உரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே! – துலாத்தன்

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கான காரணங்களாக திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிர்வாகமுறை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் எனப் பட்டியற்படுத்தினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் மக்களின் விழிப்புணர்வற்ற தன்மையும் மழுங்கிப் போய்க்கொண்டிருக்கும் போராட்ட குணமுமேயாகும்.

வேலணையில் மருத்துவ மாது தர்ஷிகா படுகொலை, சாவகச்சேரி மாணவன் கபில்நாத் படுகொலை, சுண்ணாக நிலத்தடி நீர் மாசு படுத்தப்பட்டமை, புங்குடுதீவு வித்தியா பாலியல்ப் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை, பொருளாதாரமைய அமைவிடம் தொடர்பான பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, பொதுமக்கள் நிலங்கள் விடுவிக்கப்படாமை, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டமை, போரால்ப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் தொடர்பான பிரச்சினை, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் தாயகத்தில் அத்துமீறிய பௌத்த விகாரைகள், தமிழர் தாயகப் பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றமை, தமிழர் தாயகப் பொருளாதாரத்தில் தென்னிலங்கையினரின் ஆதிக்கம், தமிழர் தாயகத்தில் வரம்பு மீறிய இந்தியச் செல்வாக்குகள், போதைப் பொருள்ப் பாவனை, குழுமோதல்கள், விவசாயத்தைச் சீரழிக்கப்போகும் இரணைமடு யாழ்ப்பாணம் “குழாய்” மூல நீர் விநியோகம் என ஏராளமான பிரச்சினைகள் எந்தவொரு முடிவும் காணப்படாமல் தமிழர்களைச் சுற்றி இறுகிக் கொண்டே வருகின்றது.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளின் தீவிரத்தை ஆராயாமல் வெறுமனே செய்தியாக மாத்திரம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல்ப் பிரச்சினைகளை தமது சுய விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்தும் அவல நிலைதான் இன்று தமிழர் தாயகத்தில் நிகழ்ந்து வருகின்றது. அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாக மக்கள் புறக்கணிக்கப்படும் போது மக்கள் எழுச்சிகரமாக கிளர்ந்தெழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால் மக்கள் கிளர்ச்சிகள் பெருமெடுப்பில் உருவாகாமைக்கான காரணம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்குக் காணப்படும் தெளிவின்மையே. எனவே இளைஞர் அமைப்புகள் ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஆவணப்படுத்தி அவற்றை மக்கள் மயப்படுத்துவதற்குத் தீவிரமாக வேலை செய்ய வேண்டும்.

2009 இற்குப் பிற்பட்ட நிலைமையைப் பொறுத்தவரையில், குழப்பகரமான பல அரசியல் எண்ணக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்கிறது. ஒரு தரப்பினர் “சமஷ்டி” என்றும் இன்னொரு தரப்பினர் “ஒரு நாடு இரு தேசம்” என்றும் பிறிதொரு தரப்பினர் “ஒற்றையாட்சி” என்றும் சிறிலங்கா அரசோ “மாவட்ட மட்ட அதிகாரங்கள்” என்றும் மக்களுக்குச் சொல்கின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இரத்தத்தையும் சதையையும் எருவாகக் கொட்டி விடுதலை வீச்சோடு போராடிய இனம் இன்று உப்புச் சப்பற்ற அரசியல் வார்த்தையாலங்களுக்குள் சிக்குண்டு தவிக்கின்றது. எண்ணற்ற தியாகங்களைச் செய்து விடுதலை வேண்டிப் போராடிய இனமென்ற வகையில் நாம் ஒரு விடையத்தில்த் தெளிவாக இருக்க வேண்டும். எது எமது இலக்கு? அதைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். லட்சக் கணக்கில் உயிர்களைப் பறிகொடுத்தும் அளவிட முடியாத சொத்தழிவுகளைச் சந்தித்தும் இன்று நாம் பலவீனமாக்கபட்டிருந்தாலும், ஈழத் தமிழ்த் தேசிய இனத்திற்கான தமிழீழ தனிநாடு என்ற இலக்கு பலமான ஒன்றாகவே இருக்கின்றது என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.

எதிரியானவன் எப்போதும் போராடிய இனத்தை ஏதாவதொரு அச்சுறுத்தலுக்குள்ளேயே வைத்திருப்பான். எதிரி அச்சுறுத்துகின்றான் என்பதற்காகப் போராடமல் இருப்பது தீர்வைத் தருமா? தனி நாடு கேட்டுப் போராடிய இனம் இன்று எந்தவொரு அடிப்படைப் போராட்டத்திற்குக் கூட ஒன்று சேர அஞ்சுகின்றது. காரணம் என்ன? சுண்ணாக நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிகாரிகளுக்கு எதிராகவும் போராட்டத்தைச் தொடர்ச்சியாக நடத்தினாற் குற்றமா? தர்ஷிகா படுகொலை, கபில்நாத் படுகொலை, வித்தியா படுகொலைகளுக்கு விரைவாக நீதி வேண்டிப் போராட்டங்களை நடத்தினாற் குற்றமா? நிலங்களை விடுவிக்கக் கோரியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் போராட்டம் நடத்தினாற் குற்றமா? வன்முறையற்ற தொடர்ச்சியான பேராட்டங்கள் எந்தவித்திலும் குற்றமாக முடியாது. அதிகார வர்க்கத்திற்கு எதிராக குடும்பம் குடும்பமாக வீதிக்கு இறங்கிப் போராட தமிழினம் அஞ்சுவதுதான் தமிழினத்தின் பலவீனமும் அரசியல்வாதிகளின் பலமும்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன வரிச் சலுகைகளுக்காகவும் இலவச காப்புறுதித் திட்டத்திற்காகவும் திட்டங்களை நிறைவேற்றும் வடமாகாண சபை, தங்களை அரசியல்வாதிகளாக தெரிவு செய்த மக்களுக்காக ஒருநாள் இரவு பகலாக தொடர்ச்சியான போராட்டம் ஒன்றைக் கூட நடத்த தயாராக இல்லை. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்புகளைச் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு இங்குள்ள மக்களை ஒன்று திரட்டி அடிப்படை உரிமைப் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களைச் செய்யும் எண்ணம் இல்லை.

அப்படியாயின் எப்படித்தான் எமது உரிமைகளை கேட்டுப் போராடுவது?

தண்ணீருக்காகவும், நிலத்திற்காகவும், நீதிக்காகவும் அறவழியில் வன்முறையற்றுப் போராடுவது எந்தவித்திலும் குற்றமாகாது என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ளல் வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் பாரிய குற்றம் போலவும், அது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய ஒன்று என்றும் அதிகாரவர்க்கம் மக்களை மிரட்டும். ஆனால் அவை குற்றமல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகளாவியரீதியில், உரிமைப் போராட்டங்கள் பல பரிமானங்களை எட்டியுள்ளன. மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் சில நொடிகளிலேயே அனைவரையும் சென்றடையக் கூடிய தொழிநுட்பம் வளர்ந்துள்ளது. இப்படிப்பட்ட தொழிநுட்ப முறைகளைத் தமிழீழ மக்களும் பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள், தொலைபேசிக் குழுமங்கள் என இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணைந்து மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களைப் பரிமாறுவதோடு மட்டுமல்லாது சந்திப்புகளைச் செய்து தமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுண்ணாக நிலத்தடி நீர் மாசுபட்டதைக் கண்டித்தும் தீர்வைக் கோரியும் 2015 காலப் பகுதியில், பாரிய அளவிலான சுய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இன்று இரண்டு வருடம் கழிந்த நிலையிலும் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. இங்கு கவனிக்க வேண்டியது சுய எழுச்சிப் போராட்டங்களைச் செய்த இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே? ஏன் இதுவரையில் வேறெந்த விழிப்புணர்வுப் போராட்டங்களையும் செய்யவில்லை? இதற்கான விடை மிக இலகுவானது. சுய எழுச்சிப் போராட்டங்களைச் செய்த இளைஞர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை தொடர்பான சரியான கருத்துருவாக்கம் நிகழ்த்தப்படவில்லை. தொடர்ச்சியாகத் தகவல்கள் பரிமாறப்படவில்லை. சுயமாக ஆங்காங்கே இணைந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து குழுக்களுக்கிடையில்த்  தொடர்ச்சியாகத் தகவல்களைப் பரிமாறியிருந்திருந்தால் இன்று சுண்ணாக நிலத்ததடி நீர் மாசுபடுத்தப்பட்டமைக்கு எதிராகவும், விரைவான தீர்வு வேண்டியும் பாரிய அளவிலான போராட்டங்களைச் செய்திருக்க முடியும். நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளமை தொடர்பில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கூட தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வலுவற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். 

தவிர அரசியல் கைதிகள் விடுதலை, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டியும் தமது சொந்த நிலத்தில் வாழ விடும்படி கோரியும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களைச் செய்து வருகின்றார்கள். இந்த மக்களோடு எந்தவொரு அரசியல்வாதிகளும் இல்லை. இது மக்களின் சுய எழுச்சிப் போராட்டங்கள். மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழக்கும் நிலை படிப்படியாக ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இனத்திற்காக, சக தமிழனுக்காக எல்லோரும் கை கோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், அதிகாரிகள் என எல்லாத் தரப்பினரும் தங்களுக்குள் மக்கள் பிர்ச்சினைகளைப் பேசும் தளம் உருவாக்கப்படல் வேண்டும். இன்றைய தொழிநுட்பத்தைச் சரியான முறையில்ப் பயன்படுத்த வேண்டும்.

தனி நாடு கேட்டுப் போராடிய இனம், இன்று தண்ணீருக்கும் நிலத்திற்கும் நீதிக்கும் ஆங்காங்கே பத்துப் பேர் இருபது பேருடன் போராடும் நிலையைப் பார்த்து எல்லாத் தமிழர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

போராட்டங்கள் பற்றிய வாசிப்பும் தமிழ்த்தேசியம் பற்றிய கருத்துருவாக்கமும் இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக்கப்படல் வேண்டும். இளைய சமுதாயம் தங்களுக்குள் கட்சி அரசியலை தூக்கியெறிந்துவிட்டு தமிழ்த்தேசிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பைச் செய்ய வேண்டும்.

துலாத்தன்

05-02-2017

Loading

(Visited 26 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply