அரசியல் செய்வதாகக் கூறுவோரின் அரசியல் பேதமையின் விளைவே அவலமான அடையாள அரசியல்- இது தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் புதிய ஏற்பாடு – அருள்வேந்தன்–

மக்கள் சார்ந்த சமூகச்சிக்கல்கள் முதன்மைச் சிக்கல் மற்றும் அடிப்படைச் சிக்கல் என்பனவாகும். சிங்கள பேரினவாதத்தாலும் இந்திய மேற்குலக கூட்டுச் சூழ்ச்சியினாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி இன்று இறைமையை இழந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு உள்ளாகி, சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கப்பட்டு நிற்கும் நிலையே தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கல். சாதிய ஏற்றத்தாழ்வுகள், பொருண்மிய ரீதியிலான வர்க்க வேறுபாடுகள், பெண்ணுரிமை மறுக்கப்படுதல், பிரதேச வாதம் என தமிழர்களின் அடிப்படைச் சிக்கல்களும் நீள்கின்றன.

அடிப்படைச் சிக்கல்களை முதன்மைப்படுத்தி அவற்றைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை அரச இயந்திரமும் அதற்கு முழு ஒத்துழைப்புகளையும் வழங்கும் இந்திய மேற்குலக கூட்டுச் சூழ்ச்சியும் என்ற முதன்மைச் சிக்கலை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் புரட்சிகரத் தமிழீழத் தமிழ்த் தேசமாக  ஒன்றிணைவதைத்  தடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட வேண்டிய தேவை ஒடுக்குமுறையாளருக்கு உண்டு.

இப்படி அடிப்படைச் சிக்கல்களை முதன்மைப்படுத்துவதற்கு ஒடுக்குமுறையாளன் கையாளும் நேரில் ஒடுக்குமுறைக் கருவியே அடையாள அரசியல் எனலாம். இப்படியான அடையாள அரசியலை முன்னெடுக்க அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தமிழர் தாயக மண்ணில் களமிறக்கப்படுகின்றன. இவர்கள் சிவில் சமூக அமைப்பு, உள்ளூர் சமூக அபிவிருத்திக் குழுக்கள் போன்ற பெயர்களிலும் களமிறக்கப்படுவதோடு தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் அரசியல் அதிகாரம் குறித்த சிக்கல்கள் குறித்த பெருமெடுப்பான வேலைத் திட்டங்கள் நுண்மையாகத் தவிர்க்கப்படும் பாசாங்கு அரசியல் செய்ய வழி செய்யப்படுகிறது. அடிப்படைச் சிக்கல்களை கூர்மைப்படுத்தி முதன்மைச் சிக்கல் நோக்கிய மக்களின் புரட்சிகரத் திசை வழியை மாற்றுவதற்கு ஏற்ற கருத்தேற்றங்கள் நுண்மையாக படைப்பாளிகளிடத்தில் செய்யப்படுகின்றன. அப்படியான அடையாள அரசியலிற்குகந்த படைப்புகள் (பெண்ணியம், சாதிச் சிக்கல், பிரதேசவாதம், தலித்தியம்) விருது வழங்கித் தூக்கிக் கொண்டாடப்படுவதன் மூலம் பல்வேறு கருத்துத் தளங்களில் இவை பொதுக் கருத்தியலாக்கப்படுவது ஊக்கமளிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது.

தமிழர் என்ற பேருணர்வு உருவாகுவதைத் தடுக்க தலித்தியம் என்ற அடையாள அரசியலை உள்ளிறக்குவதோடு இப்படியான தமிழ்த் தேசிய வெறுப்பரசியலை உமிழ்ந்து குறுக்குச் சால் ஓட்டத்தைத் தொடர்ச்சியாகச் செய்ய ஊடகர்கள் என்ற பெயரிலும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரிலும் மாந்த உரிமையாளர்கள் என்ற போர்வையிலும் பலர் களமிறக்கப்படுகிறார்கள். இந்தக் களமிறக்கலில் இந்திய உளவுத் துறையும் அதனது அலுவலகங்களில் ஒன்றான இந்தியத் தூதரகமும் முன்னின்று உழைக்கின்றன. அத்துடன் அடையாள அரசியலை மேலோங்கச் செய்ய வழி செய்யத் தக்கவாறாக பல்வேறு கருத்திட்டங்கள் விதவிதமாகத் தலைப்பிட்டு மேற்குலக நிதி இறைப்புகளுடன் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் களமிறக்கப்படுகின்றன.

2009 இன் பின்பு தமிழீழ தாயக மண்ணில் களமிறங்கிய அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெரும்பாலானவை உளவியல் சமூக திட்டங்கள் (Psycho Social Projects) என்ற கருப்பொருளில் பல திட்டங்களை முன்னெடுத்தன. தமது மண்ணிழந்து, உறவுகளை இழந்து, உடல் அவயங்களை இழந்து, வாழ்வாதாரமிழந்து எமது மக்கள் சொந்த மண்ணில் ஏதிலிகளாக இருக்கும் போது, அவர்களின் நிலங்கள் இராணுவத்தால் வல்வளைப்புக்குள்ளாகி, உறவுகள் சிங்கள இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருக்கும் போது அவர்கள் எதை இழந்தார்களோ அவற்றிற்கான மூல காரணத்தை அகற்றிச் சிக்கல்களைத் தீர்க்க முனையாது, மாறாக அதனை மழுங்கடித்து மறைப்பதற்காக ஏதோ எமது மக்கள் இழந்தது இவையொன்றுமில்லை உளவியல் சமநிலையை மட்டும் என்றாற் போல காட்டி, எமது மக்களிடத்தில் எழும் நியாயமான வெஞ்சினத்தையும்  ஒடுக்குமுறையாளனிற்கு எதிராக வஞ்சினமாக நெஞ்சிலிருக்கும் தமிழ்த் தேசிய மெய்யுணர்வையும் உளநோயாகக் காட்டி அவற்றினை இல்லாதொழித்து அடக்குமுறையாளனின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு எமது மக்களின் அடக்குமுறைக்குள்ளாகி அவதியுறும் உண்மை நிலை மடைமாற்றம் செய்யப்பட்டு மக்களின் நியாயமான தேசிய உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

அரசுசாரா நிறுவனங்களின் நிதியைப் பெறுவதற்கான கட்டளை விதிகளுக்கேற்றாற் போல திட்டங்களை வரைவு செய்து நிதிபெற முயலும் உள்ளூர் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உண்மையில் செய்வது என்னவெனில் அடையாளச் சிக்கல்களை சமூகத்தில் முதன்மைப்படுத்தி ஒரு தேசமாக எமது மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பதே. இவ்வாறான தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளால் மக்கள் தமது குறைகளை வாய்விட்டுச் சொல்லிச் சலுகைகள் பெறும் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வைக்கப்படுவதன் மூலம் அவர்கள் உரிமைகள் தொடர்பான செல்நெறிகளும் அவர்களுடன் மரபுரீதியாகக் கூடப் பிறந்த விடுதலை அற உணர்வும் மழுங்கடிக்கப்படுகிறது. மக்களை அரசியற் தெளிவூட்டிப் புரட்சிகர சக்திகளாக அணி திரட்டி சிங்கள பௌத்த ஒடுக்கும் தேசியத்திலிருந்து விடுதலை பெற உழைத்தவர்களும், உழைக்க வேண்டியவர்களும், உழைக்கக் கூடியவர்களும் அரசுசாரா தொண்டு நிறுவனம் போல செயற்படும் தகைமைகளை வளர்ப்பதோடு அதற்கான சிந்தனையில் மட்டும் அலைபவர்களாக சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் எமது மக்களிடத்தில் வலம் வருகின்றனர்.

சமூக நலனில் அக்கறை கொள்வது போல் உள்ளிறங்கி சிறுபகுதியினருக்குச் சில நன்மைகளை ஏற்படுத்தி, மக்களை துண்டு துண்டுகளான அணிகளாக்கி, தமிழ்த்தேசிய அரசியலை துண்டு துண்டாக சிதறடித்து பேரினவாதம் காக்கப்படுவதனை உறுதிசெய்பனவாகவே இந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குறித்த ஒரு பிரிப்பின் அபிவிருத்தி என்ற போர்வையிலான அரசுசாரா தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அடையாள அரசியல் இருக்கிறது. இந்த அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அடையாளம் சார்ந்த கருத்திட்டங்களைச் செயற்படுத்துவதன் மூலம் அடையாளம் சார்ந்த மக்கள் திரட்டல்களைச் செய்து தேசமாகத் திரளும் ஒற்றுமை குலைக்கப்படுகிறது. (எனினும் ஒடுக்குமுறைக்காளான மக்கள் உருவாக்கும் இயக்கங்கள் அடையாளம் சார்ந்திருப்பினும் அதனை வேறுபடுத்திப் பார்க்க வேண்டியிருப்பதனுடன் அத்தகைய ஒரு நிலைக்கு அந்த மக்களை இட்டுச் சென்ற சமூகத்தில் வன்முறைகொண்டேனும் தீவிர சமூக மாற்றத்தை உருவாக்கி அடையாள ஒன்றிணைவிற்கான அடிப்படைகளை இல்லதொழிக்க வேண்டும்). இப்படியான என்.ஜி.ஓ பாணியிலான தொடர்ச்சியான செயற்பாடுகளின் நீட்சியினால் விடுதலைக்காக போராட முனையும் இன்றைய இளந்தலைமுறை ஒரு புரட்சிகர அமைப்பினைக் கட்டியெழுப்பக் கூடிய வழியும் அதன் செல்நெறிகளாக அமைய வேண்டிய விடயங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளும் வழியில்லாமல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் போல ஒன்றையே அவர்களால் நிறுவ இயலுமானதாக இருக்கப் போகின்றது. அதாவது, இதனது அரசியல் செல்வழியைப் பற்றிக் குறிப்பிடுவதானால், நிதி பெறும் தேவைக்காக நிதி வழங்குநர்களின் கட்டளை விதிகளுக்கேற்றாற் போல திட்ட வரைபு கொடுப்பதற்காகவே அடையாள அரசியல்களை நேரில் வகைகளில் அரசியலாக்கி ஈற்றில் தமிழ்த் தேசிய அரசியலிற்கு குழிபறிக்கும் அரசியல் பேதமைகளாவர். இப்போதெல்லாம் புலம்பெயர் தமிழர்களும் தங்களது அரசியல் வரட்சியின் பாற்பட்ட செயலூக்க முயற்சியால் ஏறத்தாழ அடையாள அரசியலுக்கான நிதி வழங்குநர்களாகி விட்டனர். இந்த நுண்ணரசியலின் மோசமான விளைவுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் எமது சமூகம் ஒரு என்.ஜி.ஓ (NGO) சமூகமாக உருவாகி வருவது கேடிலும் கேடானது. இப்படியான சிந்தனையாக்கமே இன்று புரட்சிகரமாக இலக்கினை அடையும் வரை போராட வேண்டிய சிக்கல்களுக்கெல்லாம் அடையாளப் போராட்டங்கள் செய்யும் பழக்கத்தை எமது மண்ணில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. மாவீரர்களின் ஈகங்களுக்கு மதிப்பளித்தலென்பது அவர்கள் எந்த இலட்சிய நோக்கிற்காகப் போராடினார்களோ அதற்காகப் போராடி அதனை அடைவதே என்றிருக்கையில், ஒடுக்குமுறையாளனின் நல்லெண்ணத்தை வென்று நினைவேந்தலைச் செய்து அதனை புரட்சிகர ஒன்றிணைவாகக் காட்டுவது போன்ற உளநிலைக்கும் தொடர்ச்சியான என்,ஜி,ஓ வகை செயற்திட்டங்களே காரணமாகவிருக்கிறது. இப்படியான நினைவேந்தல் எமது மக்களிற்கு ஆறுதலளித்தாலும், அந்த மாவீரர்களின் ஈகம் சரிவரப் புரிந்துகொள்ளப்பட்டு அவர்கள் விட்டுச் சென்ற இலட்சியத்தை நோக்கி புரட்சிகமாகப் பயணிப்பதற்கான செயலாக்க உறுதிகொள்ளும் நினைவேந்தலாக அமையாமல் அதனை ஒரு சடங்காக்குதலின் பின்னாலுள்ள சூழ்ச்சியினைப் புரிந்துகொள்ள எமது மக்கள் தம்மை புரட்சிகரமான முற்போக்குச் சக்திகளாக வளர்த்தெடுக்க வேண்டும்.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் இருக்கின்றது. இதனடிப்படையில் தேசிய இனங்களிற்கே உரித்தான தன்னாட்சி அடிப்படையில் தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்குண்டு. இருந்தும், தமிழர் தேசங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டும் சிங்கள பௌத்த பேரினவாத அரசமைப்புக்குட்பட்டும் இருக்கின்றமையால் தமிழர் தேசம் ஒடுக்குண்ட தேசமாக இருக்கின்றது. இதுவே தமிழீழ தமிழ்தேசத்தின் முதன்மைச் சிக்கலாகும்.

எனிலும், ஒரு முதிர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்திமுறையைக் கொண்டிருக்காததுடன் நிலப் பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், இன்னமும் சாதிய தொழில் பிரிவு உறவுகள் என்று ஒரு சிக்கலான சமூக அமைப்பாகவும், எமது சமூகத்தில் எமது சமுதாய மேம்பாட்டிற்குச் சாபக்கேடாகவும் அடிப்படை அறத்திற்கும் சமூக நிகரமைக்கும் பெரும் முட்டுக்கட்டையான சாதியக் கொடுமைகளும், அரச ஒடுக்குறையினாலும் சமூக அடக்குமுறைகளினாலும் (சீதனக் கொடுமை, ஆணாதிக்கம்) நேரடியாகப் பெண்கள் ஒடுக்குறைக்குள்ளாகுதல் என சமூக அநீதிகளும், மலிந்த ஒடுக்குமுறைகளையும், சுரண்டல் முறைகளையும் எமது சமூகம் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் எமது சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்களாகவிருப்பதால், நாம் ஒரு புரட்சிகரத் தேசமாக ஒன்றுபடுவதில் தடையாக நிற்கின்றன. எனவே நாம் அடிப்படைச் சிக்கல்களை எவ்வாறு கையாளப் போகின்றோம் என்பதிலேயே எமது அரசியல் திறம் தங்கியிருக்கப் போகின்றது. நாம் ஒரு தேசமாக ஒன்றுபடுவதில் தடைகளிருக்கையில், நாம் எந்த அடிப்படையில் முதன்மையாக ஒடுக்கப்படுகிறோமோ அதுவே இணைவதற்கான அடிப்படையுமாகும். எந்த விதமான அடையாள அரசியலும் ஒரு போலியான முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தி விடும், ஈற்றில் ஒடுக்குமுறையாளனின் தேசிய ஒடுக்குமுறைக்கு வாய்ப்பாகிவிடும் என்ற அடிப்படைப் புரிதலுடன் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களின் புலனாய்வுச் சூழ்ச்சியால் தமிழ்தேசத்தில் உள்ளிறக்கப்படும் அடையாள அரசியல் குறித்து தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புதிய தாராளமய உலக ஒழுங்கில் தேசிய இன  விடுதலைக்காக மக்கள் தேசமாக ஒன்றிணைவதைத் தடுக்க அடையாள அரசியலை முன்னெடுக்க பெருந்தொகை நிதி தேசிய இனச் சிக்கல் முதன்மைச் சிக்கலாக உள்ள நாடுகளில் இறக்கப்படுகிறது. இது ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனத்தின் அடிப்படைச் சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் அவற்றைக் கூர்மைப்படுத்தி அடையாள அரசியலுக்குள்ளாக்கும். இதனை அரசுசாரா நிறுவனங்களே முன்னெடுக்கின்றன. இதைத் தெரிந்து தெளிந்து தமது செயற்றிட்டத்தை எப்படிப் புரட்சிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்பது உடனடித் தேவையாகின்றது. இல்லையேல், உள்ளிறக்கப்படும் பெருமளவு நிதி தமிழர் தேசமாக ஒன்றிணைவதைத் தடுத்த வண்ணமே இருக்கும்.

ஆகவே, எமது சமூகத்தில் புரையோடியிருக்கும் சகல விதமான ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி ஏற்றத் தாழ்வற்ற நிகரமைச் சமூகத்தைக் கட்டியெழுப்பி மக்களைத் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் பிரிக்கமுடியாத சக்திகளாக அணி திரட்டுவதை வேலைத்திட்டமாக முன்னெடுக்கும் அரசியல் தெளிவும் புரட்சிகரத் துணிவும் உள்ள தக்க தலைமை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இப்போது உடனடித் தேவையாக உள்ளது.

அருள்வேந்தன்

 2017-11-28

 3,647 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply