தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் – செல்வி

தொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் இருத்தலின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென போரின் இருபெரும் கூறுகளும் தமக்குள்ளே முரண்பட்டு, இருப்பிற்கான தடங்களை பதித்து முடிவிலி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், வெற்றியின் வீச்சத்தினைச் சடுதியாக அமர்முடுக்கும் உள்ளகக் காரணிகளில் உட்பகையும் அகமுரணும் முன்னிலையில் இருக்கின்றன. வெற்றியின் குறிகாட்டியை கணநேரத்தில் திசைமாற்றும் உட்பகையின் பரிமாணங்கள் பெரும் அரசுகளின் வீழ்ச்சியினைக் கூட தோல்வியின் அளவுகோல்களாக நிறுவிவிடுகின்றன. போரும் வாழ்வுமென எல்லைகள் கடந்து வாழ்ந்த எமது இனத்தின் எல்லைகள் இன்று கடல்மைல்களால் குறுக்கப்படுவதற்கு, புறத்தேயிருந்த எதிரிகளின் பலத்தைவிடவும் அகமுரண்களே காரணங்களாகின என்று கூறுமளவுக்கு, புறப்பகைகளுடனான வெற்றியும் அகப்பகைகளால் ஏற்பட்ட வீழ்ச்சிகளும் சான்றுகளாகி நிற்கின்றன. தமிழர்களின் வாழ்வியலின் தொன்மைக் குறிப்புக்களாக எஞ்சியிருக்கும் படைப்பு வெளிகளில் உட்பகையால் அழிந்த எமது அரசுகளின் வரலாற்றுக் குறிப்புக்களை வெறும் இலக்கியத்தளம் சார் பகுப்புக்களுக்கும் அழகியல் சார்ந்த நுகர்வுளுக்கும் உட்படுத்திய அளவுக்கு அந்த படைப்புவெளிகள் கூறும் அரசியலையும் ஆட்சியியலையும் ஆராயத் தவறியதாலேயே மீண்டும் மீண்டும் தோல்வி எனும் புள்ளியிலிருந்து எமக்கான எழுச்சியினை மீட்டெடுக்கவேண்டிய நிலையில் எம்மினம் இருக்கின்றது. எம்மவர்கள் கூறிச்சென்ற, அவர்களின் தோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்களை கற்கத் தவறியதால் தான் இன்று எதிரியால் கூட நெருங்கமுடியாமலிருந்த எம்மினத்தின் விடுதலையின் நெருப்பானது நந்திக்கடலிலே அணைக்கப்பட்ட துயர வரலாற்றின் சாட்சியங்களாகி நிற்கிறோம். நந்திக்கடலின் அலைகளுக்கிடையே பதுங்கியிருக்கும் வீரத்தின் எச்சங்கள் நந்திக்கடலையே நெருப்பாக்கும் என்ற கனவின் காத்திருக்கவேண்டிய நிலையில், இழப்புக்களின் வலியிலும் பயத்திலும் ஒரு வெறுமையான உளவியல் நிலையிலுள்ள எம் இனமானது, இனியாவது தோல்வியின் வலிகளையும் பாடங்களாக்கி, உள்ளக அரசியல் தந்திரங்களும் போரியல் சூழ்ச்சிகளும் நிறைந்த எமது வரலாற்றினை திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற நோக்கில் இப்பத்தி வரையப்பட்டிருக்கின்றது.

                பண்டைத் தமிழர் பண்பாட்டின் காட்சிப் படிமங்களாக எஞ்சியிருக்கும் இலக்கியங்கள் மரபு பற்றிய மீள்வாசிப்பிற்கான முதனிலைத் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. தமிழர் மரபில் போரும் அது சார்ந்த வாழ்வியலுமே முதன்மைப்பட்டு இருந்ததால் பெரும்பாலான படைப்பு வெளிகளில் போர்க்களமும் அரசியல் தளமுமே விரவிக்கிடக்கின்றன. போர்ப் பரணிகளையும் தோல்விகளையும் மட்டுமே முதன்மைப்படுத்தி, தோல்வியின் காரணிகளை ஆராய மறுக்கும் இன்றைய தமிழர்களுக்கு அன்றைய எம்மவர்களின் கற்றுக்கொண்ட பாடங்களை நோக்குவது சிறந்தது. காலமாகவும் களமாகவும் பாடப்பெற்ற சங்க இலக்கியங்களில் எமக்கான வேரினைத் தேடின்,  புற இலக்கியங்களில் தலைவன் ஒருவனின் வழிவந்த தமிழ்மரபினை காணலாம்.

நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

சங்ககால மன்னன் மக்களினால் அவர்களுடைய உயிர்களுக்கு ஒப்பானவனாகவும் அவனை மிஞ்சியவர் எவரும் இல்லை எனவும் வீரத்தாலும் சொல்வன்மையாலும் ஆட்சித் திறத்தினாலும் தன் மக்களை ஆள்பவனாகக் காணப்பட்டான் என்று இப்புறப்பாடலினூடாக தெரிகிறது. ஆட்சிப்பரப்பின் தன்மையாலும் அரசனது பேராண்மையாலும் மக்களுடைய வளமும் தீர்மானிக்கப்பட்டது. நிலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த அவர்களது வாழ்வியலில் நில உடைமையின் எல்லைப் பெருக்கமே அரசின் வீரமாகியது.

சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச்சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்திலே மெல்ல மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசும் தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருத்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும் தொகையிலும் சிறந்த உழவர் (மருத நிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான்.” என்று பேராசிரியர் க.வித்யானந்தன். குறிப்பிடுகிறார்.

இவ்வாறான மன்னர் பரம்பரையின் ஆட்சி அதிகாரமானது பரம்பரையாக கடத்தப்பட்டு வந்தது.

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்

 பாறர வந்த பழவிறற் றாயம்

எனப் புறநானூறு கூறுவதிலிருந்து தந்தைக்குப் பின்னர் மகன் பட்டத்துக்கு வருவதே முறைமை என அறியலாம். அரசருக்கு ஆண் குழந்தை இல்லாத காலத்தில்தான் இவ்வழக்கம் தவறியது. எடுத்துக்காட்டாகச் சோழர் பரம்பரையில் வேல்பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளியின் ஆட்சி வரை கிள்ளி பரம்பரையினரே உறந்தையிலிருந்து ஆண்டு வந்தனர். அவனுக்குப்பின் சென்னிப் பரம்பரையைச் சேர்ந்த உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னி அரசனானான். இம்மாற்றம் வேல்பல் தடக்கைப் பெருவிறலில் கிள்ளிக்கு ஆண்மகவு இன்மையால் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஒருவன் அரசாட்சிக்கு வருவது எப்பொழுதும் அமைதியாக நிகழ்ந்தது என்று கூறுவதற்கில்லை.. சிறு வயதில் ஒருவன் அரசாட்சிக்கு வருமிடத்து அந்த அரசில் தங்கியுள்ள சிற்றரசர்கள் அதனை ஏற்கமறுத்த கணமானது அகமுரண்களின் தோற்றுவாயாகியது. கரிகாலச் சோழன் வயதில் மிகச் சிறியவனாக இருந்தமையினால் உறவுகள் அவனைச் சிறைபிடித்தனர் என்கிறது பட்டினப்பாலை. ஆட்சியுரிமையை விரைவாகப் பெறுவதற்காக கோப்பெருஞ்சோழனுடன் அவருடைய மைந்தர்கள் போர் புரிந்திருக்கிறார்கள் என்பதும் வரலாறு.

அரசு என்ற ஆட்சிபீடத்தில் ஏறியவுடன் எல்லைகள் மீதான ஆர்வமும் மன்னர்களுக்கு வந்துவிடுகின்றது. எல்லைச் சண்டைகளிலும் அதிகார வீச்சத்திலும் அவர்களது நில எல்லை பரந்து விரியும். நேரடியாக போர் புரிந்து வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில் “உறவாடிக் கெடுக்கும்” போர்த் தந்திரத்தால் எதிரியினை வீழ்த்துவார்கள்.

இதனையே வள்ளுவமும்,

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.”

  என்று குறிப்பிடுகிறது. அதாவது உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

கண்முன்னே களத்திலே நிற்கின்ற எதிரியின் அடுத்த கண செயற்பாட்டினை வீரனொருவனால் இலகுவில் ஊகித்து அவனது நடவடிக்கைகளை முறியடித்துவிட முடியும். ஆனால், உள்ளிருக்கும் பகைவன் யாரென அறியாத போது, அந்த எதிரியினால் அழிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.  ஆதலால் உட்பகையினையும் அகமுரணினையும் ஏற்படுத்தி பகைவர்களை அழிக்கும் தந்திரோபாயமானது போர்த்தந்திரங்களில் ஒன்றாகவும் நோக்கப்பட்டது. அகமுரணாணது போர் மனநிலையின் அடிப்படையில் தோற்றுவிக்கப்படின் அது மிகப்பெரிய யுத்த தந்திரோபாயமாகவும் எதிரியை கருவோடு அழிக்கும் திறன்மிக்க உத்தியாகவும் செயற்படும். இதனை பழமொழி நானூறு என்னும் இலக்கியத்தின் குறிப்பு பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

  ‘மன வேறுபாடு’ என்பது எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.

மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)

ஆற்றும் பகையால் அவர்களையவேண்டுமே

வேற்றுமை யார்க்குமுண் டாகலான்ஆற்றுவான்

நூற்றுவரைக் கொன்று விடும்‘.”

 பகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ என்பது பழமொழி.

                நீண்டகாலத் திட்டங்களின் பிரதான கூறாக இருக்கின்ற இந்தப் போர் நுட்பமானது, ஒரு இனக்குழுமத்தினையோ அல்லது ஒரு அரசாட்சியையோ முற்றாக அழிக்கவேண்டுமெனில் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த ஆயுதமாகும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் திட்டமிடல்களின் நுண்ணிய ஊடுருவல்களும் இந்த வகை நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டவையேயாகும். மிகச்சிறந்த புலனாய்வுப் பிரிவும் செயற்றிறன் வல்லமை இருப்பின் இந்நுட்பத்தினால் எதிரியை அடியோடு அழிக்க முடியும். மிகப்பெரிய வெற்றிகளின் பின்னால் இந்த திட்டமிடப்பட்ட புலனாய்வு உத்தியும் பங்கெடுக்கும்.

                எதிரி ஒருவரெனில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகளை எதிர்கொள்ளவேண்டி வருமிடத்து, அவர்களிடத்தே இரண்டகம் செய்து அழிக்கவேண்டும் என்கிறது சங்ககால நுட்பம்.

“யானும் இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும் ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே,  பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை” இப்படிச் சொல்லி, அவரும் தம்முடனே கூடிப் படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளுமாறு, பகைவரிடமிருந்து அவரைப் பிரிந்து விடத் தூண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடுதலோடு ஒக்கும்.

யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்

வீரம் செயக்கிடந்த(து) இல்லென்றுகூடப்

படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே

இடைநாயிற்(று) என்பிடு மாறு‘.

பகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உறவாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. என்பு பெற்ற நாய் கள்ளர்களுக்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வந்தாரும் மாறி விடுவர் என்பதாம். குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் இலகு என்பது போல, பிரிந்துவிட்ட அந்தப் படைகளை வெல்வதும் இலகுவாகிவிடும்.

ஆனால், இதே நுட்பங்களைப் பயன்படுத்தி எதிரியும் எம்மை அழிக்கக்கூடும் என்ற விழிப்புடன் இருப்பதும் எம் படையின் வெற்றியை நாம் உறுதிப்படுத்துவதாக அமையும். இனத்தின் இருப்பிலும் பாதுகாப்பிலும் விழிப்பாக இருக்கத் தவறின் இதே உத்தியை எதிரி எம்பக்கம் திருப்பி, அதில் இலகுவாக வெற்றியும் பெறுவான்.

மூவேந்தர்களின் உட்பகையானது வடநாட்டானிடம் தமிழகம் விழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.    உட்பகையினால் வடநாட்டாரின் ஆளுகைக்குள் தமிழகம் வந்தது மட்டுமல்லாமல் ஈழ (இலங்கை) அரசர்களும் மூவேந்தர்களின் உட்பகையை தமக்குச் சாதகமாக்கி அவர்களை அழிக்க முனைந்த வரலாறும் பதியப்பட்டிருக்கின்றது. கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு (இடம் –இராமனாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம்) ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் உள்ள கல்வெட்டில்,

 “இலங்கை அரசன் பராக்கிரமபாகு “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற கோட்பாட்டின் மூலம் ஈழ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சோழ அரசர்கள் மேல் இருந்த பகைமையை காரணம் காட்டி, குலசேகர பாண்டியனை சோழர்மேல் படையெடுக்க வைக்கிறான். அதன் மூலம் மதுரை வாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்து வீரர்களின் தலைகள் அப்புறப்படுத்தப்பட்டன” என்ற செய்தி பதியப்பட்டிருக்கின்றது.

போரில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரமானவையல்ல என்பதனால், வெற்றி பெற்றவன் தோல்வியடைந்தவனின் வெஞ்சினத்தின் வீச்சத்தை தாங்குமளவுக்கு தன் படையின் பலத்தினை வைத்திருத்தல் அவசியமாகும். ஏனெனில் வெஞ்சினத்தின் துலங்கல் அதன் முழுப்பலத்துடன் வெளிப்படும். உட்புகுந்து அழித்தல் எனும் போரியல் நுட்பத்தினைக் கூறுகின்ற அதேவேளை அவ்வாறான உட்பகையிடம் சிக்கி, நாங்களே அழிந்துவிடக்கூடாது எனவும் பழமொழி நானூறு கூறிச்செல்கிறது.

பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.

வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?

கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு

புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,

அள்ளில்லத்(து) உண்ட தனிசு‘.

 என  உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது.

இதனையே,

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.”

என்ற பொய்யாமொழிக்கு வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். என வரதசாசனார் பொழிப்புரை கூறுகிறார்

அதனாலேயே எதிரியை அழிக்கும்போது, அதன் வேரினையும் ஒட்ட அழிப்பது சிறந்ததாகும் என்ற போரியல் நுட்பத்தினையும் இலக்கியம் கூறுகின்றது.

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,

இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்

விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே

அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு

தாளை விட்டு வைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அது போலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரை குறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துத்தான்.

உட்பகைவர்கள் மீது எப்போதும் அச்சப்படுதல் என்பது அரசை தக்கவைப்பதற்கான வழியாகும். பண்டைத் தமிழன் உட்பகை நுட்பத்தினை அறிந்து வைத்திருந்தமையால் அது குறித்த அச்சத்துடனே இருந்திருக்கிறான். அதனை நீதி நெறி விளக்கம் பின்வருமாறு சுட்டுகின்றது.

புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்

அகப்பகை ஒன்றஞ்சிக் காப்பஅனைத்துலகும்

சொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே

பல்காலுங் காமப் பகை

உலகம் முழுமையும், தமது ஒரு வார்த்தையினாலே வயப்படுத்தக்கூடிய முனிவர் பன் முறையும் காமமாகிய உட்பகையை மிகுதியும் வருந்தி  காவல் செய்வார். அதுபோல் புறப்பகை கோடிக்கு மேல் அதிகமாய் இருந்தாலும்,  அதற்காக அஞ்சாமல், உட்பகை ஒன்றேயானாலும் அதன் துன்பம் பெரிதாகையால் அதனை அஞ்சிக்காவல்செய்வர்.

                உட்பகை காரணமாக மன்னர்கள் தமக்குள்ளே முரண்படும்போது, அந்தப் போர்களை தடுப்பதற்கு புலவர்கள் முயன்றிருக்கிறார்கள் என்பதற்கான பல உதாரணங்களை புறநானூறு கூறுகின்றது.  உதாரணமாக, நலங்கிள்ளியும்     நெடுங்கிள்ளியும்     பகைமை      கொண்டு    பலகாலம்  போர் புரிந்தனர். அப்போது கோவூர் கிழார்’  உன்னுடைய பகைவன் பனை மாலை சூடிய சேரனுமல்லன். வேம்பினை அணிந்த பாண்டியனுமல்லன், உன்னைப் போல் ஆத்தி மாலை சூடியவனே ஆவான் என்று பின்வரும் பாடலினூடாக இடித்துரைக்கிறார்

 இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்

கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்

 நின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே நின்னோடு

பொருவோன் கண்ணியு மார்மிடைந்தன்றே

ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே

இருவீர் வேறலியற்கையு மன்றே, அதனாற்

குடிப் பொருளன்று நுஞ்செய்தி      (புறநானூறு – 45)

இவ்வாறு புறநானூற்றுப் பாடல் அறிவுறுத்துகிறது.

தமிழரசர்கள் தம்முள்ளே பல அகமுரண்களைக் கொண்டிருந்தாலும் எதிரியினைத் தூர நிறுத்துவதில் தம்முள் ஒன்றுபட்டு இருந்திருக்கின்றனர் என்ற செய்தியையும் அகநானூறு சுட்டுகின்றது.

தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” (அகநானூறு 31)

தமிழ்வேந்தர் மூவர் காக்கும் மொழிபெயர் தேய மலைகளையும் தாண்டி என்ற பொருள்படும் இப்பாடல் தொடரின் மூலம் மூவேந்தர்களிடையே ஏதோவொரு ஒப்பந்தமும் புரிதலும் இருந்திருக்கின்றது என்பது புலனாகின்றது. இதைக் கலிங்கவேந்தன் காரவேலனின் புகழ்பெற்ற அத்திகும்பாக் கல்வெட்டும் உறுதி செய்கிறது. இந்தக் கல்வெட்டில்”திராமிர சங்காத்தம்” என்ற பாகதச் சொல்லால் தமிழ் மூவேந்தர் உடன்பாடு குறிக்கப்படும்.

திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

  1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. ஐவேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.
  2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;
  3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிறுத்திச் செயற்பட வேண்டும். ஐநிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.

இவற்றினை நோக்கும்போது  குறிப்பிட்ட காலத்தில் வேற்றின எதிரிகளிடமிருந்து தமிழர்கள் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

ஆனால் சிலப்பதிகார காலமானது சோழரும் பாண்டியரும் வலிவின்றி அதே பொழுது சேரரோடு முரணிய காலமே ஆகும். தமிழ் மூவேந்தர் உட்பகை கூடிய காலமாததால், அதைக் குறைக்கும் முகமாய் தமிழ்-தமிழர் என்பதை முன்னிறுத்தி, சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாம் என இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். சிலப்பதிகாரத்தின் மீள்வாசிப்பானது பரந்து விரிந்த தமிழ்த் தனியரசின் எழுச்சிக்கு வித்திடக்கூடும்.

                கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அகமுரண்கள் தோன்றி அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால்  ஏற்பட்ட அவர்களின்  வலுவிழந்த நிலையைப் பயன்படுத்தி ‘களப்பாளர்’ அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர்.

தமிழரின் வாழ்வியலில் அகமுரண்களை உருவாக்கிய மிக முக்கிய காரணியாக மதத்தினைக் குறிப்பிடலாம். மொழியால் இணைந்திருந்த தமிழ் மன்னர்களை பிரித்தாண்ட மிகப்பெரும் சக்தி மதமாகும். சைவ சமண பௌத்த மதங்களுக்கான போட்டியில் தமிழ் அரசுகள் துண்டாடப்பட்டன.

உட்பகையானது மரபு வழியாகவும் சூழலின் தாக்கங்களினாலும் ஏற்படும் ஒரு உளவியல் என அறிவாளர்கள் கருதுகின்றனர். சங்ககாலத்தில் ஏற்பட்டி வர்க்க முரண்பாடுகள் அதன் சமுதாயத் தளத்தில் நிகழ்ந்ததே. ஓயாத போரும், போரின் இழப்புக்களும் வெற்றி என்ற தளத்தின் மறுபக்கத்தின் கோரமுகமும் சமுதாயத்தின் உற்பத்தி வலுவை சமுதாயம் சார்ந்த உற்பத்திகளின் பொருண்மியத்தை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியபோது, போரிற்கான வரிச்செலவின் அதிகரிப்பின் மூலம் வாழ்வியல் நெருக்கடிக்குள் உள்ளாகியிருந்த சமூகத்தில் அரசுக்கும் மக்களுக்குமான முரண் தொடங்கியது. சமணத்தையும் பௌத்தத்தையும் ஏற்றுக்கொண்டிருந்த வணிகர் சமூகமானது, வாழ்வியற் சடங்குகளை முதன்மையாகக் கொண்ட சாதாரண மக்களுடன் இணைந்து, வைதீகத்தின் பிரதிநிதிகளான வேந்தர்களை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியது. போர்க்குடிகளினதும் விவசாயக்குடிகளினதும் மேலாண்மையின் கீழ் களப்பிரர்களின் கையில் மூவேந்தர்களின் கொடியும் வீழ்ந்தது. வைதீகம் சார்ந்த புரோகிதர்களின் கட்டினுள் மன்னன் இருப்பதைக் கண்ணுற்ற மக்களின் இந்த எழுச்சியே தமிழர்களிடையே எழுந்த மக்கள் புரட்சியின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. ஆனால் தமிழ் மக்களுக்கும் மன்னர்களுக்குமிடையே இருந்த இந்த அகமுரணின் உளவியலை சரியாகப் பயன்படுத்திய எதிரியின் கைகளில் தமிழனின் நாட்டினை தாரைவார்த்த புள்ளியும் இதுவாகத்தான் இருக்கின்றது. இந்த ஆட்சிமாற்றத்துடன் அன்று தொடங்கிய புற இனக்குழுமங்களின் ஊடுருவலும்  இன்றுவரைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

 போர்கள் நிலம் சார்ந்ததாக இடம்பெற்றிருப்பினும்  சங்கமருவிய காலத்தில் பொருளாதாரத்தினை அடிப்படியாகக் கொண்ட முரண்கள் ஏற்படத்தொடங்கின. பெரும்பாலும் சமண சமயத்தினை தழுவியிருந்த வணிகர் குழாமிற்கும் சைவ வைணவ சமயங்களின் நிலவுடமை அரசுக்குமிடையே மோதல்கள் மதத்தினை அடியொற்றி ஆரம்பமாகின. கோவிற் பண்பாட்டுக்காலம் என சிறப்பிக்கப்படும் பல்லவர் காலத்திலே மதத்தின் பெயரால் சமணர்களின் பொருளாதார வளம் ஒடுக்கப்பட்டது.

பௌத்தத்தின் எழுகையும் சமவுடைமை என்று மக்களுக்குள் கருத்தூட்டம் செய்யப்பட்டிருந்த கற்பனைப் பொதுவுடைமை மாயையும் மக்களை இனம் சார்ந்து சிந்திக்க முடியாதவர்களாக மாற்றியது. பௌத்த பிக்குகளின் அரசியல் பிரவேசமும் இக்காலத்திலே தான் நிகழ்ந்தேறியது. களப்பிரர் காலத்தை தொடர்ந்து வந்த பல்லவ இராச்சியத்தில் ஆட்சியாளர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத அதிகார வர்க்கமாக பௌத்த சங்கம் மாறியது. மகேந்திர பல்லவனால் எழுதப்பட்ட “மத்தவிலாசப் பிரகசனம்” எனும் நாடக நூலில் பௌத்த துறவிகளின் அதிகாரத்தின் வீச்சம் சுட்டப்பட்டுள்ளது. பௌத்த சங்கமானது பெரும் நிலவுடைமை நிறுவனமாக அரசுக்கு நிகரான அதிகாரத்துடன் இருந்தது. மதத்தின் வீச்சம் அரசாங்கத்தின் அசைவுகளை நிர்ணயிக்கும் என்பது இன்று இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மதத்தின் காரணமாக அடித்தட்டு மக்களிடம் எழுந்த அரசு வெறுப்பானது அக முரணாகி, ஒரு இனத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றமை இதிலிருந்து புலனாகின்றது. இதனையே

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி.”

அதாவது, அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும் என்று நிறுவுகின்றது திருக்குறள்.

                மக்களின் அகமுரணை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையாகவிருந்த வரிக்குறைப்பையும் விவசாயத்தையும் செய்துகொடுத்ததன் மூலம் அவர்களுடைய எதிர்ப்பு உளவியலைத் திருப்திப்படுத்தியதன் மூலம் இனம்சார் எழுச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் களப்பிரர்கள் வெற்றிகொண்டனர். ஐவகை நிலம் சார்ந்த இயற்கை வாழ்வு வாழ்ந்த மக்களை உழவுநிலை மக்களாக மாற்றம் செய்யும் உத்தியாக உழவுத்தொழிலும் உச்சம் பெற்றது. குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்களும் தம் வாழ்நிலைகளை மருத நில வாழ்நிலையாக மாற்றம் செய்துகொண்டனர். இன அழிப்பின் கூறுகளாகவும் இதனை நாம் நோக்க முடியும். நிலம் சார்ந்த போர்முறை மரபின் அழிப்பிற்கான ஒரு தந்திரமாகவே இந்த மடைமாற்றத்தினை நாம் நோக்குதல் வேண்டும்.

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும்

கெட்டுப்புடைப்பெண்டிர் மக்களும் கீழும்

பெருகிக்கடைக்கால் தலைக்கண்ண தாகிக்

குடைக்கால் போற்கீழ்மேலாய் நிற்கும் உலகு.” (நாலடியார்-368)

இப்பாடல் உடைப்பெருஞ்செல்வராக பார்ப்பாரையும், சான்றோராக அரசகுடியினரையும் குறிப்பிடுகின்றது. சங்க கால வாழ்வியலில் தலைமக்களின் புடைப்பெண்டிராக செவிலித்தாய், தோழி மரபினர் பணி செய்தனர். இம்மரபினர் வேளாளரில் உயர் அடுக்கினராவர். இவர்களுக்குக் கீழ்நிலையிலும் உழுகுடிகளாக வேளாளர் வாழ்ந்தனர். புடைப்பெண்டிர் மக்களும், கீழும் பெருகி எனக் கூறப்படுவது, செவிலித்தாய், தோழி மரபினரும் அவருக்குக் கீழ்நிலையிலிருந்த வேளாளரும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வைக் குறிப்பிடுகின்றது. இந்நிலையானது, குடையை விரித்து தலைகீழாகப் பிடித்தது போல், கீழ்மேலாய் உலக நடப்பு உள்ளது என புலவர் ஆதங்கத்துடன் கூறுகின்றார். களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட பழமொழி நானூறும் இக்கருத்தையே கூறுகின்றது.

உறை சான்ற சான்றோர் ஒடுங்கி

உறையநிறை உள்ளர் அல்லர் நிமிர்த்து

பெருகல்வரைதாழ் இலங்கு அருவி

வெற்பஅதுவே சுரை ஆழ அம்மி மிதப்ப (பழமொழி நானூறு)

நிறைந்த குணங்களையுடைய, அரசர்குடியான சான்றோர் ஒடுங்கி உறைய, நிறை உள்ளம் இல்லாதாரான வேளாளர் நிமிர்ந்து நிற்கும் நிலையானது, நீரில் சுரைக்காய் ஆழ்ந்துவிட, அம்மி மிதப்பது போல் உள்ளது என புலவர் குறிப்பிடுகின்றார்.

இவை களப்பிரர்கால சமூக அடித்தளத்தை தெளிவாக்குவதுடன் சமணத்தை ஆதரித்தவர்களுக்கும் சைவ எழுச்சிக்கு அடித்தளமிட்ட வேளாளருக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாட்டினையும் குறிப்பால் உணர்த்திநின்றன எனலாம். ஆனாலும் அம்முரண்பாட்டிலிருந்து பக்தி இயக்கம் தோன்றியதை குறிப்பிட்டாக வேண்டும்.  மதத்தின் பிடியில் கட்டுண்ட மக்களை மீண்டும் தமிழ்த்தேசிய உணர்வினால் ஒன்றாக்கி மொழியின் வழியில் கொண்டு செல்வதற்கு பக்தி இயக்கம் முன்னின்றது.

தமிழ்மொழி உணர்வினைப் பயன்படுத்தி மீண்டும் மத்திய சோழப் பேரரசின் ஆட்சி வலுப்பெற்றாலும் கூட, அங்கு சைவ பக்தி இயக்கமே முன்னிலையில் நின்று அந்த ஆட்சிமாற்றத்தையும் நிகழ்த்தியது. அங்கு மதத்தின் போர்வையில் மொழி என்னும் ஆயுதத்தின் வன்மையால் இழந்த அதிகாரம் தமிழனிடம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆயினும் அதற்கு பின்வந்த காலங்களில் எல்லைகளற்ற தமிழர் நிலம் எல்லைகளுக்குள் சுருங்கத் தொடங்கியது. இன்று தமிழர்களாகிய எமக்கென ஒரு தனிநாடு இல்லாத வெற்று மனிதர்களாக நாம் தனித்திருப்பதற்கு, அகமுரண்களையும் உட்பகையையும் கவனிக்க மறுத்த எங்களது அலட்சியத் தன்மையும் மூலமாகி நிற்கின்றது. எதிரியின் நுண்ணிய இன அழிப்பின் கூறுகளுள் சிக்குண்டு இனத்தின் இழைகள் அறுபடுவதைக் காணாமுடியாத அளவுக்கு அரசியல் விழிப்பின்மையால் எம் சமூகம் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது.

 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும். சங்ககாலம் முதல் இன்றுவரைக்கும் வீரத்திற்கு பெயர்பெற்றிருந்த எம்மினத்தின் அழிவு உட்பகையினாலேயே எழுதப்பட்டிருக்கின்றது. உட்பகையும் அகமுரணும் அறிவுசார்ந்த முடிவுகளிலிருந்து தோன்றுபவை அல்ல. ஆனால் அறிவுசார்ந்த தளத்தினூடாக பிறரிடம் அவற்றை ஏற்படுத்த முடியும்.  அவை உணர்ச்சியின் முரணில் தோன்றும் உளவியல் முரண்களாகும். எம் இனத்தில் நிகழ்ந்து முடிந்திருக்கும் அவலத்தினதும் தோல்வியினதும் பதிவுகளில் உட்பகை உள்நிற்கின்றது. வரலாறுகள் கூறும் பாடங்களை நாம் அறிந்திருப்பினும், போரியல் நுட்பங்களில் எதிரியின் பலத்தினை களமுனையில் முறியடிக்கும் வித்தையை அறிந்துவைத்திருந்த அளவுக்கு, அகமுரண்களைக் கையாளும் விதத்தினை அறிந்துவைக்காதமையினாலோ என்னவோ, இன்று தோற்றுவிட்ட இனங்களின் குறியீடாகி நிற்கிறோம்.  எமக்கான மீள் எழுகையின் பக்கங்களில் உட்பகைகளுக்கும் அகமுரண்களுக்கும் விலக்களிக்க வேண்டுமெனில், வரலாற்றினை உலகை ஆண்ட இனம் என்ற மனநிலையில் பார்ப்பதை விடுத்து, எம் அழிவுகளின் பின்னாலிருந்த படிப்பினைகளை கற்றுக்கொண்டாக வேண்டிய தேவை இருக்கின்றது. அழகியலின் மாயைகளுக்குள் நின்று இலக்கியங்களை பகுப்பாய்வு செய்யாது, அவை கூறிச்சென்ற அரசியலையும் கவனத்தில் எடுத்து, நுண்ணழிப்புக்களுக்குள் பலியாகிக்கொண்டிருக்கும் எம் இனத்தின் மீளுகையின் தடத்தில் பயணிப்போமா?

“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்”

செல்வி

12-02-2017

 

Loading

(Visited 63 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply