பொய் புளுகுகளும் புரிதலற்ற கொக்கரிப்புகளும் தீராத களங்கத்திற்கு இட்டுச் செல்லும் -அருள்வேந்தன்-

இனச்சிக்கலுக்குத் தீர்வு காண எடுத்த முயற்சிகளில் ஒவ்வொரு முயற்சியிலும் கற்றுக்கொண்ட விடயம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியதே. பல வழிகளிலும் பலவாறு எடுத்த முயற்சிகள் வீண்போய் எஞ்சிய ஒரே வழி விடுதலை வேண்டிப் போராடி தனி அரசு அமைத்தல் என்ற தெளிவும் முடிவும் தவிர்க்க இயலாதது. எனினும் பன்னாட்டு அழுத்தங்கள் மற்றும் அயல்நாடான தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று ஒரு தேசிய இனப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்க எடுத்த முயற்சிகளை எதிர்த்து நின்று எமக்கான விடுதலை வேண்டிப் போராடி விடுதலை பெறுவது எம்மால் மட்டுமல்ல தேசிய இன விடுதலை வேண்டிப் போராடும் எவருக்கும் இயலவில்லை. ஆனாலும் அமைதிப்பேச்சு என்ற போர்வையில் வல்லாதிக்கங்கள் எமக்கு விரித்த சூழ்ச்சி வலையை எதிர்கொண்ட காலமென்பது நாம் சிறீலங்கா தேசத்துடன் திறன் சமனிலையில் இருந்த காலம். அக்காலத்தில் அரசியல், இராசதந்திரம், இராணுவம் என முத்திறனும் இணைந்த ஒரு புதிய எதிர்ப்பு வடிவத்தைக் கட்டியமைத்தபடி வல்லாதிக்க சூழ்ச்சியை மக்கள் துணையுடன் எதிர்கொண்ட காலம். உலகம் எத்தனையோ விதங்களில் சீண்டிப் பார்த்தது. வெளியே வராத எத்தனையோ சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. சலிப்புறாதோருக்கும் தாக்குப்பிடிப்போருக்கும் சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைப்போருக்குமே இறுதி வெற்றி என்பதை நன்குணர்ந்து அத்தனை சிக்கல்களையும் எமது தலைமை கையாண்டு வந்தது. ஐ.நாவுக்கு படியளப்போரிடம் பணிந்து செல்லுமாறு அன்றும் கூறப்பட்டது. இந்தியாவைப் பகைத்தால் எதுவும் ஆகாதென்று அன்றும் கூறப்பட்டது. சிங்கள மக்களின் நல்லெண்ணத்தைப் பெற வேலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. உலகலாவிய இடதுசாரித் தோழர்களுக்கு எமது போராட்டம் குறித்து எடுத்துச் சொல்லி வகுப்பெடுத்து ஆதரவு சேர்க்க வேண்டும் என்றும் அன்று கூறப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை பற்றியும் ஒற்றுமையில் வேற்றுமை பற்றியும் கூறப்பட்டது. குறைப்பட்டும் பேசப்பட்டது. மிகைப்படுத்தியும் பேசப்பட்டது. ஆனால் பேச வேண்டியதை அழுத்தம் திருத்தமாகத் தொடர்ச்சியாகப் பேசினார்களா என்றால் மழுப்பலான பதில்களே வரும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமானது மூன்று பத்தாண்டுகளாக வீரத்துடனும் உறுதியுடனும் முன்னெடுத்துச் சென்றமை உலக அரசியலில் வல்லாண்மையாளர்களினால் எப்படி நோக்கப்பட்டது என்பதனையும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவிற்கு தமிழீழ தேசிய இன விடுதலையை அழிப்பதே முதல் இலக்கு என்பதனையும் அத்தனை உறுதியுடனும் தெளிவுடனும் தொடர்ச்சியாகச் சொல்வதற்கு ஒரு ஊடகமும் இருக்கவில்லை.

இந்தினோசியாவின் ஆச்சே மாநில விடுதலை இயக்கத்தின் ஆயுதங்களைக் களைந்து விட்டு ஒரு தீர்வைத் திணித்தது போல் ஒரு திணிப்பை விடுதலைப்புலிகளின் தலைமை இருக்கும் வரை ஈழத்தமிழருக்கு செய்யவே முடியாதென உலகம் உறுதியாய் உணர்ந்துகொண்டது. எனவே அந்த வல்ல தலைமையை அழிப்பதனைச் செய்து முடித்தது. செய்து முடித்த பின்னர் ஒரு தீர்வைத் திணிக்கலாம் என தனது சந்தை அமைதிக்காக உலகம் விரும்பியிருக்கக்கூடும். ஆனால், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஒரு பொட்டு வெடி கூட வெடிக்காத ஈழ மண்ணில் அப்படி ஒரு தேவையும் இல்லையென உலகம் முடிவெடுத்து விட்டது. தமிழர்களுக்குத் தீர்வைக் கொடுக்க சிங்களமும் கருதவில்லை. அப்படியொரு தேவை இருப்பதாக உலகமும் கருதவில்லை. எனவே எந்த தீர்வுத் திட்டமும் வந்து சேராது. தீர்வு வரப்போகிறது என்று சொன்னோரும் தீர்வு தமிழர்களுக்கு எதிராக வரப்போகிறது என்று சொன்னோரும் தீர்வு தமிழருக்கு நன்மை பயப்பதாய் இருக்கும் என்று சொன்னோரும் தீர்வு வந்தால் எல்லாம் நடக்கும் என்று சொன்னோரும் தீர்வு வந்தால் எல்லாம் நாசம் என்று சொன்னோரும் வெற்றிடத்தில் வளியைத் தேடுபவர்களே. இத்தனை பொய்களும் அரசியலினாலா? அறியாமையினாலா? இல்லை அரசியல் அறியாமையினாலா என்பதற்கு விடை காணில் அத்தனை தரப்புகளையும் திட்டித் தீர்க்க பல பக்கங்கள் எடுக்கும்.

இப்போதெல்லாம் எமது இனச்சிக்கல் குறித்து கருத்தூட்டல் விழிப்புணர்வுப் பணி என்பது நட்புச் சக்திகளைத் தேடுவதற்காக அயலார்களுக்குச் செய்யவேண்டிய நிலையைத் தாண்டி இந்த சொந்த இனத்தவர்களுக்கே இதனைச் செய்யவேண்டிய இழிநிலையில் எம் நிலை உள்ளது. மறந்தால் நினைவூட்டலாம். பொய்களைச் சொல்லிப் பழகி காலவோட்டத்தில் சொல்லிவந்த பொய்களைத் தாமே நம்பி, மற்றவர்களையும் அதை நம்ப வைக்க முயற்சி எடுத்து, நம்பாதோரை இரண்டகராக்கி, தம்மைத் தமிழ்த் தேசியராக்கும் ஒருவித வரலாற்று அவலத்தை அரசியல் செய்வோர் எனக்கூறும் குறும்குழு உதிரிகளும் ஊடகப் பொய்களும் (இவர்கள் கையில் போன ஊடகம் நாசம்) இனியும் என்ன செய்வார்களோ? எத்தனை காலந்தான் செய்வார்களோ என்று ஏங்கி நிற்க அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பது நினைவில் வந்து சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுப் போவதை செய்யத்தானே எழுதுகோலால் முடியும் (சுடவா முடியும்?). கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும் என்பார்கள். ஈழத்தமிழர் அரசியல் வெளியில் எட்டு ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது.

ஈழத்தமிழருக்கு ஒரு குணமுண்டு. முள்ளிவாய்க்காலின் பின்னோ அது இன்னொரு தனிக்குணம். புலம்பெயர்ந்துவிட்டால் அது வேறொரு குணம். அதிகாரத்தில் இருந்தால் பிறிதொரு குணம். ஊடகமிருந்தால் தறிகெட்ட குணம். உவத்தல் காய்தல் இல்லாமல் ஒரு விடயத்தை அணுகவும் தெரியாது. ஆராயவும் தெரியாது. காழ்ப்புணர்வுகள் கலைந்து இனமாகச் சிந்திக்கும் பக்குவமும் கிடையாது. தம் இருப்பு கருதி மனநிலை சார்ந்து எடுத்த முடிவை நியாயப்படுத்தி மற்றவரை ஏற்கச்செய்ய பலர் எடுக்கும் பித்தலாட்ட முயற்சிகளும் விடுதலைக்கான பாதையைத் தேடித் தராது. அது மாயமான் தேடும் பாதையில் அவர்களை இழுத்துச் செல்லும். அவர்களுடன் இழுபட்டுச் சென்றவர்களும் அக்கதி நிற்க அவர்களுக்கு இப்போது ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. இவ்வாறாக ஊடகங்களின் செல்நெறி செல்லும் பாதை ஈழத்தமிழர்களின் அரசியல் வெளியை மூடர்கூடமாக்கி விடும்.

ஒரு செய்தியிடலில் நடந்த நிகழ்வை நேரிடையாகப் பதிவு செய்து அதில்சம்மந்தப்பட்டிருக்கும் தரப்புகளின் அது குறித்த பார்வையையும் பதிவு செய்து, பதிவு செய்தவற்றினூடான நிகழ்வின் மேல் புலனாய்வுப் பார்வையையும் பாய்ச்சி, குறித்த நிகழ்வை ஊடறுத்து, ஆய்ந்து கண்டு வரலாற்றின் நெடிய பாதைகளினூடாக இந்த குறித்த நிகழ்வுக்கு இருக்கும் இயங்கியல் தொடர்ச்சியை சரியாகக் கணித்து, அக்குறித்த நிகழ்விலிருந்து அறிந்துகொள்ள வேண்டிய அரசியலையும் கற்றுக்கொள்ள வேண்டியவற்றையும் கருத்தூட்டும் கருத்தேற்றங்களாக நிகழ்வினைச் செய்தியாக்கக்கூடிய ஊடகர் எவரும் இருப்பதாக ஊடகங்களை நோக்குமிடத்து தெரியவில்லை.

ஒரு இனத்தின் அரசியல் தெளிவையும் கருத்தியல் வளர்ச்சியையும் அறிவியல் தேடலையும் பொருளியல் பார்வையும் அந்த இனத்திலிருந்து வெளிவரும் ஊடகங்களின் தரத்தின் வாயிலாக துணியலாம். எனின், மேற்போந்த சமூக, அரசியல், பொருளியல் தளங்களில் ஈழத்தமிழரின் நிலை என்ன என்பதனை வலுக்கொடுத்து சொல்லவேண்டிய தேவை இருக்காதென நம்பலாம்.

தமிழ்த்தேசியம் என்பது யாதெனில் என்ற ஒரு கட்டுரை (http://www.kaakam.com/?p=913) எழுதி தமிழர்களுக்கு தமிழ்த்தேசியத்தை புரியவைக்கவேண்டிய நிலையில் நம்மவர்கள் இருப்பதுவே இன்றைய உண்மையான நிலை. எமது தாயக நிலத்தை மீட்டு தனியரசு அமைத்தலே தமிழ்த்தேசியம் என்ற நிலையிலேயே ஆகக்கூடியளவிற்கு நம்மவர்களிடம் தமிழ்த்தேசியம் பற்றிய பார்வை இருக்கிறது. தமிழருடைய தொன்மம், வரலாறு, பண்பாடு, மொழி, அறிவியல், கலை, இலக்கியம், மெய்யியல், உணவுப் பழக்கவழக்கம், தற்சார்பு வாழ்வியல் என்ற பன்முகப் பார்வையில் தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை நெஞ்சில் நிறுத்தியவர்களாய் நம்மவர் யார் உளர்?

இப்படியான பார்வைகள் எதுவுமின்றி தமிழ்த்தேசியத்தை வாழ்வியல் நெறியாகவும் அரசியல் வழியாகவும் கொள்ளத்தக்க அளவு இனம் சார்ந்த சிந்தனை வழிவந்த தெரிவு, இனமாக உலகத் தமிழரை ஒன்றிணைத்து, உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்களுக்கு ஒரு பன்னாட்டு பாதுகாப்பு வலைப்பின்னலை ஏற்படுத்த தேவையானது. தேவையிலிருந்தே உற்பத்திகள் பிறக்கும் சாத்தியங்களிலிருந்தல்ல. இத்துணை நீண்ட பார்வை இல்லாமல் நாடு பிடித்து விட்டால் அதுதான் தமிழ்த்தேசியம் என நினைத்து 25 இலட்சம் ஈழத்தமிழரைத் தவிர மீதி 9கோடிகளுக்கு மேற்பட்ட அத்தனை தமிழர்களையும் முட்டாள்களாகப் பார்க்கும் பார்வை வரட்சியும் வெற்றுத் திமிரும் முள்ளிவாய்க்காலின் பின்னும் எம்மில் நிலைக்குமெனில் அதுவே உலகத் தமிழினத்தை ஓரணியில் அணி திரட்டுவதை சாத்தியமற்றதாக்கும் விடயமெனலாம்.

தமிழ்த்தேசியம் குறித்து நல்ல அறிவர்கள் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக அறிவுத்தளத்தில் பணியாற்றி வருகின்றனர். உலகத் தமிழர் கோட்பாட்டை முன்னிறுத்தி ஈழத்தவரான தனிநாயகம் அடிகளார் அன்றே வலியுறுத்தி அதை இணைக்க அரும்பாடுபட்டார். எனவே, தமிழ்த்தேசியம் குறித்து தெரியாமல் குறித்த நெறியின் சித்தாந்தம் குறித்த அறிவின் வரம்பை உயர்த்திக்கொள்ளாமலே தான்தோன்றித்தனமாக அரசியல் பேசுவதை ஈழத்தமிழரில் குறிப்பிடத்தக்களவானோர் நிறுத்தாவிடில், வரலாற்றில் தமிழினத்திற்கு நேர்ந்திருக்கும் இன்றைய இக்கட்டான நிலையில் இழைக்கும் இரண்டகமே ஆகும். இதுகுறித்து தெளிந்த புரிதலுடன் அரசியல் பேசுமாறும் அரசியல் சார்ந்து பதிவிடுமாறும் இனம்சார்ந்த சிந்தனையில் உரிமையுடன் கேட்க வேண்டியுள்ளது.

குறைந்தது ஊடகர்களாவது இந்த விடயங்களை உள்வாங்கி, தமிழ்த்தேசியம் குறித்த சரியான செல்நெறியில் கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக எடுத்துச்சென்று தமிழ்த்தேசியக் கருத்தூட்டலை மக்களுக்கு விழிப்பூட்டலாகச் செய்யும் வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வரவேண்டும். இல்லை, கெடுகுடி சொற்கேளாது, காழ்ப்புணர்வைக் கைவிடோம். எடுத்த வாந்தியை உள் விழுங்கி, மீண்டும் வாந்தி எடுப்போம் என்று இனம் மறந்து தான்தோன்றித்தனமாகக் கருத்திடுவதை நிறுத்தோமெனில் இனியெல்லாம் இரத்தக்களரி அல்ல. இந்த இனத்திற்கு தீராத களங்கமே உங்களால் இழைக்கப்படப்போகின்றது என்பது பதிவாகட்டும்.

தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா இயலாமையின் வெளிப்பாடாய் கூறியது போல இல்லாது, உலகத் தமிழர்களை தமிழ்த்தேசியம் குறித்த விரிந்த பார்வையும் அதன்வழி வந்த தற்சார்பு வாழ்வியலும் அது கூறும் அரசியல் வழியும் மட்டுமே தமிழர்களை இனி காப்பாற்றும் என்று வரலாற்றின் பதிவை மீள பதிவு செய்வோம்.

-அருள்வேந்தன்-

2018-01-20

 4,225 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply