும் இந்தியா தான் முசுலிம்களின் தலைமைகளை தமது கைக்கூலிகளாக்குவதிலும் செயலாற்றுகின்றது. முசுலிம்களினை தனித்த தரப்பாக இந்தியா காட்ட முனைந்ததே தமிழ்த் தேசியத்தின் இணை பிரியாத உறுப்பு என்பதிலிருந்து தமிழ் பேசும் முசுலிம்களைப் பெயர்த்து அவர்களை இசுலாமிய அடிப்படைவாதத்தில் முற்றாகப் புதைய வழி சமைக்கும் சூழ்ச்சிகளைச் செய்ததோடு அதனைக் காரணம் காட்டி இந்துத்துவ கோளாறுகளை தமிழர்களிடத்தில் புகுத்தி பிரித்தாளும் நர சூழ்ச்சியை இந்தியா செய்தது.

இந்துத்துவத்தின் வளர்ச்சி இந்தியாவின் மேலாதிக்கத்தினை எதிர்க்கும் உளநிலையற்ற அடிமைக் கூட்டத்தை அண்டை நாடுகளில் உருவாக்க இந்தியாவிற்குத் தேவையானது. இந்துத்துவ வளர்ச்சிக்கு இசுலாமிய அடிப்படைவாதமும் கிறுத்துவ அல்லேலூயா அமைப்புகளும் காரணங்காட்டத் தேவையானது. பௌத்த பேரினவாதம் இந்தித்துவத்தின் உற்ற நண்பன். சிறிலங்கா, பர்மா போன்ற அதன் அண்டை நாடுகளின் பௌத்த பேரினவாதங்கள் இந்துத்துவத்தின் பேட்டை ரவுடிகளாகும்.

தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப் புலத்தை வலுவாக்கித் தமிழீழ தாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே. இதன் அடிப்படையின் தொடர்ச்சியான அவலமே முசுலிம் ஊர்காவல் படை என்ற பெயரில் சிங்களத்தின் கைக்கூலியாக முசுலிம்கள் செயற்பட்டு தென்தமிழீழத்தில் தமிழர்கள் மீது நரபலி வேட்டையாடி தமிழீழர்களின் நிலங்களை வன்கவர்ந்தமையாகும். அதனால் தென் தமிழீழத்தில் தமிழர்கள் முசுலிம் வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் கொன்றொழிக்கப்பட்டதன் வெளிப்படாக வட தமிழீழத்திலிருந்து முசுலிம்கள் வெளியேற்றப்பட்டனர்.அம்பாறை மாவட்டம் 1963 இல் மட்டக்களப்பில் இருந்து பிரிக்கப்பட்ட போது முசுலிம்களின் எண்ணிக்கைப் பெரும்பான்மை அம்மாவட்டத்தில் கிடைக்கின்றது என்று அகமகிழ்ந்த முசுலிம் அடிப்படைவாதமானது திகாமடுல்ல மாவட்டமாகிப் போன பின்பு தனது எண்ணிக்கைப் பெரும்பான்மையை இழந்துதான் நிற்கின்றது.

முசுலிம் தரப்பு தனது தமிழர் மீதான கொலைகளுக்கு ஒரு சிறு மன்னிப்பு கேட்காமல் சிங்களத்துடன் ஒத்தோடும் அரசியலைச் செய்து வந்த காலத்தில் தமிழர்கள் மிகப்பலம் பொருந்தி நிழலரசு அமைத்து ஆட்சி புரியும் நேரத்தில் முசுலிம்களிடம் தாம் முசுலிம்களை வெளியேற்றியமைக்கு தமிழர்களின் தலைமை வருத்தம் தெரிவித்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு செயலாற்றுவதாகவும் உறுதி தெரிவித்தது. எனினும் அந்தக் காலத்தில் தமிழரோடு இணைந்த தமிழ்த் தேசியத்தோடு இழைந்தோடும் ஒரு தீர்வு தான் இசுலாமியத் தமிழர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து செயற்படாமல் தொடர்ந்தும் சிங்களத்திடம் சலுகை பெற்று அரசியல் செய்யும் சிங்களத்தின் அடிவருடித் தரப்பாகவே சிறிலங்கா முசுலிம்களின் கருத்தியலாளுமைக்கு உட்பட்ட தமிழ்பேசும் முசுலிம் தரப்பு இருந்து வந்தமை இன்று முசுலிம்களை ஒரு இக்கட்டான சூழலுக்குள் தள்ளியுள்ளது.

தமிழீழ முசுலிம்களைத் தமக்குள் கரைத்த சிறிலங்கா முசுலிம்களின் கொழும்புவாழ் மேட்டுக்குடியும் தமிழீழ முசுலிம்களை தமிழ்த் தேசியத்தின் இணைபிரியாத உறுப்பென்ற நிலையிலிருந்து சூழ்ச்சியாக அகற்றிய இந்தியாவுமே தமிழ் பேசும் முசுலிம்களின் இன்றைய கையறு நிலைக்குக் காரணம். சிங்கள பௌத்த பேரினவாதத்திடமிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுடன் இணைந்து விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறெந்தக் குறுக்கு வழியும் இலங்கைத்தீவில் முசுலிம்களுக்கு இல்லை.

-மறவன்-

2018-03-25

 5,369 total views,  6 views today

Be the first to comment

Leave a Reply