வார்த்தையாலங்களால் விளையாடும் அரசியல் குள்ளநரிகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அடைய முடியாத அரசியல் இலக்கை தன்னை பாராளுமன்றம் அனுப்பினால் அடைந்து காட்டுவேன் என்பது மிக மோசமான பொய்த் தனமான அரசியல். தமிழருக்கான அரசியல் தீர்விற்கு சமஷ்டி பற்றிப் பேசி சிங்களத்திடம் அவமானப்பட்ட பின்னர், சமஷ்டியை சிங்களம் தராது என்று தெரிந்த பின்னர்தான் செல்வா “தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு” என்ற தீர்மானத்தை வட்டுக் கோட்டையில் தெரிவித்தார். ஆனால் இன்று அகில இலங்கை காங்கிரஸானது சமஷ்டிதான் தமிழருக்கான இறுதித் தீர்வென்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருப்பதாகவும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

சட்டத்தரணிகளாலும் அரசியலை கல்வி முறையாக கற்றவர்களாலும் நிறைந்து கிடக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி மிக நாசுக்காக துறைசார் வார்த்தைகளால் அரசியலைப் பேசி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் அல்லது அதன் புனிதத்தை சிதைக்கும் வேலைகளை தூரநோக்கற்ற சில புலம்பெயர் அமைப்புகளின் பொருளாதார உதவிகளுடன் செய்து கொண்டிருக்கின்றனர்.

தேசிய விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் போராட்டங்களை வார்த்தை யாலங்களால் திசைமாற்ற முடியும் என கனவு கண்டுகொண்டிருக்கிறது எதிரித் தரப்பு. சமாதான கால வேலைத்திட்டங்களில் பங்கெடுத்த எரிக்சொல்கையயும் முதல் தாங்கள் தான் மாற்றம் என்று சொல்லிக் கொண்டு அரசியல் செய்யும் அகில இலங்கை காங்கிரஸ் கட்சி வரை, வார்த்தை யால விடையாட்டுக்களால் தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றிய எண்ணக் கருத்துக்களை சிதைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது காலம் கடந்து விளங்கிக் கொண்டிருப்பதாக பல தீவிர அரசியல் ஈடுபாட்டாளர்கள் சுட்டிக் காட்டியமையையடுத்து இந்த கட்டுரையை விரிவாக எழுத கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்கள் பிரிந்து செல்ல உரித்துடையவர்கள் என்பதற்கான மிக ஆழமான தார்பரியத்துடனும், வார்த்தைகளால் சுருக்க முடியாத எண்ணற்ற தியாகங்களாலும் கட்டியெழுப்பப்பட்டது. ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களை ஆகுதியாக்கி லட்சக்கணக்கிலான மக்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்து இரத்தமும் சதையுமாக நடந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை, தமது பாராளுமன்ற அரசியலுக்காக வார்த்தைகளால் திரைமாற்றும் மிகக் கேவலமான அரசியலை பல அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டிற்கு ஒத்து ஊதுவதாய்ப்போல் சில புலம்பெயர் அமைப்புகளும் புதிதாக இனப்பற்றுக் கொண்ட சில புத்திசீவிகளும் இன்னும் சில வெளிநாட்டு பிரதிநிதிகளும் அறிக்கைகள் மற்றும் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.

2009ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்த தரப்புகள் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை நிரல்படுத்தி ஆய்வு செய்வோமானால் தமிழீழ விடுதலைப்போராட்டம் குறித்து குறிப்பிட்ட தரப்புகளின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அண்மையில் அவுஸ்ரேலியா சென்று அங்குள்ள வானொலி ஊடகம் ஒன்றிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியானது அவர்சார்ந்த அரசியல் மற்றும் நோக்கத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. நீண்ட நேரமாக இடம் பெற்ற கஜேந்திரகுமாரின் உரையாடலின் சாரம்சமானது “தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப்போராட்டத்தை உலக நாடுகள் அழிக்கக் காரணம் சீனாவின் இலங்கை மீதான ஈடுபாடு. அதாவது புலிகளுக்கு எதிரான போரிற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவுதல் என்ற பெயரில் சீனாவின் செல்வாக்கு சிறிலங்காவில் அதிகரித்துவந்தது. எனவே தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்துவிட்டால் சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கு குறைந்துவிடும். அதே நேரத்தில் இந்திய மற்றும் மேற்குலக செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்க முடியும். இந்த நோக்கத்திற்காக தான் உலகமே இணைந்து புலிகளை அழித்தது. இதனால் 2009 ற்கு பின்னர் சிறிலங்காவில் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் செல்வாக்கும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழர்கள் அரசியல் போராட்டங்களை அதிரகரித்தால் பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கலாம்”

இந்த தொனிப்பொருளில்தான் கஜேந்திரகுமாரின் உரையாடல் இருந்தது. மேற்குறிப்பிட்ட கருத்தை மக்களிடத்தில் விதைப்பதற்கு ஏராளமான துறைசார் வார்த்தைகளை பாவித்து மணிக்கணக்கில் பேசியிருந்தார். அவர் பேசிய கருத்துகளின் மூலம் நாசுக்காக என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  1. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழர் தரப்பு பேரம் பேசும் சக்தியாக இருந்ததில்லை.
  2. இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் தமிழீழ தீர்வை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவே “சமஷ்டி” என்ற வார்த்தையை கொண்ட மாற்றுத் தீர்வை நோக்கித்தான் இனி தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
  3. இந்திய மற்றும் மேற்குலக நலனிற்காக தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை கைவிட வேண்டும்.
  4. புலிகளுக்கு உலக அரசியலே தெரிந்திருக்கவில்லை எனக்குத்தான் தெரியும்.

மேலே குறிப்பிட்டுள்ள கருத்தியலை 2009ற்கு பிறகு பல சந்தர்பங்களில் பல்வேறுபட்ட வார்த்தையாலங்கள் மூலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாராளுமன்ற அரசியல் மூலம் தமிழர்கள் பேரம் பேசும் சக்தியாக வளர்ந்து உரிமையை வென்றெடுக்க முடியுமெனின் செல்வா காலத்திலேயே தமிழருக்கான அரசியல் தீர்வு கிடைத்திருக்கும். பல்வேறுபட்ட துறைசார் நிபுணர்களால் மிகக் கவனமாக ஆய்வுகள் மேற்கொண்டு தமிழீழ கட்டுமானத்தின் மாதிரியை உருவாக்கிய புலிகளுக்கு பேரம் பேசும் அரசியல் தெரிந்திருக்கவில்லை என்ற தொனியில் நாசுக்காக கருத்துகளை விதைத்துவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இழி செயலானது வரலாற்றால் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் இருந்தபடி தமது சுயலாப அரசியலை செய்துகொண்டிருக்கும் கறுத்த ஆடுகளின் அரசியலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை மூலதனமாக்கி அதன் மூலம் தன்னை பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைக்க திட்டம் போடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “எல்லாப் புலிகளும் இறந்துவிடவில்லை” என்பதை ஞாகபம் வைத்திருக்க வேண்டும். தமிழீழ கட்டுமானங்களையும் அதன் கட்டமைப்புகளையும் உருவாக்கிய  விடுதலைப்புலிகளின் துறைசார் நிபுணர்களில் ஏராளமானவர்கள் மௌனமாகத்தான் இருக்கிறார்களே தவிர மரணித்துவிடவில்லை.

தமிழத்தேசிய கூட்டமைப்பை எதிர்த்தலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஊடகங்களில் பழித்தலுமே இன விடுதலைக்கான புரட்சி என்பது போல் தன்னைச் சுற்றியுள்ள சிறார்களை திசைமாற்றிவிட்டிருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பாராளுமன்ற அரசியலை செய்வதற்காக யார் யாரை வேண்டுமென்றாலும் தூற்றியும் பழித்தும் கொள்ளலாம் ஆனால் எந்தவொரு சந்தர்பத்திலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இளைவர்களிடம் இருந்து திசைதிருப்பும் வேலைத்திட்டத்தை எவர் செய்தாலும் அதை அனுமதிக்க முடியாது.

இளையோர்களே!

அரசியல் கட்சிகளுக்காக கோசம் எழுப்புவதையும் கேலி செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையில் தமிழீழ விடுதலைமேல் பற்றிருந்தால் ஊடகங்களை எப்படி புரிந்து கொள்வது அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன என்பது பற்றி சிந்தியுங்கள். “அரசியல் போராட்டங்கள் செய்வதன் மூலம் தமிழர்கள் பேரம் பேசும் சக்தியாக வளரலாம்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்வதன் அர்த்தம் “முப்பதுவருடகால ஆயுதப்போராட்டம் பிரயோசனமற்றது, புலிகளுக்கு அரசியல் தெரியாது” என்பதே என்பதை விளங்கிக் கொள்வதற்கு வகுப்பெடுக்க முடியாது. இது அரசியல் புரிதலின் மூலம் ஏற்படவேண்டிய ஒன்று.

வெறுமனே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்ப்பதும் விடுதலைப்புலிகளின் தியாகங்களை பெருமையாக பேசிக் கொள்வது மாத்திரமே தமிழீழ விடுதலைக்காக உழைப்பவன் என்று அர்த்மாகிவிடாது. தங்களை புரட்சியாளர்கள் போல் காட்டிக் கொள்பவர்களின் நோக்கங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய தெளிவுடன் இருத்தல் அவசியம்.

புலிகளின் பொருளாதார கட்டமைப்புகளை கையகப்படுத்தியவர்கள் புலிகளின் மீது அவதூறுகளை பரப்புவதில் மும்மராமாக ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் இருந்து தூரக விலகி நின்றவர்கள் எல்லாம் இன்று தங்களை புத்திசீவிகளாகவும் இனப்பற்றுக் கொண்டவர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள். வார்ததையாலங்கள் மூலம் தங்களை அதி புத்திசாலிகளாக காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். “அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்பது போன்றதான பிம்பத்தை உருவாக்கி தமிழீழ விடுதலைப்போராட்டம் மீதான் எதிர்மறைக் கருத்துக்களை தமிழ் மக்களிடத்தில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு கருத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். “ பாராளுமன்ற அரசியலை செய்வதற்காக யார் யாரை வேண்டுமென்றாலும் தூற்றியும் பழித்தும் கொள்ளலாம் ஆனால் எந்தவொரு சந்தர்பத்திலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இளைவர்களிடம் இருந்து திசைதிருப்பும் வேலைத்திட்டத்தை எவர் செய்தாலும் அதை அனுமதிக்க முடியாது.”

கதிர்

19-08-2017

 

5,052 total views, 4 views today

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.