தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! – திரு

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை

எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்

 

மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த

ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்

இந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்

தந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்

 

நாலு தங்கைக்கு நீ தமையன் என்பதனால்

ஏலும் வரை யாரும் உன்னை விடுவதில்லை

இந்த முறை மட்டும் என்னை விடுங்களென

நொந்து நீ அழுது விம்மியதால் வழியின்றி

 

அன்றிரவே உனையனுப்பி வைத்தார்கள், மறுவாரம்

சென்றவழித்தடத்தை சேகரித்த செய்திகளை

எங்கெல்லாம் ஏதிருக்கு உள் நுழைந்து எவ்வழியால்

அங்குள்ளே வந்து அடைந்திடலாம் என்பதனை

இங்கே நீ அனுப்பி வைத்திருந்தாய் அன்றிரவே

அங்கிருந்த உந்தன் தொடர்பறுந்து போயிற்று

 

நாட்கள் நாலைந்தைக் கடக்கின்றது உள் வந்த

ஆட்கள் சிலருந்தன் அடையாளம் சொல்லுகிறார்

ஊருக்கும் உறவுக்கும் உரத்தென்றும் சொல்லேலா

வேராகிக் கிடக்கின்ற உன் வீரத் தியாகத்தை

உள்ளேயே நட்டு மனத்துள்ளே அழுது விட்டு

மெள்ள வெளியாலே போகையிலே உன் தந்தை

 

ஏன் நீங்கள் இண்டைக்குப் பொங்கேல்லை என்றபடி

தான் எமக்குக் கொண்டு வந்த பொங்கல் பழங்களினை

எங்கள் கையினிலே கொடுத்து விட்டு மெதுவாக

எங்க என்ரை பெடி எனச் சிரித்துக் கேட்கையிலே

அங்கஞ் சிதறி ஆயிரமாய்க் கண் கொண்டு

ஓங்கி வெடித்துள்ளே உலுப்பி அழுததெடா!!

 

எப்படியோ அன்றைக்கு ஏதோ சமாளித்து

அப்பா அடுத்த முறை, எனச் சொல்லி அனுப்பி வைத்தோம்

அதன் பிறகு வந்த ஆண்டுகளில் வருகின்ற

புதுவருசம், பொங்கல், உன் பிறந்த நாட்களென

உனைப்பார்க்க வந்து அலுத்துப் போய் மனஞ்சோர்ந்து

எனக்குண்மை சொல்லுங்க தம்பி! என அழவும்

 

இனி மேலும் மறைக்க இயலாமல் அவர் தோளை

கனிவாக அணைத்துள்ளே சென்று சுவர் மேலே

துணிவின் தோற்றமாய்த் தொங்குகின்ற உன் படத்தை

துணிவறுந்து முகம் தூக்கிக் காட்டியதும் அதிலேயே

குந்தி இருந்து குழறி அழுத படி

எந்த நினைவுமற்று வீழ்ந்து விட்டார் எழும்பிய பின்

 

வார்த்தைகள் எதுவுமற்று வனாந்தரமாயிருந்த

பார்வைகள் மட்டும் நிலம் பார்க்கும் அறை விட்டு

ஏதும் சொல்லாமல் எழுந்து சென்றார் வாசல் வரை

ஏதும் பேசுபதற்கு இயலாமல் நாம் தொடர்ந்தோம்

வாசலிலே வைத்து மனமிறுக்கி மெதுவாக

கூசி நா தடக்க சொன்னோம் நாம் இதை எல்லாம்

 

வீட்டுக்குச் சொல்லிவிட வேண்டாம் தெரிந்தாலோ

காடே கலங்கி விட அழுவார்கள் அவர் அழுதால்

ஊரே அறிந்துவிடும் ஒரு செய்தி ஆகி விடும்

உங்காலும் அங்காலும் தெரியவரும் எனச் சொல்ல

தலை மட்டும் ஆட்டிவிட்டுப் போனார் அதன் பிறகு

வருசம், பொங்கலுக்கு வருவதில்லை வீட்டினிலே

 

என்ன தான் சொல்லி இருந்தாரோ ஆனாலும்

உன் பிறந்த நாளுக்குத் தவறாமல் வந்திடுவார்

ஏதும் பேசாமல் இருந்துள்ளே அழுது விட்டு

மெதுவாக எழுந்து போய் விடுவார் இப்படியே

ஆண்டுகள் உருண்டோடிப் போயிற்று அன்றைக்கு

ஆஸ்பத்திரிக்கேதோ அலுவலுக்கு போயிருந்தேன்

 

அங்கே உன் அம்மாவும் தங்கைகளும் நின்றிருந்தார்

அப்பாக்குச் சுகமில்லை என்றார்கள் நானும் போய்

என்னப்பா என்று கேட்டிடவும் கை பிடித்து

இன்னும் நான் எதையும் சொல்லேல்லை இவையளுக்கு

என்னாலும் தாங்க முடியவில்லை ஆனாலும்

உண்ணாணை எதுவும் சொல்லவில்லை தம்பி என்றார்

 

உலகின் சோகங்கள் எல்லாமே ஒருமித்து

உயிரின் இதயத்தை உதைப்பது போலிருந்ததடா

பெருமிதமும் சோகப் பெருஞ்சுமையும் கண்ணாலே

பீறிட்டுப் பாய்ந்து பொழிவதற்குள் சமாளித்து

கையெடுத்துக் கும்பிட்டு தலை தடவி தலையாட்டி

மெய் நடுங்க மெல்ல விடை பெற்றேன், மறு நாளே

 

அவரிறந்து போனாராம் அறிந்தோம், சா வீட்டில்

எவரும் நீ எங்கே என்பதனைக் கேட்பதற்கு

தவறியும் விடவில்லை உன் குடும்பம், போம் பொழுதில்

அவனெங்கோ தூர நிக்கின்றான் வர மாட்டான், தம்பிகளை

அவனெங்கே எனக்கேட்டு அழுத்தத்தைக் கொடுக்காதீர்

எனச் சொல்லிப் போனாராம் உன் அப்பா.., அதன் பின்னே

 

ஏதேதோ நடந்து போனதடா என் நண்பா

இனியேனும் சொல்லி விடுவதற்கு அங்கேயும்

உன் குடும்பத் தொடர்போ தோழர்களோ இல்லையடா!

ஒரு வேளை

உயிரோடிருந்தால் உன் அம்மாவும் தங்கைகளும்

ஒவ்வோர் முகாம்களிலும் எப்பேனும் இருந்துவிட்டு

ஒட்டப்படுகின்ற பட்டியலின் பெயர்களிலும்

உயிரை உலுக்குகின்ற ஒளிப்படங்கள் தன்னிலுமாய்

உனைத் தேடிக் கொண்டிருப்பார்கள்

இப்பொழுதும்.

 

திரு

 3,252 total views,  2 views today

(Visited 9 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply