
படைப்புவெளியின் மீதான மக்களின் நம்பிக்கை என்ற தளத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு படைப்புகள் முகிழ்ந்துகொண்டிருக்கின்றன. படைப்புகளுக்கான இலக்கணங்கள் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே அதற்கான இலக்கணத்தையும் மொழியையும் அழகியலையும் அதன் வடிவத்தையும் உருவாக்கும் என்பது கலையியலாளர்களது கருத்தாகும். படைப்பு மக்களிடம் சேரும்போது அவை இலகுவில் மக்களால் நம்பப்படுபவையாகிவிடுகின்றன. படைப்பின் வெளியீட்டுத்தன்மை என்பது பார்வையாளன் அதனை எவ்வாறு தன்சார்ந்து புரிந்துகொண்டு நகலெடுக்கிறான் என்பதிலேயே தங்கியிருக்கும். ஆனால் மக்கள் தம் வாழ்வியலுடன் பொருத்தி நகலெடுக்க முடியாததான படைப்புக்கள் புரியாத புதிர்களாகிவிடுகின்றபோது அவை எவ்வாறு படைப்புக்களாகும்? படைப்புகள் என்பவை ஏதோவொரு இலக்கினை முன்னிறுத்தி, குறிப்பிட்ட தளத்தின் களத்தையும் மக்களது வாழ்நிலையையும் பதிவுசெய்வதற்கான ஒரு ஊடகமாக பார்க்கப்படவேண்டும். அந்த ஊடகங்களிற்குள் அதன் வடிவம் சார்ந்து கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, நாடகம், குறும்படங்கள், முழு நீளத்திரைப்படங்கள், சிற்பம், ஓவியம் என வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இந்த ஊடகங்கள் அவற்றின் வடிவங்களினால் மட்டும் படைப்பாகிவிடுவதனால் உள்ளடக்கங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும். படைப்புகளின் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான ஊடாட்டமானது மக்களது வாழ்வியலைச் சார்ந்திருக்கும்போது தான் குறிப்பிட்ட படைப்புகள் மண்ணின் படைப்புகளாகும். ஆனால் இன்று ஈழத்தைப் பொறுத்தவரையில் படைப்புகள் மண்சார்ந்து இருப்பது கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஆனால் படைப்பாளர்களும் படைப்புவெளியும் நிறைந்துகொண்டே வருகின்றது. இந்நிலையில் மக்களுக்கு படைப்பு சார்ந்து தெளிவூட்டப்படவேண்டிய தேவை இருக்கிறது. அந்த தேவையின்பாற்பட்டே இப்பத்தி எழுதப்படுகின்றது.
ஈழத்துச் சூழலில் எழும் படைப்புகள் ஒரு காலத்தில் விடுதலை என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து மக்களின் குரலாக அடையாளம் காணப்பட்டன. ஈழத்தின் படைப்புவெளியில் இன முரண்பாடு என்பது தவிர்க்கமுடியாத பேசுபொருள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் மாற்றுக்கருத்து கூறுகிறோம் என்ற பெயரில் படைப்புவெளியை மாற்றுக்கருத்தாளர்களுக்கான தளமாகவும் தனிமாந்த இருப்புக்களையும் அவர்களது அடையாளச் சிக்கல்களையும் கொண்ட படைப்புகளுக்கான தளமாகவும் மாற்றிவிட்டிருக்கிறோம். தனிமாந்த இருப்புக்களை முதன்மையாகக் கொண்டு எழும் படைப்புகள் அந்த சமூகஞ்சார்ந்த அக அரசியலையும் மண்ணின் விடுதலையையும் பற்றி பேசாது, புறத்தாக்கங்களின் கருத்தியலிலிருந்து தோன்றும் முரண் அரசியலைப் பற்றி பேசுகின்றன. அவர்களை இனங்காணவேண்டிய தேவை மக்களுக்கு இருக்கின்றது.
படைப்பு என்றால் என்ன? படைப்பு எப்படி இருக்க வேண்டும்? படைப்பை எப்படி அணுகவேண்டும் எனற விடயத்தை மக்கள் தெளிவாக உணர்வார்களெனின் இவ்வாறான படைப்புப்போலிகளை இலகுவாக புறந்தள்ள முடியும்.
தெளிவான அரசியல் புரிதலோடு சமூக வாஞ்சையுடன் மக்கள் குறித்த சமூகப் பார்வையுடன் எழும் படைப்புகள் கூட தேசியம் சார்ந்து புறநடைப்படைப்புக்களாகிவிடக்கூடிய சிக்கலும் இருக்கின்றது. மக்கள் சார்ந்த சமூகச்சிக்கல்கள் முதன்மைச் சிக்கல் மற்றும் அடிப்படைச் சிக்கல் என்பனவாகும். சிங்கள பேரினவாதத்தாலும் இந்திய மேற்குலக கூட்டுச் சூழ்ச்சியினாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி, அந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராடி, இன்று இறைமையை இழந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு உள்ளாகி, சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கப்பட்டு நிற்கும் நிலையே தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கல். சாதிய ஏற்றத்தாழ்வுகள், பொருண்மிய ரீதியிலான வர்க்க வேறுபாடுகள், பெண்ணுரிமை மறுக்கப்படுதல், பிரதேச வாதம் என தமிழர்களின் அடிப்படைச் சிக்கல்களும் நீள்கின்றன. மக்களுடைய சமூக அசைவைப் படைக்கும்போது அங்கே அடிப்படைச் சிக்கல்களும் பேசுபொருளாக வேண்டியவை. ஆனால் அவ்வாறு அடிப்படைச் சிக்கல்களைப் பற்றி பேசும் போது, அந்த அடிப்படைச் சிக்கல்களின் வெளிப்பாட்டின் கூர்மையில் முதன்மைச் சிக்கல் மழுங்கடிக்கப்படக்கூடாது. ஆனால் அரச இயந்திரத்தின் அதிகாரத்தினை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கும் முதன்மைச்சிக்கலை திசைதிருப்புவதற்காக அடிப்படைச் சிக்கல்களை கூர்மைப்படுத்தும் வேலைகளை அரச பயங்கரவாதத்தின் கைக்கூலிகள் செய்துவருகின்றனர்.
அரசியல் புரிதலுடன் அடிப்படைச் சிக்கல்கள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டி அவற்றைக் களைவதோடு முதன்மைச்சிக்கலை நோக்கி மக்களை ஒன்றுபடுத்துபவர்களாக படைப்பாளிகள் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அடிப்படைச் சிக்கலை முதன்மைப்படுத்தி முதன்மைச் சிக்கல் அதன் தீர்வை நோக்கி செல்லும் பாதையை மறித்தலென்னும் அரசியல் சூழ்ச்சிக்குள் விழுந்துவிடக்கூடாது என்பதில் சமூகமும் சமூகத்தைப் படைக்கும் படைப்பாளிகளும் தெளிவாக இருக்க வேண்டிய அதேவேளை, அடிப்படைச் சிக்கல்களை பேசாப்பொருளாக்கி முதன்மைச் சிக்கலை மட்டும் பேசுவது சமூக நீதியின் அடிப்படையில் ஏற்புடையதல்ல என்பதையும் உணர வேண்டும்.
சுடுகலன்களின் பேசாநிலையில் மக்களின் குரல்கள் படைப்புத்தளத்தில் ஒலிக்கவேண்டிய தேவைப்பாடுடைய இந்த சூழலில் படைப்புகள் சமூக மாற்றமொன்றினை நோக்கியதாக இருக்க வேண்டும். படைப்பு சார்ந்த சமூகத்தை அதனது விடுதலை நோக்கி முன்னகர்த்துவதாக இருக்க வேண்டும். மறவழிப்போராட்டம் பேசாநிலைக்கு சென்றுவிட்டதால் நாம் எமது விடுதலைத் தாகத்திலிருந்து பின்னகர்ந்துவிடவில்லை என்ற செய்தியை உலகுக்கு கூறுவனவாக இருக்க வேண்டும். விடுதலைப்போராட்டத்தையும் அதன் அரசியலையும் சமூகத்தளத்திலிருந்து பேசி, சமூகத்தை விழிப்போடிருக்க செய்பவையான படைப்புகள் எழ வேண்டும். மக்களை, அவர்களது வாழ்வியலை, மண்ணினை, சூழலை கூறும் மண்சார்ந்தவையாக படைப்புகள் இருக்கவேண்டும். சமூக வாழ்வியலின் நேர்க்கூற்றினை மட்டும் புலப்படுத்தி, அதன் சிக்கல்களை தவிர்ப்பதென்பது சமூகத்தின் படைப்பாகாது. மக்களது சிக்கல்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்வியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பேசப்பட வேண்டிய கடப்பாடு படைப்பாளிகளுக்கு இருக்கிறது.
படைப்புக்கள் சமூகத்தின் தேவைக்கான உற்பத்திகளாக இருக்கின்றது என்பதை படைப்பாளிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தேவைகளிலிருந்து தான் உற்பத்தி பிறக்கும். தேவை இருந்தால் உற்பத்தி பிறக்கும். தேவைகள் இருந்ததால் தான் உற்பத்திகள் பிறந்தன. மக்களின் வாழ்வியலை வெறுமனே அழகியல் நோக்கில் பதிவுசெய்துகொண்டிருந்த எம் படைப்புவெளியை விடுதலைப்போராட்டமும் அதன் அரசியலும் இன்னொரு தளத்திற்கு இட்டுச்சென்றன. படைப்புவெளியானது விடுதலைக்கான வெளியாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. ஈழத்தழிழரின் படைப்புவெளி விடுதலை சார்ந்து நிரம்பி வழிந்தது. இனத்தினதும் இன விடுதலையின் நோக்கங்களும் தன்னாட்சியுரிமை என்ற அரசியல் சொல்லாடல்களும் படைப்புகளினூடாக மக்களை சென்றடைந்திருந்தன. ஆனால் முள்ளிவாய்க்கால் என்ற அழிவின் பின் எழுந்த படைப்பு வெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப்போனது. தமிழீழ விடுதலையும் அதன் போராட்டமும் இன்றும் மக்கள் முன் நிற்கின்ற வலுவான சமூகத்தேவை. தமிழீழ நாடு என்ற புள்ளியில் தான் அந்த தேவை நிறைவுபெறும். ஆனால் இன்றைய படைப்பாளிகள் சமூகத்தின் தேவைகள் நிற்கும் தளத்தினை விடுத்து, தேவையற்ற உற்பத்திகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த தேவையற்ற படைப்புகள் மக்களது நுகர்வுப்பண்பாட்டை கேள்விக்குட்படுத்தி, கண்டதையும் நுகரும் சமூகமாக மாற்றி விடும். நுகர்ச்சி சுட்டெண்ணுக்கு மேலாக அவர்களது மிகை நுகர்ச்சியை தூண்டி, ஒரு தேசிய இனத்தின் தற்சார்பினைக் கேள்விக்குள்ளாக்கும் கேவலமான வேலையை சில படைப்பாளிகள் செய்துவருகின்றனர். சொந்த புகழரிப்புக்களுக்காக ஒரு தேசிய இனம் தன் தற்சார்பை இழத்தலென்பது ஏற்புடையதன்று. வெளியும் பொருண்மியமும் இருப்பதென்பதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தில் குறோட்டன் செடியை நடமுடியுமா என்ன?
படைப்பின் உள்ளடக்கம் வினைத்திறனாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் படைப்பாளியின் கடமைகளிலொன்று. இரண்டு நிமிடங்களில் சில காட்சிப்படிமங்களுடனோ அல்லது அழுத்தமான சொல்லாடல்களினூடாகவோ சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டிய பேசுபொருளை தனது ஆற்றல் குறைபாட்டினால் இரண்டு மணித்தியாலங்களுக்கு சொல்வதென்பது மக்களின் மாந்த மணித்தியாலங்களை திருடுவதாகும். சொல்ல வந்த கருத்தினை ஆழமாகவும் அறிவியலுடனும் சொல்ல முடியாத படைப்பாளிகள் படைப்பாளிகள் அல்லர். படைப்பாளிகளாக நிலைக்க வேண்டுமெனில் அவர்கள் தமது அறிவுத்தளத்தை விரிவுபடுத்தப்படவேண்டிய நெருக்குவாரத்துக்குள் இருக்கிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். எத்தகைய தளத்திலிருந்து படைப்பு எழுகின்றதோ அந்த தளம் தொடர்பான ஆழமான புலமை, சமூகம் குறித்த ஆழ்ந்த பார்வை, அந்த தளம் சார்ந்து ஏலவே பேசப்பட்டுவரும் சர்ச்சைகள், அந்த படைப்புத்தளம் குறித்த புதிதான கருத்து வெளிகள் தொடர்பான தெளிவு, அந்த சமூகம் சார்ந்த அரசியல் என்பன குறித்த முழுமையான அறிவுடன் படைப்பாளி தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும். அந்த தகுதிநிலையுடன் எவரிற்கான படைப்போ, யாருடைய நோக்கிற்காக குறித்த படைப்பு படைக்கப்படுகின்றதோ, குறிப்பிட்ட படைப்பு உற்பத்தி யாருடைய தளத்தில் நிகழ்கிறதோ, அந்த உற்பத்தி எங்கு மாற்றங்களை வேண்டி நிற்கின்றதோ அந்த மக்கள் சார்ந்து இலகுத்தன்மையுடன் இருக்கவேண்டும். படைப்பாளி தனது அறிவுச் செருக்கை திணிப்பதற்கு அவை நிகண்டுகளோ வாய்;ப்பாடுகளோ அல்ல என்ற தெளிவும் படைப்பாளிக்கு இருக்க வேண்டும். ஆனால் தனது மொழிச்செழுமை குறித்தும் மொழி அறிவு குறித்தும் தன் சார்ந்த தேடல் எப்போதும் படைப்பாளிக்கு இருக்க வேண்டும். மக்களுக்கு விளங்கமுடியாத படைப்புக்களே உயர்வானதென்று எண்ணி, எளிமையான படைப்புக்களை எள்ளி நகையாடும் தன்மையும் படைப்பு வெளியில் இருக்கிறது.
மொழி சார்ந்தும் காண்பியம் சார்ந்தும் புலமை உடையவர்களென்பதால் மட்டும் நல்ல படைப்புகளை படைப்பாளியால் உருவாக்கிவிட முடியாது. சிக்கல்களான மொழிக்கோர்வைகளில் நான்கு வரிகள் எழுதிவிட்டு அதனை படைப்பென கொண்டாடுதல் எவ்வளவு அபத்தமோ, அதை விட குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்து அதன் வட்டார வழக்கில் ஒரு படைப்பு வெளிவருமிடத்து, வட்டார வழக்கு என்ற ஒரேயொரு காரணத்துக்காக அது அந்த மண்ணுக்கான படைப்பாக கொண்டாடப்படுவதும் அபத்தம். அது மண்சார்ந்த படைப்பும் அல்ல. வெறுமனே அந்த படைப்பாளியின் சொந்த சொறிதலுக்காக படைக்கப்பட்ட படைப்பாகவே அது நோக்கப்பட வேண்டும். அதேபோல குறிப்பிட்ட படைப்புக்கான காட்சிவெளி குறிப்பிட்ட மண்ணை தளமாகக் கொண்டது என்பதற்காக அது அந்த மண்ணுக்கான படைப்பாகி விடாது. மண்ணுக்கான படைப்பு அதன் உள்ளடக்கம் சார்ந்து மக்களுடையதாக இருக்கும்போதே மண்ணுக்கான படைப்பாக மாறும்.
ஈழத்து படைப்பு வெளியில் படைப்பவர் குறித்த முன்முடிவுகளை வைத்துக்கொண்டு அவரின் படைப்புகள் குறித்தும் முற்கற்பிதங்களுடன் நோக்குதல் வளர்ந்து வருகின்றது. எந்தவொரு படைப்பையும் படைப்பாளியின் முன்முடிவு குறித்த நோக்குநிலையில் நின்று ஒதுக்குவதும் சரி, வலுவூட்டுவதும் சரி ஏற்படையதாகாது. எமது திறனாய்வின் குறைபாடாகவே இதை நோக்க வேண்டும். சமூக வலைத்தளங்களின் கட்டுமீறிய வருகையின் காரணமாக விளம்பர உலகம் ஒவ்வொருவரின் அறையிலும் குந்திக்கொண்டு இருக்கிறது அந்த விளம்பர நுட்பங்களாலும் இந்த நோக்குநிலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. படைப்புகளை எவ்வாறு நோக்கவேண்டும் என்ற அறிவியலை மயக்கி, படைப்பு குறித்த அடையாளத்தை மட்டும் நோக்கச் செய்துவிடுகின்ற விளம்பரங்களால் குறிப்பிட்ட படைப்பு படைப்பாகி விடாது. புகழ் வெளிச்சத்தின் பரிதிக்குள் ஆட்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் எல்லா படைப்புக்களும் படைப்புகளாகிவிடுமா என்ன? அவை குறிப்பிட்ட நபரின் படைப்புகள் என்ற பெயரை பெறும். பெரும்பாலான படைப்பாளிகள் புகழ்வெளிச்சத்துக்குள் இடம் தேடுபவர்கள். தமது அறிவுநிலைக்கு ஏற்றாற்போல, சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டு, அவர்களது தனிப்பட்ட வாழ்வியல் தாக்கங்களுக்கு ஏற்றாற்போல போல வெளிவரும் படைப்புகள் மண்ணிற்கான படைப்புக்களாகவேண்டுமெனில் தன்னிலிருந்து படைப்பைப் படைக்காமல் சமூகத்திலிருந்து படைப்பைப் படைத்தல் வேண்டும்.
தத்தமது அறிவுநிலைக்கேற்ப அறிவியலுக்கு புறம்பாக நின்று அழகியலை மட்டும் முன்னிறுத்தும் படைப்பாளிகளால் சமூகத்தின் அறிவார்ந்த தேவைக்குரிய படைப்புக்களை படைக்க முடியாது. அத்தகையோரின் படைப்புக்களால் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை. சமூக மாற்றத்திற்கான உற்பத்தியை அந்த சமூகத்தின் பண்பாட்டுத் தளத்தில் நின்று நிகழ்த்தாதவர்களின் படைப்புகள் மண்ணிலிருந்து புறந்தள்ளப்படவேண்டியவை. படைப்பின் மூலம் பொருளீட்டுதல் என்பது தவறல்ல. ஆனால் மண்ணிற்கு தேவையற்ற உற்பத்திகளை நிகழ்த்திவிட்டு மண்ணின் அடையாளத்தை பயன்படுத்தி, ஈழப்படைப்பு என்ற சுட்டியின் வலுவால் பொருளீட்டுதலென்பது மிகவும் கேவலமானது. அத்துடன் விளம்பர உத்திகளின் மூலம் சமூகத்தில் தேவையில்லாத நுகர்வுகளை புகுத்திவிடுவது கயமைத்தனமும் எம் மண்ணிற்கு செய்கின்ற இரண்டகமுமாகும். “ஈழம்” என்பது விற்பனைக்கல்ல. அது எம் மக்களுக்கானது. மண்ணுக்கானது. வியாபாரிகளின் விற்பனைக்கானதென நினைத்தால் அவர்களை புறக்கணிக்க வேணடிய கடமை மக்களுக்குண்டு.
மக்களிடையே தேவையற்ற நுகர்வுகளை உட்புகுத்தி, அவர்களின் தற்சார்பினைக் கேள்விக்குள்ளாக்குவது இன அழிப்பு அரச பயங்கரவாத உளவுத்துறைகளின் நுண்ணிய செயற்றிட்டங்களாகும். குறிப்பாக ஈழத்து தளத்தில் இந்திய உளவுத்துறையின் ஊடுருவலைச் சுட்டலாம். எப்போதுமே உளவுத்துறைகள் தமக்குரிய கூலிகளை உளவியல் சிக்கல்கள் உள்ளோர், அடையாளச் சிக்கலில் இருப்போர், புகழ் வாஞ்சை உடையோர் என்ற கூட்டத்தினுள் தேடும். படைப்பாளிகள் இலகுவில் உளவுத்துறைகளின் வலைக்குள் வீழ்ந்துவிடக்கூடிய நிகழ்தகவு அதிகம். செய்தி ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், துணைத் தூதரகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் என உளவுத்துறையின் கால்கள் எங்கும் வைக்கப்பட்டுள்ளன. தகுதியற்றவர்களை உருவாக்கி, அவர்களின் மூலம் உருவாகும் தகுதியற்ற படைப்புகளின் வழி, மண்சார்ந்த வலுவான படைப்புக்கள் எழுவதைத் தடுப்பதற்காக விருதுகள் என்னும் புகழ் மாயை பயன்படுத்தப்படும். தகுதியானவர்களின் குரல்களை முடக்கி தகுதியற்றவர்களின் குரல்களை படைப்புக்களாக்கும் இந்த சூழ்ச்சிக்கு எம் மண்ணும் பலியாகிக்கொண்டிருக்கிறது. மக்களிடையே மண்சார்ந்த கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களை புறந்தள்ளியோ அல்லது ஊடகர்களை புறந்தள்ளியோ தகுதியற்ற ஊடகங்களும் தகுதியற்ற ஊடகர்களும் முன்னிலைப்படுத்தப்படுவதன் பின்னாலுள்ள அரசியல் மிகவும் நுண்ணியது. சமூகப்பார்வையும் தெளிவான அறிவும் சமூகம் சார்ந்த புலனாய்வுப் பார்வையும் உள்ள படைப்புக்களும் அவற்றிலிருக்கும் கருத்துருவாக்கங்களும் மக்களிடம் செல்லாமலே படைப்பு போலிகளாலும் கூலிகளாலும் மறுத்தாடப்படுகின்றன.
தகுதியற்றவர்களின் படைப்புகளை வெளியே கொண்டு செல்லப்படுவதற்கான பொருண்மிய உதவிகளை வழங்கி, அதன் மூலம் அந்த படைப்புக்களுக்கான வெளி எம் மண்ணில் உறுதிசெய்யப்படுகிறது. பெரும்பொருட்செலவில் வரக்கூடிய இலக்கியப் படைப்புக்களோ காண்பியம் சார்ந்த திரைப்படம், குறும்படம் போன்ற படைப்புக்களோ வரும்போது, அவை குறித்தும், அந்த உற்பத்தியின் பின்னாலிருக்கும் பொருளியல் மூலம் குறித்தும் அந்த வருவாயைப் பெற்ற படைப்பாளியின் மீதும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை ஊக்குவித்தலும் படைப்பு வெளியினை ஆளும் அதிகாரம் தன் கையில் எடுப்பதற்கான செயற்பாடுகளாகும். இன்றைய புகழ்வெளிச்சம் பெற்ற படைப்பாளிகளில் சிலர் இந்திய உளவுத்துறையின் வரம் பெற்றவர்கள். ஆனால் புகழடைபவர்கள் எல்லாரும் அப்படியானவர்கள் என்று சொல்வதல்ல எமது நோக்கம். எனினும் இதுகுறித்த விழிப்பு மக்களிடம் இருக்கவேண்டும். வெறுமனே புகழ்வெளிச்சம் பெற்றதுக்காக, குறித்த படைப்பாளியின் முகத்துக்காக தகுதியற்ற படைப்பாளிகளை வளர்த்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
தமிழ்த்தேசியத்தின் இருப்பை படைப்புவெளியில் சிதைப்பதற்காகவும் மக்கள் தமது விடுதலை நோக்கிய பாதையில் தமது படைப்புவெளியை கட்டியமைப்பதை தடுப்பதற்காகவும் கருத்துருவாக்கவெளி அரசியல் அறிவிலிகளான படைப்பு போலிகளால் படைப்புவெளி நிரம்பிக்கொண்டிருக்கிறது. புலி எதிர்ப்பு, தேசிய மறுப்பு, நல்லிணக்க நாடகம் என கூலிகளுக்கான தளம் விரிவடையச் செய்யப்படுகிறது. ஆரியப் பார்ப்பனிய கருத்துருவாக்கங்களும் அந்த படைப்பு வெளியில் மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது. மக்களோடு மக்களாக நின்று சமூக மாற்றத்தைப் பேசவேண்டியர்கள் புகழுக்காகவும் பொருண்மியத் தேவைகளுக்காகவும் அந்த சமூகத்தை எதிரியிடம் அடகுவைத்து, தம் இருப்பினை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆய்வின் அடிப்படை தெரியாதவன் ஆய்வாளன் எனவும் ஒரு கவிதை நூலை வெளியிட்டவுடன் இலக்கியர் எனவும் விருதுகள் கிடைப்பதை எடுத்துக்காட்டாகச் சுட்டலாம். அந்த விருதுகளின் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிக்குள் தாங்களும் மாண்டுபோய் மக்களையும் மாளவைப்பதென்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மக்கள் “ஈழ” வியாபாரிகளை போல “விருது” வியாபாரிகளிடத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். விருது வியாபாரிகள் படைப்பாளிகளை விருதுகளின் மூலம் தம்வயப்படுத்தி, தம் கைப்பாவைகளாக்கி விடுகின்றார்கள். தகுதிக்கு மீறிய விருது கிடைக்கும்போது மக்களும் படைப்பாளிகளும் அந்த படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் எச்சரிக்கையுடனிருத்தல் வேண்டும்.
ஈழத்து படைப்பு வெளியில் சமூகத்தை படைப்பவன் பிற்போக்குவாதி எனவும் அதிலிருந்து மாற்றுக்கருத்தை படைப்பவன் முற்போக்குவாதியெனவும் எண்ணுகின்ற தன்மையொன்று உள்ளது. சுருங்கக்கூறின் புலியை எதிர்த்தலென்பது படைப்பாளிகளின் முற்போக்குத்தனம் என்னும் கருத்தாக்கம் ஏற்படுத்திவிடப்படுகின்றது. எதிர்ப்பு கருத்துக்கள் எல்லாம் முற்போக்கானவை அல்ல எனவும் அதைப் படைப்பவர்கள் முற்போக்குவாதிகள் அல்ல எனவும் அந்த படைப்பாளிகளின் முகத்திலறைந்து சொல்ல வேண்டிய தேவையும் எமக்கு இருக்கிறது. அதன் மறுபக்கத்தில் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துபவர்கள் மட்டும் ஆபத்தானவர்கள் அல்ல; தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் என்ற காரணத்துக்காக அவர்களது படைப்புக்களில் தமிழர்களுக்கான கருத்தாக்கம் தான் வெளிப்படும் என நினைத்து, அந்த படைப்புகளை ஏற்றுக்கொள்வதும் ஆபத்தானதே. அவர்களது படைப்பில் வெளியாரது கருத்தூட்டங்கள், படைப்பிற்கான பொருண்மிய அனுசரணையின்பாற்பட்ட இணக்கப்பாடுகள் போன்றவையும் இருக்கக்கூடும். அந்த விடயம் தொடர்பிலும் தமிழ்மக்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும். எனினும் தமிழ்த்தேசிய சிந்தனை அல்லாதவர்கள் எளிதாக படைப்புவெளியின் சூழ்ச்சிகளுக்கு தடுமாறிவிடுவார்கள்.
படைப்புவெளியானது விடுதலைக்கானதாக மட்டும் தன்னை நிலைநாட்டிக்கொள்வதில் சில படைப்பாளிகளுக்கு உடன்பாடில்லை. விடுதலை மட்டுமே மக்களது வாழ்வியல் என்பதோ அல்லது விடுதலை குறித்து மட்டும் தான் படைப்புவெளி நிரம்பியிருக்கவேண்டுமென்றோ அல்லது ஒரு புரட்சிகர இயக்கத்தின் வெளியீடுகளாக படைப்புக்கள் இருக்கவேண்டுமென்றோ நாம் சொல்ல வரவில்லை. தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை சொல்லி சமூக வாழ்வின் தன்மைகளை முற்றுமுழுதாகப் புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. மக்களது அழகியலுணர்வை புறந்தள்ளுவதும் நோக்கமல்ல. அழகியலுடன் இணைந்த அறிவியலுடன் மக்களது நுகர்வு இருக்கவேண்டும் என நினைக்கிறோம். படைப்புகள் என்ற போர்வையில் கவர்ச்சிகரமாக உள்நுழையும் நயவஞ்சக நுழைப்புகளையும் அரசியற் பார்வையை மூடிமறைக்கும் படைப்புக்களையும் குறித்து மக்கள் எச்சரிக்கையுடனிருக்கவேண்டும். அவ்வாறான படைப்புகள் குறித்து மக்களை எச்சரிக்கையுடனிருங்கள் என்று சொல்வதே தவிர படைப்புக்களையும் படைப்பாளிகளையும் புறந்தள்ளுவதல்ல எமது நோக்கம். தமிழீழ ஆட்சிப்புலமொன்று இருக்குமெனில் உள்வரும் படைப்புகள் எமக்கானதா இல்லையா என்று வடிகட்டி, மக்களுக்கான படைப்புகளை தணிக்கைக்குழு கொடுக்கும். ஆனால் இன்று அந்த கொடுப்பினை எமக்கு இல்லை. எந்த வகையிலும் எமது சமூகத்தின் தேவைக்கேற்ற உற்பத்தி இல்லாத படைப்புகளை இனங்காண்பதில் சிக்கல்கள் இருப்பதால் படைப்பை ஆய்வு செய்து மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. மக்களுக்குத் தேவையான படைப்புகளே உற்பத்தியாக வரவேண்டும். மக்களினின்றும் எம் மண்ணினின்றும் அந்நியப்படும் படைப்புகள் எமக்கு தேவையற்றவை. அவ்வாறான கேடு கெட்ட படைப்புக்களுக்கு விடைகொடுக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. ஆனால் கேடான விடயங்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்கான தணிக்கைக்குழு என்னும் பொறிமுறை இன்று எம்மிடமில்லை. மக்கள் அந்தப் பொறிமுறையை தமது கைகளில் எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். மக்கள் அரசியற்படுத்தப்பட்டால், தமது அரசியல் அறிவினை உயர்த்திக்கொண்டு தமக்கான படைப்புவெளியை தாமே தீர்மானிக்கும் தடுப்பரண்களை அமைப்பார்கள். எங்கள் மண்ணிற்கான படைப்புகளையும்; தீர்மானம் செய்யும் தணிக்கையாளர்களாக மாறி, எமக்கான படைப்புவெளியினை எமது மண்ணிற்குரிய வெளியாக மக்கள் மாற்றுவார்களா?
5,800 total views, 2 views today
Leave a Reply
You must be logged in to post a comment.