தமிழ்த் தேசியத்தின் காப்பியத் தேவையை முனைப்புறுத்தலுக்கான   மீள்வாசிப்பு ; சிலப்பதிகாரம் –  இன்றைய நோக்கில் – செல்வி –

“தமிழ்” என்பது மொழி என்ற அடையாளப்படுத்தலுக்கும் அப்பால் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும்  சமூக இயங்கியல் கோட்பாடாகவும் இனம் மொழி என்ற இரு தளங்களிலும் எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றது. இப்போது எம்மால் வாசிக்கப்படுகின்ற தமிழ்மொழியானது  தமிழ் மரபு, தமிழ் வரலாறு என்ற வரையறைகளைத் தாண்டி,  தேசம், இனம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மொழியின் வழிவந்த தொன்மையான மரபுவழித்தேசிய இனங்களில் ஒன்றான தமிழினம் தனது மொழியின் இயங்கியலை படைப்பு இலக்கியங்களின் வழி தொன்றுதொட்டு நிகழ்த்தி வருகின்றது என்பதை இலக்கியத் தடங்களினூடாக அறிய முடிகின்றது. தமிழின் இலக்கியங்களுக்கு ஒரு அறுபடாத எழுத்திலக்கிய வரலாறு இருக்கின்றதெனறு மொழியில் ஆய்வாளர் காலட்வெல் பதிவுசெய்திருக்கிறார்.   இலக்கியம் என்பது சமூகத்துடனும் அறிவியலுடனும் நிகழும் ஊடாட்டங்களின் பதிவுகளை மொழியின் வழி நிகழ்த்துகின்ற அறிவுருவாக்கச் செயற்பாடு என்றும் பொருள்கொள்ளலாம். தமிழின் படைப்பு வெளியில் அழகியல், அறவியல், அரசியல் என்னும் கோட்டில் இருப்பினும் சமூக அரசியல் கோட்பாடுகளுக்கு உட்படாத எந்த படைப்பையும் தமிழ் படைப்புலகம் தனது மரபுக்குள் அனுமதிக்கவில்லை. மொழியியலாளர்களினால் தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய இலக்கிய பனுவல்களை அப்பனுவல்கள் சார்ந்த மொழிசார்ந்த அழகியலும் சமூகம் சார்ந்த அழகியலும் என்ற தளங்களினாலான வாசிப்புக்களே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தமிழ்த்தேசியவாத அரசியல் ஆய்வாளர்களினால் இனம் சார்ந்து, அதன் அரசியல் சார்ந்த வாசிப்புக்கள் எமது இலக்கியத் தளங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. அவர்களினால் நிகழ்த்தப்பட்ட இலக்கிய ஆய்வுகளும் தமிழர் வரலாற்றின் காலக்கோட்டினை ஆட்சியாளர்களின் தளத்தில் நிர்ணயம் செய்வதற்கானதாகவே இருந்திருக்கின்றது. வரலாற்று உசாத்துணையாகவும் மொழியியல் ஆய்வாகவும் இலக்கிய ஆய்வுகள் மட்டுப்படுத்தப்பட்டதனால் மொழியியலாளர்களுக்கும் அரசியலாளர்களுக்குமான இடையே எழுந்த ஆய்வு இடைவெளியின் காரணமாக எமது இலக்கியங்களின் இனம்சார்ந்த கருத்துருவாக்கங்கள் இன்னும் வாசிக்கப்படாமலே இருக்கின்றன. நம் சமூகம் மொழியும் சமூகக் கருத்துருவாக்கங்களும் அரசியலும் என்ற இன அரசியலின் அறிவுடன் வாழவில்லை. அதனாலேயே பத்துக் கோடி தமிழினம் இருந்தாலும் அந்த ஆய்வு இடைவெளிக்கான வெற்றிடம்  இன்னமும் நிரப்பப்படாது இருக்கின்றது.

எந்தப் படைப்பும் கலைக்காகவோ அதன் அழகியலுக்காகவோ தோன்றியதில்லை. அவை; காலத்தின் பேறுகளாகவும் வரலாற்றுத் தேவைக்காக எழுந்த ஆவணங்களாகவுமே காணப்படும். ஒரு காலத்தில் அவை வெறும் அழகியல் நுகர்ச்சிக்காகவோ வித்துவத்துவத்தைக் காட்டுவதற்காகவோ எழுதப்பட்டிருப்பினும் அவை அந்த காலம் கடந்து அதற்குப் பின் வருகின்ற காலங்களில் காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணங்களாகிவிடுகின்றன. தமிழ்த்தேசியத்தினைப் பேசும் முதலாவது நூலான சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி என்ற கதைமாந்தர்களின் வாழ்வியலைப் பேசுவதான ஒரு மேலோட்ட புரிந்துகொள்ளுதலே எம்மிடையே பரப்பப்பட்டிருக்கின்றது. தமிழின் செழுமைமிக்க மரபினை உள்வாங்கி பல கருத்தாக்கங்களின் கூட்டாக இன, மொழி, பண்பாட்டு அடையாள அரசியலைப் பேசுகின்ற ஒரு இலக்கியப் பிரதியான சிலப்பதிகாரம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. சிலப்பதிகாரம் என்னும் பனுவல் தொன்மம், தேசியம், இலக்கியம் என்ற பன்முகப்பட்ட நிலையில் நோக்கப்பட வேண்டியது. ஆண் மேலாதிக்கத்தின் குறியீட்டு பாத்திரமாகவும் கற்புநிலைக்கு எடுத்துக்காட்டாகும் கண்ணகியின் கற்பின் திறத்தினை பேசும் நூலே சிலப்பதிகாரம் என்ற மாயையிலிருந்து விடுவிக்கப்படவும் தமிழ்த்தேசிய கருத்துருவாக்கமும் தமிழ்த்தேசிய அடையாளத்தையும் பேசும் காப்பியம் என்ற யதார்த்தத்தினை வெளிக்கொணரவும் வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை நாம் செய்யத்தவறின் முழு தமிழினமும் தனது இருப்பினை இழந்து அடையாளம் தொலைத்தவர்களாக இன்னொரு முள்ளிவாய்க்காலில் அழிய நேரிடும்.

காப்பியம் என்பது காப்பு + இயம் என்று பிரித்தறியப்படுகின்றது. அதாவது மரபைக் காத்து இயம்புவது என்று பொருள்படுகின்றது. நால்வகை உறுதிப்பொருளையும் கூறுவதாய் கதை பற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள் என்று தமிழ்ப்பேரகராதி விளக்கமளிக்கிறது. காப்பியம் என்பதற்கான குறிகாட்டியாக பின்வருவனவற்றை பக்தின் என்னும் மொழியியலாளர் குறிப்பிடுகின்றார்.

  1. ஒரு காப்பியத்தின் களம் ஒரு நாட்டின் முழுமையைப் பேசுவதாகும்
  2. காப்பியத்தின் ஆதாரம் தனிமனித அனுபவமல்ல அது ஒரு நாட்டின் பாரம்பரியம்.
  3. காப்பியத்தின் கால, இட, இடைவெளி காப்பிய உலகத்தை தற்கால உண்மை உலகத்திலிருந்து பாடுபவர் வாழும் காலத்திலிருந்து பிரித்து விடுகிறது.

இந்த வரைவிலக்கணத்தினுள் சிலம்பு ஒத்துப்போனாலும் கூட இந்த காப்பிய இடைவெளி என்பது தமிழ்ப் பண்பாட்டின் இருப்பினால் வாசிப்பு தளம் மாறுபடவில்லை என்று கருதலாம்.

காப்பியங்கள் மொழியின் வளர்ச்சிக்கும் காப்புக்குமாகவே எழுந்துள்ளன. அரசியல் ரீதியாக மொழியின் இருப்பு கேள்விக்குள்ளாகும் நிலை வரும்போது அதனை படைப்புவெளிக்குள் ஆவணப்படுத்துவதன் மூலம் மொழியைக் காப்பதற்காக காப்பியங்கள் எழுந்திருக்கலாம். தமிழ்ப்பேரரசின் எழுச்சியான காலமான சங்ககாலத்தில் இலக்கியங்கள் பல எழுந்திருந்தாலும் மொழியின் இருப்பு பற்றி சந்தேகம் இருக்காததால் அங்கே காப்பியம் ஒன்றிற்கான தேவை இருக்கவில்லை. ஆனால் தமிழ்ப்பேரரசின் வீழ்ச்சி உறுதிப்படுத்தப்பட்ட போது மொழியும் தனது இருப்பை இழக்கக்கூடும் என்ற எண்ணத்தில் தமிழின் முதலாவது காப்பியம் எழுந்தது. தமிழர்களின் நிலப்பரப்பின் தொன்மைகளுடனும் இலக்கிய வளத்துடனும் மட்டுமல்லாது பெரும் தேசியத்தின் சாட்சியாகவும் எழுதப்பட்டிருக்கின்றது. வாழ்வியலின் சிறு பகுதியை சொல்லும் தனிப்பாடலாக அல்லாமல் அதன் திணை அடிப்படையில் நோக்கும் போகும் புலம்பெயர்தலின் அல்லது திணை விரிவாக்கத்தின் சாட்சியாகவும் படைக்கப்பட்டிருக்கின்றது. கன்னட வடுகரின் ஆட்சிக்கு முற்பட்ட 2ம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“காப்பியம் இயற்றுபவனின் தன்னுணர்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் ஓர் இனத்தின் உணர்வுப் பிரதிபலிப்பாகவோ ஒரு காலத்தின் பிரதிபலிப்பாகவோ அமைகிறது. நாட்டில் வழங்கும் கதைகள், பழங்காலம் முதல் வழங்கி வரும் நாட்டுப்பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பாகவும் வளர்ச்சியாகவும் மலர்வது.” என்ற கருத்து இங்கு நோக்கத்தக்கது. அரசியல் தளம்பல் மிகுந்த சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் அதிகாரத்தின் நிலைமாறுகாலம் எவ்வாறிருந்ததோ இன்று மீண்டும் அதே வரலாற்றுப் பக்கங்களின் மீள் திரும்பலில் ஒரு நிலைமாறுகால மனநிலையில் தமிழர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தமிழ்த்தேசியத்தின் மரபினையும் தேவையையும் காக்கவேண்டிய தேவையும் பொதுவெளியில் கருத்துருவாக்கம் செய்யும் தேவையும் இன்றைய படைப்பு வெளிக்கு இருக்கின்றது. அரச, மத  பேரினவாதத்தின் கண்களில் கண்ணகி கோவலன் என்ற பாத்திரங்களை உலவவிட்டு பெரும் தேசிய ஆவணத்தை செய்திருக்கும் இளங்கோவடிகளின் நுட்பம் இன்று தேவையானதொன்றாக இருக்கின்றது. மொழியையும் தேசியத்தையும் காப்பதற்கான ஒரு காப்பியம் எழத் தவறின் எங்கள் நிலத்தை இழந்துநிற்பதுபோல எம் மொழியின் செழுமையையும் இழந்துநிற்போம் என்பதை தினமும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது சிங்கள பேரினவாதம். புதிதாக படைப்பது மட்டுமல்லாது உலக வல்லாதிக்கங்களின் மொழி அரசியலிலிருந்தும் எம் மொழியை காப்பதற்கு எங்களிற்கு துணையாக இலக்கியங்கள் அணியமாகி நிற்கும். ஆனால், அந்த இலக்கிய பிரதிகளின் அரசியலை மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். “ஒரு பண்பாடு முற்றாக அழிந்துபோன பின்னரும்  ஒரு நூலில் இருந்து அந்த பண்பாட்டினை மீட்டெடுக்க முடியுமானால் அதுவே அப்பண்பாட்டின் தேசியக்காப்பியம்” என்ற கருத்தினை முன்னிறுத்தி ம.பொ.சி தமிழின் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரமே என முன்மொழிந்தார்.  தேசியக் காப்பியமென்ற நிலையிலிருக்கும் சிலப்பதிகாரத்தினை மீள்வாசிப்புச் செய்தலும் அதனுள்ளே இருக்கும் எமது மரபுகளைத் தேடுவது மட்டுமல்லாமல் சிலம்பைத் தழுவி எமக்கான காப்பியம் ஒன்றை எழுத வேண்டிய தேவையும் எமக்கு இருக்கின்றது.  அந்தப் படிமுறையின் சிறிய தொடக்கமாக சிறு மீள்வாசிப்புக்கு உட்படுத்தி இப்பத்தி எழுதப்பட்டிருக்கின்றது.

உலக வரலாறுகளும் பதிவுகளும் அதிகார வர்க்கத்தின் பதிவுகளாகவும் வரலாறுகளாகவுமே எஞ்சியிருக்கின்றன. காலம் காலமாக தமக்கென தனித்துவமான வாழ்வியல் கோலத்தை கொண்டு வாழும் மக்களின் வரலாறுகள் பேசப்படுவதில்லை. மக்களின் வரலாறுகள் எழுதப்பட்டிருப்பின் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் முரண்களுக்கான முடிவுகளை இலகுவாக எட்டியிருக்க முடியும். மானிட சமூகம் தனது அடையாளத்தையும் நிலத்தையும் மரபினையும் காத்துக்கொள்ள தனது இரத்தங்களை ஆகுதி ஆக்கியிருக்கின்றது. இனக்குழுமமாக வாழ்ந்த சமூகம் தனது மொழி, நிலம், மரபு எனும் அடையாளங்களை தனக்குரியதாக அடையாளப்படுத்த ஆரம்பித்த புள்ளியில் தான் தேசிய இனங்கள் உருப்பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட இனமொன்று  தன்னை மரபுவழித் தேசிய இனமாக அடையாளப்படுத்த வேண்டுமெனின்,

  1. பொதுவான மொழி
  2. தொடர்ச்சியான வரலாறு மூலமாகக் கட்டியமைக்கப்பட்ட நிலப்பரப்பு
  3. பொருண்மிய மரபு
  4. பண்பாட்டு அடிப்படையில் ஒரே இனம் என்ற மனநிலை

என்ற 4 அம்சங்களையும் உட்படுத்தியிருக்க வேண்டும்.

                அந்தவகையில் தேசியம் தொடர்பான கருத்துருவாக்கங்களில் இந்த அம்சங்களையும் உள்ளடக்க வேண்டும். சிலப்பதிகாரமானது தேசிய அடையாளமாக எவ்வாறு நோக்கப்படலாம் என்பதை தேசிய இனத்துக்கான அடிப்படை அம்சங்களை அது எவ்வாறு கருத்துருவாக்கம் செய்திருக்கின்றது அல்லது கட்டியமைத்திருக்கின்றது என்பதனையும் எவ்வாறு எம் மரபுகளை ஆவணப்படுத்தியுள்ளது என்பதனையும் பரிசீலிப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.

மொழி :

                மனிதர்களை தனித்துவப்படுத்தும் வலிமை வாய்ந்த ஆயுதமான மொழியானது தேசிய இனத்தின் முதல் அடையாளமாக வகுக்கப்பட்டிருக்கின்றது. உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழுக்கென சங்கம் வைத்து மொழியின் விழுமியங்களை காப்பாற்றுவதற்கு படைத்தவை சங்க இலக்கியங்களாகவும் எமது வரலாற்றினை பதிந்துவைத்திருக்கும் வரலாற்றியல் ஆவணங்களாகவும் எம்மிடையே உள்ளன. தமிழர்களுக்கென வரலாற்று நீட்சிகொண்ட இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்ட தமிழ்மொழி இருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்கள் பெரும்பாலும் இயல் தமிழைச் சார்ந்தவை. இயலும் கதையும் கலந்த காப்பியமாக மணிமேகலை அறியப்படுகின்றது. முப்பிரிவுகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் ஒரே ஒரு தமிழ்க் காப்பியமாக சிலப்பதிகாரம் காணப்படுகின்றது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியவற்றின் இலக்கண நூலாக சிலம்பு கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. சிலம்பில் முத்தமிழும் உள்ளடக்கியிருப்பதை நோக்கும்போது,

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,

வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து,

இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,

அசையா மரபின் அது பட வைத்து,

மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,

நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – …( அரங்கேற்று காதை)

என்ற பாடலினூடாக முத்தமிழ் புலவனின் இயல்புகள் கூறப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது,  ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த புவியின்கண்ணே தமிழ் நாட்டினர் அறிய முத்தமிழும் துறைபோகக் கற்றுணர்ந்த தன்மையையுடையனாகி, வேத்தியலென்றும் பொதுவியலென்றும் கூறப்படும் இரண்டு கூறுபாட்டினையுடைய, நாடக நூலை நன்றாகப் பற்றிக்கொண்டு, இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர் மையை அறிந்து அறிந்த வண்ணம், தளராத முறைமையாலே அவன் தாளநிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியிலே தோன்ற வைக்க வல்லனாய், முன்பகைவர் செய்த வசை மொழிகளை யறிந்து அவை தோற்றாதபடி வசை யில்லாத மொழிகளால் நாடகக்கவி செய்யவல்ல கெடாத நாவினையுடைய நல்ல நூலை வல்ல புலவனும் .. என்று பொருள் கொள்ளலாம். மக்களின் முன்னால் நாடகத் தமிழை ஆற்றவேண்டுமெனின் முத்தமிழிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்ற செய்தி கலைஞர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

இங்கே முத்தமிழ் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்துவதற்காகவே இந்த காதையை ஆசிரியர் வைத்தாரோ என்று நினைக்குமளவில் முத்தமிழின் இலக்கணங்களும் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தமிழுக்குமான ஆற்றுகை முறைமைகளும் நுண்ணிய முறையில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவையெல்லாவற்றையும் தொகுத்து,

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,

பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்

போக்கினாள்பூம் புகார்ப் பொன் தொடி மாதவி, தன்

வாக்கினால் ஆடு அரங்கின் வந்து.

 என்ற பாடலினூடாக நோக்கலாம். அதாவது, அழகிய புகார்நகரிற் பிறந்த பொன்வளையணிந்த மாதவி யென்னும் கணிகை நடிக்கும் அரங்கத்திலே வந்து எல்லாக் கலைகட்கும் கருவியாகிய கணிதம், இலக்கணம் என்பவற்றையும் இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும் இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும் நாடகத்தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும் தன்வாக்கினாலும் கூத்தினாலும் புவிமுழுதும் அறிந்து புகழும்படி செய்தாள் என பொருள்படும். இவ்வாறு முத்தமிழின் மரபுகளும் அவற்றிற்குரிய இலக்கணங்களும் பதியப்பட்டிருக்கும் ஒரே ஒரு காப்பியமாக சிலப்பதிகாரத்தினை நோக்கலாம்.

தமிழ் அறிவினைப் பழிப்பவர்கள் மேல் போர்தொடுக்கும் மரபும் இருந்திருக்கின்றது. உதாரணமாக,

 “அடல் வேல் மன்னர்….

அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு எனக்

கூற்றம் கொண்டு இச்சேனை செல்வது…. “

என்ற பாடலைக் குறிப்பிடலாம். அதாவது,  வெற்றி வேலும் கடல்போன்ற சேனையும் உள்ள மன்னன் சேரன் செங்குட்டுவன் சொன்னான். “ பாலகுமரன் மக்களாகிய கனகனும் விசயனும் நா காக்காது, புதிய அரசர்கள் சிலருடன் சேர்ந்து நம் தமிழ்த் திறமையை அறியாது இகழ்ந்தனர். அதனால் எமனுடன் இச்சேனை செல்கிறது” என்று பொருள்படும். தமிழில் திறமையற்றவன் என்று பேசப்படுவதானது போர்தொடுக்கும் அளவுக்கு அவமானத்தைத் தரக்கூடியதாக இருந்த காலம் என்ற எடுகோளுக்கு வரமுடியும்.

உலக நாடக வரலாற்றில் தோற்றுவாயாக மேற்கத்தைய வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகின்ற கிரேக்க அரங்க வரலாற்றுடன் சிலப்பதிகாரத்தின் நாடகத்தமிழ் கூறுகளை ஒப்பிட்டு நோக்கும்போது சிலம்பின் அரங்க வரலாறு செந்நெறி அரங்கொன்றிற்குரிற அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்று கூறலாம்.

நிலப்பரப்பு:

தேசிய இனமொன்றின் முக்கிய கூறாக வழிவழியாக தொடர்ந்து வந்த நிலப்பரப்பினைக் குறிப்பிடலாம். சங்ககாலப் போர்களும் நிலத்தின் எல்லைக்கானவையாகவே இருந்திருக்கின்றன. புறநானூற்றுப் பாடலில் தமிழர் அதிகாரத்தின் நில எல்லையானது,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

அதாவது, வடக்கில் பனி மிகுந்த உயரமான இமயமலைக்கு வடக்கும், தெற்கில் குமரி மலையினின்று ஊற்றெடுத்துப் பாயும் குமரி ஆற்றிற்குத் தெற்கும், கிழக்கில் கரையை மோதுகின்ற, சகரரால் (சகரனின் மகன்கள் அறுபதினாயிரம் பேர்) தோண்டப்பட்ட சமுத்திரத்திற்கு கிழக்கும், மேற்கில் மிகப் பழமையான ஆழமான கடலுக்கு மேற்கும், கீழே நிலம், ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் இணைந்து அடுக்கிய அமைப்பின் முதற்கட்டாகிய நீர்நிலை நிறைந்த நிலத்தின் கீழும், மேலே அமைந்துள்ள கோ லோகத்திலும் மட்டுமல்லாது உனது படை, குடி முதலிய திறங்கள் பெற்று பேரும் புகழுடன் சிறக்கட்டும்  என்று  பாடுவதனூடாக அரசின் எல்லைகளைச் சுட்டியிருக்கிறார் காரிக்கிழார்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகம்

என்று தொல்காப்பியம் தமிழர்களின் எல்லையை வரையறுக்கின்றது. பழந்தமிழ் நூல்களின் எல்லை வகுப்பானது வெறுமனே தரைத்தோற்ற அடிப்படையில் அமைந்திருந்தன. ஆனால் சிலம்பு கூறும் எல்லையானது, பௌதிக அளவில் மட்டுமல்லாது நாட்டின் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் எல்லைகளை வகுத்துள்ளது.

நெடியோன் குன்றமும்  தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு

மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும்

கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்

அரைசு வீற்றிருந்த உரைசால் உரப்பின் (வேனில் காதை)

நெடியோனாகிய திருமாலின் குன்றமாகிய  திருவேங்கடம்,  தொடியோளாகிய குமரியின் கடல் ஆகியவற்றை  தமிழ் நாட்டு எல்லையாக வரம்பு செய்து….  என்றவாறாக பொருள் கொள்ளப்படுகின்றது.

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!!

என்ற பாடலிலும் தமிழகத்தின் எல்லையானது வரையறை செய்யப்பட்டுள்ளது.

                பழந்தமிழிலக்கியங்களில் ஒரு இலக்கியத்தில் நாட்டு எல்லையானது ஒரு தடவைதான் அதன் நிலப் பின்னணியில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் சிலப்பதிகாரத்தில் அதனுடைய ஆரம்பம் முதல் இறுதிவரையிலும் நிலத்தின் எல்லையானது மீள மீள கூறப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எல்லைகள் சுட்ட தேவையில்லாத இடங்களில் கூட எல்லை பற்றியதும் நிலப்பரப்பு பற்றியதுமான செய்திகள் விரவிக் கிடப்பதனைக் காணலாம்.

பொதுவாக படைப்பிலக்கியங்களில் பாத்திர ஊடாட்டங்களுக்கும் கதைப்பின்னலின் போக்குக்காகவும் கதை தொடர்பான பின்னணித் தகவல்களுக்காகவுமே நிலமும் அதுசார்ந்த பௌதிகவியலும் பயன்படுத்தப்படும். ஆனால் சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையில் நிலமும் அதுசார்ந்த இயல்புகளும் மக்களின் வாழ்வியலும் ஆட்சியின் பொறையும் சுட்டப்படுவதற்காகவே பாத்திரங்களை அசைய வைக்கிறார் இளங்கோ. கண்ணகியின் கதையை சொல்ல வேண்டியிருந்திருப்பின் ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு புலம்பெயர வைத்துத்தான் கதையை சொல்லவேண்டிய அவசியம் ஆசிரியருக்கு இல்லை. தமிழரின் நிலப்பரப்பு தொடர்பான உறுதித்தன்மையை அல்லது மீள்வலியுறுத்துகையை தனது கருத்துருவாக்கம் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் என்பதனை அறியலாம்.

உழவர் ஓதை, மதகு ஓதை,

உடை நீர் ஓதை, தண்பதம் கொள்

விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,

நடந்தாய்; வாழி, காவேரி!

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப

நடந்த எல்லாம் வாய் காவா

மழவர் ஓதை வளவன்தன்

வளனே; வாழி, காவேரி!

 என்று வாழ்த்தப்படும் காவேரியானது கண்ணகி கோவலனின் பயணத்திலும் சரி, கோவலனுக்கும் மாதவிக்குமான கதையாடலிலும் சரி சுட்டப்பட்டிருக்கின்றது. காவேரி ஆற்றுப் படுகையில் கண்ணகி கால்கடுக்க நடந்துவந்தாள் என்று புனையப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் காவேரி ஆற்றின் நீரைக் கூட எடுக்கமுடியாத நிலைக்கு தமிழினம் வந்துநிற்கும் என்ற இப்போதைய நிகழ்காலத்தை அன்றே எதிர்வுகூறி, காவேரியின் தகவல்களைத் தந்திருக்கிறார் என்று கருத இடமுண்டு.

தாழ் பொழில் உடுத்த,

தண்பதப் பெருவழிக்

காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,

குட திசைக் கொண்டு,

கொழும் புனல் காவிரி

வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

என்று ஆரம்பிக்கும் கண்ணகியினதும் கோவலனின் பயணத்தினை ஒரு பயண பாதையாக வரைவோமானால் தமிழகத்தின் வரைபடத்தின் ஒரு பகுதியை பெறமுடியுமளவுக்கு ஒவ்வொரு சிறு விடயத்தைக் கூட விபரித்திருக்கிறார் நூலாசிரியர். மதுரைக்கு செல்லும் வழியினைக் கூறும்போது மிகவும் நுணுக்கமாக கூறுவதிலிருந்து இன்னமும் இதனை உறுதிப்படுத்த முடியும்.

                இனமொன்றின் இருப்பினை அதன் பொருண்மியத்தின் இருப்பு தீர்மானிக்கும் அதே வேளை ஒரு பொதுவான பொருண்மிய வடிவத்தை தேசிய இனங்கள் கொண்டிருக்கும். தமிழ்த்தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் அவரவர்கள் வாழ்ந்த நிலத்திற்கேற்ற தொழில்களை செய்தாலும் உழவும் கடல் வாணிபமுமே பொருளாதார ஆதாரமாக இருந்திருக்கின்றன எனலாம். நாட்டில் எங்கு சென்றாலும் உழவுத் தொழில் இருக்கும் என்ற செய்தி நாடுகாண்காதையில் கண்ணகியின் பயணப்பாதையை விபரிக்கும்போது சுட்டப்பட்டிருக்கின்றது.

கோவலன்! காணாய்;

கொண்ட இந்நெறிக்கு

ஏதம் தருவன யாங்கும் பல;

 கேள்மோ:

வெயில் நிறம் பொறாஅ

மெல்லியல் கொண்டு

பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை”  

என்று ஆரம்பிக்கும் மதுரைக்கும் வழிகாட்டும் செய்யுளில் எந்த வழியில் போனாலும் சோலையையும் வயலையும் கடந்து தான் செல்ல வேண்டும் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதன்வழி பொருண்மிய மரபு வயலைச் சார்ந்திருக்க வேண்டுமென ஊகிக்க முடியும்.

வாணிபமும் பொருண்மிய மரபாக இருந்திருக்கின்றது. காப்பியத்தின் மையக் கதையான கண்ணகியின் வரலாற்றில் கோவலன் வணிக குலத்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அத்துடன் வணிகம் சார்ந்த மக்களுக்கும் நிலவுடைமைச் சமுதாயத்திற்குமிடையே எழுந்த பூசல்கள் எழுந்துள்ளன என்பதும் வரலாறு. ஆயினும் அன்றைய காலத்தில் அதிகாரத்தின் கைகளில் பொருண்மியம் இருந்தமையால் ஆட்சியிலிருக்கும் மன்னனால் பொருண்மிய வாழ்வும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது எனலாம். ஆட்சி சிறப்பாக இருப்பது என்பது ஒரு கட்டிறுக்கமான பொருண்மிய மரபை  பேணுதலெனவும் பொருள்கொள்ளலாம். எனவே நாட்டுவளத்தினை அறிவதன்  மூலம் பொருண்மிய மரபினை அறிய முடியும்.

கரியவன் புகையினும், பகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்….

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு

……

கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கில்

 என்ற வேனில்காதையின் பாடலினூடாக இயற்கை அழிவு நிகழினும் கூட குன்றாத அளவுக்கு நாட்டுவளம் இருக்குமென்ற செய்தி கூறப்பட்டிருக்கின்றது. சமண நெறியினைத் தழுவியோரின் வணிகமரபும் சைவ நெறியின் நிலவுடைமையும் மோதிய புள்ளியில் தமிழரசின் வீழ்ச்சியும் எழுதப்பட்டது. சிலப்பதிகார காலத்தில் நிகழ்ந்த பொருண்மிய மரபுகளுக்குள் ஏற்பட்ட முரண்களே தமிழர்களின் இருண்ட காலத்திற்கான ஆரம்பமாக இருந்ததெனலாம்.

பண்பாட்டு அடிப்படையில் ஒரே இனம் என்ற மனநிலை

ஒரு இனத்தின் மரபு என்பது அதன் பண்பாட்டு அடிப்படையில் மொழியினால் மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல. ஒரு தேசிய இனத்து மக்களின் உள் மரபுகளை அவர்கள் சார்ந்த மெய்யியல் கோட்பாடுகளும் தீர்மானிக்கும். சிலப்பதிகாரம் எழுவதற்கு முன்னர் இறையியல் கோட்பாடுகளுக்கிடையேயான போட்டி நிலவியதால் இறையியல் கோட்பாடுகளின் பெயரால் ஒரு மொழி பேசும் மக்களும் தமக்குள் பிளவுபட்டிருந்தனர். கோட்பாட்டு அடிப்படையில் அந்த நிறுவனங்கள் மொழியை கூறுபோட்டு, தேசிய இனம் என்ற மக்களின் மரபினை உடைத்துக்கொண்டிருந்தன. சைவர்களும் வைணவர்களும் பௌத்தர்களும் தமக்குள் மோதிக்கொண்டிருந்தனர். அதிகாரத்திலுள்ள மன்னனின் ஆதரவைப் பெற்ற இறையியல் கோட்பாடுகள் மக்களையும் நிறுவனமயப்படுத்த முற்பட்டன. அந்த நிறுவனமயப்படுதலின் ஈர்ப்புக்கு ஆளானவர்களுக்கும் ஏனையவர்களுக்குமிடையில் முரண்கள் ஏற்படத்தொடங்கின. அந்த வேளையில் மத நல்லிணக்கத்தை சிலம்பு பேசுகிறது. இறையியல் முறைமைகளால் வேறுபட்டிருப்பினும் தமிழர்கள் என்ற மையத்தால் இணைந்திருக்கவேண்டுமென வலியுறுத்தியது. இளங்கோ அடிகள் ஒரு சமணத்துறவியாக அறியப்பட்டிருப்பினும் அவர் ஏனைய இறைக்கோட்பாடுகளை மதிக்கத் தவறவில்லை. இறையியல் கோட்பாடுகள் மக்களுக்கு தேவையற்ற கருத்துருவாக்கங்களைச் செய்வது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டினை இன்னமும் கேள்வியாக்கும் என்றுணர்ந்த இளங்கோவடிகள் அனைத்து கோட்பாடுகளையும் சிலம்பினுள் உட்படுத்தியிருக்கின்றார். இந்திரவிழாவினை ஒரு தேசியம் சார்ந்த விழாவாக பிரகடனப்படுத்தியிருப்பதையும் கூறலாம்.

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே

என்று முருகனைப் பாடும் அதேவேளை,

சமணக்கடவுளான அருகனும் பின்வருமாறு சிறப்பிக்கப்படுகிறார்.

திங்கள் மூன்றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்

செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து

கோதை தாழ்பிண்டிக் கொழுநிழ லிருந்த

ஆதியில் தோற்றத் தாவன்” 

 அணி திகழ் போதி அறவோன் என்று புத்தரும் பாடப்பெற்றிருக்கிறார்.

சாதாரண குடிமக்களது சடங்குநிலை நம்பிக்கைகள் கூட சிலம்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதே. பொதுவாக நிறுவனமயப்பட்ட இறையியல் கோட்பாடுகள் செல்வாக்குச் செலுத்துமிடங்களில் மக்களின் நிறுவனம் சாராத நம்பிக்கைகளும் வழிபாடுகளும் புறக்கணிக்கப்படும். அவை வரலாறுகளிலும் பதியப்படுவதில்லை. அவ்வாறான புறக்கணிப்புக்களே மரபுசார்ந்த ஆய்வுகளில் தேக்கத்தையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி, நிறுவனப்படுத்தப்பட்ட விடயங்கள் மட்டுமே வரலாறு என்ற தவறான  பொதுமைப்படுத்தலுக்குள் இட்டுச்செல்லும். ஆனால் இளங்கோவடிகள் மக்களின் வாழ்வியலின் நம்பிக்கைகளைக் கூட புறக்கணிக்காது உள்வாங்கியிருக்கிறார். உதாரணமாக,  பூதவழிபாடுகள், காவற்பூதத்தின் பலிகள் போன்றவையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலார்

அறைபோகு அமைச்சர் பிறர்மனை நலப்போர்

பொய்க் கரியாளர் புறங்கூறாளர்

போன்றோரை பலிகொடுக்கும் சதுக்கபூத மன்றம் போன்றவையும் பாசண்டசாத்தன் வழிபாடு, மதுராபதி தெய்வம், மணிமேகலா தெய்வம், தீக்கடவுள் போன்ற தெய்வங்களும் சிலம்பினுள் பாடப்பெற்றிருக்கிறது. காமவேள் கோட்டம், பலதேவன் கோயில், உச்சிக் கிழான் கோட்டம், சூரியன் கோவில், சகாதேவன் கோட்டம், நிலாக்கோட்டம், ஐயைக் கோட்டம், தேவர் கோட்டம் போன்ற வழிபாட்டிடங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இனத்தின் மரபு என்பது மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வாழ்வியலில் ஊடறுக்கும் நம்பிக்கைகளையும் சேர்த்ததே ஆகும். மக்களிடையே காலங்காலமாக நிலவிவரும் அறிவியலால் நிறுவமுடியாத அல்லது நிறுவ முற்படாத கடந்த உளவியல் சிந்தனைகளான நம்பிக்கைகள் பதிவாகியுள்ளன. அவ்வாறான பதிவுகளே காப்பியத்தினை வெறுமனே கதாநாயக அல்லது வேத்தியல் இலக்கிய தன்மைக்குள்ளிருந்து மக்கள் இலக்கியமாக சிலம்பினை நோக்க வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கண்ணகி கோவலன் மீதான பிரிவுத்துயரில் இருக்கும்போது தேவந்தி சோமகுண்டம் சூரிய குண்டம் முதலியவற்றில் முழுகி  காமவேள் கோட்டத்தை வழிபட்டால் கணவனைப் பிரியாமல் வாழலாம் என எடுத்துக் கூறுகிறாள். மாதவியோடு கோவலன் இருக்கின்ற காலத்தில் மாதவிக்கு வலக்கண்ணும் கண்ணகிக்கு இடக்கண்ணும் துடித்தலும் மக்களுடைய நம்பிக்கைகளின் பதிவாக வெளிப்பட்டிருக்கின்றன.

மக்களுடன் முரண்படாது இறையியல் கோட்பாடுகளுக்குள் நல்லிணக்கத்தை பேணுகின்ற அதேவேளை,

தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்

பொய்உரை அஞ்சுமின், புறம்சொல் போற்றுமின்,

ஊன்உண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்.

தானம் செய்மின், தவம்பல தாங்குமின்.’

 என்று மக்களை அறிவுரைக்கவும் தவறவில்லை. சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்கள் அதிகமாக பேசப்படாமைக்குரிய காரணம் அவை இறையியலுக்கு முக்கியம் கொடுக்க,  சிலம்பு மக்களின் இயல்பான வாழ்விலோடு ஒத்ததாய் மக்கள் காப்பியமாக விளங்குவதே ஆகும். மணிமேகலையானது பௌத்தத்தை நிலைநாட்ட, சிந்தாமணி சமணத்தை நிலைநிறுத்துகின்றது. ஐவகை நில மக்களின் வாழ்வியலும் அவர்களுடைய வாழ்க்கை மரபும் சிலம்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த மரபு வேறு எந்த காப்பியத்திலும் இல்லையென கூறலாம்.

               
சிலப்பதிகார காலத்திற்கு பின்வந்த காலமானது மொழி என்ற கூட்டுணர்வைத்தாண்டி பக்தி இலக்கிய காலம் என்று அறியப்படுவதன் பின்னாலிருக்கும் சமய பூசல்களை தொலைநோக்கோடு அறிந்தோ என்னவோ தமிழ்த் தேசிய தெய்வம் என்ற ஒன்றின் தேவையை உணர்ந்திருந்தார். பத்தினித் தெய்வமான கண்ணகி , சங்க மரபில் வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியாக தேசிய தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பத்தினித் தெய்வ வழிபாடு இறையியல் சார்ந்த கோட்பாடுகளுக்கு அப்பாலும் சேர, சோழ பாண்டிய நாடுகளிலும் இலங்கையிலும் இன்றுவரை திரிபடைந்த நிலையிலும் கூட  தொடர்வதற்கான தேசிய புள்ளி இளங்கோவடிகளால்  வைக்கப்பட்டிருக்கின்றது.

                கண்ணகி எனும் தொன்மத்தின் மையத்தைப் பற்றி தமிழ்த் தேசிய பேரரசொன்றின் எழுச்சியை புனைந்திருக்கிறார் அரசியல் துறவியான இளங்கோவடிகள். தமிழ்த்தேசிய பேரரசென்பது அரசுகளின் உருவாக்கத்தினால் மட்டும் உருவாக்கிக்கொள்ள முடிந்தது அல்ல என்பதை உணர்ந்திருந்த அடிகளார் ஒட்டுமொத்த பண்பாட்டு, சமய பொருளாதார ஒன்றிணைப்பாக நிகழ்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தினை கருவாகக் கொண்டு சிலம்பைப் புனைந்திருக்கிறார் எனலாம். தேசியக் கருத்துருவாக்கத்தில் தேசிய இனத்துக்கான பொதுமையான கடவுள், ஒரு பொதுப் பண்பாடு, மொழி, நிலத்தாலமைந்த எல்லை போன்றவற்றை ஒட்டுமொத்தமாகக் கூறுவதாக சிலப்பதிகாரம் உருவாக்கப்பட்டது என்பது இங்கே மெய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கின்றது. சுருங்கக்கூறின், தமிழ்த் தேசியத்திற்குரிய மொழி, அரசு, சமயம், பண்பாடு, கலைகள், பொருண்மியம், வரலாறு போன்றவற்றினைக் கட்டமைப்பதாகவும் ஆவணப்படுத்துவதாகவும் எழுந்த நூல் என்று சிலப்பதிகாரத்தினைக் குறிப்பிடலாம்.

குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத்

துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி

 (தமிழ்நாட்டுத் தென் திசைக்கு எல்லையாகிய தென்குமரி தொடங்கி நாவலம் தண்பொழிலுக்கு வடக்கு எல்லையாய் அமைந்த இமைய மலைகாறும் தனது ஆணையாகிய ஒரு மொழியையே வைத்து உலகினை ஆட்சி செய்த சேரலாதன் என்னும் சேர மன்னனுக்குரிய… )

என்ற வாழ்த்துக்காதையின் மூலமாக சேரன் செங்குட்டுவன் ஆண்ட நிலத்தின் எல்லையும் ஒரே மொழியாக தமிழ்மொழியே இருந்தததையும் ஆதாரமாகக் கூறமுடியும்.

மூவேந்தர்களும் வீரம் நிறைந்தவர்களாக போரின் மூலம் நிலத்தின் எல்லையை தமது ஆளுகைக்குள் வைத்திருந்தனர் என்ற செய்தியினை தேவந்தியின் கூற்றினூடாக அறியமுடிகிறது.

முடிமன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ

வடபேர் இமய மலையில் பிறந்து

கடுவரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த

தொடிவளைத் தோளிக்கு தோழி நான் கண்டீர்

சோழ நாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர்

 அதாவது, தமிழரசர் மூவரும் ஒவ்வொரு காலத்து அவ்விமய மலை வரையில் உள்ள அரசரையெல்லாம் அடிப்படுத்துத் தமது இலச்சினையையும் மலையிற் பொறித்துப் பேணுதலின் மூவருங் காத்து ஓம்பும் மலை என்றாள்..

குமரி வேங்கடம் குண குட கடலா

மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்

செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்

ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம்

மக்கள் தேவர் என இரு சார்க்கும்

ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,

எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை

இழுக்கா யாப்பின் அகனும் புறனும்

அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய

பாடலும், எழாலும், பண்ணும், பாணியும்

 

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்

ஒருங்குடன் தழீ, உடம்படக் கிடந்த

வரியும், குரவையும்,  சேதமும்,  என்று இவை

தெரிவுறு வகையான்,  செந்தமிழ் இயற்கையில்,

ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம்

 

காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து

மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய

சிலப்பதி காரம் முற்று..”

அதாவது, தெற்கே குமரியும் வடக்கே திருவேங்கடமலையும் கிழக்கு மேற்கு எல்லைகளாக கடல்களுமாக அமைந்த தமிழ்நாட்டிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதிகளில் ஐந்து திணைக்கும்  அறம், பொருள், இன்பம், மக்கள்,  தேவர் என  ஐவகை நில மக்களும் மரபின் வழி ஒழுகி வருகின்றனர். முத்தமிழ்களும் ஒருங்கே இருக்கின்ற வாழ்வியல் என்று சுருக்கமாக பொருள்கோட முடியும்.

                இவ்வாறாக, மொழி வழி தேசிய இனமான தமிழினத்தின் எல்லைகள் பற்றிய தெளிவான தகவல்களையும் சுட்டி நின்று, தமிழ் மரபுசார் இலக்கியமாக, தமிழரின் தேசிய அடையாளமாக சிலப்பதிகாரம் அறியப்படத் தொடங்கும்போது, அதன் வலிமையை உணர்ந்த அந்நியர்கள் இந்த அடையாளத்தை அழிக்கும் நுண் அரசியலை நகர்த்தத் தொடங்கியிருந்தனர். பல்லவர் காலத்தில் கண்ணகி என்னும் தமிழ்த்தேசியக் குறியீடு திட்டமிட்டு உருமாற்றப்பட்டு நிறுவனமயப்பட்ட இறையியல் கொள்கைகளுக்குள் திரௌபதி அம்மனாகவும் காளியாகவும் காண்பிக்கப்படுகின்றது. கண்ணகி என்ற தேசிய குறியீட்டினையும் தமிழின் தொன்மங்களையும் கூறும் சிலப்பதிகார பிரதியும் காப்பிய மரபிற்கு உட்படவில்லை என்று தண்டியலங்காரம் கூறும் வடமொழிக் காப்பிய மரபிற்கு உட்பட்டு ஒழுகவில்லையென்பதை நிறுவினார்கள். வடமொழி பெரும் மொழியாகவும் அதிகார மொழியாகவும் உச்சம் பெற்ற காலத்தில் சிலம்பு புறந்தள்ளப்பட்டது. பல்லவர் காலத்தில் நிகழ்ந்த சமண பௌத்த சமயங்களுக்கும் வைதீக சமயங்களுக்குமான போட்டியில் சைவ வைணவ சமயங்களின் எழுச்சியில் சமண பௌத்த மதங்கள் ஒதுங்கிப்போயின. சமயக் காழ்ப்புணர்வு சமண பௌத்த இலக்கியங்களையும் விட்டுவைக்கவில்லை. தேசியக் காப்பியமாக காணப்படுகின்றபோதிலும் இளங்கோவடிகள் அதனை தேசிய காப்பியமாக அறிவிக்கவில்லை. சமண காப்பியம் என்ற போர்வையில் மட்டுமே தேசியம் பேசமுடியுமாயிருக்கும் காலத்தில் எழுந்திருக்கக்கூடிய காப்பியமாக சிலம்பைக் கருதின், தேசிய கருத்துருவாக்கம் மறுக்கப்பட்ட காலம் எனவும் சிலம்பு காலத்தினையோ அல்லது அதற்கு பின்வந்த காலத்தினையோ நாம் ஊகிக்க முடியும். இதன் வழியே சிலப்பதிகாரம், திருக்குறள் முதலான இலக்கியங்களை தேவாரம் போன்ற பக்தி பிரதிகள் கீழே தள்ளின. ஏனைய இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகள் போன்று அதிகளவில் சிலப்பதிகாரத்திற்கு எழுதப்படவில்லை. சிலப்பதிகார வாசிப்பும் அதுகுறித்த உரையாடல்களும் உரையாசிரியர்கள் மத்தியில் கூட குறைவாக இருந்திருக்கிறது என்று கருத இடமுண்டு.

               அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகி மதுரையை அழித்த கண்ணகி இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள் என்றும் சிலம்பு கூறல் கூறிநிற்கின்றது. “பெரிய வதிசயமுடனே பேண்ணணங்கு மிலங்கை நண்ணி சரியரிய வரங் கொடுத்துத் தார்குழல் வற்றாப்பளையில் மருவியிருந்த தருள் கொடுத்த வளர்கதிரை மலையணுகி” மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்த இடத்தில் மீண்டும் இளங்கோவடிகள் கண்ணகி என்னும் தொன்மத்தின் குறியீட்டை இலங்கை என்ற நாட்டிலும் அசைய வைத்ததன் பின்னால் இருக்கும் இலங்கை, தமிழக தொடர்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே கருதினார் என ஊகிக்கலாம். சிலப்பதிகார கதையின் களம் சேர சோழ பாண்டிய நாடுகளே. இதில் இலங்கை பற்றிய செய்திகள் இணைக்கப்பட்டது ஈழநாட்டு தமிழரையும் தமிழ் பேரரசுடன் இணைப்பதற்காக ஈழநாட்டின் இடங்கள் கதைக்களத்தினுள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். தமிழ்த்தேசிய விழாவாக பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்ட இந்திரவிழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.

இன்றும் இலங்கையின் வல்வெட்டித்துறையில் இந்திரவிழா நிகழ்த்தப்படுகின்றது. வல்வெட்டித்துறை அம்மனை முதன்மையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் இந்த விழாவிற்கும் “அம்மனாக” கண்ணகி மாற்றப்பட்டிருக்கிறாரா என்ற ஆய்வுக்கும் உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டால், அவ்வாய்வு தமிழர் தேசிய விழாவின் மீளாக்கத்திற்கு அடிக்கல்லாகும். “கொங்கச் செல்வி, குடமலையாட்டி செந்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” என்று தமிழ்த்தெய்வமாக உருவாக்கம் செய்யப்பட்ட கண்ணகித் தொன்ம வழிபாடு, இளங்கோவடிகளின் தொலைநோக்கத்தை நிறைவு செய்திருக்கின்றதெனக் கூறலாம். இன்றும் இன்றைய தமிழ்நாடு, கேரளம், இலங்கை போன்ற நாடுகளில் கண்ணகித்தெய்வ வழிபாடு சடங்குநிலைகளில் நிகழ்த்தப்படுவதைக் காணலாம். சங்ககாலத்திலிருந்தே தமிழர்களிடம் இருந்து வந்த கண்ணகி வழிபாட்டுத் தொன்மத்தை பல சமயங்களும் தமக்குள் மடைமாற்றம் செய்திருப்பதை காணலாம். சங்ககால தமிழர் தெய்வம் மகாஜன பௌத்தத்தின் தெய்வமாகவும் இந்துத் தெய்வமாகவும் எவ்வாறு மாறினாள் என்ற விடையை தேடுவோமாயின் எமது மரபு அடையாளங்களை நிரூபிப்பது இலகுவாகிவிடும். இன்றும் மட்டக்களப்பின் நாட்டார் இலக்கியங்களிலும் கூத்துமரபிலும் கண்ணகியின் வரலாறு உள்ளடக்கப்பட்டுள்ளது. அதே வேளை பத்தினித் தெய்வம் என்று சிங்கள பௌத்தர்களும் கண்ணகியை வழிபடுகின்றனர். சிலப்பதிகாரத் தொன்மையை அடியொற்றி பல இலக்கியங்கள் தமிழிலும் சிங்களத்திலும் எழுந்துள்ளன. கண்ணகி வழக்குரை, வசந்தன் கவித்திரட்டு. குளுத்திப் பாடல். உடுகுச்சிந்து. ஊர்சுற்றுக்காவியம். மழைக்காவியம் .கூவாய்குயில். கண்ணகை அம்மன் ஊஞ்சல். கண்ணகி அம்மன் குழுத்திப்பாடல்கள் போன்ற தமிழ் இலக்கியங்களும் ராஜாவலிய, ராஜரத்தினாகார, பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்களும் இன்றும் கண்ணகித் தொன்மத்தினை பாடுகின்றன. கயபாகு மன்னன் கண்ணகியை வழிபட்டான் என்று சிலம்பு கூறி நிற்க, அவனுடைய வழிபாட்டுத் தலம் கண்டியில் இருந்திருக்கலாம் எனவும் இன்றைய பெரகரா அன்றைய இந்திரவிழாவின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கண்ணகி வழிபாடு எவ்வாறு இரு இன மக்கள் மத்தியிலும் வந்து சேர்ந்தது என்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வோமாயின் இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு என்ற சிங்களப் பேரினவாதத்தின் கருத்தாக்கத்தினை முறியடிப்பதாக இருக்கும். ஏனெனில் அடித்தட்டு சிங்கள மக்களிடம் இருக்கின்ற இந்த கண்ணகி வழிபாட்டு முறை நாயக்கர் வழிவந்த சிங்கள மக்கள் மத்தியில் இல்லை. தமிழர்களாக இருந்து சிங்களவர்களாகிய இலங்கையின் பழங்குடிகளிடம் இந்த வழிபாடு எஞ்சியிருக்க, இந்திய நாயக்கர் பரம்பரையிலிருந்து இலங்கைக்கு வந்த வந்தேறு குடிகளான சிங்களவர்களிடம் மண்ணின் மரபு இல்லாமல் இருப்பது ஆச்சரியமில்லை. இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி ஆய்வுசெய்த கணநாத ஒபயசேகர என்னும் சமூகவியலாளர் மகாஜன பௌத்தத்தினால் உள்வாங்கப்பட்டே கண்ணகி வழிபாடு ஈழத்தை அடைந்திருக்கின்றதெனக் கூறுவார். இதன்வழி நோக்கினாலும் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது நிறுவப்படுமிடத்து மீண்டும் சிங்கள பௌத்த நாடு என்ற கொள்கையாக்கம் வலுவிழக்கும். அதேபோன்று மொழிவழி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது கேரள நாடாக பிரிந்த சேரநாட்டில் பகவதி அம்மன் என்ற பெயருடன் கண்ணகி வழிபாடு இருக்கி;ன்றது. அதுதொடர்பான ஆய்வுகள் வலுப்பெறுமிடத்து தமிழினை சமஸ்கிருதமயமாக்கலுக்கு உட்படுத்தி மலையாளம் என்ற புதுமொழியை உருவாக்கிய வடநாட்டாரின் தமிழ் மக்களை பிரித்தல் என்னும் நயவஞ்சகம் வெளிப்படலாம்.

வடமொழி மொழியியல் சார் அரசியலின் நுண்ணழிப்புக்கள் உட்பட்ட சிலப்பதிகாரமானது, இலக்கிய தளத்தினின்றும் விடுபட்டது. தொடர்ந்த காலங்கள் தமிழ்த் தேசியத்திற்கானவையாகவும் இருக்கவில்லை. மொழிவழியிலும் நில வழியிலும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களை தமிழினமும் தமிழ்மொழியும் எதிர்கொண்டன. தமிழின பேரரசின் கனவும் புதைந்துபோனது. ஆனால், 20ம் நூற்றாண்டில் மீண்டும் தமிழ்த்தேசிய உணர்வுகள் கூர்மைபெறத் தொடங்கின. சிலப்பதிகாரம் 1872 இல் பதிப்புருப்பெறுகின்றது. ஆங்கிலேயர்களுக்கெதிரான விடுதலைப்போராட்டம் முனைப்புப்பெறும் சமயத்தில் இனம் சார்ந்த வரலாறு மரபுகள் முதலானவற்றை முன்னிறுத்தவேண்டிய தேவை எழுகின்றது. ஆனால் தமிழின பண்பாட்டு ஆய்வுகளும் வரலாறுகளும் ஏதோ ஒரு வகையில் வடமொழி ஆதிக்கத்திற்கு  உட்பட்டே மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் தமிழிசை இயக்கம் தோன்றுவதற்கான அடிப்படையாக இருந்தது சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையே ஆகும். சுப்பிரமணிய பாரதியார் போன்றவர்கள் பாரதம் முழுவதுக்குமான தேசியக் காப்பியம் என பதிவுசெய்திருந்தனர். ஆனால் அறிஞர் அண்ணா போன்றோர் அந்தக் கருத்துக்களை மறுதலித்து சிலம்பு தனித்தமிழ்ப்பண்பாட்டை பிரதிபலிப்பது என்று கூறினர். சிலப்பதிகாரத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லும் பணியும் ம.பொ.சி இனால் ஆரம்பிக்கப்பட்டது.

ராமசாமி நாயக்கரின் விடுமுறைக் காலம்

பெரியார் என்று அழைக்கப்பட்ட இராமசாமி நாயுடு  என்ற தமிழின விரோதிகள் சிலப்பதிகாரம் பெண்ணடிமை பற்றி பேசுகின்றதென்றும் அது ஆரிய புகழ்பாடும் நூலென்றும் மூடக் கருத்தாக்கத்தினைப் பரப்பியிருந்தார்.

“.. இது விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.. மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள்.. கோபாவேசத்தோடு.. உடனே மதுரை பற்றிக் கொள்கின்றது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு. இன்று எந்த ஒரு பெண்ணாவது அவள் எவ்வளவதான் கற்புடைய கன்னியாயிருந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்யமுடியுமா?  “ என பெரியாரின் சிலப்பதிகாரம் தொடர்பான பதிவினைக் கூறலாம். பகுத்தறிவில் பேசுவதாக நினைத்து, தமிழ்க் காப்பியமொன்றினை இகழ்கிறார்.  பெண்ணின் கற்புநிலையை பாடும் ஒரு நூலாக மட்டுமே சிலப்பதிகாரம் சித்தரிக்கப்படுகின்றமைக்கு இவ்வாறான மனிதர்களும் அவர்களை பின்தொடர்வோரும் காரணர்களாகின்றனர்.  தமிழர்களின் மரபினையும் தமிழ்த்தேசிய கூறுகளையும் கூறுகின்றதான தமிழின இருப்பினைக் கூறும் அடையாளங்களை அழித்தொழிப்பதில் பெரியாரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மிக மோசமான தமிழின அடையாள அழிப்பாக சிலப்பதிகாரத்தின் அழிப்பினைக் கூறலாம்தமிழ்த்தேசிய மரபினைக் கூறும் நூல் சார்ந்து, அதனை முறையான வாசிப்பிற்கு உட்படுத்தாது ஆரிய மரபினது என்று கூறி தமிழர்களிடமிருந்து ஒரு தேசிய காப்பியத்தை பிரித்தெடுக்கும் நயவஞ்சகச் செயல் தமிழ்த் தேசியப் பரப்பில் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

                உலகின் தேசிய இனங்கள் அனைத்துமே தமது அடையாளங்களும் இருப்பும் கேள்விக்குள்ளாகும் நிலை வருகின்றபோது தமது புனிதங்களையும் அடையாளங்களையும் தேடுவார்கள். அவை வரலாற்றுக்கு முற்பட்டவையாக இருப்பின் அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதிலும் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதிலும் அந்த இனம் தன்னுடைய கவனத்தைக் குவிக்கும்.  ஆனால் தமிழர்களுக்கு அந்த மன உறுதிகள் இருந்திருப்பின் பூம்புகார் கடலாய்வு எப்பவோ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். கல்வெட்டுக்கள் அச்சாகியிருக்கும். நாம் எமது அடையாளங்களையும் தொன்மைகளையும் இழந்தாலும் கூட அவற்றை கொண்டாடத்தெரியாதவர்கள். அதனால் தான் இன்று மொழி, உணவு, சமயம், மரபு, உடை, பொருண்மியம் என எல்லாவித அடையாளங்களையும் இழக்கும் விளிம்புநிலையில் நிற்கின்றோம். கொண்டாடுவது என்பதை விட ஒரு ஆரிய மேனிலைப்பட்ட மனநிலையில் தமிழின் அடையாளங்களை பார்ப்பது வேதனைக்குரியது. சிலப்பதிகாரம் எமது சமூகத்தில் கண்ணகியா மாதவியா கற்பில் சிறந்தவள் வகையறா விவாதங்களுக்குள் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான வாசிப்புக்களுக்கே பழக்கப்பட்டிருக்கிறோம். தமிழில் எழுந்த முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தினை, வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட காப்பிய நிலையில் இயற்றப்பட்டது என்று ஆய்வுசெய்த எமக்கு தமிழிலக்கிய மரபானது தனிநிலைக் கவிதை மரபின் தொடர்ச்சியாக எவ்வாறு தொடர்நிலைக் காப்பியமானது என்பதை வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஆரியப் பார்ப்பன மனநிலையிலிருந்து விடுபட்டு எமக்குரிய இலக்கியங்களைப் படைக்கவேண்டிய நிலையில் இன்று நிற்கின்றோம்.

பேராசிரியர் அரசு அவர்கள் “இலக்கியப் பனுவல்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழு சார்ந்த மக்களின் அடையாளங்களாகவும் கட்டமைக்கப்பட்டன. இலக்கிய செந்நெறி மரபில் உருவாகும் இவ்வகையான பனுவல்களை குறிப்பிட்ட மொழிசார்ந்த இனத்தின் அடையாளமாகக் கட்டமைக்கும் தேவை அவ்வப்போது ஏற்படுகின்றது..” என்று கூறுகிறார். மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது தமிழனின் எல்லைகள் அந்நிய மாநிலத்துக்குள் உள்வாங்கப்பட்டது. தமிழன் அடையாளங்களில் ஒன்றாக மௌனமாக ஓடிக்கொண்டிருக்கும் காவேரிக்காக பிறமொழி மக்களிடம் தமிழன் கையேந்தி நிற்கிறான். இவற்றிலிருந்து மீள வேண்டுமெனில், சிலப்பதிகாரம் ஆரியத்தின் பண்பாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்துகின்றதே தவிர தமிழனுக்குரிய பெருமைகள் அதில் இல்லை என்ற தவறான கருத்துருவாக்கங்கள் களையப்படுதலும், தமிழ்வேந்தர்களும் தமிழ் எல்லைகளும் தமிழ் மரபுமே சிலப்பதிகாரத்தின் பேசுபொருட்கள் என்ற புரிதல்களை ஏற்படுத்துதலும், பொருண்மிய போக்குகளையும் அது சார்ந்த வரலாற்றுப் போக்குகளை அறிந்து கொள்வதற்கான நூல் என்பதற்கான உரையாடல்களும் கண்ணகி சிலை என்ற குறியீட்டின் பின்னாலுள்ள அரசியலும் உரையாடல்களுக்கு உட்படுத்தப்படவேண்டுமென பேராசிரியர் அரசு குறிப்பிடுகிறார்.

 ஈழத்தில் தன்னுடைய அடையாளங்களை தேடுவதில் தமிழனுக்கு இருக்கும் வேகத்தினை விட, தமிழினத்தை அழிக்கும் சிங்களவர்களின் வேகம் மும்மடங்கில் இருக்கின்றது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல பண்பாடு முற்றாக அழிந்தாலும் மீள கட்டியமைக்கும் காப்பியமாக சிலம்பு இருந்ததைப்போல இன்று அழிந்துகொண்டிருக்கும் எமது மரபினை காப்பியமாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இல்லாவிடின், எமது அடுத்த தலைமுறை தமிழ் போன்ற இன்னொரு மொழியையே பேசப்போகின்றது. கிறித்துவர்கள் வீட்டின் திருவிவிலியம் போல, இந்துக்களின் வீட்டில் கீதை போல, இஸ்லாமியர்களின் வீட்டில் குர் ஆன் இருப்பதுபோல தமிழர்களின் வீடுகளில் எமது தேசியக் காப்பியத்தினை பேணி, மீள்வாசிப்பிற்கு உட்படுத்துவோமாக இருந்தால் எமது தொல் வரலாற்றை மீள கட்டியமைப்பதுடன் மொழியின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியும்.

செல்வி

19-03-2017

 16,709 total views,  4 views today

(Visited 166 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply