தமிழ் என்பது வெறும் மொழி அல்ல: அது இனத்திற்கான அரசியல் அழிப்பின் பின்னான எழுகையின் குறியீடு – செல்வி-

இனமொன்றின் இருப்பினையும் இருப்பின்மையினையும் நிலைநிறுத்துகின்ற இனம் சார் அடையாளத்தை இனத்தின் குறிகாட்டியாக்கி இனத்தின் இருத்தலை நீட்டிக்கின்ற பெரும் காரணி மொழியாகும். அந்த இருத்தலின் தொடர்ச்சியில் தமிழ்த்தேசியம் என்னும் அரசியல் வழி முனைப்புப் பெறும். தமிழர் தமது தேசத்தை அடைவதற்கான கருத்தியலான தமிழ்த்தேசியக் கருத்தியல் அதன்மீதான வன் கவர்வுகளையும் (ஆக்கிரமிப்புக்களும்) தாண்டி, நிலைபெற்றிருப்பதில் தமிழ் மொழியின் பங்கு முதன்மையானது. மொழி என்ற அச்சாணியைச் சுற்றியே தேசம், பண்பாடு என்ற இனவியல் கூறுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. வல்லாண்மை (ஆதிக்க)  அரசியலும் இன விடுதலைக்கான அரசியலும் மோதிக் கொள்ளும் தளத்தில் பல மொழிகள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்மொழியானது வல்லாண்மை (அதிகார) எதிர்ப்பின் குறியீடாக மரபுவழி மொழியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுடன் அந்த மொழி சார்ந்த மக்களை மரபுவழித் தமிழ்த் தேசிய இனம் என்ற அடையாளத்தையும் உருவாக்கியிருக்கிறது. மொழிச்சிதைப்பினூடான இனச் சிதைப்பின் முயற்சியில் பகைவர்களை காலங்காலமாக எதிர்கொண்டு, கொற்றம், கொடி, நிலம் என்ற இனத்தின் காப்பு வெளிகளை இழந்திருப்பினும் இன்று வரைக்கும் செம்மொழியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

ஆயினும் அந்த காப்பை நுண்மையாக செயலிழக்க செய்யும் வலுக்கள் வலுவாக செயற்படத் தொடங்கியுள்ளன. அந்த மறைமுக ஊடுருவல்கள் பற்றிய தெளிவும் அதன் பின்னாலுள்ள அரசியல் நரித்தனமும் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியவை. களையெடுக்கப்பட வேண்டிய பிற மொழிகளின் ஊடுருவலையும் அதன் பின்னாலுள்ள அரசியலையும் இப்பத்தி தொட்டுச் செல்கிறது.

காலத்துக்குக் காலம் தேசமும் தேசியமும் மக்களுடைய வாழ்வியலும் சார்ந்த கருத்தியல்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கருத்தியல்களின் வழி மக்களுடைய உரிமைகள் மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளும் இருக்கலாம். மாக்சிசம், லெனினிசம், மாவோயிசம், ரொக்சிசம்போன்ற பல கருத்தியல்கள் போல  இன விடுதலை பற்றியும் பல கருத்தியல்கள் பேசியிருக்கின்றன. தேசங்களுக்கு தன்னாட்சி உரிமை இருக்கின்றது என்று லெனின் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமை பற்றிய தனது வரைவிலக்கணத்தைப் பதிவுசெய்திருக்கிறார். தொடர்ச்சியான நிலப்பரப்பு, அந்த நிலத்தில் மக்களது வாழ்வியல் தொடர்ச்சி, பொதுவான மொழி, பொதுவான பொருண்மியப் பண்பாடு, ஒத்த பண்பாட்டின் காரணமாக எழும் ஒருமித்த உளவியல் என்பன தேசிய இனங்களுக்கான கூறுகளாக ஸ்ராலின் முன்வைத்திருக்கிறார். அந்தக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு இனம் தனக்கேயுரிய இறைமையுடைய தனித் தேசியத்தை கட்டியமைப்பதற்கான தகுதிநிலையைக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக தேசிய இனம் தொடர்பாகவும் அதன் விடுதலை தொடர்பாகவும் பல கருத்தியல்கள் இருப்பினும்எமக்கான ஒரு தேசத்திற்கான தனித்த கருத்தியல்களாக அவை இருக்க முடியாது. குறிப்பட்ட தளத்தின் பின்னணியில் எழுந்த கருத்தியல்களை எல்லா தளத்திலிருக்கும் இனங்களுக்கும் பொதுமைப்படுத்திவிட முடியாது. தமிழ்த் தேசிய இனம் என்பது தொன்மம், இலக்கியச் செழிப்பு, அறிவியல் மரபு, வாழ்வியல் நெறிகளை உலகிற்குச் சொன்ன இனம், மரபுவழித் தாயகம் போன்றவற்றை உள்ளடக்கிய மிக நீண்ட காலத் தொடர்ச்சியைக் கொண்டது. அந்த இனத்தின் விடுதலையை, அந்த விடுதலைக்கான கருத்தியலை வெவ்வேறு தளங்களில் எழுந்த கருத்தியல்கள் முழுமையாகப் பேசிவிட முடியாது. அதனாலேயே எமது வாழ்நிலை இயங்கு தளத்தில் எமக்கான தேசத்திற்கான கருத்தியல் முகிழ்த்தது.

தமிழ்த்தேசியக் கருத்தியலில் மொழி என்பது தமிழ்த் தேசியத்தின் மூலகத்தில்  உரிமைக்கான அடிப்படைக் கூறாக இருக்கிறது. கருத்துக்களைப் பகிர்வதற்கான ஊடகமாக எழுந்த மொழி இன்று தொடர்பாடலுக்கான கருவியே மொழி என்ற எண்ணக் கருவை உடைத்து குறித்த மொழிசார் குழுமத்திற்கான அரசியல், கலை, வரலாறு, குமுக (சமூக) நிலை போன்றவையை உள்ளடக்கிய பண்பாட்டுத்தளமாகவும் அடையாளமாகவும் இயங்குகிறது. குறிப்பிட்ட மொழியினைப் பேசுகின்ற இனத்தினுடைய வாழ்வியல் கூறுகளைத் தன்னகத்தே கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றுத் தொடர்ச்சியில் இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்தி வந்த மொழியானது, சில இனங்களின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கியுமிருக்கிறது. “ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்துவிடு” என்ற வல்லாண்மை அரசியலின் கோட்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு சிதைவிற்கு உள்ளாகி, அதனால் அந்த இனம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மரபுவழித் தொன்மையான தமிழ்மொழிக்கு தமிழ் என்ற மொழியும் அதனூடாக தமிழர் என்ற இனத்தையும் காக்கவேண்டிய இரட்டைச்சுமை இருக்கிறது. மரபுவழித்தேசிய இனமாக எம்மை நிலைநிறுத்துவதற்கு இன்று எம்மிடம் எஞ்சியுள்ள வன்மையான கருவி மொழியேயாகும். அந்த மொழியின் அரசியலில் மொழிச் சிதைப்பு என்பது பகைவர்களால் மிக நுண்மையான திட்டமிடல்கள் மூலம் நிகழ்த்தப்படுகிறது. மொழித்தூய்மை என்ற விடயத்தினை தனித்தமிழின் காப்பின் முதன்மையை மக்களிடம் கொண்டுசேர்ப்பதன் மூலமே கட்டமைக்கப்பட்ட மொழிச்சிதைவிலிருந்து எம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். மொழியறிஞர் தேவநேயப் பாவாணார்  “ தமிழென ஒன்றும் தனித்தமிழென ஒன்றும் இருவேறு மொழிகள் அல்ல – தமிழதுதானே தனித்தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை” என்று மொழித்தூய்மையின் எளிமையான விளக்கத்தினைக் கொடுத்திருக்கிறார். தமிழ் நிலத்தை மாற்றான் ஆட்சி செய்தபோது தமிழரிடையே மொழியுணர்வும் தொன்மை தொடர்பான அறிவும் குன்றிப்போயிருந்ததால், மொழியின் சிதைப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழின் படைப்புத்தளத்தில் நிறைந்திருந்த காப்பியங்களும் இலக்கியங்களும் மொழி அழிப்பிற்கு எதிராக அணியமாகி, தமிழைக் காக்கும் காப்பரண்களாயின.எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் அதனது மொழியியல் அழகையும் தாண்டி, அரசியல் கருத்தூட்டத்தினை மிகவும் நேர்த்தியாகச் செய்த தேசியக் காப்பியம் எனப்படுகிறது.

கண்ணகி என்னும் பண்டைத் தமிழர் குறியீட்டினை தளமாகக் கொண்டு தமிழ்த்தேசியத்தின் கோட்பாடுகள் வரையப்பட்ட சிலப்பதிகாரம் அன்றைய வல்லாண்மை அரசியலால் மறைப்புக்கும் இலக்கிய மறைப்புக்கும் உட்படுத்தப்பட்டது. ஆனாலும் தமிழடையாளத்தை இலகுவாக அழிக்க முடியாதென்று தெரிந்துகொண்ட ஆரியம் மொழியைச் சிதைக்கும் வேலைகளை முடுக்கியது. தமிழ்த்தேசிய இனத்தின் மீதான ஆரியத்தின் காழ்ப்புணர்வில் தமிழ்மொழி நுண்சிதைவுக்கு உட்படத் தொடங்கியது.

தமிழர்களின் தனித்த தேசியத்தின் இருப்பை அழித்தொழிக்க நினைப்பது சிங்களம் மட்டுமல்ல. அதற்கு முன்னே இருந்த ஆரிய தமிழ் பகைமையானது தமிழ் மொழியினதும் தமிழர்களினதும் இருப்பினை காலத்துக்குக் காலம் கேள்விக்குள்ளாக்கி வந்திருக்கிறது. தமிழர் தாயகத்தின் இறைமை பறிக்கப்பட்டபோது , ஆதிக்க அரசியலின் பண்பாட்டுப் படையெடுப்பும் அதன் விளைவான பண்பாட்டு மடைமாற்றமும் வாழ்வியல் நெறி சிதைப்புகளும் நிகழ்ந்தன. இந்து, இந்தி,இந்தியா என்ற மாந்த குல அழிப்புக் கருத்தியலை எதிர்க்க வேண்டிய நிலையில் தமிழ்த்தேசியம் இருக்கிறது. தமிழனை இந்தியனாக்குகின்ற பொறிமுறையில் தமிழகத் தமிழன் சிக்கியிருக்க, தனிச்சிங்களச் சட்டம் நில அபகரிப்பு என ஈழத் தமிழன் ஏதிலியாக்கப்பட்டான்.

நிலத்தின் வல்லாண்மையின் காரணமாக மதம் சார்ந்த மடைமாற்றம் பெருமளவில் நிகழ்த்தப்பட்டு அதன் வழி மொழியின் அழிப்பு நிகழ்ந்தது. மொழி என்னும் பொதுத் தளத்தில் இணைந்திருந்த மக்களை அதே மொழியினூடாக மதக் கருத்தியல்கள் பரப்பப்பட்டு துண்டாக்கினார்கள்.  இயற்கை வழிபாட்டு முறைமையினைக் கொண்ட தமிழர் வாழ்வியல் முறையில் மதங்கள் புகுத்தப்பட்டு, ஒரே மொழி பேசுபவனை மதம் சார் பகைவர்களாக்கி, தன்னுடைய மொழியை, தன்னுடைய இலக்கியத்தை மதவெறியினால் தானே அழித்தொழிக்க வைக்கப்படுகிறான் தமிழன். தமிழனை மதம் என்னும் கூறால் பிளவுபடுத்தி அந்த மொழியழிப்பை செய்தது ஆரியம். இலக்கியங்கள் வெறுமனே மொழிப்புலமைக்கானவை அல்ல. அவை தொன்மம், அரசியல் என்று பல்பரிமாண வாசித்தலுக்கானவை. அதனை நன்கே உணர்ந்த ஆரியம் மதத்தின் போர்வையில் தமிழின் உள் நின்றே தமிழர்களையும் தமிழையும் பிளவுபடுத்தும் வேலையைச் செய்தது.

ஈழத்திலும் ஆறுமுக நாவலரால் துவக்கப்பட்ட ஆகமச் சைவ மீட்டுருவாக்கம் தமிழ் மொழியினை சமசுகிருதம் கலந்த மொழியாக மடைமாற்றம் செய்யும் வேலையைச் செய்தது. சைவத் தமிழ் என்ற பெயரில் இந்துத்துவத்தை உட்கொணர்ந்து, மணிப்பிரவாளம் என்னும் கலப்பு மொழியை உள்ளீர்த்து, சைவம் என்னும் குறுகிய வட்டத்தினுள் தமிழினை ஒடுக்கும் படு முட்டாள்தனமான வேலைகளுக்கான அடியாளாக நாவலர் இருந்திருக்கிறார். இன்று வரைக்கும் அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு படைப்பிலக்கியங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிறைந்திருக்கிறார். நாவலரின் கருத்தியலின் கீழ் பல சமய நூல்கள் ஈழத்து படைப்புவெளியில் உருவாகின. அதன் தாக்கத்தினாலே எழுந்த “யாழ்ப்பாணத் தமிழ்” என்கின்ற தூய்மைவாதம் முரணான வகையில் முதன்மையாக்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பின் எச்சமாக, சமசுக்கிருதத்தைத் தன்னுள்ளே எடுத்து வைத்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழ் தூய்மையானதா? ஆனால், நிலப் பண்பாட்டுத் தளத்தினடிப்படையில் ஏதோ ஒரு வகையில் அது முதன்மையானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிறிது காலம் நாவலர் இருந்திருப்பாரேயானால், இன்று நாமும் மலையாளம் போன்றதொரு மொழியினைப் பேசி, வேறொரு இனமாக மடைமாற்றம் செய்யப்பட்டிருப்போம். மொழிக் கலப்பும் ஒலிக்கலப்பும் இணைந்து தமிழிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளுவம்,குடகம்,துடவம், கோத்தம், கோண்டி, கொண்டா, கூய், ஒராஒன், இராசமகால், பிராகுவி, குருக்கு, குவீ, பர்சீ, கடபம், மாலத்தோ, நாய்க்கீ, கோலாமி முதலிய மொழிகள் பிரிந்து வழங்க வழிவகுத்தன.இதனடிப்படையில் மக்களது தேசிய இனங்களும் பிரிபட்டன. ஒரு தேசிய இனத்திலிருந்து பிறிதொரு தேசிய இனம் உருவாவதலுக்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன. அந்த வரலாற்றுப் பிழை நிகழாது இன்னமும் தமிழர்களாக இருப்பதற்கு தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியின் தொன்மத்தினையும் அதன் மரபினையும் ஆய்வுக்குட்படுத்தி நோக்குவோமெனில் ஈழத்தமிழ் என்று முதன்மைப்படுத்தப்படுகின்ற யாழ்ப்பாணத்தமிழ் தூய்மையானதன்று. அதனை உணராது, அதுவே தூய்மையானது என்ற கருத்தியல் ஆழமாகக் கட்டியமைக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதும் முட்டாள்தனமானதுமான விடயமாகும்.

எங்களுடைய தொன்மைகளை ஆராய்ந்து எமக்கென உருவாக்கப்பட வேண்டியது தமிழ்த்தேசியக் கருத்தியல். எம்மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளிற்கும் ஆயிரக்கணக்கான பண்பாட்டுப் படையெடுப்புக்களின் அதிகாரங்களுக்கும் அடங்கிப் போகாது நிலைத்ததற்கான குறிகாட்டி எமது மொழி. அவ்வாறிருக்கும்போது நாம் ஆக்கிரமிக்கப்பட்டதன்  எச்சங்களை எமது எழுத்துக்களிலும் பேச்சிலும் நடைமுறை வாழ்வியலிலும் எமது பெயர்களிலும் தாங்கிக்கொண்டிருப்பது எமது இனத்துக்கு இழுக்கல்லவா? இந்துமதமும் வடமொழியும் பெயர்களில் குடிகொண்டிருக்கின்றன. அதிலிருந்து வெளிவருவோமா என்று பார்த்தால் அதுவுமில்லை. இன்னமும் நுனிநாக்கில் எச்சில் விழக்கூடிய பெயர்களையே தேடித்தேடி பிள்ளைகளுக்கு வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆளடையாளங்கள் மட்டுமல்லாது நிலத்தின் அடையாளங்களும் இனத்தின் அடையாளத்தினின்று வழுவியதாகவே அமைக்கப்படுகின்றன. பௌத்த சிங்களவன் எமது நிலங்களுக்கு சிங்களப் பெயர்களை வைப்பது எந்தளவுக்கு சிக்கலானதோ, அதேயளவுக்கு எம்முடைய ஊர்ப்பெயர்களும் எம்மிடமிருக்கும் சான்றிதழ்களும் அதன் நகல்களும் சமசுக்கிருதத்தினால் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

மரபுமொழியான தமிழ்மொழிக்கு பிறமொழிகளிடம் கடன்வாங்கவேண்டிய தேவை இல்லை. தமிழ்மொழியானது அறிவியலுக்கான மொழி. பல மொழிகளுக்கான வேர்ச்சொற்களைக் கொடுத்த மொழி. உலவுவதால் உலகமாயிற்று என்பது போன்ற அறிவியலின் வழி கட்டமைக்கப்பட்டிருக்கும் மொழி. வெறும் இரண்டு வரிகளுக்குள் வாழ்வியல் நெறிகளை உலகத்துக்கே சொல்லிய மொழி. ஆனால் ஆரியமும் அதனைத் தொடர்ந்த ஐரோப்பியர்களின் படையெடுப்பும் தமிழ் மொழியில் பிறமொழிகளைக் கலந்தன. ஐரோப்பியர் வருகையினால் நிகழ்ந்த பண்பாட்டு அசைவுகள் ஆங்கில மொழியினை முதன்மையாக்கின. சாதி, மத, மொழி அடையாளங்களின் வழி காலனிய ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. தமிழர்கள் போன்ற மரபுவழித்தேசியங்கள் இன்னொரு இனத்தின் மடைமாற்றல்களை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் அல்லர். தமது பண்பாட்டுத் தளத்திலிருந்தே அந்த மாற்றங்களை உள்வாங்குவார்கள். அந்த வகையில் மொழியின் தூய்மை ஆட்டம் காணத்துவங்கியது. மொழித்தூய்மையைப் பேணுவது என்பது வெறுமனே மொழியைச் செழுமையாக்குவது அல்ல. அழித்தொழிப்புக்குப் பின்னரான எழுகையின் குறியீடு அது. அதுபகைவருக்கு விடுக்கும் போர்க்கொடி. அடக்குமுறைக்கு எதிரான அறைகூவல். வெறும் மொழி அல்ல. அது இனத்திற்கான அரசியல்.

தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது.  தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது.

ஆனால் அதனுள்ளே புரையோடிப்போயிருக்கும் சமசுக்கிருதத்தை கண்டுகொள்ளத் தவறிவிட்டோம். இந்துமதத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் யாழ்ப்பாணிகள் தமது மொழியில் கலந்துள்ள சமசுக்கிருதத்தைக் களையெடுக்க முன்வரவேண்டும். தொலைக்கப்பட்ட எமது தேசிய வெளியின் மீட்டெடுப்பின் துவக்கமாக அந்தக் களையெடுப்பு அமைய வேண்டும். பண்பாடும் மரபும் மதத்தினால் கட்டியமைக்கப்படல் கூடாது. அது தேசியக் கொள்கையினைச் சிதைக்கக்கூடியது. ஒரே மதத்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக இருந்ததால் கிழக்கு பாக்கிஸ்தான், பங்களாதேசாக மாறியது.

வெவ்வேறான அசைகளைப் பேசினாலும் தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் எம்மை இணைத்துவிடக்கூடிய தளமாக தமிழ்மொழி இருக்கிறது. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பொதுமையாக்கம் தமிழ்த்தேசியத்தின் குவியப்புள்ளியைச் சிதைத்திருக்கிறது.

அத்துடன் இந்தித்திணிப்பு என்ற வஞ்சகத்திற்கும் இந்தியம் முயன்றுகொண்டிருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போரில் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் சென்ற தமிழர்கள் படை அரசை மிரட்டியது. அதேபோல இலங்கையில் 1956ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் தேசிய இறையாண்மையையும் தொன்மையையும் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர்களை சுடுகலன்களைத் தூக்க வைத்த காரணிகளில் முதன்மையாகியது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இனவழிப்புப் போரின் பின்னணியில் மொழியும் அதன் அரசியலுமே இருந்திருக்கிறது. யாழ்ப்பாண பொதுநூலகத்தின் எரிப்பு தமிழின் அரசியலுக்கான எரிப்பு என்றே கொள்ளப்படலாம்.

பிறமொழிக் கலப்பு தொடர்பான விழிப்புணர்வை அடையவேண்டிய விளிம்புநிலையில் இருக்கிறோம். இப்போது நாங்கள் விழிப்படையாதுவிட்டால் உலக அரசியலுக்குள் எமது மொழியை மட்டுமல்லாது, இனத்தையும் இழந்துவிடுவோம். வேர்ச்சொல்லின் வழி பேசப்படுவதும் அதன் ஒலிப்பு முறைமையிலும் தமிழின் து|ய்மை விளக்கப்படலாம். தமிழின் ஒழுக்கிலிருந்து விலக்கவேண்டியவற்றை விலக்குவது என்பது தமிழின் மீட்டெடுப்பாகும். தமிழின் மீட்டெடுப்பு என்பது வாழ்வியல் சார்ந்த உணவு, மருத்துவம் என ஒவ்வொரு வாழ்வியல் கூறினதும் மீட்டெடுப்பாகும். வள்ளுவம் சொல்லும் வாழ்வு நெறி எக்காலத்திற்கும் எந்தப் பண்பாட்டுக்கும் ஏற்படையதாக இருக்கின்றது. உணவுப் பழக்கவழக்கங்களினூடான மொழிப்பயன்பாடும் அதன் பின்னாலுள்ள பொருண்மிய அரசியலும் மிகவும் சிக்கலுக்குரியவை.

மொழி அரசியல் என்பது மொழியின் வழி கட்டமைக்கப்பட்ட அரசியலையும் மொழியினை அரசியலாக்கிய அரசியலையும் பேசுவது. எழுத்தில் வெளிவராத எழுத்துக்களுக்குள் எமது அரசியல் பொதிந்து கிடக்க, எமது பேராசிரியர்களினால் எழுதப்பட்ட எழுத்துக்கள் மொழித்தூய்மை குறித்து கிஞ்சித்தும் அறிவுமற்ற படைப்புக்களாக இருந்திருக்கின்றன. மொழியியலின் வாழ்நாள் பேராசிரியர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர்களின் படைப்பு வெளியில் சமசுக்கிருதம் இளித்துக்கொண்டிருக்கிறது. அண்மையில் தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பொன்றின் முன்னுரையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்துப் பேராசிரியரின் கட்டுரையில் வடமொழிச்சொற்கள் திருத்தத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை வாசிக்கும்போது மிகவும் உளத்தாக்கத்துக்கு உட்பட்டேன். இந்த நிலையில் தான் இருக்கிறதா எமது அறிவுத்தளம்? தமிழகத்தில் மறைமலையடிகளால் தனித் தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு மொழித்தூய்மை பற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. அதுபோன்ற ஒரு விழிப்புணர்வு செயற்பாடு உடனடியாக எமக்கு தேவையாக இருக்கின்றதல்லவா.. தடுக்கி விழுந்தால் நூல் வெளியீடு என்று புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எமது இலக்கிய வெளி பரந்து விரிந்தாலும் மொழித் தூய்மை என்பது கேள்விக்கிடமாகவேயுள்ளது. பிறமொழிகளை கலந்து எழுதுவதென்பது எழுத்தாளரின் கல்வித் தரத்தினை உயர்த்துகிறது என்ற போலிக் கருத்துருவாக்கத்தினாலோ என்னவோ படைப்பு வெளியில் புதுவரவுகள் தமிழின் இலக்கியங்கள் என்ற வரையறைகளுக்கு அப்பாற்படுகின்றன. புலம்பெயர் இலக்கியங்கள் ஈழத்து இலக்கியங்களாகுமா என்ற சொற்போர்களை விட்டுவிட்டு, அவை தமிழின் இலக்கியங்களாகுமா என்று ஆய்வது முதன்மையானது. கணனியும் இணையமும் வைத்திருப்பவன் எல்லாம் இலக்கியர் என்றால், நாளை தமிழின் இருப்பு என்னவாகும்?

மொழிக்கான படைப்புவெளி இப்போது அரசியல் வெளியாக உருமாறியிருக்கிறது. அந்த வெளியின் வீரியத்தில் எமது மொழியும் அதன் அரசியலும் எமது இனத்தின் அடையாளத்தை மீட்டெடுக்கவேண்டிய கட்டத்திலிருக்கின்றன. இனவிடுதலைக்கான சுடுகலன்கள் பேசாநிலையிலிருக்கும் இவ்வேளையில் மொழி அந்த இடைவெளியை நிரப்ப வேண்டியது காலத்தின் கட்டளையாகும். இன்னொரு சிலப்பதிகாரத்தின் தேவை காலத்தின் கட்டளையாகும்.

பிற்குறிப்பு : இக்கட்டுரையில் மொழியில் சிக்கல்கள் இருப்பின் தயைகூர்ந்து அறியத்தாருங்கள். மொழித்தூய்மை பற்றிய விழிப்புணர்வில்லாத யாழ்ப்பாணத்தின் வாழ்வியல் சூழலில் வளர்ந்த எனக்கும் மொழித்தூய்மை குறித்த போதியளவு அறிவு இல்லை. எனினும் அதற்கான தேவையை உணர்ந்ததால் இக்கட்டுரை நல்ல துவக்கமாக அமையுமெனக் கருதுகிறேன்.

தமிழ்ச் சொற்கள் என நினைத்து தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சில சொற்களும் அவற்றிற்கான தமிழும் கீழே தரப்பட்டுள்ளன. இதைக் கட்டுரையாளர்கள் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ளவும். (நன்றி : இணையம்)

அகங்காரம் – செருக்கு, இறுமாப்பு, முனைப்பு,

அகதி – அறவை, வறியர், ஏழை,புகலிலார்,யாருமற்றவர், ஆதரவற்றவர்

அகந்தை – இறுமாப்பு, செருக்கு

அகம்பாவம் – தற்பெருமை, செருக்கு

அகராதி – அகரமுதலி, அகரவரிசை, அகரநிரல்

அகிம்சை – இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை

அங்கம் – உடல்உறுப்பு

அங்கீகாரம் – ஒப்புதல்

அங்கத்தினர் – உறுப்பினர்

அசுத்தம் – அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை

அதிருப்தி – மனக்குறை

அதிபர் – தலைவர்

அதிருஷ்டம்- ஆகூழ்

அதிகாரி – உயர் அலுவலர்

அதீதம் – மிகை

அபகரித்தல் – பறித்தல், கவர்தல்

அபத்தம் – பொய், பொம்மை

அபிவிருத்தி – பெருவளர்ச்சி

அபிஷேகம் – திருமுழுக்கு

அபிப்பிராயம் – உட்கருத்து

அபூர்வம் – அருமை

அனுபவம் – பட்டறிவு

அவசரம் – விரைவு

அவசியம் – தேவை

அந்நியர் – பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்

அந்தரங்கம் – மறைவடக்கம்

அந்தரம் – பரபரப்பு

அந்தஸ்து – நிலைமை

அநாதை – துணையிலி, யாருமிலி

அநியாயம் – முறையின்மை, முறைகேடு

அநீதி – முறையற்றது, நடுவின்மை, முறைகேடு

அநுதினம் – நாள் தோறும்

அனுபவம் – பட்டறிவு

அனுமதி– இசைவு

ஆரம்பம் : துவக்கம்

ஆரோக்கியம் : உடல்நலம்

ஆனந்தம் , சந்தோசம் – மகிழ்ச்சி

ஆலோசனை – அறிவுரை

ஆபத்து – துன்பம், இடர்

ஆராதனை – வழிபாடு

ஆன்மா– உயிர்

ஐக்கியம் – ஒற்றுமை

உபயோகம் – பயன்

உத்தரவு – கட்டளை

உற்சவம் – திருவிழா

கல்யாணம் – திருமணம்

கடிதம் – மடல்

கரம் – கை

கதிரை – நாற்காலி, அணை, இருக்கை

காரியம் – செயல்

காரியாலயம் – செயலகம்.

காரியதரிசி – செயலர், செயலாளர்

கிராமம் – சிற்றூர்

கும்பாபிஷேகம் – குடமுழுக்கு

குதூகலம் – எக்களிப்பு

கைதி– சிறையாளி

கோஷ்டி – குழாம்

கோத்திரம் – குடி

கோப்பை– கிண்ணம்

சக்தி – ஆற்றல், வலு

சதவீதம் – நூற்றுக்கூறு,விழுக்காடு

சங்கீதம் – இசை

சந்தேகம் – ஐயம்

சந்தோஷம் – மகிழ்ச்சி

சந்ததி – வழித்தோன்றல்

சந்தர்ப்பம் – வாய்ப்பு

சம்பளம் – கூலி, ஊழியம்

சாதாரண – எளிதான

சாட்சி – சான்று

சாமான் – பண்டம்

சிபாரிசு– பரிந்துரை

சுதந்திரம் – விடுதலை

சுயதொழில் – தன்தொழில்

செருப்பு – பாதணி

சேவை – தொண்டு,பணி

நிபுணர் – வல்லுநர்

நீதி – நடுநிலை நன்னெறி

நேரம் – ஓரை,நாழி

தசம் – புள்ளி

தற்காலிக வேலை – நிலையிலா வேலை

தாகம் – வேட்கை

திருப்தி – உள நிறைவு, மன நிறைவு

தினம், நிதம் – நாள்

தேசம் – நாடு

துவக்கு– சுடுகலன்

பகிரங்கம் – வெளிப்படை

பத்திரிகை – இதழ், செய்தித்தாள்

பரீட்சை – தேர்வு

பாக்கியம் – பேறு

பாரம் – சுமை

பாண் – வெதுப்பி

பாஷை – மொழி

பிரகாரம் – திருச்சுற்று

பிரச்சாரம் – பரப்புவேலை, பரப்புரை

பிரச்சினை – சிக்கல்

பிரசாதம் – திருப்பொருள்

(அங்கப்) பிரதட்சனம் – வலம் வருதல்

பிரார்த்தனை – நேர்த்திக்கடன்

புத்தகம் – நூல்

பூச்சியம்,சைபர் – சுழியம்

மந்திரம் – மறைமொழி

மரணம் – சாவு, இறப்பு

மாமிசம் – இறைச்சி

மார்க்கம் – நெறி, வழி

மிருகம் – விலங்கு

முகூர்த்தம் – நல்வேளை

முக்கியம் – முதன்மை

முகாம் – பாசறை

மோசம் –கேடு

யந்திரம் – பொறி

யாகம் – வேள்வி

யுத்தம் – போர்

இரகசியம் – மறைபொருள், கமுக்கம்

இரதம் – தேர்

இரத்தம் – குருதி,உதிரம்

இராகம் – பண்

இராத்திரி – இரவு,அல்

இராச்சியம்,தேசம் – நாடு

இராணுவம் – படை

வயது – அகவை

வருடம், வருசம், வருஷம் – ஆண்டு

வாகனம் – ஊர்தி

வாதம் – சொற்போர்

வாத்தியம் – இசைக்கருவி

வார்த்தை – சொல்

வீரம் – மறம்

வீதி – தெரு, சாலை

வேகம் – விரைவு

வேதம் – மறை

வைத்தியசாலை – மருத்துவமனை

ஜன்னல் – சாளரம்

ஜனங்கள் – மக்கள்

இலட்சணம் – அழகு

3,246 total views, 3 views today

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.