
ஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கிய சிறப்புகளாலும் பெயரெடுத்த இனத்தின் ஈழத் தமிழ்த் தேசிய சமூகம் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகிறது.
தனிநாடு கேட்டுப் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சமூகம், அதற்குரிய முதிர்ச்சியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். விடுதலை என்பது வெறுமனே தோட்டாக்களால் மட்டும் சாதித்துவிடுவதல்ல. மாறாக வலிமையான சமூக கட்டமைப்பும், சுய ஒழுக்கமுள்ள தலைமுறைகளை உருவாக்குவதிலுமே இன விடுதலையின் பெரும் பங்கு தங்கியுள்ளது.
சமூக கட்டமைப்பென்பது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். சுய ஒழுக்கம் என்பது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். பெரியவர்களை மதித்தல், பெண்களை மதித்தல், சக மனிதர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடையங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.குடும்பம் என்பது சரியான, நல்ல மனிதர்களை உருவாக்கக் கூடிய தளமாக இருந்தால்தான் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கும்.
போருக்குப் பின்னரான சமூக கட்டமைப்புகள்
போருக்குப் பின்னர், தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்புகள் தொடர்பில் பெருமெடுப்பில் நுண் அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தாலும், குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு முழுப் பொறுப்பையும் இந்த இனம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மதுபாவனை, போதைப் பொருள் பாவனை, ஆபாசப் படங்களின் விற்பனை, தென்னிந்திய சினிமா மோகம், குழுமோதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள், ஆசிரியர்களை மதிக்காமை என பல மோசமான முன்னுதாரணங்களை இன்றைய சமூகம் நாளுக்கு நாள் உருவாக்கிவருகிறது.
மேற்கூறப்பட்ட அத்தனை விடையங்களின் மூல காரணமும் இலங்கை அரசாக இருந்தாலும், இப்படியான சமூக விரோத செயற்பாடுகளை செய்வது இந்தத் தமிழ்ச் சமூகம் தான் என்பது வெட்கப்படவேண்டிய விடையம்.
“சிங்களவன் செய்யத் தூண்டினா இவங்களுக்கு எங்க போனது புத்தி” என்று வயது முதிந்தவர்கள் கடிந்து கொள்வது இப்போது வழமையாகிவிட்டது.
“குடிச்சுப் போட்டு வீட்ட போறாங்கள் பெத்ததுகள் கேள்வி கேக்காதுகளா?”, “படிக்கிற பெடியனுக்கு ஆறு ஏழு மணிக்குப் பிறகு வெளியில என்ன வேலை?” இப்பிடி ஏராளமான கேள்விகளுடன் முடங்கிக் கிடக்கிறார்கள் சமூக அக்கறையுள்ளவர்கள்.
கட்டுக்கடங்காத காவாலிகளாய் உருவெடுத்துவரும் சமூகத்திற்கு யார் பொறுப்பு? பெற்றோர்களா? கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களா? அல்லது ஓட்டைகள் உள்ள சட்டமா?
சுய ஒழுக்கமுள்ள இனத்திற்கு, சட்டத்தில் ஓட்டை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஒழுக்கமாக இருந்தே ஆக வேண்டும்.
இன்று ஆசிரியர்கள் பலர் சுய ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கும் நிலையில், இந்த இனத்தின் சுய ஒழுக்கம் என்பது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். பெற்றோர் கண்டிப்புடனும் தண்டிப்புடனும் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
சிதையும் குடும்பங்கள்
திருமணம் முடித்து, அதிகளவிலான குழந்தைகளைப் பெற்று, அவர்களை சரியான வழியில் வழிநடத்தி நல்ல மனிதர்களை உருவாக்கிய ஈழத் தமிழ்ச் சமூகம், இன்று மேற்கத்தைய கலாச்சாரப் பாணியில் ஓரிரு பிள்ளைகளோடு நிறுத்தி அந்தப் பிள்ளைகளையும் பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவிடுவதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர்.
வாழ்க்கைச் செலவு காரணமாக, வெளிநாடுகளில் கணவன் மனைவி இருவரும் பன்னிரெண்டு மணித்தியாலங்களிற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பிள்ளைப் பராமரிப்பு மிகச் சுமையான ஒன்றாக அவர்களுக்கு இருக்கிறது. தவிர பிள்ளைக் காப்பகங்களில் பிள்ளைகளை அனுப்பி பராமரிப்பதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. அதனால் ஆகக் கூடியது இரண்டு பிள்ளைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் இந்த இயலாமையை, நாகரிகம் என்று கருதி இந்த மண்ணிலும் இரண்டு பிள்ளைகளுடன் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடுகிறாகள் தமிழ்ச் சமூகத்தினர். மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப எண்ணிக்கை என்பது வெறுமனே இனத்தின் எண்ணிக்கை மாத்திரம் வீழ்ச்சியடையாமல், ஆரோக்கியமான பாசப்பிணைப்பு மிக்க கூட்டு தலைமுறையும் இல்லாமல் போகிறது. சமூகத்தில் நெருக்கமானவர்களின் எண்ணிக்கை குறைகிறது.
தவிர, குடும்ப எண்ணிக்கையினர் வீழ்ச்சி, சுய ஒழுக்கமின்மை, மதுப் பாவனை என பல்வேறுபட்ட காரணிகளால் இன்று தமிழர் திருமணபந்தங்கள் ஆட்டம் கண்டுவருகிறது.
அன்பும் ஆதரவும் மிக்க சகோதரங்களைச் சூழ உள்ள குடும்பங்களின் தலைமுறைகளில் திருமணவிலக்கு என்பது மிக அரிதாவே காணப்படுகிறது. அது போக, சுய ஒழுக்கம் இன்மையால் தினமும் மது அருந்தி மனைவி பிள்ளைகளை துன்புறுத்துவது, இணையதளங்களை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் ஆபாசப் படங்களை பார்வையிட்டு அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை மனைவி மீது பாலியல் துன்புறுத்தலாக வெளிப்படுத்துவது என தமிழ்ச் சமூகம் பல விசித்திரமான பிரச்சினைகளை சந்தித்துவருகிறது.
போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்து போனவர்கள் தாயகம் திரும்பும் போது தங்களை பெரும் புத்திசாலிகளாகவும், வளர்ச்சியடைந்த நாகரிகத்தை தாயகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு அனுப்பப்பட்ட இறைதூதர்களாகவும் கற்பனை செய்து கொள்கிறார்கள். “வெளிநாட்டில இதெல்லாம் சிம்பிள்” இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களின் வாயில் இருந்து அடிக்கடி வரும். பல சமூக விரோத செயல்களை “வெளிநாட்டில இதெல்லாம் சிம்பிள்” என்ற வார்த்தையால் நியாயப்படுத்துகிறார்கள். தாங்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அங்குள்ள மக்களின் வருமானம், தேவைகள், எதிர்கால திட்மிடல்கள், குடும்ப கட்டமைப்புகள் என்பன வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடுகளின் கட்டமைப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதை வேறுபடுத்தி புரிந்துகொள்ள முடியாத மடையர்களாக இருப்பதுவும் தாயகத்தில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக குழுப்பங்களுக்கு மிக முக்கிய காரணமாக காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 6,000 திருமண விலக்கு கோரி நீதிமன்ற வழக்குகள் நடைபெறுவதாகவும்,300 ற்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் நீதிமன்றம் வருவதாகவும், 600 ற்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பிலான முறைப்பாடுகள் நீதிமன்றம் வருவதாகவும், 3000 ற்கும் மேற்பட்ட மதுபோதையில் வாகனம் செலுத்திய முறைப்பாடுகள் நீதிமன்னம் வருவதாகவும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த புள்ளிவிபரமானது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படாத ஏராளமான குற்றச் செயல்கள் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வீழ்ச்சியை எப்பிடி சீர்செய்வது?
ஒருகாலத்தில் சுய மற்றும் சமூக ஒழுக்கமானது பாடசாலையின் வழிகாட்டலில் திறம்பட நடந்தது. அந்த முறைமையானது முற்றுமுழுதாக அழிந்துவரும் நிலையையில் பிள்ளைகளை கண்டித்தும் தண்டித்தும் வளர்க்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோர்களிடமே வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் ஏற்படும் மோகத்தை இல்லாது செய்து வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். நூல்நிலையங்களை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு நூலாவது வாங்கி வாசிக்க கொடுக்க வேண்டும். தேடல் உள்ள மனிதன் குற்றச் செயல்களிலோ, சுய ஒழுக்கமற்றோ செயற்படுவது மிக அரிதே.
கல்விகற்கும் மாணவனுக்கு / மாணவிக்கு தேவைக்கு மேலதிகமாக பணம் கொடுப்பது, “படிக்காட்டிலும் பருவாயில்லை, வெளிநாட்டுக்கு அனுப்பிட்டா காணும்” என்று விசமத்தை விதைப்பது, வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பண ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்.
விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் இனத்தின் வரலாறுபற்றியும், சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புப் பற்றியும் பெற்றோர்கள் எப்போதும் தமது பிள்ளைகளுடன் பேச வேண்டும். இவை பற்றிய வாசிப்புகளை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
எதெற்கெடுத்தாலும் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு ஆசுவாசப்பட்டுக் கொள்பவர்கள், யூதர்களின் வாழ்க்கைமுறை, சுய ஒழுக்கம், தேடல் பற்றி பேசுவது கிடையாது.
காலாகாலமாக கோடிக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டாலும், அவர்கள் தங்கள் இனத்தை விருத்தி செய்வதை நிறுத்தவில்லை. தங்கள் கல்வியை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லவில்லை. புலம்பெயர்ந்து போனாலும் அங்கு தமக்கென்றொரு அதிகாரத்தை உருவாக்குவதில் மிகத் தெளிவாக இருந்தார்கள் (இப்போதும் கூட). தமது சுய ஒழுக்கத்தை குலைக்கவில்லை. ஆராக்கியமான சமூதாயத்தை கட்டியெழுப்புவதே அவர்களின் இன்றுவரையிலான பல வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
சுய ஒழுக்கமும், சிந்தனை ஆற்றலும், பெண்களை மதித்து ஆராக்கியமான தலைமுறைகளை உருவாக்கும் பொறுப்பும் ஒவ்வொரு தமிழின் கைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்து செயற்படுவோம்.
ஈழத் தமிழ்த் தேசியம் விடுதலைபெறும் நாளில் இந்த சமூகம் சுய ஒழுக்கம் மற்றும் ஆராக்கியமான கட்டமைப்புகளுடன் இருக்க வேண்டும் இல்லையேல் விடுதலைபெற்று பின் களையெடுத்து சமூதாய குப்பைகளை அகற்றி மீளுவதற்கு பல சகாப்தங்கள் எடுக்கலாம்.
துலாத்தன்
17-01-2017
Leave a Reply
You must be logged in to post a comment.