படைப்புப் பிரதிகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – செல்வி (திருத்திய பதிவு)

படைப்புப் பிரதிகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – என்ற தலைப்பில் செல்வி அவர்களால் எழுதப்பட்டு 2017-03-01 அன்று பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையானது (http://www.kaakam.com/?p=605) ,அதனது ஆய்வு முறைமையில் முழுமையடையாது, ஒரு ஆய்வுப் பெறுதியை வழங்காமல் ஒரு இலக்கற்ற தளம்பலுக்குள் சென்றுவிட்டதாக எமதுஆசிரியர்குழாமைத் தொடர்புகொண்டு பல ஆய்வறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர். எவரும் இதுவரை நுழைந்து ஆய்விற்குட்படுத்தாத கடினமான தலைப்புக்களை,தமிழ்த் தேசியத்தின் மேம்பாடு கருதி மட்டுப்படுத்தப்பட்ட மனித வளங்களை வைத்து ஆய்வுக்குட்படுத்துவதன் சிரமங்களை உள்வாங்கியவர்களாகவே, பலர் தமதுஆதங்கங்களைத் தெரிவித்தனர்.

விளைவாக, இதே தலைப்பை மீளாய்விற்குட்படுத்தி, பெறுமதியான இந்த ஆய்வைச் செம்மையாக்கி மறுபிரசுரம் செய்கின்றோம். தொடர்ந்தும் குறைகள் சுட்டுக.இதேபோல தங்கள் பேராதரவையும் எமது இணையத்துடனான உங்களின் உரிமையுடனான ஊடாடத்தையும் எதிர்பார்த்து எம்பணி தொடருவோம்.

-ஆசிரியர் குழாம்-

தனியன் ஒவ்வொன்றினதும் வாழ்வியல் இயங்கியலானது கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த இயங்கியலின் அரசியலானது, ஒரு தனியனுக்கும் இன்னொரு தனியனுக்குமான ஊடாட்டத்தின் விளைபொருளாக மட்டுமல்லாது, தனியன் தன்னுடன் தான் ஊடாடுவதையும் குறிக்கும். அந்த வாழ்வரசியலுக்குள் உட்பட்டே ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டிருக்கிறான். மனிதனால் அறியப்படுகின்ற புற இயங்கியலின் பெரும்பாலான செயல்கள் நனவு மனத்தின் விளைவுகளாக காணப்படுகின்றன.  மக்களின் வாழ்வியலை, அதன் கட்டமைப்பினைää இயங்கியலினைத் தீர்மானிப்பவர்களாக ஆள்பவர்களே இருக்கிறார்கள். மரபுவழித் தேசிய இனமான தமிழர்கள் விடுதலைக்கான போரில், தோற்கடிக்கப்பட்ட சமூகமாக இருப்பதால் அதன் இருப்பினை தக்கவைப்பதற்கான தேவைகள் இருக்கும் அதேவேளை, இருப்பின் அடையாளங்கள் அரச இயந்திரங்களினால் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இருப்பினைத் தக்க வைக்கும் அதேவேளையில், பொய்மைக் கருத்தியல்களுக்கெதிராகவும் குரல்கொடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்.

உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரல்களும் மறுக்கப்பட்டிருப்பதினை அரச இயந்திரம் எப்போதுமே உறுதிசெய்துகொண்டிருக்கும். ஒடுக்கப்பட்ட இனங்கள் மீதான அரச பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்துவிடும் பேரினவாத வெறிக்கு எதிராக குரல்கொடுக்க முடியாதவர்களாகää குரலற்றவர்களாக இருக்கின்றோம். ஊடகங்களும் அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக செய்திகளை உருமாற்றம் செய்யும் அடிமைகளாக மாறியிருக்கின்றன.  ஊடகங்களை நடத்தமுடியாத குரலற்றவர்களும் அடக்கப்பட்டோரும் அடக்குமுறை அரசாங்கங்களினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் முகவரிகள் இல்லாமல் ஆக்கப்பட்டும் குரல்வளைகளில் துப்பாக்கி முனை நீண்டுகொண்டிருக்கின்றது. தணிக்கைப்பிரிவின் அதிகார வெறிக்குள் சிறுபான்மையினரின் முனகல்கள் கூட அடங்கிப்போய்விட வேண்டிய காலம் இது. அதிகாரத்தின் வேலிக்குள் மௌனமாகவே இருந்து,  விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகளை வெறும் கற்பனைகளாக மாற்றிவிடுவதை விட எமக்கான மாற்று ஊடகம் நோக்கிய சிந்தனைகளை செலுத்தவேண்டும். ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற இலங்கை அரசின் மாய கருத்துருவாக்கத்தை, நுண்ணிய இனச்சிதைப்பாக்கத்தை பற்றிய புரிதல்களை மக்கள் மத்தியில் பரப்பவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் இருக்கும் எம்மால், பொதுவெளியில் பேசாப்பொருள்களை பேச விழைந்தால், காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியலில் இணைக்கப்பட்டுவிடுவோம் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

தணிக்கைப்பிரிவு, ஊடக சுதந்திரமின்மை என்ற தடைகளைக் கடந்து எமக்கான தளத்தினை தேடவேண்டும்.  நீண்டு பரந்த எம் வரலாற்றில் இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து வந்தோம் என்ற தேடுவோமாயின் நிச்சயமாக எமக்கான, எங்கள் குரல்களை உரத்து ஒலிக்கச்செய்யும் தளங்களை கண்டுகொள்ளலாம். வரலாற்றின் மீள்வாசிப்பில் அது புதிய தளத்தை தருகின்றதா என்று ஆராய்வது அவசியமாகின்றது. இங்கே வரலாற்று மீள்வாசிப்பின் ஒரு அங்கமாக படைப்புக்களினூடான கருத்துருவாக்கம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டிருக்கின்றதை என்பதை நோக்கலாம்.

“கருத்துக்களுக்கு இருப்புண்டு. திண்ணியமான பொருளிய வாழ்வுண்டு. கருத்துக்கள் மனித பண்பாட்டு உலகிலிருந்து பிறப்பெடுக்கின்றன. அவை மனிதர்களைப் பற்றிக் கொள்கின்றன. கருத்துக்களுக்கு அபார சக்தியுண்டு. அவை மனிதர்களைப் பற்றிக் கொண்டு அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தியுடையனவாக இயங்குகின்றன” என்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் “விடுதலை” நூலின் குறிப்பின் ஊடாக, கருத்துக்களின் உளவியல் வன்மையை விளக்குகிறார். அத்தகைய வன்மையான கருத்துருவாக்கங்கள் அரசினை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்கங்கள், சமூகக் கருத்துருவாக்கங்கள் என வகைப்படுத்தப்படலாம்.

அரசு சார்ந்த கருத்துருவாக்கங்கள் எனப்படும்போது, அவை நேர்மறையானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம். மக்களை அரசு மயப்படுத்தல் என்பது அவர்களுடைய சிந்தனைத்தளத்தினை அரசுசார்ந்த கொள்கைகளுடையதாக இயைபாக்கம் செய்வித்தலாகும். அன்று ஆள்பவர்களின் தேவைகளும் விருப்பங்களும் எவ்வாறு எடுத்துச்செல்லப்பட்டன? என்ற கேள்வியை முன்னிறுத்தி நோக்குவோமாயின், இன்றைய அரசுகளின் கருத்துருவாக்கங்களுக்கான உத்திகளையும் அறிய முடியும்.

அரசியலை அடித்தளமாகக் கொண்ட வாழ்க்கை முறையிலிருந்த சங்ககால தமிழர்களின் படைப்புக்களும் வீரத்தைப் பாடும்போதும் சரி, மறத்தைப் பாடும்போதும் சரி உள்ளார்ந்த அரசியல் தளத்தில் நின்றே பேசியிருக்கின்றன. அரசியலை பரப்பவும், படிக்கவும், அறிந்துகொள்ளவும் ஆட்சிபீடத்திலிருப்பவர்களுக்கே உரிமை இருந்திருக்கின்றது. அதிகாரம் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருந்திருக்கின்றது. அன்றைய ஆட்சி அதிகார வலுக்களின் நீட்சிதான் இன்றைய அதிகார சிந்தனைகளும். ஆனால் மக்களை ஆள்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் மக்கள் எவ்வாறான அரசனை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் படைப்பு வெளி பகிர்ந்திருக்கின்றது. உதாரணமாக,

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே

 மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால்

யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு

தானே வேந்தர்க்குக் கடனே.” (புறம். 186)

அதாவது, பரந்த இடத்தைக் கொண்ட உலகம், வேந்தனாகிய உயிரைக் கொண்டுள்ளது.

அதனால் இந்த உலகத்தாருக்கு நெல்லும் உயிரன்று! நீரும் உயிரன்று! வேலால் மிகுந்த படையையுடைய அரசனுக்கு இவ்வுலகிற்கு தானே உயிர் என்பதை அறிந்து அதற்கேற்ப மக்கள் நலனில் ஆர்வமுடையவனாக  இருத்தல் கடமையாகும்.

வெளிப்படையாக நோக்கின் மன்னன் புகழ் பாடுவதாக அமைந்திருப்பினும் அதிகாரத்திடமிருந்து மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்ற கருத்தினை பூடகமாக பதிந்திருக்கிறார்கள். மன்னன்  தன் கடமையை செய்தால் அவன் மக்களின் உயிராவான் என்ற நிபந்தனையின் வழியிலான கருத்தாக்கம் முன்வைக்கப்படுகி;றது.

       அவ்வாறு மக்களை காக்கும் மன்னன் மக்களுடைய அன்னைக்கு நிகராக போற்றப்படுவான் எனவும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை. அவ்வாறு அவன் தன் ஆட்சியினின்று தவறின், நீங்காத நகரத்தினை அடைவாய் என எச்சரிக்கையும் விடுகின்றனர். அதனை பின்வரும் புறப்பாடலினூடாக நோக்கலாம்.

அருளும் அன்பும் நீங்கி நீங்கா

 நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி. (புறம்-5)

அருளும் அன்பும் இல்லாதவராய் நீங்காத நரகத்தை அடைபவர் வழியிலே செல்லாமல், குழந்தையைக்காக்கும் தாயரைப்போல நாட்டினுடைய காவல் கடமை புரிவாயாக என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகின்றது.

இயற்கையோடிணைந்த மக்களுடைய வாழ்வின் இயக்கத்திலே சிறு இடையூறு நேர்ந்தாலும் அதற்கு மன்னனுடைய அறம் பிறழ்ந்த ஆட்சியே என்று தூற்றுவார்கள் என்று மன்னன் அறிந்திருந்தான். இறைவன் எனப் போற்றினாலும் இயற்கை பொய்த்தால் கூட அது மன்னனி;ன் ஆட்சிக்குறையே என்ற கருத்தியலை வைத்திருந்தார்கள். அதனை,

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம் (புறம்-35)

என்ற புறநானூற்று படைப்பினூடாக நோக்கலாம். மழை பெய்தாலும், பெய்யத்தவறினாலும், விளைச்சல் குறைந்தாலும், இயல்புக்கு மாறானவை எது நடந்தாலும் மன்னனின் ஆட்சி சரியில்லாது போனதால் தான் நடந்தது என்று மக்கள் பழியுரைத்திருக்கிறார்கள்.

போரும் வாழ்வுமாக இருந்த அக்காலத்தில் போரின் விதிமுறைகளையும் படைப்புக்கள் பேசத் தவறவில்லை. அக்காலத்தின் நெறிமுறைகளின் பதிவுகளாக படைப்புக்களை நோக்கின், போர் மற்றும் அதன் முறைமைகள் தொடர்பான ஒரு பொதுக் கருத்தாக்கம் மன்னர்களிடையே இருந்திருக்க வேண்டும். தொடர்பாடல் முறைகள் தூரப்பட்டிருந்தபோதிலும் கூட, அவை இலக்கியங்கள் வழியாகவே பரப்பப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம். போர் முறைகளை,

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

 தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என

அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ, வாழிய குடுமி!” (புறநானூறு: 09)

அதாவது, பசுக்களும், பசுவை போன்ற குணமுடைய அந்தணர்களும், பெண்களும், நோயுற்றவர்களும், பிதிர்க்கடன் ஆற்ற ஆண்குழந்தை இல்லாதவர்களும் கேளுங்கள். என்னுடைய அம்புகள் விரைவாக பாய உள்ளன. அதனால் பாதுகாப்பான இடத்துக்கு போய்விடுங்கள் என்று அறிவுறுத்திப் போர் புரியும் அறநெறியாளனாம் எம்முடைய வேந்தனாகிய குடுமி என்று பொருள் படுகிறது இப்பாடல்.

அதே புலவர் அழிவுகளை ஏற்படுத்திய மன்னரை இடித்துரைக்கவும் தவறவில்லை. அதிகாரம் முழுமையாக மன்னனுடைய செங்கோலில் இருந்தபோதிலும், குறியீடுகள் மூலமாக ஆட்சியின் குறைகளை மன்னருக்கு உணர்த்த தவறவில்லை மக்கள்.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்

பாழ்செய்தனை அவர் நனந்தலை நல்லெயில்

புள்ளினமிமிழும் புகழ்சால் விளைவயல்”   புறநானூறு: 15

பெருமானே! பகைவருடைய நல்ல கோட்டைகள் சூழ்ந்த அகன்ற தெருக்களை கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தாய். நெற்பயிர்கள் விளைந்துள்ள வயல்களில் தேர்களைச் செலுத்தி அழித்தாய். அவர்களின் காவல் மிகுந்த நீர்த்துறைகளில் உனது யானைகளை நீராட்டி அழித்தாய் என்று அம்மன்னன் சிற்றூர்களில் போர் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் குறித்து வருந்திக் கூறினார்..

போரின் எதிர்விளைவுகளைப் பற்றி வருந்திய புலவர்கள் தமது பாடல்களினூடாக, போர் அற்றிருத்தல் என்னும் கருத்தாக்கத்தினை மன்னனிடத்தே ஏற்படுத்த முயல்கின்றனர். போரும் வாழ்வுமென இருக்கும் மன்னனிடம் நேரடியாக போர் செய்யாதே என கூறமுடியாது. வஞ்சப் புகழ்ச்சி என்னும் கவிதை கருத்தியல் நுட்பத்தினூடாக மன்னனுக்கு உண்மையை உணர்த்துகிறார். அந்த பாடல் வருமாறு:

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில்!” புறநானூறு: 93

அதாவது, இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் இரகாலும் அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாக இருக்கிறது. ஆனால் அதியமானின் படைக்கலத்தில் இந்த மாதிரி எல்லாம் காட்சி இல்லை. அவன் ஆயுதங்கள் எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்கள் உடம்பிலிருந்த சதைகள் எல்லாம் ஆயுதங்களில் ஒட்டி கூர் மங்கி போய் கொல்லனிடத்தில் சரி செய்யவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறியதனால் பெரும் போர் தடுக்கப்பட்டிருந்தது. மறைமுகமாக மன்னனுடைய மனத்தில் நீ போர் செய்தாயானால் தோற்கடிக்கப்படுவாய் என்ற கருத்தூட்டத்தினை புலவர் தன் வரிகளினூடாக நிகழ்த்திவிட்டார்.

       அரசு அறநெறியில் இருக்கவேண்டும் என்பது பழந்தமிழர்களின் கோட்பாடாக இருந்தது. வெற்றி மிதப்பில் இருக்கும் மன்னன் தனது வெற்றிச் செருக்கை மக்களிடம் அதிகாரம் மூலம் காட்ட முயலுவான்.  படைப்பலத்தால் மக்களை அடக்க நினைப்பவனுடைய கொற்றம் நல்லதல்ல என்ற செய்தியை நேரடியாகவே மன்னனிடம் சொன்னதை பதிந்திருக்கின்றார்கள். உதாரணமாக,

கடுஞ்சினத்தக் கொல் களிறும் கதழ்பரிய கலிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன் மறவரும் என

நான்குடன் மாண்ட தாயிரு மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புறம்-55)

என்ற பாடலினைக் குறிப்பிட லாம். அதாவது அரசாட்சியின் வெற்றி என்பது படை பலத்தில் இல்லை. தன் படை பலத்தாலோ அல்லது ஆணவச்செருக்காலோ, தன்னைச் சார்ந்தும் தனக்குக் கீழ்க் கட்டுப்பட்டு நடப்பவர்களையும் அடிமைப்படுத்தி ஆள நினைப்பது மற்றும், துன்புறுத்த நினைப்பது நல்லரசாகாது. அஃது அறமுமாகாது என்று எக்காலத்துக்கும் பொருந்திவரும் கருத்தியலை தன்னகத்தே கொண்டிருக்கின்றது புறம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றனாரின் உலக பொதுமையாக்கல் கருத்தாக்கமானது, இன்று வரைக்கும் பொருந்திப்போகுமொன்றாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்த கருத்துருவாக்கம் எழுந்த காரணம் தொடர்பான கேள்வியினை எழுப்புவோமாக இருப்பின், ஒன்றுபட்டிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பில் இந்த கருத்துருவாக்கம் இடம்பெற்றிருக்க சாத்தியமில்லை. மாறாக, பிளவுபட்டிருந்த சமூகங்களை ஏதோ ஒரு தளத்தில் ஒன்றிணைப்பதற்காக இந்த சமுதாயப் பொதுமையாக்கல் கருத்தாக்கம் எழுந்திருக்கலாம். தமிழர்கள் தம்மிடையே பிளவுபட்டிருந்த காலத்தில், பிற இனத்தவரின் முற்றுகையை முறியடிப்பதற்காக தமிழர்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதான இந்தக் கருத்தாக்கம் குறிப்பிடத்தக்கதொன்றாகும். தமிழர்கள் தமக்குள் போரிட்டபோது நேரடியாகவும் தடுத்திருக்கிறார்கள். சோழ மன்னர்கள் இருவருக்கிடையே போர் மூண்டபோது, இருவரில் யார் தோற்றாலும் அது சோழர் குலத்துக்கான தோல்வியே என்று இரு மன்னர்களிடையேயும் தமது கருத்தை எடுத்துரைக்கிறார் புலவர்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே புறநானூறு: 45

அதாவது, இங்கு போர் செய்பவர்களில் யாரும் பனந்தோட்டால் ஆன மாலையை (சேரர்களுக்கான மாலை) யாரும் அணியவில்லை. கரிய வேப்பம்பூ மாலையை (பாண்டியர்களுக்கான மாலை) யாரும் அணியவில்லை. உன்னுடைய மாலை அத்திப்பூவால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் அத்திப்பூவால் தொடுக்கப்பட்டது தான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடி தான். இப்போரில் நீங்கள் வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம். ஆதலால் உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தான் இழுக்கு. இந்தப் போரைப்பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரிப்பார்கள் என்று கோவூர் கிழார் கூறிய கருத்தின் ஆழத்தை அறிந்த நெடுங்கிள்ளி நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் என்கிறது வரலாறு.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பொற்காலமே சங்ககாலம் என பொதுவாகக் கூறப்படினும், சமூகக் கட்டமைப்புக்களில் ஏற்றத்தாழ்வுகளும் பொருண்மியத்தை மையப்படுத்திய வர்க்க வேறுபாடுகளும் நிறைந்திருக்கின்றன. மன்னரை ஏற்றிப் பாடும் புலவர்கள் தவிர, ஏனையோர் வறுமையில் வாடியிருக்கிறார்கள்.  அவர்கள் அரசுக்கு எதிரான கருத்தாக்கங்களையும் தமது வறுமை நிலைகளையும் வஞ்சப்புகழ்ச்சி என்ற மறைப்பினுள் நின்றுகொண்டு பேசியிருக்கிறார்கள். இதிலிருந்து, சில மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் மக்களால் தம்முடைய குறைகளை வெளியில் சொல்ல முடியாதிருந்திருக்கிறது எனவும், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதால் அவர்கள் மாற்று மொழியியல் வடிவமொன்றை கைக்கொண்டார்கள் என்றும் ஊகிக்கலாம்.

படைப்பாக்கத் தளங்கள் மக்களின் உளவியல் கட்டமைப்பில் இலகுவில் புகுந்துவிடக்கூடியன. அந்த உத்தியினை அரச நிறுவனங்களும் சமூகக் கட்டமைப்புக்களும் தமது கருத்தாக்கங்களுக்காக படைப்புக்களை பயன்படுத்தியிருக்கின்றன.  சங்ககாலத்தைப் பொறுத்தவரையில் தாய்த்தொன்மங்களின் சிறப்புக்கள் கூறப்பட்டிருப்பினும் கூட,  ஆண்மையவாத கருத்தாக்கங்களே ஊட்டப்பட்டிருந்தன. ஆண்மையத்தன்மையானது அரசு மையத்துடன் இணைந்ததாகவும், தாய்த்தொன்மமானது வீரத்தினை ஆராதிக்கும் படிமங்களாகவும் காட்டப்பட்டிருக்கின்றன. போரின் இயங்கியலில் அரச அச்சாணி சுற்றிக்கொண்டிருந்த அக்காலத்தில், போர்வீரர்களின் தேவை மிக அதிகமாக இருந்திருக்கும். போரிற்கு போகும் ஆண்களை விட, வீட்டிலிருக்கும் பெண்களை வீரம் சார்ந்த அரசியல்மயப்படுத்தலுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை ஆள்பவரிடம் இருந்திருக்கிறது. ஏற்கனவே, இருந்த வீரம்சார் கருத்தாக்கங்களை பெண்களுக்குள் ஏற்றி, மகனை வெற்றித் திலகமிட்டு, போரிற்கு அனுப்புகின்ற அளவுக்கு அவர்களை அரசுமயமாக்கம் செய்திருந்தார்கள். இதற்கு ஆதாரமாக பல பாடல்களை நாம் புறநானூற்றில் காணமுடியும். உதாரணமாக,

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்

யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;

இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்

பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279)

இவளது சிந்தை கெடுக (வாழ்க எனப் பொருள்);  இவள் பெண்களில் சிறந்தவள், இவளது துணிவு மிகவும் கடுமையானது. வீரப் பரம்பரையில் வந்த  பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். நேற்று முன்தினம்  இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப் போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவிஇ சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள் என்று வீரத்தாய் போற்றப்படுகிறாள்.

இதனூடாக தாய்மாரின் உள்ளங்களில் போரில் மடியும் வீரனைப் பெறுதலே கடமையாகின்றது என்ற கருத்துருவாக்கம் ஏற்றப்படுகின்றது. மகனைப் போரில்  இழத்தலென்பது துன்பத்திற்குரிதல்ல என்று அவனது தாய் நம்பவைக்கப்படுவதற்கான கருத்தாக்கமாகவும் இதனை கருதலாம். போரிற்கு போய்வா என்று மகனை அனுப்பும்போது போரிற்கு போகக் கூடியதாக அவனது உளவியலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆயுதங்களை இழந்த நிலையில் கூட, தன் வீரத்தின் பண்பில் சிறிதளவும் ஐயம் கொள்ளாது, எதிரியை நேருக்கு நேர் எதிர்கொள்வதே வீரம். இதனை

படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம் (புறத். 17).

என்பர் தொல்காப்பியர் . அதாவது  கைப்படையைப் போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கம் என்பது பொருள் ஆகும். அவ்வாறு  போர் செய்து அவன் போர்க்களத்தில் இறந்துவிட்டானாயின் அவன் மாவீரனாகப் புகழ் பெறுவான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது ஏம எருமை என்று தொல்காப்பியம் சுட்டுகிறது.

கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி

நெடுங்கைப் பிணத்திடை நின்றான்நடுங்கமருள்

ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி

வாள்வெள்ளந் தன்மேல் வர (புறப்பொருள் வெண்பா மாலை)

தனது யானை கண்முன்னே இறந்து கிடக்கவும், படைகள் வெள்ளம் திரும்பி போகவும் எதிரிப்படையினது வாள்கள் வெள்ளம் போல தன்னை நோக்கி வந்ததைக் கண்ணுற்ற போதும் தனது கையிலிருக்கும் வேலை ஊன்றி எழுந்து நின்றான் வீரன் என்று வீரத்தின் உச்சத்தை சொல்லிச் சென்றது புறம்.

இவ்வாறாக, வீரமும் வீரன் சார்ந்த கருத்தாக்கங்களும் படைப்புக்களினூடாக பொதுவெளிக்கு கொண்டுசெல்லப்படும்போது, போரிற்கான படைபலத்தையும், எதிரியை எதிர்த்து நிற்கவேண்டிய மனபலத்தையும் அவை உருவாக்கும்.

       பெண்சார்ந்தும் அவளது இல்லற வாழ்வியல் சார்ந்தும் பெண்மொழி சார்ந்தும் ஆண்மையக் கருத்தாக்கங்கள் நிறைந்ததாக சங்ககாலம் காணப்படுகின்றது. நிலம், உடல், மொழி, மனம் போன்ற அனைத்துமே ஆண் சமூகத்தினை மையப்படுத்தியவையாகவே காணப்பட்டன.  உடன் கட்டை ஏறுதல் எனும் வழக்கம் முதல் கற்பு என்ற ஒழுக்கம் சார்ந்த முத்திரைகுற்றுதல் வரை பெண்ணின் வாழ்வியல் வரையறுக்குட்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஒழுக்கக்கோவைகள் பெரும்பாலும் படைப்புக்களினூடாகவே காவப்பட்டிருக்கின்றன. பெண்ணடிமைத்தனம் இருந்தது என்பதை எதுவித தடங்கல்களுமின்றி அதனை பதிவாக்குமளவுக்கு மொழியும் ஆண்மயமானதாக இருந்திருக்கின்றது. ஆனால் பெண் எழுத்தாளர்களும் அந்த ஆண்மையத்தினுள் நின்று நிலைத்திருக்கிறார்கள் என்பதையும் இங்கே பதிவுசெய்தல் அவசியமாகின்றது.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்

கண்ணித் தடுத்த தண்ணறும் பந்தர்க்

 கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி…… (புறம் 250)

 செல்வம் நிரம்பியிருந்த அழகிய நகரே! தீம்பால் வேண்டியழும் பருவத்தாராகிய புதல்வர், தம் தந்தை தனித்துச் சென்றுவிட்ட புறங்காட்டிற்கு வான்சோறு கொண்டு அடைந்தனர். இரவலரை அடிசிலால் தடுத்து நிறுத்திய வாயிலையும், இரவலரின் கண்ணிரைத் தடுத்து அருளிய பந்தரையும் உடைய மனையே! மயிரைக் கொய்து, வளையல்களைக் களைந்து, அல்லியரிசி உணவு உண்ணும் அவன் மனையாளைப் போல, நீயும் அவனில்லாதே பொலி வழிந்து விட்டனையே! என்று கூறுவதனூடாகää வெளிப்படையாக நாட்டின் நிலை கூறப்பட்டாலும், அதனுள் கைம்பெண் எவ்வாறு இருந்தாள் என்று கூறப்படுகின்றது. படைப்புக்கள் வரலாறுகளைப் பதிவு செய்யும் அதேவேளை, அந்த வரலாற்றுத் தொடர்ச்சிக்காகவும் சில கருத்தாக்கங்கள் உட்புகுத்தப்படும். அந்தவகையில் இவ்வாறான பெண் வாழ்வியலைக் கூறும் பாடல்களினூடாக, பெண் சமூகத்தின் வாழ்வியல் கட்டமைக்கப்படுகின்றது.

கணவனை இழந்த பெண் தன் மிகுதி வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்ற சமூகக் கருத்தாக்கம் பெண்குரலை ஒடுக்கியபோதிலும். படைப்புக்களின் உள்ளே உள்ளார்ந்து கலகக்குரல் ஒலிக்கும் வகையில் படைப்புக்கள் பாடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக,

மன்னன் பூதபாண்டியன் மாண்டு போகின்றான். மனைவி பெருங்கோப் பெண்டு, அவன் எரியுண்ட ஈமத்தீயில் தானும் விழுந்து சாக முனைகிறாள். அருகே இருந்த சான்றோர் தடுக்கின்றனர். அதனை மறுத்து, பல்சான்றீரே பல் சான்றீரே….. பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே..’ என்று விளித்து அவள் பேசுகிறாள்!

அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி யாகப்

பரல்பெய் பள்ளிப்பா யின்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ (…எமக்கு)

நள்ளிரும் பொய்கையும், தீயும் ஓரற்றே.”  (புறம். 246)

பெண்ணின் கற்பின் புகழினைக் கூறுவதாக வெளிப்படையாகக் கருதப்பட்டாலும், “உயவற் பெண்டிரேம் அல்லேம்” என்று குமுறுவது அதாவது கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிர் என்று பெண்மனத்தின் கலகக் குரலாக நோக்க முடியும்.

சங்ககாலத்தின் பிற்பகுதியில் மன்னர்கள் தமக்குள்ளே முரண்பட தொடங்கியிருந்தனர்.இந்த போக்கிலிருந்து மக்களை மீட்டெடுத்து, தேசியம் பற்றிய கருத்தாக்கத்தினை முன்னிறுத்தி எழுந்த காப்பியமாக சிலப்பதிகாரத்தினைக் குறிப்பிடலாம். சிலப்பதிகாரம் கண்ணகியினுடைய சிலம்பின் கதையைக் கூறும் காப்பியம் என மேலெழுந்தவாரியான கருத்துரைகளைச் கூறிச்செல்வார்கள். ஆனால், அதன் உள்ளடக்கத்தில் மதம் என்ற மாயக் கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், தேசியம் சார்ந்த கருத்தாக்கங்களும் விரவிக்கிடக்கின்றன. சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் மொழியின் அழகியலையும் தாண்டி, மொழியின் படைப்புத்தளத்தில் எவ்வாறு அரசியல் கருத்தூட்டத்தினை செய்வது என்பதற்குரிய சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசியல் துறவியாகிய இளங்கோவடிகள் கண்ணகி என்னும் தொன்மத்தின் கதைசொல்லலினூடாக ஒரு பேரரசொன்றின் உருவாக்கச் சித்தாந்தங்களை அதனுள் புகுத்துகிறார். பன்முகநிலைகொண்ட சமூகப்பரப்பை ஒற்றைப் பரப்பினுள் கொண்டுவருதல் எனும் பேரரசுத் தத்துவத்தினை உட்கட்டுமானமாகக் கொண்டு சிலப்பதிகாரம் எனும் படைப்பினூடாக ஏற்படுத்தினார்கள். பல அரசுகளின் சேர்க்கையல்ல பேரரசு. மாறாக, பல அரசுகளின் சேர்க்கைகளை ஒரு ஒற்றைப் பண்பாட்டு, பொருளாதார, சமூக ஒருங்கிணைப்பாக ஆக்குதலே பேரரசு என்கிறது சிலப்பதிகாரம். தமிழ் – தமிழர் – தமிழர் நாடு   என்ற தேசியக் கருத்தாக்கத்தை பதிந்திருக்கிறது. மதங்களுக்கிடையேயான சிக்கல்கள் இருந்தகாலத்தில் அனைத்து சமய நிகழ்வுகளையும் தன்னுள்ளே கொண்டிருந்திருக்கிறது. இந்திரவிழாவினை மதங்கள் தாண்டிய ஒரு தேசிய விழாவாக சித்தரித்திருப்பதையும் கூறலாம். மிகப்பெரும் சரிவொன்றை தமிழினம் சந்திக்கவிருக்கின்றதென்ற இளங்கோவடிகளின் எதிர்வுகூறல் பொய்த்துப்போகவில்லை. அந்த வீழ்ச்சியிலிருந்து தமிழினத்தையும் மொழியையும் காப்பதற்கான கருவியாகவே சிலம்பை படைத்திருக்கிறார். மதத்தினால் மனிதர்கள் மோதப்போகிறார்கள் என்பதை உணர்ந்தோ என்னவோ, கண்ணகி என்னும் பத்தினித்தெய்வத்தை தேசியம் சார்ந்த தெய்வமாக கருத்தாக்கம் செய்திருக்கிறார். மதங்களின் பிடியில் கட்டுண்டு கிடந்த தமிழர்களை அவர்களது நாடு, நிலம், எல்லை, மொழி என்ற விரையறைகளைக் கூறிää தமிழ்த்தேசிய உணர்வை விதைத்தது சிலப்பதிகாரம்.

சேர சோழ பாண்டிய நாடுகள் என தமக்குள்ளே எல்லைகளால் பிரிந்து கிடந்த தமிழர்களிடம், அந்த எல்லைகள் எல்லாம் தற்காலிகமானவை: தமிழ்நாடு என்பதே நிரந்தரமானதென்று கூறுகிறார் இளங்கோ.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்

முதுநீ ருலகில் முழுவது மில்லை

இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது

கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்

வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்

தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி

மண்டலை யேற்ற வரைக வீங்கென

என்று தனித்தமிழ்நாட்டினை கைக்கொள்ளும் எண்ணத்தைச் சுட்டியிருக்கின்றது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்

சிலப்பதி காரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்

நூலின் பதிகத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட கருப்பொருட்களின் யதார்த்தம் இன்றும் தொடர்ந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சிலப்பதிகாரத்தினை எடுத்தாளும் அளவுக்கு மணிமேகலையோ சீவக சிந்தாமணியோ எடுத்தாளப்படுவதில்லை. மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் சமயம் சார் கருத்துருவாக்கங்களை முதன்மையாகக் கொண்டு எழுந்திருக்கின்றன. ஆனால் சிலம்பு மத நல்லிணக்கத்தைப் பேசும் அதே வேறை தேசியத்தினை பேசுபொருளாகக் கொண்டுள்ளமையே அதற்கான காரணமாகும். மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய கருத்துக்களுடன் அவர்களுக்கான காப்பியமாக இருப்பதும் ஒரு காரணமாகும். சிலப்பதிகார காலத்திற்கு பின்வந்த பல்லவர் காலத்தில் பண்பாடு சார்ந்த மடைமாற்றங்களும் புகுத்தப்பட்டன. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சமண பௌத்த மதங்களுக்கும், சைவ வைணவ மதங்களுக்குமிடையிலான போட்டியில் மொழிசார்ந்ததும், அந்த பண்பாடு சார்ந்ததுமான கருத்தாக்கங்கள் இலக்கியங்களுக்கூடாக பரப்பப்பட்டன.  அந்த கருத்தாக்கங்களின் வாயிலாக  பல சமண பௌத்த இலக்கியங்கள் அழித்தொழிக்கப்பட்டு, தமிழின் இலக்கியங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார் போன்ற படைப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு பக்திப் பனுவல்களும் அது சார்ந்த படைப்புக்களும் உச்சம் பெற்றன. பக்தி சார்ந்த விடயங்களைப் பாடுதலே சிறந்தது என்ற விடயம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. மதம் சார்ந்த கருத்தாக்கங்களினால் மன்னர்கள் தமக்கிடையில் முரண்பட்டார்கள். மன்னர்களின் மதமே அந்நாட்டின் தேசிய மதமாக கருதப்படும் வழக்கம் இருந்துவருகின்றது. சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்த மக்களை சைவர்களாக்கும் முயற்சியில் பல்லவர்கள் இறங்கினார்கள். ஆனால் அவர்களால் பண்பாட்டுடன் இணைந்திருந்த சடங்குமுறை வாழ்வியலுடன் வெல்ல முடியவில்லை. வரலாற்றில் மக்களுடைய புரட்சியும் இதிலேயே ஆரம்பித்தது. தமிழர்களின் தேசியக் கனவுக்கான போராட்டத்திற்கான கருத்தாக்கங்களுடன் தமிழ் படைப்பு வெளி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

எந்தவொரு கட்டுரையாளனையோ ஆய்வாளனையோ நோக்கின், அவர்கள் தாம் கூறவந்த கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு திருக்குறளில் கூறப்பட்டவாறு என்று திருவள்ளுவரைத் துணைக்கழைப்பது பொதுவானதாகக் காணப்படுகின்றது. அறம், பொருள், இன்பம் சார்ந்து வள்ளுவம் கூறுகின்ற கருத்தாக்கங்கள் உலகப் பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த ஏற்றுக்கொள்ளலில் வள்ளுவம் சொல்லும் கருத்தாக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற அர்த்தம் காணப்படுகின்றது. அந்த கருத்தாக்கங்கள் தமிழர்களின் பொது ஒழுக்கக்கோவையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. “கருத்துக்களைப் படைத்து, அந்தக் கருத்துக்களை வெகுசன அரங்கில் பரப்பிää சமூகக் கருத்தோட்டத்தை கட்டி வளர்த்து, சமூக சிந்தனைப் போக்கினை நெறிப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கருத்து உற்பத்தி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.” என்ற தேசத்தின் குரலின் பதிவு இங்கு நோக்கத்தக்கது.

       அழகியல்,அணியியல், மொழியியல் என்று அனைத்துக் கூறுகளையும் தனக்குள்ளே கொண்டிருக்கும் தமிழ் படைப்புக்கள் தமக்குள்ளே தமக்கான பேசுபொருட்களையும் கருத்தாக்கங்களையும் கொண்டிருக்கின்றன. இலக்கியம் மொழி அரசியல் கருத்துருவாக்கம் என்பவை ஒரே தளத்தில் நிகழ்ந்திருந்தமைக்குரிய பதிவுகள் படைப்புக்களில் செறிந்து கிடக்கின்றன. இவை அனைத்தையும் சமூக நடத்தையையும் சமூகத்தின் வாழ்வியல் விதிகளையும் உருவாக்கியிருக்கின்றன. சமூக முரண்பாடுகளினதும் போராட்டங்களினதும் தடயங்களாக இருக்கும் எழுத்துருக்களை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். எமக்குத் தேவையான கருத்துருவாக்கங்களை உருவாக்குவதற்கு, நாம் எமது தொன்மங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. அடையாள அரசியலும் தேசிய அரசியலும் மட்டுமல்லாது, மக்களின் வாழ்வியலும் விதிகளுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச இயந்திரத்தை ஒழுகியும் முரண்டும் எவ்வாறு ஒரு கருத்தாக்கத்தினை படைப்பது என்ற நுட்பங்கள் வரலாற்றில் இருக்கின்றன. இலக்கிய அழகியல் என்ற வெளிக்கு அப்பால் அரசியல் நீக்கமற்ற மீள்வாசிப்பினை நிகழ்த்துவோமாயின் பேரரசாக்கத்தின் கருத்துருவாக்க முறையியலைக் கூட கற்க முடியும்.

மக்கள் தம்மளவில் கருத்துச்சுதந்திரம் மற்றும் விடுதலையை நோக்கி செல்லவேண்டுமெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அரசியற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் அரசியலடைவது என்பது அவர்களுக்கான விடுதலையை நோக்கி அவர்களை இட்டுச்செல்லும் குறிகாட்டியாகும். ஆனால் மக்கள் அரசியலடைவதை விரும்பாத அரசு, அவர்களை அரச மயப்படுத்துவது சார்ந்த கருத்தாக்கங்களுக்குள் அவர்களை இட்டுச்செல்லும். பௌத்த சிங்கள நாடு என்னும் சிங்கள அரசின் கருத்தாக்கமானது சிங்கள மக்களை ஒரு கோட்டில் சிந்திக்கச் செய்திருக்கின்றது. தனி நாடு வேண்டி போராடுகின்ற தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை முயற்சிகளைத் தோற்கடிக்கும் பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் மாய கருத்துருவாக்கம் அது.

 தனிமனிதர்களை அரசியல் நீக்கம் செய்வதன் மூலம் அரசு சார்ந்த கருத்தாக்கங்களைச் செய்வதற்கான கருவிகளாக, மதம், கலை, இலக்கியங்கள் என்பவற்றை அரசு பயன்படுத்துகின்றது. அரசுசார்ந்த ஒரு உளவியல் கட்டமைப்பு என்ற நுண்ணிய பொறிமுறை மக்களை அரசின் அடிமைகளாக மாற்றுகின்றது.  இலக்கியப் பிரதிகள் அதனது அமைப்பாக்கம், மொழியியல், கருத்தியல் ரீதியாக வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஆனால், இன்று படைப்புக்களும் அவை சார்ந்த வாசிப்புக்களும் வெறும் கருத்துரைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இலக்கியங்களுக்குள் பொதிந்திருக்கும் சமூகக் கருத்துருவாக்கங்களும் கருத்துருவாக்கங்களுக்கிடையிலான மோதல்களும் மீள்வாசித்தலுக்கு உட்படுத்தப்படும் போதே, எமக்கான கருத்தாக்கங்களைச் செய்வதற்குரிய நுட்பங்களைக் கண்டுகொள்ள முடியும். படைப்புக்கள் எதுவாக இருப்பினும் விடுதலை குறித்த வேண்டுதல்களுடனேயே படைப்பு படைக்கப்படவேண்டும் . படைப்புக்கள் வாசிப்பிற்கு உட்படுத்தப்படும்போது அவற்றின் கருத்துருவாக்கத் தளத்தில் நின்று வாசிக்கப்படுதல் அவசியமானதாகின்றது. விடுதலை உணர்வு என்னும் தளத்திலிருந்தே அனைத்து இயக்கங்களும் அசைவதை எமது படைப்புக்கள் சார்ந்தும் வாசிப்புக்கள் சார்ந்தும் கருத்தாக்கங்களுக்கு உட்படுத்துவோமாயின் எமக்கான மாற்று ஊடகத்தினை உருவாக்கல் சாத்தியமாகும்.

 6,935 total views,  2 views today

(Visited 6 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply