
ஒரே மரபினத்தைச் சார்ந்த இரத்த உரித்துகள் என்ற உடன் பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் இரண்டு தேசிய இனங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழ்பவர்கள் என்ற நெருக்கத்தாலும் ஈழ விடுதலையும் தமிழ்நாட்டு விடுதலையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு என்பதாக தமிழீழ விடுதலைக்காக அந்த மண்ணிலுள்ளவர்களால் அந்த மண்ணிலிருந்து மட்டுமே உறுதியாகப் போராட முடியும். தமிழ்நாட்டில் அதற்கான தார்மீக ஆதரவுத் தளத்தைக் கட்டுவதோடு தமிழினப் பகையான இந்திய அரசை எதிர்த்தே போராட முடியும். அதே போல், தமிழ்நாட்டு விடுதலைக்காக அந்த மண்ணிலிருந்து அந்த மக்களாலேயே போராட முடியும். எண்ணிக்கையில் எவ்வளவு பெரும்பாண்மையினராக தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருப்பினும் முப்பதாண்டுகள் ஆயுதந்தூக்கிப் போராடியமையால் பெற்ற ஆற்றல்களினையும் படிப்பினைகளையும் பயன்படுத்தித் தாய்த் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக ஈழத்தமிழர்களால் தார்மீக ஆதரவினைக் கொடுக்க முடியும். ஒரு இனவழிப்பிற்குட்பட்டு வெந்து போய் எஞ்சி நிற்கும் ஈழத் தமிழினம் இன்று உலகெங்கும் ஏதிலிகளாகப் பரந்து வாழினும் தமிழர்கள் எங்கேனும் பாதிக்கப்பட்டால், தாம் ஏதிலிகளாக அலையும் நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகையிட்டுப் போராடுவது என்ற எச்சரிக்கை உணர்விற்கு வந்து விட்டனர் என்பது கர்னாடகாவில் தமிழர் தாக்கப்பட்ட போதும் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரங்கள் முற்றுகையிடப்பட்டுப் போராடப்பட்டமையிலிருந்து துலாம்பரமாகின்றது. தமிழ்நாடு விடுதலை குறித்து சிறிதும் ஈழத்தமிழர் பேசுவதில்லை எனக் குறைப்பட்டு வந்த தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் தமது மனக்குறை தீர்ந்துவிட்டதாகவும் இவ்வாறான புத்தெழுச்சி மாற்றங்கள் தமக்குள் இருக்கும் விடுதலை உணர்வை வீறுகொண்டெழச் செய்வதாகவும் உணர்ச்சிப் பெருமிதத்துடன் கருத்துகளைப் பகிருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழின உணர்வும் தமிழ்த் தேசிய உணர்வும் வீறுகொண்டு எழுச்சி பெறத் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏதுவாய் இருந்தது. ஆனால் தனித் தமிழ்நாட்டு முழக்கங்கள் தமிழீழத்தில் தனிநாட்டுக் கோரிக்கை ஏற்படுவதற்கு முன்பே ஆரம்பித்து விட்டன. மறைமலை அடிகளார், தேவநேய பாவாணர், ஆதித்தனார், பெருஞ்சித்திரனார், புலவர் கலிகைப் பெருமாள், தமிழரசன் எனத் தொடர்ச்சியாகத் தனித் தமிழ்நாடு கோரிய முழக்கங்கள் தமிழ்நாட்டில் 1930 களின் இறுதியிலிருந்தே வலுப்பெற ஆரம்பித்து விட்டன. தமிழீழம் தமிழினத்தின் இன்னுமொரு நாடு என்ற உணர்வும் உரிமையும் தமிழகத் தமிழர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். மலையகத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் 1980 களின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது, உலகில் எங்கேனும் தமிழர்கள் அடக்குண்டிருந்தால் மலரப் போகும் தமிழீழம் வந்து தமிழீழக் குடிமகன்களாக வாழலாம் என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டுவது தமிழின ஒருமைப்பட்டினைக் கோடிட்டுக் காட்ட உதவுவதாகவிருக்கும்.
ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழர் என்ற மிகவும் தொன்மமான மரபினத்தைச் சார்ந்த உலகின் மிக மூத்த குடியினர். தமிழீழத் தமிழ்த் தேசியம், மலையகத் தமிழ்த் தேசியம் என இரண்டு தனித் தேசியங்களாக இலங்கைத் தீவிலும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியமாகவும் உலகின் மூத்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் உலகின் மூத்த குடியான தமிழர் என்ற மரபினத்தினை, ஆரியச் சித்தாந்தத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்தியாவானது தனது வாழ்நாள் பகையாகக் கருதித் தமிழின விரோதச் செயற்பாடுகளைத் திட்டந்தீட்டிச் செயலாற்றி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்திலிருந்து தமிழ்நாட்டிலுள்ள தமிழுணர்வுச் செயற்பாட்டாளர்கள் தார்மீக உதவிகளை வழங்கினார்கள், மிகச் சிலர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தும் போராடினார்கள். இராசீவ் சாவின் பின்னர் இப்படிப் பல இனவுணர்வுச் செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்பட்டார்கள். சிறைப்பட்டார்கள். உளவுத்துறையின் தாங்கொனாத் தொடர் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். 1995ம் ஆண்டு யாழ்மாவட்டத்திலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறியபோது தமிழ்நாட்டு அரசிடம் அவர்களுக்கு ஆதரவுக் கேட்டு 15-12-1995 அன்று அப்துல் ரவூப் திருச்சியில் தீக்குளித்தார். இவரே, ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டவர். நெய்தல் நில மக்கள் இறுதிவரை தமிழீழ மக்களுக்குத் தேவையான கள மருத்துவப் பொருட்களையும், எரிபொருட்களையும் உணவுகளையும் தமது உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டில் பெருமளவு மக்கள் தமிழின உணர்வின் பாற்பட்ட அரசியலில் தெளிவற்று இருக்கும் நிலைகண்டு பொறுக்க முடியாமல், மக்களைத் தெளிவுபடுத்தி எழுந்து போராட வைப்பதற்காக ஈகி முத்துக்குமார் திக்குளித்துத் தன்னை ஆகுதியாக்கி விடுதலைச் செம்மல் ஆனார். இப்படி எப்பேர்ப்பட்ட உயர்ந்த தியாகங்களைச் செய்யினும் இவை எல்லாம் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களாகவே வகைப்படுமேயன்றி, தமிழீழ விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளெனில் அது அந்த மண்ணிலிருந்து அந்த மண்ணிற்குரிய மக்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும்.
தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் ஈழச் சிக்கலைத் தமது நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொண்டு தமது போக்கிரித்தனங்களை அரங்கேற்றும் அதேவேளை, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகளோ இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் சேர்வதும், தேர்தல் பாதை திருடர் பாதை என்று கூறித் தம்மைக் கொள்கைக் குன்றுகளாகக் காட்டும் அமைப்புகளோ தமது இருப்பிற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதாவதொரு அணியை ஆதரித்துச் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதுமாய் தமிழ்நாட்டு அரசியல் நகருகின்றது. இதில் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் உருவான “நாம் தமிழர்” என்ற கட்சி தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பினும் தமது வரையறுகளுக்குட்பட்டு இயலுமான வரையில் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளைத் தானும் பேசு பொருளாக்கி, பெரிய ஊடக பலமுமில்லாமல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் அந்த அரசியலை எடுத்துச் செல்ல அரும்பாடுபட்டு வருகின்றது. அத்துடன் அந்தக் கட்சி தேர்தல் அரசியலில் இருப்பினும் எவருடனும் கூட்டுச் சேராமல் தனித்து நின்று இதுகாலவரையிலும் தவறான கூட்டணிக்குச் சென்று திசை மாறாமல் ஒரளவு நேர்கோட்டில் பயனிப்பதானது தமிழ்த் தேசிய அரசியலை நேசிப்பவர்களுக்கு ஓரளவேனும் ஆறுதலாகவுள்ளது. எனினும் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்கும் ஒரு தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சி எதுவரை தனது பயனத்தைக் கொண்டு சேர்க்குமோ என்ற பதை பதைப்பு தமிழ்த் தேசியத்தை நெஞ்சில் தாங்கும் ஒரு சாராரிடம் இருக்கவே செய்கின்றது.
ஈழத்தமிழர்களின் அழிவில் தனது வாரிசுகளின் எதிர்காலம் குறித்து டெல்லியுடன் பேரம் பேசலில் ஈடுபட்டிருந்த நரியார் திருவாளர். கருணாநிதி அவர்கள், காலை உணவுக்கும் மதிய உணவுக்குமிடையில் உண்ணாவிரதமிருந்து நாடகமாடி ஒட்டுமொத்த தமிழரையும் தனது நடிப்பாற்றலால் எள்ளி நகையாடினார்.
இந்திராகாந்தியின் அவசரகாலநிலை அடாவடிகளினால் ஏற்பட்ட அவலங்கள் அடங்குவதற்கு முன்பாகவே காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தும் பின்னர் மாந்த குல விரோதியான பா,ஜ,கவுடன் கூட்டுச் சேர்ந்து குஜராத் படுகொலையின் பின்னரும் இன்னும் கெட்டியாகப் பா,ஜ,க கூட்டணியில் நிலைத்திருந்த பகுத்தறிவுப் பகலவன் பாசறையில் வளர்ந்த கருணாநிதி அவர்கள் மாநில அதிகாரங்களுடன் மத்திய அரசின் அமைச்சுகளைப் பெற்றுப் பல்லாயிரம் கோடி தொழிற்றுறைகளை தன்வசப்படுத்தி, தனது குடும்பத்தை ஒரு தரகு முதலாளித்துவக் குடும்பமாக்கினார்.
1991 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு ராசீவ் காந்தி துண்டு துண்டாகிச் செத்ததைப் பயன்படுத்திக் கொண்ட செயலலிதா அம்மையார் 40 தொகுதிகளையும் தனக்கு வழங்கினால் பிரதமர் பதவியைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து தமிழீழம் வாங்கித் தருவதாகச் சொல்லி இனவழிப்பில் வகைதொகையின்றி ஈழத்தமிழர் மடிந்து கொண்டிருந்ததிலும் தனக்கான அரசியல் அறுவடை செய்தார்.
10 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமைகளைப் பறித்து, அவர்களை நாடற்ற ஏதிலிகளாக்க முயன்ற சிங்கள அரசிற்குத் துணை நின்றதும், தனது மேலாதிக்கத்துக்கு உடன்படச் செய்வதற்காக தமிழீழ- தமிழகத் தமிழர்களின் இணைப்புப்பாலமான கச்சதீவை சிங்கள அரசிற்குத் தாரை வார்த்துக் கொடுத்ததும், ஈழப்போராளிகளுக்கு உதவுவதாக ஏமாற்றித் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக அவர்களைக் கூலிப்படைகளாக்க உளவுத்துறை மூலம் வேலை செய்ததும், ராசீவ்- ஜே.ஆர். ஒப்பந்தத்தைத் தமிழர் மீது திணித்து அதனை ஏற்க மறுத்த புலிகளை அழிப்பதெனக் கங்கணம் கட்டி நின்றதும், ராசீவ் சாவினைக் காரணம் காட்டி ஈழ ஆதரவாளர் மீது அடக்குமுறையை ஏவியதுமான காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியலில் ஈடுபட முடிகின்றதெனின், இதுகால வரையிலும் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றந்தான் என்னவென்ற சினத்துடன் வெளிவரும் வினாவுக்கான பதிலை நேர்மையாகச் சொன்னால் தமிழர்கள் நாம் மொட்டாக்குடன் தான் திரிய நேரும்.
ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன் போன்ற பெருந்தகைகள் இந்தியாவின் தலையீட்டைக் கோரித் தமிழரைக் காப்பற்ற வேண்டுவதானது, விரைவில் போரை முடித்து அதன் பின்னரான அபிவிருத்திப் பணிகளில் தமது ஆளும் வர்க்கத்திற்கான பங்கு பிரிப்பில் இன்னும் இன்னும் அதிகமாக ஒதுக்கும் படியும் ஏனெனில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கத் தாம் அரும்பாடுபட்டதாக சொல்லும் நிறை பலன் அடையத் தக்கவாறு சிறிலங்காவுடன் பேசுவதற்கு இந்திய அதிகாரிகள் கொழும்பு செல்ல நல்வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்குவதோடு, ஏதோ தமது இராசதந்திரம் மூலம் இந்திய அதிகாரிகள் சிறிலங்கா சென்று பாரிய அழுத்ததை சிங்கள அரசிற்கு வழங்குவதாக ஒரு மாயத் தோற்றத்தை வழங்கி ஒட்டுமொத்த தமிழர்களையும் கேனையர்களாக்கவும் செய்தது.
போர் நிறுத்தம் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெறத் தொடங்கிய போது, அத்தகைய போராட்டங்கள் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக மாறிவிடாமல் தடுக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, காங்கிரசுடன் சேர்ந்து மனித சங்கிலிப் போராட்டம் நடத்திய கருணாநிதியின் கபட நோக்கத்தைத் தோலுரித்துக் காட்ட இங்கிருந்த ஈழ ஆதரவு அமைப்புகள் ஏன் துணிந்தெழவேயில்லை?
ஈகி முத்துக்குமாரின் தீக்குளிப்பும், வழக்கறிஞர்கள் போராட்டமும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஏற்பட்ட மாணவர்களின் எழுச்சியைத் தங்களுக்கான அரசியல் அறுவடைகளாக்கும் நோக்கில் எல்லா ஈழ ஆதரவு இயக்கங்களும் செயற்பட்டு வந்தன.
விடுதலைப் புலிகளின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ பிரதிநிதிகளைப் போல நடந்து கொள்ளத் தொடங்கிய தமிழகத்திலிருந்த ஈழ ஆதரவு அமைப்பின் தலைமைகள் ஈற்றில் தமிழீழத்தின் கொள்கை வகுப்பாளர்கள் போலவும் பீற்றலாயினர். இன விடுதலைக்கான அணி திரட்டலை இவர்கள் யாரும் செய்யவேயில்லை.
இவ்வாறாக பா.ம.க, ம.தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் இந்தியாவை மனிதாபிமான முறையில் தலையிட்டு தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கூறுவதன் மூலம் இந்தியாவின் சிறிலங்கா மீதான மேலாண்மைக்கு வழி தேடிக் கொடுக்கும் ஏமாற்று அரசியலுக்கப்பால் விடுதலை அரசியல் நோக்கி எந்தவொரு வேலைத் திட்டத்தினையும் செய்யவில்லை.
செத்து மடிந்து கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களிற்கு 2009 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஒரு விடிவைத் தரப்போவதாக ஒரு போலி நம்பிக்கை ஈழத்தமிழர்களிற்கு இந்த அமைப்புகளால் ஊட்டப்பட்டது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு தமிழகம் எங்கும் ஒரு எழுச்சியின் வடிவமாக எங்கும் வியாபிப்பதாகச் சொல்லப்பட்டதற்கு முற்றிலும் மாறுபட்டதாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தது.
ஆளும் வர்க்கங்களினால் தீர்மானிக்கப்படும் அரசியல் பொருண்மிய கொள்கைகளின் விளைவாக சொந்த மண்ணிலிருந்து தமிழ்நாட்டு மக்களை வெளியேற்றி அதனைப் பன்னாட்டு முதலாளிகளுக்கு உறுதி எழுதிக் கொடுக்கும் சுரண்டல்களைத் தடுத்து நிறுத்த மக்களை பெருந்திரளாய் அணி திரட்ட வக்கற்றவர்களால் திக்கற்று நிற்கும் ஈழத்தமிழர்களுக்காக என்ன தான் செய்து விட முடியும்?
தமிழர்களின் தேசிய உரிமைகளை மறுதலித்து சிறிலங்காவின் மீதான மேலாதிக்கத்திற்காக அவாப்பட்டால், ஈற்றில் தமிழகத்தையே இழக்க நேரும் என்ற பீதியை ஆளும் வர்க்கங்களிற்கு ஏற்படுத்துவதை விடுத்து, விளைவேதும் கிடைக்கப் பெறாத உப்புச்சப்பற்ற விசிலடிச்சான் அரசியல் செய்வதில் என்ன பயன்?
ஈழத்தமிழினத்தின் தன்னுரிமைக் கோரிக்கை என்ற அடிப்படைப் புரிதலை தமிழக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாமல், ஈழத்தமிழர் சிக்கலை தமிழ்த் தேசியச் சிக்கலாக எடுத்துக் கூறாமல், வெறுமனே அரசியல் நீக்கஞ்செய்யப்பட்ட விளைதிறனான அரசியற் பெறுதியை ஏற்படுத்த இயலாத உணர்ச்சியை மட்டும் தூண்டி எந்தப் பலனும் இல்லாமல் அடங்கச் செய்யும் வெற்றுக் கோசங்களை எழுப்பி, இந்திய அரசு ஈழச்சிக்கலில் தலை இடுவதற்கு தக்கவாறு ஒரு காரணத்தை உருவாக்கிக் கொடுப்பவர்களே இந்த ஈழ ஆதரவு பேசி மாறி மாறிக் கூட்டணி சேரும் அல்லது மாற்றி மாற்றி ஆதரவு தெரிவிக்கும் ஈழ ஆதரவுத் தமிழக அமைப்புகள் எனச் சொல்லின் தவறேதுமில்லை.
ஈழ மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக ஈழ ஆதரவு அமைப்புகள் என்போர் எடுத்துக்கொண்ட சித்தாந்தம் என்ன? அந்தச் சித்தாந்தத்தினை மக்களிடம் எடுத்துச் செல்லும் நடைமுறை என்ன? ஈழ விடுதலை நோக்கிய வேலைத் திட்டங்களை முனைப்புறுத்த விடாமல் உள்ளிருந்தும் வெளியிருந்தும் இடையூறு செய்யும் எதிரிகள் யார்? இந்தத் தேசிய இன விடுதலை குறித்து நட்புச் சக்திகளாக இருக்க வல்லோர் யார்? போன்ற விடுதலை அரசியல் வேண்டிய நகர்வுக்கான எந்தவொரு அடிப்படையும் இன்றி எப்படித் தான் இவர்களால் ஒரு சிறு துரும்பைத் தானும் ஈழ விடுதலைக்காக பயனுறுதியுடன் நகர்த்த முடியும்?
இந்திய பிராந்திய மேலாதிக்க அரசை எதிர்த்துப் போராடுவதும் அதன் பொருட்டுப் பிற தேசிய இன விடுதலை இயக்கங்களினதும் தேசிய இன விடுதலையின் மாண்பினை மதிக்கும் மக்கள் ஆதரவையும் திரட்டுவதல்லவா சரியான நடைமுறை?
தமிழ்நாட்டிலும் இந்திய ஒன்றியத்தில் கட்டுண்டு கிடக்கும் பிற மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக எட்டரைக் கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களும் அவற்றின் நலனை உறுதிப்படுத்துவதை முதன்மைப் பணியாகக் கொண்ட இந்திய அரசும் மிரளும் படியாக எந்தவொரு மக்கள் திரள் போராட்டத்தையும் கட்டியமைக்கும் வல்லமையில்லாமல் எண்ணிக்கையில் பெரிதான எட்டரைக் கோடி தமிழர்களை வைத்துக் கொண்டு இங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் பயனுள்ள எதையும் சொல்லும்படியாகச் செய்யாமல் வெறும் அடையாளப் போராட்டங்களை நடத்துவதன் மூலம் தமது ஆற்றலினளவு எச்சிறியதென்பதை வெளிக்காட்டி விட்டனர். மனித சங்கிலி போராட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட போராட்டங்களை விடுத்து ஈகிகளின் தீக்குளிப்புத் தியாகங்களைக் கூட பெரும் எழுச்சி மிகு மக்கள் திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து ஆளும் வர்க்க நலன்களுக்கு கேடாக நடந்து அவற்றை மிரளச் செய்ய வக்கற்றவர்களாகவோ இல்லை விரும்பாதோர்களாகவோ தான் ஈழ ஆதரவு பேசும் தமிழக அமைப்புகள் இருந்து வந்துள்ளது.
அன்புமணியும் வேலுவும் அமைச்சர் பதவியினை டெல்லியில் அனுபவிக்கையில் கருணாநிதியை பதவி விலகச் சொல்லி ராமதாஸ் அவர்கள் கோரியதிலிருந்து அவர் கருணாநிதிக்குச் சற்றும் சளைத்தவரல்ல எனத் தமிழ் மக்கள் உணரத் தலைப்படலாயினர்.
கருணாநிதியுடன் கூடவேயிருந்து அவரின் எல்லா நாடகங்களையும் பூசி மெழுகி அவரின் மூத்த மகனாக நடந்துகொண்ட திருமாவளவன் அவர்கள் ஈகி முத்துக்குமாரின் இறுதி நிகழ்வின் எழுச்சியை அடக்க எவ்வாறு கேவலமாக நடந்து கொண்டார் என்பதிலிருந்தும், “அன்னை சோனியா வாழ்க” எனப் பரவசமாகிக் குரல் கொடுத்ததிலிருந்தும், தமது வளர்ச்சிக்கான ஆரம்பகாலத்தில் புலிகளின் பெயரை எல்லா இடத்திற்கும் எடுத்துச் சென்று தமது வளர்ச்சியை உறுதிப்படுத்தி தன்னை தீவிர புலியாக மக்களுக்குக் காட்டிக் கொண்டு, விடுதலைப் புலிகள் வெள்ளாள மேட்டுக்குடிக்காக மட்டுமே போராடுகின்றார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் ரவிக்குமார் போன்ற நச்சுப் பாம்புகளைக் கூடவே வைத்திருப்பதிலிருந்தும், ராஜபக்ச முன்னால் கூனிக் குறுகி நின்ற விதத்திலிருந்தும் அவரைத் தமிழ் மக்கள் ஒரு நல்ல சந்தர்ப்பவாத அரசியல்வாதி என அடையாளங்காணலாயினர்.
“ஈழத்தை ஆதரித்துப் புரட்சித் தலைவி பேசியது இயற்கையின் கொடை” என்று புகழாரம் சூட்டிச் செயலலிதாவின் சந்தர்ப்பவாத அரசியல் அறுவடைக்குப் புரட்சிப் பூச்சுப் பூசித் தமது பேச்சலாற்றலால் தமிழரை ஏமாளியாக்கிய வைகோ அவர்களும் ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கு ஏதேனும் பெரிதாகச் செய்து விடுவார் என நம்புவது வேடிக்கையானதே.
விமானப்படைத்தள முற்றுகை, இந்திய அரசின் வருமான வரி, உற்பத்தி வரி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் போன்ற இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்கு கெடுதியாக அமையவல்ல போராட்டங்களைக் கூட வெறும் அடையாளப் போராட்டங்களாகவே மேற்கொண்டு ஆளும் வர்க்க நலன்கள் கேடாகாத வண்ணமே இங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் மூலம் இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்கான இந்திய ஒன்றிய அரசைப் பணிய வைக்கலாமே தவிர ஒருபோதும் இறைஞ்சி மன்றாடி இந்தியாவைத் தமிழர்களின் பக்கம் சாய்க்க முடியாது என்ற பாலபாடத்தில் கூடத் தெளிவில்லாமல் ஈழ ஆதரவு அமைப்புகளைத் தமிழ்நாட்டில் நடத்துகின்றார்களா? இல்லை எல்லாந்தெரிந்தும் வேறெதுவொன்றின் மீதுள்ள பீதியின் பாற்பட்டு இவ்வாறு நடந்துகொள்கின்றனரா? இல்லை ஆளும் வர்க்க நலன்களிற்கெதிராகப் போராடுவது தமது இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கிவிடும் எனக் கணித்துக் காலத்தை சில வெற்றுக் கோசங்களுடன் கடத்தி விடுவது என முடிவெடுத்துள்ளார்களா? எனப் பல பல வினாக்குறிகள் இவர்கள் முகங்களைப் பார்க்கும் போது தமிழர்களின் மனக் கண்களில் வந்து போகின்றன.
தமிழக மண் சார்ந்த ஆயிரம் சிக்கல்கள் இருக்கையில், மண் சார்ந்த சிக்கல்களுக்கெதிரான போராட்டங்களை வலுப்பெறச் செய்து பெரும் மக்கள் திரள் போராட்டங்களாக அவற்றை வளர்த்தெடுத்து இந்திய ஒன்றியத்தின் ஆளும் வர்க்க நலன்களுக்கெதிராகப் போராடினாலேயன்றி, மிகப் பெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வல்ல வல்லமையை தமிழ்நாட்டிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் பெறாது.
தமிழ்த் தேசிய சிந்தையை ஒவ்வொரு தமிழனினதும் ஒவ்வொரு தமிழிச்சியினதும் நெஞ்சில் நிறுத்தி, தமிழர் மொழி, தமிழர் தாயகங்கள், தமிழர் பொருண்மியம், தமிழர் தொன்மம் மற்றும் தமிழர் பண்பாடு என்றவாறு மண் சார்ந்து இனவுணர்வின்பாற்பட்டுச் சிந்திக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான வேலைத் திட்டங்களை ஆர்முடுக்க வேண்டியது உலகத் தமிழின விடுதலைக் கோட்பாட்டை நோக்கி நகர்ந்து தமிழினத்தின் எல்லாத் தேசிய இனங்களையும் விடுதலையடையச் செய்ய அவசியமானதாகும்.
தமிழ்த் தேசியத்தைச் சித்தாந்தமாக முன்வைத்து, தமிழ்நாட்டின் அரசியல், பொருண்மிய, வாழ்வியல் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராட்டங்களை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டு மண் சார்ந்த சிக்கல்களை முனைப்புறுத்திப் போராடுவதன் மூலம் மக்கள் திரள் போராட்டங்கள் தமிழ்நாட்டில் சாத்தியப்படுவதுடன் இவை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனைத் தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தகர்த்தெறியவல்லனவாக வளர்ச்சியடையும். விளைவாகத் தமிழ்நாடின் இயங்கு ஆற்றல் அதிகரித்து, ஈற்றில் அது தமிழீழ விடுதலை குறித்துத் தீர்மானகரமாக செயற்பட வல்லதாக வளம் பெறும். இவ்வாறு தமிழின விடுதலையின் முதன்மை எதிரியான இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்கான இந்திய அரசின் கொட்டம் துண்டு துண்டாகச் சிதறினாலேயே தமிழின விடுதலையானது தமிழீழத்திலோ, மலையகத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ சாத்தியமாகும்.
தமிழின ஓர்மையை வேண்டி “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே” என்று உலகத் தமிழர் கோட்பாட்டின் வழியில் சிந்திப்பதில் பெரு வாஞ்சையுடையவராகவே இப்பத்தி எழுத்தாளர் பெரும்பாலான அமைப்புகளைச் சாடுகிறாரேயன்றிப் பகையுணர்வாலல்ல என்பதைச் சொல்லியாக வேண்டியுள்ளது. மெய்நிலை திரித்துத் தமது ஆற்றல்களை மிகைப்படுத்தி வாய்ச்சவடால் மட்டும் அடித்து விட்டு, எந்தப் பயனுள்ள செயற்பாடுகளையும் செய்து இந்திய ஆளும்வர்க்க நலன்களுக்கான இந்திய அரசிற்கெதிராக மக்கள் திரள் போராட்டங்களை நடத்தித் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லையென்பதால், தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு செய்தேயாக வேண்டியதாயிற்று. தமது சொந்த அரசியல் நலன்களுக்கும் பிழைப்பிற்குமாக பல சித்து விளையாட்டுகளைச் செய்து கொண்டு ஈழத்திற்காக தீர்மானகரமாக எதையும் செய்யாமல் ஈழ ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் எனக் காட்டித் தமது அரசியலை தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அமைப்புகள் நகர்த்துகின்றார்கள் என்கின்ற கசப்பான உண்மையைத் தமிழீழ விடுதலையை ஆத்மார்த்தமாக நேசிப்பவர்களும், தமிழீழ விடுதலைக்காகப் போராடுபவர்களும், தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும், உலகெங்கும் பரவி வாழும் ஏனைய தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனினும் தமிழின விடுதலையில் உறுதியாகவுள்ள நூறாயிரக் கணக்கான மக்களும் சில அமைப்புகளும் இருக்கின்றார்கள். ஆனால் அந்த அமைப்புகள் தமக்குள் ஒரு பொது வேலைத் திட்டத்தினை ஏற்படுத்தித் தமது இயங்காற்றல்களை அதிகப்படுத்தி, தமிழினப் பகையாம் இந்திய அரச பயங்கரவாதத்தின் கதை முடிக்கத் தமிழ்நாட்டில் பாரிய மக்கள் திரள் போராட்டங்களைச் செய்ய வேண்டும். தமிழ்நாடு விடுதலையடைய வேண்டும்……..தமிழீழம் விடுதலையடைய வேண்டும்…….மலையகம் விடுதலையடைய வேண்டும்…..இவற்றுக்கெல்லாம் முதலில் இந்திய அரச பயங்கரவாத்தினைத் தமிழ்நாட்டில் வைத்துத் தகர்க்க வேண்டும்.
“என்மொழி என்னினம் என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் – வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன் !” என்கின்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் கவி வரிகளினை உள்வாங்கியவர்களாக எமது சிந்தனைகளைச் செம்மைப்படுத்தி செயலுறுத்த முனைவோமாக.
நெடுஞ்சேரன்
10-04-2017
2,759 total views, 1 views today
Leave a Reply
You must be logged in to post a comment.