உரிமை மீட்க வீறு கொண்டெழ வேண்டுமெனின் எழுதாத வரலாற்றை உள்வாங்க முன் வர வேண்டும்! – வண்டார்குழலி

       நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
          நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
          இன்பமே எந்நாளும் துன்பமில்லை

இலங்கைத்தீவின் குடித்தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் இலங்கைத் திருநாட்டின் காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பொருண்மியக் கூனை நிமிர்த்தத் தன்னைத் தேய்த்துக்கொண்ட ஓர் தேசிய இனத்தின் துன்பியல் வரலாறு பேசாப்பொருளாக எழுதாத வரலாறாக அந்த மலை முகடுகளில் முடக்கப்பட்டுள்ளன. பிரிதானியாவின் அருங்காட்சியகத்திலும் இலங்கை சுவடிக் கூடங்களிலும் சுருண்டு கிடக்கின்றன. அன்று தொட்டு இன்று வரையிலும் கூட அசட்டையாக அலட்சியமாக மட்டுல்ல, திட்டமிட்ட இரீதியாக மறைக்கப்பட்டும் மழுங்கடிக்கப்பட்டும் வருகின்றன. காயடிக்கப்பட்டது வரலாறு மட்டுமல்ல,  தமிழர் என்ற இனத்துவ இரீதியாகவும் பிரதேச இரீதியாகவும் தான் என்று சொன்னால் மிகையாகாது. தன் சூழ்நிலை தகிப்பு தாங்க முடியாது, நிலை துடித்து, தலை நிமிர்ந்து எழும் போதெல்லாம் கருவறுக்கப்பட்டதுடன்  நயவஞ்சகத்துக்குள்ளாக்கப்பட்டு அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்ட தேசிய இனம் தான் மலையகத் தமிழ்த் தேசிய இனம். ஆனால் பாதிப்புக்களையும், அடக்கு ஒடுக்கு முறைகளின் வெண்மையை உணர்ந்திருந்த மலையகத் தமிழினமானது, எங்கெல்லாம் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட்டங்கள் வெடிக்கின்றதோ அங்கெல்லம் அவர்களுடனான போரட்டங்களில் தன்னை இணைத்துப் போராடித் தன்னை அழிவிற்குள்ளாக்கிய வரலாறுகளையும் கொண்டுள்ளது. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கத்திலும் அடி என்பது போல் இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையில், இடம்பெற்ற இனவன்முறைகளில், உயிர், உடமை எனத் தமது இருப்புகளை இழந்து இடப்பெயர்வுகளையும் சந்தித்தனர். ஆனால் அவை எவையும் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படவில்லை. இழப்புகளைச் சுமந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு, வட- கிழக்குக்குப் போனவர்களில் மிஞ்சியவர்கள் மௌனமாக அழுதழுது அழுத்த வாழ்வினைத் தான் கழித்தனர். கழிக்கின்றனர்.  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் மலையகத் தமிழினத்தின் உரிமையுடனான இருப்பினை வலியுறுத்தும், பேரம் பேசும் தன்மைகளை அவர்களின் மேய்ப்பர்கள் எனச் சொல்லித்திரியும் கூட்டம் இதுவரையிலும் செய்ய முன் வரவில்லை.

1948ம்  ஆண்டு மலையகத் தமிழரின்  குடியுரிமையினைப் பறித்தமைக்கு இடது சாரிகளுடனான கூட்டிணைவு பெரும் பங்கினை வகித்தது. அதன் பின்பு எழுந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முகிழ்ந்த அனைத்து இயக்கங்களிலும் வட- கிழக்குக்கு இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல மலையக மண்ணிலிருந்தும் பலர் இணைந்து கொண்டார்கள். மறைமுக உதவிகளை நல்கவும் அவர்கள் பின் நிற்கவில்லை. இன்றும் சிறைகளில் பலர் வாடுகின்றனர். போர்ப் பின்னடைவிற்குப் பின்னர், வடக்கில் அவர்கள் முகம் கொடுக்கும் அரசியல், பொருண்மிய, பண்பாட்டுப் பிரச்சினைகள் ஏராளம். அதே போல். மக்கள் விடுதலை முன்னணியில்(ஜே.வி.பி) 1971 ம் 88 ம்  களில் இணைந்து தம்மை இழந்தவர்கள் ஏராளம். ஆனால் மலையகத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் யாரும் மனமுவந்து இணைந்து போராட முன் வரவில்லை. மலையகத்தமிழரின் வாழ்வில், நேரடி அடக்குமுறைகளும், காட்டிக்கொடுப்புகளும், மறைமுக இரண்டகங்களும் நிறைந்திருந்தன. எனினும் தத்தளித்துத் தள்ளாடித் தானாக தவழ்ந்து எழுந்து நின்று வாழும் நிலையைத் தானே வகுத்துக் கொண்டுள்ளது. எனினும், சிங்கள பௌத்த பேரினவாத பகைப் புலத்தில்  அடிப்படை உரிமைகள் பல இழந்த நிலையில், தொடுவானம் போல பல பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் இருக்க, தமது இருப்பிற்கான போராட்டத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எதிர்கொண்ட வண்ணமே உள்ளார்கள் மலையகத்தமிழர்கள்.

இனம்  அல்லது இனத்துவ சமூகமானது தன்னைக்காத்துக்கொள்ள மற்றவர்கள் உதவ வேண்டுமோ அல்லது உதவ வரவில்லை என்றோ புலம்பித் திரிவது அழகல்ல. தனது விடுதலையை உணரும் எந்த மனிதமும் அடுத்தவர் விடுதலையைப் பற்றிச் சிந்திக்கும் இயல்பை இயல்பாகக்  கெண்டிருத்தல் என்பது இயற்கையானது என்பதற்காகவே அவற்றைத் தொட்டுக் காட்ட வேண்டியிருந்தது. தவிர, மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு மூன்று பெரும் காரணங்கள் முதன்மைப் பங்கினை வகித்தன.

  1. தமிழர்களாக இருந்தமை
  2. அதிகம் தொழிலாளர் வர்க்கத்தினைச் சார்ந்தவர்களாகஇருந்தமை
  3. தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்

(இந்தியர்கள் என அடையாளப்படத்தப்பட்டவர்கள்)

பாம்பு கூட மிதித்தால் கடிக்கும். மென்மையான பசுக்கூட சினந்து  சிலவேளை முட்டும் நிலைமை உண்டு. அப்படி இருக்க மலையகத்தமிழரின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் போராடவில்லையா? ஏன் போராடவில்லை? என பல கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன. ஏனெனில், அவர்களின் போராட்ட வரலாறுகள் பேசாப்பொருளாக இருக்கின்றன. இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. தொழிற்சங்கப் போராட்டமாக மட்டும் இல்லாமல், தமது  உரிமைகளுக்காகவும் மொழிக்காகவும் போராடித் தமது இன்னுயிர்களை ஈகையாக்கியுள்ள வரலாறு அவர்கள் சார்ந்த மலையகத்தமிழினத்துக்குக் கூடச் சரிவரத்தெரியவில்லை என்பது தான் விந்தையிலும் விந்தை. தவிர, அந்தப் போரட்டங்கள் ஒன்றும், ஓரிரவிற்குள் தானாகத் தோன்றி விடவில்லை. அதற்கு ஓர் வரலாறு உள்ளது. கருத்தியல் இரீதியாகக் கட்டப்பட்டு வளர்க்கப்பட்ட வரலாறு அது. இதைத் தவிர்த்து மலையகத்தைப் பார்ப்பது கட்புலனற்றவர் யாணையைப் பார்த்தமைக்கு ஒப்பானதாகும்.

தமிழகத்தை தமது மரபாகக் கொண்ட மலையகத்தமிழர் தமது அரசியல், பொருண்மிய, பண்பாட்டுக் கோலங்களைத் தமிழகத்தின் சுவட்டிலிருந்தே வழியொழுகத் தெடங்கியது. காலங்கள் மாறும் போதும், உலக நடப்புகள் மாறும் போதும், கு(ச)முக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனாலும் வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் போது, நிகழ்வுகளை ஜயம் திரிபறக் கூறி வைக்க வேண்டியள்ளது. அன்றைய சூழலில் திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் பெரிய புரட்சிகரமான சக்தியாகத் திகழ்ந்தமையை காணக்கூடியதாகவுள்ளது. ஆனாலும் திராவிட சிந்தனைக்குள் வீழ்த்தப்பட்டதனால் தமிழின மரபுகளை தமிழர்கள் இனங்காண மறந்ததும், திட்டமிட்டு மடை மாற்றம் செய்யப்பட்டதனால் தான், இன்று தமிழகத்தின் விடுதலையாகட்டும் ஏனைய தமிழர்களின் விடுதலையாகட்டும் பின்னடைவை அடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளிலும், மீள் வாசிப்புகளிலும் உண்மைகள் இருக்கின்றன. எனினும் அன்றைய சூழலில் தமிழரல்லாத தந்தை பெரியாரால் முன் வைக்கப்பட்ட பகுத்தறிவு- சுயமரியாதைக் கொள்கையில், தமிழகத்தின் தொன்மரபின் தாக்கத்தினால் தமிழர் எழுச்சியும் ஊடுபாவாக உள்ளோடி இருப்பதையும் மறுப்பதற்கில்லை.  அந்த வகையில் கொழும்பில் தொடங்கி மலையகம் வரை பரவி வட- கிழக்கு வரை  விரிந்த இலங்கை திராவிட இயக்கம், தமிழகத்தின் மாற்றங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டிருந்தாலும், தமிழகத்திலிருந்து மாறு பட வேண்டும் என்ற பலத்த உள்முரண்களை அமைப்புக்குள் ஏற்படுத்திருக்கின்றன. எனினும் இளஞ்செழியன் அவர்களின் தலைமையிலான  திராவிட கழகம் பெரியாரின் திருமணத்தின் பின், திராவிட முன்னேற்றக் கழகமாக மாறி பின்னர், மண்ணின் மணத்துடனும் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக இலங்கை திராவிட இயக்கமமாகியுள்ளதை இங்கு முன் விளக்கமாகக் கூறி வைக்க வேண்டியுள்ளது.

1926 இல் தமிழகத்தில்  திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. 1932 இல் பெரியார் மொஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பும் வழியில் கொழும்பு வந்தார். 1932.10.17 அன்று கொழும்பு  கொள்ளுப்பிட்டியில் தி.க தொடங்கி வைக்கப்பட்டது. சாதி ,மத மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியது. விடுதலை, குடியரசு, மாலைமணி போன்ற வெளியீடுகள் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தின. 1946 இல் மலையகத்தின் கண்டி கடுகண்ணாவை கிரிமெட்டிய தோட்த்திலிருந்து இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரித்தானிய காலனித்துவ இராணுவத்தில் இணைந்து பணி புரிந்து விட்டு, வீடு திரும்பிய குணசீலன் என்பவர், பகுத்தறிவுக்  கருத்தாக்கங்களினால் ஈர்க்கப்பட்டுத் தனது தங்கை சௌந்தரம்பாளின் வாழ்க்கை ஒப்பந்தத்ததைப் பார்ப்பணரைத் தவிர்த்து சீர்த்திருத்த முறையில் நடத்துவதற்கு இளஞ்செழியன் அவர்களைக் கண்டிக்கு அழைத்தார். இதுவே மலையகத்தில் திராவிட கொள்கைகள் பரவ  முதற்காரணியாகியது. இடைச்செருகளான இந்துத்துவ கொள்கையினால் மூழ்கியிருந்த மலையகத்திலும் தொடக்கத்தில்  எதிர்ப்புகள் தோன்றின. அதன் பினனர் அவர்களின் செயற்பாட்டுத் தன்மைகளை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவினை வழங்கத் தொடங்கினர்.

திருக்குறள் மன்றங்கள் அமைத்து, மலையகமெங்கும் கிளைகள் அமைத்து மலையகத்தமிழர்களின் துன்பியல்களை நாடக கருவாக்கி மேடையேற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். பார்ப்பணிய சாத்திர  கபடங்களை எதிர்த்தல், மத மறுத்தல், சுய மரியாதை, பகுத்தறிவு என்ற பாதையில் தமிழ்மொழித் தூய்மையினைக் கடைப்பிடித்தலில் மிக உறுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்படியான சீர்த்திருத்த விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்களின் செயற்பாடுகள், உலக மனித உரிமைகள் நாளன்று, 1948ம் ஆண்டு மார்கழி 10 அன்று மலையகத்தமிழர்களின் குடியுரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் தீவிரம் பெற்றது. மலையகத்தமிழரின் வரலாற்றில், வாழ்வியலில் மறக்க முடியாத, ஆறாத வடுவினை ஏற்படுத்திய நிகழ்வு இதுவாகும். இந்தப் பாதிப்புத்தான் எதிர்காலத்தில் வந்த அத்தனை பாதிப்புகளுக்கும் முத்தாய்ப்பானது. பௌத்த சிங்கள பேரினவாதத்தினை எந்தளவிற்கு நாம் குற்றஞ்சாட்டுக்கின்றோமோ அந்தளவிற்கு அவ்விடயத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த தமிழ்க் காங்கிரஸ் தலைவர் .திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலத்ததையும் மலையத்தமிழர் பகையுணர்ச்சியுடனே இன்றளவும் பார்க்கின்றனர். மலையகத்தமிழர் மட்டுமல்லாது மனிதத்தினை மதிக்கும் அனைவரும் அந்நிகழ்வினை பெரும் இரண்டகமாகவே கருதிக் கண்டிக்கின்றனர். இதை அரசியல் அடிவருடித்தனம், பதவி ,பட்டம், மேட்டுக்குடி மன நிலை, பிரதேசவாதம் என அனைத்தும் அடங்கிய செயல்களாகவே பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் இங்கு கூறிச்செல்ல வேண்டியுள்ளது.

நாளாந்த பிரச்சினைகளில் ஊன்றித் தமது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். 1951 இல் தமிழகத்தில் இடம்பெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டங்களுக்கு, இ.தி.முக ஆதரவு நல்கியதுடன், தமது உறுப்பினர்களை அங்கு அனுப்பி, மலையகத்தமிழரின் துன்பியல் செறிந்த வாழ்க்ககையினை முன்னிறுத்திக்,  கொழும்பில் “கண்ணீர்”; என்ற நாடகம் நிகழ்த்தி அதில் பெறப்பட்ட பணத்தினை தமிழக தி.மு.க விற்கு அனுப்பி வைத்த நிகழ்வுகளும் நடந்தேறிய போதும், இந்தியத் தலைவர்களை நம்புவதும் இந்திய அடையாளத்தை எமக்குள் வைத்திருப்பதும் கேடு என்பதையும், சென்னையிலிருந்தும் எமக்கான விடுதலை கிடைக்காது என மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பல செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினர் .பின்னர் தி.மு.க 1957 இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவெடுத்த பின்னர், இ.தி.மு.க கூடி தி.மு.க வுடனான தெடர்பினை துண்டிப்பதெனவும், இலங்கைப் பிரச்சினையில் மட்டும் தாம் ஈடுபடுவோம் எனவும் சுயமரியாதைக் கொள்கையினை முன் எடுப்பதெனவும் முடிவெடுத்தது என்பது முக்கியமான திருப்பமாகும். 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்கள அரசமொழிச்சட்டம் என்ற விடயம் இ.தி.மு.கவின் செயற்பாட்டினை மென்மேலும் தீவிரமடையச் செய்தது. வெறுமனே தொழிற்சங்கப் போராட்டமாக இல்லாமல் அக்காலகட்டத்திலேயே மனித உரிமைப் போரட்டங்களை முன் எடுத்தது. தமிழ்மொழிக்கு சரி நிகரான உரிமைகளைத் தர வேண்டும் என மலையகத்தில் மட்டுமல்லாது சிங்களவர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களிலும் தமது போரட்டத்தினை முன்னெடுத்தது. வடகிழக்கிலும் தமது செயற்பாட்டினைத் தொடர்ந்தது. அங்குள்ள அரசியல் கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து போராட்டங்களை மேற்கொண்டது. அதனால் தென்னிலங்கையில் இனவாதம் தலை தூக்கியது. 1956 ம் ஆண்டு பண்டாரவளை சீவலி வித்தியாலயத்தில், தமிழ் மொழிக்கு சரிநிகர் உரிமை கோரி விழிப்புணர்வு கோரி தமது முதலாவது மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் மொழிக்குச் சமவுரிமை கொடு! இந்தியவம்சாவளிக்கு குடியுரிமை வழங்கு!நாட்டை  சோசலிச பாதைக்கு கொண்டு செல்வோம்! என்பன போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாதைகளை மக்கள் சுமந்து சென்றனர். இவ்வூர்வலத்தை சிங்கள இனவாதிகள் தாக்க முயற்சி செய்தனர்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து, வட- கிழக்கிலும் தமது விழிப்புணர்வுக் கூட்டங்களை முன் எடுத்தது. மூன்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவையாவன சாதி ஒழிப்பு, இந்திய வம்சாவளிக்கு குடியுரிமை, தமிழ் மொழிக்கு சமவுரிமை என்பனவையாக இருந்தன. 1956.8.15 அன்று அரியாலை தமிழ் மகா வித்தியாலயத்தில் முதல் முதலாகத் தமது கூட்டத்தினை நடத்தினர். அங்கும் பகுத்தறிவுக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுப் பகுத்தறிவு மன்றம், திருக்குறள் மன்றம் என அமைத்துச் செயற்பட்ட யாழ்பாணத்து அறிவுசீவிகள் பலர் இவர்களுடன் இணைந்து செயற்படத் தொடங்கினர். யாழ்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எனக் குமுகத்தால் கூறப்பட்ட மக்கள் மத்தியில் இ.தி.மு.க வேரூன்றத் தொடங்கியது. பருத்துறை, வட்டுக்கோட்டை, பலாலி, நெல்லியடி  வேலணை, தொண்டமனாறு,உடுப்பிட்டி, கரவெட்டி, இமயாணன், கரணவாய்தெற்கு, கொடிகமம், சாவக்கச்சேரி, வல்வெட்டித்துறை, புலோலி என ஒரே ஆண்டில் தமது கிளைகளை அமைத்தது. மன்னார், முல்லைத்தீவு, வவுனிய, கிளிநொச்சி, மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற நகரங்களிலும் சிற்றூர்களிலும் கால் பதித்துச் செயலாற்றத் தனிச்சிங்களச்சட்டம் பெருங்காரணியாக அமைந்தது.

1957 இல் பருத்தித்துறைக் கடற்கரையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சாதிய இரீதியாக மக்களைக் கயிறு கட்டிப் பிரித்திருந்ததன் காரணமாக, சாதிய முறைமையையும், கடவுள் கொள்கையையும் சாடி இளஞ்செழியனின் பேச்சு அமைதிருந்தமையால், சாதியவாதிகளாலும் மதவாதிகளாலும் மேடையை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. இரு தரப்பினருக்குமிடையே  கைகலப்பு ஏற்பட்டது. அப்படியான தொடர் செயற்பாடுகளினல் வட- கிழக்கில் செல்வாக்குப் பெற்ற இ.தி.மு.க வினருக்கு எதிராக அங்குள்ள மரபுசார்ந்த அமைப்புகள், சுதந்திரன் பத்திரிகை போன்றன எதிர்ப்பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கின. இவ்வாறான எதிர்ப்புகளை முறியடிக்க அனைத்துத் தமிழ் மக்களையும் தம் பால் இழுக்க இ.தி.மு.க பின்வரும் கொள்கை விளக்கத் திட்டத்தினை முன் வைத்தது.

      இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகக் கொள்கை விளக்கம்

இலங்கையைத் தாயககமாகக் கொண்ட திராவிட மக்கள் (தமிழ் பேசும்) நலன் பேணிக்காப்பதே இ.தி.மு.கவின் குறிக்கோள்கள்.

  1. அடிப்படை நோக்கங்கள்

பன்னெடுங்காலமாக அனுபவித்து வந்த உரிமைகளையிழந்து சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக்கப்பட்டுள்ள இலங்கை திராவிட மக்களது (தமிழ் பேசும் மக்கள்) இழிவை மாற்றவும் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று சகல துறைகளிலும் சம வாய்ப்பும் சம சந்தர்ப்பமும் கிடைக்கச் செய்யவும் மத வேறுபாடற்ற முறையில் தமிழ் பேசும் மக்களை ஓரணியில் திரட்டுதலும்.

  1. நாடற்றவர்

பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பதாக இந்நாட்டின் நிலத்தைப் பண்படுத்தவும் பொருள் வளத்தைப் பெருக்கவும் கொண்டு வரப்பட்டு அந்நாள் முதல் இந்த நாள் வரை வாழையடி வாழையாக இந்நாட்டின் உயிர் நாடியான பொருள் வளத்தைப் பெருக்கும் பெருந்தொழிலில் ஈடுபட்டுப் பிறப்பாலும் வாழ்நாள் முழு அளவாலும் இலங்கைக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய மலையகத் திராவிடத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி இந்நாட்டு மக்களோடு கூடி வாழும் நிலையைச் சீரழித்து இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ள போக்கை மாற்றி குடியுரிமை வாக்குரிமை பெற்ற இலங்கைக் குடிகளாக வாழ வகை செய்வது.

3 மொழி

தமிழ்மொழியை இரண்டாவது தேசிய இனமான திராவிட(தமிழ்த்தேசிய) இனத்தின் தேசிய அரசியல் மொழியாக அங்கீகரிக்கப்பேராடுதல்.

4.சமுதாயம்

மொழி, கலை, பண்பாடு, மனோநிலை ஒரு குடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்று பாந்தத்துவம் போன்ற இயல்புகளால் ஒரின மக்களென்று தேசிய உணர்வோடு வாழ்ந்த திராவிட மக்களின் வாழ்வின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவும், சீரழிக்கவும் இடையிற் புகுத்தப்பட்ட சாதிப் பிரிவினைகள் அவற்றை நம்ப உண்டு பண்ணிய புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், திராவிட மக்களின் சிந்தனையைக் குழப்பவும் நிதானத்தையிழக்கவும் அறியாமையில் ஆழ்த்தவும் கற்பிக்கப்பட்ட கற்பனைக் கதைகள்.முறைகள், ஏற்பாடுகள் போன்றவைகளை இயலால், இசையால், கூத்தால், எழுத்தால் களைந்தெறிதல், பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற மனப்பான்மையை அகற்றி ஒரே இனமக்களென்ற பழங்கால திராவிட மக்களது தேசிய வாழ்க்கை முறையை நிலை நாட்டுவதும் திராவிட மக்களுடைய சிந்தனையைப் பகுத்தறிவு அடிப்படையில் முறைப்படுத்தி விரிவு படுத்துவதும்.

5 அரசியல் பொருளாதாரம்

பொருளதார ஏற்றத்தாழ்வற்ற இன,சாதி, சமய பேதமற்ற ஒரு சமதர்மக்குடியரசு அமைவு பெறுவதற்குத் துணை செய்தல். இவை இலங்கை தி.மு.க பொதுக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளாகும்(16)

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் அரச கரும மொழிச்சட்டம் அமல்படுத்தப்பட்டபின், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலைகளுக்கு, இ.தி.முகவின் இக்கொள்கை முன்னெடுப்பானது பெரும் வரவேற்பைப் பெற்றது. மாற்றுக் கருத்துடையோரும் இணைந்து செயற்பட இசைந்தனர்.எனினும் மொழிப்பிரச்சினை மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாகத் தமிழரசுக்கட்சித் தலைவர். செல்வநாயகம் அவர்களுக்கும், பண்டாரநாயக்காவிக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழ்மொழி அமல்படுத்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் வட- கிழக்கு பகுதிக்கு மட்டும் இணக்கம் காணப்பட்டு நடை முறைப்படுத்தும் வகையில் 1957.5.17 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் நினைவு கூறத்தக்கது. இது இ.தி.மு.கவை மட்டுமல்லாது பல முற்போக்காளர்களையும் திகைக்க வைத்தது. எது எப்படி இருந்த போதும் தொடர்ந்தும் சிஙகள பேரினவாதம் அனைத்துத் தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் மோசமான போக்கினைக் கொண்டிருந்ததால் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த  பேராட்டங்கள் தொடர்ந்த வண்ணமிருந்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. வட- கிழக்கை சார்ந்தோர் மலையகத்திலும் மலையகத்தைச் சார்ந்தோர் வட கிழக்கிலும் மாநாடுகளில் சத்தியாக்கிரகங்களில் கலந்து கொண்டனர். மலையகத்திற்கு இராணுவத்தை அரசு அனுப்பும் நிலையும் எற்பட்டது. அரசியல் தலைவர்கள் பல சறுக்கல்களை கெண்டிருந்தாலும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனைகளில் ஐக்கியமாகி இருந்தமையை குறிப்பிட்டாக வேண்டும்.

1962.4 21-22 அட்டனில் நடந்த இரண்டாவது மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகமும் ஏனையவர்களும் கலந்து கொண்டனர். வட-கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியொன்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் சீர்த்திருத்த இயக்கமும் ஒன்றுபட்டு, மொழியுரிமை, குடியுரிமை என்பவற்றுக்காக இணைந்து போராடுவோம் என சூளுரைத்தமை பௌத்த சிங்கள பேரினவாதத்தைக் கிலிகொள்ள வைத்தது. அதன் விளைவாகத், தமிழக தி.மு.க வுடன் தொடர்பு படுத்தி இவர்கள் இங்கும் திராவிட நாடு கோரப் போகிறார்கள் என்று கூறி சிங்கள அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில், இ.தி.மு கவை தடை செய்ய அழுத்தம் கொடுத்ததன் விளைவாக 1962.7.22 நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இ.தி.மு.கவை சிறிமாவின் அரசு தடை செய்தது. அதன் பின்னர் இ.தி,மு.வின்  பொதுச் செயலாளர் இளஞ்செழியன் உட்பட அனைவரும் தலைமறைவு வாழ்க்கையினைத் தொடர்ந்தனர். இவ்வேளை தமிழரசுக் கட்சியானது இ.தி.மு.கழகத்தினை தொடர்பினை குறைத்துக் கொண்டது. அவர்களினூடாகக் கிடைத்த அறிமுகத்தைப் பயன்படுத்தி இலங்கைத் தொழிலாளர் கழகம் என தொழிற்சங்கத்தை உருவாக்கித் தோட்டத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தனர். தோழமை சிக்கலில் இருக்கும் போது, எவ்வித ஒத்தாசைகளையும் செய்யாத தமிழரசுக் கட்சியின் இந்நடவடிக்கையானது பல விமர்சனங்களுக்குள்ளானது.

1963ம் ஆண்டு அவசரக்காலச் சட்டம் நீக்கப்பட்டவுடன் இ.தி.மு.க வின் தடையும் நீங்கியது. அதன் பின்னர் 1963 இல் இந்திய பிரதமர் நேரு இலங்கை வருவதாகவும் சிறிமா அரசு அவருடன் நாடற்றவர் பிரச்சினை பற்றிப் பேசப்போவதான நிகழ்வுகள் இடம்பெறவிருந்தமையால், அவர்கள் இருவரும்  எடுக்கும் முடிவு எமைக் கட்டுப்படுத்தாது  என்பதை அவர்களுக்கு அறிவிக்கவும், நடற்றவர் பிரச்சினை பற்றித் தமது முடிவைத் தெரிவிக்கவும் 1962.7.15 அன்று பண்டாரரவளை நகர மண்டபத்தில் நாடற்றவர் மாநாடு நடத்த இ.தி.மு.க முடிவு செய்து மக்கள் மத்தியில் இப்படி விழிப்புணர்வு செய்தது.

  அடிமைத்தளை தகர்க்க அனைவரும் திரண்டு வாரீர்

  இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம்

  நாடற்றவர் மறுப்பு மாநாடு

“எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்”

இம்மாநாட்டுக்கான பல விரிவான புரட்சிகரமான  கொள்கை விளக்கங்களை இ.தி.மு முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்மாட்டினை ஊதி பெருப்பித்துக் குழப்புவதற்காகச் சிங்களப் பத்திரிகைள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. தமிழகத்தில் ஆதித்தனார் அவர்களால், தொடங்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் இளஞ்செழியன் அவர்களின் தலைமையில் மலையகத்தில் இயங்குவதாகவும் சிங்களவர்களுக்கு ஆபத்து எனவும் சிங்களவர்களை அச்சமூட்டின. தவச, சவச, ரிவி தின போன்ற பத்திரிகைகள் இரகசியமாக நாம் தமிழர் உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், புற்கள் வளர்ந்த இடங்களில் காணப்படும் இரகசிய அறைகளில் பேச்சு வாரத்தைகள் இடம் பெறுவதாகவும், நாம் தமிழர் அமைப்பு இம்மாநாட்டுக்கான உணவுப் பொருட்களை நாம் தமிழர் உறுப்பினர்கள் வீடுகளில் பகுதி பகுதியாகக் களஞ்சிப்படுத்துவதாகவும் பரப்புரைகள் செய்தன.

மலையகத்தமிழரின் மனித உரிமைகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி  ஒர் தீர்மானத்திற்கு வருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தடுக்கும் இரண்டக முயற்சிகளினால் தமிழரசுக்கட்சி இடது சாரிகள் உட்பட எந்த அரசியல் கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனலும் மாநாடு இடம்பெற்றது. சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்குப் பின்னரும் ஊர்வலம் நடத்தப்பட்டு மாநாடு நடந்தது.  மாநாடு முடிய மறைந்திருந்த சிங்களவர்கள் மாநாட்டுக்கு வந்தவர்கள் மேல் தாக்குதல்கள் தொடுத்தனர். பெண்களும் தாக்கப்பட்டனர். தமிழர்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்களும் எதிர்த்தாக்குதல்களில் ஈடுபட்டனர். அதனால் பண்டாரவளையைச்சுற்றி இனக்கலவரம் நடந்தது. நான்கு தமிழ் இஞைர்களும், பதினொரு சிங்கள இளைஞர்களும் அபுத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படியான அனுபவங்களுக்குப் பின்னரே சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்திய பிராந்திய வல்லூறும் சிங்களமும்  இலட்சக்கணக்கான மக்களை கண்ணீரும் கம்பலையுமாக நாடு கடத்தும் திட்டத்தினைச் செயற்படுத்தினர். இரண்டாவது முறையாக மலையகத்தமிழினம் மிகமிக மோசமாக வஞ்சிக்கப்பட்டது. அதன் பின்னரும் திட்டமிட்ட பல கோரங்களைச் சந்தித்தது.  இப்பிப்பின்னணியில், மலையகத்தமிழினம் பல போராட்டங்களையும், உயிர் ஈகங்கங்களையும் ஈந்துள்ளது. 1939 இல் முல்லோயா கோவிந்தன் முதன் முதலாகக் களப்பலியானார். பல வீரியம் மிகுந்த போராட்டங்களில் வீழ்ந்து போனவர்கள் பலர். 1958ல் சிங்கள “ஸ்ரீ” எழுத்து எதிர்ப்புப் போராட்டத்தில், பொகவந்தலாவை கொட்டியாகொலை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களான பிரான்சிஸ், அய்யாவு என்ற இளம் கன்றுகளின் உயிர் காவு கொடுக்கபட்டுள்ளது. சிறிமா – இடது சாரிகளின் கூட்டு அரசியலில் மலையகத்தமிழினத்தின் மண் பறிப்புக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுத் தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டார்கள். டெவன் தோட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் காணி அபரிக்கும் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் போராடினர். இந்நிலையில், 1977 ஆம் ஆண்டு பதினெட்டு வயது இளைஞனான சிவனு இலட்சுமணன் தன் இன்னுயிரை ஈந்து மண் காத்து மாவீரனானான். இப்படி எத்தனையோ போராட்டங்களையும் துன்பங்களையும் தாங்கி, தாண்டி மலையகத்தமிழினம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்றுள்ள நிலையை விட  இன்று பாரிய சவால்களையும் பிரச்சினைகளையும் கொண்டுள்ள மலையகத்தமிழினம் மாலுமி இல்லாக் கப்பலாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்ட கட்டாயக் கருத்தடை காரணமாக இனத்துவப் பிறப்புச் செறிவைத் தொலைத்து நிற்கிறது. அடையாளம் தொடர்பான விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையிற் தமது இன விகிதாசாரத்தின் உண்மைத் தொகையினை இழந்து நிற்கிறது. தோட்டத் தொழிற்துறை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாமையினால் உரிமைகள் மறுக்கப்பட்டு ஊமையாய்த்  தவிக்கிறது. இழப்புகளும் தவிப்புகளும் நீண்ட நாட்கள் நீடிக்காது என்பதே வரலாறு என்பதை, சிங்கள பௌத்த பேரினவாதமும் அதனை அடிவருடி நக்கிப் பிழைக்கும் அரசியல் தொழிற்சங்கவாதிகளும் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதைக் கூறி வைக்க வேண்டியுள்ளது.

நாம் யாருக்கும் குடியல்லோம்…..எனும் முதுமொழி எக்கருத்தாக்கத்தினைக் கொண்டதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் மலையகத்தமிழினத்திற்கு அன்றும் இன்றும் என்றும் அழுத்தமான மொழியாக இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கும். ஏனெனில், வாழ்க்கையே பேராட்டமாகி உழைத்துக் களைத்து  உருவேறிய உடற்பலமும் உளப்பலமும் அதனிடம் உள்ளது. தொடர் வஞ்சிப்புத் தொடர்ந்தால் இளைய மலையகம் எழ வேண்டும் என்பதே  தனை ஈந்து மண் காத்தவருக்கு நாம் செய்யும் ஈகம் என்பதை உணர வேண்டும்!

– வண்டார்குழலி –

2017-03-31

 

 9,313 total views,  2 views today

(Visited 2 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply