கூட்டமைப்பைப் புரிந்துகொள்ளாத மக்களும் மக்களைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற கூட்டமைப்பும் -தம்பியன் தமிழீழம்-

பாராளுமன்ற அரசியலையும் தேர்தலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் தலைமைகள் தம்முள் அகமுரண் களைந்து 2001 ஆம் ஆண்டில் உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்காற்றல்களால் வழி நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 2009 ஆம் ஆண்டு வைகாசியில் புலிகளின் தலைமையிலான தமிழ் மக்களின் மறப்போராட்டம் மேற்குலக இந்தியக் கூட்டுச் சதியின் துணையுடனும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடனும் சிங்கள பேரினவாத அரச படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் வாஞ்சைகளையும் வென்றெடுப்பதற்கான அரசியல் தலைமையாகச் செயற்படும் எனத் தமிழ் மக்கள் பெரிதும் நம்பினார்கள்.

தமிழீழம் என்ற கொள்கையில் தளர்வேதுமின்றி உறுதியுடன் தமிழின விடுதலைப் போரைத் தலைமையேற்று வழிநடத்திய விடுதலை இயக்கத்தின் இல்லாமையானது, தமிழ் மக்களைத் தேற்றுவாரின்றி, கேட்பாரின்றி, நாதியற்றவர்களாக நட்டாற்றில் விட்டுள்ளது.

எனினும், விடுதலைக்காக அத்தனை ஈகங்களைச் செய்த அர்ப்பணிப்பு மிக்க விடுதலை இயக்கத்தின் இயங்காற்றலையும், நேர்மைத்திறனையும், காத்திரமான நகர்வுகளையும், துணிவையும், ஓர்மத்தையும், அடக்குமுறைகளிற்கு அஞ்சிடாது விடுதலையை வென்றெடுக்கக் கூடிய ஆற்றல்கள் மக்களிடம் உண்டு என்ற சிந்தையையும், எவரிடமும் கையேந்திக் கழிவிரக்க அரசியல் செய்ய வேண்டிய தேவை தமிழருக்கில்லை என்ற சிந்தையில் உறுதியுடன் செயற்பட்ட விடுதலை இயக்கத்தினைத் தமது அரசியல் தலைமையாக ஏற்று நின்று சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மக்களிற்கு இன்று அர்ப்பணிப்புகள் ஏதுமற்ற, தொழில் முறைச் சட்டவாளர்களின் செல்வாக்கிற்குட்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஆற்றல்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத அல்லது மக்களை வாக்களிக்கும் இயந்திரமாக மட்டும் பார்க்கும் தரங்கெட்ட பார்வையையுடைய, சாத்தியப்பாடு என்ற போர்வையில் கூனிக் குறுகிப் பணிந்து, இசைந்து ஈற்றில் இணங்கிப் போகும் பாராளுமன்ற அரசியலில் இருக்கும் ஒரு மேட்டுத்தட்டுத் தலைமையினைத் தமது அரசியல் தலைமையாக இருக்கும் என்று எதிர்பார்த்து இன்று ஏமாற்றத்தின் உச்சத்தில் நிற்கின்றார்கள்.

பாராளுமன்ற அரசியலில் பங்கேற்கும் அப்புக்காத்துமார்களை அதிகளவிற்கொண்டுள்ள அமைப்பு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியற் சிக்கல்களைச் சட்டச் சிக்கல்களாகப் பெரிதும் அணுகும்  போக்கினைக் கடைப்பிடிப்பதுடன் தனக்குப் பழக்கப்பட்ட மூடிய அறையில் பேசிப் பார்க்கும் மூடு மந்திர அரசியலைச் செய்து தமிழரின் அரசியல் மக்கள்மயப்பட்டு விடாது தனது முதுகெலும்பற்ற அரசியலையே முன்னெடுக்கிறது. இனியும் முன்னெடுக்கும். பாராளுமன்ற அரசியல் என்றுமே தமிழின விடுதலையைப் பெற்றுக் கொடுக்காது. பாராளுமன்ற அரசியலை அதியுச்ச விளைதிறனுடன் முன்னெடுப்பினும் அதனால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரையிலுமே செல்ல முடியும். அதற்கப்பால் விடுதலைப் புலிகள் போன்ற புரட்சிகர இயக்கத்தால் மட்டுமே தமிழின விடுதலையை முன்னோக்கி இயக்கிச் செல்ல முடியும். ஒரு புரட்சிகர விடுதலை இயக்கத்தால் அரச பயங்கரவாதத்தை அடித்து விரட்டி ஒரு நிழலரசை அமைத்துத் தனிநாட்டுப் பிரகடனம் செய்ய முடியும்.

 தமிழீழ நிழலரசை உருவாக்கித் தனிநாட்டுப் பிரகடனம் செய்யும் தருவாயில் தமிழீழ தேசம் நின்ற போதே, தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவினதும் மேற்குலகினதும் கூட்டுச் சதியினால் தமிழ் மக்களின் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டுத் தமிழினம் இனப்படுகொலையின் உச்சத்திற்குள்ளாக்கப்பட்டது. நிழலரசை அமைத்துத் தனிநாட்டுப் பிரகடனம் செய்வது என்பதே ஒரு புரட்சிகர விடுதலை இயக்கத்தின் உச்சக்கட்ட அடைவாக இருக்கும். இதன் மேற்சென்று தனிநாடாகத் திகழுவதற்குப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நிலைப்பாடு சாதகமானதாக அமைய வேண்டும். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைந்து தனிநாடாவதை ஏற்காது. எனவே இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் துண்டு துண்டாக உடையும் போதே தமிழீழம், தமிழ்நாடு அடங்கலான எண்ணற்ற தேசிய இனங்கள் விடுதலையடைந்து தனிநாடமைக்கும். எனவே தெற்காசியப் பிராந்தியத்தில் புதிய நாடுகள் உருவாவது என்பது தமிழ்நாடு தனது விடுதலையாற்றல்களை வளர்த்தெடுத்து இந்திய வல்லாதிக்கத்தை மண்டியிடச் செய்தால் சாத்தியமாகும்.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை சென்ற பாராளுமன்ற அரசியல் பின்னர் புரட்சிகர மறவழிப்போரினால் தமிழீழ நிழலரசு என்ற உயர்ந்த இலக்கை அடைந்தது. தமிழினத்தின் அரசியல் இலக்கை நோக்கி அடைந்த பரிணாம வளர்ச்சியைப் பொறுக்க முடியாத இந்திய, மேற்குலகக் கூட்டுச் சதி தமிழர்களை இனப்படுகொலை செய்தது. எனவே தமிழர்கள் இனப்படுகொலைக்குட்பட்ட பின்னர் சிறிலங்காவில் சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தின் கீழ் வாழமுடியாது என்ற முடிந்த முடிபை நோக்கியே தமிழர்களின் அரசியல் முன்னோக்கிச் சென்றுள்ளது. இந்த நூற்றாண்டின் வரலாறு காணாத இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட தமிழினம் தனது இயங்காற்றல்களை இன்று இழந்திருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவுக்குத் தமிழர்களின் அரசியலை முன்னோக்கி மட்டுமே நகர்த்துவது என்ற திடத்துடன் தமிழர்களின் அரசியல் நகர்த்தப்பட்டால் தனித் தேசம் அமைக்கத் தேவையான இயங்காற்றல்களைத் தமிழர்கள் காலவோட்டத்தில் ஏற்படுத்திக்கொள்வர் என்பதும் உண்மையாகும். விடுதலைக்குக் குறுக்கு வழி ஏதும் இருக்காது. அப்படிக் குறுக்கு வழியேதும் இருப்பதாகச் சொல்லின் அது விடுதலைக்குக் குழிபறிக்கும் வழியாகத் தான் இருக்கும். இப்படியிருக்க, இன்று இனப்படுகொலைக்குள்ளாகி நிற்கும் தமிழர்களின் அரசியலை மீண்டும் முன்னோக்கி இயக்கும் ஆற்றலும், இயக்கத்திற்குத் தேவையான அர்ப்பணிப்புச் சக்தியும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் அப்புக்காத்தர் தலைமைகளிடம் இருக்காது என்பதைத் தமிழ் மக்கள் உணராமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைச் சக்தியாக நோக்கி ஏமாறுவதும் ஏமாறிப் பின் மீண்டும் ஏமாறுவதற்காக பாராளுமன்ற அரசியலில் ஈடுபடத் துடிக்கும் இன்னுமொரு அப்புக்காத்தர் தலைமையை ஏற்றுக்கொள்வதுவும் தமிழ் மக்களின் அறியாமையே.

எனினும், தம்மால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பானது பாராளுமன்றிலும் பொது அரசியல் வெளியிலும் தமது அரசியல் வாஞ்சைகளையும் வேணவாக்களையும் வெளிப்படுத்தித் தமது குரலாக ஒலிக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பையேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றத் தவறினால் அதனைக் கடிந்து கூறாமற் கடந்து செல்வது அறமாகாது. ஆனால், இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டுத் தனது விடுதலைப் போராட்டத் தலைமையையும் இழந்து நாதியற்று ஒடுக்குண்டிருக்கும் தமிழ் மக்களின் இந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யத் தவறுகின்றது என்பது ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் சினமூட்டுவதாகவும் உள்ளது. தமிழ் மக்களது இந்த ஏமாற்றம் இன்னொரு பாரிய ஏமாற்றத்திற்கான அடிப்படையாக அமையக் கூடாது எனின் புரட்சிகர இயக்கம் ஒன்று நொடியேனும் தாமதமின்றிச் செயற்பட்டேயாக வேண்டும்.

2009 இற்குப் பிந்தைய காலத்தில், தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கெதிரான தமது கூட்டுளவியலை வெளிப்படுத்தும் ஒரேயொரு வழிமுறையாகத் தேர்தலைப் பயன்படுத்தி வந்தனர். இதற்கேற்றாற் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வந்தது. ஆனால், கடந்த சனாதிபதித் தேர்தலுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது தமிழ் மக்களின் வரலாற்றில் கறைபடிந்த அறிக்கையாகவே அமைந்தது..

நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருக்கும் சருவாதிகாரியாக மாறிவருவதுடன் தான் நினைத்தபடி சட்டத்திருத்தங்களைச் செய்து மூன்றாவது முறையாகவும் சனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சருவாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுவதாகவும் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பாக உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதெனவும், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டத்திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுவதாயும், அரச நிருவாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்களை, நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 17வது சட்டத்தை மாற்றியதன் மூலம் நாடு சருவாதிகாரத்தை நோக்கிச் செல்வதாகவும், பாதைகளையும், பாலங்களையும் கட்ட கண்மூடித்தனமாகச் செலவிடப்பட்ட பெரும் தொகைக் கடன் பணம், வரி என்ற பெயரில் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அதனால் மகிந்தவை அகற்றுவதற்காக மைத்திரிக்கு ஆதரவளிப்பதாகக் கூட்டமைப்புக் குறிப்பிட்டிருந்தது.

சிறிலங்காவின் நீதித்துறையே தமிழர்க்கெதிரானதாகவுள்ள போது நீதித்துறை வீழ்ச்சியடைவதையிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விம்மி வடிப்பதில் தமிழ் மக்களுக்கான அரசியல் எங்கிருக்கென்பது தெரியவில்லை. உண்மையில், இது ஆட்சிமாற்றத்தை விரும்பும் ஒரு சிங்களக் கட்சியால் வெளியிடப்படக் கூடிய தேர்தல் அறிக்கையாகவே தென்படுகிறது. “மேற்குலகம் தனக்குவப்பான ஆட்சி மாற்றத்தை சிறிலங்காவில் ஏற்படுத்துவதில் உறுதியாகவுள்ளதால் எம்மையும் அதற்கு ஆதரவளிக்குமாறு அழுத்தத்தைக் கொடுக்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரமானது அது கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தமிழின விரோதச் செயல்களை மேற்கொள்ளக் கூடியவாறு வழிசெய்கிறது. ஆட்சி மாற்றத்தால் அரசாங்கங்கள் மாறுவதால் சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. சிங்கள பேரினவாதத்திற்குத் தலைமை வகிக்கும் சனாதிபதிகள் தமது அதிகாரத்தைத் தமிழின விரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் பாங்கிற் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளனர். எனினும், மேற்குலகு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவேனெனத் திடமாக நிற்பதால் வேறுவழியின்றி நாம் அதற்கு ஒத்திசைய வேண்டியுள்ள நிலையில், தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடமன்றி அந்த மக்களிடமே இருக்க வேண்டுமென்பதை பன்னாட்டுச் சமூகத்திற்கு அழுத்திச் சொல்கின்றோம்” என அறிக்கையிட்டிருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கான அரசியலைப் பெருமளவில் நீக்கம் செய்து தேர்தல் அறிக்கை வெளியிட்டமையானது, முன்னோக்கிச் செலுத்த வேண்டிய தமிழ் மக்களின் அரசியலை மிகத் தொலைவிற்குப் பின்னோக்கி நகர்த்தியதாகவே துலங்குகின்றது.

நாதியற்று அரசியல் ஏதிலிகளாக நிற்கும் தமிழ் மக்கள் தமது அரசியல் வாஞ்சைகளையும் பேணவாக்களையும் வெளிப்படுத்தித் தமது குரலாகத் தம்மாற் தெரிவு செய்து தமது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கூடப் புரிந்துகொள்ள மறுக்கின்ற போக்கும் அணுகுமுறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆளுமை செலுத்தக் கூடியவரும், பன்னாட்டுச் சமூகத்துடனும் சிறிலங்கா அரசுடனும் தொடர்ந்து பேச்சுக்களிலும் உரையாடல்களிலும் ஈடுபடுபவருமான சுமந்திரனிடமிருப்பதைத் தொடர்ச்சியாக நோக்கக் கூடியதாகவுள்ளது.

“யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையானது ஒரு இனச் சுத்திகரிப்பு” எனக் குறிப்பிட்ட சுமந்திரன் இது தொடர்பில் வட மாகாண மன்றில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். இல்லையெனின், பன்னாட்டுச் சமூகம் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தீர்மானத்தை ஒரு விடயமாகக்கொள்ளாது” எனக் கூறியுள்ளார். ஐ.நா அவை 1993 இல் இனச் சுத்திகரிப்பிற்குக் கொடுத்த வரைவிலக்கணத்தை எப்படி முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் பயன்படுத்த விரும்புவாரோ அப்படியே சுமந்திரன் இந்தக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் அதாவது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களக் காடையருடன் சேர்ந்து தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்றும் தமிழினப் பெண்களை பால் பலாத்காரத்திற்குட்படுத்தியும் நரபலி வெறியாட்டத்தை நடாத்தினர். இது தொடர்பில் வடக்கில் தமிழருடன் இணைந்து வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஒரு வாய் கூடத் திறக்காது தமது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நிரூபித்தது மாத்திரமன்றி, அதில் சிலர் பள்ளிவாசற் தொடர்புகள் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத அரச படைப்புலனாய்வாளர்களுக்குத் தகவல் வழங்கும் கேவலமான வேலையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முனைந்தால் ஒன்றுபட்டு நின்று பள்ளிவாசலை வைத்துத் தப்பிக்க முனைவார்கள். அறவுணர்வுக்கு அப்பாற்பட்டுத் தமது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குள் கட்டுண்டு கிடக்கும் ஒரு சமூகத்தைக் கூட வைத்துக்கொண்டு தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தன்னாட்சியுரிமை எனப் போராடுவது அடக்குண்டிருக்கும் தமிழினத்திற்கு மிகக் கடினமாக இருக்கும் என நினைத்து 24 மணி நேர காலக்கெடுவில் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டுத் தமிழருடன் வடக்கில் அவர்கள் இணைந்து வாழ்தல் விடுதலைப் புலிகளால் மறுக்கப்பட்டது. இது தொடர்பில் பின்னரான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் முஸ்லிம் தலைமைகளை வன்னிக்கு வரவழைத்து வருத்தம் தெரிவித்ததுடன் முஸ்லிம்களை மீளக் குடியேறுமாறும் கோரியிருந்தார். ஆனால் இது வரை முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் ஊர்காவல் படையால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் தலைமைகள் உரிமை பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் சலுகைகள் வேண்டி மாறி மாறிக் கூட்டணி வைக்கும்; நாகரீகம் கருதாது சொல்ல வேண்டுமெனின் விபச்சார அரசியலைச் செய்கின்றனர். இவ்வாறிருக்க, முஸ்லிம்களுக்கு வடக்கில் இணைந்து வாழ்தல் மறுக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து மீளக் குடியேறுமாறு அழைப்பு விடுத்து விடுதலைப் புலிகளினால் முடித்து வைக்கப்பட்ட சிக்கல் தொடர்பில் வட மாகாண மன்றில் பிரேரணை கோரிச் சுமந்திரன் உரையாற்றுவது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப்படுகொலையைச் சந்தித்து இன்று நட்டாற்றில் நிற்கும் தமிழ் மக்களிற்கு வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதாகவே இருந்தது. சிங்கள பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுடன் சமன் செய்து சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள ஒரு சமூகத்தின் கூட்டுளவியலில் குற்றவுணர்ச்சியை வளர்த்து விடுதலை நோக்கி இயங்குவதில் சலிப்பையும் உண்டு பண்ணக் கூடும் என்பதும் இங்கு நோக்க வேண்டும்.

வடக்கு- கிழக்கை இணைக்கப் பாடு பட வேண்டிய த.தே.கூ இன்று வடக்கு- தெற்கை இணைக்கப் பாடுபடுகின்றது. தெற்கில் குழப்பங்கள் ஏற்படக் கூடாது என்பதனால் தமிழர்களின் உரிமை தொடர்பில் அதிகம் பேசாதிருப்பதோடு ஏதேனும் இது தொடர்பில் பேச விளைகின்ற போது அரசியலமைப்பு சீர்திருத்தம் வந்துகொண்டிருக்கின்றது என கேலிக்கிடமான மொட்டைப் பதிலொன்றை உதிர்ந்து விட்டுப் போகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் விரைவில் வருகின்றது. தேசிய இனச் சிக்கல் தீரப் போகின்றது என அடிப்படையற்ற பதில்களைச் சொல்லி அதனைத் தமிழ் மக்களை நம்புமாறு வேண்டுவதன் மூலம் தமிழ் மக்களை மடையர்களாக இருக்கக் கோருகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இயங்கியல் போக்கைப் பார்க்கில் அது எப்போதும் தனது பேரினவாதச் சிந்தையில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போட்டியாக ஒரு கட்சியைத் தொடக்குவதற்காகவே தனிச் சிங்களச் சட்டத்தை 1956 இல் S.W.R.D. பண்டாரநாயக்கா கொண்டு வந்தார். பண்டா- செல்வா ஒப்பந்தத்தை முறியடிக்க ஜே.ஆர் பாதயாத்திரை போனார். டட்லி- செல்வா ஒப்பந்தத்தைக் குழப்ப சிறிலங்கா சுதந்திரக் கட்சி தன்னாலான சகல வேலையையும் பார்த்தது. சந்திரிக்காவின் தீர்வுப் பொதியை ரணில் குழப்பினார். ரணிலின் சமாதானப் பேச்சுவார்த்தையைச் சந்திரிக்கா குழப்பினார். இப்படிச் சிங்கள தேசம் தனது இருப்பினைத் தக்க வைக்க சிங்கள மக்களிடம் ஊறிக் கிடக்கும் மகாவம்ச மனநிலையின் மீதே நம்பிக்கை வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கை ஒரு போதும் வீண் போகவில்லை. நிலைமை இப்படியிருக்க தற்போது ஒரு தீர்வுத் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்க்க எதிர்க்கட்சி இல்லை எனவும் த. தே. கூட்டமைப்பே எதிர்க்கட்சி எனவும் எனவே இந்த முறை தீர்வு முயற்சியில் நம்பிக்கை வைக்கலாம் என்று சொல்லிப் பாலியல் பலாத்காரத்திற்கு ஊசி நூல் விளக்கம் கொடுக்கும் அப்புக்காத்தர்களின் வார்த்தை விளையாட்டைக் காட்டச் சுமந்திரன் முனைகின்றார்.

உண்மையில் அரசியலமைப்புச் சட்ட மன்றம் கூடும் போது, அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்த தேசிய இனச் சிக்கலிற்குத் தீர்வு, புதிய அரசியலமைப்பு என்ற சொல்லாடல்கள் கூட்டு எதிர்க்கட்சியின் குழப்பத்தைத் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது. முதலாவது கூட்டத்தில் முன்னுரை வாசிக்கும் போதே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து நல்ல பாடம் கிடைத்திருக்கும். அப்படியிருக்க எப்படித் தான் இப்படிப் பெரிய பொய்யை 2 வருடங்களாக இடையறாது இவர்களால் சொல்ல முடிகின்றது என்று தான் தெரியவில்லை. தீர்வு வருகின்றது என்பதால் நாம் தெற்கைக் குழப்பக் கூடாது. அதனால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் வாஞ்சைகள் குறித்துப் பேச முடியாது என்றும் சமஸ்டி என்ற சொல்லைக் கேட்டால் தெற்குப் பதறும் எனவே ஒற்றையாட்சி என்று சொல்லியும் எழுதியும் பழக்கப்படுவோம் என்றவாறு த.தே.கூ இயங்கி வருவதானது ஈற்றில் தீர்வும் இல்லை என்பதும் திரும்பிப் பார்த்தால் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் பின்னோக்கிச் சென்ற தொலைவு கண்ணுக் கெட்டாத தொலைவு என்பதாகிவிடும்.

ஜெனிவா அரசியல் வேலைக்காகாது என்பதைப் புரிந்துகொண்ட இன்னுமொரு அப்புக்காத்தர் தலைமையிலுள்ள பாராளுமன்ற அரசியலில் ஈடுபடத் துடிக்கும் கட்சி இதனைத் த.தே. கூட்டமைப்பிற்கு எதிரான சேறடிக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் தனது நாற்காலி அரசியலை உறுதிப்படுத்த முனைகின்றது. தமிழ் மக்களின் கையறு நிலையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயங்காற்றலின்மையாகக் காட்ட முனைவது சிறுபிள்ளைத்தனம் என்பதில் இப்பத்தி எழுத்தாளர் உடன்படுகின்றார். அமைதிவழிப் போராட்டங்களால் எதுவும் தமிழருக்குக் கிடைத்து விடாது என்று நிறுவிய பின்பே மறவழி அறப்போரைத் தமிழர்கள் புரட்சிகரமாக முன்னெடுத்தனர். எனவே சிங்கள பௌத்த பேரினவாதத்திடமிருந்து ஒரு துரும்பைத் தன்னும் தீர்வாகத் தமிழர் பெற முடியாது என்பதே வரலாறு சொல்லும் பாலபாடம். ஆனால், இதனை மறைத்துத் தமிழர்களை ஏமாற்றித் தெற்கைப் பதற்றமடையாமலிருக்கச் செய்யும் அரசியலின் நேர்மைத்திறமின்மையே இங்கு சுட்டப்படுகின்றது.

 தெற்குப் பதறி விட்டால் வடக்குக் கிழக்கை இணைக்க முடியாமல் போனது போல் வடக்குத் தெற்கை இணைக்க முடியாமல் போய்விடும் என்று கூட்டமைப்புத் தலைமை பதறுவதால் நிலமீட்பு, அரசியல் கைதிகள் விடயம், காணாமலாக்கப்பட்டோர் விடயம் போன்றன தொடர்பில் மக்கள் திரள் போராட்டங்களை மக்களோடு மக்களாக நின்று தலைமையேற்று நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால் தாமாகவே முன் வந்து பாரிய மக்கள் திரள் போராட்டத்தைக் கேப்பாப்பிலவில் மக்கள் முன்னெடுக்கும் போது ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் கூட நேரில் வந்து சொல்லாமல் போராடும் மக்களைக் கொழும்பிற்கு அழைத்துப் பேச ஒழுங்கு செய்யும் முகவராக த. தே. கூட்டமைப்பு செயற்படுவது இரட்டை விடயங்களை இங்கு சுட்டுகிறது. முதலாவது, மக்கள் திரள் போராட்டங்களை மூடிய அறைப் பேச்சுகளில் பேச வைத்து முடிவுக்குக்கொண்டு வருவதன் மூலம் நல்லிணக்க அரசாங்கம் என்று சொல்லப்படும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களை தமிழர் தாயக நிலங்களில் கட்டுப்படுத்தி, நல்லிணக்க அரசாங்கத்தின் முகவராகச் செயற்படுவது. மற்றையது, நல்லிணக்க அரசுடன் பேரம் பேசல் இணக்கப்பாட்டிற்கு வந்து இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழர்களின் நிலங்களினைப் பகுதியளவேனும் விடுவித்து தமிழ் மக்களின் முகவராகச் செயற்படுவது என்றவாறு இரட்டை முகவர் அணுகுமுறையைக் குறிப்பாகச் சுமந்திரன் போன்றோர் பின்பற்றுவது தெரிகின்றது. ஈற்றில் சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரே பாடத்தை வேறு வகுப்பறைகளில் வைத்து இந்த அரசியல் முகவர்களுக்குக் கற்பித்துச் செல்லும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கு எதையும் கொடுக்காது அப்படி ஏதேனும் கொடுத்தால் அது தேன் தடவிக் கொடுக்கப்பட்ட நஞ்சாகவே இருக்கும் என்ற பாடத்தை இந்த நல்லிணக்க வகுப்பறை மீண்டும் தமிழ் மக்களிற்குத் தெளிவாகச் சொல்லிவிட்டது எனினும் தெற்குப் பதறிவிடக் கூடாது என நினைத்து அதனைக் கூட்டமைப்புத் தலைமை சொல்லாமலிருப்பதையே நேர்மைத்திறனின்மை எனக் கடிய வேண்டியுள்ளது.

 21 பேர் கொண்ட பாராளுமன்ற வழிகாட்டல் குழுவில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் பங்குபற்றுகிறார்கள். இத்தப் பாராளுமன்ற வழிகாட்டல் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சமஸ்டியும் இல்லை, வடக்கு- கிழக்கு இணைப்பு என்பதும் இல்லை, ஒற்றையாட்சி சிறிலங்காவில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன், சுமந்திரனும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் எனச் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கு இது வரையில் தமிழ் மக்களிடம் பேச்சாளர் சுமந்திரன் கூறிய காரணம் எனவெனில் தீர்வு வரும் நேரத்தில் தெற்குப் பதறிவிடக் கூடாது என்பதேயாகும்.

அண்மையில் த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அதாவது GSP+ இனை வழங்கக் கோரும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க அவர் வெளிநாடு சென்றதாகச் சொல்லப்பட்டது. இவ்விடயம் சமூக வலைத் தளங்களில் பெருமளவிற்குக் கடிந்து பேசப்படும் வரையில் இது தொடர்பில் எதுவும் பேசாமல் இருந்த சிறிதரன் விடயம் வெளியில் பாரியளவு பரவிய பின்னர் அதனை மறைக்க நேரத்திற்கு நேரம் முரண்பாடாகப் பேசலானார்.

“உண்மையில் மேற்குலகம் தனக்குவப்பில்லாத சிறிலங்கா அரசாங்கத்திற்குப் பொருண்மிய நெருக்கடி கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட GSP+ வரிச்சலுகை இரத்து என்பது தமிழினவழிப்பைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு மீதான ஒரு நெருக்கடியாக இருந்தது என்பதோடு காலப்போக்கில் இது பொருண்மியத் தடை வரை செல்லலாம் என்ற எதிர்பார்ப்போடு தமிழர்களுக்குச் சிறு ஆறுதலைத் தந்தது. எனினும் மேற்குலகிற்கு உவப்பான இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பதற்காக GSP+ வரிச்சலுகையை மீள வழங்குவதென மேற்குலகம் முடிவெடுத்துள்ளமை தெரிகின்றது. பாராளுமன்றக் குழுவொன்றிற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க நானும் சென்ற போது இவ்விடயம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வரிச்சலுகை நீக்கக் கோரப்பட்டிருந்தது. இது உண்மையில் நிகழ்ச்சி நிரலின் படி நடந்த நிகழ்வல்ல. எனினும் இப்படி ஒரு அவலச் சூழலில் சூழ்நிலைக் கைதியாகி எமது மக்களின் உணர்வுகளை இது தொடர்பில் வெளிப்படுத்தத் தவறியமையால் நான் பெரிதும் குற்றவுணர்வடைகின்றேன்” இப்படிக் கூறியிருந்தாலே வெளிநடப்புச் செய்யாமலிருந்த சிறிதரனின் ஆளுமையற்றதன்மையைத் தமிழ் மக்கள் மன்னிப்பார்கள். பள்ளிச் சிறார்களுக்குக் கதை சொல்லுவது போல சிறிதரன் கதை சொல்லி மக்களை மடையராக்க முனைவது தான் இங்கு வருத்தமளிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழர்களின் தாயக நிலப்பரப்பில் ஒரு பகுதியளவு நிருவாகத்தையேனும் செய்யும் வாய்ப்பாக வட மாகாண மன்றின் ஆட்சி கிடைத்தது. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டை அடிப்படையில் சிதைக்கும் ஒரு கோட்பட்டின் வழி வந்த நிருவாக அலகு தான் இதுவெனினும், குறைந்த பட்சம் நல்ல அடித்தளக் கட்டுமானத்தையேனும் இந்த நிருவாகத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்த முனைந்திருக்கலாம். இப்படியான இயங்காற்றலின் தேவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமலும் மக்களிற்குத் தேவையான அடித்தளக் கட்டமைப்பு வேலைகள் குறித்த எந்தவொரு ஈடுபாடுமில்லாமல், பன்னாட்டு நீதியரசர்களின் பங்கேற்பின் சாத்தியத்தன்மை குறித்து சட்ட ஆய்வில் ஈடுபடுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் கூறுவதை எப்படி நாகரீகமான வார்த்தைகளில் கடிந்து விட்டுக் கடந்து போவதென்று தெரியவில்லை.

கிடைத்த அடிப்படை நிருவாகக் கட்டமைப்பை உச்ச வினைத்திறனுடன் பயன்படுத்தாமல் தனது அப்புக்காத்தர்களுக்குத் தீர்ப்புச் சொல்லும் வர்க்கப் பண்பைக் காட்டியவண்ணமேயுள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். ஒரு பெட்டிக்கடையைக் கூட நடத்தும் நிருவாக ஆளுமையற்ற விக்கினேஸ்வரன் போன்ற கள்ளச் சாமி பிரேமானந்தாவின் பக்தனிடம் தமிழர்களது நிருவாகக் கட்டமைப்புத் தாரை வார்க்கப்பட்டதற்கு த,தே. கூட்டமைப்பு என்ன பதில் சொல்லப் போகின்றது எனத் தெரியவில்லை. ஒரு வேளை தெற்குக் குழம்பாமல் இருக்க வேலைகள் செய்வது போல இது இந்தியா குழம்பாமல் இருக்கச் செய்யப்பட்ட வேலையாக இருக்கும் என்பதை விடயமறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பிரேமானந்தா என்ற கள்ளச் சாமியின் ஆசிரமத்தில் இருந்த 13 இற்கு மேற்பட்ட சிறுமிகள் பால் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட விடயத்திலும் அதனைப் பார்வையுற்ற ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பிரேமானந்தாவின் வழக்கில் சிறைப்பட்டு இருக்கும் மூவரின் விடுதலையை வேண்டி இந்தியப் பிரதமர் மோடிக்கு விக்கினேஸ்வரன் எழுதிய கடிதமே வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர் வெளியில் எழுதிய முதற்கடிதமாகும். பின்னர் 2015-02-26 அன்று சிறுமிகளை பால் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கொலைக் குற்றவாளி பிரேமானந்தா என்ற கள்ளச்சாமிக்கு புளியங்குளத்தில் சிலை வைத்து பூபாள கிருஸ்ணன் ஆலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது, பிரேமானந்தாவின் அருளால் இப்படி ஒரு பதவி வாய்ப்புக் கிடைத்துச் பிரேமானந்தாவுக்கு சிலை வைக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் புளகாங்கிதமடைந்தார். இது போன்ற கேவலமான விடயங்களை எப்படிக் கடந்து செல்கின்றோம் என்பது கேவலத்திலும் கேவலமானதே. இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல் இருக்கின்றது என்று சொல்லி வந்த விக்கினேஸ்வரன் இந்தியாவிற்குப் போய் PUCL ஒழுங்கமைத்த கூட்டத்தில் உரையாற்றி விட்டு வந்த பின்னர் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றித் திடீரென வன்வலு வேடமிட்டதன் மூலம் கூட்டமைப்பின் இணங்கிப்போகும் மென்போக்கில் விரக்தியுற்றவர்கள் உண்மையான புரட்சிகர சக்திகளாக உருவாகும் சூழல் தவிர்க்கப்பட்டு தமிழர்கள் மீண்டும் மடையராக்கப்பட்டனர். இது இந்திய உளவுத்துறையின் திட்டம் என்பதை அறியாமல் இருப்பதை என்னவென்று கூறலாம்? இதுக்கெல்லாம் கூட்டமைப்பின் தலைமை பதிலளிக்காமல் தீர்வு தரப்போவதாகக் காட்டும் வித்தையை என்னவென்று சொல்வது?

ஜெனிவாவில் கடைசியாக நடந்த ஐ.நா வின் மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசம் வழங் ஏற்பதாகக் கூறிய கூட்டமைப்புப் பின்னர் தாம் அதனை ஏற்கவில்லை எனக் கூறியது. பின்னர் வழங்கப்பட்ட கால அவகாசத்தை வரவேற்று அறிக்கை விட்டது. இப்படித் தாமும் குழம்பி மக்களையும் குழப்பாமல் நேர்மைத்திறனுடன் தமிழ் மக்களிற்கு விடயத்தை எடுத்துச் சொல்லி மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து மக்களை அணிதிரட்டி மக்கள் திரள் போராட்டங்களைச் செய்து தமிழர்களின் அரசியலை முன்னோக்கி நகர்த்த வேண்டியதிலிருந்து த.தே. கூட்டமைப்பு விலகி நிற்பதென்பது புரட்சிகர இயக்கத்தின் உடனடித் தேவையையே தமிழருக்கு உணர்த்துகின்றது.

“மக்களிற்கு உண்மையைச் சொல்லுங்கள் அவர்கள் விடுதலையை வென்றெடுப்பார்கள்”

விடுதலைப் புலிகளைப் போன்ற ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் தமிழின விடுதலையை முன்நோக்கி இயக்குமெனின், பாராளுமன்ற அரசியலையும் தேர்தலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் செம்மைப்படுத்த இயலுமானதாயிருக்கும். இப்போது தமிழர்களுக்குத் தேவை ஒரு புரட்சிகர இயக்கத்தின் விடுதலைச் செயற்பாடுகளேயன்றி வேறேதுமில்லை.

-தம்பியன் தமிழீழம்-

2017-06-15

Loading

(Visited 20 times, 1 visits today)

1 Comment

  1. இந்தக் கட்டுரையாளருக்கு யதார்த்தம் புரியவில்லை. சாம,பேத, தான, தண்டம் என்ற நால்வகை உத்திகள் தோற்ற பின்னர் மீண்டும் இராஜதந்திர வழிகளில் எமது உரிமைகளை வென்றெடுக்க ததேகூ குறிப்பாக தமிழ் அரசுக் கட்சி பாடுபடுகிறது. மாகாண சபையே நிருவாக அலகாக இருக்கும். அதற்கு காணி, காவல்துறை அதிகாரம் இருக்கும். கச்சேரி முறைமை ஒழிக்கப்படும். நிறைவேற்றதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கையில் இருக்கும். தமிழர்கள் இலங்கையை விட்டு ஓட முடியாது. அங்கு இருப்பவர்கள் தென்னிலங்கையோடு இணங்கித்தான் வாழ வேண்டும். தமிழீழம் கிடைத்தாலும் இதுதான் நிலைமை.

1 Trackback / Pingback

  1. ஊழலை முன்வைத்து அதிகாரத்துக்கான சுயநலப் போராட்டம் குறித்து! | Global Community of Akkaraipattu

Leave a Reply