ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி பத்திரிகை – ஆதவன்

நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்களிற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான  சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ப்பத்தனமான சோரம்போதலை தமிழ்ச் சமூகம் அனுமதிக்க முடியாது. நிராஜ் டேவிட் வணிக முதலாளிகளின் தேவைகளுக்கேற்ப தலையங்களை கட்டமைத்து சோரம் போகும் பிழையான உதாரணத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது.

 கட்டுரைக்குப் போக முன்பு ஐபிசி நாளிதளில் நிராஜ் டேவிட் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தைப் பார்ப்போம்.

“ South Asia Terrorism Portal” என்ற அமைப்பு வெயியிட்ட தகவலின் அடிப்படையில் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் பங்குபற்றிய இஸ்லாமியரான “ரம்சியூசப்” இற்கு போலிக் கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தவர் ஒரு ஈழத் தமிழரே. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் பகுதி நேரப் பணியாளராக கடமையாற்றியுள்ளார். எனவே இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகள் காரணமாக இருக்கலாம் என்று South Asia Terrorism Portal பிரச்சாரம் செய்து வருகிறது.

எப்போதெல்லாம் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க வேண்டும் என்று விவாதங்கள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் “ரம்சியூசப்” இன் போலிக் கடவுச்சீட்டு விவகாரம் பேசப்படுகிறது. எனவே புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தபடி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை தொடர்பில் இருந்து துண்டிக்காமல் விடுதலைப்புலிகளின் பெயரில் இராஜதந்திர முயற்சி செய்தால் அது பலனளிக்காமல் தொடர்ச்சியாக அரசியல் ரீதியான தேக்க நிலையே ஏற்படும்.”

என்று தனது கட்டுரையில் நிராஜ் டேவிட் குறிப்பிட்டுள்ளார். தவிர விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடர்வதற்கு சிறிலங்கா மற்றும் பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளால் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் என்று குறிப்பிட்டும் சில குற்றச் சாட்டுக்களை பட்டியல் படுத்தியிருக்கிறார்.

தமிழீழ விடுதலையை விரும்பாதவர்கள் எப்படிச் செயற்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட நிராஜ் டேவிட் விரும்பியிருந்தாலும் கட்டுரைக்கு இடப்பட்ட தலைப்பானது வணிக நோக்கமுடையது. இந்த வணிக நோக்கத்திற்கு பின்னால் ஐபிசி குழுமத்தின் வர்த்தக நோக்கம் பிரதான காரணியாக இருக்கலாம். ஐபிசி செய்தி நிறுவனமானது லிபரா முதலாளிகளால் பல லட்சக்கணக்கான யூரோக்களை கொட்டி இயங்கிவரும் வர்த்தக நிறுவனமே. அந்த வர்த்தக நிறுவனமானது தன் மீது தானே சர்ச்சைகளை உருவாக்கி தன்னைப் பற்றி எப்போதும் சமூகம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும் சாதாரண வணிக நிறுவனமே.

சிங்கள அரசின் பிரதான வெளியுறவுக் கொள்கை வகுப்பாளராகவும், “ South Asia Terrorism Portal” அமைப்பின் பிரதானியாகவும் இருக்கும் “ரொஹான் குணரட்ண” என்ற மோசமான தமிழின விரோதியின் சதியை முறியடிக்க புலம்பெயர் அமைப்புக்களை சீர் செய்து செயற்படும் படி கோரிக்கை விட வேண்டிய கட்டுரைக்கு, சம்மந்தமில்லாமல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சந்தேகிக்கும் வகையில் தலைப்பை இட்டு விளம்பரப்படுத்த நினைத்த ஜபிசி நிறுவனமானது தனது இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களை வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமந்துவதே ரொஹான் குணரட்ணவின் திட்டம். அப்படி புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களில் வெளிவரும்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் நோக்கத்திலான எந்தவொரு கருத்துக்களாக இருந்தாலும் அந்தக் கட்டங்களை வெட்டியெடுத்து ஆவணப்படுத்தி பிரச்சாரப்படுத்திவருகிறது சிறிலங்காப் புலனாய்வுத்துறை. அதாவது “புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வலுவாக எதிர்க்கிறார்கள் ” என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த நினைக்கிறது சிறிலங்கா அரசு.

ஏற்கனவே இலக்கியவாதிகள் என்ற போர்வையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் புலிகளையும் அவமதிக்கும் வகையில் தலைப்புகளை இட்டு ஆக்கங்களை வெளியிட்டு வருகிறார்கள். சமூக வலைத் தளங்களில் கூட “புலிகள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கால் தான் குற்றம் செய்தும் தண்டனையில் இருந்து தப்பினார்” என்ற தொனிப் பொருளில் சிலரை சுட்டிக் காட்டி பதிவுகள் போடப்படுவதைக் காணலாம். புலிகள் எப்போதும் தண்டனை வழங்குவதில் செல்வாக்கை அனுமதிப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படியான வதந்திகளை பரப்புவதன் மூலம் அதனால் ஏற்படும் தாக்கத்தை ஆவணப்படுத்தி அதை தனது பிரச்சாரத்திற்கு பயன் படுத்துகிறான் எதிரி.

ஐபிசி நிறுவனம் வெளியிட்ட கட்டுரைத் தலைப்பானது கட்டமாக வெட்டப்பட்டு அதைப்பற்றிய சிறு குறிப்பெழுதப்பட்டு உலக நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பப்படலாம். புலம்பெயர் நாடுகளில் பிரபலமான தமிழ் ஊடகமொன்று கூட புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது என்று அதற்கு அர்த்தம் கற்பிக்ப்படலாம்.

எதிரி செயற்படும் விதத்தையும் எதிரியின் நோக்கத்தையும் எல்லாத் தமிழர்களும் புரிந்து செயற்பட வேண்டும். தமது விளம்பரங்களுக்காக  தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமான அடிப்படையற்ற கருத்துக்களானது எதிரியின் நிகழச்சி நிரலுக்குட்பட்டதென்றே கருத வேண்டியிருக்கிறது.

விடுதலைப் போட்டங்கள் மீது அடிப்படையற்ற சர்ச்சைகளை உருவாக்கி  போராட்டத்தின் நோக்கத்தை சிதைத்து பன்னாட்டு உறவு நிலையில் இருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடானது, பல விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக இஸ்ரேலிய மற்றும் இந்திய உளவு அமைப்புகளால் பயன்படுத்தப்பட்ட, பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற உத்தியாகும். மியன்மாரில் தேசிய இனங்களுக்கிடையில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பின்னர், அந்த விடுதலைப்போராட்டச் சிந்தனையை அழிக்கும் வேலைக்கு மேற் கூறப்பட்ட உத்தியை இந்திய உளவுத்துறையான “ரோ” பயன்படுத்தி வெற்றி கண்டது.

ஐபிசி மாத்திரமல்ல தத்தமது சுய விளம்பரங்களுக்காகவும், வணிக விளம்பரங்களுக்காகவும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடிப்படைக் காரணமற்று சர்ச்சைகளை உருவாக்கும் விதத்தில் கருத்துகளை பரப்புவதானது எதிரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும்.

ஆதவன்

04 – 06 -2017

 2,841 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply