தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர்

முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இன அழிப்பை நடாத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டி மோதி கட்டமைப்புகளை சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கின்றனர் என்பதை பல தரப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப்போராட்டங்கள் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வரும் போது அதன் பின்னரான காலப்பகுதியையும் மறப்போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளின் எதிர்கால நலன் குறித்த நிலைப்பாடுகளும் மிக நேர்த்தியாக கையாளப்பட வேண்டிய ஒன்று. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை நேரடியாக களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தமையால் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னரான போராளிகளின் நலன் குறித்த பொறுப்பை புலம்பெயர் அமைப்புகளிடமே வழங்கியிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் எவ்வாறு போராளிகள் புறக்கணிக்கப்பட்டு இராணுவ பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டனர்?

விடுதலைப்புலிகளின் அமைப்பானது தொலை நோக்குச் சிந்தனையில், போராளிகள் மற்றும் மக்கள் நலன் உட்கட்டுமான பணிக்காக பெருமளவிலான பொருண்மியச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனர். போர் உச்சக்கட்டமான இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கூட தமிழீழ உட்கட்டுமான பணிக்கும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்திற்குமான பொருண்மிய கட்டுமானத்தை மிக நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் மாவீ ரர் போராளி குடும்ப நலன் காப்பகங்கள் சிதைவுற்றுப் போனதற்கு, புலம்பெயர் அமைப்புகள் தன்னிச்சையாக கட்சிசார் அரசியலில் ஊறிக் கிடப்பதும் இந்திய கைக்கூலிகளாக மாறிப் போனதும்தான் காரணம்.

“கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர் தலைமையின் கட்டளைக்கு இணங்க குடும்பங்களோடு இணைந்து இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை எதிர்காலத்தில் இராணுவப் பண்ணைகளிலும் இராணுவ தொழிற் பேட்டைகளிலும் அடிமைகளாக வைத்திருத்தல்” என்ற சிங்கள அரசின் நோக்கமானது இன்று உருவாகியது அல்ல. 2010 காலப் பகுதிகளிலேயே சரணடைந்த போராளிகளை சம்பளமின்றி வேலைவாங்கியது சிங்கள அரசு. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரி ரொபேட் பிளேக் 2011 காலப்பகுதியில் வடக்கிலிருக்கும் இராணுவப் பண்ணைகளை பார்வையிட்டது அனைவருக்கும் தெரியும்.

கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர், புலம்பெயர் அமைப்புகளின் பொறுப்பற்ற செயலாலும் தன்னிச்சையான அதிகாரப் போட்டியாலும்தான் போராளிகளின் எதிர்காலமும் போராளி மாவீரர் குடும்பங்களின் எதிரகாலமும் தாயகத்தில் கேள்விக்குறியாகியது என்பதுதான் உண்மை. சிறிலங்காவின் தேர்தல் காலத்தில் தாங்கள் விரும்பும் தமிழ் கட்சிகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கோடிக் கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு செலவு செய்யும் புலம்பெயர் அமைப்புகள் அந்தப் பணத்தில் தமிழீழத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் பண்ணைகளை உருவாக்கி போராளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருந்தால் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அந்த பண்ணைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருப்பார்கள் போராளிகள்.

வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் இன்று வடகிழக்கில் பெருமளவு பகுதியை இராணுவப் பண்ணைகளே செய்கின்றன. அங்கு அடிமைகளாக வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் பொருண்மிய அடிப்படையில் பெரிதும் பின்தங்கி இருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட போராளிகளும் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுமே. நிலைமை இப்படியிருக்க பொருண்மிய அடிப்படையில் மிகவும் செழிப்பாக இருக்கக் கூடிய அரசியல்வாதிகளை குறிப்பாக கஜேந்திரகுமார் அணி விக்கினேசுவரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அழைத்து விழா எடுப்பதற்கு பெருமளவில் பண த்தை விரயமாக்குகின்றன புலம்பெயர் அமைப்புகள்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தான் ஒன்றும் செய்யுதில்லை ஆனால் புலம்பெயர் அமைப்புகளால் பெரிதும் விரும்பப்படும் கஜேந்திரகுமார் விக்கினேசுவரன் அணி மூலமாவது முதலீடுகளை செய்து வடகிழக்கில் பண்ணைகளை உருவாக்குங்கள் என்று கேட்டால் “அவங்களுக்கு தொழில் ஒன்றை தொடங்கி ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி நிர்வகிக்க கூடிய ஆளுமை இல்லை” என்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காய் தமது இளமைக்கால வாழ்வைத் தொலைத்து இன விடுதலைக்காய் களமாடி உடல் உறுப்புகளை இழந்த போராளிகள் இன்று இராணுவ பண்ணைகளில் அடிமைத்தனமான வேலை செய்து தமது எதிர்காலத்தை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்கிய புலம்பெயர் அமைப்புகள் போராளிகளின் நலனில் அக்கறை கொள்ளாது தாம் விரும்பும் அரசியல் கட்சிகளின் அரசியல் அதிகாரத்திற்காக பண விரையம் செய்கின்றமையானது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இழைத்த மாபெரும் இரண்டகமாகும். தனித்தனியாக போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் செய்வதாக சொல்கிறார்கள். அவை வரவேற்கப்பட வேண்டியதே ஆனால் அதுவே உறுதியான தீர்வாக அமையாது. தமிழீழத்தின் அத்தனை மாவட்டங்களிலும் போராளிகளை மையமாக வைத்து உற்பத்தித் துறையில் முதலீடுகள் செய்யப்படல் வேண்டும். அதன் பிற்பாடு அதை அடுத்த தளத்திற்கு முன்னேற்றும் பணியை போராளிகள் செய்வார்கள். அதற்குரிய பண்பும் ஆளுமையும் போராளிகளிடம் உள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் துடைத்தழிப்பு செய்வதில் மிக ஆழமாக வேலை செய்யும் இந்திய உளவுத் துறையோடு இன்று புலம்பெயர் அமைப்புகள் தொடர்பில் உள்ளனர். சிலர் தாங்கள் இந்தியாவோடு வேலை செய்கிறோம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். சரணடைந்த புலிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, அவர்களை உளவியல் ரீதியில் நலிவடையச் செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் இந்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் வெறுப்பை உண்டாக்குவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் அவநம்பிக்கையை உருவாக்கும் சிங்கள இந்திய தேசங்களின் நோக்கத்தை, பொருண்மிய அடிப்படையில் வலுவாக இருக்கும் புலம்பெயர் அமைப்புகள் கச்சிதமாக செய்வதாகவே தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு சாராரின் தனிப்பட்ட அதிகார நோக்கத்திற்காக ஒட்டு மொத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தை சிதைக்கும் இரண்டகச் செயலை காலம் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நடாத்தப்படும் நிகழ்வுகளில், தமிழீழம் என்றால் என்ன அதன் விடுதலை ஏன் தேவை? அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இருபது நிமிடங்கள் கூட கூட்டங்கள் நடைபெறுவதில்லை மாறாக கொத்துரொட்டி விற்பனை செய்தல், தமிழீழ சின்னங்களை விற்பனை செய்தல் என வியாபாரா அமைப்புகளாக மாறி நிற்கிறது புலம்பெயர் கட்டமைப்புகள்.

ஒரு உண்மைச் சம்பவம் ஒன்றை இங்கு சொல்லியே ஆகவேண்டும்!

கடந்த ஆண்டு ஐரோப்பா நாடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஒரு அமைப்பின் அந்த நாட்டு பொறுப்பாளரை சந்தித்து மிக முதன்மையான ஆவணமொன்றை கொடுத்து அதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நண்பர் ஒருவர் சென்றிருந்தார். பொறுப்பாளரை சந்தித்து குறிப்பிட்ட ஆவணத்தை நண்பர் கொடுக்க அந்தப் பொறுப்பாளரோ அதை சுருட்டி அடுப்படியில் வைத்துவிட்டு கொத்துப் போடுவதில் மும்மரமா இருந்ததாக நண்பர் வருத்தப்பட்டார். அதைவிட பகடி என்வென்றால், வெளிநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும்  வோக்கி டோக்கிகளை (Walkie Talkie) பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் இடங்களில் எங்கெங்கு கொத்து ரொட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டளைகளை வழங்குகிறாராம். ஆனால் அதை ஏதோ களமுனையில் நின்று சண்டைக்கு கட்டளையிடுவது போன்று ஒரு தோரணையில் செய்வதைப் பார்த்தால் எங்கள் புலம்பெயர் அமைப்புகளின் வங்குரோத்து விளங்குகிறது என்று கடிந்து கொண்டார் நண்பர். புலம்பெயர் மக்கள் ஒன்று கூடி நிற்கும் இடத்தில் தமிழீழ விடுதலைக்கான அரசியல் கருத்துருவாக்கத்தை உருவாக்குவதையும் விட கொத்துரொட்டி விற்பனைக்குத் தான் அதிகம் முதன்மை கொடுப்பதாகவும் அதை ஏதோ விடுதலைப் புலிகளே செய்வது போல் காட்டுவது அருவருப்பான விடயம் என்று கடிந்து கொண்டார் அந்த நண்பர்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் கருவியேந்திய மறவழிப்போராட்டம் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர் முழுப் பொறுப்பையும் புலம்பெயர் அமைப்புகளை நம்பி ஒப்படைத்துவிட்டு வீரச்சாவடைந்த, சரணடைந்த, விழுப்புண்ணடைந்த, சிறை சென்ற போராளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களிற்கும் இந்த புலம்பெயர் அமைப்புகள் என்ன சொல்லப் போகின்றன?  

கதிர்

17-03-2018

 14,803 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply