மொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி

இனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு இருக்கின்றது என்பதும் தமிழர்களின் வாழ்வியலினூடே நேர்விகிதசமனாக மொழியும் பயணம் செய்கின்றது என்பதும் அந்தப்பயணங்களினூடே பண்பாட்டின் இயங்குநிலை இணைந்திருக்கின்றது என்பதும் தமிழனின் தொன்மையின் தொடர்ச்சியினைச் சுட்டிநிற்கின்றன. மொழியும் பண்பாடும் பயணிக்கும் சமாந்தரக் கோடுகளின் இடைவெளியில் படைப்புத்தளம் தன்னுடைய இருப்பினை தக்கவைத்துக்கொள்கின்றதெனினும், அந்தப் படைப்புத்தளத்தின் இயங்கியலானது பண்பாட்டின் இயங்கியலையும் மொழியின் அரசியலையும் எவ்வாறு செலுத்திச் செல்லும் என்பதை இப்பத்தி நோக்குகின்றது.

பண்பாட்டின் இயங்கியல் மற்றும் மொழியின் அரசியல் என்ற சொற்கள் வெறுமனே  மேம்போக்கான கருத்தாக்கங்கள் அல்ல. அவற்றினுள்ளே பண்பாடுசார்ந்ததும் மொழி சார்ந்ததுமான கருத்தியல்கள் புதைந்திருக்கின்றன. படைப்புத்தளத்தில் அவற்றின் வெளிப்படுத்துகையில் ஆதிக்க அரசியலும் விடுதலை அரசியலும் தமக்குள் முரண்பட்டும் ஒத்திசைந்ததுமான ஒரு இசைவினை ஊக்கி. இனத்தின் அடையாளத்தை காலங்கள் கடந்தும் நிலைபெற போராடுகின்றன. குறிப்பிட்ட இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தம்மிடையே ஊடாடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒலித்தொகுதியானது, நாளடைவில் வரிவடிவம் பெற்று மொழி என்னும் திண்ம நிலையை அடைந்தது. அவ்வாறு தோன்றிய பல மொழிகளுள் தமிழ் என்னும் தொன்மைமொழி தன்னுடைய ஒற்றைப் பண்பாட்டில் சிறிதும் வழுவாது, இற்றைவரைக்கும் செழுமையாக. செம்மொழியாக, ஆதிக்க அரசியலின் ஒற்றைமொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை இனம், ஒற்றை மதம் என்ற ஒருமைத்தன்மையில் கலந்துவிடாது, தன்னை மரபுவழி மொழியாக அடையாளப்படுத்தியுள்ளது.

ஒரு தனியன் இன்னுமொரு தனியனுடனோ அல்லது குழுமத்துடனோ தன்னுடைய கருத்துக்களை பகிர்வதற்காக எழுந்த மொழியானது வெறுமனே தொடர்பாடலுக்கான கருவி என்ற எண்ணக்கருவை உடைத்து, அந்த மொழிசார் இனக்குழுமத்திற்கான பண்பாட்டுத் தளத்தையும் இயக்குவிக்கிறது.  உலகத்திலுள்ள 6500 மொழிகளும் மனிதனுடைய சூழலியல், நிலவியல் மற்றும் பண்பாட்டியல் அடிப்படையிலேயே தோற்றம்பெற்றிருந்தன. ஆதி மனிதர் தமது இருப்பினையும் தன் குழுமஞ்சார் பாதுகாப்பினையும் நோக்காகக் கொண்டு அவனுடைய உணர்வுக்குவியலின் வெளிப்பாடாக முகிழ்த்த மொழி என்னும் கருவியானது, இன்று குறிப்பிட்ட இனங்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கி நிற்கின்றது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே  வாளொடு முன்தோன்றி மூத்த குடி

என்ற புறப்பொருள் வெண்பாமாலையின் வரிகளுக்கிணங்க, தொன்மையானது எம் தமிழ்க்குடி. ஆனால் “ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்துவிடு” என்ற வல்லரசுகளின் ஆதிக்க சித்தாந்தங்களுக்கு எதிராக போராடி, எம்மை நிலைநிறுத்தவேண்டிய நிலையில் தமிழர் வந்து நிற்கிறோம். மரபுவழித் தேசிய இனமாக எம்மை பிரகடனப்படுத்துவதற்காக பல வழிகளில் போராடி வந்திருக்கிறோம். தனி நாடு, தன்னாட்சி என்ற தேசிய இனங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும் அந்த உரிமைகளைத் தொடர்ந்தேர்ச்சியாக தக்கவைப்பதற்கும் எம்மிடமிருக்கும் ஒரே ஒரு வன்மையான ஆயுதம் எங்கள் மொழி மட்டுமே. மொழியினுடைய இருப்பும் அதன் அரசியலுமே இனத்தின் இருப்பினை முதன்மைப்படுத்தும் விடயமாக இருக்கும்.

     பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி அழித்தொழிப்புக்கு எதிராக போராடுவதற்கு, தமிழ்மொழியின் படைப்புத்தளத்தில் அணியமாகி நிற்கும் காப்பியங்களும் இலக்கியங்களும் களத்தின் காவலரண்களாக நின்றிருக்கின்றன. நிற்கின்றன. இனிமேலும் நிற்கும். படைப்பின் பிரதிகள் ஒற்றைப் பொருளை சுட்டிநிற்பவையல்ல. அவை மரபின் தொன்மம்.  படைப்பாளியின் அரசியல் நிலை, இலக்கிய நிலை என பல்பரிமாண வாசித்தலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. உதாரணமாக தாய்த்தொன்ம வழியில் வந்த தமிழினத்தின் “கொற்றவை மரபு” சங்ககாலத்தின் நற்றிணையில் தொடங்கி, சங்கம்மருவிய காலத்தின் சிலப்பதிகார காப்பியம் வரை நீட்சியடைகிறது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் மொழியின் அழகியலையும் தாண்டி, மொழியின் படைப்புத்தளத்தில் எவ்வாறு அரசியல் கருத்தூட்டத்தினை செய்வது என்பதற்குரிய சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசியல் துறவியாகிய இளங்கோவடிகள் கண்ணகி என்னும் தொன்மத்தின் கதைசொல்லலினூடாக ஒரு பேரரசொன்றின் உருவாக்கச் சித்தாந்தங்களை அதனுள் புகுத்துகிறார். பன்முகநிலைகொண்ட சமூகப்பரப்பை ஒற்றைப் பரப்பினுள் கொண்டுவருதல் எனும் பேரரசுத் தத்துவத்தினை உட்கட்டுமானமாகக் கொண்டு சிலப்பதிகாரம் எனும் படைப்பு தன் அரசியலை நிகழ்த்தியது. பல அரசுகளின் சேர்க்கையல்ல பேரரசு. மாறாக, பல அரசுகளின் சேர்க்கைகளை ஒரு ஒற்றைப் பண்பாட்டு, பொருளாதார, சமூக ஒருங்கிணைப்பாக ஆக்குதலே பேரரசு என்கிறது சிலப்பதிகாரம்.

ஆட்சிப்பரப்பு, ஆட்சி மொழி, ஆள்பவன் எனும் அரச உட்கூறுகளை தெளிவாகக் கூறி, மொழி வழி மாநிலம், நாட்டின் எல்லை, பல பண்பாடுகளையும் இணைத்து ஒரு தேசியப் பண்பாடாக்குதல் போன்ற விடயங்களை முன்னிறுத்துவதன் மூலம் தேசிய நாட்டிற்குரிய மொழி, அரசு, சமயம், பண்பாடு, பொருண்மியம், வரலாறு என்பவற்றை கட்டமைக்கும் காப்பியமாக சிலம்பு எழுதப்பட்டது. இந்தத் தேசிய ஒருங்கிணைப்பினைக் கண்டு பயமுற்ற சிலரால் இந்தத் தேசிய அடையாளத்தை அழிக்கின்ற வேலைப்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நுண்ணரசியல் அழிப்பு வேலைத்திட்டத்தில் கண்ணகி எனும் தொன்ம வழிபாட்டு மரபும் அழிக்கப்பட்டு, அது அம்மன் வழிபாடாக, ஒரு மதஞ்சார் நிலையாக உருமாற்றப்படுகிறது. சிலப்பதிகாரப் பிரதியும் தண்டியலங்காரம் கூறும் வடமொழிக்காப்பிய மரபிற்கு இயைபாகப் படைக்கப்படவில்லை என்று காப்பிய நிலையிலிருந்தும் பிரதியை ஒழிக்கும் நுண்ணிய வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, வடமொழி ஆட்சிமொழியாக மாறுகின்றது.

சமண பௌத்த மதங்களுக்கும், சைவ வைணவ மதங்களுக்குமிடையிலான போட்டியில் மொழிசார்ந்ததும், அந்த பண்பாடு சார்ந்ததுமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதம் என்ற பண்பாட்டுப் போர்வையில் பல சமண பௌத்த இலக்கியங்கள் அழித்தொழிக்கப்பட்டு, தமிழின் இலக்கியங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார் போன்ற படைப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு பக்திப் பனுவல்களும் அது சார்ந்த படைப்புக்களும் உச்சம் பெற்றன. ஆனால் 1800களுக்கு பிறகான தமிழ்த் தேசிய வரலாற்றுக் கட்டமைப்பு முகிழ்த்த போது, தேசிய இனத்தின் உட்கூறுகள் சிலப்பதிகாரத்தினை மறுவாசிப்புச் செய்ததனூடாக கண்டறியப்பட்டன.

நிலத்தின் எல்லையை அடிப்படையாகக் கொண்ட தேசிய உணர்வின் கட்டமைப்பிலே நிலமும் எல்லையும் வரையறுக்கப்பட்டிருந்தன.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்

முதுநீ ருலகில் முழுவது மில்லை

இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது

கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்

வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்

தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி

மண்டலை யேற்ற வரைக வீங்கென

சிலப்பதிகார வரியின் வாயிலாகச் சோழ நாடு, பாண்டிய நாடு என்பதெல்லாம் தற்காலிகமானவை தமிழ்நாடு என்பதே நிரந்தரமானதென உணர்த்துகிறார் இளங்கோவடிகள். “வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு தமிழரின் நிலம் குறித்த தகவல்களைத் தருகின்ற படைப்புக்கள் காலந்தோறும் அழித்தொழிப்புக்களுக்கு உள்ளாகிய போதும் எஞ்சிக்கிடக்கும் படைப்புக்களிலிருந்து எமக்கான தொன்மைத்தை நாம் தேடக்கூடியதாகவுள்ளது.

தேசியம் என்பது தொன்மைச் சமூகம் என்பதை மட்டுமே குறிப்பதாகாது. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு இயங்கியலை குறித்த மொழி சார்ந்து தொடர்ச்சியாக இருப்பதன் அடையாளத்தை தேசியம் என வரையறுக்க முடியும். பண்பாடுசார் பண்புகளையும் எமக்கு கூறுபவையாக படைப்புக்களே காணப்படுகின்றன. இனம்சார் வரலாற்றியலாக இனவரைவியல் நோக்கப்படுகின்றது. முறையியலாகவும் அதேநேரம் வரிவடிவமாக்கப்பட்ட பண்பாடாகவும் இரு பரிமாணங்களைக் கொண்ட இனவரைபியலானது, மக்களின் வாழ்க்கை முறைமை புவிச்சூழலியல், சூழல், காலநிலை, குடியிருப்பு முறை, பொருள்சார் பண்பாடு, குடும்ப அமைப்பு, திருமண முறை, உறைவிட முறை, வாழ்வியல் சடங்குகள், குழந்தை வளர்ப்பு முறை, பண்பாட்டு வயமாக்க முறை, மக்களின் உளவியல் பாங்குகள், வாழ்க்கைப் பொருளாதாரம், தொழிற் பகுப்பு முறை, உற்பத்தி முறை, நுகர்வு முறை, பங்கீட்டு முறை, பரிமாற்றமுறை, அரசியல் முறைகள், அதிகார உறவுகள், சமூகக் கட்டுப்பாடு, மரபுசார் சட்டங்கள், சமய நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறை, விழாக்கள், இசை, விளையாட்டுகள், அழகியல் சிந்தனைகள், நாட்டார் வழக்காறுகள் ஆகிய கூறுகளை இனமொன்றின் பண்பாட்டு இயங்கியலை நிலைநிறுத்துவதற்கு இனவரைவியலாளன் முதன்மைப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளை பக்தவத்சல பாரதி எடுத்துக்கூறுகிறார்.

தமிழின் இலக்கியங்கள் என்பவை அடிப்படையில் இனவரைபியல் கூறுகளை எடுத்துக்கூறும் முறைமைகளாக விளங்குகின்றன. தொல்காப்பியத்தின் முப்பொருட் கோட்பாட்டின்  கருப்பொருள்  அந்தந்த நிலங்களின் மக்கள், குடியிருப்பு, உணவு, புழங்கு பொருள் என்ற இனவரைவியலின் ஒவ்வொரு கூறுகளைப் பற்றிப் பேசுகின்றது.

எட்டுத்தொகை நூற்களுள் ஒன்றான புறநானூற்றில் முடியுடை மூவேந்தர்களின் போர் வெற்றி, கொடை முதலிய பண்புகள் பேசப்பட்டாலும் அதற்கு எதிரிடையாக எளிய மக்கள் தொல்சமூக இனக்குழு எச்சங்களை உள்ளடக்கிய குறநில மன்னர்கள். சிற்றூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், வாழ்ந்த மக்கள் முதலானவர்களின் வாழ்க்கை குறித்த பதிவுகளும் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலும் இனக்குழுக்களின் வாழ்வியல் கூறுகளில் அமைந்துள்ள பண்பாட்டுப் பொருண்மைகளைப் பேசும் படைப்புக்களாகவே இருந்திருக்கின்றன.

பண்பாட்டு இயங்கியலின் அத்திவாரமாக அந்த இனக்குழுமத்தின் வாழ்நிலை அடிப்படையின் நிலைக்களனாக அந்தக் குழுமம் சார் தொழிற்பரப்பு காணப்படும். தமிழர் பண்பாட்டில் உழவும் சாகுபடியும் அனுபவ அறிவுத் தளத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு,

அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்

கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்

கொழுங்கிழங்கு மிளரக் கிண்டி, கிளையோடு,

கடுங்கண் கேழல் உழுத பூழி,

நன்னாள் வருபதம்நோக்கி, குறவர்

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்து விளையாணர்    (புறம்.168)

என்ற பாடல் வலுச்சேர்க்கின்றது. அருவி ஒலித்துப் பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக்கொடி வளரும் மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித் தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து, குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக, பெரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர் என்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் பண்பாட்டு இயங்கியல் கூறுகளுள் ஒன்றான ஒரு சமூகக் குழுவின் சாகுபடி முறை எவ்வாறு இருந்தது என்பது பெறப்படுகின்றது. நிலத்தின் தன்மைக்கேற்பவும், அங்கு நிகழும் நிகழ்ச்சிக்கேற்பவும் மக்கள் தங்கள் உற்பத்தி முறையை அமைத்துக் கொண்டனர் என்ற இயங்கியல் தத்துவம் வெளிப்படுகின்றது.

சேனைப் பயிர்ச்செய்கையின் தோற்றுவாயாக எங்கள் பண்டைய நாடும் இருந்திருக்கின்றது என்பதனை,

கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை,

ஐவனம் வித்தி, மையுறக் கவினி,

ஈனல் செல்லா ஏனற்கு முழமெனக்

கருவி வானம் தலை    (புறம்.154)

வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த காட்டை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண் மலை ஐவனநெல்லோடு வித்தி இருட்சியுற அழகுபெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத இழுமென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது என்று கூறும் இப்பாடல் முல்லைநிலத்தவரின் புராதன வேளாண்மை முறையான காட்டெரிப்பு வேளாண்மை அல்லது எரிபுன வேளாண்மை (இன்றைய சேனைப் பயிர்ச்செய்கை என்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது

இதனோடு தொடர்புடையதாகவே தினைவிதைத்தல், தினைப்புனம் காத்தல், களைபறித்தல்,  கிளி கடிதல், கதிர் அறுத்தல், திணை குற்றுதல் முதலியவை அகப்பொருட் துறைகளோடு அகவாழ்வுடன் இணைத்துச் சொல்லப்பட்டன. அந்த அகவாழ்வுகளில் சமுதாயத்தின் திருமணம் சார்ந்த வழக்காறுகள் பேசப்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்ட இனக்குழுமத்தில் புழக்கத்திலிருக்கும் கருவிகளை வைத்து அவர்களின் பண்பாட்டு இயங்கியலை கண்டுகொள்ள முடியுமெனக் கருதுகின்ற இனவரைபயலாளர்களின் கூற்றுக்கிணங்க, வில் என்பதும் தொன்மமான பண்பாடாகக் காணப்படுகின்றது.

“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீ,

புழல் தலைப் புகர்க் கவைஉருட்டி, உலர்தலைக்

கேழற்பன்றி வீழ அயலது

ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,

வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்,

புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்

கொலைவன்” (புறம். 152)

எனும் பாடலில் யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு. பெரிய வாயையுடைய புலியை இறந்துபடச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலைவினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி உரல்போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கும் உடும்பின் கண்சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன் புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்கு காரணமாகிய கொலைஞன் என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகின்றது.

உழவு சார்ந்த அவர்களின் வாழ்வியல் முறையும் கூட படைப்புத்தளத்தில் பதியப்பட்டிருக்கின்றது.

“வெருக்கு விடை அன்ன வெகுள்நோக்குக் கயந்தலை,

புள்ஊன் தின்ற புலவுநாறு கயவாய்,

வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்

சிறியிலை உடையின் கரையுடை வால்முள்

ஊக நுண்கோல் செறித்த அம்பின்

வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,

பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்

புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர்”    (புறம்.324)

எனும் பாடலில் வேட்டுவர்கள் காட்டுப்பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் மெல்லிய தலையும் உடையவர்கள் பறவையின் ஊனைத் தினபதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வெளுத்த வாயையுடையவர்கள் அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பி நட்பு கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம்புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உரையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சிறூர் என்று ஆலத்தூர் கிழார் கூறுகின்றார்.

இவற்றினுடாக தமிழர்களின் தொன்மைச் சமூகத்தின் எச்சங்களையும் இனக்குழு முறைமைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அந்த வகையில் உணவு என்பது பண்பாட்டியலில் முக்கியமான பங்காற்றுகின்றது.

படலை முன்றில் சிறுதினை உணங்கல்

புறவும் இதலும் அறவும் உண்கெனப்

பேய்தற்கு எல்லின்று பொழுதே (புறம். 319)

என்னும் பாடலில், படலை கட்டிய முற்றத்தில் சிறிய தினையை புறாக்களும் பறவைகளும் முற்றவும் உண்க என்றும் அவற்றைப் பிடித்துச் சமைப்பதற்கு ஞாயிறு மறைந்து இரவாயிற்று என்னும் கூற்றிலிருந்து தினையையும், காட்டுக்கோழியையும், புறாவையும் கானவர்கள் சமைத்து உணவாகக் கொண்டனர் என்பது புலப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் உடும்பு, முயல், பன்றி, முள்ளம்பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடி உண்டுள்ளனர்.

இவ்வாறாக, சமூகத்தின் வேட்டையாற்றல், உணவுமுறை, உற்பத்திமுறை, விருந்தோம்பல் பண்பு முதலியவற்றுடன் பாதீடு, நடுகல் வழிபாடு போன்ற பிற இனவரைவியல் கூறுகளும்; நமக்குக் காணக்கிடக்கின்றன. பண்பாட்டின் இயங்கியலைப் பேசுகின்ற மொழியாக இருப்பதனால் அந்த அம்மாழியின் நீண்ட நெடிய மரபு கட்டிக்காப்பாற்றப்படுவதற்கு அம்மொழியின் படைப்பு வெளியும் அந்த மொழியின் அரசியலுமே எனக் கருதிய எதிரிகள் மொழி எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். காலங்கள் பல கடந்தும் மொழிக்கெதிரான எதிரிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

நேரடியான மொழிப்போர்களுக்கு அப்பால், மிக நுண்மையான போர்களும் தமிழ்மொழிக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ளன. கால்ட்வெல்லின் திராவிட மொழிகள் குறித்த ஒப்பாய்வு நூல், பண்டைத் தமிழ் நூல்கள் அச்சேற்றம்-பரவல், இலக்கிய வழி வரலாற்று வரைவியல், வைகுண்ட சாமி, வள்ளலார் போன்றோரின் சிந்தனைகள், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், அண்ணா முதலானோரின் வருகையும் தமிழ் மொழி-இலக்கியம் சார்ந்த அரசியலும், நாடகங்கள்-திரைப்படங்கள்-மேடைப் பேச்சு சார்ந்த வெகுசன ஊடக அரசியல், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், ஈழத்தில் தமிழர் போராட்டங்கள், ஈழத்தில் இப்போதைய இனப்படுகொலை என நீண்ட வரலாற்று வரிசையினை இத்தலைப்பின் கீழ் கூற முடியும்.

மொழி என்ற பொதுமைப்படுத்தலால் இணைந்திருந்த மக்களை அதே மொழியரசியல் சிந்தனையினூடாக சாதி, சமயம் என்கின்ற கருத்தாக்கங்கள் பரப்பப்பட்டன. அவை தமிழ் என்ற மொழியின் உள்நின்று, தமிழர்களை மட்டுமல்ல தமிழையும் இரண்டகம் செய்யும் வேலைகளை முடுக்கிவிட்டன எனலாம். ஆறுமுக நாவலரால் ஈழநாட்டில் தொடங்கப்பட்ட ஆகமச் சைவ மீட்டுருவாக்கம் ஒற்றையாக இருந்த தமிழ் மொழியினை கலப்பு மொழியாக பிரிக்கும் வேலையையும், “சைவத் தமிழ்” என்ற பெயரில் “ இந்துத்துவத்தை உட்கொணர்ந்து, மதஞ்சார் மொழியாக மணிப்பிரவாளம் எனும் கலப்பு மொழியை உள்ளீர்த்து, தமிழினை ஒரு குறுகிய வட்டத்தினுள் ஒடுக்கும் வேலையையும் செய்தது. தமிழ் மொழியின் அடையாள அரசியலிற்கான முரண்பாட்டினை ஆறுமுகநாவலர் தொடக்கி வைத்து, இன்றுவரை அந்த அடையாளத்தின் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுவரமுடியாத அளவுக்கு, படைப்பிலக்கியங்களில் நிறைந்திருக்கிறார்.

ஆறுமுக நாவலரின் கருத்தியலின் கீழ் மணிப்பிரவாள நடையில் சமய இலக்கியங்கள் சில உருவாகின. அதன் தாக்கத்தினால் இன்றுவரை “யாழ்ப்பாணத் தமிழ்” என்கிற  முரண் தூய்மைத் தமிழ் வாதம் பொய்த்திருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அன்றும் அவர்கள் மணிப்பிரவாளத்தையும் தமிழையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளவில்லை  மணிப்பிரவாளம் தொடர்ந்து தமிழகத்தில் இருந்திருந்தால் தற்கால செந்தமிழ் மொழி இல்லாமல் போயிருக்கும். ஆனால் தமிழகத்தின் சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர்த்து கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிலும்  இருந்த மக்கள் கிரந்த எழுத்தினைப் பயன்படுத்தினதாலும், வரன்முறை இன்றி சமஸ்கிருத சொற்களைக் கலந்தததாலும் அவர்களின் திராவிட மொழி சிதைந்து தனித்தனி மொழிகளாக மாற்றம் கண்டன. மணிப்பிராவளத்தின் கலப்பின் எச்சங்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் உருவாகின. ஆனால் தமிழர்கள் மணிப்பிரவாளத்தை ஒதுக்கினப் படியால் தமிழ் மட்டும் தப்பித்துக் கொண்டது. இல்லாவிடின் இன்று ஈழத்திலும் நடு அண்ண உச்சரிப்பில் இருக்கும் மூக்கால் பேசுகின்ற ஏதோ ஒரு மொழி தோன்றியிருக்கக்கூடும்.

தமிழில் பண்பாட்டு அரசியல்  காலனியச் சூழல்களில் காலனியச் சூழல், ஆங்கிலக் கல்வி, கிறித்தவ மதப் பரவல் போன்றவை அன்றிருந்த தமிழ்ச் சூழல்களில் ஓர் அடிப்படையான பண்பாட்டு மடைமாற்றத்தை ஏற்படுத்தின எனலாம். ஆனால் தமிழர்கள் போன்ற மரபுவழித் தேசிய இனங்கள் நவீனமயமாக்கலை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. மரபாக்கத்திற்கும் நவீனத்திற்குமிடையிலான ஒற்றைப் புள்ளியில் மரபை தேடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் காலனியம் உருவாக்கிய பொது அரசியல் வெளி எனும் மிகப்பெரிய குழிக்குள்ளே விழுந்து, எம் தேசியத்தை தொலைத்த இனமாக நாம் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தொலைத்த தேசியத்தை தேடுவதற்கான உந்துகோலாக இருந்ததும் பண்பாட்டுத் தளம் என்பதையும் நாம் இங்கு கருத்திற் கொள்ள வேண்டும். மொழியின் அரசியலினூடாக பண்பாட்டு இயங்கு அரசியல் என்பது பண்பாட்டு எதிரிகளைக் கட்டமைப்பதாகும். ஒரே மதத்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக இருந்ததால் கிழக்கு பாக்கிஸ்தான், பங்களாதேஷாக மாறியது. பண்பாடும் மரபும் மதத்தினால் கட்டியமைக்கப்படுவதில்லை. அந்த இனத்தின் மொழி மட்டுமே அவர்களுடைய தேசியத்தை புலப்படுத்தும் கருவியாகி நிற்கின்றது.

ஒரே மொழியைப் பேசினாலும் அந்த மொழியின் வேறுவேறான அசைகளை உச்சரிப்புக்களாகக் கொண்டாலும் தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்துவிடக்கூடிய தளமாக எம் மொழி இருக்கின்றது. தமிழ் மொழியின் அரசியல் என்பது வெறுமனே தொடர்பாடல் வீச்சம் என்பதனைக் குறிக்காது. அதன் வீரியத்தையும் தொன்மையையும் உலக நாடுகள் நன்றாகவே உணந்திருக்கின்றன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பொதுமையாக்கம் தமிழ்த்தேசியத்தின் மையப்புள்ளியைச் சிதைத்திருக்கின்றது. இந்தித் திணிப்பு என்ற மொழி மடைமாற்ற நஞ்சினை இந்திய அரசாங்கம் விதைக்க முயன்றிருக்கிறது.. இன்னமும் முயன்றுகொண்டும் இருக்கிறது. ஆனால் அதற்கு கிடைத்த துலங்கலில்  மொழி என்ற கருத்துருவாக்கத்தில் தமிழன் இந்தளவுக்கு களத்தில் இறங்கிப் போரிடுவான் என்பது இந்திய மத்திய  அரசு அறிந்துக் கொண்ட முதல் பாடமாக இருந்தது.

இந்தி எதிர்ப்பு போரில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் தமிழர் படை திருச்சி தாண்டி, செங்கல்பட்டு தாண்டி 42 நாட்கள், 577 மைல்கள் நடந்து, சென்னை வந்தடைந்தது. காந்தியடிகளின் தண்டியாத்திரையை விடவும், ராஜாஜியின் வேதாரண்ய உப்பளப்படையை விடவும் 4 மடங்கு பெரிய படையை தன் மொழிப் போர் வரலாற்றில் நடத்திச் சென்றவன் தமிழன். அன்றைக்கும் தமிழன் தொடுத்த முதல் போரை அடக்கவந்த இந்திய இராணுவம் தன் மொழிக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்நோக்கிய ஒரு சமூகத்தைக் கண்டு அஞ்சி ஓடியது. அதே போல இலங்கையிலும் 1956 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட “தனிச் சிங்களச் சட்ட அமுலாக்கம்” தேசிய இறையாண்மைத் தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த காரணிகளில் முதன்மையாகியது. பல்லாயிரக்கணக்கானோர் இனவழிப்புச் செய்ததன் பின்னணியில் அவர்களுடைய மொழியும் அதன் அரசியலுமே இருந்திருக்கின்றது.

உலக அரசியல் தளத்தில் மேலாதிக்க நோக்கத்திற்காக போராடுவது இனங்களல்ல. அந்த மொழிகளே. யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் பின்புலத்திலும் தமிழின் அரசியல் தீயிடப்பட்டது.  மொழி என்பது மக்களின் வாழ்வியலோடு தொடர்;புபட்டதனால், எந்த மொழி அரசியல் மொழியாக விளங்குகிறதோ அதுவே மக்கள் மொழியாகும். நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாயினும் ஆட்சி மொழியாக இருந்துவிடின், அது மக்களின் மொழியாக மாறுவதற்குரிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி பேசுகின்ற சிங்களவர்கள் இருப்பினும் ஆட்சிமொழியாக சிங்களம் இருப்பதால் அது பொதுமொழியாக வருவதற்குரிய சாத்தியங்களே அதிகம். தொன்மை மிகுந்த மொழி எங்களது. எங்களது மொழி தான் ஆட்சிமொழி என்று வெறும் கூச்சல்களால் பயனில்லை. எமது மொழியை ஆட்சி மொழியாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை நாம் செய்யாது விடுவோமாயின் மொழி அரசியலுக்குள் எங்கள் மொழியை மட்டுமல்லாது எங்கள் இனத்தையும் இழந்து நிற்போம்.

ஆங்கிலம் உட்பட பிறமொழி ஆதிக்கம் தொடர்பான விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டிய கட்டத்தில் நிற்கிறோம். ஆங்கிலத்தினுடைய ஆட்சி இன்று எம் உணர்வுகளிலிருந்து உணவு வரைக்கும் செல்வாக்குச் செலுத்துமளவுக்கு எம்மை அடிமைப்படுத்தியிருக்கிறது. அந்த நுண் சிறையிலிருந்து தமிழர்களை வெளிவர வைக்கவேண்டிய தேவை அவசரமானது. போராடி வெல்லுமளவுக்கு எம் மொழி அரசியல் கொண்டது.

மொழி அரசியல் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்ட அரசியலையும் மொழியை அரசியலாக்கிய அரசியலையும் பற்றிப் பேசக்கூடியது. தக்கன பிழைத்தல் கோட்பாட்டின்படி, தன்னைத் தற்காத்துக்கொள்ள துடிக்கின்ற ஒவ்வொரு உயிரியும் உயிர்த்தொகுப்பும் தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்குள் ஆட்பட்டிருக்கின்றன. எழுத்தில் வெளியிடப்படாத எழுத்துக்களுக்கும் கூட அரசியல் இருக்கின்றது. மக்களின் மனங்களில் உறங்கிக்கிடக்கின்ற எந்த எழுத்துக்களின் பேசாநிலையில் எமக்கான அரசியல் பொதிந்திருக்கின்றது. பேசா நிலையில் 100 வருடங்களுக்கு மேல் உறைந்துகிடந்த தமிழ் இளையோர்களின் மரபுக்கான எழுச்சியின் வீரியம் இன்று தமிழ்நாட்டின் மரீனா கடற்கரையில் வரலாறாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மரபு வழி இனங்களின் மொழிக்கான அரசியலும் அதன் பண்பாட்டு இயங்கியலும் இருக்கும்வரை, அவ்வினங்களின் இருப்பும் தக்கவைக்கப்படும்.

படைப்புத்தளங்கள் வெறுமனே இலக்கியம் என்ற எல்லைக்குள் நிற்காது யதார்த்த மொழியில் பேசப்பட வேண்டும். பிராந்திய மொழிகளின் எழுத்துகள், விளிம்புநிலை மக்களின்  எழுத்துகள், காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட குரல்களின்  எழுத்துகள், என்று முற்றிலும் புதிய படைப்பு  வெளி இப்போது திறந்திருக்கிறது. அது மொழிக்குரிய வெளியாகவோ பண்பாட்டிற்குரிய வெளியாகவோ மட்டுமில்லாமல்  ஒரு மாபெரும் அரசியல் வெளியாகவும் உருமாறி நிற்கிறது. மொழியின் அரசியலின் அழகியலாக  படைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. போராட்ட களங்களில் துப்பாக்கி தாங்கியவர்களும் துப்பாக்கியை தாங்கிய மக்களும் தம் அனுபவங்களையும் வலிகளையும் மறத்தினையும் படைப்பு வெளிக்குள் கொண்டுவருகிறார்கள். அந்தப் படைப்பு வெளியானது தொலைதூரத்திலான ஆழ்ந்த அரசியலையும் மரபின் வழிவந்த தேசியத்தையும் தமது மொழியில் எழுதிச் செல்லும்போது புதிய அரசியல்மொழி உருவாகிறது. படைப்பு மொழியானது யதார்த்தமாக இருப்பினம் படைப்புத் தளம் அவர்களின்  நுண் அரசியலைப் பேசுகிறது. இதுவரை மற்றவர்களிற்கு சிதம்பர சக்கரமாக இருந்த அவர்களின் மறப்போர் , அவர்களின் தேசியத்தில் அரசியல் கூறுகளில் பொதிந்து கிடக்கும் நுட்பம் போன்றவை உலகின் பல்வேறு எல்லைகளுக்குக் கொண்டு செல்கிறது.  தமது படைப்புத் தளத்தையும் அதன் அரசியல் தளத்தையும் வீரியமாக எடுத்துரைக்கும் எமது மொழியின் அரசியல் எனது இனத்தை மீட்குமா? அந்த மீட்புக்கு எமது படைப்புக்கள் நுட்பமான அரசியல் தளத்தில் நுழைய வேண்டும். இந்த புறநானூறு மீட்டுருவாக்கம் செய்யப்படவேண்டிய தருணத்தில்  தமிழில் மிகவும் நுட்பமான அரசியல் பேசக்கூடிய வேளை கைகூடி வந்திருக்கிறது. மொழி எனும் ஆயுதம் தன் பேசாநிலையிலிருந்து பேசும் நிலைக்கு உருமாறுமா?

செல்வி

22-01-2017

 

Loading

(Visited 146 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply