படைப்புப் பிரதிகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – செல்வி

 தனியன் ஒவ்வொன்றினதும் வாழ்வியல் இயங்கியலானது கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த இயங்கியலின் அரசியலானது, ஒரு தனியனுக்கும் இன்னொரு தனியனுக்குமான ஊடாட்டத்தின் விளைபொருளாக மட்டுமல்லாது, தனியன் தன்னுடன் தான் ஊடாடுவதையும் குறிக்கும். அந்த வாழ்வரசியலுக்குள் உட்பட்டே ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டிருக்கிறான். மனிதனால் அறியப்படுகின்ற புற இயங்கியலின் பெரும்பாலான செயல்கள் நனவு மனத்தின் விளைவுகளாக காணப்படுகின்றன.  மக்களின் வாழ்வியலை, அதன் கட்டமைப்பினை, இயங்கியலினைத் தீர்மானிப்பவர்களாக ஆள்பவர்களே இருக்கிறார்கள். மரபுவழித் தேசிய இனமான தமிழர்கள் விடுதலைக்கான போரில், தோற்கடிக்கப்பட்ட சமூகமாக இருப்பதால் அதன் இருப்பினை தக்கவைப்பதற்கான தேவைகள் இருக்கும் அதேவேளை, இருப்பின் அடையாளங்கள் அரச இயந்திரங்களினால் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இருப்பினைத் தக்க வைக்கும் அதேவேளையில், பொய்மைக் கருத்தியல்களுக்கெதிராகவும் குரல்கொடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்.

உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரல்களும் மறுக்கப்பட்டிருப்பதினை அரச இயந்திரம் எப்போதுமே உறுதிசெய்துகொண்டிருக்கும். ஒடுக்கப்பட்ட இனங்கள் மீதான அரச பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்துவிடும் பேரினவாத வெறிக்கு எதிராக குரல்கொடுக்க முடியாதவர்களாக, குரலற்றவர்களாக இருக்கின்றோம். ஊடகங்களும் அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக செய்திகளை உருமாற்றம் செய்யும் அடிமைகளாக மாறியிருக்கின்றன.  ஊடகங்களை நடத்தமுடியாத குரலற்றவர்களும் அடக்கப்பட்டோரும் அடக்குமுறை அரசாங்கங்களினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் முகவரிகள் இல்லாமல் ஆக்கப்பட்டும் குரல்வளைகளில் துப்பாக்கி முனை நீண்டுகொண்டிருக்கின்றது. தணிக்கைப்பிரிவின் அதிகார வெறிக்குள் சிறுபான்மையினரின் முனகல்கள் கூட அடங்கிப்போய்விட வேண்டிய காலம் இது. அதிகாரத்தின் வேலிக்குள் மௌனமாகவே இருந்து, விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகளை வெறும் கற்பனைகளாக மாற்றிவிடுவதை விட எமக்கான மாற்று ஊடகம் நோக்கிய சிந்தனைகளை செலுத்தவேண்டும். ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற இலங்கை அரசின் மாய கருத்துருவாக்கத்தை, நுண்ணிய இனச்சிதைப்பாக்கத்தை பற்றிய புரிதல்களை மக்கள் மத்தியில் பரப்பவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் இருக்கும் எம்மால், பொதுவெளியில் பேசாப்பொருள்களை பேச விழைந்தால், காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியலில் இணைக்கப்பட்டுவிடுவோம் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

தணிக்கைப்பிரிவு, ஊடக சுதந்திரமின்மை என்ற தடைகளைக் கடந்து எமக்கான தளத்தினை தேடவேண்டும்.  நீண்டு பரந்த எம் வரலாற்றில் இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து வந்தோம் என்ற தேடுவோமாயின் நிச்சயமாக எமக்கான, எங்கள் குரல்களை உரத்து ஒலிக்கச்செய்யும் தளங்களை கண்டுகொள்ளலாம். வரலாற்றின் மீள்வாசிப்பில் அது புதிய தளத்தை தருகின்றதா என்று ஆராய்வது அவசியமாகின்றது. இங்கே வரலாற்று மீள்வாசிப்பின் ஒரு அங்கமாக படைப்புக்களினூடான கருத்துருவாக்கம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டிருக்கின்றதை என்பதை நோக்கலாம்.

“கருத்துக்களுக்கு இருப்புண்டு. திண்ணியமான பொருளிய வாழ்வுண்டு. கருத்துக்கள் மனித பண்பாட்டு உலகிலிருந்து பிறப்பெடுக்கின்றன. அவை மனிதர்களைப் பற்றிக் கொள்கின்றன. கருத்துக்களுக்கு அபார சக்தியுண்டு. அவை மனிதர்களைப் பற்றிக் கொண்டு அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தியுடையனவாக இயங்குகின்றன”

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் “விடுதலை” நூலின் குறிப்பின் ஊடாக, கருத்துக்களின் உளவியல் வன்மையை விளக்குகிறார். அத்தகைய வன்மையான கருத்துருவாக்கங்கள் அரசினை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்கங்கள்,  சமூகக் கருத்துருவாக்கங்கள் என வகைப்படுத்தப்படலாம்.

அரசு சார்ந்த கருத்துருவாக்கங்கள் எனப்படும்போது, அவை நேர்மறையானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம். மக்களை அரசு மயப்படுத்தல் என்பது அவர்களுடைய சிந்தனைத்தளத்தினை அரசுசார்ந்த கொள்கைகளுடையதாக இயைபாக்கம் செய்வித்தலாகும். அன்று ஆள்பவர்களின் தேவைகளும் விருப்பங்களும் எவ்வாறு எடுத்துச்செல்லப்பட்டன? என்ற கேள்வியை முன்னிறுத்தி நோக்குவோமாயின்,  இன்றைய அரசுகளின் கருத்துருவாக்கங்களுக்கான உத்திகளையும் அறிய முடியும்.

அரசியலை அடித்தளமாகக் கொண்ட வாழ்க்கை முறையிலிருந்த சங்ககால தமிழர்களின் படைப்புக்களும் வீரத்தைப் பாடும்போதும் சரி, மறத்தைப் பாடும்போதும் சரி உள்ளார்ந்த அரசியல் தளத்தில் நின்றே பேசியிருக்கின்றன. அரசியலை பரப்பவும், படிக்கவும், அறிந்துகொள்ளவும் ஆட்சிபீடத்திலிருப்பவர்களுக்கே உரிமை இருக்கின்றது. ஆட்சியாளர்கள் அரசியலை செய்ய மற்றவர்கள் அதற்கு அடிமையாக இருக்கவேண்டும். மக்களையும் அரசன் தெய்வத்திற்கு நிகரானவன் என்று நினைக்கவைத்து, மக்களை அரச வயப்படும் ஓர் உளவியலுக்குள் வைத்திருப்பதை, அவைக்களப் புலவர்கள் மூலம் அரசர்கள் நிறைவேற்றினார்கள். அவனுடைய போர்க்குற்றங்கள் வீரம் எனும் சொல்லினுள் அடிபட்டுப் போயின. எதிரி நாட்டை அடியோடு சிதைத்தபோதும்ää அழிந்தவர்கள் ஒரே மொழியினைப் பேசுபவர்களாக இருந்த போதிலும் வெற்றிப் பரணிகளால், மக்களின் இழப்புக்கள் மறைக்கப்பட்டன. ஆயினும் புலவர்கள் கவி என்னும் படிம எழுத்தினால், மக்களின் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள்.

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே

 மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால்

 ‘யான் உயிர்” என்பது அறிகை வேல்மிகு

தானே வேந்தர்க்குக் கடனே.” (புறம். 186)

நாடு அக்காலத்து அரசரால் ஆளப்பெற்றது. அன்று குடியாட்சி இல்லை; எங்கும் முடியாட்சி சிறந்துதான் விளங் கிற்று. முடியாட்சி என்றாலும் மன்னன் தன்னிச்சையாகச் சர்வாதிகாரம் செலுத்தவில்லை; மக்களைத் தழுவியே தன் ஆட்சியை நடத்தினான். அதிலும், அறிஞர் வாய்மொழிப்படி நாட்டில் நல்லன ஆற்றினன். அவன் தன்னை உயிராகவும் உலகை உடலாகவும் ஒம்பிக் காத்தான். இதைத்தான் மோசிகீரனர் என்னும் புலவர் கூறுகிறார்.

போரும் வாழ்வுமாக இருந்த அக்காலத்தில் போரின் விதிமுறைகளையும் படைப்புக்கள் பேசத் தவறவில்லை. அக்காலத்தின் நெறிமுறைகளின் பதிவுகளாக படைப்புக்களை நோக்கின், போர் மற்றும் அதன் முறைமைகள் தொடர்பான ஒரு பொதுக் கருத்தாக்கம் மன்னர்களிடையே இருந்திருக்க வேண்டும். தொடர்பாடல் முறைகள் தூரப்பட்டிருந்தபோதிலும் கூட, அவை இலக்கியங்கள் வழியாகவே பரப்பப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம். போர் முறைகளை,

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

      பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

      தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

      பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

      எம்அம்பு கடிவிடுதும்,  நுன்அரண் சேர்மின்’ என

      அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

       கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

        எங்கோ, வாழிய குடுமி!”  (புறநானூறு: 09)

அதாவது, பசுக்களும், பசுவை போன்ற குணமுடைய அந்தணர்களும், பெண்களும், நோயுற்றவர்களும், பிதிர்க்கடன் ஆற்ற ஆண்குழந்தை இல்லாதவர்களும் கேளுங்கள்.. என்னுடைய அம்புகள் விரைவாக பாய உள்ளன. அதனால் பாதுகாப்பான இடத்துக்கு போய்விடுங்கள் என்று அறிவுறுத்திப் போர் புரியும் அறநெறியாளனாம் எம்முடைய வேந்தனாகிய குடுமி என்று பொருள் படுகிறது இப்பாடல்.

அதே புலவர் அழிவுகளை ஏற்படுத்திய மன்னரை இடித்துரைக்கவும் தவறவில்லை. அதிகாரம் முழுமையாக மன்னனுடைய செங்கோலில் இருந்தபோதிலும், குறியீடுகள் மூலமாக ஆட்சியின் குறைகளை மன்னருக்கு உணர்த்த தவறவில்லை மக்கள்.

  “கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்

பாழ்செய்தனை அவர் நனந்தலை நல்லெயில்,

புள்ளினமிமிழும் புகழ்சால் விளைவயல்……. –    புறநானூறு: 15

பெருமானே! பகைவருடைய நல்ல கோட்டைகள் சூழ்ந்த அகன்ற தெருக்களை கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தாய். நெற்பயிர்கள் விளைந்துள்ள வயல்களில் தேர்களைச் செலுத்தி அழித்தாய். அவர்களின் காவல் மிகுந்த நீர்த்துறைகளில் உனது யானைகளை நீராட்டி அழித்தாய் என்று அம்மன்னன் சிற்றூர்களில் போர் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் குறித்து வருந்திக் கூறினார்.

போரின் எதிர்விளைவுகளைப் பற்றி வருந்திய புலவர்கள் தமது பாடல்களினூடாக,  போர் அற்றிருத்தல் என்னும் கருத்தாக்கத்தினை மன்னனிடத்தே ஏற்படுத்த முயல்கின்றனர். போரும் வாழ்வுமென இருக்கும் மன்னனிடம் நேரடியாக போர் செய்யாதே என கூறமுடியாது. வஞ்சப் புகழ்ச்சி என்னும் கவிதை கருத்தியல் நுட்பத்தினூடாக மன்னனுக்கு உண்மையை உணர்த்துகிறார். அந்த பாடல் வருமாறு:

“இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

      …………………

      பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து

   கொல்துறைக் குற்றில்!”

                                   –    புறநானூறு: 93

அதாவது, இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் இறகாலும் அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாக இருக்கிறது. ஆனால் அதியமானின் படைக்கலத்தில் இந்த மாதிரி எல்லாம் காட்சி இல்லை. அவன் ஆயுதங்கள் எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்கள் உடம்பிலிருந்த சதைகள் எல்லாம் ஆயுதங்களில் ஒட்டி கூர் மங்கி போய் கொல்லனிடத்தில் சரி செய்யவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நுண்ணிய கருத்தியலினூடாக மன்னர்களுக்கிடையில் தேவையற்ற போர்களை தடுத்தனர்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்!” என்ற கணியன் பூங்குன்றனாரின் உலக பொதுமையாக்கல் கருத்தாக்கமானது, இன்று வரைக்கும் பொருந்திப்போகுமொன்றாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்த கருத்துருவாக்கம் எழுந்த காரணம் தொடர்பான கேள்வியினை எழுப்புவோமாக இருப்பின், ஒன்றுபட்டிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பில் இந்த கருத்துருவாக்கம் இடம்பெற்றிருக்க சாத்தியமில்லை. மாறாக, பிளவுபட்டிருந்த சமூகங்களை ஏதோ ஒரு தளத்தில் ஒன்றிணைப்பதற்காக இந்த சமுதாயப் பொதுமையாக்கல் கருத்தாக்கம் எழுந்திருக்கலாம். நிகழ்கால உதாரணமான “ஒரே தேசம்: ஒரே மக்கள்” என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் கருத்துருவாக்க முயற்சியினைக் கூறலாம். தனி நாடு வேண்டி போராடுகின்ற தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை முயற்சிகளைத் தோற்கடிக்கும் பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் மாய கருத்துருவாக்கம் அது. போர்க்குற்ற பொறுப்புக்கூறலிலிருந்து தன்னையும் அரசு சார்ந்தவர்களையும் உலக நாடுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்த கருத்துருவாக்கம் இன்றைய ஆட்சி மாற்றத்திலும் தொடர்ந்துகொண்டிருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது.  இந்த மாயையிலிருந்து எம்மினத்தை வெளிக்கொண்டுவரவேண்டிய தேவையும் எமக்கு இருக்கின்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பொற்காலமே சங்ககாலம் என பொதுவாகக் கூறப்படினும்,  சமூகக் கட்டமைப்புக்களில் ஏற்றத்தாழ்வுகளும் பொருண்மியத்தை மையப்படுத்திய வர்க்க வேறுபாடுகளும் நிறைந்திருக்கின்றன. மன்னரை ஏற்றிப் பாடும் புலவர்கள் தவிர, ஏனையோர் வறுமையில் வாடியிருக்கிறார்கள்.  அவர்கள் அரசுக்கு எதிரான கருத்தாக்கங்களையும் தமது வறுமை நிலைகளையும் வஞ்சப்புகழ்ச்சி என்ற மறைப்பினுள் நின்றுகொண்டு பேசியிருக்கிறார்கள். இதிலிருந்து, சில மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் மக்களால் தம்முடைய குறைகளை வெளியில் சொல்ல முடியாதிருந்திருக்கிறது எனவும், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதால் அவர்கள் மாற்று மொழியியல் வடிவமொன்றை கைக்கொண்டார்கள் என்றும் ஊகிக்கலாம்.

படைப்பாக்கத் தளங்கள் மக்களின் உளவியல் கட்டமைப்பில் இலகுவில் புகுந்துவிடக்கூடியன. அந்த உத்தியினை அரச நிறுவனங்களும் சமூகக் கட்டமைப்புக்களும் தமது கருத்தாக்கங்களுக்க படைப்புக்களை பயன்படுத்தியிருக்கின்றன.  சங்ககாலத்தைப் பொறுத்தவரையில் தாய்த்தொன்மங்களின் சிறப்புக்கள் கூறப்பட்டிருப்பினும் கூட, ஒரு ஆண்மையவாத கருத்தாக்கங்களே ஊட்டப்பட்டிருந்தன. ஆண்மையத்தன்மையானது அரசு மையத்துடன் இணைந்ததாகவும்,  தாய்த்தொன்மமானது வீரத்தினை ஆராதிக்கும் படிமங்களாகவும் காட்டப்பட்டிருக்கின்றன. போரின் இயங்கியலில் அரச அச்சாணி சுற்றிக்கொண்டிருந்த அக்காலத்தில், போர்வீரர்களின் தேவை மிக அதிகமாக இருந்திருக்கும். போரிற்கு போகும் ஆண்களை விட,  வீட்டிலிருக்கும் பெண்களை வீரம் சார்ந்த அரசியல்மயப்படுத்தலுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை ஆள்பவரிடம் இருந்திருக்கிறது. ஏற்கனவே, இருந்த வீரம்சார் கருத்தாக்கங்களை பெண்களுக்குள் ஏற்றி, மகனை வெற்றித் திலகமிட்டு, போரிற்கு அனுப்புகின்ற அளவுக்கு அவர்களை அரசுமயமாக்கம் செய்திருந்தார்கள். இதற்கு ஆதாரமாக பல பாடல்களை நாம் புறநானூற்றில் காணமுடியும்.

                பெண்சார்ந்தும் அவளது இல்லற வாழ்வியல் சார்ந்தும் பெண்மொழி சார்ந்தும் ஆண்மையக் கருத்தாக்கங்கள் நிறைந்ததாக சங்ககாலம் காணப்படுகின்றது. நிலம்,  உடல், மொழி, மனம் போன்ற அனைத்துமே ஆண் சமூகத்தினை மையப்படுத்தியவையாகவே காணப்பட்டன.  உடன் கட்டை ஏறுதல் எனும் வழக்கம் முதல் கற்பு என்ற ஒழுக்கம் சார்ந்த முத்திரைகுற்றுதல் வரை பெண்ணின் வாழ்வியல் வரையறுக்குட்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஒழுக்கக்கோவைகள் பெரும்பாலும் படைப்புக்களினூடாகவே காவப்பட்டிருக்கின்றன. பெண்ணடிமைத்தனம் இருந்தது என்பதை எதுவித தடங்கல்களுமின்றி அதனை பதிவாக்குமளவுக்கு மொழியும் ஆண்மயமானதாக இருந்திருக்கின்றது. ஆனால் பெண் எழுத்தாளர்களும் அந்த ஆண்மையத்தினுள் நின்று நிலைத்திருக்கிறார்கள் என்பதையும் இங்கே பதிவுசெய்தல் அவசியமாகின்றது.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயிற்இ புரவலர்

கண்ணித் தடுத்த தண்ணறும் பந்தர்க்

 கூந்தல் கொய்துஇ குறுந்தொடி நீக்கி…… (புறம் 250)

 செல்வம் நிரம்பியிருந்த அழகிய நகரே! தீம்பால் வேண்டியழும் பருவத்தாராகிய புதல்வர், தம் தந்தை தனித்துச் சென்றுவிட்ட புறங்காட்டிற்கு வான்சோறு கொண்டு அடைந்தனர். இரவலரை அடிசிலால் தடுத்து நிறுத்திய வாயிலையும், இரவலரின் கண்ணிரைத் தடுத்து அருளிய பந்தரையும் உடைய மனையே! மயிரைக் கொய்து, வளையல்களைக் களைந்து, அல்லியரிசி உணவு உண்ணும் அவன் மனையாளைப் போல, நீயும் அவனில்லாதே பொலி வழிந்து விட்டனையே! என்று கூறுவதனூடாக, வெளிப்படையாக நாட்டின் நிலை கூறப்பட்டாலும், அதனுள் கைம்பெண் எவ்வாறு இருந்தாள் என்று கூறப்படுகின்றது. படைப்புக்கள் வரலாறுகளைப் பதிவு செய்யும் அதேவேளை, அந்த வரலாற்றுத் தொடர்ச்சிக்காகவும் சில கருத்தாக்கங்கள் உட்புகுத்தப்படும். அந்தவகையில் இவ்வாறான பெண் வாழ்வியலைக் கூறும் பாடல்களினூடாக, பெண் சமூகத்தின் வாழ்வியல் கட்டமைக்கப்படுகின்றது.

கணவனை இழந்த பெண் தன் மிகுதி வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்ற சமூகக் கருத்தாக்கம் பெண்குரலை ஒடுக்கியபோதிலும். படைப்புக்களின் உள்ளே உள்ளார்ந்து கலகக்குரல் ஒலிக்கும் வகையில் படைப்புக்கள் பாடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக,

மன்னன் பூதபாண்டியன் மாண்டு போகின்றான். மனைவி பெருங்கோப் பெண்டு, அவன் எரியுண்ட ஈமத்தீயில் தானும் விழுந்து சாக முனைகிறாள். அருகே இருந்த சான்றோர் தடுக்கின்றனர். அதனை மறுத்து, ‘பல்சான்றீரே பல் சான்றீரே….. பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே..’ என்று விளித்து அவள் பேசுகிறாள்!

     அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

     காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

     அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

     வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

     வேளை வெந்தை வல்சி யாகப்

     பரல்பெய் பள்ளிப்பா யின்று வதியும்

     உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ…

     நள்ளிரும் பொய்கையும், தீயும் ஓரற்றே.”  (புறம். 246)

பெண்ணின் கற்பின் புகழினைக் கூறுவதாக வெளிப்படையாகக் கருதப்பட்டாலும்ä, “உயவற் பெண்டிரேம் அல்லேம்” என்று குமுறுவது அதாவது கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிர் என்று பெண்மனத்தின் கலகக் குரலாக நோக்க முடியும்.

எந்தவொரு கட்டுரையாளனையோ ஆய்வாளனையோ நோக்கின், அவர்கள் தாம் கூறவந்த கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு திருக்குறளில் கூறப்பட்டவாறு என்று திருவள்ளுவரைத் துணைக்கழைப்பது பொதுவானதாகக் காணப்படுகின்றது. அறம், பொருள்ää இன்பம் சார்ந்து வள்ளுவம் கூறுகின்ற கருத்தாக்கங்கள் உலகப் பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த ஏற்றுக்கொள்ளலில் வள்ளுவம் சொல்லும் கருத்தாக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற அர்த்தம் காணப்படுகின்றது. அந்த கருத்தாக்கங்கள் தமிழர்களின் பொது ஒழுக்கக்கோவையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. “கருத்துக்களைப் படைத்து, அந்தக் கருத்துக்களை வெகுசன அரங்கில் பரப்பி, சமூகக் கருத்தோட்டத்தை கட்டி வளர்த்து, சமூக சிந்தனைப் போக்கினை நெறிப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கருத்து உற்பத்தி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.” என்ற தேசத்தின் குரலின் பதிவு இங்கு நோக்கத்தக்கது.

தமிழ்மன்னர்களுடைய ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது பல்லவர் ஆட்சி. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சமண பௌத்த மதங்களுக்கும், சைவ வைணவ மதங்களுக்குமிடையிலான போட்டியில் மொழிசார்ந்ததும், அந்த பண்பாடு சார்ந்ததுமான கருத்தாக்கங்கள் இலக்கியங்களுக்கூடாக பரப்பப்பட்டன.  அந்த கருத்தாக்கங்களின் வாயிலாக  பல சமண பௌத்த இலக்கியங்கள் அழித்தொழிக்கப்பட்டு, தமிழின் இலக்கியங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார் போன்ற படைப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு பக்திப் பனுவல்களும் அது சார்ந்த படைப்புக்களும் உச்சம் பெற்றன. பக்தி சார்ந்த விடயங்களைப் பாடுதலே சிறந்தது என்ற விடயம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது.

இந்த போக்கிலிருந்து மக்களை மீட்டெடுத்து, தேசியம் பற்றிய கருத்தாக்கத்தினை முன்னிறுத்தி எழுந்த காப்பியமாக சிலப்பதிகாரத்தினைக் குறிப்பிடலாம். சிலப்பதிகாரம் கண்ணகியினுடைய சிலம்பின் கதையைக் கூறும் காப்பியம் என மேலெழுந்தவாரியான கருத்துரைகளைச் கூறிச்செல்வார்கள். ஆனால், அதன் உள்ளடக்கத்தில் மதம் என்ற மாயக் கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், தேசியம் சார்ந்த கருத்தாக்கங்களும் விரவிக்கிடக்கின்றன.

மக்கள் தம்மளவில் கருத்துச்சுதந்திரம் மற்றும் விடுதலையை நோக்கி செல்லவேண்டுமெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அரசியற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் அரசியலடைவது என்பது அவர்களுக்கான விடுதலையை நோக்கி அவர்களை இட்டுச்செல்லும் குறிகாட்டியாகும். ஆனால் மக்கள் அரசியலடைவதை விரும்பாத அரசுää அவர்களை அரச மயப்படுத்துவது சார்ந்த கருத்தாக்கங்களுக்குள் அவர்களை இட்டுச்செல்லும். தனிமனிதர்களை அரசியல் நீக்கம் செய்வதன் மூலம் அரசு சார்ந்த கருத்தாக்கங்களைச் செய்வதற்கான கருவிகளாக மதம், கலை, இலக்கியங்கள் என்பவற்றை அரசு பயன்படுத்துகின்றது. அரசுசார்ந்த ஒரு உளவியல் கட்டமைப்பு என்ற நுண்ணிய பொறிமுறை மக்களை அரசின் அடிமைகளாக மாற்றுகின்றது.

இலக்கியப் பிரதிகள் அதனது அமைப்பாக்கம், மொழியியல், கருத்தியல் ரீதியாக வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஆனால், இன்று படைப்புக்களும் அவை சார்ந்த வாசிப்புக்களும் வெறும் கருத்துரைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இலக்கியங்களுக்குள் பொதிந்திருக்கும் சமூகக் கருத்துருவாக்கங்களும் கருத்துருவாக்கங்களுக்கிடையிலான மோதல்களும் மீள்வாசித்தலுக்கு உட்படுத்தப்படும் போதே, எமக்கான கருத்தாக்கங்களைச் செய்வதற்குரிய நுட்பங்களைக் கண்டுகொள்ள முடியும். படைப்புக்கள் எதுவாக இருப்பினும் விடுதலை குறித்த வேண்டுதல்களுடனேயே படைப்பு படைக்கப்படவேண்டும் . படைப்புக்கள் வாசிப்பிற்கு உட்படுத்தப்படும்போது அவற்றின் கருத்துருவாக்கத் தளத்தில் நின்று வாசிக்கப்படுதல் அவசியமானதாகின்றது. விடுதலை உணர்வு என்னும் தளத்திலிருந்தே அனைத்து இயக்கங்களும் அசைவதை எமது படைப்புக்கள் சார்ந்தும் வாசிப்புக்கள் சார்ந்தும் கருத்தாக்கங்களுக்கு உட்படுத்துவோமாயின் எமக்கான மாற்று ஊடகத்தினை உருவாக்கல் சாத்தியமாகும்.

செல்வி

01-03-2017

Loading

(Visited 32 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply