இஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை

ஐக்கிய நாடுகள் சபை மீதான தமிழர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குதவும் ஒரு விடயமாக, அண்மையில் அல்ஜஷீராவில் 18.03.2017 அன்று வெளியாகிய இச்செய்தியமைவதால் காகம் இதைத் தமிழாக்கம் செய்கின்றது.

நிறவெறிக்கு ஒப்பான இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விமர்சனங்கள் அடங்கிய அறிக்கையைத் திரும்பப் பெறவேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைகள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக ஐ.நா சபையின் மேற்காசிய ஆணைக்குழுவின் தலைவர் “றிமா காலப்” தனது பதவியிலிருந்து விலகுகின்றார்.

இந்த அறிக்கையானது பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் கொடூரமான வெறித்தனமான நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டியுள்ளது. 18 நாடுகளை உள்ளடக்கி லெபனானைத் தளமாகக் கொண்ட மேற்கு ஆசியாவிற்கான பொருளாதாரம் மற்றும் சமூக ஆணைக்குழு (ESCWA – Economic and Social commission for Western Asia) இந்த அறிக்கையைக் கடந்த புதன் கிழமை வெளியிட்டுள்ளது. அத்தோடு இதுவே ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்றினால் முதற் தடவையாக எடுக்கப்படும் மிகத்தெளிவான நடவடிக்கை என்றும் சொல்லப்பட்டது.

இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் ஐ.நா வின் பொதுச் செயலாளரை இந்த அறிக்கையிலிருந்து தூரமாக்கும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் அதாவது அவரிடம் இந்த அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டிக் கேட்கும் எனவும் முன்கூட்டியே எதிர் பார்க்கப்பட்டது என்று “காலப்” வெள்ளிக்கிழமை “பெய்ரூட்” இல் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

ரிமா கால்ப்

“பொதுச் செயலாளர் நேற்றைய தினம் என்னிடம் இந்த அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். நான் அவரது இந்த நிலைப்பாட்டினை மீளாய்வு செய்யுமாறு கேட்டேன். ஆனால் அவர் மீண்டும் அதையே வலியுறுத்தியமையால் நான் என் பதவி விலகும் முடிவைச் சமர்ப்பித்தேன்” எனத் தெரிவித்தார் ரமா கால்ப். பலஸ்தீனத்தின் பிரதேசங்களின் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான நிறவெறிக்கொப்பான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தாங்கி நிற்கும் அறிக்கையை ஆதரித்தே தான் இப்போதும் நிற்பதாக மிகத்தெளிவாக “ரிமா காலப்” கூறியதாக அல்ஜஷீராவின் செய்தியாளர் “இம்தியாஸ் டயப்” தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு இந்த அறிக்கையானது இக்கட்டான கடினமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதை அவர்கள் நாசிஸ்டுக்களின் திட்டமிட்ட போலிப் பிரச்சார வடிவம் என விபரித்திருந்தனர். இதை, இஸ்ரேல் தான் எப்படி இந்த அறிக்கையை நோக்குகின்றது என்பதை ஐ.நா சபையின் தலைமைக்குத் தெரியப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம் என அல்ஜஷீராவின் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே ஐ.நா வின் பொதுச் செயலாளர் எதற்காக இந்த அறிக்கையை ESCWA இன் இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் என்பதை ஒருவர் இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

அறிக்கை வெளியிடப்படும் சமயத்தில் “பலஸ்தீனம் நோக்கிய இஸ்ரேலின் செயற்பாடுகளும் அதன் நிறவெறிக்கு ஒப்பான நடவடிக்கைகள் மீதான கேள்விகளும் (Israeli Practices Towards the Palestinian People and the Question of Apartheid) ” எனத் தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையானது ஐ.நா முகவரின் இணையத்தளத்தில் காணப்படவில்லை. இந்த அறிக்கைக்குரிய இணைப்பைத் திறக்கும் போது அது ESCWA இன் முந்தைய வெளியீடுகள் உள்ள இணையப்பக்கத்தையே காட்டுகின்றது.

“றிமா காலப்” உடனான பிரச்சினையானது அந்த அறிக்கை உள்ளடக்கிய விடயங்கள் தொடர்பானவையல்ல என்றும் இந்த அறிக்கை வெளியிடுவது தொடர்பாக வழமையிலுள்ள முக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றாததன் விளைவாகவே உருவாகியது என்றும் ஐ.நா வின் பேச்சாளர் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

“பொதுச் செயலாளரால், ஒருபோதும் தன் மேற்பார்வையில் பணிபுரியும் துணைப் பொதுச் செயலாளரோ அல்லது மூத்த ஐ.நா அதிகாரிகளோ யாராயினும் தகுதிவாய்ந்த துறைகளிடமும் தன்னிடமும் கலந்தாலோசிக்காமல் ஐ.நா சபையின் பெயரில் அதன் சின்னத்தில் வெளியீடுகளை வெளியிடும் அங்கீகாரத்தை எடுத்துக்கொள்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.  ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக்கு இந்த அறிக்கை பற்றியும் அது உள்ளடக்கிய விடயங்கள் பற்றியும் முன்னமே தெரியாமல் இருப்பது சாத்தியமே இல்லாத ஒன்று என அல்ஜஷீராவின் செய்தியாளர் “டயப்” கூறுகின்றார்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அல்ஜஷீரா மற்றும் ஏனைய செய்தி ஊடகங்களும் பல நாட்களாகவே இந்த அறிக்கை உள்ளடக்கும் விடயங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து வைத்துள்ளமைதான் என அவர் மேலும் தெரியப்படுத்தினார். உண்மையில் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் செய்தியாளர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே இம்மாநாடு நடாத்தப்பட்டது. அத்துடன் இது ஊடகவியலாளர்களுக்கும் இந்த அறிக்கை தடை செய்யப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பை முன்கூட்டியே வழங்கியிருந்தது.

ஆகவே உத்தியோகபூர்வமான நடைமுறைகள் எதுவும் இந்த அறிக்கை வெளியீட்டில் பின்பற்றப்படவில்லை எனவும் பெரும்பான்மையான ஊடகங்கள் அறிந்து வைத்திருந்த அறிக்கையின் உள்ளடக்கம் பற்றியதை தாம் அறிந்து வைத்திருக்கவில்லை எனவும் ஐ.நா கூறுவது மிகவும் வேடிக்கையாகவுள்ளது. இந்த விடயமானது எமக்கு “ஐ.நா சபையிற்கும் இஸ்ரேலுக்குமிடையில் காணப்படும் கேவலமான கள்ளத்தனமான மற்றும் மிகவும் சிக்கலான உறவு” என்ற இன்னொரு அத்தியாயம் உள்ளது என்பதை உணர்த்துகின்றது.

தமிழாக்கம்

முல்லை

21-03-2017

Be the first to comment

Leave a Reply