
அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அரசியற் கட்சிகளின் பெயரால் மோதிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எல்லோருமே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் நேசிப்பவர்களாயும் அவற்றின் மேல் முற்று முழுதாக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தும் “தமிழீழ விடுதலை” என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தாயக விடுதலை நோக்கி சிந்திக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான கோட்பாடல்ல.
புலம்பெயர் நாடுகளில் ஒரே குடையின் கீழ் இருந்த அமைப்புகளை சிதறடித்து தமிழீழ சொத்துக்களை சூறையாடி புலம்பெயர் தளத்தில் தமிழீழம் நோக்கிய இயங்காற்றலை நிறுத்தி தமிழீழ விடுதலை நோக்கி புதிதாக இளைஞர்களை ஒன்று சேர முடியாதபடி சந்தேகங்களையும் ரவுடீசத்தையும் வளர்த்துள்ள சிங்கள மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் இன்று தமிழீழ மண்ணில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்துவிடாதபடி கன கச்சிதாமகவும் மிக வேகமாகவும் வேலைகளை முடக்கவிட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் போக்கை காட்டிக் கொண்டாலும் தமிழீழ மக்களின் நலனிற்காக தங்கள் கட்சிகளை கலைத்துவிட்டு ஒரு கட்சியை உருவாக்கும் எண்ணத்திற்கு உடன்படவில்லை. காரணம் அவர்களின் அரசியல் என்பதே அவர்களின் கட்சி மற்றும் தன்நலன்களிற்கானதாகும்.
உச்சக்கட்டத் துரோக நடவடிக்கைகயாக எப்படியாவது இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு “விடுதலைப்புலிகளின் சீருடைகள் சின்னங்கள் வீரச்சாவுகள் தளபதிகளுடனான நினைவுகள்” என பலவற்றை தமது “கட்சிக் கொள்ளை” பரப்புரைக்காக பல்வேறு தரப்பட்ட தளங்களில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தி வருவதானது அந்நிய சக்திகளின் ஊடுருவலின் ஆழத்தைக் காட்டுகிறது.

“அரசியல் தன்நலன்களிற்கு அப்பாற்பட்ட தனித்துவமான மனிதர்” என்பதாலும் “தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை வெளிப்படையாகவே ஆதரித்து அர்பணிப்புடன் செயற்பட்டவர்” என்பதாலும் குமார் பொன்னம்பலத்திற்கு “மாமனிதர்” என்ற உயரிய கௌரவத்தை விடுதலைப்புலிகள் வழங்கியிருந்தார்கள். “அரசியல் தன்நலன்கள்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பு தெளிவாக குறிப்பிட்டதன் காரணமே குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கொள்கைகளைத்தான்.
ஆனால் “ மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் வழியில்” அரசியல் செய்ய எம்மோடு இணையுங்கள் என்ற கருத்துப்பட விளம்பர பதாதைகளை வைத்தபடி 2009 ற்குப் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு நேர்மாறாக தனது அரசியலை செய்துவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “மாமனிதர் குமார் பொன்னம்பலம்” அரசியலை தான் தொடர்வதாகச் சொல்லி வாக்குக் கேட்பது மக்களை ஏமாற்றிச் செய்யும் மோசடிக் குற்றமுமாகும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவுனரும் தமிழினத்தை ஏமாற்றி தமிழினத்தையே கூறிட்ட தலைவருமாகிய ஜி.ஜி.பொன்னம்பலத்தின் புகைப்படத்தை தமது பிரச்சாரக் கூட்டங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்தவருடம் அவுஸ்ரேலிய வானொலி ஒன்றில் இடம்பெற்ற உரையாடலின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தால் தான் சிறிலங்கா அரசு சீனாவின் பக்கம் சாய்ந்ததென்றும் அதன் காரணத்தால் தான் விடுதலைப்புலிகளை இந்தியாவும் அமெரிக்காவும் அழித்ததென்றும் தனிநாட்டிற்கான போராட்டம் சாத்தியமில்லை” என்பது போன்றதான விசமக் கருத்துக்களை சட்டச் சொல்லாடல்கள் மூலம் பரப்பியிருந்தார்.
அது தவிர 2016 இல் நவம்பர் 27 ஐ “தமிழீழ மாவீரர் நாள்” என்று அழைப்பதை மாற்ற வேண்டும் என தங்கள் கட்சி முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைக்கு முரணான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தீவிர விடுதலைப்புலிகள் ஆதரவாளர் போன்றதான தோற்றப்பட்டை தமிழீழ மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் தீவிரமாக உழைக்கின்றனர்.
தமிழீழத்தில் தமிழர்களின் கிராமிய வழிபாட்டு முறையான “வேள்வி”யை தடை செய்ய மிக முக்கிய நபராக செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர் மணிவண்ணன் அவர்கள் “தமிழீழ தேசியத் தலைவர் மே.த.கு வே. பிரபாகரன் அவர்களும் வேள்வியை தடை செய்யப் போராடினார் தடை விதித்தார்” என்று அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். தவிர விடுதலைப்புலிகள் “சைக்கிளில்” பயணம் செய்தார்கள் எனவே “சைக்கிளுக்கு” ஆதரவளியுங்கள் என்று சீருடையுடன் ஈருருளியில் செல்லும் புலிவீரர்களின் புகைப்படத்தை முற்றிலும் விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு முரணான தேர்தலில் வாக்குக் கேட்கும் ஒரு அரசியல் கட்சியின் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளானது தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

அத்துமீறிய குடியேற்றங்கள், அரசியற் கைதிகள் விவகாரம், சிறிலங்கா இராணுவத்தின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் பொருளாதார அடக்குமுறைகள் என நாள்தோறும் நடக்கும் தமிழின எதிர்ச் செயற்பாடுகளுக்கு எதிராக தமது சட்டப் புலமையை காட்ட வக்கற்ற அப்புக்காத்தர்கள் தமிழர்களின் பாரம்பரிய விழுமியங்களை அழிப்பதில் மும்மரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சிக்கிக் கொண்ட இளைஞர்கள்
சிங்கள அரசின் அடக்கு முறைகளுக்கு ஒன்று பட்ட பலமாக அணி திரளவேண்டிய தமிழீழ இளைஞர்கள் ஒன்றுக்கும் உதவாத அரசியற்கட்சிகளின் பின்னால் சென்று தங்களுக்குள் அடிபட்டுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
தாங்கள் யாருக்கு வேலை செய்கிறோம் என்று தெரியாமலே அவர்களை வேலை செய்ய வைப்பதுதான் இஸ்ரேல் “மொசாட்டின்” பாணி. 2009 ற்குப் பின்னர் அதே போன்ற கட்டமைப்பை வடகிழக்கில் உருவாக்கி தமிழ் இளைஞர்களை நாலா பக்கமும் சிதற விட்டிருக்கிறது சிங்கள அரசு.
சிங்கள அரசு மீது ஏற்பட்டிருக்கும் வெஞ்சினமானது பரீட்சயமில்லாத புதிய தமிழ் இளைஞர் அணியை உருவாக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் ரொஹான் குணரட்ண போன்ற சிங்கள புத்திசீவிகள் தீவிரமாக வேலை செய்கிறார்கள்.
த.தே.கூட்டமைப்பு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியானது சிறிலங்கா அரசு மீது திரும்பவிடாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூலம் அறுவடை செய்தவற்கான ஓப்பரேசனை ஆரம்பித்திருப்பதாகவே வெளிப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி சிங்கள அரசு மீது அழுத்தம் கொடுக்கும்விதமான போராட்டங்களை முன்னெடுத்து பன்னாட்டுக் கவனத்தை திரும்ப வைப்பதிலும் பார்க்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அதை தமக்கான அரசியலாக்கும் திசை திருப்பலை மிகக் கச்சிதமாக செய்துவருகிறது கஜேந்திரகுமார் தரப்பு.
இன்று காணப்படும் எல்லா தமிழ் அரசியல் கட்சிகளிலும் தமிழீழ ஆதரவுள்ள இளைஞர்கள்தான் செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அணியில் பயணிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் என எந்தவொரு அரசியல் தலைவர்களும் நேர்மையாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக் கூடியவர்கள் இல்லை என்பதை இப்போது விளங்கிக் கொள்ளாதுவிடின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழுத்தடிப்பைச் செய்த குற்ற உணர்விற்குள் நீங்களும் தள்ளப்படுவீர்கள்.
கதிர்
03-01-2018
5,795 total views, 2 views today
Leave a Reply
You must be logged in to post a comment.