
மனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் மொழிசார் கலையும் நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின் கலை, நிகழ்த்து கலைகள் என மொழிசாரா கலைகளும் தம் வடிவங்களில் வேறுபட்டிருப்பினும் தமது உள்ளடக்கங்களில் ஏதோ ஒருபுள்ளியைப் பற்றியே குவிந்திருப்பது வெளிப்படையானது. மனிதனது இயங்கியலும் அதனுடன் தொடர்புடைய அவனது வாழ்வியலுமே படைப்புக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. ஒருகாலத்தில் கலைகள் வெறுமனே மகிழ்வளிப்புக்களுக்கு மட்டுமே என்ற கருத்தியல் நிலவி வந்திருக்கிறது. ஆனால் இன்று கலை தன் கட்டுக்களை உடைத்தெறிந்து சமூக பங்காளியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மனிதனுடைய இயங்கியலை அவனது நடத்தைக்கோலங்களை அழகியல் மொழியில் எழுதிய படைப்புக்கள் இன்று மனிதனது அழகியலை மட்டுமல்லாது அவனது வாழ்வியலை தீர்மானிக்கக்கூடிய திறனாக உருவெடுத்துள்ளது.
காலத்துக்குக் காலம் படைப்புவெளியின் வடிவங்களும் உள்ளடக்கங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கின்றன. காலதேச வர்த்தமான சூழலானது படைப்பு வெளியைத் தீர்மானிக்கின்றது. மனித இனத்தின் ஆரம்பகாலத்தில் கலைகள் வெறுமனே தொடர்பாடல்மொழியாக இருந்திருக்கின்றன. மொழியின் தோற்றத்தின் முன்னரே கலைகளின் தோற்றுவாயும், கலைப்படைப்புக்களுமே மொழியின் வரிகளாக இருந்தன. மொழி தனது வரிவடிவத்தினை அடைந்தபிறகு, கலைகளும் இலக்கியங்களும் மன்னர்களையும் அவர்களைச் சார்ந்தும் படைக்கப்பட்டன. ஒரு அதிகார கட்டமைக்குள் அடங்கிப்போகின்றன. அதிகார வர்க்கத்தினை மகிழ்வளிக்கும் கருவியாக கலை மாற்றமடைகின்றது. “அதிகார வெளி”க்குள் அடங்கிப்போயிருந்த கலைகளும் இலக்கியங்களும் காலப்போக்கில் சாதாரண தனிமனிதனை பிரதிபலிக்கத்தொடங்கின. இன்று கலைகளும் இலக்கியங்களின் மக்களின் பொதுவெளிக்குள் அதிகார வெளியினை கட்டியமைக்கக்கூடிய வலிமையுடன் மக்களையும் அவர்களது சுயங்களையும் பாடுபொருளாக்கியிருக்கின்றன.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட “அரசியல்” என்னும் சொல்லானது இன்று மனிதர்களையே “அரசியல் விலங்குகளாக” மாற்றியிருப்பதானது, அரசியலை விடுத்தான ஒரு வாழ்க்கைமுறை மனிதர்களுக்கு இல்லை என்பதையே சுட்டிநிற்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ ஏதோவொரு அரசின் குடிமகனாக / குடிமகளாக இருந்துவருவதனால் அரசியலிலிருந்து நாம் எவருமே தப்பித்துவிடமுடியாது. அரசின் கொள்கைகளுக்குள் உட்படவேண்டிய கட்டாயத்திற்கும் ஆட்பட்டிருக்கிறோம். ஆனால்ää ஈழத்தைப்பொறுத்தவரையில் நாங்கள் பேரினவாத ஆட்சியை எதிர்த்து, எமக்கான ஒரு நாட்டிற்காக போராடிவருகின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கக் கட்டுக்களை உடைத்து, எம்மை நாமே ஆளும் கொள்கைக்காக பல்லாயிரம் உயிர்களை தொலைத்திருக்கின்றோம். மறந்து, புறக்கணித்து போவதற்கு இந்த இழப்புக்கள் சாதாரணமானவையல்ல. இன்னும் வரப்போகும் பல நூற்றாண்டுகளுக்கும் எம் கலைகளும் இலக்கியங்களும் எம் போரின் எழுத்துக்களை கூறிக்கொண்டே இருக்கப்போகின்றன. வாழ்வியலைப் பாடுவதும் எழுதுவதும் கலைகளும் இலக்கியங்களுமெனில், எமது வாழ்வியல் எமது போராட்டமல்லவா.
எமது தாயகத்திற்கான விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் பிணைந்த எங்கள் வாழ்வியலும் எந்த கலைஞனாலும் செதுக்கிவிடமுடியாத ஒன்று. வீரத்தின் கதைகளும் வலிகளின் குமுறல்களும் வன்முறைகளின் வதைகளும் அறிந்தவர்கள் நாம். எமது வலிகளை கடல்கடந்த எவனோ ஒருவன் குறித்துச்செல்கிறான். “கான மயிலாடக் கண்டிருந்த” வான்கோழிகள் அவர்கள். எமது தினக்குறிப்புக்களை எழுதும் உரிமை எங்களுக்கு மட்டுமேயானது. நாளைய வரலாறுகளுக்கு உசாத்துணைகளாகவுள்ள இன்றைய படைப்புக்களின் கோடுகள் அந்த வரலாற்றினை எழுதக்கூடிய தகுதியுடையவர்களால் மட்டுமே எழுதப்படவேண்டும். ஆனால் செயல்வீரர்கள் களமுனைகளில் எதிரியை நோக்கிக் காவலிருக்கும் கணப்பொழுதுகளில் சொல்வீரர்களின் கைகளில் எழுத்தாயுதம் சிக்கிக்கொண்டது எம் இனத்தின் சாபக்கேடாகும். புலம்பெயர்; நாடுகளில் பதுங்கியிருந்துகொண்டு இனவிடுதலை பற்றிய இலக்கியப்போர் செய்த இலக்கியவாதிகளின் காலம் இன்று பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது. போரினுள் நின்று நெஞ்சில் குண்டுதாங்கியவர்கள் தங்களது ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்டதுடன் ஓய்ந்துவிடவில்லை. அவர்களது உணர்வுகளும் வாழ்வியலும் தன்னிலை எழுத்துக்களாக வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. எங்கேயோ குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு முள்ளிவாய்க்காலின் அவலத்தை வெறும் மொழிக்கோர்ப்புக்களால் எழுதியவர்களின் புறநிலை எழுத்துக்கள் செல்லுபடியற்றதாகிப்போய்க்கொண்டிருக்கின்றன. மக்களுக்காக போராடியவர்களை “நடுநிலை” எனும் பெயரில் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியவர்களின் காலம் ஏறத்தாழ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விடுதலைப்போராட்டத்தில் விடுதலை சார்ந்த கருத்தியல்களை மக்களின் பக்கம் நின்று சொன்னது கலைகளே. மக்களைத் தேடிச்சென்றது கலை. அவர்களின் முற்றத்தில் நின்றுகொண்டு அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை பற்றி பேசியது. அதிகாரக்கதிரைகளில் அமர்ந்துகொண்டு புரியாத மொழியில் கொள்கைகளைக் கூறவில்லை. வீதிநாடகங்களாகவும் பாடல்களாகவும் ஒவ்வொரு தமிழனின் வீட்டுப் படலையையும் தட்டியது. துப்பாக்கிக் குண்டுகளால் எமக்கேயான நாட்டின் எல்லையை நிர்ணயிப்பதற்கு வீரர்களை அனுப்பியது. எழுத்துக்கள் இலக்கியப்போர் புரிந்தன. ஒவ்வொரு சமரின் வெற்றியிலும் பாடல்கள் ஓங்கி ஒலித்தன. வெறும் வாய்ச்சொல்லில் வீரம்பேசுகிறார்கள் இன்றைய மனிதர்கள். அன்று செயலுக்கு பின்னால் சொற்போரைத் தொடுத்தது தமிழீழ தேசியத் தலைவரின் செயல்வீரம். ஆனையிறவின் களவேள்வியில் விடுதலைக்கான தீயை மூண்டெழச்செய்தன பாடல்கள். காதலையும் வீரத்தையும் ஒருங்கே கொண்ட தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கான வாழ்வியலை எழுதிச்சென்றனர் எம் மாவீரர்கள். “போர் இலக்கியங்கள்” என்ற சொல்லாடல் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்ததும் இந்தக்காலத்திலே தான். போரினை பாடும் இலக்கியங்கள் என்றாலும் சரிää போரினை சாடும் இலக்கியங்கள் என்றாலும் சரி, அவை போரிலக்கியங்களாகின. இலக்கியங்கள் என்று வெறுமனே கூறினால்கூட அது போர்சார்ந்த இலக்கியம் என்று எண்ணுமளவிற்கு, போரானது எம்மவரின் உணர்வுகளில் மட்டுமல்லாது, கற்பனைகளிலும் குடியிருந்தது. புறவயநோக்கில் போரினை எழுதியோரும், போரினுள்ளிருந்து போரினை எழுதியோரும் இடைவெட்டும் புள்ளியில் படைப்பாக்க வெளி வெறுமையாகவே இருக்கிறது.
போராளிகளின் படைப்புக்கள் இன்னுமொரு தளத்திற்கு தமிழ்ப் படைப்புலகத்தை இட்டுச்சென்றன. வீரத்தின் குறியீடுகளாக, இறப்பின் மறு உருவங்களாக பார்க்கப்பட்ட அவர்களின் எழுத்துக்கள் இரட்டை ஆளுமைகளின் பிரதிகளாக படைப்பாக்கம் பெற்றன. போராட்டத்தின் புறக்கருதுகோள்களை அடித்துநொருக்கக்கூடிய படைப்புகளை செய்கின்ற ஆற்றல் இவர்களிடம் மட்டுமே இருக்கும். ஏனெனில் அவர்களால் மட்டுமே போரினை, உள்ளிருந்து வெளியேயும்: வெளியிலிருந்து உள்ளேயும் நோக்க முடியும்.
மனிதர்களின் உளவியற்படி, உணர்வுரீதியாக அதிகூடிய தாக்கங்கங்களிற்கு உட்பட்டவர்களின் படைப்புகளும் படைப்புவெளிகளும் அவர்களது அகவுணர்வு சார்ந்து, அந்த தாக்கங்களினையே மீள்படைப்பாக்கம் செய்வார்கள். படைப்பாக்க வெளி அவர்களிடம் இலகுவாகச் சரணடைந்துவிடும். எம் இனத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் அதுதான். அடக்கியாளப்பட்ட மொழிகள் தமக்கான வெளி கிடைத்ததும் தம் இருப்பினை காட்ட முனைகின்றன. களமாடிய போராளிகள் தங்களது மொழிகளை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஏனைய படைப்பாளிகளுக்கு இருக்கும் “பிரபலமாகும்” உளவியல் தேவை இவர்களுக்கு இல்லை. பிரபலமாவதற்காக “ஈழத்தை” விற்கவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் பார்வையாளர்களான மக்களுக்கு அதன் தரத்தை பிரித்தறியும் தேடல் இருக்கவேண்டும். நிதர்சனத்தை விட மாயை மக்களிடம் இலகுவாக சென்றடையக்கூடியது. அதற்கு இன்றைய ஊடகங்களும் துணைபோகின்றன. இணைய வசதியும் கணனியும் இருந்தால் தானும் எழுத்தாளனே எனும் நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடு தொடர்பான எந்தவித அக்கறையுமின்றி, நல்லிணக்கம் எனும் பேரினவாத கொள்கைவகுப்பாக்கத்தினால் சபிக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பாளிகளால், பிழையான கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றமை கண்டிக்கப்படவேண்டியதாகும்.
இலக்கியம் என்பதும் கலை என்பதும் அரசியல் அல்ல. ஆனால், அவை படைக்கப்படும் முறைமையிலும் வடிவத்திலும் அரசியலாகிவிடுகின்றன. “நான் அரசியல் பேசுவதில்லை” என்று ஒரு படைப்பாளியின் கூற்றினிலுள்ள அரசியல் நுண்மையானது. அந்த அரசியலை பகுத்துணரக்கூடிய வாசகர்களும் பார்வையாளர்களும் உருவாகும்வரையில் தான் கருத்தியல்போலிகளின் சித்தாந்தங்கள் எடுபடும். போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் “புலியெதிர்ப்பு” பேசிய படைப்புக்களும் அவற்றின் படைப்பாளிகளும் இன்று தமது கருத்தியல் போலிகளை முன்வைப்பது குறைந்துவிட்டது. ஆயினும் அவற்றை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை எம் சமூகத்திற்கு இருக்கின்றது. நான் அரசியல் பேசுவதில்லை என்று எவரும் ஒதுங்கிவிட முடியாது. ஒரு நாட்டின் அரசியல் தான் அந்த நாட்டின் அரிசி விலையைக் கூட தீர்மானிக்கிறது எனும்போது படைப்புக்கள் அதற்கு விதிவிலக்கல்லவே.
மக்களின் வாழ்வியலிலிருந்து கற்றுக்கொண்டு மீளவும் மக்களுக்கே கற்பிப்போரிற்கான களங்கள் விரிவடைந்திருக்கிறது. தமிழ் அரசியற்பரப்பில் இவை புதிய விதிகளாக மாறவேண்டும். புதிய பரிமாணத்துடன் எமக்கான கலை இலக்கியங்கள் படைக்கப்படாதவிடத்து அவை அர்த்தமற்றுப்போய்விடும். மாறாக இன்றைய படைப்புப்பரப்பில் மக்கள் விரோத படைப்புக்களும் படைப்பாளிகளும் கருத்தியல் ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் எதிர்ப்பலைகளை உருவாக்கிவருகின்றார்கள். அவர்களது கருத்தியல் பிறழ்வுகள் மொழி என்னும் கட்டினால் கட்டுண்டு கிடக்கின்றன. மொழிக்கோர்ப்பின் நுட்பம் அவர்களை பிரபலங்களாக்கியும் விடும் துயரமும் நிகழ்ந்துவிட்டது. படைப்பின் உள்ளடக்கம் தனக்குள் சிதைவுண்டிருக்க, வடிவவியல் தன் எதிர்ப்பின் அலைகளை சத்தமின்றி ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஆற்றுகைத்தளமும் நிகழ்த்துகலை எனும் வடிவத்தையும் தாண்டி இன்று திரைக்குள் நின்று பேச ஆரம்பித்துள்ளது. அன்றைய நிதர்சனப் படைப்புக்கள் எஞ்சியுள்ள காண்பிய ஆவணங்களாகவும் வரலாற்றைச் சொல்லிநிற்கும் படைப்புக்களாகிவிட்டன. படிமங்களின் அசைவினுள் எம் கதைகள் அடக்கப்படினும்ää மொழிசார்ந்த வீழ்ச்சிக்கு இன்றைய குறும்படங்கள் வழிவகுப்பதைக் காணமுடிகிறது. மொழியின் செம்மைப்படுத்தலுக்கு தோற்றுவாயாக இருந்த படைப்புக்கள், இன்ற மக்கள் ஊடகம் என்னும் விம்பத்தினுள் நின்றுகொண்டு மொழியின் சிதைவுக்குத் துணைபோகின்றன. எமக்கான மொழி என்பது எமது பிராந்திய சூழல், பண்பாடு எனும் தளங்களில் தனித்துவப்படுகின்றது. ஆனால் வெகுமக்கள் ஊடகத்தின் பல்வகை நுகர்வோரால், பொதுமொழி எனும் தளத்தினுள் புகவேண்டியிருப்பதால் எமக்கான மொழியும் அதன் நுண்ணிய உச்சரிப்புக்களும் தொலைந்துகொண்டிருக்கின்றன. அது ஆரோக்கியமான விடயமும் அல்ல. படைப்பாளிகள் வெளிப்பாடு தொடர்பான பிரக்ஞைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை மொழிக்கான தனித்துவத்தை பேணுவதையும் தம் படைப்புக்களினூடாக உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
கலை இலக்கிய வரலாற்றுப் பரப்பில் பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழீழத்தின் கல்விப்பரப்பில் அறிவுசார்ந்த தெளிவுகளை மாணவர்களுக்கு புகட்டியவர்கள் அவர்கள். பல்கலைக்கழகம் எனும் உயர்கல்விப் பீடத்தினை அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை பேசும் இடங்களாக மாற்றியவர்கள். கலைஇலக்கிய குழுக்களின் வழியாக மண்சார் மக்களையும் கல்விசார் மாணவர்களையும் ஒருநேர்கோட்டில் சந்திக்கச்செய்து, எம் மண்ணின் படைப்புக்களை வெளிக்கொணர்ந்தவர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் சரி, கிழக்குப் பல்கலைக்கழகமும் சரி மக்களுடைய குரல்களாக இயங்கிய காலங்கள் அவை. இன்றைய பல்கலைக்கழகம் என்பது அடித்தட்டு மக்கள் தொடர்பான ஆய்வுகளை வெறும் புத்தகங்களின் துணையுடன் நிறுவும் “சான்றிதழ்சார்” கல்வியாளர்களை உருவாக்கும் இயந்திரமாகிவிட்டது. மக்களின் இயங்கியலிலிருந்து வெளிநடப்பு செய்கின்ற படைப்பாளிகளின் உருவாக்கத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவையும் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கிறது.
ஒருகாலகட்டத்தில் மொழிசார் படைப்புக்கள் தவிர்ந்த ஏனையவை அனைத்தும் அடித்தட்டு மக்களிடையே மட்டுமே இருந்தன. கலை எனும் ரீதியில் அவர்களது படைப்புக்கள் கற்பனை வாழ்வியலை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டிருந்தன. கருத்தியல் ரீதியான தெளிவாக்குதல்கள் அவர்களைச் சென்றடையவில்லை. கருத்தியல் ரீதியான இலக்கியங்களும் தேசியம் சார்ந்த படைப்புக்களாக வெளிவரவில்லை. புத்திஜீவிகளின் அறிவுப் பிரகடனங்களிற்கான விளம்பரங்களாகவே படைப்புக்கள் வெளிவந்தன. அவ்வாறான படைப்புக்களால் சமூகத்தில் எந்தமாற்றமும் விளைந்துவிடப்போவதில்லை. படைப்பும் புரட்சியும் இணைந்திருக்கும்போதே அந்தப் படைப்பானது அழகியலையும் தாண்டி இயங்குதலிற்குரியதாக மாறும். புரட்சியாளனின் கைகளில் மட்டுமே மொழி தனக்கான வடிவத்தை எடுப்பதோடு படைப்பு நோக்கத்தையும் எட்டிவிடும்.
கலை இலக்கியங்களும் அவற்றின் பேசுபொருட்களும் மக்களுக்கானவை. மக்களைப்பற்றி பேசும் படைப்புக்களை மக்களுடன், மக்களுக்காக வாழ்ந்தவர்கள் பேச விளையும்போது மட்டுமே அது ஆழமான ஒரு மக்கள் படைப்பாக இருக்கும். களத்தின் நடுவே நின்று எதிரியை எதிர்த்தவர்களின் கைகளில் படைப்புலகம் சென்றுகொண்டிருப்பது ஆரோக்கியமான விடயமாகும். தனிநாடு என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி விடுதலைப்போர் நகர்ந்துகொண்டிருந்தவேளையிலும், கலைகளுக்கு அதற்குரிய இடத்தினை எம் தலைவர் கொடுத்திருந்தார். இனத்தின் வேர் கலைகளும் பண்பாடும் என்பது புரிந்த தலைவர் அவர். வெறுமனே கற்பனையில் செம்மணியையும் முள்ளிவாய்க்காலையும் தென்தமிழீழத்தின் படுகாலைகளையும் படைப்பில் கூறிவிடமுடியாது. புகழுக்காக எழுதும் அவைக்களப் புலவர்களின் கற்பனைகளாலும் புனைவுகளாலும் எங்களுக்கான புறநானூற்றினை படைக்க முடியாது.
ஈழம் தனது வரலாற்றில் பல்வேறு அந்நியர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றது. காலஓட்டத்தில் மக்களுடைய நுகர்வுக்கலாச்சாரமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. படைப்பாளிகளையும் படைப்புக்களையும் கூட நுகர்வுமாற்றங்களே தீர்மானிக்கின்றன. வெகுவேகமாக மாறிக்கொண்டிருக்கும் பண்பாட்டு மாற்றத்தின் பின்னணியில் வலிந்து திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நுகர்வுமனநிலையே காணப்படுகிறது. எனவே படைப்புக்கள் தமது வரையறைக்குள் நின்றுகொண்டு பண்பாட்டு தளத்தில் மாற்றமேற்படாத வகையில் நுகர்வுக்கான படைப்புக்களைக் கொண்டுவரல் வேண்டும்.
வெளிப்படையான எதிர்ப்புக்களை நிகழ்த்தமுடியாமல் ஆயுதங்கள் மௌனமாக இருக்கும் இந்தவேளையில் கலை இலக்கியத்தின் சுமை பன்மடங்காக்கப்பட்டுள்ளது. போராட்ட காலத்தில் உணர்வுரீதியான கருத்தூட்டங்களைச் செய்யும் படைப்புக்களின் தேவை மட்டுமே காணப்பட்டது. அன்றைய சூழலில் போராட்டம் தொடர்பான அறிவூட்டல்களை போராட்டத்தின் இயங்குநிலை புகட்டிவந்தது. ஆனால் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் உணர்வுரீதியான கருத்தியல்களை விளங்கிக்கொள்வதற்கான, போர்சார் புற அறிவினை பெறாதவர்களே. எனவே அவர்களுக்கான அறிவூட்டல்களை செய்யவேண்டிய பாரிய பொறுப்பும் படைப்பாளிகளுக்கு இருக்கின்றது. அதுமட்டுமல்லாது அரச இயந்திரத்தினால் கட்டவிழ்த்தப்படும் கொள்கைகளுக்கு எதிரான ஒரு கலைப்போரினை நிகழ்த்தவேண்டிய தேவையும் படைப்புக்களுக்கு உரியதாகின்றது. எனவே படைப்பாளி என்பவன் மக்களுக்காக தன் படைப்புக்களை சமர்ப்பிப்பவனாக இருக்கவேண்டும். அதாவது விடுதலையை முழுமூச்சாகக் கொண்டு முழுநேரமும் தங்களை அர்ப்பணிக்க தயாராக இருப்பவர்களால் மட்டுமே எமது தமிழ்ச்சூழலில் படைப்பாளிகளாக இருக்கமுடியும்.
ஆனால் அதற்கு மாறாக இந்த உலகமயமாதல் சூழலில் பணம் இருப்பவனாலும் பணத்தினை சேர்க்க முடிபவனாலும் மட்டுமே படைப்பாளிகளாக தம்மை இனங்காட்டமுடிகிறது. சில எதிர்மறைக் கருத்தியல்களை கொண்ட படைப்புக்களை பரவச்செய்வதற்கு ஈழத்து படைப்பாளிகளை விலைக்கு வாங்கக்கூடிய அளவில் பன்னாட்டு அரசியல் முழுமூச்சாக உழைக்கிறது. விலைபோகின்ற படைப்பாளிகள் தம்மையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் விற்றுக்கொண்டிருப்பதும் கண்கூடு. வெறும் பொருண்மிய நலன்களுக்காக தகுதியற்றவர்களாலும், மக்களுக்கான அரசியலை பேசமுடியாதவர்களாலும் எமக்கான படைப்புலகம் நிரம்பிவழிகிறது. அந்தப்போக்கினை நிறுத்துவதற்குரிய பொருண்மியக் கட்டமைப்பினை உருவாக்குவதுடன் வலிய படைப்புக்களை படைக்கவேண்டிய தேவையும் மண்சார் படைப்பாளிகளிடமே இருக்கின்றது. அன்று பணமில்லாத நிலையில் கூட கையெழுத்து மூலமும் கருத்துரைகள் மூலமும் கொள்கை பரப்பி வெற்றி கண்டார்கள். ஆனால் இன்று அது சாத்தியமாகாது. பலவீனமான இந்த பொருண்மியக் கட்டமைப்பில் அதற்குரிய பணத்தையும் ஈட்டவேண்டிய தேவை இருப்பதால், பொருண்மிய நச்சு சூழல் அவர்களை முடக்கிவிடுகிறது. பொருண்மியம் என்பதே அரசின் அனைத்துக் கூறுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்போது, எமக்கான படைப்புவெளிகளை முடக்குவதன் மூலம் எம் விடுதலைக்கான வெளியையும் முடக்குவதாகவும் இருக்கும் இந்நிலை தொடருமா?
“நயனிலனென்பது சொல்லும் பயனில
பாரித்துரைக்கும் உரை”
30-12-2016
செல்வி
17,855 total views, 2 views today
Leave a Reply
You must be logged in to post a comment.