புவிசார் அரசியலும் தமிழீழமும் (Geopolitics & Tamileelam)- -தம்பியன் தமிழீழம்-

தற்போதெல்லாம் புவிசார் அரசியல் பற்றிப் பேசுவது அரசியலில் ஆழ்ந்த புரிதலற்றோரிடத்தில் கவர்ச்சிகரமானதாகப் பார்க்கப்படுவதோடு இது குறித்து பேசுபவர்கள் இது குறித்து பரந்தளவில் ஆய்வறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். ஐ.நாவிடம் போய் முக்கிப் பெற முடியும் என்று சொல்லப்பட்ட தமிழர் உரிமைகள் (அந்த மடைமை வெளிப்பட்டுப்போக) இப்போதெல்லாம் புவிசார் அரசியலில் சித்து விளையாட்டுக் காட்டிப் பெற்று விடலாம் என நம்பிக்கையூட்டித் தம்மை மீட்பராகக் காட்டப் பலருக்குப் பயன்படுகின்றது.

எரித்திரியா தனிநாடாகியதில் செங்கடல் அரசியலும், தென்சூடான் தனிநாடாகியதில் அந்தப் பகுதியில் இருக்கும் பெருவளமும் ரசியாவின் உறுதிப்பாடு எக்காலத்திலும் குலைந்திருக்க உதவியாயிருக்கத் தக்க பகுதிகளில் மேற்குலகு தமது மேலாண்மையைக் காட்டுவதின் பின்னால் சாத்தியமாக்கப்பட்ட கொசாவோ, மொன்ரி நீக்ரோ போன்ற தனிநாடுகள், பாகித்தானில் குவாடர் துறைமுகத்தினூடாக தொடர்வண்டி, தரைவழி என்பனவற்றினூடாக சீனா தனது மலாக்கா நீரிணையூடான போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை அமைக்கும் போது  அமெரிக்க காங்கிரசில் பல்கித்தான் தேசிய இன விடுதலைப் போராட்டம் குறித்துத் தீர்மானம் இயற்றியமை, இந்தோனோசியாவின் எண்ணெய் வளத்தில் 40% இனைத் தனதாகக் கொண்டுள்ள ஆச்சே மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கு மேற்காற்றிய பங்கு என்று அடுக்கிச் செல்லக் கூடிய தேசிய இன விடுதலைப் போராட்டங்களும் புவிசார் அரசியலும் என்ற ஆய்வுப் பகுதியானது (இது குறித்து அடுத்த கட்டுரையில் முழுமையாக எழுதப்படும்) முழு அளவில் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் வெறுமனே ஒரு ராடர் நிலையமும் எரிபொருள் நிரப்பிச் செல்ல வழிவகை செய்யக் கூடியதாய் மட்டுமே இருக்கக் கூடிய இடங்களுக்கு செங்கடல், மலாக்கா நீரிணை போன்ற புவிசார் அரசியலில் தவிர்க்க முடியாத இடங்களுக்குக் கொடுக்கப்படும் முதன்மையையும் தாண்டி கொடுக்கப்படும் அறிவிலித்தனம் மேம்பட்டு விட்டமையால் தமிழீழமும் புவிசார் அரசியலும் என்ற விடயத்தை விளங்குவதற்காக இந்துமாகடலின் புவிசார் அரசியல் குறித்து இப்பத்தி அதிக முதன்மையளிக்கின்றது.

இந்துமாகடல்  பகுதியில் (Indian Ocean Region) உலகின் 1/3 பங்கு மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். இந்த இந்துமாகடல் பகுதியானது வடக்கே இந்திய துணைக்கண்டத்தாலும் (Indian Sub-continent) மேற்கே ஆபிரிக்கா கண்டத்தாலும் கிழக்கே அவுத்திரேலியா (Australia) கண்டத்தாலும் தெற்கே தெற்குக் கடலெனப்படும்  அந்தாட்டிக்கா பெருங்கடலாலும் (Antatica Ocean) எல்லைப்படுத்தப்படுகிறது.

இந்த இந்துமாகடலை (Indian Ocean) அரேபிக்கடல் (Arabian Sea) மற்றும் வங்காள விரிகுடாக் கடல் (Bay of Bengal) என இரு பெரும் பிரிவாக குறித்து நோக்குவது வழமை.

அரபிக்கடலானது (Arabian Sea) வடக்கே பாகித்துதான் (Pakistan) மற்றும் ஈரானினாலும் (Iran) கிழக்கே இந்தியாவாலும் மேற்கே சோமாலியாவின் வடகிழக்கு மற்றும் அரபிக்குடாவாலும் (Gulf of Arabia) எல்லைப்படுத்தப்படுகிறது. மும்பையிலுள்ள சவகர்லால் நேரு துறைமுகம், பாகித்தானிலுள்ள குவாடர் (Gwadar) மற்றும் கராச்சி (Karachi) துறைமுகங்கள் மற்றும் ஓமானிலுள்ள சலலா துறைமுகம் என்பன அரபிக்கடல் பகுதியிலுள்ள முதன்மையான துறைமுகங்களாகும். யேமனின் சகோட்றா (Socotra), ஓமானின் மசிரா (Masirah) மற்றும் இந்தியாவின் லக்சதீப் (Lakshdeep) போன்ற தீவுகள் இந்த அரபிக்கடலில் உள்ள தீவுகளாகும்.

 

 

 

 

இந்த அரபிக் கடலில் உள்ள ஓமான் வளைகுடா (Gulf of Oman) மற்றும்  பேர்சியன் வளைகுடா (Persian Gulf) என்பன கோர்மசு நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது.

செங்கடல் (Red Sea) மற்றும் ஆடென் வளைகுடா (Gulf of Aden) என்பன பாப்- எல் மண்டெப் எனும் ஒடுங்கிய நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது.

 

இந்த செங்கடலானது சுயச்சு கால்வாய் (Suez Canal) மூலம் ஐரோப்பாவுக்கு இணைக்கப்படுகிறது. கோமர்சு நீரிணை (Strait of Hormuz), பாப்அல் மண்டெப் (Bab el- Mandab) மற்றும் சுயச்சு கால்வாய் (Suez Canal) போன்றனவே ஐரோப்பா, மத்திய கிழக்கு (Middle East) மற்றும் தெற்காசியா போன்றவற்றை இணைக்கும் குறுகிய பாதைக்கு (Shortest Route) வழிகோலுகிறது.

சீசெல்சு (Seychelles), கொமொரசு (Comoros), மடகச்கார் (Madagascar) மற்றும் மொரிசியசு (Mauritius) போன்ற புவியியல் முதன்மைவாய்ந்த தீவுகள் இந்துமாகடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன. கேப் ஒவ் அகல்காசு (Cape of Agulhas) என்னும் இடம் இந்துமாகடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்துமாகடலின் நடுப் பகுதியில் மாலதீவு தீவுக் கூட்டம் (Maldives) மற்றும் பிரித்தானியாவின் இந்துமாகடல் பகுதியான டிகோகார்சியா (Diego Garcia) தீவுக்கூட்டமும் அமைந்துள்ளன. பிரித்தானியாவால் தனது நாட்டுக்கு வெளியே தனக்குச் சொந்தமாக்கியுள்ள தீவுக் கூட்டமான டிகோகார்சியா எனும் இடமானது அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவுக்கும் இராணுவத்தளமாக அமைந்திருக்கின்றது.

இதில் உள்ளயசுரிசு முகாம் (Camp Justice)எனும் அமெரிக்காவின் மிகப் பெரும் கடற்படைத்தளமானது இந்துமாகடலில் அமெரிக்காவின் மேலாண்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பிரித்தானியாவுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ள டிகோகிரேசியா என்ற இந்த தீவுக்கூட்டமானது 1966 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவிற்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய விரிகுடாவாகிய வங்காள விரிகுடா கடலானது (Bay of Bengal) இந்துமாகடலின் வடகிழக்குப் பகுதியாக இருக்கிறது. வங்காள விரிகுடா கடலானது வடக்கே வங்காளதேசினாலும் (Bangladesh) கிழக்கே பர்மாவினாலும் (Myanmar) மேற்கே இலங்கைத்தீவு மற்றும் இந்தியாவினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, விசாகப்பட்டிணம், கல்கத்தா மற்றும் சிட்டாகோங் என்பன இப்பகுதியிலுள்ள முதன்மையான துறைமுகங்களாகும்.

இந்த வங்காள விரிகுடா கடலில் உள்ள மிகப் பெரிய தீவுக் கூட்டம் இந்தியாவிற்குச் சொந்தமாக்கப்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டமாகும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்திற்கு வடக்கே மியான்மாருக்குச் சொந்தமான கொகோ தீவும் (Coco Island) மேற்கே வங்காள விரிகுடா கடலும் தெற்கே இந்தோனேசியாவுக்குச் சொந்தமான சுமாத்திரா தீவும் அமைந்துள்ளன. நிக்கோபார் தீவுக்கூட்டத்திலுள்ள பெரிய நிக்கோபார் (Great Nicobar) எனப்படும் பகுதியானது மலாக்கா நீரிணைக்கு (Malacca Strait) மிக அருகாமையிலுள்ளது. பேர்சியன் வளைகுடா மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் அண்ணளவாக 85% ஆன கச்சா எண்ணெய் கோமர்சு நீரிணையூடாகப் பயணித்து மலாக்கா நீரிணையூடாக சீனா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

550 மைல் நீளமான மலாக்கா நீரிணையானது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுக்கும் மலேசியா குடாநாட்டிற்கும் இடையே இருக்கும் மிகவும் ஒடுக்கமான நீரிணையாகும். இந்துமாகடலையும் பசுபிக்மாகடலையும்  இணைக்கும் மிகக் குறும்பாதையாகவும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் வளத்தை ஏற்றி வருவதற்கு சீனாவுக்கு இருக்கும் ஒரேயொரு பாதையாகவும் மலாக்கா நீரிணை இருப்பதால் உலகின் கடற்பாதைகளில் மிகவும் முதன்மை வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. உலகின் 40% ஆன வணிகமும் உலகின் 20% ஆன எண்ணெய் வணிகமும் இந்த மலாக்கா நீரிணையூடாகவே நடைபெறுகின்றது. 70%- 80% வரையிலான  சீனா மற்றும் யப்பானின் எண்ணெய் இறக்குமதி இந்த மலாக்கா நீரிணாயூடாகவே நடைபெறுகின்றது. மலாக்கா நீரிணையூடாக வரும் கச்சா எண்ணெய் சிங்கப்பூர் மற்றும் மலேசிய துறைமுக முனையங்களில் (Terminals) இறக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆசியச் சந்தைக்கு பெற்றோலியப் பொருட்களாக தென்சீனக்கடல் (South China Sea) மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. மீதிக் கச்சாய் எண்ணெய் (Crude Oil) தென்சீனக் கடல் மூலம் சீனா, யப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் தென் சீனக்கடல் மூலம் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 15% தென்கொரியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கட்டார், மலேசியா, இந்தோனேசியா மற்றும் அவுத்திரேலியா போன்றவற்றிலிருந்து வரும் திரவ இயற்கை எரிவாய் வணிகத்தின் அரைப்பங்கு தென்சீனக்கடலூடாக சீனா, யப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. அவுத்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற உலகின் நிலக்கரி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளிலிருந்து வரும் நிலக்கரியானது தென்சீனக் கடலினூடாகவே உலகெங்கிற்கும் செல்கின்றது. இதனாலேயே ஆசியாவின் வணிகத்தில் தென்சீனக் கடல் (South China Sea) முதன்மைப் பங்கு வகிக்கின்றது.

எனவே தான் சீனாவானது மலாக்கா நீரிணை குறித்து மிகுந்த உயிர்த் துடிப்புக் கொள்கின்றது. தொழிற்துறையில் பருத்து நிற்கும் சீனாவிற்கு மலாக்கா நீரிணையூடான போக்குவரத்தில் ஏதேனும் தடங்கல் நேரின் அது அதற்கு மிகப் பெரும் ஆற்றல் நெருக்கடியைக் கொடுக்கும்.

எல்லைச் சிக்கலாகச் சொல்லப்பட்டு 1962 இல் நடந்தேறிய சீன- இந்தியப் போரிற்கான மெய்க் காரணமே சீனாவின் மலாக்கா நீரிணையூடான கப்பற் போக்குவரத்தில் ஏற்பட்ட குறுக்கீடுகள் தான். இதனால் சீனாவானது இந்துமாகடலில் உள்ள துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகளைச் செய்வதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது. இதற்கான வாய்ப்பு எங்கு கிடைக்கிலும் அங்கு ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு வேலையைத் துவங்கி விடுகிறது சீனா. அந்தமான் தீவுக் கூட்டத்திற்கு மிக அருகாமையிலுள்ள மியான்மாருக்குச் சொந்தமான கொகோ தீவானது கண்காணிப்புத்தளம் அமைப்பதற்காக சீனாவுக்கு 1994 ஆம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

எனினும் நார்கடோம் தீவு எனப்படும் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்திலுள்ள தீவில் இருக்கும் இந்தியாவின் மிக வலுவான ராடர் நிலையத்தினால் (Radar Station) இந்தப் பகுதியில் சீனாவினால் செய்யக் கூடிய ஒவ்வொரு சிறிய நகர்வுகளையும் துல்லியமாகக் கண்காணிக்க இந்தியாவுக்கு இயலுமானதாயிருப்பது இந்தியாவின் சீனாவை மேவிய இந்துமா கடல் மேலாண்மையை உறுப்படுத்துகிறது.

தொழில்மயமாக்கத்தின் பின்னர் எண்ணெய் வளமானது நாடுகளின் பொருண்மியத்திற்கான மூல வளமாகியது. உலகின் 40% கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெறப்படுகிறது. உலகின் 35% கடல் வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதி கோர்மசு நீரிணை (Strait of Hormus) மூலமே இந்தியா, யப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

572 தீவுகளைக் கொண்ட தீவுக் கூட்டமான இந்தியாவிற்குச் சொந்தமாக்கப்பட்ட அந்தமான் நிக்கோபாரானது மலாக்கா நீரிணையை மிக நெருங்கியவாறு அமைந்துள்ளது. இந்தத் தீவுக் கூட்டமானது ஆண்டுக்கு 60,000 இக்கு மேற்பட்ட வணிகக் கப்பல்கள் செல்லும் வங்காள விரிகுடாக் கடலில் (Bay of Bengal) இந்திய மேலாண்மையை உறுதிப்படுத்த இந்தியாவிற்கு உதவுகின்றது. இப்படியாக தென்கிழக்காசியாவிலும் தனது புவிசார் ஆளுகையை ஏற்படுத்த வல்லதாய் அமைந்திருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் முப்படைகளையும் உள்ளடக்கிய பாரிய படைத்தளத்தை இந்தியா அமைத்து வைத்துள்ளது. இதனாலும் மற்றும் 7517 கிலோ மீற்றர் நீளமான இந்தியாவின் கடல் எல்லையினாலும் (Coastal Line) அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்துமாகடலின் பேராளுமையாக இந்தியா வளர்ந்த நிலையிலிருக்கிறது.

சீசெல்சு, அகலேகா மற்றும் மொரிசியசு தீவுகளில் தனது கடற்படைத் தளத்தை அமைப்பதற்கான இணக்கப் பேச்சுகளை முடித்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டது இந்தியா. ஏலவே மடகசுகாரில் தனது கண்காணிப்புத் தளத்தை அமைத்துள்ள இந்தியா இந்துமாகடலில் நடைபெறுவனவற்றை உற்று நோக்கி வருகின்றது.

எனினும், மியான்மார், பங்காளதேசு, இலங்கைத்தீவு, மாலதீவு, மொரிசியசு, சீசெல்சு மற்றும் பாகித்தான் ஆகிய நாடுகளுடன் தனது கடல்சார் உறவுகளை வளப்படுத்தி தனது கடல்வழிப் பாதையை வளப்படுத்த சீனா வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தியே வருகின்றது. சீனா தலையால் நடந்தாலும் இந்துமாகடலில் மலாக்கா நீரிணையைக் கடக்காமல் சீனாவிற்குள் நுழைய முடியாத நிலையே சீனாவின் புவிசார் நிலை.

இருந்தபோதும், மலாக்கா நீரிணையூடான கடல்வழிப் பாதைக்கு மாற்று வழியாக பாகித்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து தரைவழி மற்றும் தொடர்வண்டிப் பாதை (Railway Route) வழியாக சீனாவின் தெற்கு சின்சியாங் தொடர்வண்டிப்பாதையை (Southern Xinjiang Railway) அடையக் கூடிய CPEC (China- Pakistan Economic Corridor) என்கின்ற திட்டமானது கட்டுமாணப் பணிகளில் துரித வேகம் எடுத்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான 62 பில்லியன் அமெரிக்க டொலர் செலவை முழுவதுமாக சீனாவே ஏற்றுள்ளது.

சீனாபாகித்தானின் CPEC இக்குப் பதிலடியாக ஈரானின் சாபகார் (Chabahar) துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளிற்கான ஒப்பந்தத்தில் ஈரானும் இந்தியாவும் கைச்சாத்திட்டு இந்தப் பணி பெரும்பாலும் நிறைவுறும் தறுவாயிலுள்ளது. இந்தியாவினால் தனது நாடு கடந்து அதிக பொருட் செலவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணி இதுவென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த சாவகார் துறைமுகமானது ஆப்கானித்தானுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இந்தியாவிற்கு வழிவிடுகிறது.

சியா முசுலிம் நாடான ஈரானுக்கும் சன்னி முசுலிம் நாடுகளான சவுதி அரேபியா, பஃரேன், கட்டார் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்கிடையிலும் இந்த கோர்மசு நீரிணையூடான கடற்பாதை அமைந்துள்ளதால், அந்த கடற்பாதையில் தடங்கலை ஏற்படுத்த இயலும் தன்னுடைய இயலுமையைக் கூறி ஈரான் மற்றைய அரபு நாடுகளை மிரட்டியே வருகிறது. அவ்வாறு ஒரு தடங்கல் இந்தக் குறித்த கடற்பாதையில் நேரின் ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வரத்து இல்லாமல் போவதுடன் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி மிகப்பெருமளவில் சரிந்து போகும். தனது கச்சாய் எண்ணெய் இறக்குமதியில் 18% இனை இந்த கோர்மசு நீரிணையைத் தனது கடல்வழியாகப் பயன்படுத்தி அமெரிக்கா மேற்கொள்கின்றது. இதனாலேயே அமெரிக்கா தனது வலிமைவாய்ந்த கடற்படையை பஃரேனில் நிறுத்தியுள்ளது. கோர்மசு நீரிணை மூலமான தடங்கலற்ற கப்பற் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இங்கு நிலை கொண்டுள்ளது. இந்தக் கடற்பாதையில் ஏதேனும் தடங்கல் ஏற்படின் உலகின் பெருமளவான தொழிற்துறைகள் முடங்கிவிடும் என்பதுடன் கச்சா எண்ணெயின் விலை உச்சமாகும். இதற்கான மாற்றுக் கடற்பாதை ஆயிரக்கணக்கான மைல் தொலைவு அதிகமாகிவிடும்.

அமெரிக்கா டியிபோட்டியில் (Djibouti)லெமொனியர் (Camp Lemonnier)என்ற மிகப் பெரும் இராணுவ முகாமை அமைத்து நிலைகொண்டுள்ளது. இதுவே ஆபிரிக்காவிலுள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளமாகும். இந்த டியிபோட்டி எனும் நாடானது ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் இணைக்கும் பாப்அல் மண்டாப் நீரிணைக்கு மிக அருகிலுள்ளது. இந்த நீரிணையூடாக உலகின் 18% திரவ இயற்கை எரிவாயு (Liquid Natural Gas) மற்றும் 4% கச்சா எண்ணெய் ஆகியன போக்குவரத்துச் செய்யப்படுகின்றன. இதனூடாகவே பேர்சியன் வளைகுடாவின் இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருட்கள் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்குச் செல்கின்றது.

இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வுப் பயணத்தில் இயற்கை எரிவாயுப் படுக்கைகள் மற்றும் கனிம வளங்கள் வங்காள விரிகுடாக் கடற்படுக்கைகளில் மிகுந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவற்றை அகழ்வதற்கான இடமாக வங்காள விரிகுடாக் கடல் எதிர்காலத்தில் முதன்பெற்று வரலாம். அதற்கு சில பத்தாண்டுகள் ஆகலாம். அப்போது வளம் மிகுந்து இலங்கைத் தீவு புவிசார் நலனுக்கான முதன்மைப் பங்கை ஓரளவு பெறலாம். அது தமிழீழம்  அமைக்கும் அளவிற்கு மாற்று வழியில்லாச் சிக்கலாக மேற்குலக மற்றும் இந்தியாவுக்கு இருக்கும் என நினைப்பது எவ்வாறான குருட்டு நம்பிக்கையென இதுகாலவரையிலான அரசியலை உள்வாங்கியோருக்குப் புரியும்.

134 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா சீனாவின் பொருட்கள் விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாகும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களே சீனாவின் பொருட்களிற்குச் சந்தை வழங்கும் தரகு முதலாளிகள் என்று கூறிவிடக் கூடியளவிலேயே இருக்கின்றனர். எனவே இந்தியாசீனா முறுகல் நிலையென்பது இந்தியாவை உடைத்துத் தேசிய இனங்கள் விடுதலையடையப் பயன் தராது. இதனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. என்னதான் மாற்றுப் பாதையை தரை வழி, தொடர் வண்டி வழி கொண்டு தலைகீழாய் நின்று அமைத்தாலும் கடல்வழி போல வணிகமாற்ற வேற எந்த வழியும் உதவாது. சீனா உலகின் முதலாளித்துவ பொருண்மிய வல்லரசாகலாம். ஆனால் இந்து மாகடலில் அமெரிக்காவும் அதனது பேட்டைரவுடியானஇந்தியாவுமே மேலாண்மைச் சக்திகள். சீனா இந்தியாவைப் பெருமளவில் பகைத்து மலாக்கா நீரிணையால் வணிக மாற்றுவதில் சிக்கலினை ஏற்படுத்திக் கொள்ளாது. மாறி மாறித் தமது மேலாண்மையை நிலைநிறுத்த இப்படியே போட்டி போட்டுக் கொண்டு முதலாளித்துவ பொருளாதார முறைமை மாறாமல் வணிகமாற்றுவார்கள்.

கோமர்சு நீரிணை (Strait of Hormuz), பாப்அல் மண்டெப் (Bab el- Mandab), சுயச்சு கால்வாய் (Suez Canal) மற்றும் மலாக்கா நீரிணை (Malacca) போன்று ஏற்புடைய மாற்றுவழி, புவிசார் இரீதியாகவே இல்லாத இந்த புவிசார் முதன்மைப் புள்ளிகளுக்கோ அல்லது விட்டுச் செல்ல முடியாத இந்த முதன்மைப் பகுதிகளில் மேலாண்மை செய்ய வழிசெய்யும் இடங்களோ புவிசார் அரசியலில் தீர்மானகரமான மாற்றத்தை அதன் புவிநிலை சார்ந்து ஏற்படுத்த வல்லதாயமையும். அப்படியான இடங்களில் புவிசார் நலனடிப்படையிலான பேரம் பேசல்கள் தனிநாடமைப்பது வரை கொண்டு செல்ல இயலுமானதாயிருக்கும். அப்படியொரு வாய்ப்புத் தமிழீழமமைப்பதில் இல்லை என்ற கசப்பான உண்மையைச் சொல்லியாக வேண்டும். எமக்கு இருக்கும் ஒரேயொரு வழி தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரு தமிழர் தேசங்களில் மக்கள் மயப்பட்ட புரட்சிப் போராட்டமே. இதற்கு உலகவாழ் தமிழரனைவரும் உழைக்க வேண்டியதே இப்போதிருக்கும் ஒரே வழி. மற்றைய படி புவிசார் அரசியல் பேசுவதும் ஐ.நா மன்றம் போவதும் ஒரே மாதிரியான இரு வேறு நிகழ்வுகளே. இது தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர எக்காலத்திலும் உதவாது. இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமாகிய சந்தை துண்டு துண்டாக உடைந்து தேசிய இனங்கள் விடுதலையடைந்தாலேயே தமிழீழம் இந்த உலகில் மலர உறுதியான வாய்ப்புண்டு.

-தம்பியன் தமிழீழம்-

2017-12-09

தொடரும்…….

(இலங்கைத் தீவில் சீனப் பூச்சாண்டி இந்தியாவின் மேலாதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கே என்ற விடயத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போம்)

 

 

 

Loading

(Visited 101 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply