பதவியா குடியேற்றத் திட்டம் – சி.வரதராஜன் (1995)

திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் , 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய குடியேற்றத்திட்டமே பதவியாக் குடியேற்றத்திட்டம்.

“பதவில் குளம்” என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் “பதவியா” என பெயர் மாற்றப்பட்டு, சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. பதவியாக் குளம் திருகோணமலை மாவட்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. நிர்வாக ரீதியாக இது அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்த போதிலும் , இக் குடியேற்றத்திட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைப் பெறும் நிலங்களில் பெரும்பகுதி திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1957 ஆம் ஆண்டு செப்ரம்பர், ஒக்ரோபர் மாதங்களில் முதல் தொகுதியாக 634 குடும்பங்கள் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டன. இவற்றில் 434 குடும்பங்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, இங்கு குடியமர்த்தப்பட்டன.  1958ஆம் ஆண்டு 158 குடும்பங்களும், 1959ஆம் ஆண்டு 1,100 குடும்பங்களும் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டன. 1963ஆம் ஆண்டின் முடிவில் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் மொத்தம் 2,119 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 1969 ஆம் ஆண்டின் முடிவில் இக் குடியேற்றத்திட்டத்தில் மொத்தம் 3,549 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. 1977ஆம் ஆண்டின் இறுதியில் இக் குடியேற்றத்திட்டத்தில் 4,267 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருந்தன.

இன்று பதவியா என்று அழைக்கப்படுகின்ற உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள தென்னைமரவாடி, அமரிவயல், புல்மோட்டை ஆகிய பிரதேசங்களில் 1901ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்போது 297 தமிழர்களும் 460 முஸ்லீம்களும் ஒரேயொரு சிங்களவரும் இருந்தனர். எனவே 1901இல் இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் முஸ்லீம்கள் 61 சதவீதமாகவும் தமிழர்கள் 39 சதவீதமாகவும் இருந்தனர். 1981ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி, பதவியா உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மொத்தசனத்தொகையான 18,084 பேரில் 12,050 பேர் சிங்களவர்களாயும் 4,695 பேர் முஸ்லீம்களாயும் 1,312 பேர் தமிழர்களாயும் இருந்தனர். இதன்படி இப்பிரிதேசத்தின் மொத்த சனத்தொகையில் 66.6 சதவீதம் சிங்களவர்களாயும் 7.2 சதவீதம் தமிழர்களாயும் 26 சதவீதம் முஸ்லீம்களாயும் இருந்தனர்.

1972ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாக எல்லைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. 1972ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், திருகோணமலை மாவட்டத்தின் கட்டுக்குளம்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவின் வடபகுதியிலிருந்து புல்மோட்டை, தென்னைமரவாடி, பரணமதவாச்சி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவியா உதவி அரசாங்க அதிபர் பிரிவோடு இணைக்கப்பட்டன.

மேலே கூறப்பட்டுள்ள தமிழ்ப்பிரதேசங்கள், சிங்கள நிர்வாக மாவட்டமாகிய அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்ட போதிலும், தேர்தற் தொகுதியினைப் பொறுத்தவரையிலும் இப்பிரதேசங்கள் தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தின் சேருவலு-திருகோணமலை தேர்தற்தொகுதிக்குள்ளேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் சிங்கள வாக்காளர் தொகையினை குறையவிடாமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டது.

1982ஆம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி தென்னைமரவாடி, புல்மோட்டை, பரணமதவாச்சி, பதவிசிறிபுர, ஜயந்திவீவ ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் அனுராதபுர மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. 1972ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்,  திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாகத்தில் இருந்து எடுக்கபட்ட புல்மோட்டடை, தென்னைமரவாடி, பரணமதவாச்சி ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளோடு சிறிபுர, ஜயந்திவீவ ஆகிய இரண்ட கிராமசேவகர் பிரிவுகளும் சேர்ந்தே 1982 இல் திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கபட்டன. இத்தகைய நிர்வாக எல்லை மாற்றமும் ஒரு சிங்கள குடியேற்றமே. 1972 இல் இப் பிரதேசங்கள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து எடுக்கப்பட்டு, அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்படும் போது இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 4,651 பேராகும். 1982 இல் இப்பிரதேசங்கள் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கப்படும் போது சனத்தொகை 18,084 பேராகும். மேலும் 1972 இல் இப்பிரதேசங்கள் அனுராதபுரம் மாவட்டத்தோடு 3,285 தமிழ் பேசும் மக்களும் 672 சிங்களவர்களும் இருந்தனர். இதன்படி மொத்த சனத்தொகையில் 86 சதவீதம் தமிழ்பேசும் மக்களாயும் 14 சதவீதம் சிங்களவர்களாயும் இருந்தனர் ஆனதல் 1982 ஆம் ஆண்டு இப்பிரதேசங்கள் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கபட்டபோது, இப்பிரதேசத்தில் 12,050 சிங்களவர்களும் 4,695 முஸ்லீம்களும் 1,312 தமிழர்களும் காணப்பட்டனர். இதன்படி இப்பிரதேசத்தின் மொத்தசனத்தொகையில் 66.6 சதவீதம் சிங்களவர்களாயும் 33.3 சதவீதம் மட்டுமே தமிழ் பேசும் மக்களாயும் இருந்தனர். இவ்விணைப்பின் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பதவியா என்ற புதியதொரு சிங்கள உதவி அரசாங்க பிரிவு உருவாக்கப்பட்டது. இதனது மொத்த நிலப்பரப்பு 205 சதுர கிலோமீற்றர் ஆகும்.

இவ்வாறான, தமிழர் பிரதேசங்களின் நிர்வாக எல்லைகளின் மாற்றமும், ஒரு மறைமுகமான சிங்கள குடியேற்ற நடவடிக்கையே. 1972ஆம் ஆண்டு தமிழர் பிரதேசங்களின் சில பகுதிகள் அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்கபட்டதற்கு காரணம் கிடையாது. அதே போன்று 1972இல் எடுக்கபட்ட தமிழர்பிரதேசங்களோடு சிங்களவர் பிரதேசங்களையும் சேர்த்து 1982 இல் திருகோணமலையோடு இணைத்தமைக்கும் காரணம் கிடையாது.

ஆனால், இவ் நடவடிக்கைக்கு வெளிப்படுத்த முடியாத ஒரு காரணம் உண்டு. இவ் நிர்வாக எல்லை மாற்றம் காரணமாக ஓரிரவிலேயே சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பான்மையினமாக மாறிவிட்டனர். 1981ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் போது, திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் தொகை 86,341 ஆகவும் தமிழர்கள் தொகை 93,510 ஆகவும் இருந்தது. ஆனால் இந்த நிர்வாக எல்லை மாற்றத்தின் பின் திகோணமலை மாவட்டத்தின் தமிழர் தொகை 94,822 ஆகவும் சிங்களவர் தொகை 98,391 பேராகவும் இருந்தது. 1950ஆம் ஆண்டு முதல், பல்வேறுபட்ட பெயர்களில் சிங்களக் குடியேற்றங்களைத் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொண்ட போதிலும், 1981ஆம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டுத் தரவுகள், மாவட்டத்தில் சிங்களவர் தொகை தமிழர்களிலும் பார்க்க ஏறத்தாழ 7,000 பேரால் குறைவாக இருந்தமையை வெளிப்படுத்தியது. எனவே, மேலும் சிங்களவர்களை குடியமர்த்தி சிங்களவர்களை பெரும்பான்மையினராக மாற்றுவதற்கு சற்றுக் காலம் எடுக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்தது. இதன் விளைவாகவே, 1982ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்கபட்டிருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைத் திருகோணமலை மாவட்டத்தோடு இணைத்து, திருகோணமலை மாவட்டத்தில் – தமது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் ஒரிரவிலேயே சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர்.

சி.வரதராஜன்

ஆனி 1995

2007ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி தமிழர்களின் நிலை

Be the first to comment

Leave a Reply