அதிகார போதையில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

இரத்தத்தையும் சதையும் கொட்டி விடுதலைக்காய் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அரசியலை, அதிகார போதைக்காகவும் தத்தமது சொந்த கட்சி அடையாளங்களுக்காகவும் நாறடித்து, நாற்றமெடுக்க வைத்துள்ளனர் அதிகார போதையில் அலையும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள். தமிழரசுக்கட்சி, அகில இலங்ககை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

தமிழினத்தின் மீது சிங்கள அரசு இனப்படுகொலை நிகழ்த்தி வெறும் ஆறு மாதங்களேயாயிருந்த நிலையில், விடுதலைப்புலிகளால் சீரமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற அரசியல் கட்டுமானத்தை உடைத்து வெறும் கதிரைக்காக ஆசைப்பட்டு தனது பரம்பரைக் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வெளியேறிய கஜேந்திரகுமார், வெளியேற்றம் தொடர்பில் மக்களுக்குக் கூறிய காரணம் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து தவறுகிறது” என்பதேயாகும். அந்த தேர்தலில் மக்களால் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்ட கஜேந்திரகுமார், தொடர்ந்து வந்த தேர்தல்களை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக புறக்கணிக்கச் சொல்லி மக்களிடம் தெரிவித்து வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் “ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம்” என்பதை வெளிப்படுத்தும் முகமாக மாகாணசபை தேர்தலையும் புறக்கணிக்கும் படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், “ஒற்றையாட்சியை ஆதரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதால்” அதற்கு எதிர்ப்புக் காட்டும் முகமாக தமக்கு வாக்களிக்கும் படி மறுபடியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வந்து நிற்கிறது.

“ஒரு நாடு இரு தேச கொள்கைக்கும், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டால் யாரிடமும் பதிலில்லை.

ஒற்றையாட்சியை எதிர்க்கும் நீங்கள், அரசியல் அமைப்பு 6ம் திருத்தச்சட்டம் குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை.

எல்லாம் மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றி எஞ்சிக்கிடக்கும் வாழ்வை அரச சலுகைகளோடு வாழ்ந்துவிட்டுப் போக நினைக்கும் அரசியல் போதையையே தவிர வேறெதுவுமில்லை.

2009 இன அழிப்பிற்குப் பிற்பாடு மாவீரர் எழுச்சி நாள் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்விற்கும் மக்களோடு நின்று அஞ்சலி செலுத்த முன்வராமல், தமது கட்சி அலுவலகத்திற்குள் முடங்கிக் கிடந்தது மாத்திரமல்லாமல், கார்த்திகை 27ற்குப் பதிலாக வேறொரு நாளொன்றை மாவீர்களுக்கு பொதுவான மாவீரர் நாளாக உருவாக்க வேண்டும்  என்று அறிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2017ம் ஆண்டில் மாவீர் எழுச்சி நிகழ்வுகளின் போது மக்களோடு இணைந்த பொழுதே அது ஏதோ ஒரு அரசியல் இலாபத்தை ஈட்டுவதற்கான செயற்பாடுதான் என்று மக்கள் ஊகிக்கக் கூடிய நிலையில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை உடைத்து, அந்தப் பேரவை இந்தப் பேரவை என்று மக்களை திசை திருப்பி, உச்சக்கட்டமாக வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனை தமிழினத் தலைவராக அறிவித்து, மிக மோசமான அரசியல் பித்தலாட்டங்களை ஆடிவிட்டு, இன்று இன்னுமொரு புதிய பேரவை ஒன்றை உருவாக்கி அதற்கும் தமது சைக்கிள் சின்னத்தையே சின்னமாக அறிவித்து அரசியல் செய்யும், மிகக் கேவலாமன அரசியல் கலாச்சாரம் ஒன்றை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த இனத்திற்கு காட்டியிருக்கிறார். தமது பரம்பரைக் கட்சியை கட்டியெழுப்புவதை விடுத்து,  தமிழ்த்தேசிய விடுதலைமேல்  உண்மையான பற்றிருந்திருந்தால் 2009 முதல் 2017 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மக்கள் மயப்படுத்திய தமிழ்த்தேசியத்திற்கான கட்சியொன்றை பதிவு செய்து, சின்னத்தையும் கொள்கையையும் மக்களுக்கு அறிமுகம் செய்து மக்களை மாற்றம் நோக்கி நகர்த்தியிருக்கலாம்.

அல்லது த.தே.கூட்டமைப்பிற்குள் இருந்த படி ஆளுமையை கட்டியெழுப்பி மக்களின் செல்வாக்கை அதிகரித்து அதனூடாக தமிழ்த்தேசியத்தின் பெரும் சக்தியாக த.தே.கூட்டமைப்பை தொடர்ச்சியாக வழிநடத்தியிருக்கலாம்,  மாறாக தமிழின விரோத செயற்பாடுகளை முன்னெடுத்த “அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை” தமிழினின விடுதலைக்கான கட்சிபோல் அடையாளம் காட்ட நினைப்பது பெரும் சூழ்ச்சியே . 

அது போக சரியான முறையில் மக்களை வழி நடத்தி அரசியல் இலக்கை அடைவதற்கான பாதைகளை செப்பனிட வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று பதவிக்காக வீதிகளில் கைகலப்பில் ஈடுபடுகிறது.

அரசியல் ஞானமோ, தொலைநோக்குச் சிந்தனையோ, நிர்வாகத் திறமையோ இல்லாமல், வெறுமனே வயதையும், கட்சியின் உறுப்புரிமைக் காலத்தையும், தலைமைக்கு இருக்க கூடிய விசுவாசத்தையும் மாத்திரமே கருத்தில் கொண்டு வேட்பாளர்களை மக்கள் தலைவர்களாக நிறுத்தும் இந்திய அரசியல் முறையை ஈழத்தமிழர்களிடத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழரசுக் கட்சியும் இன்றைய த.தே.கூட்டமைப்பும்.

சிங்கள தேசத்திற்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கும் என்றுமே அடிமையாக இருந்து தமிழீழ விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டடையாக இருந்துவரும் சங்கரி இன்று தமிழ்த் தேசியம் பேசுமளவிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் கையாலாகத் தனத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இப்படி போன நூற்றாண்டு அரசியல்வாதிகளால் அவமானப்பட்டு குழம்பிக்கிடப்பது ஈழத்தமிழர்களின் விடுதலை அரசியல் களம் மட்டுமல்லாது இளைஞர்களும்தான்.

இளைஞர்கள் ஒரு பகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பெரும் புரட்சியாளராகவும் இன்னொரு பகுதி சுமந்திரனை பெரும் புத்திசாலியாகவும் மேலும் சிலர் கட்சிகளின் வெறிபிடித்த ஆதரவாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இத்தனைபேரையும் அமைதியாகவும் நிதானமாவும் அவதானித்துக் கொண்டு பொறுமையோடு விடுதலை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லாத் தரப்பினரையும் நிராகரித்தால், விமர்சித்தால் யார் பின்னால்தான் செய்வது என்ற கேள்வி தவிர்க்கப்பட முடியாததே.

ஏற்கனவே காகத்தின் பல பதிவுகளில் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். நீங்கள் நம்பும் அரசியல்வாதிகளிடம் கேள்விகளை கேளுங்கள்.

  1. 6ம் திருத்தச்சட்டத்தை ஆதரிக்கிறீர்களா என்பதை வெளிப்படையாக அறிவிக்கச் சொல்லுங்கள்.
  2. சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடென்ன மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள அரசு நிராகரித்துவரும் நிலையில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையென்ன என்பதை கேளுங்கள்.
  3. திட்டமிடப்பட்ட சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளின் அழிப்புப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை சொல்லச் சொல்லுங்கள்.
  4. ஊழலற்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் திட்டப் பிரேரணையை மற்றும் அதிகாரிகளின் பொறுப்புகள், அதிகாரம் அடக்கிய கோப்பை மக்கள் முன்னிலையில் வைக்கச் சொல்லுங்கள்.
  5. வடகிழக்கில் அடுத்த 5 வருடத்திற்கான பொருளாதார கட்டமைப்புகளுக்கான திட்டம் என்ன என்பதை பகிரங்கமாக சொல்லச் சொல்லுங்கள்.
  6. வடகிழக்கில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகள் சம்பந்தமான திட்டம் என்ன என்பதை சொல்லச் சொல்லுங்கள்.

ஆகக் குறைந்தது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த 6 கேள்விகளுக்குமாவது நீங்கள் நம்பும் அரசியல்வாதியிடம் பதில் இருக்கிறதா என்றுபாருங்கள்.

விடுதலைக்கான அரசியலுக்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். அந்த திட்டமிடல்தான் மக்களை சரியான கட்டமைப்புக்குள் தயார்ப்படுத்த முடியும். வெறுமனே காழ்ப்புணர்சி அரசியலையும் “நான் சரி அவன் பிழை” என்ற அரசியலும் தமிழீழ மக்களுக்கு எந்தவொரு சந்தர்பத்திலும் நன்மை விளைவிக்கப்போவதில்லை மாறாக சிங்கள மற்றும் இந்திய அந்நியர்களுக்கு தமிழீழ மக்களை பிரித்தாள உதவும்.

கதிர்

17-12-2017

படங்கள்: இணையம்

1,609 total views, 3 views today

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.