அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்

2009ற்குப் பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் இ காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் தமிழினத்தின் கல்வி கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் சூறையாடப்பட்டுக் கொணடிருக்கிறது.

தமிழர்களின் கல்வி மற்றும் பொருளாதாரம் எப்படி திட்டமிடப்பட்டவகையில் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் இ கலாச்சார அழிப்புகள் குறித்து இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

கல்வி

ராஜபக்ஷ அரசாங்கத்தால் சிறிலங்காவின் கல்வி தரம் ஊழலாக்கபட்டு அளவுக்கு மீறிய தனியார் கல்வித் திட்டங்கள் கொழும்பை மையாமாக கொண்டு வேகமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இ தமிழர் தாயகப்பகுதியை நோக்கி குறிப்பாக யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் உயர்கல்வித் திட்டங்களின் நோக்கம் குறித்து அதீத கவனமெடுப்பது முக்கியமானது.

தமிழர்தாயகத்தைப் பொறுத்தவரை அதிகளவு தமிழ் மாணவர்கள் காணப்படும் மாணவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். ஆகவே யாழ்ப்பாணத்தை மையாமாக கொண்டு போருக்கு பின்னர் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களின் தரமாக கல்வி முறை குறை குறித்து ஆராய்வதே சிறந்ததாகும்.

ராஜபக்ஷ அரசு அதிகளவிலான தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான காரணம் அரசியல் ரீதியிலானது. குறிப்பிட்ட வயது சமுதாயத்தை அரசியல் நடப்புகளில் கவனம் செலுத்தவிடாது வேறு ஏதாவது ஒரு செயற்பாட்டில் சிந்தனைகளை கட்டுப்படுத்திவைக்கும் உத்திதான் அதிகளவிலான தனியார் நிறுவனங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளின் வருகையும் ஊக்குவிப்புகளும் என்பது சாதாரணமாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றேயாகும்.

அரசாங்க பல்கலைக்கழங்களை இலக்காக வைத்து இ அடிப்படைக் கல்வியை நேர்த்தியாக கற்பிக்கும் மற்றும் கற்கும் சமூகமாக விளங்கிய யாழ்ப்பாணம் இ இன்று ஆராய்ந்து கற்றல் தன்மையில் இருந்து படிப்படியாக விலகிக் கொணடிருக்கிறது.

சாதாரண தரத்திற்குப் பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் ஏதாவது ஒரு சான்றிதளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு மாணவர் விசாவில் போவது அல்லது வேலை செய்வது எப்படி என்பது குறித்தே பரவலான கருத்தியலை உருவாக்கி விட்டிருக்கிறது வியாபார அமைப்புகள்.

தமிழர்களின் ஆழமான கல்வி என்ற கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு இ கற்றலுக்கான நோக்கத்தை மும்மரமாக திசைமாற்றிக் கொண்டிருக்கின்றன இந்த புதிய வரவு கல்வி நிறுவனங்கள். இந்த புதிய வரவு தனியார் கல்வி நிறுவனங்களின் நீண்டகால நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளாத தமிழ்ச் சமூகம் இ ஒருதடவை சாதாரண தரத்தில் சித்திய எய்த தவறினால் நேரடியாக தனியார் நிறுவனங்களை நோக்கி செல்கின்றது.

தனியார் நிறுவனங்களை நோக்கி செல்வது தவறில்லை என்றாலும் யாழ்ப்பாணத்தில் 2009 ற்கு பிறகு நுழைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே வியாபார நோக்குடையவை. அவை தரமான செய்முறை கொண்ட கற்றல் நிறுவனங்கள் அல்ல. இளம் சமுதாயத்தின் சிந்தனைகளை மட்டுப்படுத்தி வேறு திசைக்கு கொண்டு செல்வதற்கான உளவியல் வேலைத்திட்டமாகவே இந்த தனியார் நிறுவனங்கள் தொடர்பான ஊக்குவிப்பை அணுகவேண்டியுள்ளது.

அதிவிசேட சித்தியில் பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அளவு குறைந்துள்ளதாகவே தெரிகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை கல்வியில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளே அரசியல் ரீதியிலான போராட்டங்களுக்கும் ஆயுதப்போராட்டத்திற்கும் மூலகாரணமாக விளங்கியது. ஆதன் தாக்கம் இன்றளவிலும் இருந்துவருகிறது.

இந்த நிலையில் இன்றைய சமூதாயத்தின் சிந்தனைகளை மாற்றி கல்வி மீதான அளவுக்கதிமான மோகத்தை திசை திருப்புவதன் மூலம் எதிர்கால அரசியலில் தமிழர்களின் அரசியல் வீச்சு குறையும் என்பது சிறிலங்கா அரசால் நம்பப்படும் தத்துவமாகவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழர்களின் கல்விமீதான நுண்சிதைப்பு.

images

பொருளாதாரம்

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பொருளாதார இருப்பு ஏறத்தாள சிறிலங்கா பெரும்பான்மையினரின் மற்றும் பெரும்பான்மை ஆதரவு குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.

தமிழினம் தொடர்ச்சியாக இடப்பெயர்வுகள் மற்றும் அழிவுகளை சந்திருந்த வேளையில் கூட ஏற்பட்டிராத பொருளாதார நலிவு நிலையை இன்று அடைந்திருக்கிறது. நீண்டகால சேமிப்புகளை ஆடம்பரத்திற்காக திரவ நிலைக்கு மாற்றி இன்று செய்வதறியாத நிலைக்கு மாறியிருக்கிறது தமிழினம்.

தமிழர்களின் அடிப்படை கைத்தொழில்கள் விவசாயம் மீன்பிடி என எல்லாத் துறைகளிலும் சிறிலங்கா அரச ஆதரவுச் சக்திகள் அல்லது பெரும்பான்மையினரின் கைகளிற்கு மாறியிருக்கிறது. உள்ளுர் உற்பத்திகளுக்கு மாற்றீடாக தென்னிலங்கைப் பொருட்கள் அறிமுகப்படுத்தபட்டதோடு உள்ளுர் தயாரிப்புகளை நாசுக்காக சந்தையில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது பெரும்பான்மை இனம்.

இதன் மூலம் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பாதிக்கபட்டது மட்டுமல்லாது தமிழர்களின் பணம் தென்னிலங்கையில் வைப்பிலடப்பட்டு மீண்டும் விபாரத்திற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுகிறது.

காணி உறுதிகளை வைத்துக் கொண்டு இலகு கடன்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் அவலங்களும் அரங்கேறி வருகிறது. முக்கிய வர்த்தக மையங்கள் அரச பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டுவருவதோடு அதிக அளவில் தென்னிலங்கை உற்பத்திப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வடக்கில் அதிகளவு விவசாய நிலங்களை கொண்டிருந்தாலும் வடக்கிற்கிற்கு தம்புள்ளை உள்ளிட்ட தென்னிலங்கை விவசாயப்பொருட்களே அதிகளவில் விற்பனை செய்யப்படும் அவலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்கின் பொருளாதாரத்தின் அத்திவாரத்தில் சிறிலங்கா அரசு கைவைக்க கூடிய அளவிற்கு வந்ததற்கன காரணம் தமிழர்களின் பொருளாதாரம் குறித்து மக்களுக்கு சரியான விழிப்புணர்வு கொடுக்கப்டாமையே காரணம்.சாதாரண குடி பானங்களில் இருந்து கோயில் உள்ளிட்ட நிகழ்வுகள் வரைக்கும் தென்னிலங்கை உற்பத்திப்பொருட்களே அதிகளவில் உள்வாங்கப்படுகிறது. உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படாதது மட்டுமன்றி அது குறித்து சிந்திப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்.

இன்று அன்றாட வாழ்வியல் பாவனையில் அதிகளவில் தென்னிலங்கை உற்பத்திப் பொருட்களையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் தமிழர்கள்.
அரிசி காய்கறி என தமிழர்களின் அன்றாட பாவனைகளில் தென்னிலங்கைப் பொருளாதாரத்தின் தாக்கம் திணிக்கபட்டிருக்கிறது.

ஏதிர்காலத்தில் அரசியல் ரீதியிலான குழப்பங்கள் ஏற்படின் தமிழினம் பொருளாதார ரீதியாக பெரும் அடிவாங்கப்போகிறது என்பதற்கப்பால் அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தெரியாத மிக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படப்போகிறது.

கல்வியும் பொருளாதாரமும் சீரழிக்கப்படும் ஒரு சமுதாயத்தில் அதன் கலாச்சாரம் சமச்சீராக சீரழியும் என்பது ஆய்வு செய்யமால் எடுக்கக் கூடிய முடிவே.

இழப்புகளோடு முடிவடைந்த இன அழிப்புத் தாக்கத்தில் இருந்து மீள முதல் தமிழர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆட்டங்காணச் செய்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கம். இதை தமிழர்தரப்பு அரசியல் தலமைகள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் ஈழத்தில் வாழும் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

துலாத்தன்
10-10-14

Be the first to comment

Leave a Reply