தமிழினத்திற்கான அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவோம் வாரீர்

பொருண்மிய வளர்ச்சி பற்றிய அறிவு தமிழர்களிடத்தில் மழுங்கிக் கொண்டே செல்கிறதா?

தேசக் கட்டுமானத்தில் பொருண்மியம் இன்றியமையாத ஒன்று. மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைகளிலும் விடுதலைப்புலிகள் பலதரப்பட்ட உற்பத்திச்சாலைகள், பண்ணைகள், களஞ்சியங்கள் என உருவாக்கி வேலை வாய்ப்புகளை மாத்திரமல்லாமல் தமிழர்களுக்கான பொருண்மியக் கட்டுமானத்தையும் உருவாக்கியிருந்தார்கள். 2009 இல்விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்குப் பின்னர் வடகிழக்கில் சொல்லும்படியான பொருண்மிய மையங்கள் உருவாக்கப்படவில்லை. திட்டமிடப்பட்டு சிங்கள அரசுகளால் வடகிழக்கு புறக்கணிக்கப்பட்டாலும் தமிழர் தாயகப்பகுதியில் நாமே பொருண்மியக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கடமையுணர்வு தமிழ் அரசியற்தரப்புகளிடையேயும் இல்லை; புலம்பெயர் தமிழ் முதலாளிகளிடமும் இல்லை என்றே சொல்லலாம்.

மறவழிப்போராட்டம் பேசாநிலைக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாகவும் சரி பொருண்மிய ரீதியாகவும் சரி சொல்லும்படியான எந்தவொரு நிலையையும் ஈழத் தமிழர்கள் அடையாமைக்கு ஈழத்துத்தமிழ்த் தலைமைகளிடையே காணப்படும் நிருவாக மற்றும் கூட்டுமுயற்சிக் குறைபாடே காரணமாகும். சிறீலங்கா நாடாளுமன்ற அரசியலுக்காக வடகிழக்கில் களத்தில் நிற்கும் தமிழ் அரசியற்தரப்புகள் தங்களுக்கிடையே மோதி, தமிழ் மக்களை குழப்பிவிடுவதில் காட்டும் விவேகத்தை தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக கொஞ்சமேனும் பயன்படுத்தலாம். வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்ப்பதற்கு செலவிடப்பட்ட காலங்கள், செலவிடப்பட்ட பணம், ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் போராட்டங்கள் போல் தமிழ் இனத்திற்கான ஒரு பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இதுவரை செலவிடப்பட்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து.

எடுத்த எடுப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்ட பொருண்மியக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். இன்றைய தொழினுட்பஉலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் தமிழீழ நிலப்பரப்பில் உருவாக்கப்பட வேண்டிய பொருண்மியக்கட்டமைப்புகள் தொடர்பில் மக்களை முதலில் விழிப்பூட்டி அதை நோக்கி அவர்களை அணியப்படுத்த வேண்டும்.

மாகாணசபைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் எப்படி தமிழர்களுக்கான  பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்க முடியும், எப்படி மக்களை அதை நோக்கியதாக அணியப்படுத்த முடியும் என்பது பற்றிப்பார்ப்பதற்கு முன்னர் தற்போது தமிழர் தாயகங்களில் மிகப்பெரிய சிக்கலாகக் காணப்படும் நிருவாகக் கட்டமைப்பு, கையூட்டு மற்றும் ஊழல்கள் குறித்து பேச வேண்டும்.

நாங்கள் தமிழர்கள் ; எமது மண்ணில் தமிழ் மக்களுக்காகவே நாங்கள் பணி செய்கிறோம் என்ற உளநிலையில்லாமல் அரச பணி செய்கிறோம்; நாங்கள் என்ன செய்தாலும் மாதாமாதம் சம்பளம் கிடைத்துவிடும் என்ற மிகக் கேவலமான உளநிலையில் பணியாற்றுபவர்கள்தான் வடகிழக்கில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.

வடகிழக்கில் கட்டுமானத்துறையில் பெருமெடுப்பில் முதலீடுகள் குவியும் நிலையில் கையூட்டும் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக மாகாண சபை மற்றும் அரச துறைகளைச் சார்ந்த தொழினுட்பப் பணியாளர்கள்(TO) பாரியளவிலான மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டாகக் காணப்படுகிறது. துறைசார் சிறப்புக் கல்வித் தகுதிகள் இல்லாவிடினும் தொழினுட்பப் பணியாளர்கள் செல்வாக்குமிக்கவர்களாக காணப்படுகிறார்கள். கட்டுமானக்காரர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தைக் கறந்துகொண்டு கட்டுமான வேலைகளில் நடைபெறும் குறைபாடுகளை கண்டும் காணமல் விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களிடத்தில் காணப்பட்டாலும் இதுவரையிலும் எந்தவொரு தொழினுட்பப் பணியாளரினதும் பதவி பறிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.அதே நேரத்தில் மாகாண சபையின் வல்லாண்மைக்கு உட்பட்ட அலுவலகங்கள் பலவற்றில் வேலைக்கு மேலதிகமாக ஆட்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அலுவலக நேரங்களில் அரட்டையடிப்பது, உறங்குவது, சொந்த வேலைகள் பார்ப்பது என ஒரு கட்டுப்பாடற்ற முறையில் தமிழர்களின் நிருவாக நிலைமை காணப்படுகிறது. பணி நேரங்களில் எப்படி பணியாற்ற வேண்டும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நாம் எப்படி மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற எந்தவொரு நேர்மையுமில்லாமல் ஏனோதானோ என்ற நிலையில் வேலைசெய்யும் தமிழ் இளையோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவருகிறது.

அரச நிறுவனங்களில் மாத்திரமல்லாது தனியார் நிறுவனங்களிலும் கட்டுப்பாடற்ற நிலைமையே காணப்படுகிறது.

உளநிலையில் மாற்றம் வர வேண்டும். திட்டமிடலின் படி சரியான நேரத்தில் வேலையை நூறு விழுக்காடு சரியாகச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எல்லா அலுவலகங்களிலும் உருவாக்கப்படல் வேண்டும். பணி நேரத்தில் நேர்மையற்ற விதத்தில் செயற்படும் பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நீக்கம் செய்யும் முறை நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற நிருவாகக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு எப்படி பொருண்மியக் கட்டமைப்புக் குறித்து சிந்திக்க முடியும்? சீனர்கள், யப்பானியர்கள், சிங்கப்பூரர்களிடையே காணப்படும் நிருவாகக் கட்டமைப்புப் போன்றதான மிக கட்டுப்பாடுடைய நிருவாக அமைப்பு உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இறுக்கமான சுய ஒழுக்கமுள்ள சரியான நிர்வாக கட்டமைப்பை கட்டியெழுப்பும் போது சிறந்த பொருண்மியக்கட்டமைப்பை உருவாக்குதல் மிக இலகுவானதாகிவிடும்.

மாகாணசபைகள் செய்யக் கூடிய வேலைத்திட்டங்கள்.

வடமாகாணம் என்றாலும் சரி கிழக்கு மாகாணம் என்றாலும் சரி மாகாண சபைகள் மற்றும் அமைச்சர்கள் அபிவிருத்தி குறித்து ஏராளமான நிகழ்வுகள், சந்திப்புகள் போன்றவற்றை நிகழ்த்தி அறிக்கைகளை விட்டுள்ளனர். ஆனால் சொல்லும்படியாக எந்தவொரு நேர்த்தியான வேலைத்திட்டங்களும் இடம்பெற்றிருக்கவில்லை.

ஒவ்வொரு அமைச்சுக்கு கீழும் தொழில்சார் புலமையுள்ள குழு ஒன்று உருவாக்கப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் குறித்த வரைபுகளை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாதாமாதம் அறிக்கைகள் இடுவதன் மூலம் அதுபற்றிய விளக்கங்களை அந்தந்த அமைச்சுகள் மற்றும் முதலமைச்சருக்கு வெளிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அமைச்சுகளின் கீழ் இடம்பெறும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பணியாற்றும் இதர நிறுவனங்கள் என்னென்ன? அவற்றின் பணி என்னென்ன? என்பது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தகவல்கள் பகிரப்பட வேண்டும். எல்லா அமைச்சுகளும் இப்படிப்பட்ட வேலைத்திட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் மாகாண சபை அரசியற் தரப்புகள் குறித்து நம்பிக்கை ஏற்படுவது மட்டுமல்லாது மக்களுக்கும் தங்கள் தாயகங்களில் நடைபெறும் செயற்றிட்டங்கள் குறித்து விளக்கம் கிடைக்கும்.

எதிர்காலத்தில் தமிழர்களின் கையில் அதிகாரங்கள் வரும்போது அன்றைய உலக ஒழுங்கிற்கும் அப்போதிருக்கும் தொழினுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ற வகையிலும் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கு இப்பொழுதே மக்களை அணியப்படுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிராம அலுவலர் முதல் அனைத்து அதிகாரிகளினதும் பணி என்ன என்பது குறித்து மக்கள் தெளிவுடன் இருப்பது மட்டுமல்லாது தகுந்த பயன் கிடைக்காதவிடத்து எந்தவொரு தயக்கமுமின்றி முறைப்பாடு செய்யவும், முறைப்பாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் முடியுமாகவுமுள்ள நிருவாகக் கட்டமைப்பை இப்போதே உருவாக்குதல் வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களுக்கான பணி

வெளிநாடுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து விருந்து வைத்து, அபிவிருத்தி பற்றி பேசி அதை வெறும் பேச்சளவிலேயே வைத்திராமல் பேசப்பட்ட விடயங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தொடர்நோக்கு நோக்குதல் வேண்டும். அது போக புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை உழைக்கும் பணத்தை வங்கிகளில் வைப்பிலிட்டு பணச் சேகரிப்பில் ஈடுபடுதலே உச்சக்கட்ட பொருண்மிய வளர்ச்சி என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். உண்மையில் உங்களுக்கு இனத்தின் மீது பற்றிருந்தால் வங்கிகளில் முடக்கும் பணங்களை இந்த மண்ணில் முதலீடு செய்ய முன்வாருங்கள். பண்ணைகள், தொழிற்பேட்டைகளை உருவாக்குங்கள். வெறுமனே பணத்தை வங்கிகளில் வைப்பிலிடுவதானது தென்னிலங்கையின் பொருளியல் சுட்டியை மேம்படுத்துமேதவிர தமிழினத்தின் பொருண்மிய நிலையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது.

வடகிழக்கைப்பொறுத்தவரை ஏராளமான விவசாய நிலங்களும் கடற்றொழில் செய்யக்கூடிய சூழலும் உற்பத்திச் சாலைகளை உருவாக்கக் கூடிய உகந்த நிலைகளும் காணப்படுகின்றன. சிங்கள முதலாளிகளும் தென்னிலங்கை முஸ்லீம்களும் வடகிழக்கின் வளங்களைப்  பயன்படுத்தி பெரும் வணிகங்களை செய்வது மட்டுமல்லாது அதன் செல்வாக்கின் மூலம் அரசியல் வேலைத்திட்டங்களையும் நாசுக்காக செய்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் முதலீடு செய்யக் கூடிய தமிழர்கள் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது குழுவாகவோ இணைந்து தமிழர் தாயகப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர் தாயகப்பகுதியில் இடம் பெறும் வணிகத்தின் பெரும் வருவாயை தமிழர்களுக்குள்ளேயே சுழற்சிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அறிவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவலுவான நிலையில் காணப்படும் புலம்பெயர் இளையவர்கள் மிகத் தீவிரமாக இந்தத் திட்டங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வருடமும் வடகிழக்கின் வளங்களை தென்னிலங்கை சூறையாடிக் கொண்டிருப்பது மாத்திரமல்லாது அதனால் எந்தவொரு பயனையும் எமது மக்கள் அனுபவிக்கவில்லை என்பதையும் ஞாபகம் வைத்திருங்கள்.

கடந்த 5 வருடத்திற்குள் வடக்கில் புலம்பெயர் தமிழர்களால் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி முதலீடு செய்யப்பட்ட முதன்மையான இரண்டு துறைகள் ஒன்று “கலியாண மண்டபம்” மற்றையது “சாராயக் கடை மற்றும் விடுதிகள்”.  என்றுமில்லாத அளவிற்கு யாழ்ப்பாணத்தில் ஆடம்பரக் கலியாணங்கள் களைகட்டியுள்ளன. அதே நேரத்தில் விடுதிகளோடு இணைந்த சாராயக்கடைகளும் அதிகரித்துள்ளன. எல்லாவற்றினதும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழர்களே.

தமிழர் தாயகத்தில் உற்பத்திகளை அதிகரித்து தமிழ் மக்களின் தேவைக்கு மேலதிகமானதை சிறீலங்கா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதில் கிடைக்கும் இலாபத்தை மீண்டும் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் வலுவான பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவதே தமிழ் தாயகப்பகுதியை மிகப் பலமாகக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை உருவாக்கும். இது குறித்து அறிவியல் மற்றும் பொருண்மியப் பலத்துடன் இருக்கும் புலம்பெயர் இளையவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

ஆதவன்

27-08-2017

1,058 total views, 4 views today

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.