பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ் (ஆய்வறிஞர் ஓளவைக்கோட்டம் தஞ்சாவூர்)

            தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள் அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ்சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒருசாரரும், வடகோடியிலிருந்தே தமிழகம் போந்ததென்று ஒருசாரரும் குறிப்பிடுவர். புறச்சமயங்கள் தமிழ்த் தாயகங்களுக்கு எவ்வகையில் எவ்விடத்தின் வழிநுழைந்தன என்பனவற்றினைக் குறித்து ஆய்ந்து அறிந்துகொள்ளுதல் என்பது அச்சமயங்களின் தோற்றுவாய் நிலையினையும், அவை தமிழ்ச் சமுதாயத்தில் பெற்ற பரவலாக்கத்தினையும், அதன் செவ்விய ஆளுமைக்கால வரலாற்றினையும், தோய்வையும் அறிந்துகொள்ளுதற்கு இன்றியமையானதாகும். இதன்வழி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழகத்தின் கொங்குப் பகுதியின் வடபால் உள்ளதும், பண்டைய எருமைநாடு என்று அழைக்கப்பட்டதுமான மைசூர் பீடபூமியின் சரவணபெலகோலா எனும் இடத்தில் மையம் கொண்டிருந்த சமணம் மேயாற்றுக் கணவாயைக் கடந்து கொங்குநாட்டில் முதலில் நுழைந்தது. விசயமங்கலம், பூந்துறை, திங்களூர் முதலான இடங்களில் தலமமைத்து கோலோச்சியது. இதன்விளைவால் கொங்குநாட்டு வேளிர்தலைவன் சமணத்தைச் சார்ந்து பெருங்கதை எனும் சமண இலக்கியம் செய்தமையும், கொங்கிலிருந்த சமணம் பாண்டியநாடு முழுதும் பெரிதும் பரவியமையும், பின் தமிழகம் முழுதும் பரந்தமையும் அறிந்தமையே. சமண முனிவர்கள் கடல் கடக்கக்கூடாது எனும் விதி சமணத்தைக் கடல்கடந்து ஈழத்தில் பரவுவதைத் தடைசெய்தது. ஆயினும் சமணவாணிகர்கள் இலங்கையில் பெரிதும் இருந்தது, சமணவாணிகர் ஈழத்தில் மேலாண்மை பெற்றமையை ஈழத்தின் கிழக்குக் கரையோரம் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட பழைய வாணிகப் பாதையில் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு அறியலாம்.

            தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் சமணச் சின்னங்கள் மிகுந்து கிடைப்பதைப் போன்றே தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் பௌத்த சின்னங்கள் மிகுந்து கிடைப்பதினைக் காணலாம். பௌத்தம் தமிழகத்தின் கிழக்குப் பகுதியினை ஒட்டியே பரவத் தலைப்பட்டமையைப் பல்வேறு சான்றுகளின்வழி உணரலாம். காஞ்சிபுரம், மாங்காடு, இரண்டாங்காடு, ஆவூர், கூவம், ஞாயர், நாவலூர், பல்லாவரம், திருப்பாதிரிப்புலியூர், சங்கமங்கை எனத் தொடர்ச்சியான தொண்டை மண்டல ஊர்களிலும், காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம் (கோயில்வெண்ணி), புத்தமங்கலம், சங்கமங்கலம், போதிமங்கலம், திருவிளத்துறைக் கோயில், கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீச்சுரம், எலயனூர், பொன்பற்றி, புத்தகுடி உறையூர், பெருஞ்சேறு, கோட்டப்பாடி, மயூரபட்டணம், நாகைப்பட்டினம் முதலாய ஊர்களைத் தலைமையாகக் கொண்டு சோழமண்டலத்திலும் பௌத்தம் பரவலாக்கம் பெற்றது.

            பாண்டிய மண்டலத்தில் மதுரை, அரிட்டாபட்டி, பொதிகை, தஞ்சை (தஞ்சாகூர்), திருமாலிருஞ்சோலை, தென்கரை முதலான ஊர்களையும் பௌத்தம் தலமாகக் கொண்டு செழித்திருந்தது. ஆனால் மேலைக்கரையில் வஞ்சிமாநகர் தவிர மற்றைய இடங்களில் பௌத்தம் பெரிதும் பரவியதாக அறியக் கூடுதலில்லை. ஆனால், சமணம் செழித்திருந்தது. ஈழமண்டலத்தில், நையினாதீவு (மணிபல்லவம்), காரைத்தீவு, திருகோணமலை  நெடுந்தீவு, சாவசச்சேரி கத்தரோடை/தெல்லிபளை முதலான தலங்களில் தமிழ்பௌத்தம் செழித்திருந்தது. இவ்வகைத் தலங்களையே காஞ்சியிலிருந்து நெல்லைவரை கிழக்குக் கடற்கரைவாயிலாகப் பௌத்தத் துறவிகள் பயணம் செய்து வணங்கினர். இதனை யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுத் துறவிகளின் பயணப் பாதைகளினை ஆய்வதன் வழியறியலாம்.

            கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் காலம் தொட்டே தமிழகத்தில் பௌத்தம் மக்கள் செல்வாக்கும், மன்னர்களின் செல்வாக்கும் பெற்ற பெருஞ்சமயமாக விளங்கிற்று. அதே காலக்கட்டத்தில் தமிழகத்திலிருந்து ஈழத்தில் உள்ள தமிழர்களிடம் பரவிப் பிறகு சிங்களரிடமும் பரவியிருக்கவேண்டும் எனக் கருத இடமுண்டு. ஆனால், சிங்கள நூலான மகாவம்சம், “மூன்றாம் பௌத்த மாநாடு மௌரியப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் அசோகரின் ஆதரவில் மெக்கலபுத்த திஸ்ஸ எனும் தேரரின் தலைமையில் கூடிப் பௌத்த மதத்தினைப் பரப்புதற்பொருட்டுப் பல்வேறு நாடுகளுக்கும் பிக்குகளை அனுப்புவதாக முடிவாக்கியது. மாநாட்டு முடிவின்பின் காஸ்மீரம், காந்தாரம் எனும் நாடுகளுக்கு மஜ்ஜந்திகர் எனும் பிக்குவும், மகிஷ மண்டலத்துக்கு மாகதேவர் எனும் பிக்கும், அபரந்தக நாட்டிற்குத் தம்மரக்கிதர் எனும் பிக்கும், வனவாசி நாட்டிற்கு ரச்சிதர் எனும், தேரரும், மகாராட்டிர தேசத்திற்கு மகாதம்மரக்கிதர் எனும் தேரரும், யோனதேசத்திற்கு மாகரக்கிதர் எனும் தேரரும் அனுப்பப்பட்டனர். இமாலயத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு மஜ்ஜிம எனும் தேரரும், சுவர்ணபூமி எனும் நாட்டிற்குச் சோனர், உத்திரர் என்னும் தேரர்களும் அனுப்பப்பட்டனர். பெரிய தேரராகிய மகிந்தரும் அவரின் சீடர்களாகிய இட்டியர், உத்தியர், சம்பலர், பத்தசாலர் என்பவர்களும் இலங்கைத் தீவிற்குப் பௌத்த மதத்தைப் பரவச் செய்ய அனுப்பப்பட்டனர். மகிந்தர் முதலியவர்கள் தாம் அடைந்திருந்த இருத்தினாலே ஆகாய வழியாகப் பறந்து இலங்கையை அடைந்தனர்” என்று மகாவம்சம் எனும் நூல் கூறுகிறது. (12-ஆம் அதிகாரம்) பௌத்தமத விரிவாக்கத்திற்காகப் பிக்குகள் அனுப்பப்பட்டதாக மகாவம்சம் கூறும்நாடுகளின் பட்டியலில் தமிழ்நாடுகள் எதுவுமில்லை. மேலே குறிப்பிட்ட நாடுகளோடும் (யோனதேசம்) யவனநாடு முதலிய தூரநாடுகளோடும் தமிழ்நாடுகளுக்கும் பிக்குகளை அனுப்பியமையைப் பின்வரும் அசோக சாசனங்களின் வழியறியலாம்.

            முதலாவதாக குஜராத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள கிர்னார் நகருக்கருகிலுள்ள பாறையில் எழுதப்பட்டுள்ள அசோகக் கல்வெட்டில் பின்வரும் பகுதி காணப்படுகிறது.

காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர் பெருமானுடைய (அசோகரின்) ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும் அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலைகளாம்.

            இதற்கடுத்து மூன்றாம் பாறைக் கல்வெட்டில், தமிழகத்திலும் இலங்கையிலும் பௌத்தத்தைப் பரப்பிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஆனால், பின்வரும் மூன்றாம் பாறைக் கல்வெட்டில் சேர (கேரளபுத்திர) விடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சாசனம் கி.மு. 258-இல் எழுதப்பட்டது.

            தரும விஜயம் என்னும் வெற்றியே மாட்சிமைமிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கு அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாமிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த வெற்றி அரசரால் அடிக்கடி கைப்பற்றப்பட்டது.

 என மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களில் சோழ, பாண்டிய நாடுகள் எனும் தமிழ் நாடுகளை அடுத்தே இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடுகளுக்கு அடுத்தே இலங்கைக்குச் சமயக் குழுக்களை அசோக மன்னர் அனுப்பினார் என்பதனை அறியமுடிகின்றது.

            “பர்மா தேசத்துப் பௌத்தப் பிக்கு பரம்பரையைக் கூறுகின்ற வரலாறு (Talang Records) காஞ்சிபுரத்துக்கு அருகிலே பதரதிட்டை என்னும் இடத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தம்மபாலர் என்னும் பௌத்தப் பிக்கு வசித்திருந்தார் என்று கூறுகிறது. இந்தத் தர்மபாலர் என்பவர் பேர்போன ஆசாரிய தர்மபாலர் ஆவார். இவர், பௌத்த வேதமாகிய திரிபிடகத்தின் சில பகுதிகளுக்குப் பாளி மொழியில் உரை எழுதியிருக்கிறார். இவர் கி.பி.5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். தாம் எழுதிய நூலில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தாம் தங்கியிருந்து இந்நூலை எழுதியதாகக் கூறியிருக்கிறார்1”. இப்படியான சான்றுகள் உள்ளபோது,

            மகிந்தர் ஆகாய வழியாகச் சிங்களர் நாட்டை வந்தடைந்தார் என்பதனை எவ்வகையில் ஏற்பதென்பதோ? ஆனால் மகிந்தர் தமிழகம் போந்து பின்னர் இலங்கை அடைந்தமையை ஆய்வின் வழி உணரவியலும், அதற்கான மேலும் பல சான்றுகள் உண்டு.

பணையைந் தோங்கிய பாசிலைப் போதி

அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி

அந்தர சாரிக ளறைந்தனர் சான்றும்

இந்திர விகார மேழுடன் போகிப்

                                                 சிலப்பதிகாரம்– 10: 11-14

எனும் சிலப்பதிகார அடிகளில் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படும் ஏழு இந்திரவிகாரைகள் மகிந்தனால் கட்டப்பட்டதாக அறிஞர்கள் கூறுவர். மேலும், அசோகரும், மகிந்தர் எனும் மகேந்திரரும் தமிழகத்தில் கட்டிய விகாரைகள் பல இருந்தமைக்கான சான்றுகள் பல உண்டு.

“தலைநகருக்கு (காஞ்சி) அருகில் தென்திசையில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பெரிய மடம் இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மிகச்சிறந்த அறிஞர்கள் அடிக்கடி அந்த மடத்தில் கூடினார்கள். அந்த மடத்தில் நூறடிக்குமேல் உயர்ந்துநின்ற அசோகத்தூபி ஒன்று இருந்தது. அந்த இடத்தில் புத்தர் ஒருமுறை தீர்த்தங்கரர்களோடு வாதிட்டு அவர்களை வென்று மக்கள் பலரைத் தம்முடைய மதத்தில் சேர்த்துக் கொண்டார்.”

என்று அசோகர் காஞ்சிபுரத்தில் புத்தமடத் தூபி அமைத்தமை குறித்து யுவாங்சுவாங் குறிப்பிடுகிறார்2. மேலும், “தலைநகருக்குக் (மதுரை) கிழக்கில் அசோகருடைய தம்பி (டா.டீ) மகிந்தன் கட்டிய பழம்புத்தமடம் ஒன்று இருந்தது. ஆனால், அது இடிந்து போயிருந்தது. கடைகாலும் ஒருதூபியுமே எஞ்சியிருந்தன. மடத்திற்குக் கிழக்கே கட்டப்பட்டிருந்த அந்தத் தூபியின் கவிகை மாடம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. ஏனைய பகுதிகளை மண்மூடிவிட்டது. அந்த இடத்தில் புத்தர் தம்முடைய மதத்தில் திக்கற்ற மக்களைச் சேர்த்துக் கொண்டார்”. மேற்கண்ட யுவாங்சுவாங் கூற்றுகளின் வழி மகிந்தர் தமிழகத்தில் பல பௌத்தப் பள்ளிகளைக் கட்டியிருந்தார் என்பதினை அறியலாம். இதனால் தமிழகத்திற்குப் பௌத்த மதத்தினைப் பரப்புதற்பொருட்டு மகிந்தர் வந்தார் என்பது விளங்கும். தமிழகம் வந்த மகிந்தர், தமிழகத்திலிருந்து எட்டுக்கல் தொலைவு உள்ள இலங்கைக்குத் தமிழகத்திலிருந்து செல்லாமல் மீண்டும் பாடலிபுத்திரம் சென்று பின் வான்வழியில் சென்றார் என்பது ஏற்புடையதாகா.  தமிழகத்திலிருந்தே  இலங்கைக்குச் சென்றார் என்பதே பொருத்தமானதாகயிருக்கும்.

            தமிழகம் போந்த மகிந்தர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு எப்படிச் சென்றார் என்பதினை ஆராயவேண்டியுள்ளது. பொதுவில் அசோகப் பேரரசரும் மகிந்தனும் கட்டிய பௌத்தப் பள்ளிகளெல்லாம் புத்தர் வந்த இடங்களாகப் பௌத்தர்களால் சுட்டப்படுகின்றமையைக் காணவியலும். இவை போன்ற பள்ளிகள் உலகெங்கும் உள்ளனவாகும். (புத்தர் வடஇந்தியாவைத் தாண்டி எங்கும் செல்லவில்லை என்பதே வரலாற்றியல் அறிஞர்களின் துணிவு) அவ்வகையில் தமிழகத்தில் காஞ்சி, மதுரை, காவிரிப்பூம்பட்டினம் முதலாய இடங்களில் உள்ள பள்ளிகள் சுட்டப்படுகின்றமையை முன்னர் கண்டோம். இவ்விடங்களில் எல்லாம் மகிந்தன் கட்டிய பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இலங்கையில் உள்ள பௌத்தத் தலங்களுள் இரண்டு சிறப்புவாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவை, யாழ்குடாநாட்டில் உள்ள மணிபல்லவமும் (நயினாதீவு), அநுராதபுரத்திற்கு அருகிலுள்ள மிகித்தலையுமாகும். இலங்கையில் புத்தர் வந்த தலமாக மணிபல்லவமே அமைகின்றது. ஆக ஈழத்தில் மகிந்தன் கால்வைத்த முதல் தலம் தமிழரின் மணிபல்லவமே. அங்கு தமது சமயப் பரவலாக்கத்தினை மேற்கொண்ட மகிந்தன் அங்கிருந்த தமிழர்களைப் பௌத்த வழிப்படுத்திவிட்டுப் போந்து கரைநகர் வாயிலாக அநுராதபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு மடத்தில் தங்கி ஒரு விகரை எழுப்பிச் சமயப் பரவலாக்கத்தினையும், சமயக் கல்வியையும் மேற்கொண்டார் எனலாம். ஆதலால், அவ்விடம்  (மகிந்தன் வந்த தலைமையிடம்) மகிந்தலை என வழங்கலாயிற்று. இன்று மிகிந்தலை என அது வழங்கப்படுகிறது.

            மகிந்தன் ஈழம் வந்தவேளை நாகநாடாகிய மணிபல்லவத்தில் வாழ்ந்த மக்கள் தமிழரேயாவர் என்பதினைச் சில சான்றுகளின் வழியுணரலாம். மணிபல்லவத்தில் நாகர்கள் வாழ்ந்தார்களென்றும், அவர்களின் அரியணைப் போட்டியைத்தடுத்து நல்வழிப்படுத்தவே புத்தர் அவ்விடம் போந்தார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. நாகர் என்போர் யாவரெனின் அவர்கள் தமிழர்களே. இதனை எமது அரவாடு எனும் கட்டுரையில் கண்டு கொள்க. மேலும், மணிபல்லவத்து நாகர்கள் தமிழர்களே என்பதினை மணிமேகலையில் வரும் செய்திகளின் வழியும் அறியலாம்.

            மணிமேகலைக் காப்பியத்தின் இருபத்துநான்காம் காதையாகிய ஆபுத்திரன்நாடு அடைந்தகாதை எனும் பகுதியில் பின்வரும் நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

            பண்டொரு காலத்தில் சோழ அரசனாகிய நெடுமுடிக்கிள்ளி புகார் நகரின் கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில் பேரழகு வாய்ந்த மங்கையைக் கண்டு காதல் கொண்டு அவளோடு ஒருமாதம் உறைந்தனன். பிறிதொருநாள் அம்மங்கை அவனிடம் ஏதும் கூறாது ஒழிந்தாள். மன்னன், எங்கு மறைந்தாளென அவளைத் தேடி அலைந்தான். அச்சமயம் நிலத்தில் குளித்தல் முதலாய பல சித்துக்களைப் பெற்ற சாரணனொருவன் வந்தான். அரசன் அவனைப் பணிந்து தாம் தேடும் மங்கை குறித்து அறிவீரோ என வினவ? அந்தச் சாரணன் அவளை நான் கண்டிட்டிலேன் ஆயினும் அவள் வரலாற்றினை முன்பே அறிந்துளேன் எனக் கூறி அவள் நாகநாட்டரசனாகிய வளைவணன் என்பானது தேவியான வாசமயிலை யென்பவள் வயிற்றிற் தோன்றியவள். பீலிவளை யென்னும் பெயரினள். அவள் பிறந்த வேளையில் நிமித்திகன் இவள் கதிரவன் குலத்தரசனைக் கூடிக் கருவுற்று வருவாள் என்று கூறினான். அவளே நீ கூறிய மடந்தை என்று அரசனுக்குக் கூறினான். மேலும், நீ கவலை கொள்ளாதே, அவள் வாரள் அவள் வயிற்றில் உதிக்கும் உனது மகனே வருவான் எனக் கூறினான். மேற்கண்ட செய்திகளைப் பின்வரும் மணிமேகலையடிகளால் அறியலாம்.

உப்பளந் தழீஇ வுயர்மன னெடுங்கோட்டுப்

பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்

கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா

இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற

 பூநாறு சோலை யாருமி லொருசிறைச்

தானே தமிய ளொருத்தி  தோன்ற

இன்ன ளர்கொ லீங்கிவ ளென்று

மன்னவ னறியான் மயக்க மெய்தாக்

கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்

உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்

உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்

மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்

பயிலி தழ்க் கமலமும் பருவத் தலர்ந்த

மலர்வா யம்பின் வாசங் கமழப்

பலர்புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப

ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்

பொருவலரு பூங்கொடி போயின வந்நாள்

யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே

வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற

மன்னவ னவனை வணங்கி முன்னின்று

என்னுயி ரணையா வீங்கொளித் தாளுளள்

அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள்

 சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்

கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்

பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்

நாகநாடு நடுக்கின் றாள் பவன்

வாகை வேலோன் வளைவணன் றேவி

வாசமயிலை வயிற்றுட் டோன்றிய

பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்

இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்

கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்

ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது

பூங்கொடி  வாராள் புலம்ப லிதுகேள்

                                              மணிமேகலை– 24: 27-61

மேற்கண்ட கதையில் பயிலும் நாகர்களின் பெயர்களெல்லாம் தமிழ்ப் பெயராகவே அமைகின்றன. அப்பெயர்கள் நெய்தல் திணைக்கு உரிய பெயர்களாம். நாக அரசன் வளைவணன். வளைவணன் எனும் சொல் தூய தமிழ்ச் சொல்லாகவே அமைகின்றது.

வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல” 

                                                         திருமுருகாற்றுப்படை – 120

பயிர்வளை யரவமொடு வயிரெடுத்தூதி

                                                        பெருங்கதை – 1/38: 4

எனும் சான்றோர் செய்யுள் அடிகளில் வளை எனும் சொல் சங்கு எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம். மேலும், குற்றமற்ற சங்குடன் தலைமைத் தன்மையை ஒப்பிட்டமையை,

இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்

வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி

                                        பெரும்பாண். 34-35

எனும் அடிகளின்வழி அறியலாம். வண்ணன் எனும் சொல் புணர்ச்சியில் இடைக்குறையாகி வணன் என முடிவுறும். அவ்வகையில் இரவு (இரா) + வண்ணன்           = இராவணன் (இராக்கால நிறத்தினையுடையவன்) என வமையும். அதுபோல்                வளை + வண்ணன் = வளைவணன் (சங்கின் நிறத்தையுடையவன்) என்பதாயிற்று.

            நாகர் தலைவனான வளைவணனின் மனைவியின் பெயர் வாசமயிலை எனச் சுட்டப்பட்டுள்ளன. இப்பெயரும் தமிழ்ப் பெயரே. மயிலை எனும் சொல் இன்று அழகிய பெண்களைக் குறிக்கக் கொங்குநாட்டிலே வழங்குகின்றது. மயிலை எனும் சொல் மணம் பொருந்திய இருவாட்சி (மல்லிகையில் ஒருவகை) மலரின் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கியமையை,

மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்

                                                         புறநானூறு – 34 / 2

எனும் அடிகளில் காணலாம். மயிற்பீலியின் வளைவுகளை ஒத்த சுழற்சியையுடைய சங்கினைப் போன்ற இளமடந்தையைப் பீலிவளை எனச் சுட்டியுள்ளமையைக் காணலாம். பீலியின் வளைந்த கண்ணினைச் சான்றுகாட்டினமையினை,

பீலி யொன்பொறிக் கருவிளை யாட்டி

                                                     குறுந். 110/4

எனும் குறுந்தொகையடிகளால் அறியலாம். மேற்கண்டவற்றால் மணிபல்லவத்தில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களே என்பதினை அறிந்தோம். அந்நாகர்கள் பௌத்தர்கள் என்பதினையும் மணிமேகலையின்வழி அறியலாம். பீலிவளை சோழமன்னனின் குழந்தையைக் கையிலேந்தி மணிபல்லவத்திலுள்ள புத்தபீடிகையை வலம் வந்து வணங்கி பின் அக்குழவியைச் சோழனிடம் ஒப்படைக்கக் கம்பலச் செட்டியிடம் கொடுத்தமையைப் பின்வரும் அடிகளின் வழி அறியலாம்.

நாக நன்னா டாள்வோன் றன்மகள்

பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்

பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய

புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித்

தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட

மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக்

கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப

அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து

கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும் 

பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப்

                                             மணிமேகலை–  25/179-188

மேற்கண்டவற்றின்வழி பண்டு மணிபல்லவத்திலும் நாகநாட்டிலும் வாழ்ந்த தமிழர்கள் பௌத்த மதத்தினைப் பின்பற்றினமையை அறியலாம். அத்தோடு அதே நாகநாட்டுப் பீலிவளைக்குச் சோழன் வழியுதித்த அக்குழவி கம்பலச் செட்டியின் கலம் கடலில் அழிய (மணிமேகலை-29/3-15) திரையினால் கரைசேர்ந்து சோழனிடம் ஒப்படைக்கப்பட்டமையால் திரையன் எனப்பட்டான். இவனே பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பெரும்பாணாற்றுப்படையின் தலைவனாகப் பாடப்பெற்ற “தொண்டைமானிளந்திரையன்”. இதனைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்.

முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்

திரைதரு மரபி னுரவோ னும்பன்

                                             பெரும்பாணாற்றுப்படை – 30-31  

இவ்வடிகளுக்கு உரைகூறும் நச்சினார்க்கினியர் “நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான்பெற்ற புதல்வனை என் செய்வேனென்ற பொழுது தொண்டையை அடையாளமாகக்கட்டி கடலிலேவிட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்வித்து நாட்டாட்சி கொடுப்பவென்று அவன்கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்” என்பனவாக விளக்குகிறார். இதற்கான மற்றொரு சான்று பெரும்பாணாற்றுப் படையின் இறுதி வெண்பாவிலும் காணக்கிடைக்கின்றது.

கங்குலு நண்பகலும் துஞ்சா வியல்பிற்றாய்

மங்குல்சூழ் மாக்கட லார்ப்பதூஉம்வெஞ்சினவேற்

கான் பயந்த கண்ணிக் கடுமான் றிரையனை

யான்பயந்தே னென்னுஞ் செருக்கு

                                                 பெரும்பாணாற்றுப்படை இறுதி வெண்பா

இதன்வழி மணிமேகலைக் காப்பியத்திற்குப் பல நூற்றாண்டுகள் முந்திய பத்துப்பாட்டில் பீலிவளையின் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றமை கொண்டு பௌத்தம் தமிழகத்திலும் ஈழத்திலும் பரவத்தலைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளாக இவற்றைக் கொள்ளலாம்.

மேலும் பீவிளையின் மகனான இளந்திரையன் ஆண்ட தொண்டைநாட்டுப் பகுதி பண்டு மாவிலங்கை எனப்பட்டது. இவ்மாவிலங்கையை ஓவியர் எனும் நாகமரபினர் ஆண்டனர். அதே ஓவியர் மரபினர் ஈழத்து வடபாலினையும் ஆண்டதாக வி.கணகசபைபிள்ளை குறிப்பிடுவார். அந்நாகமரபினரே பௌத்தத்தைக் கைக்கொண்ட தமிழராவர் எனலாம்.

மேற்கண்டவற்றின் வழி அசோகர் காலத்தில் தமிழகம் போந்த பௌத்தம் பின் மணிபல்லவம் வழியாக ஈழம் பெயர்ந்து அங்குள்ள தமிழர்களிடம் பரவி, பிறகே சிங்கள மக்களிடமும் பரவிற்றெனலாம். இதனை மேலும் சில சான்றுகள் வழியிலும் அறியலாம்.

தொண்டை நாட்டில் முதன்முதலில் பௌத்தம் தலைப்பட்ட இடம் காஞ்சிபுரம் இதனால் இதனைப் பௌத்த காஞ்சி எனத் தொண்டை நாட்டினர் கொண்டாடினர். இதற்கான எச்சங்களை இன்றைய காஞ்சியிலும் காணவியலும். அறப்பனஞ்சேரி, அறவணஞ்சேரி, புத்தேரித்தெரு என்பனவான இடப்பெயர் வழக்குகள் இன்றும் அங்கு உண்டு. மேலும், காஞ்சியில் முதன்முதல் தோன்றிய விகாரை மூலசோமவிகாரை எனப்பட்டது (மூலம்-முதல்) இதுகுறித்து மயிலை சீனி வேங்கடசாமியின் கூற்றுகளைக் காண்போம்.3

“கி.பி.5-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோச ஆசாரியார் பீடகநூல்களுக்கு உரைகள் எழுதியவர். இவர் தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்குகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும் அவர்களின் வேண்டுகோளின்படி இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோசர் காஞ்சியில் இருந்தபோது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்தாகவும் அந்நூல், தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.

            ஆசாரிய தர்மபாலரும், அபிதம்மாத்த சங்கிரதம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள் என்பனவாகக் கூறிச்செல்கின்றார்.

இவை போன்றதே காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் பல விகாரைகள் இருந்தன. இதனை மயிலையாரின் நூலில் விரிவாகக் காணலாம்.

            தமிழகத்தில் உள்ள தலைநகரங்களில் பௌத்தப் பள்ளிகள் பெரும்புகழ் பெற்றதைப் போலவே ஈழத்திலும் பல பள்ளிகள் பெரும் பேறுபெற்றன.

            ஈழத்தின் வாயிலாக அமைந்த மணிபல்லவத்தில் புத்தர் முதன்முதலாக வந்தார் எனப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. புத்தர் வந்தார் என்பது மகிந்தர் முதலான தேரர்களின் வருகையைக் குறிப்பதாகும். தமிழ்நாகர்களின் அரசில் மணிபல்லவம் முதல்நிலை பௌத்த புனிதத்தலமாயிற்று. நாக அரசைக்கடந்து அநுராதபுரம் சென்ற மகிந்தன் அங்குச் சமயப்பரப்புரை செய்ய எடுப்பித்த விகாரை பிற்காலத்தில் மகிந்தலை (மகிந்தனின் தலைமையிடம்) என அழைக்கப்படுவதாயிற்று. தமிழ் பௌத்தருக்கு மணிபல்லவம் தலைஇடம் ஆயினமைபோல் சிங்களபௌத்தருக்கு மகிந்தலை தலையிடமாயிற்று. ஆனால், இலங்கைக்கு முதலில் புத்தர் வந்ததாகக் கூறப்படும் இடம்  மணிபல்லவமே. நாகநாட்டு மக்களும் அநுராதபுர அரசு மக்களும் தத்தம் இடங்களைத் தலையிடமாகக் (முதல்) கொண்டு போற்றினர். இந்நிலையில் எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு நாகநாட்டில் அரசரும் மக்களும் பௌத்தத்தைத் துறந்து சைவசமயத்தின்பால் சென்றமையால் பௌத்தம் அந்தச் சூழ்நிலையில் நாகநாட்டில் வீழத்தொடங்கியது. பௌத்தத் திருப்பதிகள் போற்றுவார் இன்மையால் தமிழகப் பௌத்தப் பள்ளிகள் அழிந்தமை போலவே பெரிதும் சிதைவுற்றன. ஆயினும் நாகநாட்டிற்குப் புறத்தே மகிந்தலையைச் சிங்களவர்கள் தங்களது முதல் புனிதத்தலமாகவும் மணிபல்லவத்தை இரண்டாவது புனிதத்தலமாகவும் குறிப்பிடத் தொடங்கினர். ஆனால், முதலில் பௌத்தம் வந்தது மணிபல்லவத்திற்கே என்பதனை அவர்களால் மறுக்க இயலவில்லை. ஆயினும் தமிழர் விட்டொழித்த தலத்தைத் தங்களுக்குடைய இரண்டாம் நிலைத்தலமாகவே வைக்க எண்ணினர். இதுவே மணிபல்லவம் தமிழ்ப் பௌத்தத்தலம் என்பதற்கு ஒரு சான்றாகும். ஏனில் அது சிங்களத் தலமாக இருப்பின் இலங்கையில் முதல் புனிதத்தலமாக வல்லவா இருந்திருக்க வேண்டும். தமிழ்ப் பௌத்தத் தலமாக இருந்ததால் இரண்டாம் தலமாயிற்று. காலனிய ஆட்சிச் சூழலில் இடித்த இத்தலங்களை எல்லாம் டச்சுக்காரர் ஆட்சியில் புதுப்பித்துக் கொண்டார்கள். ஆனால், தமிழரின் தாயகங்களில் இருந்து பௌத்தம் தங்களுக்கு வந்தது என்று சொல்வதைச் சிறுமையாகக் கருதிய சிங்களவர்கள் புத்தர் ஆகாயமார்க்கமாக வந்தார். மகிந்தர் பாடலிபுத்திரத்திலிருந்து வானமார்க்கமாக வந்தார் என்பனவாக எழுதிவிட்டனர் என்று மயிலை. சீனி.வேங்கடசாமி குறிப்பிடுவார்.

            பௌத்தத் தமிழர்கள் எழுதிய தமிழ்நூல்களைச் சிங்களவர் படித்தார்கள் என்பதற்கும், அவற்றைச் சிங்களமயப்படுத்திக் கொண்டமைக்கான சான்றும் உண்டு. கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலே தோன்றிய தமிழ் இலக்கண நூல் ‘வீரசோழியம்’. இந்நூலினைச் சோழநாட்டின் பொன்பற்றி எனும் ஊரினையாண்ட குறுநில மன்னனான புத்தமித்திரன் என்பவர் இயற்றினார். இவர் பௌத்த சமயத்தினைப் பின்பற்றிய தமிழர். இதனை,

மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்தவத்தால்

தொக்கவன் யார்க்குந் தொடரவொண் ணாதவன் தூயனெனத்

தக்கவன் பாதந்தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்

புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்தமித்திரனே

                                                                   வீரசோழியப் பாயிரம்

எனும் அடிகளால் அறியலாம். மேலும், இந்நூலினை இயற்றும்படி ஊக்குவித்தவன் சோழப் பேரரசனான வீரசோழன் இதனால் அச்சோழன் பெயரையே அந்நூலுக்குப் புத்தமித்திரர் சூட்டினார். இதனை,

தேமேவிய தொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயரால்

பூமே லுரைப்பன்

  • வீரசோழிய பாயிரம்

எனும் பாயிரவடிகளின் வழி அறியலாம். இத்தமிழ் இலக்கண நூலினை அப்படியே தழுவி கி.பி.13-ஆம் நூற்றாண்டில் சிங்களமொழியின் முதல் இலக்கணநூலாகிய ‘ஷித்தசங்கரா’வை வடிவமைத்துக் கொண்டார்கள் என்பதினை அறியலாம். இதுகுறித்து அறிஞர்பலர் ஆய்ந்துள்ளனர்.

மேலும் மணிமேகலையில் காணக்கிடைக்கும் அரிய பௌத்த மெய்யியல் கலைச்சொற்களின் வழித் தமிழ்மரபில் பௌத்தம் வேரூன்றிநின்ற பாங்கினை உணரலாம். தமிழர்களில் ஈழநாட்டுத் தமிழர்களே இறுதியாகப் பௌத்தத்தைக் கைவிட்டவராவர். அதனால், தமிழகத்தமிழர்களிடம் காணப்படாத பல பௌத்தக் கூறுபாடுகள் இன்றளவும் அவர்களிடம் காணப்படுகின்றமையைக் காணலாம். அவற்றை மிகுத்துக்கூறின் விரியும் சிலவற்றை மாத்திரம் சுட்டிச் செல்வோம்.

            உணவினை உண்ணும் முறைமையால் பல்வகை உணவுகளினையும் ஒன்றன்பின் ஒன்றான படிநிலை வரிசையில் (சான்றாக, முப்பழம், பணியாரம், பருப்பு, குழம்பு, மிளகுச்சாறு, பாயசம், தயிர் என்பனவாக) ஒன்றன்பின் ஒன்றாகப் பரிமாறி உண்பதே பண்டைத் தமிழர்மரபு. ஆனால் பௌத்தமரபில் பரிமாறுதல் என்பது குறைவு. ஒரே முறையிலேயே உணவு வகைகள் அனைத்தும் உண்கலத்தில் வழங்கப்பட்டுவிடும். இதனை இன்றும் பர்மியர், தாய்லாந்தியர், கம்போடியர், சிங்களர் முதலாய மக்களிடம்  காணலாம். இவை பௌத்த மடங்களில் இருந்து இம்மக்களிடம் பரப்பப்பட்ட பண்பாடு. இவ்வாறு உணவு வகைகளை ஒன்றாக வைத்து உண்ணும் பௌத்தமரபு இன்றும் ஈழத்தமிழரிடம் உண்டு.

            கல்வியில் புகழில் உயர்ந்தவர் எக்குலத்தாராகிலும் எந்நாட்டினராயினும் அவர்களைத் தங்கள் சமூக அமைப்பில் உயர்நிலையில் வைத்துப் போற்றுவது பௌத்தமரபு. இப்பண்பும் ஈழத்தமிழர்களிடம் இன்றும் வழக்கில் உள்ள பண்பாடாகும். இவை போன்று பல்வகைப் பண்பாட்டுக் கூறுபாடுகளைக் கூறிச்செல்லாம்.

            பௌத்தம் இலங்கையில் பரவுவதற்குச் சற்று முற்பட்ட காலத்திலேயே ஆசிவக மதம் ஈழம் முழுவதும் பரவிவிட்டது. இதற்கு ஈழமண்டலம் முழுவதும் காணப்படும் ஐயனார் வழிபாடே சான்று. பௌத்தம் மணிபல்லவத்தை மையமாகக் கொண்டமை போல், ஆசீவகம் இன்றைய அனலைதீவை மையமாகக் கொண்டிருந்தது. அனலைதீவே ஆசிவத்தின் தலைமைப் பீடமாக விளங்கியது. ஆசிவத்தின் முதன்மைக் கொள்கை அதன் அணுவியற்கொள்கையே. அதனடிப்படையில் எழுந்த அணுழைதீவே அனலைதீவாயிற்றெனலாம். பௌத்தம் ஈழத்தில் பெரும் அலையாக எழுந்தபோது ஆசிவகம் தம் இருப்பைத் தக்கவைக்கப் பெரிதும் போராடி வீழ்ந்ததெனலாம்.

ஈழத்தில் தமிழர்கள் பௌத்தத்தைவிட்டுச் சைவநெறியினைக் கைக்கொள்ளத் தொடங்கிய வரலாற்றினை இனி ஆய்வோம். தமிழ்ச் சமூகத்தில் சங்ககாலத்திற்கு முன்பு தொடங்கி, இன்றளவும் சமயமாறுதல்களும் பொருந்துதல்களும் சமயத் தக்கவைப்புகளும் தொடர் நிகழ்வுகளாகின்றன. ஆசீவகம், பௌத்தம், சமணம், வைதீகம், இசுலாம், கிறித்தவம் முதலாய பலசமயங்கள் தமிழர்மீதும் தமிழ்மொழியின்மீதும் சாலத்தாக்கங்களை எற்படுத்தியுள்ளன. பண்டைத் தமிழ்ச் சமுதாய அமைவில் தமிழர்களின் மீது புறச்சமயங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் பொருந்துதல்கள் குறித்தும் சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, நீலகேசி, யசோதரகாவியம், சூளாமணி மேருமந்திரபுராணம், திருநூற்றந்தாதி, தேவாரம், பெரியபுராணம், திருவாசகம், சிவஞானசித்தியார் பரபக்கம், நீலகேசித்திரட்டுரை, சிவஞானசித்தியார் பரபக்கத்திற்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் எழுதியவுரை முதலான நூல்களில் உள்ள சமயப் பொருந்துதல்கள் வழி அறியலாம். பண்டைத் தமிழரின் சமய மோதல்கள் குறித்தும் சமய மாறுதல்கள் குறித்தும் தெரிவிப்பனவாக இவை அமைகின்றன. மகேந்திரவர்மன் கூன்பாண்டியன் முதலாய மன்னர்களும்,  நாவுக்கரசர் முதலான துறவியரும் தங்களைச் சமயமாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டவர்களே. தமிழகத்தில் சமயமாறுதல்கள் மூன்றாம் நூற்றாண்டில் ஆசிவகம் பௌத்தம் முதலானவற்றிலிருந்து சமணத்தை நோக்கியதாகப் பெரிதும் இருந்தது. ஆனால், ஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகு பக்தி    இயக்க வளர்ச்சியால் மாறுதல்கள் வைதீகத்தினை நோக்கியதாக அமைந்தன. தொண்டைநாட்டிலே நாவுக்கரசர் முதலானோரும், பாண்டிய நாட்டில் ஞானசம்பந்தரும் சமணரை நீக்கி வைதிகத்தினை மேம்படுத்தினர். குலசேகர ஆழ்வார் போன்றோர் பௌத்த கோயில்களில் கொள்ளையிட்டும் வைணவத்தை மேம்படுத்தினர். ஆனால், ஈழத்தினைப் பொறுத்தவரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டுவரை தமிழரிடம் பௌத்தநெறி மேலோங்கியே இருந்தது.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டளவில் ஈழத்திலும், தமிழகத்திலும் சமண, பௌத்த வைதிகத்திற் கெதிராகத் தங்களது தமிழ்மரபின் வழிபட்டதாகிய தென்புலத்தார் வணக்கம், தாய்த்தெய்வழிபாடு முதலியவற்றினை அடிப்படையாகக் கொண்ட தமிழிய வழிபாட்டுச் சடங்கியலைக் கொண்டதாகிய கட்டமைப்பினைப் பரவலாக்கும் முயற்சியாகக் கண்ணகி வழிபாட்டுப் பரவலாக்கத்தினைக் குறிப்பிடலாம். உலக மன்னவன் என்று சிலப்பதிகாரத்தால் குறிப்பிடப்படும் செங்குட்டுவச் சேரனால் இப்பெருமுயற்சி செய்யப்பட்டுப் பல நாடுகளைச் சேர்ந்த மன்னர்களும் அழைக்கப்பட்டு ஒரு மாநாடு போல் கண்ணகி வழிபாட்டுப் பரவல் குறித்த  நிகழ்வு நிகழ்த்தியமையை,

உலக மன்னவ னின்றோன் முன்னர்

அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்

பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்

குடகக் கொங்கரு மாளுவ வேந்தரும்

கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்

சிலம்பு. 30: 156-160

எனும் மேற்கண்ட அடிகளில் பயிலும் கயவாகு தமிழ்மன்னனே, (அவன் சிங்களமன்னன் அல்லவென்பதினை விரிவஞ்சி பிரிதோர் இடத்தில் காண்போம்.) அவன் தமிழகம் முழுதும் கண்ணகி வழிபாட்டு மரபு ஏற்பட்டமையை ஈழத்திலும் பரவலாக்க முயற்சித்து வென்றவன். பல சமய நுழைவுகள் ஈழத்தமிழரிடம் ஏற்பட்டபோதும் பௌத்தப் பெரும் அலையில் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் சிதையாமல் காத்தவன் இவனே பௌத்தத்தின் உச்ச காலமாகிய கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தென்புலத்தார் வணக்கத்தின் மரபுவழிப்பட்ட கண்ணகிவழிபாட்டைக் கையிலெடுத்துக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து ஆடித்திங்கள் பெருவிழா எடுத்துக் கொண்டாடியமையை,

“அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டமுந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்க ளகவையின் ஆங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறை யெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருக்கிப் பிழையாவிளையுள் நாடாயிற்று.

எனும் சிலப்பதிகார உரைப்பெறு கட்டுரைவழி  அறியலாம். ஈழத்தில் பௌத்தம் மிகச் செழித்தோங்கியபோது இக்கண்ணகி வழிபாட்டுத் தமிழ்மரபினை அதனால் அழிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே தமிழர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுச் சைவசமயத்தைக் கைக்கொள்ளத் தொடங்கினர். இவைகுறித்த தரவுகளை இங்கு ஆய்வோம். இலங்கையில் சமய மாறுதல்கள் குறித்த செய்திகள் திருவாதவூரடிகள் எனும் மாணிக்கவாசகரின் வரலாற்றினைக் கூறும் நூல்களிலேயே காணக்கிடைக்கின்றன. இவற்றில் உ.வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்ட செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர்நம்பியின் திருவாலவாயுடையார்  திருவிளையாடற்புராணம். (கி.பி.13. நூற்.), பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணம் (கி.பி.17), கடவுள் மாமுனிவர் பாடிய திருவாதவூரடிகள் புராணம் (17-ம் நூற்றாண்டு), திருவுத்தரகோசமங்கை புராணம் (18-ம் நூற்றாண்டு) கல்லாடம் என்பன நமக்குக் கிடைக்கும் சான்றுகளாகின்றன. இவற்றில் ஈழத்தில் பௌத்தர்கள் சைவர்களாக மாறிய கதைகளின் அமைவைக் காண்போம்.

சிவனடியார் ஒருவர் தமிழக சிவதலங்களை வழிபட்டு வருகையில் பொன்னம்பலத்தில் உறையும் கூத்தனை வழிபட்டுவிட்டு ஈழநாட்டை அடைந்தார். இவர் செல்லுமிடந்தோறும் “பொன்னம்பலம்” எனக் கூறுதலினை வளமையாகக் கொண்டிருந்தார். இதனைப் பொறாத ஈழப்பௌத்தர்கள் தம் மன்னனிடம் முறையிட்டனர். ஈழமன்னனும் அவ்வடியாரை அழைத்துவரப் பணித்தான். அரசன் முன்னிலையில் அழைக்கப்பெற்ற அவ்வடியார் பொன்னம்பலம் எனக்கூறி அமர்ந்தார். அச்சொல்கேட்ட மன்னன் பொன்னம்பலத்தின் விளக்கத்தைக் கேட்டான். தில்லைச்சிற்றம்பலத்தின் சிறப்பையும் ஒருமுறை பொன்னம்பல மெனில் ஐந்தெழுத்து மந்திரத்தை இருபத்தோராயிரத்து அறுநூறு முறை ஓதிய பயன்கிடைக்கும் என்பனவாகக் கூறிமுடித்தார். அதுகேட்ட அரசவைப் புத்தகுரு வெகுண்டு திரிபீடகத்தைத் திருவருள் செய்த புத்ததேவர் அல்லது வேறொரு தெய்வமும் உண்டோ? நான் தில்லையை அடைந்து சைவர்களை வாதில் வென்று பொன்னம்பலத்தைப் புத்தவிகாரமாக மாற்றுவேன் எனச் சூளுரைத்துச் சிற்றம்பலத்தை நோக்கித் தமது புத்தகுழு புடைசூழ புறப்பட்டான். ஈழமன்னனும் தனது ஊமை மகளை அழைத்துக் கொண்டு தில்லைநோக்கி ஏகினான். தில்லையை அடைந்த பௌத்தகுரு திருப்புலீச்சரத் திருக்கோயிலிலே தங்கினான். தில்லை மக்கள் புறச்சமயர்களைத் தில்லையை விட்டு அகலுமாறு கூறினர். ஆனால், புத்தகுரு உங்கள் சோழ மன்னனுக்குகெதிரில் நுமது சைவம் பொய்ச்சமயமெனச்சாற்றி புத்ததேவனே மெய்யான கடவுள் என்பதை மெய்ப்பித்தாலன்றி இவ்விடத்தை விட்டகலேன் என்றனன். பௌத்தரை வாதில் வென்று அகற்றுதலே சிறந்ததென உணர்ந்த தில்லைவாழந்தணர். சோழமன்னருக்கும், சிவனடியார்களுக்கும், அறிஞர்களுக்கும் ஓலை எழுதியனுப்பினர். அன்றைய இரவின் வைகறைப் பொழுதிலே நகரமக்கள் அனைவரின் கனவிலும் தோன்றிய சிவபெருமான் ஊரெல்லையில் தங்கியுள்ள வாதவூரன் தர்க்க சாஸ்திர முறைக்குப் பொருத்தமான வகையில் புத்தர்களை வாதில் வெல்வான் அழைப்பீராக வெனக்கூறி மறைந்தார்.

பொழுது புலர்ந்ததும் இச்செய்தியை மக்கள் வாதவூரருக்குத் தெரிவித்தனர். அதுகேட்டு எழுந்த வாதவூரார் பௌத்தர்கள் மண்டபத்தினை அடைந்து சிவனோடு இயையாத அவர்களைத் தான் காணல் தகாதென இடையில் திரையிடுவித்தமர்ந்தார். சோழ மன்னனும் அங்குவந்து வாதவூரார் அருகில் அமர்ந்தான். ஈழத்தரசனும் சோழனுக்கு திறைப்பொருளை வழங்கி வணங்கினான். அவனையும் தன் அருகில் இருத்தினான் சோழ மன்னன். ஆய்வுநெறியில் வல்ல சான்றோர் பலரும் அவையில் கூடினர். சோழமன்னனும் அடியாரை நோக்கிச் சைவத்தை நீவிர் நிலைநிறுத்துவீராயின் பௌத்தர்களைப் போக்குவது எமது கடன் எனக் கூறினான். பிறகு வாதவூரடிகள் பௌத்தர்களோடு வாதம் செய்துவருகையில் பௌத்தர்கள் சிவனை இகழ்ந்தனர். அதுகேட்டு ஆற்றா வாதாவூரார் நாமகளை புத்தர்களின் நாவிலிருந்து விலகுமாறு கட்டளையிட்டார். புத்தர்கள் ஊமைகளாயினர் அதுகண்ட ஈழத்தரசன் வாதவூரரை வணங்கி அடிகளீர் பேசவல்ல பௌத்தர்களை ஊமையாக்கினீர், பிறவியூமையாகிய எமது மகளைப் பேசவைப்பீராயின் யான் நுங்களுக்கு அடியேனாவேன் என்றனன். வாதவூரார் அம்மன்னனின் மகளை அழைத்து முன்பு புத்தகுரு தம்மிடம் கேட்ட வினாவிற்கெல்லாம் விடைகூறும்படி கூறினார். அவளும் அவ்வினாவிற் கெல்லாம் அளவைமுறை விலகாது விடை கூறினாள். வாதவூரார் அவ்வினாவிடைகளைத் தொகுத்து மங்கையர் பாடிவிளையாடிப்பயிலும் முறையில் திருச்சாழற் பாடல்களாக அமைத்தார்.

            இந்நிகழ்வைக்கண்ட ஈழவேந்தன் வாதவூரார் அடிகளில் விழுந்து தொண்டனானான். பௌத்தர்களுக்கு ஊமை நீக்க வேண்டுமெனவும் இறைஞ்சினான். அடிகளது பார்வையால் பௌத்தர்கள் ஊமைநீங்கப் பெற்றனர். அப்பௌத்தர்கள் தங்களுக்கு வாதவூரர் திருநீறும், அக்கமாலையும், கல்லாடையும் அளிக்க வேண்டுமெனவேண்டினர். வாதவூரரும் அவர்களுக்குத் திருநீறு வழங்கி அவர்களது துவராடையைச் சுட்டெரித்து அவர்களனைவரையும் சைவராக்கினார் என இந்நூல்களில் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும், திருவாதவூரர்புராணத்திலும், திருப்பெருந்துறைப்புராணத்திலும் கல்லாடத்திலும் சிற்சில வேறுபாடுகளுடன் சுருக்கியும் விரித்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பொதுவில் ஈழத்தில் பௌத்தத்தை வீழ்த்தி சைவசமயத்தை உய்வித்தமையை விளக்குவனவாக இவை அமைகின்றன.

            மேற்கண்டவற்றால் ஈழத்தில் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகரால் பௌத்தம் வீழ்த்தப்பட்டுச் சைவ மார்க்கம் தொடங்கப்பட்ட செய்தியினை அறிகின்றோம். ஆனால், இச்சமயமாற்றம் ஈழத்தமிழ்ப் பௌத்த மன்னனிடமும் தமிழ்ப் பௌத்த மக்களிடம் ஏற்பட்டதா அல்லது சிங்களபௌத்த மன்னனிடமும் மக்களிடமும் ஏற்பட்டதா? என்பதனை அறிதலும் ஐயமறத் தெளிதலுக்கு இன்றியமையாததாகும். இதனைப் பின்வருமாறு தெளியலாம்.

  1. இச்சமயமாற்றம் குறித்துக் கூறும் மேற்கண்ட நூல்கள் அனைத்திலுமே ஈழமன்னன் எனும் சொல் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை, சிங்களம் எனும் சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.
  2. பௌத்த பிக்குவிற்கும் மாணிக்கவாசகருக்கும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வாதங்களின் வினாவிடைகள் தமிழ்மொழியிலேயே அமைவனவாகக் காட்டப்பட்டுள்ளன வேறுமொழியில் அமைந்ததற்கான குறிப்புகள் எங்குமில்லை.
  3. ஈழமன்னனின் மகள் பௌத்தர்களின் வினாக்களுக்குத் தமிழிலேயே விடையளிப்பதாக அமைந்துள்ளமையால், அம்மன்னனும் அப்பெண்ணும் தமிழர் எனத் தெளிவாகலாம்.
  4. பொன்னம்பலம் எனும் சொல்லுக்குப் பொருள்தேடுதலும் சித்தாந்த சைவத்திற்பாற் பட்டனவாகவே அமையும். இன்றும் பொன்னம்பலம் எனும் பெயரினை ஈழத்தில் மிகுத்து காணலாம், தமிழகத் தமிழரினும் ஈழத்தமிழரே தில்லை அம்பலத்தைத் தாய்வீடாகக் கருதிப் போற்றுகின்றமையையும் காணலாம். இதற்கான காரணமாக அவர்களினை பௌத்தத்திலிருந்து விடுத்து சைவநெறிப்படுத்தத் தொடங்கிய தலம் அது என்பதினை மதிப்பிடலாம்.
  5. இத்துடன் மற்றொரு காரணத்தினையும் எண்ணவேண்டும். சிங்களர் தேராயன பௌத்தத்தினையும், தமிழர் மகாயான பௌத்தத்தினையும் கடைபிடித்தனர் என்பது தெளிவு. இதன்வழி ஆராயும்போது, தேராவாதத்தில் தருக்கம் இல்லை. புத்தர் தத்துவவிசாரணைகளையும் தருக்கவிவாதங்களினையும் பெரிதும் மறுத்துப் புறந்தள்ளியவர். ஆனால், மகாயான பௌத்தர் தம் கொள்கைகளை நிலைநாட்டுதற்குத் தருக்கவாதத்தை (அளவைநூல் முறைமையை) ஏற்றுக் கொண்டனர். நாகார்சுனரின் ‘உபய கௌசல்ய சூத்திரம்’ என்பது பௌத்தத்தின் முதல் தர்கநூல். ஆனால், அவர் பெரிதும் நையாயிக தருக்கத்தையே கைக்கொண்டனர். சௌந்தராத்திக யோகசரர்கள் அத்தருக்கத்தினை மேம்படுத்தி பௌத்த நெறிக்கு ஏற்றதாக்கினர். தமிழில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் அதனை நன்குபயன்படுத்தியுள்ளார். இதன்வழி தில்லையில் நடந்த தருக்க வாதத்தில் சிங்கள பௌத்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் தமிழ்ப்பௌத்தர்களே பங்கேற்றுச் சமய மாறுதல்களை யடைந்தார்கள் என்பதினையும் அறியலாம்.

மாணிக்கவாசகரால் ஈழத்தமிழர்கள் பௌத்தத்தைவிட்டு சைவத்தினைக் கைக்கொள்ளத் தொடங்கிய காலம் எதுவென ஆராய்ந்தல் இன்றியமையாததாகும். இவை குறித்து இனி காண்போம்.

      தமிழ்நாட்டிலிருந்து சைவாசாரியாரொருவர் ஈழநாட்டிற்குச் சென்று அங்குள்ள பௌத்த மன்னனைச் சைவசமயத்திற்கு திருப்பினார் என இராஜரத்நாகரி யென்னும் இலங்கைச் சரிதநூல் கூறுகின்றதென்றும், அந்நூலிற் குறித்த காலம் கி.பி. 819-ஆம் ஆண்டினை ஒட்டியதென்றும் நெல்சன் என்பவர் தாம் எழுதிய மதுரைச் சரித்திரத்தில் (Madura Manuea) குறிப்பிட்டுள்ளதாகக் க.வெள்ளைவாரணர் குறிப்பிடுவார்.4  அத்துடன் இவர் மாணிக்கவாசகரினைக் குறித்த கால ஆய்வில் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம், கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சிபுரிந்த முதல் வரகுண பாண்டியனது காலமே என்பர். இதே கருத்தினை இவருக்கு முன்பும் டி.வி.சதாசிவ பண்டாரத்தார் கொண்டிருந்தார். ஆனால், தமிழ் வரலாறு எனும் நூலின் ஆசிரியரான தஞ்சை ஸ்ரீநிவாசப்பிள்ளையவர்கள் கி.பி. 862 முதல் 880 வரை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தவரென்பர்.

      மேற்கண்ட மாணிக்கவாசகர் காலம் குறித்த கருத்துக்களைக் கொண்டு ஆய்வதன் வழி ஈழத்தில் தமிழர்கள் சமய மாற்றம் அடைந்த காலத்தினை அறுதியிட முடியும் எனலாம். திருவாதவூராரின் வரலாற்றினைக்கூறும் திருவாதவூரர் புராணம் முதலாய நூல்களில் சோழமன்னனின் முன்பே தில்லையில் மாணிக்கவாசகருக்கும் ஈழத்துப் பௌத்தர்களுக்கும் வாதம் நிகழ்ந்து, ஈழத்து மன்னனும் பௌத்த பிக்குகளும் சைவராயினர் எனத் தெளிவுரக் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி காலவரையறைக்கு இன்றியமையாததாக அமைகின்றது. எனில் சங்ககாலத்திற்குப் பிறகு ஆட்சியைக் களப்பிரர்களிடம் பறிகொடுத்து வரலாற்றிலிருந்து மறைந்த சோழர்களைக் குறித்த செய்திகள் தமிழகத்தில் (ரேநாட்டுச் சோழர்களைத்தவிர) ஒன்றும் கிடைத்தில்லது. பிற்காலத்தில் சோழர்கள் குறித்த செய்தி விஜயாலயச் சோழன் தொடக்கமே கிடைக்கலாயிற்று. விஜயாலய சோழன் கி.பி. 850 –ஆம் ஆண்டில் முத்தரையரையிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றியதன்வழியே தமிழக வரலாற்றில் சோழர்கள் மீண்டும் வெளிப்பட்டதாக க.நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுவர். இதன்வழி கொண்டாய்ந்தால் ராஜரத்நாகரி நூலின்வழி நெல்சன் குறிப்பிடும் கி.பி.819 என்பதற்குச் சற்று அரை நூற்றாண்டுகள் பிந்தியேனும் இச்சமயமாற்ற நிகழ்வு நிகழ்ந்திருக்க வேண்டும். கி.பி.850-ஆம் ஆண்டில் விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியவுடன் வெகுவிரைவிலேயே சோழமண்டலம் இவன் ஆட்சியில் பல்லவர்களிடம் இருந்து பெறப்பட்டதென வரலாற்றாய்வாளர்கள் கருதுவர். அதன்படி நோக்கின் கி.பி. 870 ஆண்டுகளின் வாக்கில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்தவேளை தில்லையிலும் சோழர் ஆட்சியே நிகழ்ந்திருக்கும் இது க.வெள்ளைவாரனாரும், டி.வி.சதாசிவப் பண்டாரத்தாரும் குறிப்பிடும் முதலாம் வரகுணப்பாண்டியன் காலத்திலிருந்து (கி.பி. 792-835) பெரிதும் வேறுபட்ட தல்லவெனலாம். மாணிக்கவாசகர் 42 ஆண்டுகள் வாழ்ந்ததாகப் பழம்பாடல் ஒன்று கூறும். அதன்படி அவர் முதலாம் வரகுணன் காலத்திற்குச் சற்று பிந்தி விஜயாலயனின் தொடக்கக்காலத்தில் வாழ்ந்திருக்கலாம். மேற்கண்ட சான்றுகளின் வழி  ஈழத்தமிழ்ப் பௌத்தர்கள் கி.பி.850 முதல் கி.பி. 870 வரையிலான காலக்கட்டத்தில் மாணிக்கவாசகரால் சைவத்திற்கு மாற்றப்பட்ட நிகழ்வு நிகழ்ந்திருக்கும் எனக் கொள்ளலாம். (அன்றே கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் தமிழகத்தில் நுழையும் முன்பு சோழராட்சி சோழநாட்டில் நிலவியவேளை மாணிக்கவாசகர் வாழ்ந்திருக்கலாம். அக்கருத்தினையே மறைமலையடிகள், சி.அருணைவடிவேலு முதலியார் போன்ற அறிஞர்கள் கொண்டிருந்தனர் அதற்கான பல சான்றுகளும் உண்டு. அவற்றில் ஒன்று கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் சமணத்திலும் பௌத்தமே தமிழகத்தில் கோலோச்சியது. அதனால்தான் மாணிக்கவாசகர் சமணத்தைப் பெரிதாகக் குறிப்பிடாமல் பௌத்தத்தையே சாடினார் என்பதுவும், சங்ககாலத்தில் சோழநாட்டின் ஆதிக்கத்தில் ஈழமண்டலம் விளங்கிற்று. அதனால்தான் மேற்கண்ட திருச்சாழல் குறித்த கதையில் சோழ மன்னனுக்கு ஈழமன்னன் திறைவழங்கினான் எனக் கொள்ளின் கி.பி.மூன்றாம் நூற்றாண்டே எனக் கொள்வாரின் கருத்தாகவமையும்). எப்படியும் பௌத்தத்தின் வீழ்ச்சியை ஈழத்தில் தொடக்கி வைத்தவர் மாணிக்கவாசகரே என்பது திண்ணமாகிறது. இந்நிலையில் பிற்காலச் சோழப்பேரரசின் வளர்ச்சியும் செல்வாக்கும் ஈழத்தில் சைவத்தை நிலைநிறுத்துவதில் பெரிதும் வலிமை செலுத்தின. ஆயினும் படிப்படியாகவே பௌத்தம் தமிழர்களை விட்டகன்ற தெனலாம்.

தமிழகத்தில் நாகப்பட்டின பௌத்தப் பள்ளியை இராசஇராசன் கட்டியமை, வீரசோழன் காலத்தில் பொன்பற்றி புத்தமித்திரர் வீரசோழியம் எழுதினமையும், ஈழத்தில் திருகோணமலையில் இராசஇராசப்பெரும்பள்ளியை இராசஇராசன் கட்டியமையும், தீவகத்தில் இராசேந்திரன் புத்தப்பள்ளி கட்டியமையையும் கொண்டு நோக்கும்போது சோழப்பேரரசு காலத்தில் தமிழர்களிடம் நலிவுற்றிருந்த பௌத்தம் அருகி அருகி பிற்காலப் பாண்டியப் பேரரசின் தொடக்கத்தில் முற்றாக மறைந்த தெனலாம். சமண, பௌத்த, வைதீகம் என எச்சமய மாறுதல்கள் வந்தபோதும் தமிழத்திலும் ஈழத்திலும் அடிப்படையான மண்ணின் மைந்தர்களிடம் தமிழ்மரபு வழிபட்ட வழிபாடே விஞ்சிநின்றது. ஈழத்துத் தென்பாகமும், தமிழகத்துக் கொங்கு மண்டலமும் மேம்போக்கான அரசியல் மட்டத்திலான அயற்சமய தாக்கங்களைப் பெற்றதே ஒழிய அடிநிலையில் தங்களது மரபுசார் சமய முறைமையினையே இன்றளவும் பின்பற்றி வருவன குறிப்பிடத்தக்கது.

      இதன்வழி கி.பி. 14 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகத் தமிழகத்திலும், ஈழத்திலும் காணக்கிடைக்கும் பௌத்தச் சிற்பங்களும், தொல்லியல் சின்னங்களும் தமிழருக்கே உரிமையனவாம் என்பதினைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் தங்கள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் தொடர்பான அறிவினை வளர்த்துக் கொள்ளுதலும் இன்றியமையாதது. அத்துடன் அவற்றை பாதுகாத்தலுக்கான திணைக்களங்களையும் தாங்களே ஏற்படுத்தி தங்களுடைமைகள் பிறரிடம் களவுபோகாமல் பாதுகாத்தல் வேண்டும் அன்றேல் பல வரலாற்றுத் திரிபுகள் ஏற்படுத்தப்படுதலுக்கு வழியமைக்கப்பட்டுவிடும்.

முனைவர் ஜெ.அரங்கராஜ்

23-02-2017

அடிக்குறிப்புகள்

  1. மயிலை.சீனி.வேங்கடசாமி; பௌத்தமும் தமிழும்– 2010: பக். 24.
  2. A. நீலகண்ட சாஸ்திரி; தென்னிந்தியாவைப் பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்.
  3. மயிலை.சீனி.வேங்கடசாமி; பௌத்தமும் தமிழும். பக். 48.
  4. க.வெள்ளைவாரணன்; பன்னிருதிருமுறை வரலாறு- இரண்டாம் பாகம், பக். 68.

Loading

(Visited 162 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply