தமிழ்த் தேசியம் என்பது யாதெனில்……. -தம்பியன் தமிழீழம்-

புரட்சிகரக் கருத்தியல்களையும் பொருட் செறிவுள்ள சொற்களையும் பொருளறியாமலும் அதன் உட்கிடக்கை புரியாமலும் வாய்க்கு வாய்க்குமிடமெல்லாம் ஒலித்து வருவது பலருக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும்தமிழ்த் தேசியம்என்ற உயிர்மைக் கருத்தியல் பலரது அறியாமையை மறைக்கவும் அவர்கள் தம்மைப் புனிதர்களாகக் காட்டவும், அவர்களது அறியாமையின் பால் விளைந்த கட்சிச் சார்பினை கருத்தியலின் பெயரால் எண்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவது காலக்கொடுமையே.

தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மை நோக்கமே தமிழர் தேசங்களை விடுதலை பெறச் செய்வதாகும்.

ஒரு மரபினமாகவிருந்து தேசிய இனமாக தன்னை வரலாற்று இயங்கியலில் வளர்த்தெடுத்த தமிழினமானது மாற்றானின் வன்கவர்வுகளால் அடிமைத் தளைகள் தொடர்ந்த நிலையிலும் தன்னை ஒரு தேசிய இனமாகத் தனது தேசங்களில் தக்கவைத்துக் கொண்டதுஎனினும் மாற்றானின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் தேன் தடவிக் கொடுக்கப்பட்ட நஞ்சான கருத்தியல்களை உள்நுழைய விட்டமையாலும் உருவான அக முரண்பாடுகளைத் தீர்த்துத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு தகவமைத்துக் கொள்ளத் தவறியமையால் தமிழினம் தனக்கான தேச அரசை அமைத்துக் கொள்ள இயலாது போனமையே தமிழினம் படும் அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாயிற்று.

கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் 19 ஆம் நூற்றாண்டில் கண்ட கருத்தியல் இல்லையெனில் தமிழனுக்கு ஒன்றும் இல்லையென்றும் அந்தக் கருத்தியல் மூலவர்களின் வாய்ப்பாடுகளை மனனம் செய்து ஒப்புவிக்கத் தவறுவோர் முற்போக்கர் அல்ல என்று வசைபாடும் அரசியல் செய்யும் அல்லேலூயா மார்க்சியர்கள், இல்லறம், பொருளறம், போர் அறம், விடுதலை அறம் என அறத்தின் அடிப்படையிலேயே வாழ்வின் ஒவ்வொரு கூறினையும் அறிவார்ந்து நோக்கி கருத்தியலைப் படைத்துச் சென்ற எம் முன்னவர்களின் பொதுமைக் கோட்பாட்டை மேலும் முன்னெடுத்து வளர்த்துச் சென்று எமக்கான விடுதலைக் கருத்தியலையும் அரசியல் வழி விளைந்த வாழ்வியலையும் காலவோட்டத்திற்கேற்ப வளர்த்தெடுத்துச் சென்று இந்தப் புதிய உலக ஒழுங்கில் விடுதலையை வென்றெடுக்க ஏற்ற வகையில் எமக்கான கருத்தியலை அடுத்த பாய்ச்சலுக்கானதாகத் தகவமைத்துக் கொள்ளாமல், கருத்தியல் இறக்குமதியைச் செய்வதையே முற்போக்கெனக் கருதி வருவதை எப்படிக் கடந்து செல்வது என்று தெரியவில்லை. கருத்தியலில் கூட இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கும் இந்த அல்லேலூயா மார்க்சியர்கள் எப்படித் தான் தற்சார்பைப் படைப்பார்கள் என்பது குறித்து இவர்கள் தற்திறனாய்வு செய்வதாகவும் எதுவும் புலப்படவில்லை.

கைகளை மடக்கிக் கன்னத்தில் குத்தும் வன்முறையாளர்களுக்கன்றி, ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோர்களுக்காகத் தமது எச்சில் கையைக் கூட உதற மாட்டார்கள் என்று குறள் 1077 இல் வள்ளுவம் சொல்கின்றது.

“ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு”

குவிந்து கிடக்கும் செல்வத்தைக் கொடுக்க மறுப்பவனை அடித்து நொருக்கிப் பிடுங்கி எல்லோரும் எல்லாமும் பெறச் செய்ய வேண்டுமெனக் கூறி நிகரமைச் சமூக மாற்றத்திற்கான அறவழியாக அமைய வல்லது வன்முறை எனும் மறவழி என்று சொல்லி எமக்கான வழியை வள்ளுவம் எப்போதோ காட்டி விட்டது.

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை ஒருவனுக்கு நேருமானால், அந்த இழிநிலைமைக்குக் காரணமான இறைவன் அழிந்து போகட்டும் என்று வள்ளுவம் அறச் சீற்றம் கொள்கிறது. அந்த அறச் சீற்றத்தின் அறவியலிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான அரசறிவியலை வளர்த்தெடுத்து அறவியலை அறிவியலாக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டியதே தமிழ்த் தேசியத்தின் கடமை. தமிழினத்தின் தொன்மையான வரலாறு, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்பு வரை ஏற்றிப் போற்றி ஒழுகி வந்த உயரிய நெறிகள் அனைத்தையும் மூட நம்பிக்கையெனக் கதையளந்த திராவிடக் கருத்தியலின் அறிவு வளர்ச்சிக் குறைபாடும் நயவஞ்சக நிகழ்ச்சி நிரலும் தமிழர்களின் அறவியற் கோட்பாடுகளை அரசறிவியலால் அறிவியல் கோட்பாடுகளாக்கும் வேலைகட்கு பெருந்தடையாக அமைந்தன. இதன் மூலம் பண்பார்ந்த தொல் தமிழ்ச் சமூகமானது பெரியார் என்று திராவிடக் கருத்தியலாளர்களால் அழைக்கப்படும் ஈ.வே..ராமசாமி வரவில்லை என்றால் நாகரீகமற்ற சமூகமாகவே இருந்திருக்கும் என்று சிந்திக்கத் தூண்டக் கூடியவாறு தமிழர்களினை அவர்களின் அறிவார்ந்த வரலாற்றின் மீது நம்பிக்கை இழக்கச் செய்து, அவர்கள் முன்னோர்களை ஏளனமாகப் பார்க்கச் செய்து ஒரு குற்றவுணர்வுக்குள்ளான சமூகமாக மாற்றியதில் இந்தத் திராவிடத்திற்கு ஆரியப் பார்ப்பனியத்திற்கு அடுத்ததான பங்குள்ளது.

இவ்வாறாக உலகின் முதலாவது அறிவுச் சமூகமும் அறநெறிச் சமூகமுமான தமிழ்ச் சமூகம் தனது பழைய தொன்மையான வரலாற்றையையும் அறியாமல் புதிய வரலாற்றையும் படைக்காமல் ஒரு முட்டுச் சந்திக்குள் தனது அரசியலைச் செலுத்திவிட்டுத் திகைத்துப் போய் நிற்கின்றது.

எனவே தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை ஐயம்திரிபற தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது விடுதலை மாண்பினை நேசிக்கும் ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும். இத்தகைய புரிதலுக்கான சுருங்கக் கூறும் பத்தியாக இதுவமையும் என்ற நம்பிக்கையுடனேயே இப்பத்தி எழுதப்படுகின்றது.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுகின்றது. தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமை பற்றி லெனினும் தேசத்திற்கான வரைவிலக்கணத்தை ஸ்ராலினும் என தேசிய இன விடுதலை குறித்த அடிப்படைகளைப் பொதுமைப்படுத்தி ஒரு கருத்தியலை மார்க்சியம் தனது வளர்ச்சிப் போக்கில் கண்டு கொண்டது. எனினும் ஒரு மரபினமாகவிருந்து தன்னைத் தேசிய இனமாக வளர்த்துக் கொண்ட மிகத் தொன்மையான வரலாறும் அறிவார்ந்த மொழிச் செழுமையான படைப்புகளையும் தனதாகக் கொண்ட அறிவுடமைத் தமிழ்ச் சமூகம் தனது பலங்களையும் பலவீனங்களையும் தற்திறனாய்வு செய்து தனது மண்ணிற்கேற்ற தனது விடுதலைக்கான கருத்தியலை தனது நீண்ட நெடுங்கால அறவியற் கோட்பாடுகளிலிருந்து தனது அறிவார்ந்த பாரம்பரியத்தால் அறிவியலாக வளர்த்தெடுத்துத் தமிழர் தேசியங்களை விடுதலை பெறச் செய்வதற்கான கருத்தியலாக்கி அதனைக் காலவோட்டத்திற்கேற்ப முன்னோக்கி வளர்த்துச் செல்ல வேண்டும். இந்தக் கருத்தியலே தமிழ்த் தேசியக் கருத்தியல். எனவே தமிழர் தேசங்களை விடுதலை பெறச் செய்வதற்கான கருத்தியலே தமிழ்த் தேசியமாகும். தமிழீழத் தமிழ்த் தேசம் மற்றும் தமிழகத் தமிழ்த் தேசம் ஆகிய தமிழர் தேசங்களை விடுதலை பெறச் செய்வதற்கான கருத்தியலாய் இப்போதைக்குத் தமிழ்த் தேசியம் அமையும். மலையகத்தில், மலேசியாவில், மொரீசியசில், மியான்மாரில், சிங்கப்பூரில் என நீண்ட நெடுங்காலமாக உழைக்கும் மக்களாக வாழும் எமது தமிழ் மக்கள் அந்தத் தேசங்களில் தம்மை ஒரு தனித்த தேசிய இனங்களாக வளர்த்து வரலாம். இதில் மலையகத் தமிழர் தேசம் தன்னை ஒரு தனித்த தேசமாக வளர்க்கக் கூடிய இயங்காற்றலை அடைந்து வருவதை தமிழ்த் தேசியர்கள் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். இப்படியாக தமிழர் தேசங்களை விடுதலை பெறச் செய்யும் கருத்தியலே தமிழ்த் தேசியம். தமிழர்களின் நிலவியல், வரலாறு, மக்கள் தொகை, வளங்கள் மற்றும் பொருளியல் போன்றவற்றை நோக்குமிடத்து உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்கும் உரிமைக்கும் உறுதி தரும் முதன்மைக் களமாகத் தமிழகத் தமிழ்த் தேசம் அமையும். அன்று தமிழீழ விடுதலைக்குத் துணைச் சக்தியாகவிருந்த தமிழ்நாடு, தற்போது ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை எழுச்சியால் தனது இறைமையையும் மீட்டு தமிழீழ விடுதலைக்கான அரணாயும் இயங்கு தளமாகவும் அமையும் சூழல் தொலைவிலிருப்பதாக வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் வெகு தொலைவில் இருப்பதாக இனியும் சொல்லவியலாது எனத் துணிந்து துணியலாம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், தக்க தலைமையில்லாமல் இயக்கச் செயற்பாடுகள் இல்லாமல் நட்டாற்றில் தத்தளிக்கும் ஈழத் தமிழினம் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினால் தனது வாழ்நிலை அடிப்படைகளை இழந்து வருகிறது. தமிழர்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பு, தொன்மமான மொழி, பொருண்மிய வாழ்வு, தனித்தன்மையான பண்பாடு போன்ற தனித் தேசியமாக தமது தமிழர் தாயகத்தில் வாழத் தேவையான மூலகங்களை (Elements) சிதைத்தழிப்பதன் மூலம், தமிழ்த் தேசியத்தின் இருத்தலைத் தமிழர் தாயகப் பகுதிகளிலே இல்லாதொழித்து, ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்குவதற்கு சிறிலங்காவின் அரச இயந்திரமும் அதனது கட்டமைப்புகளும் நுணுக்கமாக இழைக்கப்பட்டு, தொடர்ச்சியான தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் சாத்தியமாக்கப்படுகின்றது  இந்நிலை தொடரின் ஈழத் தமிழர் காலவோட்டத்தில் தம்மை ஒரு தனித்த தேசிய இனமாகத் தக்கவைத்துக் கொள்வார்களோ என்ற ஐயம் எழுவது அறிவியலின் பாற்பட்டதே. எனினும் அறவியலின் பாற்பட்டு அது நடந்தேறா வண்ணம் ஈழத் தமிழரின் அரசறிவியலும் அதன் வழி சாத்தியமாகக் கூடிய அடுத்த கட்டப் பாய்ச்சலும் வளர்திசையில் செல்ல வேண்டும் என்ற அவாவிலேயே இப்பத்தி எழுதப்படுகிறது.

இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருக்கும் தமிழ்நாடு தனது இறைமையை இழந்தமையால் அரசியலுரிமை, பொருண்மியவுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, கனிமவளவுரிமை, ஆற்றுரிமை, கடலுரிமை, தொழிலுரிமை போன்ற எல்லா அடிப்படை உரிமைகளையும் இழந்து, வந்தேறிகளின் வேட்டைக் காடாகத் தமிழ்நாடு மாறி, மண்ணை, மொழியை, இனத்தை, வளத்தை, சுற்றுச் சூழலை எனத் தமிழகத் தமிழ்த் தேசத்தின் அத்தனை கூறுகளையும் காக்க முடியாமல் அல்லலாடுகின்றது. இத்தனை துன்பச் சுமைகளையும் சுமந்து வருவதாலும் தனது குருதிவழி உறவுகள் ஈழத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் போது தடுக்க முடியாமல் கையாலாகாமல் பார்த்திருந்தமையால் ஏற்பட்ட வெஞ்சினமும் தமிழகத்தில் தமிழ்த் தேசிய இனவெழுச்சியை கருத்தியல் ரீதியாகவெனினும் வீறுகொண்டெழச் செய்து விட்டது. இந்தக் கருத்தியற் தெளிவு செயல் வடிவம் பெறுகையில் வரும் மாற்றம் தேசிய இன விடுதலை என்பதாகவே இருக்கும். இதனை சாத்தியப்படுத்துவதற்காக பாரிய ஈகங்கள் தமிழ்நாட்டில் செய்யப்பட வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது.

எனினும் தமிழ்நாட்டில் ஏற்படப் போகும் தேசிய இன விடுதலை எழுச்சி தமிழீழத்தில் மறு எழுச்சி வடிவமாக ஆர்ப்பரித்து மீண்டுமெழுவதற்கு, தமிழீழத் தமிழர் எத்தகைய சூழலிலும் தம்மை ஒரு தனித்த தேசிய இனமாகத் தக்க வைப்பதற்கான வேலைகளையேனும் குறைந்தது செய்ய வேண்டும். மாறாக அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தினை ஏற்று ஓட்டு வாங்கும் கட்சியினருக்கு ஓட்டுப் பொறுக்குவதை தமது இடைக்காலச் செயற்றிட்டம் எனக் கூறித் தலைவர் பிரபாகரன் காட்டிய வழியைப் பின்பற்றாமல் ஈழத்து இளையவர்கள் நழுவி ஓடுவது காலக் கெடுதியே. தானாக இயங்காத தமிழீழத் தமிழ்த் தேசிய இன விடுதலையை தமிழகத் தமிழ்த் தேசிய இன விடுதலை எழுச்சி இனி வரும் காலத்தில் ஏற்படுத்தித் தரும் எனக் கூற வரவில்லை. தமிழீழத் தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமாகத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு தமிழீழத் தாயக மண்ணில் தொடர்ச்சியாகப் பரந்தளவு வேலைத் திட்டங்களை முடுக்கி விட வேண்டும். அத்துடன் ஈழத் தமிழர்களின் பதவிக்கும் பட்டத்திற்கும் மட்டுமே கற்கும் மனநிலை நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. சமூக அறிவும் அரசியற் தெளிவும் குன்றியவர்களாகவே பெரும்பாலான ஈழத் தமிழர்கள் காணப்படுகின்றார்கள். அதிலும் கற்றோரிடம் சமூக வாஞ்சை என்பது பாலைவனத்தில் நீரைத் தேடும் நிலையிலேயே உள்ளது.

வல்ல தலைமை கிடைத்ததால் இயன்றளவுக்கு வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை உலகு வியக்கும் வண்ணம் நடத்தி ஒப்பற்ற ஈகங்களை ஈழத் தமிழினம் செய்தமைக்கு ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களும் உரிமை கோரி பிற சமூகங்களின் முன்னிலையில் அதனை தம்புகழ் பாடுவதற்காய் பயன்படுத்துமளவிற்குப் போராட்ட காலத்தில் அவர்களில் பெரும்பாலானோரின் போராட்டப் பங்களிப்பு எப்படியிருந்தது என்பது விடயமறிந்தவர்களுக்கே நன்கு தெரியும்.

போராடுவது என்பது இல்லையென்றாகி விடப் போராட்டத்தைப் பற்றிப் பேசுவோர்கள் எல்லாம் இன்று புரட்சிக்காரராகி விட, அவர்களோ தந்திரமாகப் பேசுவோரின் பேச்சாற்றலைக் கண்டு வியந்து அவர்கள் பின்னால் செல்வது இயல்பாகி விட்டது. “செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்” என்று தொல்காப்பியமும் “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்று வள்ளுவமும் கூறுகின்றதெனின் தமிழினத்தின் அறிவுத் தேடல் மரபு எத்தகைய தொன்மையானது என்பது புரியும். அப்படியொரு அறிவுத் தேடல் மரபில் வந்த இனம் இன்று தந்திரப் பேச்சாளர்களின் வர்க்கக் குணத்தையும் அவர்களின் உண்மை நோக்கத்தையும் சரியாகக் கணிக்காது, உணர்ச்சி மடையர்களாக இருப்பதனை மாற்றியமைப்பதற்கு அறிவுத் தளத்திலும் பாரியளவு வேலைத் திட்டங்கள் செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது.

ஈழத் தமிழர்களில் ஒரு பகுதி இப்படி நம்பி ஏமாற, இன்னொரு பகுதியோ அச்ச உணர்வினால் ஆட்பட்டு நிற்கின்றது. முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்கான தலைமையை இழந்து விட்ட ஈழத் தமிழர்கள், கடந்த 8 வருடங்களாக தக்க தலைமையும் செயல்வலுவுள்ள அமைப்புகளும் இல்லாமல் ஒரு கையறு நிலையில் பரிதவித்துப் போய் நிற்கின்றார்கள். இந்த எட்டு வருட முழு அடிமை நிலை ஒரு அச்ச உளவியலை பெரும்பாலான ஈழத்தமிழர்களிடத்தில் ஏற்படுத்தி விட்டது.  இந்த அச்ச உளவியலின் முற்றிய வடிவமாக மிகைத் தன்னல உணர்ச்சி பெரும்பாலான ஈழத் தமிழர்களிடத்தில் ஏற்பட்டு விட்டது. இதன் விளைவே ஈகம் செய்ய முன் வராமல், “எதார்த்த வாதம்” பேசி கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு அடுத்ததைப் பார்ப்போம் எனக் கூறும் பேச்சு. அத்துடன் தாம் எப்படியாயினும் தப்பிப் பிழைத்து வாழ்ந்து விட வேண்டும் என்று முனைப்புக் காட்டும் பலரோ கடுமையாகத் தமிழ்த் தேசியம் பேசுகின்றனர். ஆனால், அடையாளப் போராட்டங்களில் கொடி பிடித்து முகநூலில் படம் போட்டு போராளி வேடந்தரிப்பதைத் தாண்டி ஈகம் செய்ய அவர்கள் துணிந்தெழுந்து வருவதாயில்லை. இப்படிப் பல ஆளுமையற்ற இளையவர்கள் தமது அடிமை உளவியலையும் செயல் வலுவிலித் தனத்தையும் மறைப்பதற்காக வீரச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவார்கள், வரலாற்று நாயகர்களின் புகைப்படங்களை முடிந்த இடங்களில் போட்டுக் காட்டுவார்கள், தமிழீழப் போராட்டம் குறித்துப் பேசுவதைத் தமக்கான முகமூடியாக்கிக் கொள்வார்கள், சுற்றி நின்று கேள்வி கேட்கும் எல்லோரையும் இரண்டகர்கள் என்பார்கள். ஆனால் ஈகம் செய்ய எழுந்து வரார்கள்.

“கானமுயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தலினிது” என்ற குறலில், அதாவது குறி தவறாமல் வேல் எறிந்து முயலை வீழ்த்தி விட்டேன் என்று சொல்வதிலும் யானையை வீழ்த்த வேலெறிந்தேன் அது தப்பி விட்டது என்று சொல்வது எவ்வளவோ மேல் என வள்ளுவம் எமக்கு வழி காட்டுகின்றது. எனவே நாம் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைக்காகப் போராடுவோம். தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடுவோம்.

தமிழ்த் தேசிய இலட்சியங்களை பேசுவதாலும் ஒரு சில அடையாளப் போராட்டங்களின் மூலம் தம்மை அடையாளப்படுத்துவதாலும் ஒருவர் தமிழ்த் தேசியர் ஆகிவிட முடியாது. தமிழ்த் தேசியம் என்பது தமிழர் தேசங்களை விடுதலை பெறச் செய்வதற்கான கருத்தியல். எனவே அந்தக் கருத்தியலை உள்வாங்கியவர்கள் தமிழின விடுதலைக்கு வழி செய்வார்கள். அதற்காக ஈகம் செய்வார்கள். அதற்காக பட்டி தொட்டியெல்லாம் ஏறி இறங்கி வேலை செய்வார்கள். அதற்காக உரமுமாவார்கள். எனவே தமிழ்த் தேசியக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியர்கள் ஆகார். தமிழ்த் தேசியக் கருத்தியலை உள்வாங்கியவர்களே தமிழ்த் தேசியர்கள் என்று கூறி தமிழ்த் தேசியம் குறித்துப் பலரிடமும் இருக்கும் புரிதலின்மை தொடர்பாக அடுத்த பத்தியில் உரையாடுவோம்.

-தம்பியன் தமிழீழம்-

2017-10-28

3,126 total views, 4 views today

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.