பொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்

இந்த பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவ குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புற சுவர்களுக்கு மாத்திரமே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இன அழிப்பு போருக்குப் பின்னர், மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்வை நிலையாக்குவதில், இலங்கை அரசானது தனது தந்திர அரசியலை தமிழர்கள் மேல் திணித்து வருகிறது.

சிறிலங்கா அரசின் தந்திர காய்நகர்த்தல்களில் கவனக்கப்பட வேண்டியவை:

 • அரசாங்கப்படைகளின் ஆக்கிரமிப்பினால் அழிக்கப்பட்ட தமிழர்களின் சொத்து விபரங்கள் பற்றி எந்தவொரு கணக்கெடுப்பும் நடாத்தப்படவில்லை.
 • அரசாங்கப்படைகளின் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட தமிழர்களுக்கே உரித்தான பொதுச் சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை.
 • தமிழர்களின் உயிர்ச்சேதங்கள் குறித்து சரியான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது மாத்திரமன்றி, அது பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.

இப்படியான மோசமான பிடிக்குள் தமிழர்களின் வாழ்வை வைத்துக் கொண்டு, அபிவிருத்தி என்ற பெயரில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழர் நிலப்பகுதியில் நீண்டகால நோக்கில் அழிப்பை மேற்கொண்டுவருகிறது இலங்க அரசு.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு சற்றும் பொருந்தாத பொருத்துவீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் விடாப்பிடியாக நிற்பதற்குப் பின்னால் நயவஞ்சகமான பல அரசியல் காரணங்கள் காணப்படுகின்றன.

தவிர ;

 1. பொருத்துவீட்டிற்கு 30 வருடகால உத்தரவாதம் மாத்திரமே வழங்கப்படுகின்றன – அதவாவது 30 வருடங்களின் பின்னர் அந்த வீடுகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. புதிய வீடு அமைக்க வேண்டும் அல்லது பொருத்துவீட்டை திருத்த வேண்டும். இரண்டிற்குமே தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்படும்.

 2. எரிவாயு சமையல் அறைகள்தான் காணப்படும் –
  அதாவது பொருத்துவீட்டில் விறகு அடுப்புகள் பயன்படுத்த முடியாது. பொருத்துவீடு பெறும் பயனாளிகள் அனைவரும் சமயல் எரிவாயுவையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது அரசு. சமையல் எரிவாயு பன்படுத்தக் கூடிய வருமானம் இருப்பவர்களுக்கா அரசாங்கம் பொருத்து வீடு வழங்கும் என்ற கேலிக்குள்ளாகும் கேள்விக்கு அப்பால், பொருத்துவீடானது நெருப்பின் புகையையால் பாதிப்படையக் கூடியது என்ற முடிவிற்கு வரலாம். பண்டிகைக் காலங்களில் கூட விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது என்ற ஆபத்து காணப்படுகிறது.

  விண்ணப்பம்1 விண்ணப்பம்2

தமிழர்களின் வாழ்வை எப்படி தமது பிடிக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது:

 • பொருத்துவீடானது விசேட மூலப் பொருட்களால் (Special Materials) விசேட கட்டுமான முறை மூலம் (Special Construction Method) கட்டப்படுகிறது. தவிர 30 வருட உத்தரவாதமும் (Warranty) வழங்கப்படுவதால் உத்தரவாதம் வழங்கப்பட்ட 30 வருடகால காலப்பகுதிக்குள், ஏதாவது திருத்த வேலைகள் செய்வதென்றால் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனத்தால் மாத்திரமே திருத்த வேலைகள் செய்ய முடியும். குறித்த நிறுவனத்தில் மாத்திரமே அதற்கான மூலப் பொருட்களை வாங்க முடியும்.
 • இந்த பொருத்துவீட்டின் நீண்டகாலப் பாவனையானது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்பதால், தமிழர்களுக்கான தனி ராட்சியம் உருவாகத பட்சத்தில், எதிர்காலத்தில் தமிழினத்தின் அடுத்த தலைமுறை மீண்டும் வீடுகேட்டு சிங்கள அரசை கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மீண்டும் அரசாங்கம் தமிழினத்தின் மீது தனது கேவலமான அரசியல் ஆதிக்கத்தை பிரயோகிக்க முடியும்.

மாதிரி 2

பொருத்துவீட்டை நிராகரிப்பதற்கான தொழினுட்ப காரணங்கள் (Technical Reasons) 

 • இந்த வீடானது பலமான அத்திவாரத்தின் மீது எழுப்பப்படவில்லை. மண்ணின் தன்மை அறிந்து அத்திவாரத்தின் தன்மை பரிந்துரைக்கப்படல் வேண்டும்.
 • ஆயிரக்கணக்கான வீடுகள் மிகக் குறைந்த காலப்பகுதியில் கட்டப்பட இருப்பதால், கட்டுமான நிறுவனமானது தனது இலாபத்திற்காக தரமற்ற பொருட்களை கட்டுமானத்திற்கு பாவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன (Quality Control) . ஒவ்வொரு வீட்டினதும் கட்டுமானத்தில் பாவிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மதிப்பீடு நடாத்துவது சாத்தியமற்றதாக கூட இருக்கலாம். அதனால் நிட்சயமாக இந்த வீடுகள் விரைவில் சேதமடைவற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
 • ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படுவதால், எல்லாப் பொருத்துவீட்டின் பிரதான மூலுப்பொருட்களின் தீப்பிடிக்கும் தன்மை, ஈரலிப்புத்தன்மை (Fire certificates, Moisture certificates) குறித்து ஆய்வுகள் நடாத்தப்படுமா என்பது சந்தேகமே. (சிறிலங்காவின் கட்டுமான துறை என்பது பாரிய அளவிலான ஊழல் நடைபெறும் துறை என்பது குறிப்பிடத்தக்கது)
 • ஒரு பொருத்து வீடு கட்டுவதற்கான செலவு ஏறத்தாள 21 லட்சங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது (வீட்டுத் தளபாடங்களையும் சேர்த்து). ஆனால் அதே அளவிலான (550 சதுர அடிகள்) கல்வீடு ஒன்றை கட்டுவதற்கான செலவு 10 லட்சங்களுக்குள் (தளபாடங்கள் இல்லாமல்) என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.  கல்வீட்டின் செலவானது குறைவாக இருப்பது மட்டுமன்றி ஆயுளும் அதிகமானது. தவிர வீட்டை திருத்துவதற்கு கூட அரசாங்கத்தை நம்பியிருக்கவும் தேவையில்லை செலவும் குறைவு.

 

விடாப்பிடியாக நிற்கும் சிறிலங்கா அரசு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்றுமுழுதாக பொருத்துவீட்டை நிராகரித்துவிட்டது. தவிர பொருத்துவீடு வேண்டாம் என்று கிளிநொச்சியில் பாரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மக்களால் நடாத்தப்பட்டது ஆனாலும் சிறிலங்கா அரசு பொருத்துவீட்டைப் பற்றி கவர்ச்சிகரமான விளம்பரங்களை பத்திரிகைகளில் பிரசுரம் செய்து வருகிறது.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை பிரசுரித்து, பொருத்து வீட்டிற்கான மக்களின் விண்ணங்களை கோரியிருக்கிறது சிறிலங்கா அரசு.

இந்த செயற்பாடானது மக்களின் எண்ணங்கள் குறித்து நாடிபிடிக்கும் செயற்பாடாக கூட இருக்கலாம்.

எது எப்படியோ பொருத்துவீடானது இந்த மண்ணிற்கு பொருந்தாத ஒன்று என்பதை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருத்தல் அவசியம்.

துலாத்தன்

30-12-2016

Loading

(Visited 19 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply